தேமொழி

179584442_37af375c16மணி ஒரு மூன்றேகால் இருக்கலாம். கடைசி பீரியட். ஸ்டெல்லா டீச்சர் மின்கலன்களின் வகைகள் பற்றிய பாடத்தை நடத்திவிட்டு, பாடப் புத்தகத்தில் அந்தப் பாடத்தின் கீழ் இருந்த 2, 3, 6 கேள்விகளுக்கு விடை எழுதி வரவேண்டியது மறுநாளுக்கான வீட்டுப் பாடம் என்றும், மின்கலங்கள் 1, 2, 3 படங்களை டயாக்ராம் நோட்டில் வரைந்து அந்த வார இறுதியில் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் சொன்னார்கள். கடைசி மணி அடிக்கும் வரை மிச்சம் இருக்கும் நேரத்தில் வீட்டுப் பாடத்தையோ, படங்கள் வரைவதையோ செய்யலாம் என்று அனுமதி கொடுத்தார்கள். படிய தலை வாரி இரட்டை சடைகள் போட்டுக்கொண்டு, நீலம் வெண்மை நிறங்களில் பாவாடை சட்டை, தாவணி போன்ற சீருடை அணிந்த மாணவிகள் தங்கள் வேலைகளை மும்முரமாகச் செய்தார்கள். ஸ்டெல்லா டீச்சர் கையில் இருந்த சாக்பீஸ் பொடியை கைக்குட்டையால் துடைத்துக் கொண்டே மாணவிகளின் இருக்கைகளின் இடையே இருந்த இடைவெளியில் நடந்து கொண்டே கண்காணித்தார்கள்.

வகுப்புகள் அமைதியாக இருந்ததால் பள்ளியே அமைதியாக இருந்தது. அவ்வப்பொழுது வெளிய பள்ளியின் சுற்றுச்சுவரை ஒட்டிய சாலையில் ஓடும் பேருந்துகளின் ஓசையைத் தவிர வேறு ஓசை இல்லை. மாடியில் இருந்த அந்த ஸ்டெல்லா டீச்சரின் வகுப்பின் வெளியே, வராந்தாவில் வேக வேகமாக யாரோ நடந்து போகும் ஓசைக் கேட்டு அனைவரும் ஒட்டு மொத்தமாகத் தலையை உயர்த்திப் பார்த்தார்கள். தமிழாசிரியை இரங்கநாயகிதான் படபடப்பாக நெற்றி வியர்வையைத் துடைத்துக் கொண்டு கடைசியில் இருக்கும் வகுப்பிற்குச் சென்றார். அவர் நடையில் ஒரு பதட்டம் தெரிந்தது. இன்று மாலையில், மாடியில் இருக்கும் மெடோனா ஹாலில் நடக்கப் போகும் வீரமாமுனிவர் தமிழ்சங்க நிகழ்ச்சியை ஒட்டி நடக்கும் பள்ளியின் கலைநிகழ்ச்சியின் மொத்தப் பொறுப்பும் அவருடையது. அதனால்தான் அந்தப் படபடப்பு என அனைவருக்கும் புரிந்தது. சிறிது நேரத்தில் புயல் போல மீண்டும் அவர்கள் வகுப்பைத் தாண்டி வந்த வழியே திரும்பிச் சென்றார். ஸ்டெல்லா டீச்சரால் கேட்காமல் இருக்க முடியவில்லை. “என்ன மிஸ் ரொம்ப டென்ஷனா இருக்கீங்க?” என்றார். திரும்பிப் பார்த்த இரங்கநாயகி, “ஒன்னண்டயும் ஒருதரம் கேட்டுட்டாப் போறது” என்றவாறு இவர்கள் வகுப்பிற்குள் வந்தார்.

“இன்னக்கி சாயங்காலம் ரீட்டா பரத நாட்டியம் ஆடுறா இல்ல, அலங்காரம் செஞ்சுட்டு கால்ல சலங்கையக் கட்டுறப்ப கைதவறி விட்டுட்டா, அது மேடைக்கும், பின் ஸ்க்ரீனுக்கும் சுவருக்கும் இடையே எங்கேயோ போய் இடுக்கிலே விழுந்துடுத்து, மேடை அடியில் இருட்டில் தேடியும் கிடைக்கலே. டொமினிக், ஜோசப் ரெண்டு பேரையும் கொஞ்சம் தேடிப் பார்த்து எடுத்து கொடுங்கோப்பான்னு கேட்டேன். அவாளும் மேடைக்கு அடியில் எலெக்ட்ரிக் வயர் போற இடத்திலே நன்னா தேடிட்டோம் அங்க இல்ல மிஸ் அப்படிங்கறா. என்ன செய்றதுன்னு நேக்கு தெரியலே. வேற சலங்கையும் இல்ல. ரீட்டாதான் சபிதா மிஸ் கிளாசில விஜயாவும், சாந்தா மிஸ் கிளாசில மீனாளும் டான்ஸ் ஆடுவாங்க டீச்சர். அவங்க வீட்டில இருந்து கொண்டு வந்து கொடுப்பங்களான்னு கேட்கிறேன்னு சொன்னா. இருடிம்மா நானே கேக்கிறேன். ஸ்டூடெண்ட் கேட்டா எந்த டீச்சரும் பெர்மிஷன் கொடுக்க யோசிப்பான்னு நானே வந்தேன். சபிதா மிஸ் ஸ்டூடெண்ட் இன்னைக்கி ஆப்செண்டாம். அதான் சாந்தா மிஸ் கிளாசுக்குப் போறேன், ஏன் ஸ்டெல்லா உன் ஸ்டூடெண்ட்ஸ் யாரானும் வச்சிருப்பாளோ?” என்று கேட்டவர், ஸ்டெல்லா டீச்சர் பதிலுக்குக் காத்திராமல் மாணவிகளை நோக்கி, “ஏண்டிம்மா உங்க யார் ஆத்திலேயாவது சலங்கை இருக்கா? ஆத்துக்குப் போயி எடுத்துண்டு வந்து கொடுத்தா ஷேமமா இருக்கும்,” என்றார்.

மாணவிகள் அமைதியாக இருந்தார்கள், “பதில் சொல்லுங்கம்மா யார்கிட்டேயும் இல்லையா?” என்றார் ஸ்டெல்லா டீச்செரும் தொடர்ந்து. “என் மாமாப் பொண்ணு டான்ஸ் ஆடுவா டீச்சர், நான் போய் எடுத்து வரவா?” என்றாள் லலிதா. “நோக்கு புண்ணியமாப் போகும், ஸ்டெல்லா இவள ஆத்துக்கு அனுப்பி எடுத்துண்டு வரச் சொல்லேன், நாழியாறது” என்றார். “சரி மிஸ். நான் அனுப்பி வைக்கிறேன். நீங்க நிம்மதியா அடுத்த வேலையைப் பாருங்க,” என்றார் ஸ்டெல்லா டீச்சர். அவரை அனுப்பிவிட்டு, மாணவிகளிடம் திரும்பி லலிதாவுக்குத் துணையா அவகூடப் யாராவது போயிட்டு வாங்கம்மா, யாரு போறீங்க?” என்றார். “நான் போறேன் மிஸ்,” என்றாள் கோதை.

கோதை அந்த வகுப்பின் கிளாஸ் லீடர், மிகவும் சூட்டிகை. உறையூரில் இருக்கும் வக்கீலின் பெண். நாச்சியார் கோயிலின் பக்கம் வீடு. தினமும் ஒன்பதாம் நம்பர் பஸ்ஸில் பள்ளிக்கு வருவாள். அப்பா அரசு தரப்பு வக்கீல். பெண் இப்பொழுதே தன்னை அரை வக்கீல் என நினைத்துக் கொண்டுதான் வாதம் செய்வாள். துணிச்சலின் மறு பெயர் கோதை. குறிப்பாக ஒன்றும் சொல்ல முடியாதவாறு பார்வைக்கு மிகவும் சராசரியான தோற்றமுள்ள ஒரு பெண். ஆனால் தலைமை ஏற்று நடத்தும் தகுதிகள் அதிகம். அடுத்த ஸ்கூல் பீப்பிள் லீடராகத் தேர்ந்தெடுக்கப் பட்டாலும் ஆச்சரியப் படுவதற்கில்லை. அவளைத் துணைக்கு அனுப்ப அதிகம் யோசிக்கத் தேவை இல்லாததால், “சரி, சீக்கிரம் போயிட்டு வாங்கம்மா” என்றார் ஸ்டெல்லா டீச்சர்.

லலிதா மெதுவாக, “மிஸ் நான் சலங்கையை கோதையிடம் கொடுத்தனுப்பி விட்டு வீட்டிலேயே இருந்துக்கவா? திருப்பி வர்றச்சே ஸ்கூல் முடிஞ்சிருக்குமே” என்றாள். அவள் ஏற்கனவே மாலையில் நடக்கப் போகும் தமிழ்ச்சங்க நிகழ்ச்சிக்கு வரமுடியாத நிலை என்று அனுமதி கேட்டிருந்ததும் டீச்சரின் நினைவிற்கு வந்தது. “நல்ல யோசனைதான், ஆனால் திரும்பி வர்றப்ப கோதை தனியால்ல வரணும். இப்ப அவளுக்கும் துணைக்கு ஒரு ஆள் அனுப்பணுமா? யாரும்மா இவங்களோட போறீங்க?” என்று கேட்டு டீச்சர் வாய் மூடவில்லை, “நான் போயிட்டு வரேன் மிஸ்,” என்று ரஹமதுனிசா கிளம்பினாள். டீச்செருக்குப் பகீர் என்றது. ரஹமதுனிசா கோதை மற்றும் லலிதாவின் உற்ற தோழி. மூவரும் எங்கு போனாலும் பிரியாமல்தான் இருப்பார்கள்.

ரஹமதுனிசா மிகவும் பெரிய இடத்துப் பெண். அவள் அப்பா ஜாஃபர்ஷா தெருவில் ஏற்றுமதி வியாபாரம் செய்யும் பெரிய பணக்காரர். உறையூர் பீடி, கல்கி பீடி, இஞ்சின் பீடி, ஹாட்டின் பீடி, சங்கு மார்க் லுங்கி போன்றவற்றை வாங்கி வெளிநாடுகளுக்கு மொத்தமாக விற்பனை செய்வார். அவருடைய பெண்ணை டிரைவரை நம்பி அவர்களது காரில் அனுப்பாமல், அவர் வாங்கி வாடகைக்கு விட்டிருக்கும் ரிக்க்ஷாக்களில் ஒன்றில் துணையுடன் பள்ளிக்கு அனுப்புவார். ஆட்டோவில் கூட அவள் பள்ளிக்கு வந்ததில்லை. யாரும் தனது பெண்ணை சுலபமாகக் கடத்திவிடக்கூடாது என்ற திட்டமோ என்னமோ. ரஹமதுனிசா ஒரு நாளுக்கு மொத்தமாக ஒரு கிலோ மீட்டார் கூட நடந்தால் அது அதிசயம்தான். இவளை அனுப்பினால் ஏதும் பெரிய இடத்து வம்பு வந்து சேருமோ என்று டீச்சருக்குத் தோன்றியது. ஆனால் அதைக் குறிப்பிட்டு வேறுபாடு காட்டி மாணவிகளுக்கு முன்பு சொல்லத் தயக்கமாக இருந்தது. “சரி சீக்கிரம் போயிட்டு பத்திரமா சீக்கிரமா வாங்கம்மா, வாட்ச்மேன் சூசையண்ணன் விடமுடியாதுன்னு சொன்னா, நான் ஹெச் எம்மிடம் பெர்மிஷன் சொல்லிக்குவேன்னு சொல்லுங்க, மாடிப்படியில் தட தடன்னு ஓடாதீங்க, ஸ்கூல் இன்னமும் முடியல்ல நினைப்பு வச்சுக்கோங்க,” என்றார்.

“வாப்பா, இன்னா இவ்ளோ ஸ்லோவா இருக்க” என்றாள் ரஹமதுனிசா. அவளுக்கு தாய்மொழி உருது, தமிழ் அவளிடம் படாத பாடு படும். வாப்பா, போப்பா என்றுதான் பேசுவாள். “இருடி, இவ ஒருத்தி அவசரப்படுத்திண்டு” என்று முணுமுணுத்தவாறு தனது புத்தகங்களை சேகரித்து வயர் கூடைக்குள் திணித்தாள் லலிதா. தனது குடும்பப் பின்புலம், வளர்ப்புச் சூழ்நிலையால் யாரையும் வாடி போடி என்று ‘டீ’ போட்டுதான் லலிதா பேசுவாள். இருவருக்குமிடையில் கோதை பேசுவது கொஞ்சம் மொட்டையாக இருக்கும். யாரையும் ‘டீ’ போடுவது மரியாதைக் குறைவு என்று கண்டித்து வளர்க்கப் பட்டவள். எனவே,”சரி கிளம்புங்க ரெண்டு பேரும்” என்று தனது வழக்கமான முன்னின்று நடத்தும் பாணியில் பேசி அழைத்துக் கொண்டு வெளியேறினாள்.

டீச்சர் எதிர்பார்த்தது போலவே ஹெச் எம்மின் பெர்மிஷன் ஸ்லிப் இல்லாமல் சூசையண்ணா பள்ளி முடியும் முன் அவர்களை வெளியேற அனுமதிக்கவில்லை. ஸ்டெல்லா டீச்சர் ஹெச் எம்மிடம் எங்களுக்காகப் பெர்மிஷன் கேப்பாங்க, என்று மாணவிகள் சொன்னதும் அவர்கள் வகுப்பை அண்ணாந்து பார்த்தார். மாடி வராண்டாவில், நெட்டிலிங்க மரங்களுக்கிடையே தலையை  நீட்டிப்  பார்த்துக் கொண்டிருந்த ஸ்டெல்லா டீச்சர் அனுப்புங்க, அனுப்புங்க என்று கையால் ஜாடை காட்டினார்.  “இவங்க ஒருத்தங்க, ஹெச் எம் எனக்கு கண்டிஷனா சொல்லியிருக்காங்க, இப்போ நான் அனுப்பிச்சா, யாரைக் கேட்டு செஞ்சே, என் பெர்மிஷன் இல்லாம எப்படி அனுப்பலாமின்னு ஹெச் எம் என்னையில்ல திட்டுவாங்க” என்று முணுமுணுத்தவாறு பெரிய கேட்டில் இருந்த சிறிய திட்டிவாசல் போன்ற கேட்டைத் திறந்துவிட்டார் சூசை.

மாணவிகள் வெளியே வந்ததும் பேசிக்கொண்டே இடதுபுறம் திரும்பி, செயின்ட் ஜோசப் சர்ச் நோக்கி நடந்தார்கள்.

கோதை, லலிதாவின் வேகத்திற்கு ரஹமதுனிசாவால் ஈடு கொடுத்து நடக்க முடியவில்லை. அவள் காலில் அணிந்திருந்த, அவளது அத்தா சிங்கப்பூரில் இருந்து வாங்கி வந்த கலையழகுள்ள புதுச் செருப்பும் கடித்தது, அதனால் அவள்  பின் தங்க ஆரம்பித்தாள்.

“ஏம்ப்பா, ஒன் வீடு ஆண்டார் வீதிலதான இருக்கு”

“ஆமாண்டி, இப்பவே ஆரம்பிச்சுட்டியா? நடக்க முடியலையா?”

“என்னம்மா பேகம், புதுச் செருப்பு கடிக்குதோ? ” என்று விளையாட்டாகக் கேட்ட கோதை லலிதாவிடம், “கொஞ்சம் மெல்லப் போ, பாவம் ரஹமதுனிசாவுக்கு நம்மைப்போல நடந்து பழக்கம் இல்லை, பாரு இப்பவே முகம் சிவந்து வேர்த்து விட்டது,” என்று சொல்லி நடையை நிதானமாக்கினாள்.

ரஹமதுனிசா கொஞ்சம் கழுக் மொழுக் வகை. பெண்கள் எல்லோரும் நீல நிறப் பாவாடை தாவணி, வெள்ளை சட்டை அணிந்து பள்ளி வந்தால், இவள் சீருடையைத் தலைகீழாக்கி வெள்ளை நிறப் பைஜாமா, நீல நிற குர்தா அணிந்து வெள்ளை துப்பட்டா போட்டு வருவாள். யாரும் கிள்ளிப் பார்க்க விரும்பும் சிறிது உப்பிய கன்னம், தலை நிறைய உள்ள நீண்ட அடர்த்தியான முடியை இரட்டையாகப் பிரித்து குதிரை வால் போலப் போடுவாள். சுருக்கமாகச் சொன்னால், அசப்பில் “காத்திருந்த கண்களே, கதை அளந்த நெஞ்சமே” எனப் பாடி ஆடும் ஜெயலலிதா போல உடை, நிறம், சாயல், வளர்த்தி எல்லாம்.

பள்ளிக்குப் பின்புறம் உள்ள கோட்டை ஸ்ட்ஷனுக்கு இரயிலில் வந்திறங்கி பள்ளிக்கு வரும் பெருகமணி, எலமனூர், ஜீயபுரம், முத்தரசநல்லூர் போன்ற பக்கத்துக்கு கிராமத்துப் பெண்களோடு நிறுத்தினால் தள தள வென்று தனித்துத் தெரிவாள். அவள் காலில் தங்கக் கொலுசு போட்டிருப்பதை பிற மாணவிகள் அதிசயமாகப் பார்ப்பார்கள். தங்கத்த காலில் போடக்கூடாது, அது லக்ஷ்மி மரியாதைக் கொடுக்கணும் என்றும் சிலர் சொல்லிப் பார்ப்பார்கள். மொத்தத்தில் பள்ளியில் அவள் தனித்துத் தெரிவாள். யாராவது அவளை “பம்பிளிமாஸ்” என்று கேலி செய்தால் அவள் கண்டு கொள்ள மாட்டாள். ஆனால் கோதை அவளுக்கு வக்காலத்து வாங்கி சாமியாடி, வக்கீல் போலப் பேசிப் பேசியே நியாயம், அநியாயம் என்று நீதி கேட்டு பெண்களை உண்டு இல்லை என்று ஆக்கிவிடுவாள். கோதையின் தாக்குதலில் அகப்பட்ட பெண்களுக்கு ஹெச் எம்மின் அறைவாசலில் செய்த தவறுக்கு அரை நாள் முட்டி போடுவது கூட பிச்சாத்து தண்டனையாகத் தெரியும். ரஹமதுனிசாவைத் திட்டவோ, கோபிக்கவோ உரிமையுள்ள ஒரே உயிர் கோதை என்பது பள்ளியில் எழுதாத சட்டம்.

காந்தி சிலை, மெயின் கார்ட் கேட், செயின்ட் ஜோசெப் சர்ச் எனக்கடந்து, பர்மா பஜாரில் நுழைந்து, தெப்பக்குளம் அருகில் இடது பக்கம் திரும்பி வடக்கு ஆண்டார் வீதியை நோக்கி நடந்தார்கள். சிந்தாமணி சூப்பர் மார்கெட்டில் இருந்து வந்த பாப்கார்ன் வாசனை மூக்கைத் துளைத்தது.

கோதை லலிதாவிடம், “லலிதா, உன்னை ஒண்ணு கேக்கணும்னு ரொம்ப நாளா நெனச்சேன், நீ ஏன் உன் வீட்டுப் பக்கம் இருக்கும் சாவித்திரி வித்யா சாலைக்குப் போகாம நம்ம ஸ்கூல்ல சேர்ந்தே?” என்றாள்.

அதன் பொருள்… நீ ஏன் உங்க வீட்டுப் பக்கம் இருக்கும் மற்ற அய்யர் வீட்டுப் பெண்களைப் போல வீட்டின் அருகிலேயே இருக்கும் பிராமணர்கள் பள்ளியில் சேரவில்லை? ஏன் சிறிது தொலைவில் இருக்கும் கிறிஸ்துவ ஸ்கூல்லுக்கு வருகிறாய் என்பது. இப்படி கேட்பது நாகரிகமில்லை என்பது அவள் வளர்க்கப் பட்ட விதத்தினால் கற்றுக் கொண்ட பாடம். அதனால் மேலோட்டமாக நயமான வார்த்தைகளால் கேட்டாள்.

“ஒ..அதுவாடி, என் அப்பா அம்மா ஆக்சிடெண்டுல போன பிறகு, மாமா அவராத்துக்கு என்ன அழச்சுண்டு வந்திட்டார். நான் எங்க ஊர்ல ஒரு கான்வெண்ட் ஸ்கூல்லதான் படிச்சேன். மாமா அவாட்டே என் ட்ரான்ஸ்ஃபர் சர்டிஃபிகேட் கேக்கறச்சே, எங்க ஸ்கூல்ல ஹெச். எம்மாக இருந்த மதர் நம்ம ஸ்கூல்ல சேர்க்கச் சொல்லி, டி சி யோட நம்ம ஸ்கூல் ஹெச் எம்மிற்கு ஒரு ரெகமண்டேஷன் லெட்டரும் கொடுத்தாங்க. அதனாலேதான் வருஷ நடுவிலயும் அட்மிஷனுக்கு சிரமப் படாம ஸ்கூல்ல சேர முடிஞ்சது. மாமாவாலயும் மறுக்க முடியல,” என்றாள்.

கோதைக்கு அந்த பேச்சை அத்துடன் விட்டுவிட விருப்பமாக இருந்தது. லலிதாவின் பெற்றோர் மரணத்தை பற்றிய நினைவை தேவையில்லாமல் தூண்டிவிட்டு விட்டோமோ என்று யோசித்தாள். பேச்சை மாற்ற எண்ணி, “உன் மாமா பெண் டான்ஸ் கத்துக்கறாங்களே, நீ ஆட மாட்டியா?” என்றாள்.

“நான் பாட்டு கத்துண்டிருக்கேன், நேக்கு சக்கீதம்னா ரொம்ப இஷ்டம். இரண்டு பேரும் படிப்பு முடிஞ்சதும் நான் பாட அவள் அதற்கு ஆடற மாதிரி ப்ரோக்ராம் கொடுக்க திட்டம் போட்டிருக்கோம். இப்போ கூட கொஞ்ச நாள்ல திருவானைக்கா கோயில்ல ஒரு ப்ரோக்ராமும், அத்திம்பேர் ஆத்து கல்யாணத்தில் ஒரு ப்ரோக்ராமும், எஸ். ஆர். காலஜில ஒரு ப்ரோக்ராமும் கொடுக்கப் போறோம்.”

“ஏய் நீ ரொம்போ பெரிய ஆளுதாம்பா!!!”

“ரஹமதுனிசா சொல்றது சரி, ப்ரோக்ராம் நடக்கறப்போ சொல்லு, நானும் வந்து பாக்கறேன்.”

“சரி செஞ்சுட்டாப் போறது, இதுதான் என் மாமா வீடு” என்று ஒரு வீட்டைக் காட்டினாள். வீட்டு வாசலில் முற்றத்தில் செங்காவி கோலம் போட்டு, பச்சை வண்ணத்தில் வாசல் கம்பிக் கதவிற்கு வண்ணம் பூசி, சிறிது பழையதான தோற்றத்துடன் அந்த வீடு இருந்தது. வாசலில் இருந்த கம்பிக் கதவின் இடுக்கு வழியே உள்ளே கையை விட்டு, தாழ்ப்பாளை நீக்கி கதவைத் திறந்து உள்ளே நுழைந்தாள் லலிதா. நிலைப்படியில் இருந்து சற்றே சரிவாக இறங்கிய சிவப்பு சிமிண்ட் தரையின் இருபுறமும் தூணுடன் திண்ணைகள் இருந்தது. அடுத்து அக்கால மர வேலைப்பாடு உடைய கதவும், அதனுடன் மாவிலைத் தோரணமும், குங்குமம் சந்தனம் இட்ட நிலைப்படியும் இருந்தது. வீட்டின் வாசலில் இருந்து அடுத்து ஒரு அறை, பிறகு நடுவில் மேல் பக்கம் கம்பி போட்ட முற்றம், அதில் பித்தளை அண்டா சொம்பு, மாவாட்டும் கல், பிறகு ஒரு நீண்ட நடை, என்று கொல்லையில் துளசி மாடம் வரை வாசலில் இருந்தே தெரிந்தது. திண்ணையைக் கண்டதும் செருப்பைக் கழற்றி விட்டு, குடு குடு என்று ஒடி, “உஸ்… அப்பாடா” என்று பெருமூச்சு விட்டு, முகத்தை துப்பட்டாவால் துடைத்து விட்டு உட்கார்ந்து காலை அமுக்க ஆரம்பித்தாள் ரஹமதுனிசா. அவளது சோர்வைப் பார்த்து சிரித்தார்கள் கோதையும் லலிதாவும்.

“போங்கப்பா, சிரிக்காதீங்கப்பா, என்னால முடியல, நானு இங்கன உட்காந்துப்பேன், கொஞ்சம் தண்ணி கொடுப்பா தாகமா இருக்கு.”

இருடி, ஜலம் கொண்டு வரேன். அதோ அங்க பொஸ்தம் படிக்கறாளே அவ என் பாட்டி, தூணாண்ட பூ தொடுக்கறாளே அவள் என் மாமி.”

முற்றத்தில் ஒரு ஈசிச்சேரில் உட்கார்ந்து, காவிப் புடவையுடன் தலையை முக்காடு போட்டு, கண்ணாடி போட்டுக் கொண்டு ஒரு வயதான அம்மா ஆனந்த விகடன் படித்துக்கொண்டிருதார். இவர்களை ஒரே ஒரு முறை மட்டும் நிமிர்ந்து பார்த்துவிட்டு மீண்டும் படிக்க ஆரம்பித்தார், எதுவும் பேசவில்லை. பெண்கள் கொடுத்த வணக்கத்தையும் கண்டு கொள்ளவில்லை. மாமி புன்னகையுடன் “வாங்கோம்மா, லல்லி இவாள்ளாம் உன் பிரெண்ட்ஸா, ஏண்டி சுருக்க வந்திட்ட, ஸ்கூல்ல உங்கள சீக்கிரமா விட்டுட்டாளா?” என்றார் மாமி.

லலிதாவிற்கு லல்லி என்று வீட்டில் பெயரா என்பது போல தோழிகள் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்துக் கொண்டார்கள். லலிதா உள்ளே சென்று மாமியிடம் பேசிக் கொண்டே மாலை பள்ளி நிகழ்ச்சிக்கு சலங்கை வேண்டும் என்று கேட்பது அவர்களுக்கு கேட்டது. பிறகு ஒரு சொம்பில் நீரும், மறு கையில் சலங்கைகளையும் கொண்டு வந்து கொடுத்தாள். ரஹமதுனிசா தண்ணீரை வாங்கி அண்ணாந்து மடக் மடக்கெனக் குடிக்க, கோதை தனது காலில் சலங்கைகளை வைத்து அழகு பார்த்தாள். பிறகு சலங்கைகளை ரஹமதுனிசாவிடம் கொடுத்துவிட்டு பாதி நீரை வாங்கி குடிக்க ஆரம்பித்தாள்.

“லல்லி” என்று உள்ளிருந்து மாமியின் குரல் கேட்டது.

சரி, நீங்க ஜலம் குடிசிட்டு சொம்பை இங்கேயே வச்சிடுங்கோ, இதோ வந்திடறேன்”

அவள் உள்ளே சென்றதும் வாசல் கம்பிக் கதவைத் திறந்து கொண்டு நடுத்தர வயதில் ஒரு பெரியவர் வேகமாக உள்ளே வந்தார், நெற்றியில் பட்டை, சிவ சிவ என்று எழுதியிருந்த காவித்துண்டைப் மேலே போர்த்தி, தலையில் குடுமி வைத்திருந்தார்.

இவர்களைப் பார்த்து நட்புடன் சிரித்து, “வாங்கோம்மா, லலிதாம்பிகாவோட பிரெண்ட்ஸா?” என்று கேட்டு பதிலை எதிர் பார்க்காமல் வேகமாக உள்ளே சென்றுவிட்டார். பெண்கள் இருவரும் அரக்கப் பரக்க எழுந்து கும்பிட்டு, இவர்தான் லலிதாவின் மாமாவா? என்று யோசித்து “ஆமாம்… மாமா” என்று சொல்லுவதா? இல்லை  “ஆமாம்… சார்,” என்று சொல்லுவதா? என்று குழம்பியதைக் காண அவர் காத்திருக்கவில்லை.

மீண்டும் வேகமாக உள்ளிருந்து அடுத்து இருந்த அறைக்கு வந்து நிலைக்கண்ணாடி பதித்த கதவுடன் இருந்த மர பீரோவைத் திறக்க முயன்றார். அது பூட்டி இருந்தது. அலமாரியின் மேல் கையால் துழாவி சாவியைத் தேடினார். அது கிடைக்கவிலை. உள்புறம் நோக்கி “லலிதாம்பிகா, அலமாரி சாவி” என்று தந்தி மொழியில் குரல் கொடுத்தார். பிறகு இவர்களைத் திரும்பிப் பார்த்து, “மாமி பண்டிகைக்கு பட்ஷணம் செய்திருக்கா, உங்களுக்கு தட்டையும் சீடையும் லலிதாம்பிகா கொண்டு வந்து தருவா, சாப்பிட்டுட்டு போங்கோ, காஃபி குடிப்பேளா, மாமி காஃபி நன்னாயிருக்கும், ” என்றார்.

பெண்கள் இருவரும் மாமா என்று கூப்பிடலாம் என்று இதற்குள் முடிவு செய்துவிட்டது போல, “இல்லே மாமா, காஃபி குடிக்கிற பழக்கமில்லே” என்றார்கள் கோரஸ்ஸில்.

“நினைச்சேன்,” என்று சொல்லிய அவரிடம் சாவியைக் கொண்டு வந்து கொடுத்து விட்டு லலிதா வேகமாக உள்ளே ஓடத் திரும்பினாள்.

பெண்கள் இருவரும், “லலிதா, நாங்க கிளம்பறோம் நேரமாவுது,” என்று கூறியவாறு எழுந்தார்கள்.

“ஒரு நிமிஷம் இருங்கடி, இதோ வர்றேன்” என்று லலிதா மீண்டும் உள்ளே ஓடினாள்.

மாமா அலமாரியைத் திறந்து, குடைந்து ஒரு நோட்டுப் புத்தகத்தை எடுத்துக் கொண்டு கதவை மூடாமல் அப்படியே விட்டு விட்டு மீண்டும் உள்ளேஅவசராமகச் சென்றார்.

family album photo 1கோதை திண்ணையில் அமர்ந்தவாறே அந்த திறந்த அலமாரியின் கதவில் இருந்த நிலைக்கண்ணாடியை உற்றுப் பார்த்தாள். அதில் எதிர் சுவரில் இவர்கள் கண்களுக்கு மறைவாக மாட்டப்பட்டிருந்த ஒரு புகைப்படம் பிரதிபலித்தது. அதில் ஏழெட்டு வயது உள்ள சிறுமி ஒருத்தி ஒற்றைச்சடை பின்னி குஞ்சம் வைத்து, சடையில் பூவைத்து தைத்து, அந்த சடை அலங்காரம் பின்புறம் இருந்த நிலைக்கண்ணாடியில் பிரதிபலிக்குமாறு நின்று கொண்டிருந்தாள். பட்டுப் பாவாடையும் நிறைய நகைகளும் அணிந்திருந்தாள். அந்த சிறுமியிடம் லலிதாவின் சாயல் இருப்பது போலத் தெரிந்தது.

“ஏய் இவளே, இந்தப் பொண்ணு லலிதா மாதிரி இல்ல?”

“யாருப்பா?”

“அதோ அந்தக் கண்ணாடியில் தெரியும் படத்தைப் பார், அந்தப் பொண்ணு.”

கையில் வைத்திருந்த சலங்கையுடன் எழுந்து, படத்தை நன்றாகப் பார்க்க நிலைப்படியைத் தாண்டி ஒரு காலை வீட்டின் உள்ளே வைக்கப் போனாள் ரஹமதுனிசா.

“ஏய், நில்லுடி, யார் ஒன்ன ஆத்துக்குள்ள வரச் சொன்னா?” என்று அதட்டினாள் இதுவரை அவர்கள் அங்கிருப்பதையே கவனிக்காதது போல படித்துக் கொண்டிருந்த ஆனந்த விகடன் பாட்டி.

செல்லப் பெண்ணாகவே வளர்க்கப் பட்ட பெரிய இடத்துப் பெண் ரஹமதுனிசா இந்த அதட்டலையும், அதில் இழைந்தோடிய அவமானப் படுத்தும் தொனியையும், தான் அவமரியாதை செய்யப்படும் காரணத்தையும் புரிந்து விக்கித்துப் போனாள். அவளுடைய தங்கக் கொலுசு போட்ட தூக்கிய கால் “காலைத் தூக்கி நின்றாடும் தெய்வமே” பாடலுக்கு அபிநயம் பிடிப்பது போல் அந்தரத்திலேயே நின்றுவிட்டது. கையில் இருந்த சலங்கை கை நழுவி சிவப்பு சிமெண்ட் நடைபாதை சரிவில் கிண்கிணித்தவாறு சரிந்தோடியது.

பாட்டியின் குரல் கேட்டு சட்டென்று எகிறிய கோபத்துடன் புயல் போல வெளியேறிய கோதை, வாசலைக் கடந்து நடு வீதிக்குச் சென்றதும் திரும்பிப் பார்த்தாள். ரஹமதுனிசா இன்னமும் அப்படியே திகைத்துப் போய் நிற்பதைப் பார்த்து ஆத்திரத்துடன், “ஏய் உனக்கு அறிவில்ல, ரோஷமில்ல, வா வெளியே,” என்று திட்டிவிட்டு திரும்பிப் பார்க்காமல் நடந்தாள்.

அவள் குரல் கேட்டு அதிர்ச்சியிலிருந்து  மீண்ட ரஹமதுனிசா, “ஏய்…ஏஏய்… கோதை கொஞ்சம் இருப்பா” என்று கூவியவாறு வெளியே ஓடினாள். தவறவிட்ட சலங்கை நினைவிற்கு வர மீண்டும் உள்ளே ஓடி தரையில் கிடந்த சலங்கைகளை எடுத்துக் கொண்டு, வழியல் கிடந்த அவளது செருப்பை கவனியாது மிதித்து, அதில் இருந்த அலங்கார மணிகள் அவள் காலில் குத்தி பதம் பார்த்துவிட, வலி தாளாமல் இரண்டு நொண்டு நொண்டிவிட்டு செருப்பையும் சலங்கைகளையும் கைகளில் அள்ளிக் கொண்டு வெறுங்காலுடன் கோதையைத் தொடர்ந்து மூச்சிறைக்க ஓடினாள்.

கையில் பலகாரத் தட்டுகளை எடுத்துக் கொண்டு வாசலுக்கு வந்த லலிதா, அவர்களைக் காணாது திகைத்து, என்ன இவர்கள் சொல்லாமல் கொள்ளாமல் போய் விட்டார்கள் என நினைத்தாள். பாட்டியிடம் சொல்லிக் கொண்டிருப்பார்களோ என நினைத்து. “பாட்டி அவாள்ளாம் போய் நாழியாச்சா, பட்ஷணம் கொண்டு வரதுக்குள்ளே போய்ட்டாளே” என்றாள்.

பாட்டியிடம் இருந்து எந்தப் பதிலும் வரவில்லை. லலிதாவைப் பொருட்படுத்தி நிமிர்ந்து பார்க்கவும் இல்லை.

பலகாரத் தட்டுகளைத் திண்ணையில் வைத்துவிட்டு வாசல் கம்பிக் கதவைத் தாண்டி வெளியில் வந்து, மேற்கு நோக்கி மறையத் தொடங்கிய சூரியனின் ஒளியினை மறைக்க கையைத் தலைக்கு மேல் வைத்து லலிதா பார்த்த பொழுது, ஆண்டார் வீதி வளைந்து திரும்பும் முக்கில் ரஹமதுனிசாவின் வெள்ளை துப்பட்டா காற்றில் படபடத்து பார்வையில் இருந்து மறைந்தது.

 

 

படம் உதவி:
மாணவிகள்: http://www.flickr.com/photos/maemae/179584442/
அனிச்ச மலர்: http://upload.wikimedia.org/wikibooks/ta/thumb/a/a7/Anicham.jpg/150px-Anicham.jpg

 

பதிவாசிரியரைப் பற்றி

3 thoughts on “அனிச்ச மலர்கள்

 1. இந்தக்கதையை படிக்கும் போது என்னுடன் படித்த சடகோபன் எனும் நண்பன் நினைவுக்கு வந்தான்.

  திருச்சி காரர்களுக்கு இஞ்சின் பீடியும் ஹாட்டின் பீடியும் விடவே முடியாது.

  ///அவளுக்கு தாய்மொழி உருது, தமிழ் அவளிடம் படாத பாடு படும். வாப்பா, போப்பா என்றுதான் பேசுவாள்.//// இது என்னவோ யாரையோ இடிப்பது போல் இருக்கிறது.ஆனால் நான் மிகவும் ரசித்தேன். இந்த வரிகளை ஐந்தாறு முறை படித்து பார்த்தேன். ஏனென்றால் இது உண்மை. தாய் மொழி உருது என்பதால் தமிழ் அவர்களுக்கு தொடர்பு மொழிதான்.. தமிழ் தாய் மொழியில்லாத உருது மொழி தாய் மொழி கொண்டவர் இத்தனை தூரம் பேசுவதை பாராட்டி ஒரு வரி எழுதியிருக்கலாம். (ச்சும்மா). இந்த உருது மொழியை தாய் மொழியாய் கொண்டவருக்கு தமிழ் மீது ஒரு நேசம் எப்போதும் உண்டு.இவர்களுக்கு வல்லின மெல்லின பிரச்சினை வரும். இரண்டு சுழி னாவா மூன்று சுழி ணா வா அதே போன்று ர ற இதிலும் பிரச்சினை வரும். இரண்டு வார்த்தைகளுக்கு இடையில் ப், ச் போன்ற மெய் எழுத்து பிசகுவதும் நடக்கும்.

  கதையின் ஆரம்பத்தில் கவணத்தில் வராத ரஹமத்துன்னிசா கதையின் முடிவில் நம்மை ஆக்ரமித்துவிடுகிறார்.

  மாணவ வயது ஒத்தவர்களிடம் இல்லாத மத துவேஷம். மெச்சுரிடி அடைந்தவரிடம் மட்டும் தஞ்சம் அடைந்து விடுகிறது.

  சின்ன கடுகு சாம்பாரை மணக்க வைப்பது போல், சின்ன சம்பவம் கதையை தூக்கி நிறுத்திகிறது. அனிச்சமலர் தொட்டால் வாடும். இங்கு வாடியதும் ஒரு மாணவி. அவள் தான் அனிச்சம் மலர்..பாராட்டுக்கள் தேமொழி.

 2. ///இது என்னவோ யாரையோ இடிப்பது போல் இருக்கிறது. ஆனால் நான் மிகவும் ரசித்தேன்.///

  🙂

  ///தமிழ் தாய் மொழியில்லாத உருது மொழி தாய் மொழி கொண்டவர் இத்தனை தூரம் பேசுவதை பாராட்டி ஒரு வரி எழுதியிருக்கலாம். ///

  ஆமாம் உண்மைதான், ஒருபடி மேலே சென்று மிக அருமையாக, சிறப்பான கவிதைகளெல்லாம் கூட எழுதுவார்களே!!!!!

  கதை உங்களுக்குப் பிடித்ததில் மிக்க மகிழ்ச்சி தனுசு. உங்கள் பின்னூட்டத்திற்கு மனமார்ந்த நன்றி.  

  அன்புடன் 
  ….. தேமொழி 

 3. கொல்லன் தெருவில் ஊசி விற்க முயற்சித்திருக்கிறீர்கள்.
  ஊசி சுருக்கென்று தைக்கும். கண நேரம் வலிக்கும்.அப்புறம் வலி காணாமல் போகும். ஒரு துளி ரத்தம்கூட வரும்.அதுவும் துடைத்துப் போட்டு விட்டால் மறந்து போகும். 
  இப்படிச் சம்பவங்கள் ஏற் படுத்தும் தாக்கமும் இப்படித்தான்.

  மக்கள் துடைத்துப் போட்டுவிட்டுப் போய்க் கொண்டே இருக்கிறார்கள்.

  காலங்களை க் கடந்து  நிற்கும் இந்தக் கதை எக்காலத்துக்கும் பொருந்தும்.பொருந்துகிறது.

  மிக நீண்ட இடைவெளிக்குப் பிறகு தங்களின் அருமையான, இயல்பான,நல்ல மெருகுடன் கூடிய  எழுத்து நடையை வாசிக்கும் அனுபவத்தைக் கொடுத்தமைக்கு நன்றி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *