சு.கோதண்டராமன்

 
(இந்த என்னுடைய கதை சுமார் 20 ஆண்டுகளுக்கு முன் ஓம் சக்தி மாத இதழில் வெளிவந்தது. மறு பகிர்வாக இங்கு வெளியிடுகிறேன்.- சு. கோதண்டராமன்)

 
மூடிய கதவுக்கு வெளியே பெருங் கூட்டம். எல்லோர் முகத்திலும் சோகம் கப்பியிருந்தது. அவ்வப்போது சிலர் தணிந்த குரலில் பேசிக் கொண்டார்கள். ஒரு சிலர் ஜபம் செய்து கொண்டிருந்தனர்.

அருள் நிறைந்த மரியே வாழ்க, கர்த்தர் உம்முடனே,

பெண்களுக்குள் ஆசீர்வதிக்கப்பட்டவர் நீரே,

உம்முடைய திருவயிற்றின் கனியாகிய ஏசுவும் ஆசீர்வதிக்கப்பட்டவரே.

பாவிகளாகிய எங்களுக்காக இப்பொழுதும்

எங்கள் மரண நேரத்திலும் வேண்டிக் கொள்ளும்.

இந்த ஜபத்தைத் திரும்பத் திரும்பக் கூறித் தங்கள் மனத் துயரத்தைக் கட்டுப்படுத்த முயன்றனர்.

அறையின் உள்ளே அவரது அன்புக்குப் பாத்திரமான ஃபாதர் சின்னசாமி படுத்திருக்கிறார். ஒரு வாரமாகக் கண் திறக்கவில்லை. உணவு தண்ணீர் இல்லை. அருகில் இரண்டு அணுக்கத் தொண்டர்கள் அவரது தேவையை உணர்ந்து செயல்படத் தயாராக இருந்தனர். அவ்வப்போது கதவைத் திறந்து அவரது உடல் நிலை பற்றிய செய்தியை வெளியில் உள்ளவர்களுக்குத் தெரியப் படுத்தினர்.

ஃபாதர் அசையாமல் படுத்திருந்தார். அவரது மூடிய கண் இமைகளில் ஒரு சுழிப்பு. உதடுகளில் லேசான அசைவு. ஏதேனும் சொல்ல விரும்புகிறாரோ? குனிந்து காது கொடுத்தனர்.

“அருள் நிறைந்த அன்னையே வாழ்க”

ஆகா, எப்பேர்ப்பட்ட தூய உள்ளம்! தன் நிலை மறந்த நேரத்திலும் இறை வழிபாட்டை மறக்கவில்லையே என வியந்தனர்.

ஃபாதரின் உடல் தான் கிழித்த நாராகக் கிடந்ததே தவிர, அவரது மனதில் ஒரு பூகம்பமே நடந்து கொண்டிருந்தது. காட்சிகள் அவரது மனக் கண் முன் விரிந்து கொண்டிருந்தன.

இதோ ஒரு குளத்தங்கரை மண்டபம். சிறுவர்களும் பெரியவர்களுமாகப் பல ஆண்கள் வரிசையாக உட்கார்ந்திருக்கின்றனர். ஒரு சிறுவன் அவர்களிடையே பரபரப்பாக ஓடி ஓடிப் பூணூல் வினியோகித்துக் கொண்டிருக்கிறான்.

“சுப்புணி, எல்லாருக்கும் பூணூல் குடுத்துட்டயா?” அவனது தந்தை கேட்கிறார். அவன் தலை அசைத்ததும் கூட்டத்தைப் பார்த்து ‘ஆரம்பிக்கலாமா?’ என்று கேட்டு விட்டு “சுக்லாம்பர தரம் விஷ்ணும் …..” சொல்கிறார். கூட்டம் அவரது சொற்களை எதிரொலிக்கிறது.

இதோ மற்றொரு காட்சி.

பள்ளிக் கூடம். இடைவேளை. சுப்புணி தனியே உட்கார்ந்திருக்கிறான். தலைமை ஆசிரியர் அங்கு வருகிறார்.

“ஏண்டா, சாப்பிடலையா?”

“இல்லை, ஃபாதர்.”

“அம்மா சாதம் கட்டிக் கொடுக்கல்லியா?”

“இல்லை ஃபாதர்.”

“என் அறைக்கு வா. காசு தரேன். ஓட்டல்லே போய் தயிர் சாதம் வாங்கிச் சாப்பிடு.”

“வேண்டாம், ஃபாதர்.”

“ஏண்டா?”

“பிறத்தியார் கிட்டே வாங்கிக்கக் கூடாது என்று எங்கம்மா சொல்லியிருக்கா, ஃபாதர்.”

“உங்கப்பா புரோகிதர் தானேடா. அவர் பிறரிடம் தானம் வாங்கறது இல்லையா? அது தேவலாம் என்றால் இதுவும் தப்பில்லை. வாங்கிக்க.”

“இல்லே, ஃபாதர். எங்கப்பா தானம் வாங்கினா, கொடுத்தவாளுடைய நன்மைக்காக ஜபம் பண்ணுவார், அல்லது காவேரி ஸ்னானம் பண்ணுவார், ஃபாதர்.”

“அந்த மாதிரி நீயும் இதை இப்ப வாங்கிக்க, பின்னாடி எனக்காகவும் இந்த ஸ்கூலுக்காகவும் ஜபம் பண்ணிடு.”

வாதத்தில் தோற்றுப்போன சுப்புணி வயிற்றுப் பசி தீர்க்கக் கை நீட்டுகிறான்.

அந்தக் காட்சி மறைகிறது. அடுத்த காட்சி விரிகிறது.

ஒரு விதவைத் தாய்.

“வாடா சுப்புணி, சந்தியா வந்தனம் பண்ணிட்டுவா, சாப்பிடலாம். காலம்பறலேர்ந்து சாப்பிடலை, பாவம்.”

“இல்லேம்மா, மத்தியான்னம் ஸ்கூல்லே சாப்பிட்டுட்டேன்.”

“யார்டா சாதம் போட்டா?”

சொல்கிறான்.

“போன வருஷம் ஒரு நாள் நீ அந்த மாதிரி சாப்பிட்ட போதே, அது தப்புன்னு சொன்னேனே அப்பா. கண்டவா கிட்டேயும் வாங்கிக்கக் கூடாதுடா. உங்கப்பா எல்லார் கிட்டேயும் தானம் வாங்கிட மாட்டார். யார் சாதம் போடறாளோ அவா குணம் நமக்கு வந்துடும்னு, நல்ல சத்துக்கள் வீட்டிலே தான் சாப்பிடுவார்.”

“இல்லேம்மா, ஃபாதர் ரொம்ப நல்லவர். நான் நன்னாப் படிக்கறேன்னு எங்கிட்ட ரொம்ப அன்பா இருப்பார்ம்மா.”

காட்சி மாறியது.

அம்மா கையைப் பிடித்துக் கொண்டு கெஞ்சுகிறாள், “வாண்டாண்டா சுப்புணி, சொன்னதைக் கேளுடா, எனக்கு ஒரு கொள்ளி போட்டுட்டு நீ எப்படி வேணுமானாலும் போ. அவன் கையிலே சோறு வாங்கித் தின்னு அவன் புத்தியே உனக்கு வந்துடுத்தேடா.”

சுப்புணியும் கெஞ்சுகிறான். “மதம் தான் மாறுகிறேனே தவிர, உன் பிள்ளை என்பது இல்லாமல் போகமாட்டேன் அம்மா. உன்னை மறக்க மாட்டேன்ம்மா. அப்பா இறந்தபின் எனக்காக நீ எப்படி உழைச்சு ஓடாப் போயிருக்கேங்கிறதை நான் பாத்துண்டு தானே இருக்கேன். எத்தனை வீட்டிலே பத்துப் பாத்திரம் தேச்சிருக்கே, எத்தனை கல்யாணத்திலே கல்லைக் கட்டி இழுத்து மாவு அறைச்சிருக்கே, இனிமே நீ கஷ்டப்பட வேண்டாம்மா. அடுத்த மாசத்திலேருந்து எனக்குச் சம்பளம் வரும். நீ சௌகர்யமா இருக்கலாம். உன்னைக் காப்பாத்தறது என் கடமை. நான் மறக்க மாட்டேம்மா.

“அதே நேரத்திலே எனக்கு இன்னொரு கடமையும் இருக்கும்மா. எனக்கு ஸ்காலர்ஷிப் கொடுத்துப் படிக்க வைச்சு நான் பட்டினி கிடக்க நேரிட்ட போதெல்லாம் என் முகம் பாத்து சாப்பாடு போட்ட மதத்துக்கும் நான் நன்றி செலுத்தணும் அம்மா.”

“அதுக்காக மதம் மாறித் தான் நன்றி செலுத்தணுமோ? இந்துவா இருந்துண்டே அவா நன்மைக்கு நீ உழைக்கப்படாதா?”

………..

அன்று அவன் தான் செய்தது சரி என்று கருதி வீட்டை விட்டு வெளியேறி விட்டான். அம்மா அவனை அதன் பின் வீட்டில் அனுமதிக்கவில்லை.

ஆயிற்று. அறுபது வருஷங்கள். எத்தனை பிரசங்கங்கள்! எத்தனை கூட்டங்கள்! எத்தனை பேருக்கு ஆறுதல் அளித்திருக்கிறார் ஃபாதர் சின்னசாமி! ஆனால் அந்த ஒரு ஜீவனுக்கு மட்டும் அந்திம காலத்தில் அவர் ஆதரவாக இருக்க முடியவில்லையே! மரண நேரத்தில் அந்த நினைவு வந்து வேதனை துளைக்கிறதே! ஜபம் சொல்லிப் பார்க்கிறார் ஃபாதர்.

“அருள் நிறைந்த அன்னையே வாழ்க..”

‘என்னவோ இன்றைக்கு மரியே என்பதற்குப் பதில் அன்னையே என்ற சொல் தான் உள்ளத்தில் சுழல்கிறது. அவரது அன்னையைப் பொறுத்தவரை எவ்வளவு சத்தியமான வார்த்தைகள்! பெண்களுக்குள் அவள் ஒரு ரத்தினம் அல்லவா? என்ன தியாகம்! இருந்த ஒரே பிள்ளையை, வயதான காலத்தில் காப்பாற்றுவான் என்று நம்பி இருந்தவனை உயிருடன் தியாகம் செய்தவள் எவ்வளவு பெரிய மனது உடையவள்! ஆனால் அவளுடைய திருவயிற்றின் கனியாகிய நானோ பாவிகளுக்கெல்லாம் மேலான பாவியாகி விட்டேனே. எத்தனை பேருடைய பாவங்களுக்கு நான் மன்னிப்பு வாங்கிக் கொடுத்திருக்கிறேன். என்னுடைய பிரத்தியட்சமான அன்னையைக் கடைசிக் காலத்தில் வறுமையில் வாட விட்டேனே!’

‘அவளுக்குத் தான் என்ன மன உறுதி! நான் அனுப்பிய பணத்தை விரலால் கூட தொட மாட்டேன் என்று மறுத்து விட்டாளே! அவளைப் பார்க்கக் கூட என்னை அனுமதிக்கவில்லையே! தான் பிறந்த மதத்தை அவள் நேசித்தது தவறா? வந்து குடி புகுந்த மதத்தை நான் நேசிக்கவில்லையா? நான் பிறந்த மதத்தை விட்டு வந்தது சரியா? என் தாயைத் தவிக்க விட்டது சரியா?

‘இது என்ன, இத்தனை நாள் இல்லாமல் அறுபது வருஷம் கழித்து இந்த சிந்தனை? அன்னையே, என் மரண நேரத்தில் எனக்காக வேண்டிக் கொள்ள மாட்டாயா?’

‘வெறும் ஜபம் செய்தால் மட்டும் ஒருவன் பாவங்களிலிருந்து தப்ப முடியாது. அவன் மனம் வருந்திப் பரிகாரமான செயல்களும் செய்து தான் திருந்தியதைத் தன் மனம் ஒப்பும் வகையில் நிரூபிக்க வேண்டும்.’

அவர் மற்றவர்களுக்கு உபதேசித்த வார்த்தைகள் அவர் காதில் ரீங்காரமிட்டன. ‘என்ன செய்யலாம்? நாக்கைக் கூட அசைக்க முடியாத இந்த நிலையில் என் மனம் வருந்தியதை நிரூபிக்கும் பரிகாரம் நான் என்ன செய்ய முடியும்? அன்னையே, எனக்கு சக்தி கொடு.’

அவரது உதடுகள் மெல்ல அசைந்தன. அணுக்கத் தொண்டர்கள் குனிந்து அவர் வாயருகே காதை வைத்துக் கேட்டனர்.

“வைத்தி, வைத்தி”

“யார் வைத்தி என்பது?” ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். மீண்டும் அவரது உதடு அசைந்தது.

“வைத்தி, பாஸ்கரராஜபுரம், பார்க்கணும்.”

தங்கள் தெய்வத் தந்தையின் கடைசி ஆசையை நிறைவேற்றத் தொண்டர்கள் பறந்தனர். எப்படியெல்லாமோ விசாரித்து வைத்தியைக் கொண்டு வந்துவிட்டனர்.

அங்குக் கூடியிருந்த கூட்டத்துக்குச் சற்றும் பொருத்தமில்லாத தோற்றம். குடுமி, துண்டு மட்டும் போர்த்திய மார்பு, பூணூல், பஞ்சகச்சம், நெற்றியில் திருநீறு, சந்தனம், குங்குமம்.

கூசிக் கொண்டு உள்ளே நுழைந்தார் வைத்தி. அவரது பால்ய நண்பன் சுப்புணி கட்டிலில் நார் போலக் கிடந்தான்.

எவ்வளவு அன்யோன்யமாக இருந்தார்கள்! சுப்புணி வீட்டை விட்டு வெளியேறு முன் தாயையும் மகனையும் சேர்த்து வைக்க எத்தனை முயற்சிகள் செய்திருக்கிறார் இந்த வைத்தி. பின்னர் இவர் மூலம் தான் சுப்புணி அம்மாவுக்குப் பணம் அனுப்பினான். அம்மா காரியமும் சுப்புணி தான் செய்தார். அதன் பின் அவருடைய தொடர்பு விட்டுப் போயிற்று.

“உட்கார்.”

ஜாடை காட்டினார் சின்னசாமி. வைத்தி கூசிக் கொண்டே ஸ்டூலில் உட்கார்ந்தார். ‘அவரை எப்படிக் கூப்பிடுவது? சுப்புணி என்று கூப்பிடுவதா? சார் என்றா? எல்லோரையும் போல ஃபாதர் என்றா?’

இருந்த சக்தி எல்லாம் திரட்டி ஃபாதர் பேசினார், மெதுவாக, ஆனால் நிதானமாக.

“என் கணக்கிலே கொஞ்சம் பணம் இருக்கு. அதை நம்ம ஊர் வேத பாடசாலைக்கு சேர்ப்பித்து விடு. இந்த என் கடைசி ஆசையை நிறைவேத்துவியா?”

அவரது குறிப்பு உணர்ந்த தொண்டர் அவரது செக் புத்தகத்தை நீட்டினார். நடுங்கும் கைகளால் அதில் கையெழுத்துப் போட்டு வைத்தியிடம் கொடுத்தார் ஃபாதர்.

அடுத்த கணம் விவரிக்க முடியாத அமைதி அவரது உள்ளத்தில் தோன்றியது. அவரால் முடிந்த பரிகாரம் செய்துவிட்டார். மனம் லேசாகிக் காற்றில் பறப்பது போன்றும் தன் உடலைத் தானே மேலிருந்து பார்ப்பது போலவும் உணர்ந்தார். கண்கள் ஒரு கணம் மின்னின, பின் மூடிக் கொண்டன. அறுபது ஆண்டுக் காலம் இறை பணியிலேயே தன்னை ஈடுபடுத்திக் கொண்ட ஆன்மா உடலை விட்டுப் பிரிந்தது.

அவரது நண்பர் வைத்தி- அவரைப் போலவே அறுபது ஆண்டு காலம் புரோகிதத் தொழில் செய்து மற்றவர்களின் நன்மைக்காக வேண்டுவதிலேயே காலம் கழித்த அந்தக் கிழவர் அந்த இடத்தை விட்டுக் கண்களைத் துடைத்துக் கொண்டே வெளியேறினார்.

 

பதிவாசிரியரைப் பற்றி

7 thoughts on “பிராயச்சித்தம்

 1. இதையத்தை தொட்டக் கதை இடையிடையே கனக்கும் இதயத்தோடு கண்களும் பனித்தன…

  இருவரும் ஈடில்லா இறைபணி செய்திருந்தாலும் இதயத்தால் ஒருகிணைந்த
  நண்பர்களாயிற்றே!

  நன்றியுணர்வு அவரை அங்கே கொண்டுச் சேர்த்தாலும் பெற்ற அன்னைக்கு செய்தது துரோகமே என்னும் மன உறுத்தல் கடைசியில் மரணப் படுக்கையில் வந்து பரிகாரம் கேட்டு வழி மறிக்கிறது…

  அற்புதமானக் கதை அறிவார்ந்த முடிவு!
  பகிர்விற்கு நன்றிகள் ஐயா! 

 2. ஒரே மூச்சில் படித்தேன். ஒரு நாவலாக எழுத இடமுள்ள கதையை சிறுகதையாக்கி சித்திரமாக கொடுத்துவிட்டீர். எங்கே சென்றாலும் எத்தனை உயரம் சென்றாலும்
  ஆதாரம் தாய் என்பதை அரசனுக்கும் சரி ஆண்டிக்கும் சரி அந்திமக்காலம் உணர்த்தும்.

  அங்கும் இங்குமாக பட் பட்டென்று கதை மாறி கதையில் வேகம் கொடுப்பது பாராட்டப்பட வேண்டும். நல்ல கதை நன்றி.

 3. ஒரு வித்யாசமான கதைக் கரு. கதையைப் படித்து முடித்தவுடன் மனதின் மேல் ஒரு மெல்லிய படலம் படர்ந்தது போல் ஒரு உணர்வு ஏற்பட்டுவிட்டது.

  “தாயிற் சிறந்த கோயிலில்லை, அவள் சொல்லிற் சிறந்த தெய்வமில்லை.”

 4. “உன் புருஷன் ஒரு கையாலாகாதவன், அவனை விட நான் உன்னை நல்லா வச்சுக்கறேன், என்னோட வந்துரு” என்று திருமணமான பெண்ணிடம் ஒரு மூடன் சொல்வது எவ்வளவு கொடியதோ, அது போன்றது தான் “உன் மதம் பிரயோஜனம் அற்றது, என்னுடைய மதத்துக்கு வா” என்று கூவிக்கூவி அழைப்பதும். இது திரு. சுகி சிவம் அவர்கள் சொன்னது.

  ஒரு பெண்ணுக்கு ஏதோ கஷ்டத்தில் உதவி செய்து விட்டதற்காக, அவள் கணவனை விட்டு தன்னோடு வந்து விடுமாறு அழைப்பது எவ்வளவு மூர்க்கத்தனம்? அவளும் அப்படிப் போனால் அதற்குப்பெயர் விசுவாசமா?

  pertinent questions. இவற்றை அழகாக வடித்துள்ளீர்கள்.

  வணக்கங்கள், ஐயா.

  புவனேஷ்வர்

 5. மதம் என்ற வரையறையைக் கடந்தது தாயின் மீது கொண்ட அன்பும், நட்பும் என்பதை சிறப்பாக விளக்கி உள்ளீர்கள் ஐயா. தாயின் விருப்பத்திற்கு மாறாக வேறு வழியில் சென்றாலும், மறைந்த தாய்க்கு எது மனமகிழ்ச்சியைத் தந்திருக்கலாம் என்ற வகையில் முடிவெடுத்த அருட்தந்தையின் செயல் அவருக்கு இறுதிகாலத்தில் மனஅமைதியைத் தந்திருப்பது கதைக்கு ஒரு நல்ல முடிவு.  

  அன்புடன்
  ….. தேமொழி 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *