வாழ்க்கை நலம் – 20

0

குன்றக்குடி அடிகள்

20.  மற்றவர் சிந்தனைக்கு மதிப்பு தருக!

நடுவு நிலைமை என்பது வாழ்வியலின் சிறந்த பண்புகளில் ஒன்று. நடுவு நிலை என்றால் எதிலும் சேராத இரண்டுங்கெட்டான நிலை என்று பொருள் கொள்ளக் கூடாது. இறுக்கமான சார்பு நிலை நடுவு நிலைக்கு எதிரானது. அதாவது நாம் ஒரு முடிவை எடுத்துக் கொண்டு அந்த முடிவு நிலையின் அடிப்படையிலேயே மற்றவர்களை ஆய்வது. மற்றவர்களுடைய கருத்துக்களை ஆய்வது என்பது தவறான அணுகுமுறை. அது மட்டும் அல்ல. உள்நோக்கம் ஒன்றைக் கற்பித்துக் கொண்டு ஆய்வு செய்தல் – அணுகுதல் ஆகாது.

மனிதன் எந்த வகையிலும் சுதந்திரமுடையவனே. ஒவ்வொரு மனிதனும் அவன் நிலையில் சிந்திக்கும் உரிமை உடையவன் என்பதை மறந்துவிடக்கூடாது. அவனைச் சிந்திக்கத் தூண்டி அந்தச் சிந்தனையில் தவறு இருந்தால், மடை மாற்றம் செய்ய வேண்டுமே தவிர, சிந்திக்கிற பழக்கத்தையே முறியடித்துவிடக் கூடாது.  அதுமட்டுமல்ல, மற்றவர்களின் சிந்தனையின் மதிப்பை தற்சார்பின் காரணமாகவோ, பாரம்பரியம் அல்லது வேறுசில காரணங்கள் அடிப்படையிலோ  தரக்குறைவாக எண்ணுதல் கூடாது. அவர்களுடைய சிந்தனைக்கு மதிப்பைத் தந்து சமநிலையில் கருதி – அவர்கள் சிந்தனையை எடுத்துக் கொள்ளும் மனப்போக்கு வேண்டும்.

இங்ஙனம் சிந்தனைகள் மதிக்கப் பெற்றால்தான் அறிவு வளரும்.  முதலில் ஒருவர் சிந்தனையைச் சமநிலையில் மதிப்புணர்வுடன் எண்ணி  ஆய்வுசெய்து ஒப்புநோக்கி நல்லதைத் துணிந்து முடிவு செய்க. அடுத்து, ஆய்வு செய்த பிறகு தம் கருத்துடனும் மற்ற கருத்துக்களுடனும் ஒப்பு நோக்கி ஆய்வு செய்யலாம். இந்த முழுநிலை ஆய்வு நடந்த பிறகு எது நன்று – அல்லது சரியானது என்ற துணிவுக்கு வரலாம். வரவேண்டும்.

எதுபோல எனில், கடைகளில் பண்டங்கள் எடை போடப் பயன்படுத்தும் தராசைத் தூக்கிச் சரிபார்த்தல் போல, தராசு நிலையில் அதாவது எடைக் கற்களும், பண்டங்களும் இல்லாமல் வெறும் நிலையில் தராசைத் தூக்கிச் சரிபார்த்து, தராசு நிலையில் பழுதில்லாமல் இருப்பதையும், சீராக எடை அளவு காட்டுகிறதா என்பதையும் உறுதிப்படுத்திக் கொள்ள முதலில் வெறுந்தராசைத் தூக்கிச்  சரிபார்த்தல் முறை. அதுபோலவேதான், தக்க கருத்து அடிப்படையில்தான் முடிவெடுக்கப்படும் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள உதவி செய்வது மற்றவர்களை மதித்தலாகும். அவர்தம் சிந்தனை மதிக்கப் பெறும்; நம்பிக்கையைத் தரும். எல்லோரையும் மதிக்கும் அடிப்படையிலே இது நிகழும்.

“சமன்செய்து சீர்தூக்குங் கோல்போல் அமைந்தொருபால்
கோடாமை சான்றோர்க் கணி.”

குறள் – 118

 

 

_________________________________
REF: http://www.tamilvu.org/library/nationalized/pdf/47.KUNDRAKUDIADIGALAR/VAZAKAINALAM.pdf
இது ஒரு நாட்டுடைமையாக்கப்பட்ட  நூல், நாட்டுடைமையாக்கப்பட்டது  நிதியாண்டு 2007-2008 ல்

மின்பதிப்பாக்க உதவி: தேமொழி

 

 

 

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *