சொல் ஒன்று வேண்டும்!
தி. சுபாஷிணி
அது ஒரு குக்கிராமம். அங்கு செல்லவே இரண்டாம் ஜாமம் ஆயிற்று. நேராக அந்தக் கோயிலுக்குத்தான் சென்றோம். என்னுடன் மன்னிக்கவும் என்னைக் கூட்டி வந்தவர்கள் என் மாமியார், அவரது தம்பி, தங்கை ஆவார்கள். இரவை அங்குதான் கழிக்க வேண்டும். கோயிலில் சுற்றி ஓலைக் கூரை வேய்ந்த பிரகாரம். அதில்தான் அனைவரும் படுத்துறங்க வேண்டும். எங்களைப் போல் இன்னும் பத்து இருபது பேர் உறங்கிக் கொண்டிருந்தார்கள். என்னுடன் வந்தவர்கள் அப்படியே படுத்தனர். அவர்கள் உறங்கினார்களா? உறங்கியதுபோல் விழித்திருந்தார்களா என்பதை நான் கவனிக்கவில்லை. அதில் என் மனமும் செல்லவில்லை. நான் முற்றிலும் என்னைச் சுற்றியிருந்த இருட்டுடன் இருந்தேன். என்னவோ அந்த வெட்டவெளி இருட்டு முதலில் பயமுறுத்தினாலும், நேரம் செல்லச்செல்ல பழகிவிட்டது.
எனக்கு அது தோழிபோல் என்னுடன் உறவாடயத்தனித்தது. இரவின் மடி நம் தாய் மடி போன்றது. அது தன் மடியில் நம்மைப்போட்டு, தலை வருடிக் கொடுக்கும். அது என் தலைவருடியது. அது என்னை வருட வருட என் கண்கள் அருவியாய்க் கொட்டியது. எங்கிருந்து இவ்வளவு கண்ணீர் என்றே புரியவில்லை. காதருகே குனிந்து வந்து ‘அழாதே’ என்றது. என் அம்மா பேச்சைக் கேட்காத பலனை இப்போது அனுபவிக்கிறேன் என்றேன். ‘கலக்கமுறாதே! எல்லாம் சரியாகிவிடும், கண்ணுறங்கு’ என்றது அது. மெல்ல மெல்ல இமை கனத்தது. தூக்கம் தழுவியது. அதன் பாதுகாப்பில் கண்ணயர்ந்தேன். இருட்டும் மெல்ல மெல்ல விலகி விடியலின் நம்பிக்கை மலரத் தொடங்கியது. பிரிந்தும் பிரியாத இருளில் விழிப்பு வந்து விட்டது. ஆனால் கலக்கமில்லை, தயக்கமில்லை, மயக்கமில்லை. அங்கு படுத்துறங்கியவர்கள் ஒவ்வொருவராய் எழத் தொடங்கவே, நாங்களும் எழுந்தோம். கோயில் முன் இருக்கும் குளத்தில் குளிக்கக் கிளம்பினோம். குளத்தில் இறங்கி தலை அமிழ்த்தினேன். உடல் அமிழ அமிழ உடலும் உள்ளமும் குளிர்ந்தது. இறுதியில் மூன்றுமுறை அமிழ்ந்து எழச் சொன்னார்கள் என் மாமியார். அப்படியே செய்தேன். ஒரு பதில், ஒரு சொல் இதுவரை அவர்களிடம் பேசவில்லை.
அது அவர்களைச் சுட்டு இருக்கும். அது அவருடைய முகத்தில் தெரிந்தது. என்னால் அதற்கு ஒன்றும் செய்ய இயலவில்லை. ஈரத்துணியோடு குளத்திலிருந்து வெளிப்பட்டு குளக்கரையில் விற்கும் அர்ச்சனைத் தட்டு ஒன்றை வாங்கினேன். பணம் கொடுக்க அவர்கள் முன் வந்தார்கள், மறுத்துவிட்டேன். நானே 50 ரூபாய் கொடுத்து அதைப் பெற்றுக் கொண்டேன். தட்டில் 51 ரூபாய் தட்சிணை வைக்கச்சொன்னார்கள். பணத்தை வைத்தேன். அனைவரும் ஈரத்துணியை மாற்றிக் கொண்டோம். கோயிலுக்குள் சென்றோம். கர்ப்ப கிரகத்திலுள்ள சாமியை தரிசித்தோம். பின் நாங்கள் யாரைப் பார்க்க வந்தோமோ அவரைக் காண கோயில் பிரகாரம் வந்தோம். எங்களுக்கு முன் 10 பேர்கள் நின்றிருந்தனர்.
ஒவ்வொரு முகம் ஒவ்வொரு விதமாய் உணர்வுகளை உமிழ்ந்து கொண்டிருந்தன. பதினோராவது ஆளாய் நாங்கள் நின்றோம். ஐம்பது வயது மதிக்கத்தக்க ஒருவர் ஆசனத்தில் அமர்ந்து இருந்தார். அவர் அருகில் சற்றே 2 அல்லது 3 வயது குறைவில் ஒரு அம்மா அமர்ந்து இருந்தார்கள். அவருடைய மனைவி என்றனர். இந்தக் கோயிலில் குடியிருப்பது 7 கன்னிகைகள் என்றும் அந்த ஏழு கன்னிகைகளும் இவர் மீது வந்தமர்ந்து, அவரது வாக்கு மூலம் நம் குறைகளை தீர்ப்பார் என்றனர். மேலும் காணாமல் போன பொருட்கள், யார் எடுத்துச் சென்றது?, அவை கிடைக்குமா கிடைக்காதா என்பதிலிருந்து மக்கட்பேறு உண்டா, அதற்கு நிவர்த்தி உண்டா என்பது வரை அவர் சொல்லும் ‘குறி’யில் தெரிந்து விடும் என்றனர். நமக்கு அதில் ஐயம் இருப்பின் பக்கத்தில் அமர்ந்திருக்கும் அந்த அம்மா அவர்களிடம் கேட்டுச் சொல்வார்கள். மேலும் பலருடைய அனுபவங்கள் எல்லாம் வரிசையில் நிற்கும்போது செவிகளில் விழுந்தன.
என் கவனம் முழுவதும் அந்த தெய்வத்திடம் இருந்தது. அன்று அம்மா எவ்வளவு தூரம் எடுத்துச் சொன்னார்கள். “உனக்கு திருமண வயதே வரவில்லை. சிறுபிள்ளைத்தனமாய் இப்படி அவர்தான் வேண்டும் என பிடிவாதம் பிடிக்காதே. அவர்கள் பற்றி நமக்கு ஒன்றும் தெரியாது. படிக்காத குடும்பம். பையனுக்கும் நிரந்தர வேலை இல்லை. நீயோ பல வேலைகள் தெரியும் என்கிறாய். ஏதாவது ஒரு வேலையில் தொடர்ந்து வேலை பார்த்திருக்க வேண்டாமா! உன்னை பெரியம்மாவுடன் இருக்க அனுப்பியதே அங்கு போய் உலக விவரம் கற்றுக் கொள்வாய் என்று. இம் முடிவை அவர்களிடம் கூறினால் பெரியம்மாவின் மனம் எப்படிப் பாடுபடும்?” என்று அம்மா மனம் நொந்து கூறியதெல்லாம் புத்திக்கு எட்டவில்லை. பிரகாரத்தில் வரும் வெய்யில் கொஞ்சம் கொஞ்சமாக மேலே விழுகின்றது.
‘பெரியம்மா!’ நினைப்பு வந்ததும், அழுகைப் பொங்கிப் பொங்கி வந்தது. பெரியம்மா… நிஜம்மாலும் அவங்க பெரியம்மாதான்… தன் குழந்தைகளுக்கு இணையாக என்னையும் வளர்த்தார்கள். நானும் அவர்கள் குழந்தைகளை மிகவும் பத்திரமாய் பார்த்துக் கொண்டேன். என்னை நம்பி என் பாதுகாப்பில் பல வாரங்கள் கூட வீட்டில் விட்டுச் செல்வார்கள். ஷம்மிம்பானு (அதுதான் என் உண்மையான பெயர். திருமணத்திற்குப்பின் மல்லிகாவாக மாறிவிட்டேன்). உனக்கு இன்னும் இரண்டு வருடத்தில் திருமணம் செய்யணும். பார்! இதெல்லாம் உனக்காகத்தான் சேர்த்து வைத்திருக்கிறேன் என்று ஒரு சிறிய நகைப்பெட்டியைக் காண்பித்தார்கள். ஏதேனும் நல்ல பொருட்களைப் பார்த்தால் இது! எங்கள் ஷம்மிமுக்கு என்று எடுத்து வைப்பார்கள். ஐயோ! பெரியம்மா! உங்களை நான் புரியாமல் போய் விட்டேனே! பெரியம்மா!
நீங்கள் என்னை அம்மாவிடம் அனுப்பாமல் இருந்தது, அனுப்பினாலும் ஓரிரவு கூட அங்கு தங்க விடாதது ஆகியவையெல்லாம் நீங்கள் என்மேல் வைத்திருந்த அன்பு என்று எப்படி பெரியம்மா தெரிந்து கொள்ளாமல் போனேன்! அதை நீங்கள் அடிமையாய் என்னை நடத்துவதாகவும்; என்னுடைய சுதந்திரத்தைப் பறித்துக் கொண்டதாகவும் நினைத்து, ஏதோ விடுதலை பெற்றுப் போவதாய் நினைத்து…! காதலுக்கு கண் இல்லை என்பதை இப்போது புரிந்து கொண்டேன். எனினும் நான் எடுத்த வாழ்க்கை என்று அதில் வைராக்கியமாய் இருக்கிறேன் பெரியம்மா. இதோ! இந்த இடத்தில் ஒரு பழியை சுமந்து கொண்டு நிற்கின்றேன் என்றால் உங்கள் உங்கள் மனம் எப்படி வேதனைப்படும்.
பெரியம்மா! எனக்கு அம்மாவிற்கும் மேலாய் இருந்தீர்கள். எப்படி வளர்த்தீர்கள்! தலையில் முக்காடு விலக அனுமதிக்கமாட்டீர்கள். அதிர்ந்து பேச, அதிர்ந்து நடக்க ஒப்பமாட்டீர்கள். அனைவரையும் நேசிக்கக் கற்றுக் கொடுத்தீர்கள். அம்மாவும் நீங்களும் எந்த நிலையிலும் பொய் சொல்லுதலும் பிறர் பொருளுக்கு ஆசைப்படுத-லும் கூடாது என்றல்லவா என்னை வளர்த்தீர்கள். பெரியம்மா! இந்த கணம்வரை நான் உங்கள் பெண்ணாகத்தான் இருக்கின்றேன். ஆனால் இவர்கள் பெரும்பழி சுமத்தி விட்டார்கள் பெரியம்மா!
திருமணத்திற்கு பின்தான் எனக்குத் தெரியவந்தது. என் கணவருக்கு குடிப்பழக்கம் உண்டு என்று. அவரது அப்பாவும் குடிப்பாராம். என்ன சொல்வேன் பெரியம்மா?- எதை எப்படிச் சொல்வேன்! அவசரப்பட்ட வாழ்க்கை, அவசரத்தில் அள்ளித் தெளித்த நீர் போல்தான் ஆழமில்லாது இருக்கின்றது. தரையும் நனையவில்லை. தெளித்த கையும் நனையவில்லை. அவர் கொண்டு வரும் சம்பளம் பத்தவில்லை. பாதி நாட்கள் வேலைக்கே போவதில்லை. மதுபானக் கடை தான் கதியென்று கிடக்கும் வயதா பெரியம்மா! அங்குதான் மாலையில் அவரது நட்பு வட்டம் கூடுகிறது. இரவு முழுவதும் அடியும், வாயில் வரக்கூடாத வார்த்தைகள் எல்லாம் வந்து விழுகின்றன. வெளியில் என்னை அனுப்பாது வீட்டுக்குள் பொத்தி பொத்தி வளர்த்தீர்களே பெரியம்மா! உங்களுக்குத் தெரியுமா! நான் எக்ஸ்போர்ட் கார்மெண்ட்ஸில் வேலைக்குப்போய்க் கொண்டு இருக்கின்றேன். அதுதான் நம் சமீரா காலேஜுக்குப் போகும் போது நானும் அவ்வழியில்தான் போகிறேன். நாங்கள் இருவரும் பார்த்துக் கொண்டே செல்கிறோம். ஆம்! அவள் ஆட்டோவில் செல்கிறாள். நான் சைக்கிளில் செல்கின்றேன். அதுசரி இங்கு இந்த நிலை ஏன் என்று கேட்கிறீர்களா! முழுக்க நனைந்தாகிவிட்டது இனி முக்காடு எதற்கு! சொல்வது என தீர்மானித்தபின், எல்லாவற்றையும் சொல்வதுதானே நியாயம்.
பெரியம்மா! என் மாமியாரின் தங்கை இருக்கிறார்களே, (அவர்களும் என்னுடன்தான் இந்த வரிசையில் நிற்கிறார்கள்) அவர்கள் பூர்விக நிலத்தில் வீடு கட்ட வேண்டும் என்று தன் அக்காவான என் மாமியாரிடம் உதவி கேட்டு போன மாதம் வந்தார்கள். நான், மாமியார் எல்லோரும் வீட்டில் இருக்கும் நகையை அடகு வைத்து ஒரு லட்சம் கொடுத்து உதவினோம். உடன் பிறப்பிற்குள் இந்த உதவிகூட இல்லைன்னா எப்படி பெரியம்மா! அதுவும் என் திருமணத்திற்கு அவர்கள் பணம் கொடுத்து உதவினார்களாம். அது முடிந்த கதை. அதன்பின் அவர்கள் வீட்டு நகைளை விற்றுத் தரச் சொன்னார்கள். நானும் மாமியாரும் அவர் இருக்குமிடம் சென்று, அங்குள்ள சேட்டுக் கடையில் விற்று மொத்தம் 46000 ரூபாய் வாங்கிக் கொடுத்துவிட்டு, பத்திரமாக அவர்களை அவரது வீட்டிற்கு கொண்டு விட்டு விட்டு நாங்கள் இங்கு கிளம்பி வந்துவிட்டோம். பின் நான்கு நாட்கள் போயின. என்னுடைய இளைய மாமியாரிடமிருந்து போன் வந்தது. என் மாமியார் முகம் மிகவும் கருத்து சிறுத்துப் போயிற்று. சரி. அவர்கள் அக்கா தங்கைக்குள் ஆயிரம் இருக்கும் என்று நான் விட்டு விட்டேன்.
இரண்டு நாட்கள் கழிந்தன. நான் என் வேலைகளைப் பார்த்துக் கொண்டிருந்தேன். அதிர்ஷ்டவசமாக இந்த இரண்டு நாட்களும் என் கணவர் குடிக்காது, வேலைக்குப் போய்வந்து கொண்டிருந்தார். மூன்றாவது நாள் நான் வேலையிலிருந்து வரவும் என்மாமியார், கணவர், என் மாமனார், நாத்தனார் ஆகிய நால்வரும் ஏதோ பேசிக் கொண்டிருந்தனர். நான் வீட்டுக்குள் நுழைந்ததும் அவர்கள் பேச்சை நிறுத்தினர். என்னையே அனைவரும் பார்த்தனர். நானும் விளையாட்டாக,
“என்ன அத்தை! ஏதோ பேசிக் கொண்டிருந்தீர்கள். நான் வந்ததும் நிறுத்தி விட்டீர்கள்!” என்று கேட்டேன்.
அவர்களால் எதுவும் சொல்ல முடியவில்லை. திகைத்துப் போய்ப் பார்த்துக் கொண்டு இருந்தனர். பின் மாமனார்தான் பிரச்சனையைச் சொல்லத் தொடங்கினார். மல்லிகா! மருமகளே! நாங்கள் உன்மேல் எந்த தவறையும் பழியையும் சுமத்தவில்லை. ஆனால் இப்படியொரு காரியத்தை உன்னுடைய அத்தையின் தங்கை லல்லி கூறுகிறாள். இதை எப்படி உன்னிடம் கூறுவது என்று விழித்துக் கொண்டிருக்கின்றோம்.
“அப்படியென்ன பெரிய பிரச்சனை மாமா! ஏதாஇருந்தாலும் சொல்லி விடுங்கள்” என்றேன் நான். “சொல்ல நாக்கூசுகிறது அம்மா! நீ லல்லி விட்டுக்குப் போயிருந்தபோது அவர்கள் வைத்திருந்த பணத்தில் 4000 -ரூபாய் காணவில்லையாம். உங்கள் மருமகள் வந்து போனதற்குப் பின்தான் காணவில்லை என்று அடித்துக் கூறுகிறாள் அம்மா”. எனக்கு ஒரு நிமிடம் பெரியம்மா என் மூச்சே நின்று விட்டது. என் இஷ்டப்படி திருமணம் செய்து கொண்டேன் என்பதைத் தவிர வேறு ஒரு தவறும் செய்ததில்லை பெரியம்மா.
அல்லா சத்தியமா சொல்றேன் பெரியம்மா! இவங்க இப்படியொரு பழியை என்மேல் போடுவாங்கன்னு நினைக்கல. அவங்க என் கம்பெனி வாசலில் பைத்தியம் மாதிரி நின்னுகிட்டு இருந்தாங்க பெரியம்மா! காலையிலிருந்து சாப்பிடலை மல்லிகா! வீட்டை ஆரம்பித்துவிட்டேன். எப்படி முடித்து சமாளிக்கப் போறேன்னு தெரியலைன்னு புலம்பினாங்க. நான்தான் சமாதானம் பண்ணி, சாப்பாடு வாங்கி சாப்பிடச் சொல்லி அத்தைகிட்ட பேசி கடனுக்கு ஏற்பாடு பண்ணிக் கொடுத்து எல்லாம் பண்ணினேன். இவ்வளவு ஏற்பாடு பண்ணுகிறவங்க எங்கேயாவது 4000 ரூபாயை எடுப்பாங்களா! நான் உறைந்து போய் விட்டேன் பெரியம்மா! ஒரே வார்த்தைதான் சொன்னேன். “என்னை எங்க அப்பா அம்மா, பெரியம்மா அப்படி வளர்க்கலை. அத்தை! மாமா! நீங்க எதிர்பார்க்கின்ற மாதிரி சீர் செனத்தி கொண்டு வரலைதான. ஆனால் எங்க அப்பா அம்மா உண்மையையும் நேர்மையையும் அன்பையும்தான் சீராக கொடுத்திருக்காங்க. எல்லா மதமும் அதைத்தான் சொல்லுது என்று சொல்லும்போது என் இரண்டரை வயது குழந்தை ஷாலினி வந்தாள். “அம்மா” என்று கட்டிக் கொண்டாள். அவர் கும்பிடும் நடு வீட்டு சாமி எதிரில் என் குழந்தை தலையின் மேல் சத்தியம் செய்தேன் பெரியம்மா “எவ்வளவு தாழ்ந்தாலும் திருடி என் வயிற்றை வளர்க்க மாட்டேன். நான் அந்தப் பணத்தை எடுக்கவில்லை” என்று.
உடனே என் மாமியார், “அய்யோ! குழந்தைமேல் சத்தியம் பண்ணாதே குழந்தைக்கு ஏதாவது ஆகிவிடும்” என்று அலறினாள். “ஏன் அத்தை நீங்க பயப்படறீங்க? நான் பொய் சொன்னால்தான் குழந்தையை பாதிக்கும். நான் ஒருபோதும் அந்த இழிவான செயலைச் செய்யமாட்டேன். உங்களுக்குத்தான் தெரியுமே எனக்கு உரிமையான கணவன் பர்ஸிலிருந்தே எடுக்க மாட்டேன்”. நான் சலனமே இல்லாது அன்றைய வேலையை செய்யப் போய்விட்டேன். ஆனால் என்மேல் பழி போட்டாங்களே! அவங்க மேல் எவ்வளவு இரக்கப்பட்டு எல்லாம் செய்தோம். ஏன் இந்த நிலை எனக்கு என்று யோசனை ஓடிக்கொண்டே இருந்தது.
மறுநாள் கம்பெனிக்கு போன் வந்தது. நீ மாலையில் சீக்கிரம் புறப்பட்டு வா. லல்லி அத்தை வீட்டுக்கு வந்திருக்காங்க. நாங்கள் சென்றமாதம் வேலூர் கிட்ட ஒரு கிராமத்தில் ஒரு பழங்காலத்துக் கோயில் ஒன்று உண்டு. அங்க என் கணவரின் குடிப்பழக்கத்திற்கு முடிவு கட்ட அங்குள்ள பூசாரியிடம் குறி கேட்கலாம் என்று என்னை என் மாமியார் கூட்டிச் சென்று இருந்தார்கள். சென்ற மாதம் முழுவதும் என் கணவர் திமிரில் குடித்துவிட்டு ஆட்டம் போட்டார். பாவம்! பாழும் மனசு அம்மாவிற்கு, என்னசெய்ய! அவனுக்கு நேரம் சரியில்லை அதான் என்று புலம்பவே அங்கு சென்றிருந்தோம். ஆனால் அங்குபோய் அவர் முன் பிரச்சனையை சொன்னவுடனே அவர் கூறிவிட்டார். உன் பையன் சோம்பேறி. முதலில் வேலைக்குப் போகச் சொல்லு. அவன் நீ இருக்கும் தைரியத்தில் இப்படிச் செய்கிறான். நீதான் கெடுக்கிறாய். அடுத்த மாதம் வா. ஒரு சாமியாரிடம் அனுப்புகிறேன். அவர் முடிகயிறு போட்டு விடுவார். அதன் பின் அவன் குடித்தால் அவனுக்கு மரணம்தான் என்று சொல்லி அனுப்பி விட்டார். எனக்கு மனத்திற்குள் சந்தோஷம். இப்போதாவது அத்தை உண்மையை உணருவார்களா! குடிப்பதற்கு இவங்களே பணம் கொடுத்து விட்டு, கலாட்டா பண்ணும்போது புலம்புவார்கள்.
“அந்த வேலூர் சாமி கிட்ட உன்னைக்குறி கேட்கக் கூப்பிடுது அவர் நீ எடுக்கலென்னு சொன்னால்தான் நம்புவாங்களாம்” என்றது அந்த போன். எனக்கு ஒன்றும் புரியவில்லை. இந்த 4000த்தில் நாம் அப்படி என்ன செய்துவிடப் போகிறோம். ஒரு மாதம் உழைத்தால் இதைவிட ஒன்றரை மடங்கு சம்பளம் எனக்கு. மடியில் இருந்தால்தானே கனம். என்ன! நல்லவேளை மறுநாள் ஞாயிற்றுக்கிழமை. கம்பெனிக்கு லீவு போட வேண்டாம். குழந்தை ஷாலினியை என் நாத்தனாரும் அவரும் பார்த்துக் கொள்ளட்டும் என யோசனை ஓடியது.
வீட்டில் போனதும், மாமியார் முகம் வாடியிருந்தது. நம் மருமகளை வீணாகப் பழி போடுகிறாளே என்று. ஆனால் லல்லி அத்தையோ, வந்ததும் வராததுமாக கிளம்பு கிளம்பு நான் உன்னை நம்பத்தயாராக இல்லை. அந்த சாமிக்கிட்ட வா! அது உன்னை காட்டிக் கொடுத்து விடும் என்று குதிகுதின்னு குதித்தாள். நான் பேசவே இல்லை பெரியம்மா! முந்தின இரண்டு நாட்களாக ஷாலினிக்கு மூச்சிரைப்பு. ஆஸ்பத்திரிக்குப் போய், இராத்தூக்கம் முழித்த அலைச்சல். என் உடம்பும் முடியலை ‘அம்மா’ என்று அம்மாவின் மடியில் படுத்துவிட மாட்டோமா என்று இருந்தேன் பெரியம்மா! தவறு செய்யாவிட்டாலும் இப்படி அவமானம் ஏன் வருகிறது. நம் குரானில் இருக்கிறதா சொல்லுங்கள் பெரியம்மா! என் விதியை நொந்து கொண்டே கிளம்பினேன். பெரியம்மா! நான் முந்தாநாள் மதியம் சாப்பிட்டது. இன்னமும் ஒரு சோற்றுப் பருக்கைக்கூட உள்ளே போகவில்லை. என்னதான் அறிவு தைர்யப்படுத்தினாலும், மனசு புடுங்கி, வயிற்றில் ஒரு குமட்டல் இருக்கிறது பெரியம்மா! அந்தக் குமட்டல் இந்த சன்னிதானத்தில் கொஞ்சம் அடங்கி இருக்கு பெரியம்மா!
இதோ! என் கண்முன் கோயிலின் கர்ப்பகிரகத்தில் அந்த கன்னித்தெய்வங்கள் இருக்கிறார்கள். அவர்கள் என் பெரியம்மாவாகத்தான் தெரிகிறார்கள். தாயைவிட வேறு யாருக்கு குழந்தையைத் தெரியும். வாய் பெரியம்மா! என்று அரற்றுகிறது.
அதற்குள் என் முறை வந்துவிட்டது. அந்த பூசாரிமுன் என்னை அமரச் சொன்னார்கள். என்னுடன் வந்தவர்கள் என் பக்கவாட்டில் அமர்ந்து இருந்தனர். நான் என் மனதை ஒரு நிலைப்படுத்தி அவரை என் தாயாக எண்ணிக் கும்பிட்டேன். நான் அந்தப் பணத்தை எடுக்கலை சாமி! நீதான் அவர்களுக்குத் தெரியப்படுத்தணும்னு வேண்டிக்கிட்டேன்.
சாமியார் புன்னகைத்தார். தட்டில் இருக்கும் தேங்காயை உடைத்தார். “அம்மா! பெற்ற குழந்தை மேல் சத்தியம் பண்ணியுமா அவர்கள் உன்னை நம்பாது இங்கு என்னிடம் அழைத்து வந்திருக்காங்க. என்னம்மா! நான் உனக்கு உன் பெரியம்மாதான். சந்தேகம் வேண்டாம். பெரியம்மாவின் காலடியில் உன்னை அர்ப்பணித்து விட்டாய். கலங்காதே! இந்தப் பணம் அவர்களே செலவழித்துவிட்டு, அந்த நாலு சுவத்துக்குள் திட்டம் போட்டு நடத்தி விட்டு, பழியை உன்மேல் போட்டு விட்டார்கள். உனக்கு நான் உடனிருப்பேன் என்றும். தாய்முன் மதம் ஒன்றுமில்லையம்மா. போ. உனக்கு அவங்களை சபிக்க வேண்டுமென்றால் என் கோவில் முன் உள்ள மண்ணை அள்ளித் தூவி கோபத்தைத் தீர்த்துக்கொள்.”
அய்யய்யோ! சாமி! வேண்டாம் சாமி! எனக்கு வேண்டியது நான் எடுக்கலை என்கின்ற சொல் ஒன்றுதான். அதை அவர்களுக்கு நிரூபிக்கணும். அவ்வளவுதான் சாமி! எப்படிசாமி. என் பெரியம்மாவிடம் புலம்பியதை நீங்கள்…
போ தாயி! எல்லாம் நல்லபடியா நடக்கும். எப்போதும் இப்படியே தெளிவா இரு தாயி. உன்ன இந்த கன்னியம்மா எப்போதும் காப்பாத்துவாள். என்று கூறி ஆசி வழங்கினார். எனக்கு அப்போதுதான் நிம்மதி வந்தது. நான் அவரை வணங்கி எழுந்து அவ்விடத்தை விட்டு வருவதற்குள் லல்லி அத்தையைக் காணோம். என்ன அவளையா பார்க்கிறாய்! அவ ஓடிப் போய்ட்டாம்மா! அவளால் எப்படி நிக்க முடியும். வா! நாம் வீட்டிற்குப் போகலாம். என் மேல் உனக்கு வருத்தம் இல்லையே. நான் என்ன சொல்லட்டும்? எதுவும் பேசவில்லை. நான் வாய் திறந்து பேசியே ஒன்றரை நாட்களுக்கு மேலாகி விட்டது.
அனைவரும் வீடு செல்ல பஸ்ஸில் அமர்ந்தோம். என் மாமியாரின் தம்பி அவருடைய குடும்ப பிரச்சனைக்கு குறி கேட்க வந்திருந்தார். அதற்கு ஒரு தீர்வும் அவருக்கு கிடைத்தது. அவர், அவர் பிரச்சனையில் மூழ்கியிருந்தார். அவரும் என்னிடம் எதுவும் பேசவில்லை. என்மேல் விழுந்த பழி எப்படி விலகப் போகிறது என்று இந்தக் கோயிலுக்கு வரும்போது இருந்தது. அந்த சஞ்சலமும் இல்லை. பஸ் புறப்பட்டது. ஒரு மணி நேரம் கழிந்தது. அடடா! நான் குளித்துக் களைந்த ஆடையை அங்கேயே விட்டுவிட்டது தெரிந்தது. சரி போகட்டும். அந்த பழையதுணி மாதிரி என் பழியும் நீங்கிவிட்டது. அதற்காக சங்கடப்பட வேண்டாம்.
இந்த மனசு அமைதியாயிற்று. அதோடு நிற்கிறதா! அறிவு விழித்துக் கொண்டது. இந்த சாமி, சாமியார் எல்லாம் செய்தித்தாளில் வரும் செய்திபோல் ஏமாற்று வேலையாய் இருந்திருந்தால்…. அம்மாடி என நான் கத்தவும், பஸ் எதிரில் சாலையை திடீரென்று கடந்த ஆட்டுக்குட்டிக்காக பிரேக் போடவும் சரியாக இருந்நதது. நல்லவேளை அந்த சத்தத்தில் என் சத்தம் எடுபடவில்லை.
சரி! எதற்கு நடக்காத ஒன்றை நினைத்து மனம் உருகுவானேன். பாவம்! லலிதா அத்தை! ஏதோ பணக்கஷ்டத்தில், அவர்கள் புத்தி வேலை செய்து விட்டது. குறுக்குவழியை நாடிவிட்டது. என்ன ஒரு லட்ச ரூபாய் ஏற்பாடு பண்ணிக் கொடுத்த தன் அக்கா ஒரு 4000 -ரூபாயைத் தரமாட்டங்களா! உண்மையைச் சொல்லியிருந்தால்… விட்டுவிடுவோம். மறந்து விடலாம்தானே பெரியம்மா!