சச்சிதானந்தம்
கரடியின் தாண்டவம்
குட்டிக ளிரண்டைக் கூட்டிக் கொண்டு,
வெட்டிரும் பொத்த முகத்தைக் கொண்டு,
முட்டிக் கரையான் புற்றைச் சாய்த்தது,
கட்டுறுதிக் குணக் கரடி யொன்று! 68
குரங்கைப் போலக் கரடிக் குட்டிகள்
குதித்துத் தாவித் தாயின் முதுகில்,
களிறின் மீதமர் கோவைப் போல,
கம்பீரத் தொனி கொண்டமர்ந் தனவே! 69
உலர்ந்தசெம் புற்றைத் தாக்கிக் குலைத்து,
வலம்வரும் கரடியைக் கண்டது கொண்ட,
பலமும் குணமும் அறிந்து குறவன்,
புலனைந் தொடுக்கிப் பதுங்கி மறைந்தான்! 70
நூறடி தூரத்தில் புலியொன் றுறுமி,
நாலடி உயர மானைத் துரத்த – அம்மானோ
ஓரடிப் பாய்ச்சலில் எட்டடி தாண்டி
மூவிரு நொடிகளில் கரடியைக் கடந்தது! 71
நடப்பது இதுவென் றறியும் முன்னே,
நெருங்கிய புலிகண்டு நடுங்கிய குட்டிகள்,
நழுவித் தாயின் முதுகில் இருந்து,
நிலத்தில் சரிந்து நெஞ்சம் பதறின! 72
வேகம் எடுத்த புலிதன் னருகே,
தேகம் கறுத்த கரடியைக் கண்டு,
நாகம் போலுடல் சீறி எழுந்திட,
சாகுங் கலைமான் செத்துப் பிழைத்தது! 73
தூணைப் பிளந்த சிம்மம் போல,
முன்னங் கால்களை மேலே தூக்கி,
தோள்கள் விரித்து அசுரத் தாண்டவம்,
ஆத்திரம் பொங்க ஆடிடும் கரடி! 74
புஜபலங் காட்டும் முன்னர் எதிரியின்,
நிஜபலம் நோக்கும் மன்னர்கள் போல,
கஜநிறக் கரடியும் கறுவரிப் புலியும்,
ஜெயம்தனைக் கருதிப் போரின்றிப் பிரிந்தன! 75
அஞ்சுவ தஞ்சும் ஆற்றல் கொண்டு,
ஆரண் யத்தின் பாரம் பரியம்,
அறிந்த குறவன் அமைதியைக் காத்து,
ஆபத் துகளைத் தவிர்த்து வாழ்ந்தான்! 76

Leave a Reply