ஜோதிர்லதா கிரிஜா

செல்வியும் தியாகுவும் அந்த விடுதியை அடைந்து தங்களுக்குத் தரப்பட்டிருந்த ஒன்பதாம் இலக்கமிட்ட அறையை அடைந்து, கதவு திறந்து தங்கள் கைப்பெட்டிகளை அங்கிருந்த பெரிய  கட்டிலின் ஒரு பக்கமாய் வைத்துவிட்டு அதிலேயே உட்கார்ந்த போது அங்கிருந்த சுவர்க்கெடியாரம் ஒன்பது முறை அடித்தது.
“மணி ஒம்போது! இன்னும் குளிர் விட்ட பாடில்லே!” என்ற தியாகு சோம்பல் முறித்தான்.
“அண்ணே! இன்னும் ஒரு காப்பி குடிக்கலாமா?” என்று செல்வி கேட்டதும், தியாகு அதற்கென்றே காத்துக் கொண்டிருந்தவனைப் போல் சடக்கென்று எழுந்து நின்றான்.
“நானே சொல்லணும்னு நினைச்சேன்… இத வந்துர்றேன்,” என்று சொல்லிவிட்டு அவன் படியிறங்கினான்.

செல்விக்குத் தெரியாமல் சங்கரலிங்கம் பிள்ளையின் வீட்டுத் தொலைபேசி இலக்கத்தைக் கண்டுபிடிக்க விரும்பிய அவனுக்கு அவள் காப்பி கேட்டது வசதியாக இருந்தது. அவர்கள் தங்கிய அறையில் தொலைபேசி இல்லாததும் நல்லதாயிற்று. இருந்திருந்தால் அதன் மூலமே காப்பிக்குச் சொல்ல நேர்ந்திருக்கும்.
கல்லாவில் இருந்தவரிடம் முதலில் தொலைபேசி வழிகாட்டியைக் கேட்டுப் பெற்றுப் புரட்டினான்.  சங்கரலிங்கம் எனும் பெயரில் யாருக்குமே தொலைபேசி இல்லை. கல்லாவில் இருந்தவர் நடுத்தர வயதுக்காரராக இல்லாமல் ஓர் இளைஞனாக இருந்ததும் அவனுக்கு வசதியாக இருந்தது. இல்லாவிட்டால், இருபது ஆண்டுகளுக்கு முன் ஊரைவிட்டுப் போன தன்னை அவர் அடையாளம் கண்டிருப்பார் என்று அவன் தன்னுள் நினைத்துக்கொண்டான்.  வயதானவர்களுள் எவர் பார்வையிலும் படாமல் தான் அங்கிருந்து கிளம்ப வேண்டுமே என்று அவன் கவலைப்பட்டான்.
அந்த ஊரின் பெரும் பணக்காரரான அவர் பெயரில் தொலைபேசி இல்லாதிருக்க முடியாது என்று எண்ணியதால், ஒருகால் அவர் காலமாகி யிருக்கக்கூடும் என்று அவனுக்குத் தோன்றியது. பார்வதியைப் பற்றித் தெரிந்து கொள்ள அவனுக்கு ஒரே துடிப்பாக இருந்தது.  அவன் காதலித்த முதல் பெண்… செல்வி பிற்பகல் தூக்கம் போடும் போது ஊருக்குள் ஒரு நடை போய்ப் பார்த்துவர வேண்டும் என்று எண்ணிக்கொண்டான்.
காப்பி மேசைக்குச் சென்று ஒன்பதாம் அறைக்கு இரண்டு காப்பிகள் எடுத்துவரப் பணித்த பின் படியேறி முதல் மாடியில் தாங்கள் தங்கியிருந்த அறையை யடைந்தான்.
சற்று நேரத்துக்கெல்லாம் காப்பிக் கோப்பைகளை எடுந்த வந்து குட்டை மேசை மீது வைத்த பணியாள், “காப்பிக்குச் சொல்லணும்னா நீங்க கீழ எறங்கி வரவேணாங்க. அதோ, சுவத்துல இருக்குற பெல்லை அடிச்சா வந்து விசாரிப்போம். இன்னும் கொஞ்ச நாள்ல ஃபோன் வந்துடும்…” என்று சொல்லிச் சென்றார்.
காப்பியைக் குடித்து விட்டு அவன் கால் நீட்டிப் படுத்தான்.
செல்வி, “அண்ணே! நான் ஊருக்குள்ள போய் என் ஃப்ரண்டு விமலா இருந்தாப் பாத்துப் பேசிட்டு வர்றேன்,” என்று, அவனது தலையசைப்பைப் பெற்ற பிறகு, முகம் கழுவிப் பொட்டு வைத்துத் தலை முடியைக் கோதிக்கொண்டபின், சேலையைச் சரிசெய்து கொண்டு புறப்பட்டாள்.
வழியில் அவள் மனம் பார்வதியைப் பற்றித்தான் அசை போடலாயிற்று.  விமலாவைப் பார்ப்பதைக் காட்டிலும் பார்வதியைப் பார்க்க்கவே அவள் அதிகம் அவாவினாள். தியாகுவும் அவளைப் பற்றித்தான் யோசிப்பான்  என்று எண்ணிக்கொண்டாள்.
தியாகுவுக்கு மாரியம்மனுக்குக் கண்மலர் சாத்துவதற்கான நேர்த்திக்கடன் ஒன்று பாக்கி இருந்தது.  அவன் மனைவி தன் அம்மாவுக்கு உடம்பு சரியில்லை என்பதால் திருநெல்வேலிக்குப் போயிருந்ததாள்.  எண்பது வயதான அவன் அம்மா அவனுடன் – தன் புருசன் வீட்டிலிருந்து வந்திருந்த, செல்வியையும் உடனனுப்பி வைத்திருந்தாள்.  நேர்த்திக் கடனில் எல்லாம் அவ்வளவாய் நம்பிக்கை இல்லாத அவன் சரியாக அதைச் செய்ய மாட்டான் என்கிற அவநம்பிக்கையால் தான் செல்வியையும் அவன் அம்மா உடனனுப்பி வைத்திருந்தாள்.
இருபது ஆண்டுகளுக்கு முன்னால் தியாகுவுக்கும் பார்வதிக்குமிடையே தான் தபால்காரியாகப் பணி செய்தது செல்விக்கு ஞாபகம் வந்தது. எதிராளியின் வயதையோ, சாதியையோ கேட்டுத் தெரிந்துகொண்டபின் யாரும் காதலிக்க முற்படுவதில்லையே!  அப்படித்தான் அவர்கள் இருவரிடையேயும் காதல் மலர்ந்தது. இரண்டு ஆண்டுகள் போல் கடிதப் பரிமாற்றம் செய்துகொண்டு தங்ககள் காதலை வளர்த்துகொண்ட இருவருக்குமிடையே இருந்த வயதுப் பிரச்சினையால்தான் அது நடக்காமல் போனது. பார்வதி அவனைவிடவும் ஒரு வயதும் சில மாதங்களும் மூத்தவளாக இருந்ததால், அவர்கள் மணம் செய்து கொள்ளுவதற்கு இரு தரப்புப் பெற்றோரும் சம்மதிக்கவில்லை!  கடைசியில் ஓடிப்போக முடிவு எடுத்தார்கள்.  பக்கத்து வீட்டு அம்மாளின் கழுகுக் கண்கள் இருவரும் இரவில் கிளம்பியதைப் பார்த்துப் பார்வதியின் அப்பாவுக்குத் தகவல் சொல்லிவிட, அவர்களது திட்டம் நடைபெறாது போயிற்று…. சேதியும் கசிந்து பார்வதியின் பெயர் கெட்டுப் போயிற்று.
ஊரின் பெரும் பணக்காரரான சங்கரலிங்கம் அடியாள்கள் மூலம் விடுத்த மிரட்டலுக்கு அஞ்சி, அவர்களது குடும்பம் சென்னையில் இருந்த அவர்களுடைய பெரியப்பா வீட்டுக்குப் போயிற்று. வெகு நாள் வரையில் தியாகு திருமணம் செய்து கொள்ள மறுத்து வந்தான்.  பார்வதியையும் அவள் பெற்றோர் வேற்றூரில் குடியேற்றவே, எந்தத் தகவலும் கிடைக்க வழியற்றுப் போன நிலையில் அவன் கடைசியில் அவன் அம்மா பார்த்த பெண்ணை மணந்துகொள்ள சம்மதிக்க நேர்ந்தது. இப்போது அவனுக்கு இரண்டு குழந்தைகள் –  ஓர் ஆணும் ஒரு பெண்ணுமாக.
பார்வதிக்குக் கலியாணம் ஆகியிருக்குமா என்று செல்வி யோசித்த கணத்தில், “ஏய்! செல்வி!” என்று கூவிய பெண்குரல் அவளது எண்ண ஓட்டத்துக்குத் தடை போட்டது.
ஒரு திடுக்கீட்டுடன் தன் சிந்தனையிலிருந்து விடுபட்டுத் தலை உயர்த்தி பார்த்த செல்விக்கு வியப்புத் தாளவில்லை.
“அட! பார்வதி! நீயா? உன்னையப் பத்தித்தான் யோசிச்சுக்கிட்டே வந்தேன்னு சொன்னா நம்புவியா?” என்ற செல்வி ஆசையோடு பார்வதியின் ஒரு கையைப் பற்றிக்கொண்டாள். மறு கையில் அவள் காய்கள் அடங்கிய பையை வைத்துக்கொண்டிருந்தாள்.
“எங்கே இம்புட்டுத் தொலவு?”
செல்வி சேதியைச் சொன்னாள்.  “உன்னையப் பாக்குறதுக்குத்தான் வந்துக்கிட்டே இருக்கேன். விமலாவைப் பார்க்கப் போறதா அண்ணன்கிட்ட பொய் சொல்லிட்டு வந்தேன். உன்னையப் பார்த்துப் பேசிட்டு, முடிஞ்சா அப்படியே அவளையும் பார்த்துருவேன்…”
“விமலா ஊர்ல இல்லே, செல்வி. அது நாத்தனாருக்குப் பேறுகாலம்னு மணப்பாறைக்குப் போயிருக்குது…வாயேன் எங்க வீட்டுக்கு..”
“உங்கப்பாம்மா எதுனாச்சும் சொல்லுவாங்களா?”
“எங்கம்மா காலமாயாச்சு.  அப்பா இருக்காரு. ஆனா கண் தெரியாது. காதும் கேக்காது.  அதனால பயப்படாம வா…”
“உங்க வீட்டுக்காரரு…”
“முதக்கா எங்க வீட்டுக்கு வா. அப்புறமேட்டு எல்லாத்தையும் வெவரமாச் சொல்றேன்..”
பார்வதியின் வீட்டுக்குள் நுழைந்த வரையில் அதன் பின் இருவரும் எதுவும் பேசிக்கொள்ளவில்லை.
செல்வியின் பார்வை மட்டும் அடிக்கடி பார்வதியின் மீது பதிந்து பதிந்து மீண்டது.  நாற்பதுக்கு மேற்பட்ட வயதுக்காரி மாதிரியே அவளைப் பார்த்தால் தெரியவில்லை. முப்பது-முப்பத்திரண்டுக்கு மேல் சொல்ல முடியாது. அவ்வளவு இளமையாக இருந்தாள். அவள் அப்பா தமது அறையில் படுத்துக்கொண்டிருந்தார்.

“உக்காரு, செல்வி.  முதக்க உன்னையப் பத்திச் சொல்லு.  அப்புறமேட்டு நான் என்னையப் பத்திச் சொல்றேன். காப்பி குடிக்கிறியா?”
“வர்றப்பதான் குடிச்சேன். இன்னும் கொஞ்ச நேரம் கழிச்சு டீ இருந்தாக் குடு.”
“இருக்குது. தர்றேன். சொல்லு. உனக்கு எத்தினி பசங்க?”
“ஒரே ஒரு பையன்.  எட்டு வயசு. எங்க வீட்டுக்காரரு போஸ்டல் டிபார்ட்மென்ட்ல இருக்காரு. அண்ணன் இன்கம்டாக்ஸ் டிபார்ட்மென்ட்ல இன்ஸ்பெக்டரா இருக்குது… ரெண்டு பசங்க. அவனுக்கு ஒரு ஆம்பளப் புள்ள, ஒரு பொம்பளப்புள்ள.  சரி…. உன் விசயத்தைச் சொல்லு…”
பார்வதி பக்கென்று சிரித்து விட்டு, “ எனக்கு ஏகப்பட்ட பசங்க செல்வி…” என்றாள்.
“   ?  “
“டஜன் கணக்குல இருக்குதுங்க. நான் டீச்சர் வேலை பாக்குறேன், செல்வி.”
“அப்ப, உனக்குன்னு பசங்க இல்லியா?”
“இல்லே.  வீட்டுக்காரரும் இல்லே.”
“என்ன சொல்றே? அப்படின்னா?”
“நான் கலியாணமே கட்டல்லே, செல்வி.”
“என்ன சொல்றே நீ?  ஏன் கட்டல்லே?”
“எனக்குப் புடிக்கல்லே. பண்ணிக்கல்லே.  என்னைக் கலியாணங்கட்டச் சம்மதிச்சவங்களுக்கெல்லாம் ‘அந்தப் பொண்ணு வேணாம்.  அது ஓடிப் போய்ச் சீரழிஞ்ச பொண்ணு’ன்னு நானே மொட்டைக் கடுதாசி எழுதிப்போட்டுடுவேன்… அம்புட்டுத்தேன்..”
“என்ன பார்வதி இது! சே. காலம் முச்சூடும் அப்ப தனியாவேயா இருக்கப் போறே?”
“இப்பல்லாம் பொண்ணுங்களுக்கு நிறையவே விடுதிங்கல்லாம் இருக்குது, செல்வி…ஒண்ணும் பயப்படவே தேவையில்லே…”
“ஏன் இப்பிடிப் பண்ணினே?”
“உங்க அண்ணனைத் தவிர வேற யாருக்கும் என் மனசில இடம் குடுக்க முடியல்லே செல்வி! என்ன செய்ய?” என்ற பார்வதி தலையைக் குனிந்துகொண்டாள்.
“ஒரேநிமிசம்.  டீ எடுத்தாறேன்…” என்று விட்டு அவள் எழுந்து போனது அவளது கண்களின் கலக்கத்தைத் தான் பார்த்துவிடக்கூடாது என்னும் எண்ணத்தில்தான் என்பது புரிய, செல்விக்கும் கண்கள் கலங்கின.
சற்றுப் பொறுத்து இரண்டு தேநீர்க் கோப்பைகளுடன் வந்த பார்வதி, “இந்தா. .. ஒரு வேண்டுகோள், செல்வி… உங்க அண்ணன் கிட்ட நான் கலியாணம் பண்ணிக்கல்லைன்னு சொல்லாதே.  அவரு மனசு உடைஞ்சுபோவாரு.  எனக்கும் ரெண்டு பசங்க, எங்க வீட்டுக்காரரு டீச்சரா இருக்காருன்னு எனக்காக ஒரு பொய் சொல்லு, செல்வி!…” என்ற பார்வதி புன்னகை செய்தாள்.  செல்வியால் பதிலுக்குப் புன்சிரிப்புக் காட்டமுடியவில்லை.
………

நன்றி: கோகுலம் கதிர்

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க