புவனேஷ்வர்

 

மேனி யழகும் முதன்மையெ னுந்நிலையும்

பேணிய நாளும் நிலையோ – தேமொழிநல்  

தோணிய வன்பதம் பிறவிக் கடல்தாண்ட

காலகா லன்பதம் சேர்.

 

தனமும் வாக்கும் கொண்டகு டும்பமும்

சினம்கொண்ட கூற்றின்முன் நில்லா – தேமொழிநல்

கணம்கொண்ட நாதனா மாலகாலம் லம்முண்ட 

காலகா லன்பதம் சேர்.

 

வீரமும் வெற்றிச் செருக்கும் பாரிலோர்

தீரமுடன் சேர் தம்பியும் – தேமொழிநல்

பூரமது போல்கரையும் கண்டாய் வாழிநீ

காலகா லன்பதம் சேர்.

 

கற்ற கல்வியும் பெற்ற மனைசுகமும்

நற்றவம் போலவ ருமா   – தேமொழிநல்

உற்றதாயும் உடன்வாராள் பற்றறுத்து

காலகா லன்பதம் சேர்.

 

நுண்ணிய நல்லறிவும் திண்ணிய தோள்தவழும்

ஒண்ணுதல் பிள்ளைகளும் நிலையா – தேமொழிநல்

புண்ணியப் பயன்றுய்த் துய்ய கண்ணுதலோன்

காலகா லன்பதம் சேர்.

பி.கு: குமரி மாவட்டம் பத்மநாபபுரம் வட்டம் மேலாங்கோடு என்னும் திருத்தலத்தில் உறையும் ஈசனின் திருநாமம் ஸ்ரீ காலகாலர். அவர் மீது இயற்றப்பெற்ற பாடல்.

 

பதிவாசிரியரைப் பற்றி

8 thoughts on “காலகாலர் துதி

  1. தேமொழி என்ற சொல் இங்கு “தேன் போலும் இனிய மொழிகளைப் மேசும் இயல்புடையே பெண்ணே” என்ற பொருளில் கையாளப் பெற்றது.

    ஒண்ணுதல் = ஒள்+நுதல். ஒளி படைத்த அழகிய நெற்றி.

    புவனேஷ்வர்

  2. கவிதையின் நோக்கமென்ன கவிஞரே?
    ஆற்றுப்படுத்துவதா? அல்லது அறம் பாடுவதா?

  3. அறம்  பொருளின்பம் அதனையும் தாண்டிய  
    வரமொன்ற்றைத் தருவாய் வார்சடைக் குழலோய் 
    கரம்தனைக் குவித்து மனம்தனிலுனை சேவித்து 
    புறம் அகம் யாவிலும் பூரணமாய் விளங்கும் 
    பரமே பற்றிலா நின்பதம்தனைப் பற்றிட 
    தரவேண்டுமெமக்கு நல்லருள் இக்கணமே! 

    என்ற சிந்தையைத் தூண்டிய கவிதை! 

    “காதருந்த ஊசியும் கடைசியில் வாராது” என்றந்த சிந்தனையை கருவாக்கிப் பிறந்த நற்கவிதை காலகாலன் பதம் சேர் என்றக் கவிதை.

    அருமை! அற்புதம் பகிர்விற்கு நன்றியும் வாழ்த்துக்களும் சகோதரரே!

  4. தங்கள் சோதிட அறிவும் ஒப்பில்லா தமிழ் அறிவும் ஒருங்கிணைந்து பிரம்மாண்டமாக வெளிப்பட்டிருக்கின்றது. முதல், இரண்டு, மூன்றாம் இடங்களுக்கான செய்திகளை அழகுத் தமிழில் தொகுத்துத் தந்திருக்கிறீர்கள்.
    இது நிச்சயம் ஒரு போற்றத் தகுந்த சாதனை. பெரும் வியப்பை அளிப்பதோடு தலை வணங்கவும் தோன்றுகின்றது. தங்களுக்கு மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்.

    தங்களுக்கு இந்தச் சகோதரியின் ஒரு பணிவான வேண்டுகோள். தங்கள் மீது வைத்திருக்கும் நம்பிக்கையால் கேட்கிறேன். இணையம் என்பது முகம் தெரியாத பலர் உலவும் இடம். நேருக்கு நேர் சந்திக்க வாய்ப்பில்லாததால், மனம் சொல்லும் வார்த்தைகள் புரிபடாத தூரத்தில் இருக்கிறோம்.

    நான் சில சமயம் சாதாரணமாகச் சொன்ன வார்த்தைகள் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டு, அதன் காரணமாக, மிகக் கடுமையான வார்த்தைகள் என் மீது வீசப்பட்டிருக்கின்றன. அதன் காரணமான மனவேதனை நான் மட்டுமே அறிவேன். என் போல் யாரும் மனவேதனைப் படக் கூடாது என்பதற்காகவே தங்களை வேண்டுகிறேன்.

    தங்கள் கவிதையில் பயன்படுத்தியிருக்கும் ‘தேமொழி’ என்ற பெயர், அதிகம் புழக்கத்தில் இல்லாத தனித்துவம் மிக்கதொரு பெயர். என் பெயர் போன்றதல்ல.

    ஆகவே, நீங்கள் விளக்கம் தந்தாலும், சம்பந்தப்பட்டவர் மனம் பாதிக்கப்படவே செய்யும். அது பெருமதிப்பிற்கும் மரியாதைக்குமுரிய திருமதி.தேமொழி அவர்களின் பின்னூட்டத்திலிருந்து தெளிவாகப் புலப்படுகின்றது.

    தங்கள் விளக்கம் நியாயமே எனினும், சற்று வயதில் மூத்தவள் என்பதால் ஒன்று வேண்டிக் கொள்ளப் பிரியப்படுகின்றேன். தாங்கள் இன்னும் நிறைய சாதிக்க வேண்டியிருக்கிறது. அனைவரின் ஆசியும் தங்களுக்குத் தேவை. யார் மனதும் தெரிந்தோ தெரியாமலோ நோகடிக்கப்படக் கூடாது.

    தமிழும் தமிழ்ப் படைப்பாளிகளும் என் வரையில் இறைவனுக்குச் சமம். கவிதை, திருமதி.தேமொழி சொல்வதைப் போல் அறம் பாடுவதாகவே தொனிக்கின்றது. ஆகவே, தாங்கள் அருள் கூர்ந்து, திருமதி.தேமொழி அவர்களின் பெயரைத் தவிர்த்து, கவிதை வரைந்து பின்னூட்டுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

    எல்லாம் வல்ல இறைவன், தங்களுக்கும், திருமதி.தேமொழி அவர்களுக்கும் எல்லா நலமும் வளமும் வழங்கி அருள வேண்டுகிறேன்.

    தங்கள் சகோதரி,
    பார்வதி இராமச்சந்திரன்.

  5. பெருமதிப்பிற்குரிய தேமொழி அவர்களே,
    தங்கள் கேள்விக்கான பதிலை அடியேன் பின்குறிப்பில் தந்துள்ளேனே.
    தங்கள் வசதிக்காவ அதை இங்கே மீண்டும் தருகிறேன்:

    //பி.கு: குமரி மாவட்டம் பத்மநாபபுரம் வட்டம் மேலாங்கோடு என்னும் திருத்தலத்தில் உறையும் ஈசனின் திருநாமம் ஸ்ரீ காலகாலர். அவர் மீது இயற்றப்பெற்ற பாடல்.//

    அறம் பாடும் அளவுக்கு அடியேனுக்கு சக்தி உள்ளதாக அடியேன் நினைக்கவில்லை.

    தங்கள் பெயர் தேமொழி என்பதால் நீங்கள் உங்களைச் சந்பந்தப் படுத்திக் கொண்டு விடுவீர்களோ என அஞ்சியே, அடியேன் முதல் பின்னூட்டமாக, தேன் போலும் இனிய மொழி பேசும் பெண் என விளக்கம் தந்தேன்.

    இளங்கோவடிகளும் தேமொழி என்ற பதத்தை இதே பொருளில் மதுரைக்காண்டத்தில் பாண்டியன் கண்ணகியை நோக்கி “தேமொழி உரைத்தது செவ்வை நன்மொழி” என கூறுவதாகக் கூறுகிறார்.

    நன்றி,

    பணிவன்புடன்,
    புவனேஷ்வர்

  6. பாடலுக்கு பாடலாலேயே மறுமொழி தந்த மேன்மைக்கு வியந்து போற்றுகிறேன், வணங்குகிறேன், ஆலாசியம் அண்ணா.

    புவனேஷ்வர்

  7. எனது மதிப்பிற்கும் வணக்கங்களுக்கும் என்றும் உரிய சகோதரி ஸ்ரீமதி. பார்வதி இராமச்சந்திரன் அவர்களே,

    தாங்கள் கூறிய அறிவுரையை சிரம் தாழ்த்தி ஏற்கிறேன். திருமதி. தேமொழி அவர்களை நான் இக்கவிதை இயற்றும் நாளில் நினைக்கவில்லை. அவரை மட்டுமல்ல, யாரையும் புண் படுத்தும் நோக்கமோ இயல்போ அடியேனிடம் இல்லை.

    எனது மூத்த சகோதரியும், பலவகைகளில் ஆசானுமான ஆகிய தாங்கள் இட்ட கட்டளை என்னால் நிறைவேற்றப்பட வேண்டும்.

    இதோ. தங்கள் சித்தம். “தேமொழிநல்” என்ற பதத்தை “சேயிழையே” என்று மாற்றி இங்கேயே வெளியிடுகிறேன்.

    +++++

    மேனி யழகும் முதன்மையெ னுந்நிலையும்

    பேணிய நாளும் நிலையோ – சேயிழையே

    தோணிய வன்பதம் பிறவிக் கடல்தாண்ட

    காலகா லன்பதம் சேர்.

    தனமும் வாக்கும் கொண்டகு டும்பமும்

    சினம்கொண்ட கூற்றின்முன் நில்லா – சேயிழையே

    கணம்கொண்ட நாதனா மாலகாலம் லம்முண்ட

    காலகா லன்பதம் சேர்.

    வீரமும் வெற்றிச் செருக்கும் பாரிலோர்

    தீரமுடன் சேர் தம்பியும் – சேயிழையே

    பூரமது போல்கரையும் கண்டாய் வாழிநீ

    காலகா லன்பதம் சேர்.

    கற்ற கல்வியும் பெற்ற மனைசுகமும்

    நற்றவம் போலவ ருமா – சேயிழையே

    உற்றதாயும் உடன்வாராள் பற்றறுத்து

    காலகா லன்பதம் சேர்.

    நுண்ணிய நல்லறிவும் திண்ணிய தோள்தவழும்

    ஒண்ணுதல் பிள்ளைகளும் நிலையா – சேயிழையே

    புண்ணியப் பயன்றுய்த் துய்ய கண்ணுதலோன்

    காலகா லன்பதம் சேர்.

    +++++

    தேமொழி அவர்களுக்கு, இதனால் மனக்கஷ்டம் எள்ளின் முனையில் பதினாறில் ஓர் பங்களவும் ஏற்பட வேண்டியதில்லை என வேண்டுகிறேன். அவரை நினைத்து நான் எழுதவில்லை. ஜௌதிஷம் மற்றும் இளங்கோவை நினைத்தே எழுதினேன். ஒரு வேளை அவர் தம் மனம் புண்பட்டிருப்பின் மன்னிப்புக் கேட்க தயங்கவில்லை. அவர் என்னை மன்னிப்பாராக.

    பணிவன்புடன்,
    புவனேஷ்வர்

  8. @திரு.புவனேஷ்வர்.
    நான் தங்களுக்குக் கட்டளையிடும் அளவுக்குப் பெரியவளல்ல. வேண்டுகோளே வைத்தேன். நன்முறையில் நிறைவேற்றியது குறித்து நன்றியும் மகிழ்ச்சியும். தங்கள் பெருந்தன்மை போற்றத்தக்கது. மீண்டும் என் நன்றி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *