Category: சிறுகதைகள்

கதைகள்

  • கணினி, ஜகம் நீ

     

    நாகை வை. ராமஸ்வாமி)

    அன்றொரு நாள், ஆண்டு 1999, இரவு 1.00 மணியை நெருங்கிக் கொண்டிருந்தது.

    ஒரே நிசப்தம்.  ரிடையர் ஆக ஒரு சில மாதங்களே இருந்த அந்த பெரியவரும், அவர் மனைவியும் தூங்காமல் விழித்துக் கொண்டிருந்தார்கள் அவர்கள் மும்பை அபார்ட்மென்டில்.

    என்ன? பயந்துவிட்டீர்களா, ஏதோ பயங்கர நிகழ்ச்சி என்று?  நோ, நோ.

    அந்த நேரத்தில்  தான், முதல் முறையாக அமெரிக்கா  சென்றிருக்கும் அவர்கள் மகன் நேரடி உரையாடlல் செய்ய அழைப்பு மணி விடுப்பான்.  அவர்களுக்கு ஒவ்வொரு இரவும், மகிழ்வான சிவராத்திரி தான்.

    அப்பொழுது தான் அவர்களுக்கு கம்ப்யூட்டரைப் பற்றி ஓரளவு தெரியும்.   அவன் கிளம்புவதற்கு முன் ஒரு பி..சி.. (பர்சனல் கம்ப்யூட்டர்) வாங்கி வைத்து ஆரம்ப விளக்கங்களைச் சொல்லிக் கொடுத்திருக்கிறான்.  

    பத்துதடவை சொன்னாலே புரியாத வயதாகிக் கொண்டிருக்கும் மூளைச் செல்கள் புத்துணர்வு  பெற்று புரிந்து கொள்ளவே பத்து நிமிடம் ஆகும்.  அவன் ஓரிரண்டு தடவை சொல்லிக் கொடுத்துவிட்டு,  “யூ நோ அப்பா, யூ ஒன்லி டாட் மீ மெனி திங்ஸ்” என்று குல்லா வைத்துவிடுவான்.  அதில் மகிழ்ந்து அதிகம் கேட்கக் கூடாது என்ற குல்லாகூடிய தலைக் கனத்துடன் ஓகே என்று சொல்லிவிட்டார்

    ஒரு வழியாக கம்ப்யூட்டரை ஆன் செய்து விட்டார்.  மகன் சொல்லியபடி, MSN

    ஜன்னலைத் திறந்து, காத்திருந்தார்

    மணி 2.00 நெருங்கிக் கொண்டிருக்கிறது.  திக், திக், ஏன் இன்னும் கூப்பிடவில்லை?

    ட்ர்ர்ர்ரிங்…….  ட்ர்ர்ரிங்.

    அப்பாடா, மணி அடித்தது.

    அவன் உருவம் தெரிந்தது.

    மனைவி தூக்கக் கலக்கத்தில், ஏதோ பிரமை பிடித்தவள் மாதிரி கனவா நனவா என்ற நிலையில், ஏற்கனவே பெரியதான தன் கண்களை இன்னும் அகல விரித்து கம்ப்யூட்டரைப் பார்த்துக் கொண்டு மகன் உருவத்தைத் தடவிக்கொண்டிருந்தாள்.   பிரிவாற்றாமை கண்களில் நீர் வரச் செய்தது.

    வாயை அசைத்து ஏதோ சொல்கிறான்.  அந்த நாள் மௌனப் படம் பார்ப்பது போலிருந்தது. ஏதும் கேட்கவில்லை.

    அவர்கள் இருவரும் ஊரையே எழுப்பி விடுகிறமாதிரி காட்டுக் கத்தலாக “ஹலோ, ஹலோ, ஹலோ” என்று சுமார் இருபது ஹலோ போட்டிருப்பார்கள். அவர்கள் இருந்தது நான்காவது மாடி.  அவர்கள் கூப்பிட்ட ‘ஹலோ ஹலோ’க்களில், அந்த இரவு நேரத்தில் சாலையில் போய்க்கொண்டிருந்த சிலர் திரும்பித் திரும்பிப் பார்த்துவிட்டு, “அவாஜ் ஆதா ஹை, மகர் கோய் நஹீ, டர் லக்தா ஹை” ‘சத்தம் மட்டும் கேட்கிறது, ஆளையே காணோமே’ என்று பயந்து அலறி அடித்து ஓடுவது நன்றாகத் தெரிந்தது.

    அவன் டைப் செய்வது தெரிந்தது.  கம்ப்யூட்டரில் அவன் மெசேஜ் தெரிந்தது.  

    “ஸ்பீக்கர் ஆன்ல இருக்கா?”

    “அது எப்படி செக் செய்வது?”

    “ஸ்பீக்கரில் பட்டன் இருக்கும்.  அது ரெட் லைட்டில் இருக்கா, க்ரீன் லைட்டில் இருக்கா?”

    “எந்த லைட்டும் இல்லை”

    “பட்டன் ஆன் செய்தாச்சா?”

    “எப்படி செய்வது?”

    “அப்பா…அது ஒரு  ப்ரஸ் பட்டன் தான்.  சைடில் இருக்கும்.  ஜஸ்ட் ப்ரஸ்  இட்.  நான் சொல்லியிருக்கிறேனே?”

    “இரண்டு நாள் தான் பாடம் எடுத்தாய், மறந்துவிட்டது கண்ணா, கோபிச்சுக்காதே.   ஒன் மினிட்.  ஓகே.  ஆன் ஆகிவிட்டது.  க்ரீன் லைட்.”

    “இப்போ பேசலாம்.  அம்மா எங்கே?”

    “இதோ ரெண்டு பேரும் தான் இருக்கோம்.  உனக்கு தெரியலையா?”

    “சரியா தெரியலை.   கேமிராவை சரியா ஃபோகஸ் செய்யணும்.”

    “இதோ ஒன் மினிட்.  ம்..ம்.. அட்ஜஸ்ட் செஞ்சாச்சு.”

    “சரியா அட்ஜஸ்ட் செய்யலை.  ரூம் சீலிங் தான் தெரிகிறது.  இன்னும் சற்று கீழே ஃபோகஸ் செய்யவும்.”

    தமிழ் அரைகுறையாகப் படித்திருந்ததால், செய் என்றோ  செய்யுங்கள் என்றோ சொல்வதற்குத் தெரியாது.   செய்யவும், பார்க்கவும், என்றுதான் சொல்வான்
     
    “ஓகே, இப்போ”

    “அப்பா….இப்போ  தரை தெரிகிறது.”

    “ஓகே, இப்போ?”

    “ஓகே. நீங்க இரண்டு பேரும் பாதி பாதி தான் தெரிகிறீங்க>”

    “இப்போ?”

    “குட்.  சரியாக இருக்கிறது.”

    “ஓகே.  சொல்லு.  எப்படியிருக்கே”

    “நான் ஓகே.  நீங்கள்  உடம்பை ஜாக்கிரதையாகப் பார்த்துக் கொள்ளுங்கள்.  சரி. எனக்கு டைம் ஆகிவிட்டது.  நாளைக்கு இதே நேரத்தில் இதே சேனலில்  பார்க்கலாம்.  அர்ஜன்ட் மெசேஜ் இருந்தால் மட்டும் மெயில் செய்யவும். அதுவரை உங்களிடமிருந்து விடை பெறுவது உங்கள் செல்லம்…டிங் டாங்..”

    “இருப்பா இன்னும்  பேசவே இல்லை.  அதுக்குள்ளே  ஆஃப் செய்யாதே.”

    அவன் கேட்டால் தானே.   ஆஃப் செய்துவிட்டான்.   ம்..ம்.. இன்னும் 24 மணி நேரம்  காத்திருக்க வேண்டியது தான்.

    அடுத்த நாள் இரவு.

    அவன் சொன்னமாதிரி  செய்து ரெடியாகிவிட்டோம்.

    இதோ வந்துவிட்டான்.

    “ஹலோ..ஹலோ”

    “சொல்லுப்பா..கேட்கிறதா..”

    “நீங்கள் சொல்வது  கேட்கவில்லை.  நான் பேசுவது  கேட்கிறதா?”

    “கேட்கிறது”
     
    “ஓகே,  வெயிட்.  ஒயர் சரி  செய்யவேண்டும்.  பார்க்கிறேன்.”

    “அந்த  மௌஸ் இருக்கு பாருங்கள்.  அதை மேல் உள்ள பாரில் இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் என்று இருக்கும்.  அதில் நகர்த்தி க்ளிக் செய்யுங்கள்.”

    தலை சுற்றியது அவர்களுக்கு..   ஏற்கனவே கொஞ்சம் வெர்டிகோ ப்ராப்ளம்.

    “இரு, இரு. மெதுவாக சொல்லு.  மௌஸா, எலியா?  நான் எங்கே போவேன் இப்போ எலி பிடிக்க, என்ன சொல்றே?”

    “அப்பா, கீ போர்ட் கிட்ட, கம்ப்யூட்டர் கீழே ஒரு பெரிய ஹார்டுவேர் பெட்டி இருக்கிறது, பாருங்கள், அதிலேருந்து கனெக்ட் செய்த ஒயரிலிருந்து ஒரு சின்ன எலி மாதிரி கைக்கு அடக்கமான நகர்த்தக்கூடிய டிவைஸ் பேடின் மேல் வைத்திருக்கிறது, பார்க்கவும்.”

    “ஆமாம்.  அதுதான் மௌஸா?.  ஓகே.  அதை என்ன செய்யவேண்டும்?”

    “அதை லேஸாக நகர்த்தினால், கம்ப்யூட்டர் ஸ்க்ரீனில் ஒரு அம்புக்குறி நகரும்.”

    “ஐ.  ஆமாம்.  நகருகிறது.  ஆனால்,  அம்புக்குறி எங்கோ  போகிறதே?”

    “மெல்ல நகர்த்துங்கள். அது எங்கு இருக்கிறதோ அங்கே அந்த மௌஸில் மேற்புரத்தில் உள்ள இடப்பக்கத்தில் உள்ள பகுதியை அமுக்குவதற்குத்தான் க்ளிக் செய்வது என்று பெயர்.”

    “நீ நன்றாக சொல்லிக் கொடுக்கிறாய்.  பேசாமல் கம்ப்யூட்டர் க்ளாஸ் ஆரம்பித்து இங்கேயே இருந்திருக்கலாம் போலிருக்கிறது.  எங்களுக்கு டென்ஷன் இருக்காது.”

    அவன் சொன்னபடியே செய்தார். ஆனால் மௌஸின் வலப் புறத்தை க்ளிக் செய்துவிட்டார்.  ஒரு சிறிய ஜன்னல்,  “cut, copy, paste……” என்று வந்தது.  அவனிடம் சொன்னார்.  அவன் சிரித்தான்.

    “அப்பா, அது இல்லை, இடது பக்கப் பகுதியை க்ளிக் செய்யவும்”  என்றான்.

    செய்தார்.  அம்புக் குறி வந்தது ஆனால் எங்கோ போய்விட்டது சொன்னார். “அம்புக் குறியைக் காணோம்.”  

    “வெயிட்.  ஜஸ்ட்  மூவ் த மௌஸ்”.   மூவினார்.  வந்தது.

    “என்ன விசேஷம்  செல்லம்?  எப்படி இருக்கே.  வேலை பிடித்திருக்கிறதா?  கீப் யுவர் பாஸ் ப்ளீஸ்ட் வித் யுவர் பெர்ஃபார்மன்ஸ், ஓகே?”   அவருக்கு அவன் வேலை கவலை. அவர் காலத்திய தந்திரங்கள் தான் தெரியும்.   அவன் அம்மா, “நல்லா சாப்பிடுப்பா.  ஏதாவது செய்யத் தெரியவில்லைனா, போனில் கேளு.”

    “ஓகே, ஓகே,  டைம் ஆகிவிட்டது.  இரண்டு நாள் லீவு.   திங்கட்கிழமை பார்க்கலாம்”
     
    “அடாடா, என்னடாது, ஒண்ணுமே பேசவில்லை.  அதுக்குளே  டைம் ஆகிவிட்டது, இன்னும்  இரண்டு நாள் வேற லீவு என்கிறாய்?”  அவர்கள் ஆதங்கம்.

    ராத்திரி பூரா சிவராத்திரியாய் விழித்திருந்து, கண்கள் சிவக்க, உடலில் சூடேறி, ஒவ்வொரு நாளும் தலையிலும் கண் இமைகளிலும் வேப்பெண்ணெய் தவிர, யார் யார் என்னென்ன சொல்கிறார்களோ அத்தனை எண்ணெய்களையும் தடவி,  ஒரு நாள் அந்த எண்ணெய் கீழே கிரானைட் தரையில் கொட்டியது தெரியாமல் தடாலென்று வழுக்கி விழுந்து ஒரு நாள் பூரா ராமர் வில் மாதிரி ஆனது ஒரு எண்ணெய் காண்டம்.

    அமெரிக்காவிலிருக்கும் மகனுடன் பேசுகிறோம் பேர்வழிகள் என்ற பெயரில் தினமும் இரவில் இரண்டு மூன்று மணி நேரம் இன்டர்நெட் ஆன் செய்து வைத்ததில் மாதாந்திர நெட் கனெக்ஷன் பில்லும்,  அவனைக் கம்ப்யூட்டரில் பார்த்துக்கொண்டே கம்ப்யூட்டர் சரியாக வேலை செய்யாத  போதெல்லாம், செல் ஃபோனிலும் பேசிக்கொண்டிருந்ததது எல்லாம் சேர்த்து கிட்டத்தட்ட 2500 ரூபாய் மாதம் கட்டவேண்டியிருந்தது ஒரு புராணம்.

    இம்மாதிரியான பல இரவுகள் கடந்த பின்தான் ஓரளவு எந்த கோளாறில்லாமலும்  அவர்களால் மகனுடன் கணினி  மூலம் உரையாட முடிந்தது,.

    அவராவது ஏதோ தடவித் தடவி கம்ப்யூட்டர் ஓரளவு கற்றுக் கொண்டுவிட்டார்.  ஆனால் அவர் மனைவிக்கு இன்னும் புரியவில்லை.  கொஞ்ச நேரம் அதிகம் உட்கார்ந்தால், “போதும் எழுந்திருங்க, அங்க வலிக்கிறது, இங்க வலிக்கிறதுன்னு ஒத்தடம் கொடு என்பீங்க.” என்று அலாரம் கொடுப்பாள்.

    .அவனிடம் கம்ப்யூட்டரில் ஏதாவது புரியவில்லை என்று கேட்டால், “யூ நோ அப்பா, இட் ஈஸ் எ சைல்ட்ஸ் ப்ளே ஃபார் யூ. ஒங்க ஆபீசிலேயே ட்ரெயினிங் கொடுத்திருக்காங்களே.  யூ ஆர் எ கம்ப்யூட்டர் savvy now.” என்பான்.

    “அது என்னப்பா கம்ப்யூட்டருக்கு பூட்டு, சாவி எல்லாம் இருக்கா? எனக்குத் தெரியாதே” என்று ஜோக்கடிப்பார்.

    அவர் கம்ப்யூட்டர் ட்ரெயினிங் எடுத்ததே ஒரு கதை.  கம்ப்யூட்டரைஸ் செய்யும் நோக்கத்தில், அவர் ஆபீசில் எல்லோருக்கும் கம்ப்யூட்டர் ட்ரெயினிங் கொடுத்தார்கள்.  அவருக்கும் இனிமேல் கற்றுக்கொண்டு என்ன செய்யப்போகிறோம், ரிடையர் ஆகப் போகும் சமயத்தில் என்று நைஸாக தப்பிக்கப் பார்த்தார்.  ஆனால் அவர் எம்.டி. விடுவதாக இல்லை.   வீட்டிற்குப் பக்கத்திலேயே ஏதாவது ட்ரெயினிங் இன்ஸ்டிட்யூட்டில் கம்பெனி சிலவில் கற்றுக் கொள்ளும்படி உத்திரவு.

    சேர்ந்தார், வேறு வழி.?

    .ஒரு நாள், ஒரு 9 வயதுக் குழந்தை சேர்ந்தது.  அவரைப் பார்த்து, “ஹை, தாத்தா, நமஸ்தே” என்றாள்.

     “காட் ப்ளெஸ்  யூ”.  என்றார்.

    “ஏன், நீங்களும்  ப்ளேஸ் பண்ணலாமே?”  என்றாளே  பார்க்கலாம்.

    “ஓகே, ஐ ஆல்ஸோ  ப்ளெஸ் யூ”

    “தேன்க் யூ.  நீங்க  சொல்லிக் கொடுக்கிறீங்களா, கத்துக்கறீங்களா?”

    அவருக்குக் கொஞ்சம் வழிய ஆரம்பித்தது.

    “சும்மா, டைம் பாஸ் குழந்தே, வீட்டில் கம்ப்யூட்டர் இல்லே, அதான்

    மெயில் அனுப்ப வந்தேன்”  சமாளிக்க முயற்சித்தார்.

    “பின்ன, வேறே என்னமோ தப்புத் தப்பா செய்யறீங்க?”

    “உனக்கு ஆபரேட் செய்ய  தெரியுமா?”

    “ஓ, நல்லாத் தெரியுமே,  நான் கூட மெயில் செக் செய்யத்தான் வந்தேன்.”

    “அப்போ இந்த மெயில் எப்படி ஓபன் செய்யறதுன்னு சொல்றாயா?”

    “அப்படி வாங்க வழிக்கு, உங்களுக்குத் தெரியலைன்னு  கண்டுபிடிச்சுட்டேன்.”

    அந்த வாண்டிடமிருந்த்தும்  கற்றுக்கொண்டதற்கு சற்று  தயக்கம் தான்.  ஆனாலும் கூச்சத்தைப் போக்கிக் கொண்டார், ஆர்வ மிகுதியில்.

    ஒரு மாத டிரெயினிங்.  ஓரளவு தான் புரிந்தது.  எக்ஸெல், ஈமெயில் அனுப்புவது போன்ற சமாசாரங்களில் தடுமாற்றம் தான்.

    மகனிடம் தெரிந்தாலும், தெரியாது என்று சொல்லி, அவனிடமிருந்து கற்றுக் கொள்வது போல் நடிப்பதில் அவருக்குப் பெருமை, சொல்லிக் கொடுப்பதில் அவனுக்கும் பெருமை. . ஆனாலும் சில நுணுக்கங்கள் புரியத்தான் இல்லை.

    ‘கற்றது கையளவு, கல்லாதது உலகளவு’ என்பது அடிக்கடி ஞாபகப்படுத்தும்.

    ரிடையர் ஆகி பத்து ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டாலும்,  இப்பொழுது  மகன், கணினி தெரிந்த மறுமகளுடன் வசிப்பதால், பிரச்சினைகள் அதிகம் இல்லை. இருந்தாலும், அவன் கணினி மொழியில் ஏதாவது சொல்லிவிட்டால், தலையைப் பிய்த்துக் கொள்ளத்தான் செய்கிறார்.  இப்பொழுது, கணினி விஷயத்தில், அவர், பாதி கிணறுக்கு மேல் தாண்டிய மாதிரி தான்.  அவரை கணினி savvy என்று சொல்லமுடியாவிட்டாலும், கணினி sav என்று சொல்லலாம்.

    இந்த கணினி என்று ஒன்று கண்டுபிடித்திருக்கிறார்களே, அது, ஒரே மாயா ஜால உலகம்.  அதன் முன் உட்கார்ந்து விட்டால், எது வேண்டுமானாலும் தெரிந்து கொள்ளலாம், பொழுது போவதே தெரியாது.  அது தவிர, அயல் நாடு என்றாலே, விமானப் பயணம் என்றாலே எதுவுமே தெரியாத நடுத்தர வகுப்பினருக்கு ஒரு வரப் பிரசாதம்.  அதனால் தான், அந்தப் பெரியவரும், இளைய ராஜா பாடிய “ஜனனி, ஜகம் நீ..” என்ற பாட்டை சற்றே மாற்றி, “கணினீ, ஜகம் நீ” என்று கணினி முன் உட்காரும்போதெல்லாம் பாட ஆரம்பித்துவிடுவார்.

    கம்ப்யூட்டரில் இதை டைப் செய்வதற்குள், இதோ, அவரது முதுகு அலாரம் அடிக்கிறது, (பெட்டர் (?) ஹாஃப்) அலாரமும் அடிக்கிறது.

     

    Share
  • ரகசியம்

    தமிழ்த்தேனீ 

    “அப்பா  எப்பவுமே  நீங்க சொல்றதைத்தான் நாங்க கேக்கணும்னு கிடையாது. நாங்களும் வளந்துட்டோம். நாங்க சொல்றதை  இனிமே  நீங்க  கேளுங்கோ.  அம்மாவை  திட்டிண்டே  இருக்காதீங்கோ”, என்று  கடுமையாகக் கூறிய மகன் தேசிகனை  அதிர்ச்சியோடு நிமிர்ந்து பார்த்தார்  ராமசேஷன்.

    வாழ்க்கையில்  எதற்குமே  கலங்காத, எந்த நேரத்திலும் நிதானத்தைக் கைவிடாத பொறுமைசாலி. எவ்வளவோ  கஷ்டங்களை  எதிர்கொண்ட போதும், ‘எப்பிடி இருக்கீங்க ?’  என்று கேட்கும்  அனைவரிடமும், “எல்லாப் ப்ரச்சனைகளோடும்  நலமாக இருக்கிறேன்” என்று புன்னகையுடன் கூறும் பக்குவம் உள்ள  ராமசேஷன், பதினெட்டு வயதில், 90 ரூபாய் சம்பளத்தில்  ஒரு தொழிற்சாலையில் வேலைக்கு சேர்ந்து உழைத்தவர்.

    சிறுக சிறுக சேர்த்து பெற்றவர்களின்  கடைசிக் காலம் வரை  அவர்களை  மனம் நோகாமல் இதமாக நடத்தி  தந்தையார்  இறந்த போதிலிருந்து கடைசீவரை  தன் தாயார் மைதிலியை யாரிடமும்  விடாமல்  தானே  பார்த்துக்கொண்டு, கிட்டத்தட்ட  நாற்பது ஐந்து  ஆண்டுகள் வாழ்ந்தாயிற்று, இது வரை  யாரிடமும்  எதற்காகவும் தலை குனிந்ததில்லை, யாசகம் கேட்டதில்லை, மனசாட்சி, தெய்வம் இரண்டைத் தவிர  யாரிடமும் பயப்படாமல் வாழ்க்கையை கழித்தாயிற்று.

    அந்தக் கஷ்டங்களின்  நிழல்கூட   மனவி குழந்தைகளைத் தாக்காமல், தானே  மொத்தப் பொறுப்பையும் எடுத்துக்கொண்டு இரு பெண் குழந்தைகளையும் ஒரு  பிள்ளையையும் தன்  சக்திக்கு மேலாக  படிக்கவைத்து  ஆளாக்கி, பெண்களுக்கு நல்ல இடத்தில்  திருமணம் செய்து, பிள்ளைக்கும் அவன் விரும்பிய பெண்ணையே  திருமணம் செய்து வைத்தார்.

    பொறுப்புகளை  வெற்றிகரமாக  செயல் படுத்திய  இவருக்கு திருமணமாகி, விளையாட்டு போல முப்பத்தாறு ஆண்டுகள் நிறைவடைந்து விட்டது. அவர் மனைவி மங்களத்துக்கு   தெரியும்  அவருடைய  அந்தரங்கம்.

    ராமசேஷனும் மங்களமும்  இருவரும் திருமணநாளில் ஸ்ரீரங்கம் சென்று அரங்கனை சேவித்துவிட்டு வருகிறோம்  என்று கிளம்பிப் போய் ஸ்ரீரங்கம் கோயிலில் தரிசனம் செய்துவிட்டு, அங்கிருந்து அவர்களின் பிள்ளை தேசிகனுக்கு தொலைபேசி மூலமாக தொடர்பு கொண்டனர்.

    தேசிகன், “என்ன அம்மா தரிசனம் நன்றாக கிடைத்ததா? ரொம்ப அலையாதீங்கோ, வேளைக்கு  சாப்டுக்கோங்கோ” என்றான் கரிசனத்துடன்

    “சரிடா,  இதோ போனை அப்பாகிட்ட குடுக்கறேன்”, என்று மங்களம் போனை ரமசேஷனிடம் கொடுத்தாள். தேசிகன்  , “அப்பா,  அம்மாவை  ஜாக்கிரதையா பாத்து கூட்டிண்டுபோய்ட்டு வாங்கோ. அம்மாவை  ஏதாவது சொல்லிண்டே இருக்காதீங்கோ. கொஞ்சம் இதமா நடந்துக்கோங்கோ” என்றான்.

    ராமசேஷன், “சரிப்பா நான் உங்க அம்மாவை  ஒண்ணும் சொல்ல மாட்டேன், பத்திரமா கூட்டிண்டு வரேன், நீங்க எல்லாரும்  பத்திரமா இருங்கோ, என் பேரன் கிருஷ்ணனை பத்திரமா பாத்துக்கோங்கோ  ரெண்டு பேரும்” என்றார்.

    அவருடைய மருமகள் தொலைபேசியில் வந்தாள்.

    “அப்பா,  அம்மா, இங்கே நாங்க ரெண்டு[பேரும்  நன்னா இருக்கோம். உங்க பேரன் பண்ற லூட்டிதான்  தாங்க முடியலை. தாத்தா, பாட்டி எப்போ வருவான்னு நச்சரிக்கறான். சீக்கிரம் தரிசனத்தையெல்லாம் முடிச்சிண்டு  வாங்கோ”,  என்றாள்.

    “சரிம்மா  நாங்க  நாளைக்கு  வந்துடுவோம். சரி போனை வெச்சிடறேன்”, என்றார் ராமசேஷன். 

    எப்பவுமே  மரியாதைக் குறைவா பேசாத, அதிர்ந்து கூடப் பேசாத குணம். எல்லாருக்கும் நல்லது செய்யணும். நாட்டுக்கு ஏதாவது செய்யணும். எல்லா  உறவுக்காரங்ககிட்டேயும் அன்பா, பாசமா பழகற பிள்ளை. அதுனாலே  எல்லாருமே  ராமசேஷனும் மங்களமும் ரொம்பக் கொடுத்து வெச்சவா, நல்ல பிள்ளையைப் பெத்திருக்கா  அப்பிடீன்னு சொல்லுவா. அமெரிக்காவிலே  பெரிய கம்பனீலே பெரிய பதவீலே  இருக்கான்.

    எல்லாரும் சொல்றா ரொம்ப புத்திசாலி,  வேலையிலே  கெட்டிக்காரன், அப்பிடீன்னு. அவன் வேலை செய்யிற  கம்பனியிலேயே  இவனுக்கு  ரொம்ப மரியாதை தரா, எல்லாரும் சொல்லும்போது  ராமசேஷனுக்கு  ரொம்ப இதமாவே இருந்துது மனசு, அவருக்கு  அவருடைய  பிள்ளை தேசிகன்  நேர்மையான, நல்ல பிள்ளை  என்று தெரியும், பாசமான பிள்ளை. ஆனாலும்  கொஞ்ச நாளா  அவன்  மனசுலே  என்ன இருக்குன்னு  தெரிஞ்ச போது கொஞ்சம் அதிர்ச்சியாதான் இருந்துது. அவன்  என்ன புரிஞ்சிண்டான்னே  தெரியலை, ஒண்ணு புரியறது, இந்த மேல் சாவனிசம், பீமேல் சாவனிசம்  இதெல்லாம் படிச்சிட்டு,  பழங்காலத்திலே  புருஷாள்ளாம் எப்படி பொண்டாட்டியை அடிமையா  நடத்தி இருக்கா, எப்பிடி  இவ்ளோ மோசமா  நடந்துக்க அவாளுக்கு  மனசு வந்துது, இப்பிடியெல்லாம் அவர் காது பட பேசுவதைக் கேட்டிருக்கிறார்.

    அது மட்டுமல்ல  என் பொண்டாட்டியை  நான் எனக்கு சரி சமானமா  நடத்துவேன், அவளுக்கு உண்டான  மரியாதையை  குடுப்பேன், என்று கொள்கைப் பிடிப்போட நடந்துக்கிறான். இதெல்லாம் பெருமையாதான் இருக்கு.  ஆனா அந்தப் பிள்ளை  தேசிகன் கொஞ்ச நாளாவே  ராமசேஷன் சொல்றது சரியாவே இருந்தாலும்  பிடிவாதமா  அதை மறுத்துட்டு, “அப்பா   சும்மா இருங்கோ  உங்களுக்கு  ஒன்னும் தெரியாது, அம்மா  எது பண்ணாலும் குறை சொல்லுவேள் அது ஒண்ணுதான்  தெரியறது உங்களுக்கு”, அப்பிடீன்னு  ஒரு நாள் பேசினதக் கேட்டவுடனே  அதிர்ச்சியா இருந்தது ராமசேஷனுக்கு. 

    அம்மா  தப்பு பண்ணாலும், சரியா பண்ணாலும் அதுதான் சரின்னு  அம்மா பக்கம் பேசறதை வழக்கமா வெச்சிண்டு இருக்கான். ஒண்ணு புரியறது  அவன்  குழந்தை  இன்னும் இந்த வாழக்கையோட சூக்‌ஷுமத்தை  சரியா புரிஞ்சிக்காத  குழந்தை. அது மட்டுமில்லே, இதமா பேசி அவா காரியத்தை நடத்திக்கறவா யாரு, காரியம் நடக்கணும்னா, அதுக்கேத்த மாதிரி இச்சகம் பேசறவா யாரு,  எந்த ப்ரதிபலனும்  எதிர்பாக்காம  அவனோட நலத்தைப் பத்தி யோசிக்கறவா  யாருன்னு இன்னும் புரியலை,அம்மாவை பத்திரமா பாத்துக்கணும்  இல்லேங்கலை, ஆனா  நல்ல அப்பாவையும்  புரிஞ்சுக்கணும்.

    ஆனாலும் ஒரு திருப்தி.  தன்னோட காலத்துக்கு அப்புறம், அவன் அம்மாவை மனம் கோணாம  அன்பா நடத்துவான் அப்பிடீன்னு  ஒரு திருப்தி. அதுனாலே  அவன்கிட்ட ஒண்ணுமே  பேசாம  அப்பிடியே  விட்டுட்டு ‘சரிப்பா’ என்று சொல்வதை  வழக்கமாகக் கொண்டார் ராமசேஷன். அனாவசியமா, தேவையில்லாம அவன்கிட்ட பேசறதைக் கொஞ்சம்  குறைச்சிண்டார்.

    எதுக்கும் அவன்கிட்ட விவாதமே  வளத்துக்கறதில்லே  என்ற முடிவோட இன்னும் கொஞ்சம் இதமா இருக்க ஆரம்பித்தார் ராமசேஷன்.

    ஸ்ரீரங்கத்திலேருந்து  வந்து ப்ரசாதமெல்லாம் குடுத்துட்டு,  அங்கே கோயில் வாசலில் இருந்து வாங்கி வந்த  ரங்கநாதப் பெருமாள் பொம்மையை  பேரன் கிருஷ்ணணிடம் கொடுத்தார்.

    மறு நாள் அவருடைய பேரன்  கிருஷ்ணன் விளையாடிக்கொண்டிருந்தான். அவன் வழக்கமா  விளையாடற கார் பொம்மை  ஒரு பக்கம் உடைஞ்சு போயிருந்தது. அந்தக் கார் பொம்மையை  அவனிடமிருந்து  வாங்கி  மேலே வைத்துவிட்டு, “நேத்துதானே  சொன்னேன் இந்தக் கார் பொம்மையை எடுக்காதேன்னு? உங்க அம்மா எடுத்துக் குடுத்தாளா? இனிமே இந்தக் கார் பொம்மையை  எடுத்தே  அப்புறம் அடிச்சிருவேன் ” என்றான் தேசிகன். 

    கிருஷ்ணன்  அப்பாவை  நிமிர்ந்து  பாத்து,  “அப்பா  நானும் வளந்துட்டேன், எப்பவுமே  நீங்க சொல்றதையே கேக்கணும்னு சொல்லாதீங்க,  ஹும்….. அப்புறம் அம்மாவைத்  திட்டிண்டே  இருக்காதீங்கோ”  என்றான் தன் மழலை மாறாத குரலில்.

    என் மருமகள் களுக்கென்று சிரித்தாள்.

    ராமசேஷன்  ஒன்றும் சொல்லவில்லை! அமைதியாக  தேசிகனையே பார்த்துக்கொண்டிருந்தார். தேசிகன்  தலைகுனிந்தான்.

    (சுபம்)

    Share
  • நீ என்றுமே என் மகன்தான்

     

    தேமொழி

    மணி மாலை ஐந்து மணியை நெருங்கியது.  நார்மா அன்று வேலை செய்தவரை போதுமென்ற முடிவுடன் அனைத்தையும் ஒழுங்கு செய்துவிட்டு, கணினியை நிறுத்திவிட்டு, கைப்பையை எடுத்துக் கொண்டு அறையை விட்டுக் கிளம்பினாள்.  “பை, பை, நார்மா, நாளை பார்க்கலாம்,” என்று புன்னகைத்தாள் உடன் பணி செய்யும் ரோஸ்.  மெலிதாக வரவழைத்துக் கொண்ட புன்னகையுடன்  தலையை அசைத்துவிட்டு வெளியே வந்தாள் நார்மா.  குளிரூட்டிய கட்டிடத்தில் இருந்து வெளியே வந்ததும் கோடை வெயில் தகித்தது.  கார் நிறுத்துமிடத்தை நோக்கி நடந்தாள்.  மகளின் கல்விக்காக கடன் வாங்குவதற்கு வங்கியில் அவள் செய்த விண்ணப்பத்திற்கு நாளை முடிவு தெரிந்துவிடும் என நினைத்துக் கொண்டாள்.  அவள் கணவன் கார்லின் நம்பிக்கைத்ரோகம் இந்த இரண்டு மாதங்களில் அவள் வாழ்க்கையைப் புரட்டிப் போட்டுவிட்டது.

    காரை நெருங்கிய நார்மா கதவைத் திறந்தவண்ணம் வழக்கம் போல பிள்ளைகளைப் பள்ளியில் இருந்து அழைத்துக் கொண்டு வீடு செல்லத் தீர்மானித்தாள்.   அவளது வண்டி கிளம்பிய பொழுது  கைபேசி ஒலித்தது , அவளது வழக்கறிஞர் வில்லியம் அழைக்கிறான் எனத் தெரிந்தது. வண்டியை நிறுத்திவிட்டு, கதவின் கண்ணாடிகளை காற்று நன்கு வரும்படி இறக்கிவிட்டு நார்மா அவனுடன் பேசினாள்.  வில்லியமின் குரலின் தொனியில்  இருந்து அவளால் அவன் உணர்சிகளைப் புரிந்து கொள்ள முடியவில்லை.  அவன் இயந்திரம் போலப் பேசினான்.

    “நார்மா, டி. என்.ஏ மரபணு சோதனையின் முடிவுகள் வந்துவிட்டன.  அதன்படி உன் மகன் டேனியல் உன் கணவன் கார்லின் மகன் அல்ல.”

    நார்மாவிற்கு தன் காதுகளையே நம்ப முடியவில்லை.  அதைத்தொடர்ந்து வில்லியம் சொன்னதன் பொருள் அவளுக்கு சுத்தமாக விளங்கவே இல்லை.

    “நார்மா, டேனியல் உன் மகனும் அல்ல.”  

    நார்மா பேச்சிழந்தாள், மறுமுனையில் அமைதியைக் கண்டு வில்லியம், “நார்மா, நார்மா” என்று பதறினான்.

    “சொல்லு வில்லியம், நீ என்ன சொல்கிறாய் என்று எனக்குப் புரியவில்லை” என்றாள் நார்மா.

    “நீ எங்கிருக்கிறாய் நார்மா?”

    “வேலையில்தான், இப்பொழுதுதான் காரைக் கிளப்பினேன், பிள்ளைகளைப் பள்ளியில் இருந்து அழைத்து வரப் போகிறேன்.”

    “வேண்டாம், நீ வண்டியை ஒட்டாதே.  அங்கேயே இரு, நான் வந்து உன்னையும் பிள்ளைகளையும்  வீட்டுக்கு அழைத்துப் போகிறேன், உன்னுடன் பேச வேண்டும்.  குழந்தை பிறந்த பொழுது மாறி இருக்க வேண்டும்.  ஒரு கால் மணி நேரத்தில் வந்து விடுகிறேன். அங்கேயே இரு,” என்று அவள் மறுத்துப் பேச வாய்ப்பளிக்காமல் தொலை பேசி இணைப்பைத்  துண்டித்தான் வில்லியம்.

    அவன் கடைசியாகச் சொன்னதன் பொருள் இப்பொழுதுதான் நார்மாவிற்கு புரிந்தது.  டேனியல் அவள் மகன் இல்லை என்றா சொன்னான்?  ஐயோ, அதை நினைத்தால் அவள் இதயமே வெடித்துவிடும் போலிருந்தது.  டேனியலின் துறுதுறுப்பான முகம் கண் முன் வந்தது.  கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தும் அதற்கிடையே டேனியலின் புன்னகை நிறைந்த முகம் தெரிந்தது.  இது போன்ற செய்தியைக் கேட்கும் நிலைக்குத் தன்னைத் தள்ளிய கணவன் கார்ல் மீது கோபம் கோபமாக வந்தது.

    கார்ல், நகரில் உள்ள ‘சீமென்ஸ்’ என்னும் ஜெர்மன் பன்னாட்டு நிறுவனத்தில் பணியாற்றிக்கொண்டிருந்தான். மின்னணுவியல் கருவிகளின் வர்த்தகப் பிரிவில் அவனுக்கு வேலை என்பதால் பெரும்பாலும் ஜெர்மனியில் உள்ள தலைமை அலுவலகத்திற்கும் பிற நாடுகளுக்கும் சென்று வருவது கார்லின் பொறுப்பாக இருந்தது.  மாதத்தில் பாதிக்கும் மேலான நாட்கள் வேலை காரணமாக பயணம் செய்வதிலேயே கழிந்துவிடும். அவனது முன்னோர்கள் ஜெர்மனியில் இருந்து வந்து குடியேறியவர்கள்.  அதனால் கார்லுக்கு ஜெர்மன் மொழியில் நன்கு பேசவும் தெரியும் என்பது அவன் வேலையில் அதிவேகமாக வளர உதவியிருந்தது. நார்மா, நகரில் உள்ள கிறிஸ்டோஃபர் நியூ போர்ட் பல்கலைக் கழகத்தில் நிர்வாகப் பிரிவில் வேலை செய்து கொண்டிருந்தாள்.

    அவர்களுக்கு திருமணமாகி இருபது ஆண்டுகள் உருண்டோடி விட்டது. பிள்ளைகளில் பெரியவள் மகள் டெப்ரா ஒரு தனியார் பள்ளியில் இறுதியாண்டு படித்துக்கொண்டிருந்தாள்.  மகன் டேனியல் மகளை விட நான்கு வயது இளையவன்.   அவனும் டெப்ரா படிக்கும் அதே தனியார் பள்ளியில் நடுநிலை வகுப்பில் படித்துக் கொண்டிருந்தான்.  நார்மாவிற்கு தனது பிள்ளைகளை புகழ் பெற்ற ‘ஐவி லீக்’ கல்லூரிகளில் படிக்க அனுப்ப வேண்டும் என்று விருப்பம்.  கார்லின் ஆண்டு வருமானம் ஆறு இலக்கங்களில் இருந்ததால் அவளது கனவினை செயல்படுத்த முடிந்தது.  புகழ் பெற்ற பல்கலைக் கழங்களில் படிக்க வைப்பதற்கு தயார்ப் படுத்தும் விதமாக பிள்ளைகளை நல்ல தனியார் பள்ளியில் சேர்க்க முடிந்தது. இதோ, அடுத்த ஆண்டு டெப்ராவிற்கு கார்நெல் பல்கலை கழகத்தில் சேர அனுமதி கிடைத்துவிட்டது.  எல்லாம் அவள் நினைத்த வண்ணம், திட்டமிட்ட வண்ணம் வாழ்க்கையில் நடப்பதாக நினைத்த பொழுது எதிர்பாராத அதிர்ச்சி அளிக்கும் நிகழ்வும் நடந்தது.

    எதிர்பாராதது என்று சொல்வது சரியாக இருக்காது.  அவளுக்கு கார்லின் நடவடிக்கையில் மாறுதல் தெரிந்தது.  சென்ற ஆண்டு பதவி உயர்விற்குப் பின்பு அவனது வெளிநாட்டுப் பயணங்கள் அதிகரித்தது.  வீட்டிற்கு வருவது குறைந்தது.  இருந்த நாட்களிலும் முன்பு போல பிள்ளைகளை அழைத்துக் கொண்டு புஷ் கார்டன், கொலோனியல் வில்லியம்ஸ்பர்க், விர்ஜீனியா பீச் என ஊர் சுற்றுவதைக் குறைத்துக் கொண்டான்.  திரைப்படம், உறவினர் வீடு, விருந்துகள் எனக் குடும்பத்துடன் எங்கும் செல்வதில் ஆர்வம் காட்டவில்லை.  இதைப்பற்றி நார்மா ஏதேனும் கேட்டால், தனது பதவி உயர்விற்குப் பிறகு பணிச் சுமை அதிகரித்து விட்டது, நிற்கவும் நேரம் இல்லை என்பது போன்ற பதில் வரும்.  அத்துடன் அவள் பொறுப்பாகக் குடும்பத்தைப் பார்த்துக் கொண்டு, பிள்ளைகளையும் வளர்த்து வருவது அவனுக்கு வேலையில் கவனம் செலுத்த உதவியாக இருக்கிறது என்று நன்றி சொல்லுவான்.  மேலும் இதுபோன்று கடுமையாக உழைத்தால் விரைவில் ஜெர்மனியில் உள்ள தலைமை அலுவலகத்தில் நிர்வாகத் துறையில் பணி செய்ய நல்ல வாய்ப்பும் இருக்கிறது என்பான்.

    அவளுக்கு அதில் அவ்வளவாக விருப்பம் இல்லாவிட்டாலும், அவன் வீட்டில் இருக்கும் ஓரிரு நாட்களில் எப்பொழுதோ நடக்கப் போவதைப் பற்றி விவாதிக்க விரும்பியதில்லை.  அந்த சமயம் வரும் பொழுது அதைப்பற்றி கவலைப் பட்டுக் கொள்ளலாம் என அமைதியாக இருந்து விடுவாள்.  டெப்ராவின் பள்ளி நாட்கள் முடிய இரண்டு மாதங்கள் இருக்கும் பொழுது நார்மாவிடம் இருந்து திருமணமுறிவு கேட்டு கார்ல் நீதிமன்றம் வழியாக அனுப்பிய அறிவிப்பு கிடைத்தது. ‘அவளுடன் இனி வாழ விருப்பம் இல்லை’ என்பது அவன் கூறிய காரணம்.  வாழ்வின் மத்திய வயதில் சிலருக்கு வரும் ‘மிட் லைஃப்  கிரைசிஸ்’ என்னும் பைத்தியக்காரத்தனம் இவனுக்கும் வந்துவிட்டது போலிருக்கிறது என்று நார்மா எண்ணினாள். கடைசியாக கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு விடுமுறைக்கு வீடு வந்து சென்றவன் அதுவரை மீண்டும் வீட்டிற்கு வராத காரணமும் புரிந்தது. இந்த முறை அவன் வீட்டிற்கு வந்து நான்கு மாதங்கள் போலாகிறது.

    முதலில் இதை அவள் பிள்ளைகளிடம் சொல்லி அவர்களது மன அமைதியைக் குலைக்க விரும்பவில்லை. கார்லைத் தொடர்பு கொள்ள அவள் செய்த எந்த முயற்சியும் பலிக்கவில்லை.  அவளது தொலை பேசி அழைப்பு, மின்னஞ்சல் என அனைத்தையும் தவிர்த்தான்.  இனி நீதி மன்றம் வழியேதான் அவர்கள் தொடர்பு என்பது போலிருந்தது அவனது நடவடிக்கை.  வேறு வழியின்றி கார்லுடன் பணியாற்றும், அவனுடன் பெரும்பாலான பயணங்களில் துணையிருக்கும் ஆண்ட்ரூவைத் தொடர்பு கொண்டாள்.  அவன் ஒருவாறு மென்று விழுங்கி சொன்ன செய்தி மேலும் அதிர்ச்சி அளித்தது.  கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாகவே கார்லுக்கு ஜெர்மனியில் ஒரு தோழி இருப்பதாகத் தெரிந்தது.  அதை ஆண்ட்ரூ சாதாரண நட்பு என நினைத்ததாகச் சொன்னான்.  ஆனால், கார்ல் இப்பொழுது ஜெர்மனியில் உள்ள தலைமையகத்தில் வேறு வேலை ஒன்றைத் தேடிக்கொண்டு இப்பொழுது அந்தப் பெண்ணுடனேயே வசித்து வருவதாகச் சொன்னான்.  அவனுக்கு மீண்டும் அமெரிக்காவிற்கு வரும் எண்ணம் இருப்பதாகத் தெரியவில்லை, திருமண முறிவிற்குப் பிறகு அந்தப் பெண்ணையே மணக்க எண்ணியிருக்கலாம் எனவும் சொன்னான்.

    இந்தப் பிரச்சனைக்கு வேறு முடிவில்லை என்பது நார்மாவிற்கு புரிந்தது. பிள்ளைகளிடம் சொல்லிவிட்டு தனது பள்ளிநாட்களில் உடன் படித்த, இப்பொழுது திருமணமுறிவு வழக்குகளை கையாள்வதில் சிறந்தவன் எனப் பெயர் வாங்கிய வில்லியமைத் தொடர்பு கொண்டாள்.  தானும் திருமண முறிவிற்கு சம்மதிப்பதாகவும், குழந்தைகளை வளர்ப்பதற்கு ஆதரவாக தந்தை என்ற முறையில் கார்லிடம் இருந்து மாதா மாதம் பணம் ஒழுங்காக வருவதற்கு ஏற்பாடு செய்வதை மட்டுமே அவள் விரும்புவதாகத் தெரிவித்தாள்.  கார்ல் மீது ஏற்பட்ட வெறுப்பில், அவன் செய்த நம்பிக்கைத் துரோகத்தில் கொதித்துப் போன நார்மாவிற்கு கார்லிடம் உதவித் தொகை எதிர்பார்ப்பது கொஞ்சமும் பிடிக்கவில்லை.  ஆனால் டெப்ராவின் கல்லூரிக்காகும் கல்விச் செலவையும், டேனியல்லின் தனியார்ப் பள்ளி கல்வியையையும் அவளது வருமானத்தில் மட்டுமே சமாளிக்க முடியாது.  அத்துடன் தந்தையின் கடமையில் இருந்து கார்ல் எளிதாகத் தப்பி விடுவதையும் அவள் விரும்பவில்லை.  பிள்ளைகளின் நல்ல எதிர்காலத்திற்கு அவள் இதைச் செய்தே ஆக வேண்டும்.

    வழக்கு நீதிமன்றத்திற்கு வந்தது.  நீதிமன்றத்திற்கு வந்த கார்ல் நீதிபதியிடம் மகளுக்கு பதினெட்டு வயது தாண்டிவிட்டதால் அவளது செலவிற்கு இனி தான் பொறுப்பேற்க முடியாது என்று தெரிவித்தான்.  நார்மாவின் வழக்கறிஞர் வில்லியம் நார்மாவின் காதில் மெதுவாக, “இதுதான் கார்லின் திட்டம் போலிருக்கிறது.  இது போன்று தவிர்ப்பதற்காகவே இதுவரைப் பொறுத்திருந்து, மகளுக்கு பதினெட்டு வயது தாண்டியதும் அத்துடன் கையைக் கழுவிக் கொள்வதற்கு திட்டமிட்டு, இப்பொழுது திருமண முறிவிற்கு கார்ல் விண்ணப்பித்திருக்கிறான்,” என்றான்.  நார்மா பல்லைக் கடித்து கோபத்தை அடக்கிக் கொண்டாள். ஆனால் கார்ல் அடுத்து சொன்னதை நார்மாவும் வில்லியமும் கொஞ்சமும் எதிர்பார்க்காமல் அதிர்ச்சி அடைந்தார்கள்.

    கார்ல் மிக அமைதியாக நீதிபதியிடம், டேனியல் தனக்குப் பிறந்தவன் இல்லை.  தனது சாயல் அவனிடம் சிறிதும் இல்லை.  டேனியல் தன் மகன்தானா என்றே சந்தேகமாக இருப்பதால் அவனை வளர்ப்பதற்கு தன்னால் உதவித் தொகை தர இயலாது என்றான்.  அத்துடன் நார்மா தனக்கு துரோகம் செய்திருக்கிறாள் என்ற அடிப்படையில்தான் அவனுக்கு திருமணமுறிவு பெறவேண்டும் என்ற எண்ணமே எழுந்ததாகவும் சொன்னான். நார்மா தன் மேல் விழுந்த பழியை எண்ணிக் கொதித்துப் போனாள். சாடாரென இருக்கையை விட்டு எழுந்தவளை வில்லியம் கையைப் பிடித்திழுத்து இருக்கையில் அமர்த்தினான்.  அவள் உதடு துடித்தது.  அவள் கையை அழுத்தி அமைதியாக இரு என்று சைகை செய்தான்.   கார்லின் அவதூறுக்குப் பதறிய நார்மாவை நீதிபதி திரும்பிப் பார்த்துவிட்டு, மீண்டும் கார்லைத் திரும்பிப் பார்த்தார்.  சிறிது மௌனத்திற்குப் பிறகு, கார்லிடம் அவன் என்ன சொல்கிறான் என்று புரிந்துதான் பேசுகிறானா என்று கேட்டார்.  கார்ல் அழுத்தம் திருத்தமாக, தெளிவாக தான் புரிந்துதான் பேசுவதாகக் கூறினான். நீதிபதி இப்பொழுது வில்லியமைத் திரும்பிப் பார்த்தார்.  இதற்குள் அடுத்து செய்ய வேண்டியதை முடிவு செய்திருந்த வில்லியம், டி.என்.ஏ. மரபணுச் சோதனை செய்வதற்கு நார்மா தயாராக இருப்பதைத் தெரிந்து கொண்டு நீதிபதியிடம் அவள் விருப்பத்தைத் தெரிவித்தான்.  பரிசோதனை முடிவு வரும் வரை வழக்கும் தள்ளி வைக்கப் பட்டது.

    சோர்ந்து போய் வீடு வந்த நார்மாவிற்கு இதைப் பிள்ளைகளிடம் எப்படி சொல்வது என்றே தெரியவில்லை.  அவள் ஒரு வழியாகச் சொல்லி முடித்ததும், பிள்ளைகள் இருவரும் அதிர்ச்சி அடைந்தார்கள்.  டேனியல் கண்கள் கலங்கி அழுதவாறு தன் அறைக்கு ஓடிவிட்டான்.  பதினான்கு வயது சிறுவனுக்கு இதைவிட அதிர்ச்சி இருக்க முடியாது.  பிள்ளைகளைச் சமாதனப் படுத்தவோ, மற்ற வேலைகளைச் செய்வோ திறனின்றி நார்மா படுக்கையில் சாய்ந்தாள்.  அதிர்ச்சியில் அழ முடியாமல் அவள் மனம் வெறுமையாக இருந்தது.  தொடர்ந்து சில நாட்கள் நார்மாவும் பிள்ளைகளும் இயந்திரம் போல இயங்கி வாழ்க்கையை ஓட்டினார்கள்.

    இப்பொழுது வில்லியமின் தொலைபேசி உரையாடலுக்குப் பிறகு,  அவளுக்குத் தெரியாமலே டேனியல் தனது மகன்தானா என்று சந்தேகப்பட்டு கார்ல் டி.என்.ஏ. மரபணுச் சோதனை செய்திருப்பான் போலிருக்கிறது என்று நார்மாவிற்கு தோன்றியது.  அதுதான் அவ்வளவு ஆணித்திரமாக நீதிமன்றத்தில் குற்றம் சாட்டியிருக்கிறான் போலிருக்கிறது.  ஆனால் டேனியல் அவள் மகனும் இல்லை என்ற இந்த மரபணுச் சோதனையின் முடிவை அவனும் எதிர்பார்த்திருக்க வாய்ப்பில்லை.  

    கடந்து முடிந்தவைகளைப் பற்றிய சிந்தனையில் இருந்த நார்மாவை கார் ஹாரனின் ஒலி நினைவுலகதிற்கு கொண்டு வந்தது.  அருகில் வந்து நின்ற வில்லியமின் வண்டியின் பின் இருக்கைகளில் டெப்ராவும், டேனியலும் அமர்ந்திருந்தார்கள்.  அவர்களை அவனே அழைத்து வந்துவிட்டான்.  தன் காரின் கண்ணாடிகளை ஏற்றிவிட்டு, கதவையும் பூட்டிவிட்டு நார்மா வில்லியமிற்கு அருகில் வந்து உட்கார்ந்தாள்.  பிள்ளைகளைத் திரும்பிப் பார்த்து புன்னகைப்பதைத் தவிர்த்தாள்.  அது அவளது அழுத முகத்தை அவர்களிடம் இருந்து மறைக்க அவள் செய்த முயற்சி.  ஆனால் அவர்கள் அவள் முகத்தையே பார்ப்பது அவளுக்குப் புரிந்தது.  வில்லியமின் காரில் பீட்ஸா  மணம் வந்தது.  அவனே அவளது நிலையை உணர்ந்து கொண்டு, அவர்களுக்கு இரவு உணவும் வழியில் வாங்கி வந்திருந்தான்.  அவனுக்கு எப்படி நன்றி சொல்வதெனப் புரியாமல் கலங்கிய கண்களுடன் அவன் முகத்தை நிமிர்ந்து பார்த்தாள் நார்மா.  அவன் அமைதியாக அவள் தோளை ஆதரவாகத் தட்டிக் கொடுத்துவிட்டுக் காரைக் கிளப்பினான்.

    அன்றிரவு பிள்ளைகளின் பொறுமையை சோதிக்காமல், நார்மா ஒரு வழியாக டி.என்.ஏ. மரபணு சோதனை முடிவுகளை  விசும்பிக் கொண்டே மெதுவாகத் தெரிவித்தாள்.  டேனியலின் முகத்தைவிட்டு அவள் கண்களை நார்மாவால் அகற்ற முடியவில்லை.  செய்தியைக் கேட்டதும் அவள் மடியில் முகம் புதைத்து டேனியல் அழுதான்.  நார்மாவும் அவனுடன் சேர்ந்து அழுதாள்.  டெப்ரா அருகில் வந்து அமர்ந்து டேனியலின் முதுகை வருடிக் கொடுத்துக் கொண்டே இறுகிப் போன குரலில், “இப்பொழுது என்ன செய்வது வில்லியம்?” என்றாள்.

    “உன் தந்தையை இனி குழந்தை வளர்ப்பில் பங்கேற்க சொல்லி உதவித் தொகை கேட்டுக் கட்டாயப் படுத்த முடியாது …” என்று தொடங்கிய வில்லியமை டெப்ரா இடைமறித்து, “அவர் பணம் எங்களுக்குத் தேவையில்லை, எங்களால் எங்கள் சக்திக்கு ஏற்றவாறு வாழமுடியும்,” என்று நறுக்கெனப் பதில் சொன்னாள்.

    “டேனியல் என் தம்பி இல்லை என்றால், அவன் யார்? அவன் பெற்றோர்கள் யார்? பிறந்த பொழுது குழந்தை மாறியிருக்கலாம் என்றால் என் தம்பியாக இருப்பவன் எங்கே இருப்பான்?” என்றாள்.

    “அதை டேனியல் பிறந்த மருத்துவ மனையில் இருந்து ஆரம்பித்து துப்பு துலக்க வேண்டும், அந்த சமயம் பிறந்த குழந்தைகளை மரபணு சோதனைக்கு உட்படுத்தி தெரிந்து கொள்ளலாம், நான் ஏற்பாடு செய்கிறேன்,” என்று சொல்லிவிட்டு வில்லியம் விடை பெற்றுக் கொண்டான்.  நார்மாவின் காரையும் தன்  நண்பன் உதவியுடன் அவள் வீட்டிற்கு கொண்டு வந்து நிறுத்திவிட்டுப் போனான்.

    அவன் சொன்னபடியே அடுத்த நாளே மருத்துவமனை நிர்வாகத்தினரைச் சந்திக்க ஏற்பாடு செய்தான்.  மருத்துவமனை குழந்தை மாறியிருக்கும் என்ற செய்தியை முதலில் வன்மையாக, ஆணித்திரமாக மறுத்தது.  பின்பு நீதிமன்ற வழக்கின் படி செய்த மரபணு சோதனை என்பதினால் தயக்கத்துடன் தகவல்களை ஆராய அனுமதி அளித்தது.  டேனியல் பிறந்த அன்றே பிறந்த, ராபர்ட் என்ற சிறுவனின் தகவல்கள் மேலும் பொருந்தி அவனைத்  தேடிச் சென்றார்கள்.  ராபர்ட்டின் குடும்பம் அருகில் உள்ள யார்க் டவுனில் தான் வசித்து வந்தனர்.  சந்தேகம் என்ற ஒன்று தோன்றிவிடவே அதைத் தீர்க்க அவர்களும் தயாரானார்கள்.  மீண்டும் மரபணு சோதனைகள், மீண்டும் அவற்றின் முடிவுகள்.  இந்த முறை ராபர்ட்தான் நார்மாவின் குழந்தை என்றும், டேனியல் ராபர்ட் இடத்தில் இருந்திருக்க வேண்டியவன் என்பதும் தெளிவானது.  சிறுவர்கள் இருவருமே முடிவைக் கேட்டு அலறினார்கள்.

    “அம்மா, அம்மா என்னை அனுப்பிவிடாதீர்கள்” என்று ஒருபுறம் அழுதான் டேனியல்.  “அம்மா, நான் உங்களுடன்தான் இருப்பேன், நான் அவர்கள் வீட்டிற்கு போக மாட்டேன்,” என்று ராபர்ட்டும் தன் அம்மாவின் கைகளை இறுக்கிப் பிடித்துக் கொண்டான்.  இரண்டு குடும்பங்களும் இரண்டு சிறுவர்களையுமே  தங்களுடன் வைத்துக் கொள்ளவே  விரும்பினார்கள். ஆனால் முடிவில் சிறுவர்களின் முடிவுப்படி அவரவர் வளந்த இடத்திலேயே அவர்கள் தொடர்ந்து வளரட்டும், அவ்வபொழுது பெற்றோர்கள் வந்து மற்ற குழந்தையைப் பார்த்து செல்லலாம் என்ற முடிவுக்கு ஒப்புக் கொண்டார்கள்.

    “அம்மா, நீங்கள் என்னை அனுப்பிவிடுவிடுவீர்களோ என்று பயந்தேன்,” என்று நார்மாவைக் கட்டிக் கொண்டான் டேனியல்.  நார்மா அவன் தலையைக் கோதியபடி, “நீ என்றுமே என் மகன்தான் டேனியல், நம்மைப் பொருத்தவரை நான் உன் அம்மா, நீ என்றும் என் அன்பு மகன்தான்” என்றாள்.  “நீ என்றுமே ….என்றுமே என் தம்பிதான் டேனியல், உண்மை என்ன என்று தெரிந்து கொண்டோம், அவ்வளவுதான்” என்று டேனியலை அணைத்துக் கொண்டாள் டெப்ரா.  
    __________________________________

    Share
  • மௌன ராகம்

    புவனா கோவிந்த்

     

    1962

    “மைதிலி, பூ இப்படி தழைய தழைய வெச்சா உங்க அண்ணாவுக்கு பிடிக்காதும்மா, மடிச்சு வெய்யி” 

    “சும்மா அண்ணா அண்ணானு பூச்சாண்டி காட்டாதே மன்னி… நேக்கு தெரியும் எப்படி வெக்கணும்னு. நான் அழகா இருக்கேனு நோக்கு பொறாமை..ஹம்ம்” என கழுத்தை ஒடித்து சென்றாள் மைதிலி. 

    அதே நேரம் அறையில் இருந்து வெளியே வந்த அவளின் அண்ணன் கிருஷ்ணன் “என்ன மைதிலி ரெடியா? உன்ன காலேஜ்ல விட்டுட்டு நான் ஆபீஸ் போணும்”.

    “இதோ ரெடிண்ணா” என்றபடி கைபையை எடுத்து கொண்டு வந்தாள். 

    ஒரு கணம் அவளை உற்று நோக்கியவன் “ஏய் மைதிலி நில்லு, என்னடி இது வேஷம் கட்றவ மாதிரி ஜடை தாண்டி பூ தொங்கறது. என்ன பழக்கம் இது?” என கோபமாய் கேட்க,

    அண்ணனின் கோபத்தை அறிந்த மைதிலி “இல்லைணா…நான் அப்பவே சொன்னேன்…மன்னி தான்…” எனவும், மன்னி என்றழைக்கபட்ட ராதா செய்வதறியாது திகைத்தாள். 

    ராதா உண்மையை கூற முயல, கை உயர்த்தி பேசவேண்டாம் என்பது போல் முறைத்த கிருஷ்ணன் “கூத்தாடி குடும்பம் தான உன் மன்னியோடது, வேற எப்படி இருக்கும் புத்தி. நீ சரியா போட்டுண்டு வா” என தங்கையை ஒட்டி பேசினான், புது மனைவி என்ற கரிசனம் கூட இல்லாமல். 

    தன் பாட்டனார் மேடை நாடக நடிகராய் இருந்தவர் என்பதை குத்தி காட்டி தன் கணவன் பேசியதும், நடிகர் என்றால் கேவலமா என கேட்க துடித்த நாவை கட்டுப்படுத்தினாள் ராதா. 

    சீர் செனத்தி எதுவும் இன்றி உறவு என்பதால் மட்டும் இந்த வீட்டுக்கு வாக்கப்பட்டு வந்த இந்த சில மாதங்களில் எல்லோரின் உதாசீனமும் ராதாவுக்கு பழகித்தான் போனது. 

    ஆனாலும் இது போன்ற உண்மை சிறிதுமற்ற குற்றசாட்டுகளின் போது மனம் மிகவும் வேதனையுற்றது. 

    கிருஷ்ணனின் வசதியான மாமன் மகள் ரஞ்சனி இந்த வீட்டுக்கு மருமகளாய் வர இருந்ததை தடுத்த அவன் தந்தை. தூரத்து உறவான ராதாவை குடும்பத்துக்கு ஏற்ற மருமகள் என கொண்டு வந்தது எல்லோர் மனத்திலும் ராதாவின் மேல் நிரந்தர கோபத்தை ஏற்படுத்தி இருந்தது. 

    அதிலும் ரஞ்சனியிடம் சிறு வயது முதல் உற்ற தோழி போல் இருந்த மைதிலி சமயம் கிடைக்கும் போதெல்லாம் தன் அண்ணி ராதாவை பழி வாங்குவாள். 

    “கொண்டவன் துணை இருந்தால் கூரை ஏறி கத்தலாம்” அதுவே இல்லை எனும் போது வேறு என்ன என ராதாவும் அப்படியே வாழப் பழகி விட்டாள். 

    மற்றொரு நாள்….

    “சொன்னா கேளு மைதிலி, இவ்ளோ எண்ணை விடாதே… உங்கண்ணாக்கு பிடிக்காது. இல்லேனா உன் சிநேகிதி சொல்லி குடுத்ததை உனக்கு அளவா செய்துக்கோ. உங்க அண்ணாக்கு நான் தனியா சமைச்சுடறேன்” என ராதா கூற, 

    “இங்க பாருங்க மன்னி… இதொண்ணும் உங்காத்துல இருந்து கொண்டு வந்ததில்ல, எங்க அண்ணா சம்பாதிக்கற காசுல வாங்கினது. என் இஷ்டத்துக்கு செய்வேன். இன்னைக்கி நான் செய்யறது தான் அண்ணா சாப்பிடணும், எனக்கு தெரியாம நீங்க சமைச்சா அண்ணாகிட்ட இல்லாதையும் பொல்லாததையும் சொல்லி சிக்க வெப்பேன்” என்றாள் மிரட்டலாய். 

    செய்வதறியாமல் மௌனமானாள் ராதா. தாயில்லா பெண் என தன் மாமனாரும் கணவனும் சேர்ந்து மைதிலிக்கு செல்லம் கொடுத்து கெடுக்கிறார்களே, போகிற இடத்தில என்ன சொல்வார்களோ என வருந்தினாள். 

    அன்று மதியம்…

    “என்னடி கருமம் இது… வாய்ல வெக்க வெளங்கல… ஒரே காரம் புளிப்பு த்தூ. இப்படி எண்ணைய கொட்டினா சீக்கரம் பரலோகம் போக வேண்டியது தான். எல்லாத்தையும் நீயே கொட்டிக்கோ” என எழுந்த கணவனை “இல்லங்க… அது … ” என ராதா விளக்கம் சொல்ல வர, 

    அதற்குள் மைதிலி “நான் அப்பவே சொன்னேண்ணா… அதுக்கு மன்னி என் ஆத்துகாரர் சம்பாதிக்கறார் நான் கொட்றேன் எண்ணைய நீ யார் கேக்கனு சொல்றா” என வழக்கம் போல் பழியை ராதாவின் போல் போட்டாள். 

    “காசு பணத்த சம்பாதிச்சா தானே அதோட அருமை தெரியும், மூக்கு பிடிக்க மூணு வேளையும் சாப்டுட்டு தூங்கற ஜென்மங்களுக்கு என்ன சொன்னாலும் புரியாது” என தன் மனைவி மீதே குற்றம் சாட்டினான் கிருஷ்ணன். 

    தான் என்ன சொன்னாலும் தன் கணவன் நம்பபோவதில்லை என உணர்ந்ததினால் எப்போதும் போல் மௌனமானாள் ராதா.

    __________________________________

     

    1972

    “மைதிலி இந்த பைல பழம், பூ, பலகாரம் எல்லாம் வெச்சுருக்கேன், துணிக கூட சேக்காம தனியா வெச்சுக்கோ”

    “எதுக்கு மன்னி இப்படி அடுக்கறேள்? எங்க மாமி சும்மாவே ‘பொன்ன வெக்கற எடத்துல பூ’ங்கறது உங்காத்து மந்திரமானு கேலி பேசறா” என நொடித்தவள், பழங்கள், பூ, இனிப்பு இருந்த பையை எடுத்து வெளியே வைத்தாள். 

    “மைதிலி கிளம்பிட்டயா” என கிருஷ்ணமூர்த்தி வர “போலாம்’ண்ணா” என்றாள். 

    “என்னமா இது வெறும் துணிப்பை தான் இருக்கு போல, தோட்டத்துல இருந்து பழம் எல்லாம் கொண்டு வர சொன்னனே, என்ன ஆச்சு ராதா?” என வழக்கம் போல் மனைவியை முறைக்க, 

    ராதா ஏதோ சொல்ல முற்படுமுன் “நான் கேட்டே’ண்ணா, மன்னி அவா அம்மா ஆத்துக்கு எடுத்து வெச்சுட்டாளாம்” என கூசாமல் பழி சுமத்தினாள் மைதிலி. 

    எரித்து விடுவதை போல் மனைவியை பார்த்தான் கிருஷ்ணன். 

    சில மாதங்களுக்கு பின்…

    “மைதிலி, நீ ஏம்மா இதெல்லாம் செய்யற. கல்யாணம் ஆகி ரெம்ப நாள் கழிச்சு இப்ப தான் உண்டாகி இருக்க, ஓய்வா இரு. உனக்கு மாங்காதானே வேணும், நான் நறுக்கி தரேன் தள்ளு” என ராதா உண்மையான அக்கறையுடன் கூற,

    “ரெம்ப அக்கறை இருக்கறா மாதிரி வேஷம் போடாதேள் மன்னி. நீங்க பத்தாம் மாசமே பெத்துகிட்டதை மறைமுகமா குத்தி காட்றேளா? வருசத்துக்கு ஒண்ணா நாலு பெத்துகிட்டத தவிர என்ன சாதிச்சு இருக்கீங்க… ஹ்ம்ம்” என விஷமாய் வார்த்தைகளை கக்கினாள். 

    “ஏன் மைதிலி இப்படி பேசற. உன் நல்லதுக்கு தானே…”

    “ஆஹா… சினிமால நடிக்கரவா தோத்து போய்டணும் உங்கள்ட்ட…. என் ஆத்துக்காரர் என் மேல உசுரா இருக்கார்னு உங்க பொறாமயால தான் நேக்கு கரு தங்காம இருக்கு. இன்னும் உங்கள வேலை வேற வாங்கினா சபிச்சுடமாட்டீங்க… ஹ்ம்ம்” என சலித்து கொண்டவளை, ஒரு கணம் மௌனமாய் பார்த்த ராதா, அந்த இடத்தை விட்டு அகன்றாள். 

    சற்று நேரத்தில் “ராதா… ஏய் ராதா… என்ன பண்ணிட்ருக்க” என்ற கணவனின் கத்ததில் நடந்ததை யூகித்தவளாய் பெருமூச்சுடன் முன்னறைக்கு வந்தாள் ராதா.

    மௌனமாய் வந்து நின்றவளை முறைத்த கிருஷ்ணன் “ஏண்டி, உன்னால இந்த மாங்காய நறுக்கி தர முடியாதா? பாரு மைதிலி விரல வெட்டிண்டு இருக்கா” என கோபத்தில் கத்தினான். 

    மைதிலி வழக்கம் போல் “நான் கேட்டேண்ணா… மன்னி நேக்கு நெறைய வேலை இருக்குனுட்டா” என வருந்துவது போல் பாவனை செய்தாள். 

    “என்னடி முழிச்சுண்டு நிக்கற, வாய்ல என்ன கொலுகட்டயா பதில் சொல்லு” என கிருஷ்ணன் கேட்க, தான் பதில் சொல்வதால் எதுவும் மாறபோவதில்லை என புரிந்தவளாய் உணர்ச்சியற்ற முகத்துடன் நின்றாள் ராதா. 

    “அப்பா, அத்தை பொய் சொல்றாப்பா. அம்மா நறுக்கி தரேன்னு தான் சொன்னா” என ராதாவின் கடைக்குட்டி வைஷ்ணவி சொல்ல, 

    “கேட்டியாண்ணா, உன் பொண்ணு கூட அவ அம்மாவுக்கு சாதகமாத்தான் பொய் பேசறா… இதுவே நம்ப அம்மா உயிரோட இருந்துருந்தா… ” என இல்லாத கண்ணீரை மறைக்க கண்ணை கசக்கினாள் மைதிலி.

    கிருஷ்ணனின் கோபத்தை தூண்ட அது போதுமாய் இருந்தது “வாய மூடு கழுத… மொளச்சு மூணு இல விடல அதுக்குள்ள பொய் சொல்றியா” என மகளை அடித்து துவைத்தான். அதை தடுக்க சென்ற ராதாவின் மேலும் சில அடிகள் விழுந்தன.

    _________________________________

     

    2012

    காலில் முக்காலி இடித்து கொண்டதில் நகம் பெயர்ந்து சுரீல் என வலி கிளம்ப “ஸ்ஸ்…” என முனகியவர் “யார் இந்த முக்காலிய இங்க போட்டு தொலைச்சது” என்றார் கிருஷ்ணன் எரிச்சலுடன். 

    அதே சமயம் வந்த மைதிலி “நான் அப்பவே சொன்னேன்’ண்ணா மன்னி தான்….” என தொடங்கியவள், தன் அண்ணனின் பார்வையில் மாற்றத்தை உணர்ந்து, தான் செய்த தவறு புலப்பட, என்ன செய்வதென தெரியாமல் நிறுத்தினாள். 

    ரேழியில் இருந்து வந்த கைதட்டல் ஒலி கேட்டு மைதிலியும் கிருஷ்ணனும் திரும்பி பார்த்தனர். அங்கு ராதாவின் இளைய மகள் வைஷ்ணவி நின்றிருந்தாள். 

    “சபாஷ் அத்தை… நீ இப்படி வாயடைச்சு போய் நிக்கறது பாக்க கண் கொள்ளா காட்சியா இருக்கு” என்றவள் தன்  தந்தை புறம் திரும்பி “ஏம்ப்பா நீங்க கூட வாயடைச்சு போய் நிக்கறேள். உங்க அருமை தங்கையோட பேச்சை கேட்டுண்டு, தொண்ட கிழிய அம்மாவையும் எங்களையும் வெரட்டுவேளே, இப்ப என்ன ஆச்சு… பேசுங்கப்பா  பேசுங்கப்பா” என கோபமாய் தன் தந்தையை பற்றி உலுக்கினாள் வைஷ்ணவி. 

    தங்கை மேல் உள்ள பாசத்தில் தன்னை நம்பி வந்த ஜீவனை வதைத்ததை முதல் முறையாய் உணர்ந்தான் கிருஷ்ணன். ஐம்பது வருட  இல்வாழ்க்கையின் தருணங்கள் மனதில் படமாய் ஓட, ராதாவின் அன்பும் சகிப்புதன்மையும், காதலும் தியாகமும், உழைப்பும் பொறுப்பும் கண் முன் விரிந்தது. 

    அந்த புரிதலோடு சேர்ந்து கண்ணில் நீரும் பெருகியது. பத்து நாட்களுக்கு முன் மனைவியின் உடலுக்கு சிதை மூட்டிய போது கூட இரும்பாய் நின்றவர், இன்று உணர்ந்த இழப்பில் கட்டுப்படுத்த இயலாமல் ராதாவின் மாலையிட்ட படத்தின் முன் மண்டியிட்டு கதறினார்.

    ஆம்… ஐம்பது வருடங்கள் கிருஷ்ணனின் மனைவியாய், அந்த வீட்டின் மருமகளாய், நான்கு பிள்ளைகளுக்கு தாயாய் தன் கடமையை செவ்வனே செய்த நிறைவில் எழுபது வயதில் இயற்கை மரணம் எய்தினாள் ராதா. 

    தந்தையின் கதறலில் பிள்ளைகள் நால்வரும் சிலையாய் நின்றனர். அதுவரை பெற்றவரை  சிம்ம சொப்பனமாய் மட்டுமே பார்த்து பழகியவர்களுக்கு அவரின் இந்த நிலை காண சகியாமல் கண்ணில் நீர் கோர்த்தது. 

    முதலில் சுதாரித்தவன் மூத்தவன் ரவீந்திரன் தான். “நீ சும்மாவே இருக்க மாட்டியா வைஷு” என தங்கையை கடிந்து கொண்டான். 

    “அப்பா என்னப்பா இது. அவ தான் புரியாம ஏதோ பேசறானா அதை போய் நீங்க பெருசா எடுத்துகிட்டு… ப்ளீஸ்ப்பா, அழாதீங்கோ” என சமாதானம் செய்தான். 

    “அப்பா சாரி’ப்பா, நான் உங்கள அழ வெக்கணும்னு அப்படி பேசலப்பா. அம்மா இல்லாம போனப்புறம் கூட அத்தை எப்பவும் போல பேசவும் என்னால தாங்கமுடியாமத்தான் அப்படி சொல்லிட்டேன்’ப்பா. என்னை மன்னிச்சுடுங்கப்பா… ப்ளீஸ்’ப்பா” என கெஞ்சலில் தொடங்கி அழுகையில் முடித்தாள் வைஷ்ணவி. 

    ஒன்றும் பேசாமல் மகளை அணைத்து கொண்டார் கிருஷ்ணன். கதறல் நின்றிருந்த போதும் கண்ணில் நீர் வற்ற மறுத்தது அவருக்கு. 

    அந்த நிலையில் தன் தமயனை பார்த்ததும் “இதற்கெல்லாம் தான்தானே காரணம். பெற்றவளை இழந்த பின் எல்லாமுமாய் இருந்த அண்ணன், மனைவியின் பேச்சை கேட்டு தன்னை வெறுத்து விடுவானோ என்ற எண்ணத்தில் தவறு செய்து விட்டோமே” என உறுத்த, கிருஷ்ணனின் காலில் மன்னிப்பு வேண்டி  விழுந்தாள் மைதிலி. 

    பத்து நாட்களுக்கு முன் ராதாவின் உயிர் பிரிந்த தருணத்தில் தன்னில் ஒரு பகுதியை இழந்ததை கூட கிருஷ்ணனால் உணரமுடியவில்லை. 

    சிறுவயதிலேயே அன்னையை இழந்து, இழப்புக்கு மனம் பழகியதும் ஒரு காரணமோ என இப்போது தோன்றியது.

    எது எப்படி இருப்பினும் வாழ்ந்த காலத்தில் அவளை அழ வைத்ததிற்கு இனி, தான் வாழும் காலம் முழுமையும் அவளை நினைத்து அழும் தண்டனையை கொடுத்து சென்றுவிட்டாள் என நினைத்தார் கிருஷ்ணன். 

    தன்னையும் அறியாமல் அவரின் விரல்கள் புகைப்படத்தில் இருந்த அவளின் கண்களை வருடியது. இந்த கணம் அவருக்கு தேவை தனிமை என உணர்ந்தவர்கள் போல் பிள்ளைகள் நால்வரும் விலகி சென்றனர். 

    தன் மனைவியின் படத்தின் அருகே வைத்திருந்த அவள் விரும்பி வாசிக்கும் வீணையின் தந்தியை ஸ்பரிசித்தவருக்கு, அதிலிருந்து கசிந்த மௌனராகம் அவளின் சிரிப்பின் நாதமாய் ஒலித்தது.

    (முற்றும்)

    Share
  • மாத்தி யோசி

     

    முகில் தினகரன்
     

    ‘ஏங்க…ஒரு நிமிஷம் இருங்க…உங்ககிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசணும்”

    குனிந்து காலில் ஷூவை மாட்டிக் கொண்டிருந்த இன்ஸ்பெக்டர் திவாகரன் தலையைத் தூக்கி ‘சாவித்திரி….நான் ரொம்ப அவசரமாக் கிளம்பிட்டிருக்கேன்…சாயந்திரம் சொல்லக் கூடாதா உன்னோட அந்த முக்கியமான விஷயத்தை…?”

    ‘ப்ச்…இது நம்ம பொண்ணு கலைவாணி சம்மந்தப்பட்ட விஷயம்ங்க” என்று அவள் சொன்னதும் பரபரப்பானார் அவர்..

    ‘என்னது…கலைவாணி சம்மந்தப்பட்ட விஷயமா?…என்ன சொல்லு…சொல்லு”

    ‘நம்ம பொண்ணு மொட்டை மாடில உட்கார்ந்து படிச்சிட்டிருக்கும் போது….எதிர்த்த வீட்டுப் பையன்….”

    இன்ஸ்பெக்டர் நெற்றியைச் சுருக்க,

    ‘அதாங்க..எப்பப் பாரு மோட்டார; பைக்குல ‘டர்;..டர்;”ன்னு போயிட்டு வந்திட்டிருப்பானே?….அவன்தான்… அவங்க வீட்டு மாடில நின்னுட்டு இவளையே நோட்டம் விட்டுக்கிட்டு….அப்பப்ப கை காட்டிட்டு…சேட்டை பண்ணிட்டே இருக்கானாம்…நேத்திக்கு…. நேத்திக்கு….” அவள் தயங்க,

    ‘என்ன நேத்திக்கு?” கத்தலாய்க் கேட்டார் இன்ஸ்பெக்டர்;.

    ‘ஃப்ளையிங் கிஸ் குடுக்கறானாம்…பாவம் இவ…இப்ப மொட்டை மாடிக்குப் போகவே பயப்படறா..”

    ரத்தம் கொதித்தது இன்ஸ்பெக்டருக்கு ‘ராஸ்கல்…என்ன தைரியமிருந்தா ஒரு இன்ஸ்பெக்டரோட மகள்கிட்டேயே உன் வேலையைக் காட்டுவே?” ஆவேசமாய் எழுந்து தெருவில் இறங்கி எதிர் வீட்டை நோக்கி நடந்த கணவனை ஓடி வந்து தடுத்தாள் சாவித்திரி.

    ‘எங்க போறீங்க,…கொஞ்சம் பொறுமையா இருங்க…இது நம்ம பொண்ணு சம்மந்தப்பட்ட விஷயம் கொஞ்சம் நிதானமாத்தான் கையாளணும்”

    அவள் பேச்சை சிறிதும் சட்டை செய்யாமல் எதிர்; வீட்டு கேட்டிலிருந்த காலிங் பெல்லை தன் கோபத்திற்கு வடிகாலாக்கி அழுத்தினார்.

    கர்ண கடூரமாய் அலறிய அந்த காலிங் பெல்லின் ஒலி எதிர் வீட்டு இளைஞனின் தந்தையை உடனே வாசலுக்குக் கொண்டு வந்தது.

    வந்தவரிடம் அவரது அருமைப் புத்திரனின்  சேட்டைகளைச் சொல்லி ‘பார்த்து அடக்கி வைங்க…இல்லைன்னா நான் என் போலீஸ் வேலையைக் காட்ட வேண்டி வந்துடும்…” எச்சரித்தார் இன்ஸ்பெக்டர்..

    அந்த நபரோ இன்ஸ்பெக்டரின் அதட்டலுக்கும் மிரட்டலுக்கும் சிறிதும் அஞ்சாதவராய் ‘ஹல்லோ…மிஸ்டர் இன்ஸ்பெக்டர்… இது ரெண்டு பேர் சம்மந்தப்பட்ட விஷயம்…. அப்படியிருக்க என் பையனை மட்டும் எப்படித் தப்பு சொல்ல முடியும்?….உங்க பொண்ணை விசாரிச்சீங்களா?…விசாரிங.க..அதுகிட்டேயும் ஏதாவது தப்பிருக்கும்…ஏன்னா பொண்ணுக சைடுல இருந்து வரவேற்பு இல்லாம பசங்க எதுவும் செய்ய மாட்டாங்க”

    சற்றும் தயக்கமின்றி அவர் தன் மகளின் மேல் அபாண்டத்தை வீச ஆக்ரோஷமானார் இன்ஸ்பெக்டர் திவாகரன்.

    ‘யோவ்..ஏதோ வயசுல பெரியவரா இருக்கியேன்னு மரியாதை குடுத்துப் பேசினா ரொம்ப ராங்கா பேசறியே… உன்னையும்…உன் பையனையும் ஏதாவதொரு கேஸ்ல புக் பண்ணி… ஸ்டெஷனுக்குக் கொண்டு போய் லாடம் கட்டினாத்தான் திருந்துவீங்க போலிருக்கு”

    ‘அதுக்கெல்லாம் வேற ஆளைப் பாருங்க இன்ஸ்பெக்டர்.….உன்னைய விடப் பெரிய ஆளுங்கெல்லாம் என் கைக்குள்ளார இருக்காங்க….நான் நெனைச்சா..உன்னையே தண்ணியில்லாக் காட்டுக்கு மாத்திடுவேன் தெரியுமா?”

    மீசை துடித்தது இன்ஸ்பெக்டருக்கு.  ‘ராஸ்கல்…என்னவொரு தெனாவெட்டு”

    ‘த பாருய்யா…கடைசியாக் கேட்கறேன்….உன் பையனை நீ கண்டிச்சு வைக்கறியா?..இல்லை நானே கண்டிக்கட்டுமா?”

    ‘வேண்டாம் இன்ஸ்பெக்டா;…அவன் என்னைய மாதிரி சாது இல்லை…இன்ஸ்பெக்டர்ன்னு கூடப் பார்க்காம எடுத்த எடுப்புல வீசிடுவான்”

    ‘நாயே…உன்னைய….” பற்களைக் கடித்துக் கொண்டு இன்ஸ்பெக்டர் அந்த நபரை நோக்கிப் பாய ஓடி வந்து தடுத்தாள் சாவித்திரி.

    ‘விட மாட்டேண்டி இவனுகளை… பார்த்துடறேன் ஒரு கை…” திமிறியவருடன் மல்லுக் கட்டினாள்.

    சில நிமிட போராட்டத்திற்குப் பிறகு கணவனை அங்கிருந்து நகர்த்தி வீட்டிற்குள் கொண்டு வந்தாள்.

    அடுத்த வாரத்தில் ஒரு நாள்,

    புறநகர்ப் பகுதியிலிருந்த அந்த லாட்ஜில் திடுமெனப் புகுந்த காவல் துறை ஒவ்வொரு அறையாய் அலசியது.

    கிட்டத்தட்ட பத்துக்கும் மேற்பட்ட அழகிகளும்…பணக்கார வீட்டு இளைஞர்களும் அரைகுறை ஆடையுடன் சிக்க எல்லோரையும் வரிசையாய் ஜீப்பில் ஏற்றினார் இன்ஸ்பெக்டர் திவாகரன்.

    கடைசியாய் ஏறிய இளைஞனைக் கூர்ந்து பார்த்த இன்ஸ்பெக்டர் ‘தம்பீ….நீ? ”

    ‘யெஸ்… உங்க எதிர்; வீட்ல குடியிருக்கற பையன்தான்” என்றான் வெகு அலட்சியமாய்

    ‘ஆஹா…கெடைச்சுதுடா சான்ஸ்…இது போதும் இவனையும் இவன் அப்பனையும் மானம் கெட வைக்க” மனம் குதூகலித்தது இன்ஸ்பெக்டர் திவாகரனுக்கு.

    அதே நேரம் மனதின் இன்னொரு மூலையிலிருந்து இன்னொரு குரல் எழும்பியது ‘பழி வாங்கும் குணம் என்பது ஒரு அநாகரீகமான குணம்…அது உனக்கு இருக்கலாமா?…இவனைப் பெத்தவன்தான் ஒரு மூடன்…முட்டாள்…மகனை வளர்க்கத் தெரியாமல் வளர்த்து அவனுடைய எதிர்காலத்தையே பாழாக்கிக் கொண்டிருக்கற ஒரு பைத்தியக்காரன்… அவனைப் பழி வாங்குவதாய் நினைத்து ஒரு இளைஞனின் எதிர்காலச் சூன்யத்திற்கு நீயும் காரணமாகலாமா?…யோசி திவாகர்…எதையும் மாத்தி யோசி..மாத்தி யோசி”

    சில விநாடிகள் குழப்பத்தில் உழன்றவர்; சட்டென்று தெளிந்து ‘தம்பி…நீ வண்டில ஏற வேண்டாம்…என் கூட வா”

    ‘ஏன் இன்ஸ்பெக்டர்?…எதுக்கு என்னையத் தனியா கூப்படறீங்க?”

    அவன் அப்படிக் கேட்டது பக்கத்தில் நின்று கொண்டிருந்த கான்ஸ்டபிளுக்கு எரிச்சலை உண்டு பண்ணி விட ‘டேய்…அய்யா கூப்பிட்டா போகாம…கேள்வியா கேட்கறே?” லத்தியால் அவனை விளாசினார;.

    அடுத்த நிமிடமே இன்ஸ்பெக்டரைப் பின் தொடர்ந்தான்.

    லாட்ஜின் ரிசப்ஷன் ஷோபாவில் அவனை அமர வைத்து ‘கூப்படு தம்பி உங்கப்பாவை…கூப்பிட்டு உடனே இங்க வரச் சொல்லு”

    தயங்கியபடியே கூப்பிட்டவன் தலை குனிந்து அமர;ந்தான். உள்ளுக்குள் தாறுமாறான எண்ணங்கள் தறிகெட்டு ஓடின. ‘என்ன பண்ணப் போறான் இந்த ஆளு?… நான் இவன் பொண்ணைப் பார்த்து செஞ்ச சேட்டைக்கெல்லாம் பழி வாங்கும் விதமா என்னையும் எங்கப்பாவையும் போட்டோ எடுத்து நாளைக்கு எல்லாப் பத்திரிக்கையிலும் போட்டு…மானத்தை வாங்கப் போறான் போலிருக்கு”

    இருபதே நிமிடத்தில் அலறியடித்துக் கொண்டு வந்த அவன் தகப்பனிடம் கான்ஸ்டபிள் விபரத்தைக் கூறி இன்ஸ்பெக்டரிடம் அழைத்து வர,

    திவாகரனைக் கண்டதும முகம் மாறினார் அவர் ‘அய்யய்யோ…இவனா?”

    ஆனால் இன்ஸ்பெக்டர் திவாகரனோ ஒரு சிறிய புன்னகையுடன் அவரை நெருங்கி அவர்; தோளில் கையைப் போட்டு ‘பயப்படாதீங்க மிஸ்டர்…பயப்படாதீங்க…. நான் உங்களை மாதிரியில்லை…காக்கி உடுப்பையும்…சல்யூட்டையும் மட்டும்தான் விறைப்பாய் வைத்திருப்பேன்…மனசை அல்ல”

    அந்த நபர் குழப்பமாய் இன்ஸ்பெக்டரையே பார்க்க,

    ‘சார;…இந்தக் காலம் நம்ம காலம் மாதிரியில்லை…இளவயசுப் பசங்க கெட்டுப் போறதுக்கான சாத்தியக் கூறுகள் இப்ப ஏராளம்…நாம்தான் அவர்களை அப்படியெல்லாம் கெட்டுப் போகாத மாதிரி வழி நடத்திக் கூட்டிட்டுப் போகணும்…நாம அதைச் செய்யாம பசங்களுக்கு சுதந்திரம் குடுக்கறதா நெனைச்சுக்கிட்டு அவங்க எதிர;காலத்தைக் கோணலாக்கிட்டிருக்கோம்…அன்னிக்கு கொஞ்சமும் யோசிக்காம என் பொண்ணு மேல எப்பேர்ப்பட்ட ஒரு அபாண்டத்தை வீசினீங்க?…அதை நான் மனசுல வெச்சுக்கிட்டு எனக்குக் கெடைச்ச இந்த சான்ஸை வேற மாதிரி உபயோகிச்சா உங்க மகனோட எதிர்காலம் என்னவாகும்னு யோசிச்சுப் பாருங்க…”

    ‘சார்…அது…வந்து…அன்னிக்கு….”

    ‘த பாருங்க…பழி வாங்க கெடைச்ச சந்தர்ப்பத்தை ஏன் அவங்களைத் திருத்தறதுக்கு கெடைச்ச சந்தர்ப்பமா ஆக்கினா என்னன்னு மாத்தி யோசிச்சேன்…அதனாலதான்… மத்தவங்களையெல்லாம் ஸ்டேஷனுக்கு அனுப்பிட்டு உங்க பையனை மடடும் தனியா வெய்ட் பண்ண வெச்சேன்!”

    பேசிக் கொண்டிருக்கும் போதே ‘தடால் ” என தன் காலில் விழுந்த தந்தையையும் மகனையும் தொட்டுத் தூக்கிய இன்ஸ்பெக்டர் ‘பரவாயில்லை…என் எண்ணம் ஜெயிச்சிடுச்சு…நீங்க உணர்ந்துட்டீங்க…இது போதும் எனக்கு” என்று சொல்லிவிட்டு  வேக வேகமாய் நடந்து ஜீப்பில் ஏறினார்..

    (முற்றும்)

     

    Share
  • சொர்க்க வாசல்

    தமிழ்த்தேனீ

    இன்னிக்கு வைகுண்ட ஏகாதசி, நாங்க எல்லாரும் கோயிலுக்குப் போயி சொர்க்கவாசல் திறந்தவுடனே சுவாமியை நமஸ்காரம் செஞ்சிட்டு வரோம். வீட்டிலேயே இருங்க, கதவைத் தாப்பாள் போட்டுக்குங்க, போயிட்டு வந்துடறோம் என்றபடி கிளம்பினர் வீட்டிலுள்ள அனைவரும்.

    பெரியவர் ராமசாமிக்கு 88 வயசு காது கேக்கலை, கண்ணும் சரியாத் தெரியலை அவஸ்தைப் படறாரு. காலாகாலத்திலே மனுஷன் சீக்கிரமா போய்ச் சேர்ந்தா நல்லா இருக்கும் பாவம் என்று அங்கலாய்த்தாள் பக்கத்து வீட்டு பர்வதம்.

    அவருக்கு சொர்க்க வாசலை அடையும் நேரம் வந்து விட்டது. இவர்களுக்கு தெரியவில்லை என்று எண்ணமிட்டார் பெரியவர் ராமசாமி. அனுதாபச் சொற்கள் காதிலே விழவில்லை. அவர் மனம் பரபரத்துக் கொண்டிருந்தது.

    ஆயிற்று பொழுது விடிந்து ஆறு மணி ஆகிவிட்டது. திறந்திருப்பான் சொர்க்க வாசலை. கிளம்ப வேண்டியதுதான். நேத்து இராத்திரிலேருந்து தூக்கமே வரலை. புரண்டு புரண்டு படுத்து எப்போ விடியும்ன்னு காத்திட்டே இருந்து ஒவ்வொரு நிமிஷமும் ஒரு யுகமாகக் கழிச்சு தூங்காமல் அவஸ்தைப் பட்டுக் கொண்டிருக்கிறார் .

    இன்னும் நுண்ணிய உணர்வு ஒட்டிக் கொண்டிருக்கிறதே, அதை வைத்து ஒரு துண்டை எடுத்து தோளில் போட்டுக் கொண்டு சந்தடி இல்லாத நேரமாய்ப் பார்த்து கிளம்பினார். தட்டுத் தடுமாறி மாடிப்படியில் இறங்கி வாயிலைக் கடந்து தெருவில் இறங்கி ஓரமாகவே நடந்து போய் அவருடைய சொர்க்கவாசலில் நின்றார்.

    அவருடைய சொர்க்க வாசல் திறந்திருப்பானா? சரியாக நேற்று ராத்திரி படுக்கப் போகும்போது கடைசீ துளியும் தீர்ந்து விட்டது.இன்னிக்கு விட்டா ஒரு நாள் வீணாயிடுமே, இதயம் படபடவென்று அடித்துக் கொண்டிருந்தது .நல்ல வேளை! ஆஹா திறந்திருக்கிறது. எதிரே போய் நின்று கையை நீட்டினார்.

    ஐயா வாங்க வாங்க காணுமேன்னு பாத்துகிட்டே இருக்கேன் இந்தாங்க கட்டி வெச்சிருக்கேன் என்றபடி கடைக்காரர் ராயர் நீட்டிய பொட்டலத்தை வாங்கி பிரித்து ஒரு சிட்டிகை மூக்குப் பொடியை கட்டை விரலுக்கும் ஆள்காட்டி விரலுக்கும் இடையே எடுத்து அப்படியே உல்லாசமாய் காற்றில் இரண்டு முறை உதறி ஆனந்தமாக மூக்கில் வைத்து உறிஞ்சிவிட்டு கையை துண்டால் துடைத்தார்.

    அந்தப் பொடி கொடுத்த கிறக்கத்திலும் தள்ளாடாமல் மீண்டும் நிதானமாக ஒரு குத்து மதிப்பாக நடந்து வீட்டிற்கு வந்து மாடிப்படி ஏறி அவர் படுக்கையில் உட்கார்ந்து மிக கவனத்துடன் அந்த மூக்குப் பொடி பொட்டலத்தை பிரித்து, எப்போதும் பத்திரமாக வைத்திருக்கும் ஹார்மோனியப் பொட்டி போல் திறந்து மூடுகின்ற மாட்டுக் கொம்பினால் ஆன, அந்தச் சின்னப் பெட்டியில், சிந்தாமல் சிதறாமல் போட்டு அதைப் பத்திரமாக மூடி தலைகாணிக்கு அடியில் வைத்துவிட்டு நிமிர்ந்தார்.

    அவரையே குற்றப் பார்வையுடன் பார்த்துக் கொண்டு நின்றிருந்தாள் மருமகள் மீனாக்ஷி. அந்தப் பார்வைக்கு பொருள் அவருக்கு தெரியும். “எத்தனை தடவை சொல்றது, ஏதாவது வேணும்னா எங்க கிட்ட சொல்லுங்களேன் நீங்க எங்கேயாவது போயி விழுந்து வெச்சா யாரு அவஸ்தைப் படறது, சொன்னா ஏன் கேக்க மாட்டேங்கறீங்க”, என்றாள் அவள்.

    அதற்கு பதில் சொல்லாமல் ஒரு அசட்டுச் சிரிப்புடன் தலைகாணியில் தலை வைத்து நிம்மதியாகத் தூங்கத் தொடங்கினார் ராமசாமி. குறட்டை எட்டு ஊருக்கு கேட்கத் தொடங்கியது.

    Share
  • மாற்று(ம்) திறனாளி

    முகில் தினகரன்

    மாலை ஏழு மணிவாக்கில் வீடு திரும்பிய குணசேகர் உள்ளே வரும் போதே ‘செல்விக்குட்டி….அப்பா உனக்கு என்ன வாங்கிட்டு வந்திருக்கேன் கண்டுபிடி’ என்று கூவிக்கொண்டே வந்தார். இரண்டு கைகளும் பின்புறம் எதையோ மறைத்துக் கொண்டிருந்தன. ஆனால் சோக முகத்துடன் சோபாவில் அமர்ந்திருந்த எட்டு வயது செல்வியின் முகத்தில் எந்தவித சலனமும் இல்லை.

    ‘அடடே…என் ராசாத்திக்கு ஏதோ கோவம் போலிருக்கே..’ என்றபடி அவள் அருகில் அமர்ந்து அவள் தாடையைத் தொட்டு;த் தூக்கி ‘ஏண்டா செல்லம்…அம்மா திட்டிட்டாளா?’

    அது இட, வலமாய்த் தலையாட்டியது.

    ‘இல்லையா?…அப்ப ஸ்கூல்ல…டீச்சர் திட்டினாளா?’

    ‘ம்ஹூம்’ என்றவாறு உள் அறையில் தரையில் அமர்ந்து எதையோ வரைந்து கொண்டிருந்த தங்கை நிர்;மலாவைக் காட்டினாள்.

    செல்வியும் நிர்மலாவும் இரட்டைகள். ஓரே அச்சில் வார்த்தாற் போல் ஒரே நிறத்தில்….ஒரே பருமனில்….ஒரே உயரத்தில் இருக்கும் அவர்களிடத்தில் ஒரே வித்தியாசம் சின்னவள் நிர்மலாவின் வலது கால் கணுக்கால் பகுதி சற்று வளைந்திருப்பதும்….அதன் காரணமாய் அவள் நடக்கும் போது சற்று விந்தி விந்தி நடப்பதும்தான். பாவம் சிக்கலான ஆயுதப் பிரசவ போராட்டத்தின் விளைவு அது.

    சின்னவளை அவள் சுட்டிக் காட்டியதன் மூலம் நிலைமையை ஓரளவு யூகித்துக் கொண்ட குணசேகர் ‘ஓ….தங்கச்சிப் பாப்பா உன் கூட சண்டை போட்டுட்டாளா?’

    மறுபடியும் செல்வி இட, வலமாய்த் தலையாட்ட,

    ‘அய்யய்யோ…ஒண்ணும் புரிய மாட்டேங்குதே!’ என்று தலையைப் பிய்த்துக் கொண்டவர் சமையலறைப் பக்கம் திரும்பி ‘கலா…ஏய் கலா…’ மனைவியை அழைத்தார்.

    ‘என்னங்க…?’

    கையைத் துடைத்தபடி வந்தவளிடம் கேட்டார் ‘ஏண்டா செல்விக்குட்டி சோகமா இருக்கா?’

    ‘அதையேன் என்கிட்டக் கேட்கறீங்க…அவகிட்டவே கேளுங்க…’

    ‘அதுதான் வாயைத் திறந்து பேசவே மாட்டேங்குதே..’

    ‘என்ன?…பேச மாட்டேங்குதா?….அது செரி..இத்தனை நேரம் என்கிட்ட சரிக்கு சரி பேசி சண்டை போட்டாளில்ல…அதுல வாய் வலி கண்டிருக்கும்..’

    ‘ஓ…அப்ப நீதான் சண்டை போட்டிருக்க…’

    ‘அய்யய்யோ…சாமி…என்னை ஆளை விடுங்க..எனக்கு வேலையிருக்கு’ சொல்லிவிட்டு சமையலறையை நோக்கி அவள் ஓட்டமாய் ஓடி விட, உள் அறையிலிருந்து விந்தி விந்தி நடந்து வந்த சின்னவள் நிர்மலா குணசேகரின் தோளைத் தொட்டு ‘டாடி..நான் சொல்றேன்…’ என்றாள்.

    ‘சொல்லுடா…என் தங்கம்’

    ‘வந்து…வந்து….ஸ்கூல்ல பரத நாட்டியம் சொல்லித் தர்றாங்க…மாசம் ஐநூறு ரூபா ஃபீஸ்…’

    ‘அவ்வளவுதானே?…நான் சொல்றேன் நீ சேர்ந்துக்கடா செல்லம்…’ என்றான் குணசேகர் செல்வியைப் பார்த்து,

    அதுவரை அமைதி காத்து அமர்ந்திருந்த செல்வி திடீரென்று ஆவேசமாகி ‘நீ என்னைச் சேரச் சொல்லுறே…ஆனா இந்த அம்மா….என்னைய சேர வேண்டாம்…தங்கச்சி மட்டும் சேரட்டும்னு சொல்லுறா…’

    ‘சரி…சரி…ரெண்டு பேருமே சேருங்க…’

    ‘அது செரி…ரெண்டு பேருக்கு மாசம் ஆயிரம் ரூபாயை டான்ஸ் க்ளாஸூக்குக் குடுத்துட்டு…பற்றாக்குறைக்கு எங்க போறது?..ம்ஹூம்…அதெல்லாம் சரிப்பட்டு வராது…ஏதோ ஒருத்திக்குன்னா…கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணலாம்…’

    ‘அப்படின்னா பெரியவளைச் சேர்த்து விடலாமே…’

    ‘த பாருங்க…இந்த விஷயத்துல நான் எடுக்கறதுதான் முடிவு….சின்னவதான் சேர்றா…அவ்வளவுதான்…மேற்கொண்டு இதைப் பத்தி பேச வேண்டாம.;’ கறாராய்ச் சொல்லி விட்டு கணவன் அழைப்பதையும் செல்வி வாய் விட்டு அழுவதையம் சிறிதும் சட்டை செய்யாது சமையலறை நோக்கி நடந்தாள் கலா.

    ‘அன்னிக்கும் இப்படித்தான் டிராயிங் க்ளாஸூக்கு என்னை வேண்டாம்னுட்டு தங்கச்சிய சேர்த்து விட்டுச்சு….இப்ப டான்ஸ் க்ளாஸூக்கும் அதே மாதிரி செய்யுது இந்த அம்மா..’ அழுது ஆர்ப்பாட்டம் செய்த மூத்தவள் செல்வியை சமாதானப்படுத்துவதற்குள் போதும் போதுமென்றாகிவிட்டது குணசேகருக்கு.

    ‘ச்சே…ஏன்தான் இந்தக் கலா இப்படிப் பிடிவாதம் பிடிக்கறாளோ?’

    இரவு. குழந்தைகள் இரண்டும் உறங்கியபின் தன்னிடம் வந்த கணவர் முகத்தை உற்று நோக்கினாள் கலா. அதில் வாட்டம் தெரிய அதற்கான காரணத்தை யூகித்துக் கொண்டவள் ‘என்னங்க…என் மேல் கோபமா?’ கேட்டாள்.

    ‘ம்ம்ம்…கோபம்னு இல்லை…ஒரு வருத்தம்…அவ்வளவுதான்..’

    ‘எனக்குத் தெரியும்…நான் பெரியவளை விட்டுட்டு சின்னவளை மட்டும் டான்ஸ் க்ளாஸ்ல சேர்த்து விடறேனே…அதுதான் உங்க வருத்தத்திற்குக் காரணம்….சரிதானே?’

    ‘ஆமாம்…அன்னிக்கு டிராயிங் க்ளாஸூக்கும் இப்படித்தான் செய்தே…ஏன்?…என்னாச்சு உனக்கு?’

    பதிலேதும் சொல்லாமல் மெலிதாய்ச் சிரித்தாள் கலா.

    அவளின் அச்சிரிப்பு அவனுள் கோபத்தை மூட்டி விட ‘ஏண்டி…சின்னவளே ஊனக்காலை வெச்சுக்கிட்டு…விந்தி விந்தி…நடந்திட்டிருக்கா…அவளுக்கு பரத நாட்டியம் ரொம்ப முக்கியமா?’ கத்தலாய்க் கேட்டான்.

    ‘ஆமாங்க…சொன்னாலும் சொல்லாட்டியும் அவளுக்குத்தாங்க அது ரொம்ப முக்கியம்…’ அவளும் கத்தலாகவே பதில் சொல்ல, வாயடைத்துப் போனார் குணசேகர்.

    சில அவஸ்தையான நிமிடங்களுக்குப் பிறகு ‘என்ன கலா…என்ன சொல்ற நீ?..கொஞ்சம் புரியம்படிதான் சொல்லேன்…’ தணிவாய்க் கேட்டார் குணசேகர்.

    ‘இங்க பாருங்க…நான் சொல்றதை நல்லாக் கேட்டுக்கங்க….பெரியவ செல்வியைப் பற்றிப் பிரச்சினையே இல்லைங்க…அவ நார்மலா இருக்கா…சுமாராப் படிச்சு..எதிர்காலத்துல ஒரு சுமார் லெவலுக்கே வந்தாலும் யாரும் அவளை ஏதும் குறை சொல்ல முடியாது…அவ கல்யாணம் கூட ஈஸியா நடந்திடும்…ஆக…ஒரு இயல்பான வாழ்க்கைங்கறது அவளுக்கு உத்தரவாதமாயிருக்கு..என்ன நான் சொல்றது சரிதானே?’

    ‘சரிதான்…’

    ‘ஆனா சின்னவளைப் பொறுத்தவரை அப்படியில்லை….அவ உடல்ல ஆண்டவன் ஒரு குறையை வெச்சிட்டான்…இப்ப….பெரியவ மாதிரியே இவளும் ஒரு சுமார் லெவல்ல இருந்தான்னு வெச்சுக்கங்க….அப்ப அவளோட குறை அவளுக்கும் சரி…மத்தவங்களுக்கும் சரி ஒரு பெரிய விஷயமாத் தெரியும்…அது அப்படித் தெரியக் கூடாதுன்னா…அவ படிப்பு தாண்டிய சில விஷயங்கள்ல திறமைசாலியா இருக்கணும்…’

    நெற்றியைச் சுருக்கியவாறே கேட்டுக் கொண்டிருந்த குணசேகருக்கு லேசாய்ப் புரிய ஆரம்பித்தது.

    ‘இப்பவே அவளுக்கு ஓவியம் நல்லா வருது….இன்னும் டிராயிங் க்ளாஸ்ல சேர்த்து அதை அவ டெவலப் பண்ணினா நிச்சயம் ஓவியத்துல ஒரு சாதனையைப் படைப்பா…அதே மாதிரிதான் பரத நாட்டியம்…இப்ப இருந்தே பயிற்சியில் ஈடுபட்டா நாட்டியத்துல ஒரு சாதனையாளரா அவ வர முடியும்…அது மாதிரியான சாதனைகளை அவ நிகழ்த்தும் போது அவ மாற்றுத் திறனாளியா மத்தவங்க கண்ணுக்குத் தெரிய மாட்டா…குறைகளை மாற்றும் திறனாளியாத்தான் தெரிவா…அதனாலதான்….’

    தன் மனைவியின் அற்புதமான தொலை நோக்குப் பார்வையில் மெய் சிலிர்த்துப் போன குணசேகர் அவளை பெருமையாய்ப் பார்த்து பொறுமையாய் அணைத்தார்.

    (முற்றும்)

    Share
  • கோபம்.

    ராஜ்பிரியன்

    பரபரப்பாக இருந்த அந்த கல்யாண மண்டபத்துக்கு முக்கிய பிரமுகர்கள் எல்லாம் வந்தபடியே இருந்தார்கள். வந்தவர்களை வாசலில் நின்று வரவேற்றுக்கொண்டு இருந்தார்கள் அலுமேலுவும், அவரது கணவர் தங்கச்சாமியும். தங்கச்சாமி பொள்ளாச்சியில் ஹோட்டல், நகைக்கடை, துணிக்கடை, 500 ஏக்கர் நிலமென வசதிக்கு குறைவில்லாதவர். சுற்றுவட்டார பகுதியில் செல்வாக்கானவர், அமைதியானவர். அவரது பெண் சுவாதிக்கு தான் திருமணம்.

    அவரது செல்வாக்குக்கு குறைவான இடத்திலேயே மாப்பிள்ளையை பார்த்திருந்தார். காரணம் அவரது மகள் அவருக்கு செல்லம். ஓரே பெண் என்பதால் சின்ன வயதில் இருந்தே ஏகப்பட்ட பாசத்தை பொழித்து வளர்த்திருந்தார். இதனால் சுவாதிக்கு எதிலும் கர்வம். தான் நினைத்தது நடக்க வேண்டும். விருப்பத்துக்கு எதிராகவோ, அவள் சொல்வதை மறுத்தாலோ சடாரென கோபம் வந்துவிடும். குடும்பத்தாரிடம் கோபம் வந்தால் இரண்டு நாளைக்கு சாப்பிடமாட்டாள். வெளியாட்களாக இருந்தால் திட்டிவிடுவாள்.

    இப்படித்தான் ஒருநாள் காலை பதினோரு மணிக்கு டிபன் சாப்பிட அமர்ந்தவளுக்கு அவளது அண்ணி கீதா, சுடாக டிபன் தரவில்லையென தட்டையெடுத்து கீதா மீது அடித்துவிட வீட்டில் ஒரே களோபரம். அவள் செய்தது தப்பு என எல்லோருக்கும் தெரியும். ஏதாவது கேட்டால் அவளுக்கு கோபம் வரும் என்பதால் யாரும் வாயை திறக்கவில்லை. இதனால் கீதா அம்மா வீட்டுக்கு போய்விட்டாள். சமாதானம் பேசிய மாமியாரிடம் அவளை மன்னிப்பு கேட்கச்சொல்லுங்க அப்பத்தான் வருவன்.

    உங்கண்ணன் வாழ்க்கைடீ ஸாரி கேளு என அலமேலு மகளிடம் கேட்டபோது அவன் வாழ்க்கை எப்படி போனாலும் எனக்கு கவலையில்ல அவக்கிட்ட நான் மன்னிப்பு கேட்கமாட்டன் என உறுதியாக இருந்துவிட குமரன் தான் திண்டாடிபோனான். மனைவியை சமாதானப்படுத்தி அழைத்து வர அவனுக்கு ஆறுமாதமானது.

    நான்கு மாதத்துக்கு முன்பு உனக்கு கல்யாணம் பண்ணலாம்ன்னு இருக்கம்மா எப்படிப்பட்ட மாப்பிள்ளை வேணும்ன்ன சொல்லும்மா என தங்கச்சாமி கேட்டதும், அடக்கமானவரா, அழகானவரா, படிச்சவரா, எதிர்த்து பேசாதவரா இருக்கனும் என அடுக்கினாள். இதை கேட்டுக்கொண்டுயிருந்த அலமேலு அப்படின்னா நீ சன்னியாசியா தான் போகனும் என்றார்.

    அதை கேட்டு கோபமான தங்கச்சாமி, வாய மூடுடீ என அதட்டினார்.

    அப்படி போனாலும் போவன் ஒருத்தன்கிட்ட அடிமையா இருக்கமாட்டன் என்றாள் கோபமாக.

    அவ கிடக்கறா விடும்மா. நீ சொல்றமாதிரியே பாக்கறன்ம்மா என்றார் பாசமாக அவள் தலையை தடவியபடி. கல்யாண புரோக்கரை அழைத்து வசதி குறைவா இருந்தாலும் பரவாயில்ல. பையன் நல்லவனா, படிச்சவனா, அழகா இருக்கனும் என்றார். புரோக்கரும் கோவையில் சின்னதாக ஒரு பேக்டரி வைத்திருக்கும் விநோதன் ஜாதகத்தை தந்து நல்லப்பையன், குடும்பத்துக்கு அடக்கமானவன், கோபப்பட்டே பார்க்க முடியாது என்றார்.

    விசாரித்தபோது புரோக்கர் சொன்னது உண்மையென அறிந்துக்கொண்டவர், அதன்பின்பே பெயர் பொருத்தங்களை பார்த்தார். “பையன் பொண்டாட்டிக்கு அடங்கனவனா இருப்பான்” எனச்சொல்ல மனம் குதுகலித்தது. உடனே புரோக்கர் மூலம் அந்த குடும்பாத்தரை சந்தித்து பேசினார். பெரிய இடம் தங்கச்சாமியை பற்றி அறிந்தவர்கள் அவரது மகள் பற்றி அறியாமல் சம்மதம் தெரிவித்தனர். சுவாதியும் விநோதனை பிடித்திருப்பதாக சொல்ல கல்யாண ஏற்பாடுகள் தடபுடலாக நடந்தன. தங்கச்சாமி பொள்ளாச்சியிலேயே நடத்தினார்.

    இரவு வரவேற்பு நடந்தது. சுவாதி தேர்வு செய்திருந்த ஆடையையே விநோதன் அணிந்தான். அவன் கையில் வைத்திருக்கும் கைக்குட்டை வரை சுவாதியின் தேர்வாகவே இருந்தது. சுவாதியின் நடவடிக்கையை நிச்சயம் நடந்தது முதல் பார்த்தும் அனுபவித்து தான் வந்தான். அவள் ஒருமுறை செல்போனில் அழைக்க பேக்டரி சத்தத்தில் எடுக்காமல் விட்டுவிட்டான். கோபத்தில் ஒருநாள் முழுக்க அவனுடன் பேசவில்லை. ரிசப்ஷன் முடிந்து சாப்பிட அமர்ந்த போது விநோதனுக்கு பிடித்த பால் பாயாசம் டம்ளரில் இருந்தது. அதை குடித்தவன் இரண்டாவதாக வாங்கலாம் என நினைத்து பரிமாறுபவரை அழைத்து பால்பாயாசம் கேட்டான்.

    அதல சக்கரை அதிகமாயிருக்கும் சாப்பிடாதிங்க என தடைபோட்டாள். அப்போது விநோதன் முகம் சுருங்கியதை அலமேலு கவனித்து நொந்துப்போனார். காலை முகூர்த்தத்துக்கு வந்தவர்களை அலுமேலு தன் கணவருடன் சேர்ந்து வரவேற்ற போது அவளுக்கு மகளின் செயல்கள் மனதில் படமாக ஓடியது.

    தாலி கட்டி முடித்ததும் மைக் முன் வந்த முக்கியஸ்தர்கள் சிலர் மணமக்களை வாழ்த்தினர். அலமேலுவை பேசச்சொல்ல, “இரண்டு பேரும் விட்டுக்கொடுத்து வாழனும். என் பொண்ணு கோபப்பட்டா, மாப்பிள்ளை தான் பொறுத்துக்கனும்”, என கண்ணீருடன் சொல்லிவிட்டு இறங்கினார். அடுத்து மைக் முன் வந்த குமரன், “என் தங்கச்சிக்கு தப்பு பண்ணா கோபம் வரும். மச்சான் பொறுத்துக்கனும்” என சொல்லிவிட்டு இறங்க, அடுத்து வந்த சுவாதியின் சித்தப்பா ரங்கன், “பொண்ணு கோபப்பட்டாலும் மாப்பிள்ளை விட்டுக்கொடுத்து போகனும்.” இதை கேட்டுக்கொண்டுயிருந்த விநோதன் மைக்கை வாங்கி “எல்லாரும் பொண்ணு கோபப்பட்டா பொறுத்துக்கிட்டு போகனம்ன்னு எனக்கு அறிவுரை சொல்றிங்க. ஆனா யாரும் பொண்ணு கோபப்படகூடாதுன்னு சொல்ல மாட்டேன்கிறிங்களே. அறிவுரை சொல்றவங்க முதல்ல கோபப்படக்கூடாதுன்னு சொல்லுங்க” என்றார். இதை கேட்டுக்கொண்டுயிருந்த தங்கச்சாமியின் முகத்தில் திகிலடித்தது. சுவாதி தன் அப்பாவை பார்க்க, “பாத்துக்கலாம்மா ” என்றார் கண்களாலேயே.

    மண்டபத்தை விட்டு வீட்டுக்கு போயும் சுவாதி விநோதனுடன் சரியாக பேசவில்லை. முதலிரவு அறைக்கு அனுப்பும்போது பாத்து நடந்துக்க என கிண்டலாக சொல்லி அனுப்பினார்கள் உறவினர்கள்.

    அறைக்குள் சென்ற சுவாதி கட்டிலில் உட்கார்ந்திருந்த விநோதனை பார்த்து, “எதுக்கு மண்டபத்தல அப்படி பேசனிங்க ” என்றாள் கோபத்துடன். அவள் பக்கம் திரும்பிய விநோதன், “இப்படி உட்காரு” என கட்டிலை காட்டினான். உட்கார்ந்தவள் பக்கம் திரும்பி, “இங்கப்பாரு சுவாதி, உனக்கு அதிகமா கோபம் வரும். நீ சொல்றதத்தான் மத்தவங்க கேட்கனும் அப்படின்னு நினைக்கறத முதல்ல விடு. உன் குணத்தப்பத்தி மண்டபத்தலயிருந்து வந்ததுமே உங்கம்மா எங்கிட்ட சொன்னாங்க. நீ நினைக்கற மாதிரி என்னால வாழ முடியாது. உன் சுதந்திரத்த நான் கணவன்ங்கற அதிகாரத்தை வச்சி தடுக்க மாட்டன். அத நீ தப்பா பயன்படுத்தாதன்னு சொல்றன். பணத்துக்காக உன்ன நான் கல்யாணம் செய்துக்கல. முதல்ல உங்க வசதிய நினைச்சி யோசிச்சோம். புரோக்கர் தான் நல்ல குடும்பம்ன்னு சொன்னாரு. அதனால தான் சரின்னு சொன்னோம். உனக்குயிருக்கற மாதிரி மத்தவங்களுக்கும் மனசு, அவுங்களுக்குன்னு ஒரு கருத்துயிருக்கும் அதுக்கும் மதிப்பு தரனும். சின்ன சின்ன விஷயத்துக்கெல்லாம் கோபப்பட்டா அதுக்கு மரியாதையில்லாம போயிடும். உன் மேல வருத்தம் தான் வரும். குடும்ப வாழ்க்கைன்னா கணவன் மனைவிக்குள்ள விட்டுக்கொடுக்கறது இருக்கனும். இந்த கட்டில்லயிருந்து சின்ன சின்ன ஆசைகள் வரை ஒவ்வொருத்தரும் புரிஞ்சிக்கிட்டு, கலந்து பேசி வாழ்ந்தா எந்த பிரச்சனையும்மில்ல. கோபமும் வரப்போறதில்ல.

    நம்ம இரண்டு பேருக்குள்ள இந்த பணம் வந்து குடும்பம் நடத்தப்போறதில்ல. மனிதர்களான நாம தான் குடும்பம் நடத்தப்போறோம். அதனால ஆதிக்கம் செலுத்தறத, கோபப்பட்டறத விட்டுட்டு விட்டுக்கொடுத்து வாழ பழகிக்க. அதான் நமக்குள்ள நல்ல வாழ்க்கையை தரும். உனக்கு அட்வைஸ் பண்றத்து புடிக்காதுன்னு உங்கம்மா சொன்னாங்க. இருந்தாலும் நான் மண்டபத்தல அப்படி பேசனதால நீ என் மேல கோபமா இருக்கறது தெரியும். நான் அந்த இடத்தல உன்ன விட்டுக்கொடுத்துயிருக்ககூடாது. ஆனா ஒரு பிரச்சனையை முளையிலயே கிள்ளிடனும் இல்லன்ன பெருசாகிடும். அதனால தான் அங்க பேசனன். இப்பவும் சொல்றன். அங்க உன்ன விட்டுக்கொடுத்ததுக்கு ஸாரி ” என பேசி முடித்தான்.

    இவ்வளவு நேரம் விநோதன் பேசியதை கட்டிலின் ஓரத்தில் அமர்ந்து கேட்டுக்கொண்டுயிருந்தாள்.

    “நானே தான் பேசிக்கிட்டுயிருக்கன் உன் கருத்து என்னன்னு சொல்லு”, என கேட்டான்.

    பதிலேதும் சொல்லாமல் தலையை திருப்பிக்கொண்டாள். நீண்ட நேரம் பதிலேதும் வராததால் அமைதியாக அப்படியே கட்டிலில் ஓரமாக படுத்துக்கொண்டான். சுவாதியின் மனம் கொதிக்க தொடங்கியது. பூக்கள் வாடத் தொடங்கியது.

    காலையில் அறையை விட்டு வெளியே வந்த சுவாதியை பார்த்ததுமே அலமேலுவுக்கு புரிந்து போனது. இரவு எதுவும் நடக்கவில்லை என்று. மகளை கிச்சன்க்கு அழைத்து சென்றவர் என்ன நடந்துச்சி என கேட்டார். அமைதியாக இருந்தவளை பார்த்து “சண்டை போட்டுக்கிட்டா,  சமாதானமா போறயிடத்தலயே சண்டைன்னா உன்னயெல்லாம் என்ன சொல்றது”, என நொந்துக்கொள்ள மவுனமாகவே தரையை பார்த்தப்படி நிற்க தாய் பாசம் அவரை கண் கலங்க வைத்தது.

    அப்போது “வாங்க மாப்பிள்ள” என்ற குரல் கேட்டு இருவரும் வெளியே பார்த்தனர். சோபாவில் அமர்ந்து பேப்பர் படித்தபடியே ரூமை விட்டு வெளியே வந்த விநோதனை  அழைத்து எதிரில் “உட்காருங்க”, என்றார் தங்கச்சாமி.

    கிச்சன் பக்கம் திரும்பி “அலமேலு, மாப்பிள்ளைக்கு காபி எடுத்துவா” என குரல் கொடுத்தார்.

    விநோதன் பக்கம் திரும்பி, “வீடு புடிச்சியிருக்கா மாப்பிள்ள.?”

    “நல்லாயிருக்கு மாமா.”

    “சுவாதியோட அறை சின்னதா இருக்கும். மேல பெருசா ஒரு அறையிருக்கு. அதை எடுத்துக்குங்க.”

    “எதுக்கு மாமா இருக்கறதே கம்பர்டபிளா இருக்கு.”

    “என்ன வசதி வேணும்மோ செய்துக்குங்க”, என்றதும் ஓரளவு புரிஞ்சது விநோதனுக்கு. வீட்டோட இருக்கச்சொல்றாரு. அத சுத்தி வளைச்சி பேசறாரு.

    “வீட்டோட மாப்பிள்ளையா இருக்க எனக்கு சம்மதம்மில்ல மாமா”, எனச்சொல்லும் போதே அலமேலுவும், சுவாதியும் ஹாலுக்கு வந்திருந்தனர்.

    “இல்ல அப்படி சொல்ல வரல மாப்ள”, என தயங்க,

    “நீங்க உங்க பொண்ணு மேல ரொம்ப அதிகமாவே பாசம் வச்சியிருக்கறது தெரியும் மாமா. உங்க பொண்ண நீங்க பாத்துக்கறத விட நான் என் மனைவியை ரொம்ப நல்லாவே பாத்துக்குவன்.”

    “அதுக்கில்ல மாப்ள.”

    “இதப்பத்தி நானும் என் மனைவியும் பேசி எடுக்க வேண்டிய முடிவு. நான் பேசிட்டு சொல்றன் மாமா”, என்றபடியே எழுந்து மீண்டும் அறைக்குள் சென்றான்.

    சில நொடி தன் அப்பாவை பார்த்தவள் பின் அலமேலு கையில் இருந்த காபி டம்பளரை வாங்கிய சுவாதி விநோதன் பின்னாடியே அறைக்குள் நுழைந்தவள் கதவை லாக் செய்தாள்.

    காபி டம்பளரை தந்துவிட்டு அமைதியாக பார்த்தவளிடம், “உங்கப்பா வீட்டோட மாப்பிள்ளையா இருக்கனம்ன்னு நினைக்கறாரு. ஒரே பொண்ணுன்னு ரொம்ப பாசம் வச்சிட்டாரு. அதனால அப்படி நினைக்கறாரு. ஆனா ஆம்பளைக்கு அழகு அவன் சம்பாதியத்தல மனைவிய நல்லா பாத்துக்கறது தான். அதான் எனக்கும் மரியாதை. உனக்கும் மரியாதை. இதான் என் கருத்து. உன் கருத்து என்னன்னு சொல்லு.”

    “உன் வீட்டுக்காரர் என்ன பண்றாருன்னு கேட்டா, இந்த தொழில் பண்றாருன்னு சொல்றதுத்தான் எனக்கு மரியாதை. எங்கப்பாவோட ஆபிஸ்ல வேலை பாக்கறாருன்னு சொல்றதுயில்ல. அது உங்களுக்கும் அசிங்கம். உங்களுக்கு ஒரு அசிங்கம்ன்னா அது எனக்கும் தான். சடங்கு முடிஞ்சதும் நாம நம்ம வீட்டுக்கு போயிடலாம்.”

    ஆச்சர்யமான விநோதன், “இந்த மாற்றம் நைட்டே வந்துயிருந்தா, ஒரு நைட் வேஸ்ட்டாகியிருக்காது. இப்ப நைட் வரைக்கும் காத்திருக்கனும்மா” என ஏக்கத்தோடு கேட்டபோது, “காத்திருக்க தேவையில்ல” என புன்னகைத்தபடியே அவன் உதட்டோடு தன் உதடுகளை இணைத்திருந்தாள் சுவாதி. விநோதன் குடித்த காபியின் மனம் அவளின் உதடுகளில் மணத்தது.

    Share
  • அன்பே தெய்வம்

    விசாலம்

     “ட்ரிங் டிரிங் ” … டெலிபோன் மணி ஒலித்தது.

    ”இந்தப்போன் எப்போதும்   பால் காச்சும்   போதுதான் வரும், இரு இரு வரேன்” என்று ஒரு குழந்தை போல் சொல்லிக்கொண்டு ராஜம் போனை எடுத்தாள்.

    “ஹலோ ஹலோ யார் பேசறது ?”

    “நான் தான் சுப்பிரமண்யன்”

    “நமஸ்காரம் இருங்கோ. இதோ எங்காத்து மாமாவைக் கூப்படறேன்”………டெலிபோனைப்பொத்தியபடி, “ஏன்னா இந்தாங்கோ நம்ம சம்பந்தி….கூப்பிடறார் உடனே வாங்கோ” என்று தன் கணவர் சிவராமனைக் கூப்பிட்டாள். பாதி ஷவரம் செய்த முகத்துடன் அவரும் வந்தார்.

    “ஹலோ நமஸ்காரம் சௌக்கியமா? எப்போ முகூர்த்தத்தை வச்சுக்கலாம் ? “

    “அதுதான் சொல்ல வந்தேன். இந்தச்சம்பந்ததம் நடக்காது மன்னிக்கணும், நீங்கள் நிச்சியதார்த்தம் அன்று போட்ட பொருட்கள் எல்லாம் திருப்பித் தந்துவிடுகிறோம், வந்து எடுத்துங்கோ.”

    “ஏன் என்ன ஆச்சு ? எல்லாம் நன்னாத்தானே நடந்தது இப்ப என்ன திடீர்னு …”

    “மேலே ஒண்ணும் சொல்லறதுக்கில்லை வச்சுடறேன்”

    ராஜம் கேட்டாள்,  “என்ன ஆச்சு ?ஏன் இப்படி இடிஞ்சு போய் நிக்கறேள் ?”

    “நம்ம சம்பந்தம் வேண்டாம்னு சொல்றாடி …. நம்ம பையனுக்கு என்ன குறைச்சல் ?…ராஜா மாதிரி இருக்கான் சி ஏ வேறு …….கை நிறைய சம்பளம் ….அவாளுக்கு என்ன….. கசக்கறதா ?    சரி, விடு விடு     இந்தப்பெண் இல்லேன்னா எத்தனையோ பெண்கள்”……..

    ராஜத்திற்கு மனம் உளைச்சல் கண்டது. ஓடிப்போய் தன் தங்கையிடம் போனில் தெரிவித்தாள்.     பின் திருவாரூரில் இருக்கும் தன் அப்பாவைக் கூப்பிட்டாள்.

    “ஹலோ ஹலோ ,யாரு அப்பாவா…..”

    “ஆமாம் ராஜமா …என்ன மோஹனுக்கு முகூர்த்ததேதி பார்த்தாச்சா”?

    “அதுதாம்பா சொல்ல வந்தேன். கல்யாணம் நின்னுபோயிடுத்து, என்ன காரணம்னு தெரிலை. நீங்கள் தான் துப்பறியும் சாம்பு போல் கண்டுபிடிக்க வேண்டும்.    பெண்ணோட தாத்தாவும் திருவாரூர்தானே….”

    “சரி ராஜம் நான் விஜாரிச்சு  சொல்றேன், கவலப்படாதே”

    அப்பாடி… இப்போத்தான் ராஜத்திற்கு மூச்சு வந்தது. உள்ளே போனாள்.

    ”அப்துல் தும் கஹான் ஹோ?’ {அப்துல் நீ எங்குஇருக்கிறாய் “?} என்று இந்தியில் பேச அப்துல் “அபி ஆயா {இதோவந்துவிட்டேன் } என்று பதில் சொன்னான்.

    “சாப்பிட்டாயா …. அப்துல் …..நம்ம மோஹன் கல்யாணம் நின்றுவிட்டது தெரிமா”?

    “தெரியும் மாஜி ” என்று அவனும் தமிழில் பேச முயன்றான். அவன் கண்கள் கலங்கின.

     

    தில்லியில் ஜனக்புரி என்ற இடத்தில் தான் சிவராமன் குடும்பம் இருந்தது. இரு மகன்கள் …..மூத்தவன் மோஹன்…. தம்பி சுரேஷ். பின் யார் இந்த அப்துல் ? இது தெரிய பத்து வருடங்களுக்கு முன்னால் நாம் போக வேண்டும்.

    எப்போதும் தனக்கென்று ஒரு ரிக்க்ஷா வாலாவை ராஜம் தன் சிறு பிரயாணத்திற்கு அமர்த்திக்கொள்வாள். ஒருநாள் அவனைக்கூப்பிடப் போன போது ஒரு ஐந்து வயது சிறுவன் அங்கு அழுது கொண்டிருந்தான். அவன் தான் ரிக்க்ஷாக்காரன் சலீமின் குட்டித்தம்பி அப்துல் …..ராஜம் அவன் ஏன் அழுகிறான் என்று கேட்க, அவனும் தன் பெற்றோர்கள் இறந்துவிட்டதால் இந்தக்குட்டி அப்துலைத் தான் பார்த்துக்கொள்வதாகவும் வேலைக்குப்போக மிக கஷ்டமாக இருப்பதாகவும் கூறினான்.

    தவிர வறுமை வேறு …..ராஜம் இயல்பாகவே இளகிய மனம் படைத்தவள். ஆதலால் அவனிடம் “சலீம் நான் இவனை வளர்த்து படிக்க வைக்கிறேன். அனுப்புகிறாயா ?”என்று கேட்டாள்.

    கரும்பு தின்னக்கூலியா ? உடனேயே அவனை அனுப்பி வைத்தான். அப்துல் வயிறு ஒடுங்கி ஒல்லிக்குச்சியாய் ராஜத்தைத் தொடர்ந்தான். அன்று வந்தவன் தான் அப்துல் “மாஜி மாஜி “என்று அன்பைக்கொட்டினான். ராஜமும் அவனைப்பள்ளிக்கு அனுப்பித்தாள். தமிழ் கற்றுக்கொடுத்தாள். விதவிதமான உடைகளும் வாங்கிக்கொடுத்தாள். அவனும் வளர்ந்தான். வீட்டுவேலையும் செய்து, பின் படிப்பிலும் கவனம் செலுத்தினான். மொத்தத்தில் ராஜத்தின் வலது கையானான். ராஜத்தின் பிள்ளைகள் ஒரு வேலையும் செய்யாமல் அப்துலை வேலை வாங்குவார்கள். இது ராஜத்திற்கு மிக வருத்தம் உண்டாக்கும்.

    அப்துலுக்கு அந்த வீட்டில் தனிச்சலுகை என்று இரண்டாவது மகன் மனம் வெம்பினான். பொறாமை வேறு அவனை ஆட்கொண்டது. ஒருநாள் ராஜம் தலைவலியால் துடித்தாள்.

    அவள் மகன் சுரேஷ் காலேஜிலிருந்து வந்தான் ,”அம்மா என்ன திங்க வச்சிருக்கே எடுத்துக்கொடு”

    “சுரேஷ் கண்ணா எனக்குத் தலைவலிடா….. நீயாகவே உள்ளே போய் தோசை எடுத்துக்கோ”

    அப்போது அப்துலும் அங்கு வந்தான்.

    “மாஜி என்ன ஆச்சு ?உங்கல்கு ,,,,,தலவலியா? இதோ நானு வரேன் ” என்று தனக்குத்தெரிந்தத்தமிழில் பேசித் தலைவலி பாம் கொண்டு வந்து தடவினான். ,பின் உள்ளே போய் தோசையும் கொண்டு வந்து “மாஜி இந்தா.. வாயைக்காட்டு,, தோசை சாப்பிடு” என்று ஆசையாகச் சொன்னான். ராஜம் மனம் நெகிழ்ந்தாள். அப்படியே அவனை அணைத்துக்கொண்டாள். இதையெல்லாம் பார்த்த சுரேஷுக்குக் கோபம் கோபமாக வந்தது. “இந்த அம்மா என்ன இத்தனை மாறி விட்டாள்?  எப்போ பாத்தாலும் அப்துலையே கொஞ்சறாளே”

    “ஏண்டா சுரேஷ் என்ன செய்யறே “ என்று கேட்டபடி மோகன் அங்கு வந்தான். “ஒன்றுமில்லை அண்ணா… இந்த அப்துல் அம்மாவை என்ன மக்கன்{வெண்ணெய்} வைத்தானோ நன்னா மயக்கி  வச்சிருக்கான். அன்று நான் கிரிக்கெட் பார்க்கறச்ச இந்த  அம்மா அவனுக்காக இராமயணம் சானல் மாத்தினா  தெரிமா உனக்கு?’

    “ஆமாம் என்னிடமும் அம்மா அன்னிக்கு சொன்னாள் .  இந்த அப்துல் எனக்குக்கால் பிடிச்சு விடறான், பாத்திரமும் அலம்பித் தரான், ரொம்ப அன்பாக பழகறான்.  நீங்க  ஆபீஸ்லேந்து வரதும்  தெரிலை.  ஆபீஸ் போவதும்
    தெரிலை .. என்ன பிள்ளைகள்டா நீங்கள்” என்றாள்.

    இப்படிச்சொல்லும்போதே ராஜம் அங்கு வர அண்ணா தம்பி  பேச்சு நின்றுவிட்டது. இந்த நிலையில் தான் மூத்தவன் மோஹனுக்கு பெண் பார்த்து பெண்வீட்டார் போபாலிலிருந்து வருவதாகச்சொன்னார்கள். அவர்கள்தில்லிக்கு ஒரு
    கல்யாணத்திற்கு வருவதாகவும், அப்போது பிள்ளையும் பெண்ணும் பார்த்து விடட்டும் என்று தீர்மானிக்கப்பட்டது.    

    வாசலில் வண்டி வந்து நின்றது.  “அப்துல் இங்க வா  . வாசல்ல அவாள்ளாம்  வந்துட்டா போலிருக்கு  போய் அழைச்சுண்டு வரலாம்  வா ” என்றபடி அப்துலையும் அழைத்து வந்தாள்.

    பெண்ணின் தாயார்   அவனை ஏற இறங்கப்பார்த்து “ஆமாம் யார் இந்தப்பிள்ளை ‘? என்று கேட்டாள்.

    “இவன் தான் அப்துல். என் பிள்ளை “என்று அவனை அணைத்துக்கொண்டாள் ராஜம். பெண்ணின் தாய் முகம் சுளித்தாள். பின் ராஜம் அந்த அப்துல் கையில் டிபன் காபி எல்லாம் கொடுத்து அனுப்பினாள்.

    பெண்ணின் அம்மா அவ்வளவு ஆசாரம் இல்லை என்றாலும், அப்துல் பூஜை அறை, கிச்சன் என்று நுழைவது அவளுக்குப் பிடிக்கவில்லை.. பெண் சுமதியும் மோஹனும் தன்னை மறந்து தனியாகப் பேசிக்கொண்டு பின் திருமணத்திற்கு  ஒகே சொல்லி விட்டார்கள். நிச்சியதார்த்தம் மிக நன்றாக நடந்தது ……………

    ”போஸ்ட்” என்று தபால்காரன் ஒரு கடிதத்தைப்போட ராஜம் அதை எடுத்துப்படித்தாள். அவள் அப்பா எழுதியிருந்தார். அதில் அப்துலால்தான் கல்யாணம் நின்றுவிட்டதாகவும், இரு மகன்கள் ராஜாப்போல் இருக்க, இந்த அப்துலை ஏன் வளர்க்க வேண்டும்.   இந்தப்பையனுக்கும் அந்தக்குடுமபத்திற்கும் எதாவது சம்பந்தம் இருக்குமா என்ற சந்தேகம் வந்துவிட்டது அவர்களுக்கு என்றும் எழுதியிருந்தார். இதைப்படித்த ராஜத்திற்கு கையும் ஓடலை காலும் ஓடலை.

    அவசரம் அவசரமாகப் போனை அடித்தாள் தன் அப்பாவுக்கு…….

    “அப்பா உங்க   லெட்டர் வந்தது.    என்ன இது இப்படி அபாண்டமாகப்பழி…”

    “நீ ஏன் அந்த அப்துல் பயலை வளைய வர விட்டாய்?  அதுதான் கல்யாணமே நின்று விட்டது இப்போ ..பார்த்தாயா ?அதன் விளைவை ……”

    “என்ன அப்பா…நீங்க ! அம்மா அப்பா இல்லாத ஒரு பிள்ளையை வளர்ப்பது தப்பா”?

    “அதுசரி ராஜம்…. இப்போ என்ன செய்யப்போறே “?

    வேறு வரன் வராமலா போய்விடும்? கடவுள் விட்ட வழி “

    பேச்சு முடிந்தது. கல்யாணமும் நின்றுவிட்டது. 

    காலம் உருண்டது. வேறு பெண் மோஹனுக்கு நிச்சியம் ஆயிற்று.

    “சுரேஷ் அந்த அப்துலை என் கல்யாணத்திற்கு அப்புறம் வரசொல்” இந்த வரனையும் நிறுத்திவிடப்போறான் ” என்றான் மோஹன் .

    “அம்மா அந்த அப்துல் பயலை கிட்நேப் செய்து கல்யாணம் ஆனபின் கொண்டுவிடுகிறேன் “என்று கிண்டல் அடித்தான் சுரேஷ்.

    மோஹனும் சுரேஷும் தமிழர்கள் ஆனாலும் இந்தியில் பேசிக்கொண்டார்கள். ஆனால் அப்துலோ தமிழ் நன்றாகப்பேசினான். கடவுள் கிருபையினால் ஒரு தடங்கலுமில்லாமல் திருமணம் நடந்தது. கல்யாணம் ஆனவுடனேயே மோஹன் தனிக்குடித்தனம் போய் விட்டான். இரண்டாவது மகனோ பூனாவில் வேலை சேர்ந்து
    விட்டான். சிவராமனும் ராஜமும் தனித்து விடப்பட்டனர். ஆனால் பிள்ளைக்குப்பிள்ளையாக அப்துல் இருந்து காலேஜையும் முடித்தான். வேலையும் தேடினான்.

    கொரியர் சர்விசில் ஒரு நல்ல வேலை கிடைத்தது. 

    அன்று முதல் சம்பளத்தை வாங்கி வீடு வந்து “மா..ஜி ஆசீர்வாதம்செய்யுங்கோ. ” என்று அவள் காலிலும், சிவராமன் காலிலும் விழுந்தான். தன் சம்பளத்தை அவள் கையில் கொடுத்தான்..

    “இந்த சம்பளத்தை உன்  பையா   பாபிட்ட { baiya  babi  அண்ணா  ,மன்னி } கொடு அப்துல் எங்கிட்ட ஏன் தர  ?”

    ” மாஜி  எனக்கு எல்லாமே நீங்க தான்  அதுக்கப்பறம்தான் எல்லாம் ” என்றபடி தன் இரு கைகளைக்கூப்பினான்.

    அடுத்த வீட்டிலிருந்து ஒரு இந்திபஜன் கேட்டது

    “பிரேம் ஈஸ்வர் ஹை ஈஸ்வர் பிரேம் ஹை” {அன்பே கடவுள் கடவுளே அன்பு } ராம் ரஹீம் புத்த கரீம்.. கோயீ பி நாம் ஜபோ ரெ மனுவா ஈஸ்வர் ஏக்ஹை {ராம் என்று சொன்னாலும் ரஹீம் புத்தர் கரீம் என்று எந்தப் பெயர் சொன்னாலும் எல்லாமே ஒன்றுதான் ஈஸ்வரன் ஒன்றுதான் }……

    ராஜம் அப்துலை அணைத்தாள். சொந்த மகன்கள் எங்கேயோ இருக்க இந்த வளர்ப்பு மகன், அதுவும் பீஹாரைச்சேர்ந்த முஸ்லிம் இப்படி அன்பைப்பொழிகிறான். அவள்    கண்களிலிருந்து கண்ணீர் பெருகியது,    அங்கு        அன்பே தெய்வமானது.

    Share
  • கனவுச் சாவி

    தமிழ்த்தேனீ

    வழக்கமாய் வருவது போலவே அன்றைக்கும் கனவு வந்தது லக்ஷ்மிக்கு. வேலைகளை முடித்துவிட்டு அக்கடா என்று சற்று நேரம் படுக்கலாம் என்று படுத்தால், உடனே உறக்கம் கண்களை சுழற்றுகிறது.

    சரி தூங்குவோம் என்று முடிவெடுக்கும் முன்னரே தூங்கிப் போவது அவள் வழக்கம்.  அன்றும் அப்படியே வேலைகளை முடித்துவிட்டு  மதியம் கண்ணயர்ந்தாள் லக்ஷ்மி.

    எப்போதும் வருவது போலவே கனவில் அவளுக்கு பிடித்த இஷ்ட தெய்வம் கிருஷ்ணன்.

    “என்ன வந்து விட்டாயா? சற்று நேரம் தூங்கலாம் என்று கண்ணயர்ந்தால் உடனே நீ வந்துவிடுகிறாய். சரி  சொல் என்ன வேண்டும்” என்றாள் லக்ஷ்மி.

    “எனக்கு என்ன வேண்டும்? உனக்கு வேண்டுவதை என்னிடம் கேட்டுப் பெறுவதற்கே,  நீ இந்த மதிய வேளையில் தூங்குகிறாய் என்று  எனக்குத் தெரியும். இன்று உன் தேவை என்னவோ அதைத் தெரிந்து கொண்டு  அதை நிறைவேற்றிவிட்டுப் போகலாம் என்றுதான் வந்தேன்” என்றான் கிருஷ்ணன்.

    “கிருஷ்ணா, உனக்குத்தான் தெரியும். எனக்கு படுத்தால் உடனே உறக்கம் வந்துவிடுகிறது. அது மட்டுமல்ல கனவும் வந்துபோகிறது. கனவில் வருவதெல்லாம் அப்படியே நடக்கவும் நடக்கிறது.” என்றாள்  லக்ஷ்மி.

    “நல்லதுதானே ? எத்தனை பேருக்கு, இது போல் முன்கூட்டியே என்ன நடக்கப் போகிறது என்று தெரிகிறது. இது உனக்குக் கிடைத்த பெரும் பாக்கியமல்லவா” என்றான் கிருஷ்ணன்.

    “கிருஷ்ணா, இந்த மானுட ஜென்மத்தில் வருவதை முன்கூட்டியே அறிந்து கொள்ள முடியாதிருப்பதும், பழையதை மறந்து போவதும் தானே வரப்ப்ரசாதங்கள். அந்த இரு வரப்ரசாதங்களில் ஒன்றை இழந்துவிட்டேனே என்று ஒரு புறம் வருத்தமாக இருந்தாலும் இன்னொரு புறம் கனவின் மூலமாக உன்னை சந்திக்கும் பாக்கியம் பெற்றிருக்கிறேனே அதை எண்ணியே மகிழ்கிறேன்.

    இன்று நான் கண்ட கனவு என்னை நிம்மதி இழக்கச் செய்து விட்டதே, ஆமாம் நான் இறந்து போவது போலவும், என் கணவர்  வருத்தமாக இருப்பது போலவும்  கனவு கண்டேன்.”

    “அப்படியா நல்லதுதானே ! நீ சீக்கிரம் என்னை வந்து அடையப் போகிறாய். அதற்கென்ன கலக்கம் ?” என்றான் கிருஷ்ணன்.

    “சீக்கிரமாக உன்னை வந்து அடையப் போகிறேன் என்பது மகிழ்ச்சியாக இருந்தாலும், வேறு ஒரு சிந்தனை என்னை வருத்துகிறது.” என்றாள் லக்ஷ்மி.

    “என்னை வந்து அடைவதை விட மகிழ்ச்சியானது வேறொன்று இருக்க முடியுமா? பிறகென்ன  வருத்தும் சிந்தனை உனக்கு ?”,  என்றான் நமுட்டுச் சிரிப்புடன் கிருஷ்ணன்.

    “உனக்குத் தெரியாததா! எல்லாம் அறிந்தவன் நீ , வேண்டுமென்றே  என்னைச் சீண்டுகிறாய்.

    நீ எனக்கு ஒரு வரம் போல் கொடுத்தாயே ஒரு வாழ்க்கைத் துணைவர், அவருடைய குணம் என்னவென்று உனக்குத் தெரியாதா?

    எப்போதோ நான் செய்த புண்ணியத்தின் பலனை எனக்கு  வாழ்க்கைத் துணை அமைத்துக் கொடுப்பதில் செலவிட்டிருக்கிறாய் நீ.

    அவருக்கு கள்ளம் கபடம் தெரியாது, எல்லாருக்கும் என்ன வேணும்ன்னு பாத்து பாத்து செய்யக் கூடிய மனுஷன், ஆனா அவருக்கு என்ன வேணும்னு அவருக்கே தெரியாது.

    அவங்க அம்மா. அதான் என் மாமியார் எனக்கு கல்யாணம் ஆன புதுசுலே என் கையைப் பிடிச்சிண்டு சொன்ன வார்த்தைகள் அப்பிடியே இப்பவும் காதிலே ஒலிக்கறதே, 

    ‘லக்ஷ்மி எல்லாரும் நெனைச்சிண்டுருக்கா உன்னை இவன்கிட்ட ஒப்படைச்சிட்டோம்னு. எனக்குதான் தெரியும்  இவனை உங்கிட்ட ஒப்படைச்சிருக்கேன்னு. அவனோட நேர்மையிலே, புத்திசாலித்தனத்திலே எனக்கு அவநம்பிக்கை இல்லே. ஆனா இந்தக் காலத்துக்கு வேண்டிய கெட்டிக் காரத்தனம் இவனுக்கு கிடையாது. வெளுத்ததெல்லாம் பாலுன்னு நெனைப்பான், எல்லாரையும் நம்புவான். யார் எது கேட்டாலும்  தனக்கு இருக்கோ இல்லையோ எடுத்துக் குடுத்துட்டு  அவங்க திருப்பித் தருவாங்கன்னு எதிர்ப்பார்த்திண்டே இருப்பான்.

    யார்கிட்டே எப்பிடிப் பேசணும்னு தெரியாது, எவ்ளோ கள்ளம் நிறைந்த உலகம் இதுன்னு தெரியாது. உதவின்னு கூப்பிட்டா ஓடிப்போயி உதவிட்டு அவங்க தூக்கி அடிக்கும்போது வருத்தப்பட்டுண்டு இருப்பான். இவனை நான் உங்கிட்ட ஒப்படைக்கிறேன்,இனிமே நீதான் இவனைப் பாத்துக்கணும்’ னுட்டு சொல்லி இவரை எங்கிட்ட ஒப்படைச்சாங்க.

    நானும் என்னாலானது இவ்ளோ நாள் அவருக்கு உதவியா இருந்துட்டேன். இப்போ நான் முதல்லேயே போகப் போறேன்னு தெரிஞ்சதுக்கப்புறம் இவரைப் பத்தின கவலைதான் அதிகமாயிடிச்சு.

    இவரு ஒரு சொல் பொறுக்க மாட்டாரு. அனிச்ச மலர் மாதிரி மென்மையான மனசு. இனிமே இவரை யாரு கவனிக்கப் போறாங்க? நெனைச்சுப் பாத்தாவே கவலையா இருக்கு.

    கிருஷ்ணா நீ நான் எது கேட்டாலும் நிறைவேத்தி வெச்சே, எனக்கு ஒரு குறையும் வைக்கலே. எனக்கு உன்னை விட்டா வேற யாரும் கிடையாது. உன்னையே சரண் அடைஞ்சு கவலை இல்லாம இருந்தேன்.

    இப்பவும் எனக்கு நீதான் உதவணும், யாருக்குமே கிடைக்க முடியாத பாக்கியத்தை எனக்கு குடுத்தே. எவ்ளவோ மகான்களுக்கெல்லாம் கிடைக்காத பாக்கியம் எனக்கு குடுத்திருக்கே. நான் இந்த வாழ்க்கையிலே இருந்துண்டே உன்னை அப்பப்போ பாத்து பேசறேன்.

    நான் ஒரு வரம் கேப்பேன் குடுப்பியா ?”, என்றாள் ஏக்கமாக! 

    “நீ என்ன கேக்கப் போறேன்னு எனக்குத் தெரியும்.  வாழ்க்கையிலே பல பூட்டுகள் இருக்கு. ஆனா எல்லாப் பூட்டுக்கும்  சாவி கிடையாது. சில பூட்டுக்கு மட்டும்தான் சாவி இருக்கு, அந்தச் சாவிகள் கூட யார்கிட்டே இருக்கணுமோ அவங்க கிட்டே இருக்கறதில்லே, வேற எங்கேயோ இருக்கு. அதுனாலே பல பூட்டுக்கள் இன்னும் திறக்கப் படாமையே இருக்கு. சரி கேளு” என்றான் கிருஷ்ணன் புன் சிரிப்புடன்.

    “எனக்கு முன்னாடி அவரைக் கூட்டிண்டு போயிடு. அதுக்கு அப்புறம் என்னை கூட்டிண்டு போ. அது முடியலைன்னா  எங்க ரெண்டு பேரையும் ஒண்ணா கூட்டிண்டு போயிடு. அவரை மட்டும் தனியா விட்டுட்டு நான் மட்டும் வந்தா  நான் குடுத்த வாக்கை நிறைவேத்த முடியாம போயிடும்”,  என்றாள் லக்ஷ்மி. 

    நாளையிலேருந்து உனக்கு கனவே வராது  என்றான் கிருஷ்ணன் புன்சிரிப்புடன்

    Share
  • இது என் சொத்து

    முகில் தினகரன்

    அவள்….ஸ்ருதி!

    ‘இயற் பெயரா?’ என்று கேட்டால், பதில் சொல்லாமல் அழகாய்ப் புன்னகைப்பாள். காரணம் அவள் தொழிலுக்கு அதெல்லாம் தேவையில்லாத கேள்வி.

    ‘பணம் கொடுத்து..சுகம் வாங்கிப் போக வந்தவனுக்கு…பெயர் எதற்கு?…அப்படித்தான் அவசியமென்றால்…எந்தப் பெயர் பிடிக்குமோ அதை வைத்துக் கொள்ள வேண்டியதுதானே?…’ என்பாள். அதே நேரம், அவளை யாராவது கொச்சையாக விபச்சாரி என்றோ…வேசி என்றோ குறிப்பிட்டு விட்டால் அவ்வளவுதான், கொதித்தெழுவாள்.

    ‘நோ…இத்தோட சரி…இனிமே…இந்த மாதிரியெல்லாம் என்னைக் கூப்பிடுற வேலை வெச்சுக்காதீங்க…அப்புறம் மரியாதை கெட்டுடும்…!…வேணும்ணா…சி.ஜி ன்னு சொல்லுங்க…சி.ஜின்னா…கால் கேர்ள்…ஓ.கே.வா?’ என்பாள்.

    அந்த சி.ஜி.யின் இன்றைய புரோக்ராம் கோவையைச் சேர்ந்த இளம் தொழிலதிபரான சஞ்சீவ் ரங்க பிரசாத்துக்கு கம்பெனி கொடுப்பது. அதற்காகத்தான் அவனுடன் ஊட்டி மலையேறி…சேரிங் கிராஸ் பகுதியிலிருந்த அந்த உயர்தர ஹோட்டலில் அறை எண் 336-ல் அரை குறை ஆடையுடன்…நுரைப்பூ மெத்தையில் இந்த நிமிடம் படுத்துக் கிடக்கிறாள்.

    அறையின் காலிங் பெல் நாசூக்காய் சிணுங்க. பாத்ரூமிலிருந்த சஞ்சீவ் ரங்க பிரசாத், ‘ஹேய்…யாருன்னு பாருடி’ என்றான் அங்கிருந்தபடியே,

    எழுந்து, ஒயிலாய் நடந்து கதவைத் திறந்தாள்.

    வெய்ட்டர் உணவுப் பதார்த்தங்கள் தாங்கிய வண்டியுடன் நிற்க, விலகி வழி விட்டாள்.

    வுண்டியைத் தள்ளிக் கொண்டு உள்ளே வந்தவன், அதை அறையின் டைனிங் டேபிள் அருகில் நிறுத்தி விட்டு, ‘வேற ஏதாவது வேணும்னா கால் பண்ணுங்க மேடம்’ என்று சொல்லி விட்டுத் திரும்பிய போதுதான் அவள் அதைக் கவனித்தாள்.

    அவன் பேண்ட் பாக்கெட்டிலிருந்து வெளியே தொங்கிக் கொண்டிருந்தது ஒரு தாலி.

    ‘ஹேய்..ஹேய்..ஒன் மினிட்..அதென்ன பேண்ட் பாக்கெட்டில்?’ அவள் மிரட்டலாய்க் கேட்க,

    நடுங்கிப் போனான் அந்த வெய்ட்டர். ‘மேடம்..மேடம்…சத்தம் போடாதீங்க மேடம்…ப்ளீஸ்’

    ‘நோ…உன்கிட்ட ஏதோ தப்பிருக்கு….உண்மையைச் சொல்லு எங்க கெடைச்சது உனக்கு இந்தத் தாலி?’

    ‘மேடம்…மேடம்…ப்ளீஸ் மேடம்’ அவன் பதில் சொல்லாமல் ஒரு வித பதட்டத்துடன் கெஞ்ச,

    ‘ச்சூ…மொதல்ல இப்படிக் கெஞ்சறதை நிறுத்திட்டு அது எப்படி உன் பாக்கெட்டுக்கு அதைச் சொல்லு…’

    அவன் அப்போதும் கல்லுளிமங்கனாய் நின்றான்.

    ‘ஓ.கே…நான் ஹோட்டல் மேனேஜரைக் கூப்பிட்டுப் பேசிக்கறேன்’ சொல்லியவாறே அவள் போனைத் தொட,

    ‘அய்யோ…அய்யோ…வேண்டாம் மேடம்..நான் உண்மையைச் சொல்லிடறேன் மேடம்….இங்க டிபன் கொண்டு வந்த மாதிரியே பக்கத்து ரூமுக்கும் ஒரு வண்டி கொண்டு போனேன்…அதை உள்ளார கொண்டு போய் விட்டுட்டுத் திரும்பி வரும் போது பார்த்தேன்…டீப்பாய் மேலே…இந்த தங்கத்தாலி வெச்சிருந்திச்சு….அந்த அறையில் தங்கியிருந்த பெண்தான்; தன்னோட தாலி கழட்டி வெச்சிட்டுக் குளிக்கப் போயிருந்தாங்க…அந்தப் பெண்ணோட புருஷன் நான் வந்ததையே கவனிக்காம பால்கனிப் பக்கமா நின்னு மும்முரமா செல்போன் பேசிட்டிருந்தாரு…பார்த்தேன்.. டபக்னு எடுத்துப் பாக்கெட்ல போட்டுட்டு வந்திட்டேன்…’

    ஸ்ருதி அவனை எரித்து விடுபவள் போல் பார்க்க,

    ‘என்னைய மன்னிச்சுடுங்க மேடம்…இப்பவே இதைக் கொண்டு போய் நானே திருப்பிக் குடுத்திடறேன் மேடம்…என்னையக் காட்டிக் குடுத்துடாதீங்க மேடம்…ப்ளீஸ்’

    ‘நோ…உன்னைய நான் நம்ப மாட்டேன்..’

    சட்டென்று பாக்கெட்டிற்குள் கையை விட்டு அதை வெளியே எடுத்தவன், ‘வேணா நீங்களே…ஏதோ ஒரு காரணம் சொல்லிக் கொடுத்திடுங்க மேடம்…என்னைய மட்டும்…’

    ‘ஓ.கே..நானே குடுத்திடறேன்.’ ஏன்றபடி அவள் அதை வாங்கிக் கொள்ள, தயங்கியபடியே வெளியேறினான் வெய்ட்டர்.

    பத்து நிமிடங்களுக்குப் பிறகு பாத்ரூமிலிருந்து வெளியே வந்த சஞ்சீவ் ரங்க பிரசாத் அந்த விநாடியில் அறைக்கு வெளியே கேட்ட காலடிச் சப்தங்களைக் கேட்டு அலறினான். ‘ஓ..காட்…போலீஸ் ரெய்ட்….போச்சு…போச்சு….என் மானமே போச்சு…நாளைக்குப் பேப்பர்ல ‘இளம் தொழிலதிபர் பலான பெண்ணுடன் கைது’ன்னு கொட்டை எழுத்துல போடப் போறான்…’ கைகளைப் பிசைந்தபடி அறைக்குள் இங்குமங்கும் நடந்தவனை புன்னகையுடன் பார்த்தாள் ஸ்ருதி.

    ‘சிரிக்கறியா?….உனக்கு இதெல்லாம் பழகின விஷயம்…அதனால பயமில்லாமச் சிரிக்கறே…பட்..எனக்கு?…பிரெஸ்டிஜ்  இஷ்யூ’

    கதவு தட்டப்பட்டது.

    நடுங்கினான்.

    மீண்டும் கதவு தட்டப்பட, சிறிதும் தயக்கமின்றிப் போய் திறந்தாள் ஸருதி.

    வெளியே நின்று கொண்டிருந்த இன்ஸ்பெக்டரும், கான்ஸ்டபிள்களும் அவள் கழுத்தில் மின்னிக் கொண்டிருந்த தாலியையும்…உள்ளே வெற்றுடம்புடன் நின்று கொண்டிருந்த சஞ்சீவ் ரங்க பிரசாத்தையும் மாறி மாறிப் பார்த்து விட்டு,

    ‘ஸாரி மேடம்…ஸாரி ஃபார் த டிஸ்டர்பன்ஸ்….’என்று சொல்லி விட்டு நகர்ந்தனர்.

    கதவைத் தாழிட்டு விட்டுத் திரும்பிய அவளை வியப்பு மேலிடப் பார்த்தான் சஞ்சீவ் ரங்க பிரசாத்.

    ‘ரொம்பக் குழம்பாதீங்க…இதோ…இந்தத் தாலிதான் இப்ப நம்மைக் காப்பாத்தியிருக்கு’ என்றாள்.

    அப்போதுதான் அதைக் கவனித்தவன், ‘உன் கழுத்துல…எப்படி…தாலி?’

    சொன்னாள்.

    முழுவதையும் கேட்டு முடித்தவன் வெகுவாய் ஆச்சரியப் பட்டான், ‘நம்பவே முடியலை…இப்படியெல்லாம் கூட நடக்குமா?’

    ‘ஓ.கே…நான் இப்பவே போய் இந்தத் தாலியை அந்தப் பொண்ணுகிட்டக் குடுத்திட்டு வந்திடறேன்…’

    வேகவேகமாய்ப் போன ஸ்ருதி அதே வேகத்தில் திரும்பி வந்தாள்.

    ‘ஏன்?…என்னாச்சு?…திருப்பிக் குடுக்கலையா?’ சஞ்சீவ் ரங்க பிரசாத் கேட்க,

    ‘ரூம் பூட்டியிருந்திச்சு…வெய்ட்டர்கிட்டக் கேட்டேன்…அவங்க அப்பவே…ரெய்டெல்லாம் வர்றதுக்கு முன்னாடியே காலி பண்ணிட்டுப் போயிட்டாங்களாம்’

    ‘சரி…விடு’ என்றபடி அந்தத் தாலியை அவள் கையிலிருந்து வாங்கி சஞ்சீவ் ரங்க பிரசாத் திடீரென்று பிளிறினான், ‘ஹேய்…இதுல ஒரு லாக்கெட் இருக்கு’

    ‘அப்ப ஓப்பன் பண்ணிப் பாருங்க…நிச்சயம் அதுல போட்டோ இருக்கும் ..அதை வெச்சுக் கூட அவங்களைக் கண்டுபிடிக்கலாம்’

    அதைத் திறக்க முயற்சித்தவன் அது முடியாமல் போக, ‘ச்சை…இந்தா…நீயே திற’ என்றவாறு அவளிடம் தந்தான்.

    அதை வாங்கி வெகு எளிதாகத் திறந்தவள் அதிலிருந்த போட்டோவைப் பார்த்ததும் அதிர்ந்தாள். ‘இவன்….இவன்…ரமேஷ்’

    ‘அப்படின்னா…உனக்குத் தெரிஞ்சவனா…அப்பப் பிரச்சினையே இல்லை…ஈஸியாக் கண்டுபிடிச்சுக் குடுத்துடலாம்’

    ஆனால்…..ஸருதி அதை மறுப்பது போல் தலையை இட,வலமாய் ஆட்ட,

    ‘ஹேய்…நீ என்ன சொல்றே?’

    ‘இது…எனக்குச் சேர வேண்டிய தாலி…..இவன் என்னுடைய பழைய காதலன் ரமேஷ்…உண்மையைச் சொல்லப் போனா…இப்ப நான்…இந்தத் தொழிலுக்கு வர்றதுக்கே காரணம்…இவன்…இந்த ராஸ்கல்தான்’ ஸ்ருதி முகத்தில் லேசாய் சோகத் தீற்றல்கள்.

    ‘வாவ்…இண்ட்ரஸ்டிங்….சொல்லு…சொல்லு’ ஆர்வமானான் சஞ்சீவ் ரங்க பிரசாத்.

    ‘இவன் ஒரு காலத்துல என்னைத் தீவிரமாய்க் காதலிச்சான்….பேசிப் பேசியே என்னை மயக்கிய இவனை நம்பி நான் வீட்டை விட்டு இவன் கூட ஓடிப் போனேன்…ஆசை தீர ஒரு வாரம் என்னை அனுபவிச்சிட்டு…காணாமல் போயிட்டான்…அப்புறம் வீட்டுக்கும் திரும்ப முடியாம…வெளியிலேயும் நல்லவிதமா வாழ முடியாம…இந்தப் பாவத் தொழிலுக்கு வந்தேன்…’ சொல்லிவிட்டு அந்த பில்டிங்கே அதிரும் வகையில் வாய் விட்டுச் சிரித்தாள் ஸ்ருதி.

    அவளை விநோதமாகப் பார்த்த சஞ்சீவ் ரங்க பிரசாத், ‘எதுக்கு…இந்தச் சிரிப்புன்னு தெரிஞ்சுக்கலாமா?’ கேட்டான்.

    ‘ம்…ஒரு காலத்துல இந்தத் தாலி வராததால குடும்பப் பெண்ணான நான் விபச்சாரியானேன்….இன்னிக்கு இந்தத் தாலி வந்ததால விபச்சாரியான நான் குடும்பப் பெண்ணானேன்…என்ன ஒரு விந்தை?’

    சில நிமிட அமைதிக்குப் பின், ‘இந்தத் தாலியை நான் திருப்பித் தரப் போறதில்லை…ஏன்னா…இது என் சொத்து…எனக்குச் சேர வேண்டிய சொத்து’

    ‘ஓ.கே’ என்று தோள்களைக் குலுக்கிய சஞ்சீவ் ரங்க பிரசாத் ஸ்ருதியின் முகத்தில் தெரிந்த அந்தப் பிரகாசத்தை ரசித்தான்.

    (முற்றும்)

    Share
  • வந்து சொல்றேம்மா…

    முகில் தினகரன்

    நடுநிசி 12.00 மணி.

    அந்த தியேட்டர் முன் கூடியிருந்த இளைஞர் பட்டாளம் படு பிஸியாயிருந்தது. மறுநாள் ரிலீஸாகவிருக்கும் அவர்களின் அபிமான நடிகன்…தானைத் தலைவன்…தங்கத்தலைவன்…’இளஞ் சூறாவளி’ ராகவ் நடித்த படத்தை வரவேற்க விதவிதமான பேனர்களையும்…கட்அவுட்களையும்…தோரணங்களையும்…வரவேற்பு வளையங்களையும் தியேட்டர் வாசலெங்கும் கட்டி அசத்திக் கொண்டிருந்தனர். இரண்டாம் ஆட்டம் முடிந்து வெளியே வந்த ஜனக் கூட்டம் அங்கு அரங்கேறிக் கொண்டிருந்த அமர்க்களத்தைக் கண்டு திறந்த வாய் மூடாமலேயே வீடு வரை சென்றது.

    ஒரு மணி வாக்கில் ஓரளவிற்கு எல்லா வேலைகளையும் முடித்து விட்ட ரசிகர் கூட்டம் புறப்படத் தயாரானது.

    தன் அபிமான நடிகன் ‘ராகவ்’வுடன் தான் நிற்கும் புகைப்படத்தை ஒரு பெரிய பேனராக்கி தியேட்டர் முகப்பில் அதைக் கட்டி வைத்து அழகு பார்த்துக் கொண்டிருந்த மாவட்டத் தலைவர் பிரசனனாவிடம் வந்த ரசிகர் பட்டாளம்,

    ‘அப்ப..நாங்க புறப்படறோம் பிரசன்னா’

    ‘ஓ.கே.ம்மா…காலைல எல்லோரும் சரியா ஆறு மணிக்கு இங்க ஆஜராயிடணும்…சிறப்புக்காட்சி ஏழு மணிக்குத் துவங்கிடும்’

    ‘கண்டிப்பா வந்துடுவோம் பிரசன்னா’

    அவர்கள் சென்ற சிறிது நேரத்தில் பிரசன்னாவும் தன் பைக்கில் ஏறிப் பறந்தான்.

    காலை நாலரை மணியிருக்கும்,

    யாரோ கதவை ‘தட…தட’வெனத் தட்டும் ஓசை கேட்டு வாரிச் சுருட்டிக் கொண்டு எழுந்தான் பிரசன்னா. ‘யாராயிருக்கும்….இந்த நேரத்துல..?’ யோசனையுடன் கதவைத் திறந்து கொண்டு வெளியே வந்தான்.

    கோகலே வீதி ரசிகர் மன்றத்தைச் சேர்ந்த நாலைந்து இளைஞர்கள் நிற்க,

    ‘என்னப்பா….என்ன விஷயம்?’

    ‘வந்து…வந்து…’

    ‘அட..என்ன..’ சற்றுக் கடுப்புடனே கேட்டான் பிரசன்னா. இரவு லேட்டாய் வந்து படுத்ததில் கண்கள் தீயாய் எரிந்தன.

    ‘தியேட்டர் வாசல்ல நாம கட்டியிருந்த பேனர்களுக்கும் வளையங்களுக்கும் யாரோ தீ வெச்சுட்டாங்க பிரசன்னா…’

    ‘என்ன…தீ வெச்சுட்டாங்களா?’ அதிர்ந்து போன பிரசன்னா பதட்டமாய்க் கிளம்ப, பாதித் தூக்கத்தில் எழுந்து வந்த அவன் தாய், ‘டேய்…டேய்…என்னடா…என்னாச்சுடா?’ அவன் பின்னாடியே வந்து கேட்டாள்.

    ‘ப்ச்….வந்து சொல்றேன்மா…’ தாவிச் சென்று பைக்கில் ஏறி, மின்னல் வேகத்தில் பறந்தான்.

    தியேட்டர் வாசல் சாம்பல் குவியலாயிருந்தது. ஆங்காங்கே பாதி எரிந்த நிலையில் பேனர்களும்…கட்அவுட்களும்…வளையங்களும் கிடக்க, இன்னொரு புறம் அவன் ஆசை ஆசையாய்க் கட்டி அழகு பார்த்த, தலைவனோடு அவன் நிற்கும் பேனர் குற்றுயிராய்க் கிடந்தது.

    ஆத்திரத்தில் வலது கையால் இடது உள்ளங்கையில் ஓங்கிக் குத்தினான் பிரசன்னா.

    ‘யாரு…யாரோட வேலைடா இது…?’ கண்கள் சிவக்கக் கேட்டான்.

    எதிர் டீக்கடையிலிருந்து நிதானமாய் நடந்து வந்த அந்தக் கட்டம் போட்ட லுங்கிக்காரன், ‘தம்பி…நான் பார்த்தேன்…தீ வெச்ச ஆளுங்களை..’ என்றான் பிரசன்னாவைப் பார்த்து.

    பாய்ந்து வந்து அவன் சட்டைக் காலரைப் பற்றிய பிரசன்னா கத்தலாய்க் கேட்டான், ‘சொல்லு…சொல்லு…யாரு…யாரு?’

    ‘த பாரு தம்பி…அவனுக யாரு எவருன்னு எனக்குத் தெரியாது…ஆனா தீயை வெச்சுப்புட்டு அவனுக கத்திட்டுப் போனது மட்டும் எனக்கு நல்லாக் காதில் விழுந்தது’

    ‘சரி…அதையாவது சொல்லித் தொலை…என்ன கத்திட்டுப் போனானுங்க?’ சட்டைக் காலரை உதறலாய் விடுவித்தான் பிரசன்னா.

    ‘விக்டரி ஸ்டார் விமலன் வாழ்க..! விக்டரி ஸ்டார் விமலன் வாழ்க’ன்னு கோஷம் போட்டுக்கிட்டே ஓடினானுக’

    ‘நெனச்சேன்….அவனுகளாத்தான் இருக்கும்னு நெனச்சேன்!…விட மாட்டேன்டா.. இதுக்கு அவனுக பதில் சொல்லாம விட மாட்டேண்டா…!’ என்று ஓங்கிய குரலில் கத்திவிட்டு, தன் சகாக்கள் பக்கம் திரும்பி, ‘டேய்…ரவி…போடா…ஓடிப் போய் அஞ்சு லிட்டர் பெட்ரோல் வாங்கிட்டு வாடா’

    ‘பிரசன்னா….எதுக்கு நீ இப்ப பெட்ரோல் கேட்கறே?’ அந்த ரவி புரியாமல் கேட்க,

    ‘டேய்…கேள்வி கேட்காத…சொன்னதை மட்டும் செய்’

    அந்த ரவியாகப்பட்டவன் தயங்கி நிற்க, “இப்ப நீ போறியா?…இல்ல நானே போய் வாங்கிட்டு வரட்டுமா?” விழிகள் சிவக்க பிரசன்னா அதட்டிய அதட்டலில் ரவி பாய்ந்தோடினான்.

    பெட்ரோல் கேன் கைக்கு வந்ததும், ‘இளஞ் சூறாவளி ராகவ் ரசிக கண்மணிகளே….. நம்ம தலைவரோட பேனர்களையும்….கட்அவுட்களையும் அந்த விமலனோட ரசிகர்கள் கொளுத்தினதுக்கு நீதி கேட்டு என்னை நானே கொளுத்திக்கப் போறேன்…!’

    அந்த அதிகாலை நேரத்தில்….அவ்வளவாக கூட்டமில்லாத சாலையில்…தனக்குத் தானே பெட்ரோல் அபிஷேகம் செய்து கொண்டு, தனக்குத் தானே தீபாராதனை காட்டிக் கொண்டு, அபிமான நடிகனுக்காக அமரனானான் பிரசன்னா.

    காட்சிகள் ரத்து செய்யப்பட்டு…தியேட்டர் சீல் வைக்கப்பட்டது. ஆனால், தாறுமாறாய் கிடைத்த தீக்குளிப்பு விளம்பரத்தினால் இளஞ் சூறாவளி ராகவ்வின் திரைப்படம் ரிலீஸ் ஆன மற்ற எல்லாத் தியேட்டர்களிலும் பிய்த்துக் கொண்டு ஓடியது.

    தமிழகமெங்கும் பத்தே நாளில் ஐம்பது நாள் வசூலை வாரிக் குவித்தது.

    தனக்காக உயிரை மாய்த்துக் கொண்ட அந்த ரசிகனின் குடும்பத்திற்கு ஒரு சொற்ப….அற்ப….தொகையை பெரும் விளம்பர ஏற்பாட்டிற்குப் பிறகு வழங்கிய இளஞ்சூறாவளி, தன் படத்தின் நூறாவது நாள் விழாவிற்காக காத்திருந்தார்.

    இரவு 11.30.

    இளஞ் சூறாவளி ராகவ்வின் பிரத்யேக கைப் பேசி ராகமிசைக்க எடுத்துப் பார்த்தார். ‘விக்டரி ஸ்டார் விமலன்’

    ‘ஹல்லோ…விக்டரி ஸ்டார் …எப்படியிருக்கீங்க?’ இளஞ் சூறாவளி சிரிப்புடன் கேட்க,

    ‘ஐ யாம் ஃபைன்!…அது சரி இளஞ் சூறாவளி…எப்ப உன் படத்தோட நூறாவது நாள் விழா?’

    ‘ம்ம்ம்….அதுக்கு இன்னும் இருபது நாளிருக்கே’

    ‘ம்…ம்…ஜமாய்ங்க…’ விமலன் சொல்ல

    ‘எல்லாம் உங்க தயவுதானே விமலன்?…நீங்க மட்டும் அன்னிக்கு உங்க ஆளுங்களை வெச்சு…அந்த தியேட்டர் முன்னாடி என்னோட ரசிகர்கள் கட்டின பேனர்களை எரிக்கலைன்னா…அந்தப் பையன் தீக்குளிப்பானா?…அப்படி அவன் தீக்குளிச்சதுதானே பெரிய விளம்பரமாகி…என் படத்தையே அமோக வெற்றியடைய வெச்சிருக்கு’

    ‘சரி…சரி…இப்ப நான் உங்களைக் கூப்பிட்டது எதுக்குன்னா…அடுத்த வாரம் என்னோட புதுப்படம் ரிலீஸாகப் போகுது…அந்தப் படமும் வெற்றிப் படமாகணும்…உங்க படத்துக்கு நான் எப்படி ஹெல்ப் பண்ணினேனோ, அதே மாதிரி நீங்களும் ஏதாவது ஹெல்ப் பண்ணி என்னோட படத்தையும் ஜெயிக்க வைக்கணும்’

    ‘செஞ்சுட்டாப் போகுது விமலன்…உங்க பின்னாடியும்….என் பின்னாடியும் லட்சக் கணக்குல முட்டாள் ரசிகனுங்க இருக்கற வரைக்கும் நமக்கென்ன கவலை?’ இளஞ் சூறாவளி ராகவ் சொல்லி விட்டுச் சிரிக்க,

    பதிலுக்குச் சிரித்தது விக்டரி ஸ்டார்.

    அதே நேரம்,

    மகன் சாவிற்குப் பின் பைத்தியமாகிப் போன அந்தப் பிரசன்னாவின் தாய் மகனின் போட்டோவைப் பார்த்துப் பேசிக் கொண்டிருந்தாள்.

    ‘ஏண்டா…”வந்து சொல்றேன்மா” ன்னுட்டுப் போனியே ஏண்டா வரலை? சொல்லுடா ஏண்டா வரலை?’

    (முற்றும்) 

    Share
  • பேச்சு

    முகில் தினகரன்

    ‘வயசாயிட்டா…தலைல இருக்குற முடிதான் கொட்டிடும்னு கேள்விப்பட்டிருக்கேன்…மூளையுமா கொட்டிடும்?…சனியன் என்னோட உயிரை வாங்கறதுக்குன்னே வந்து சேர்ந்திருக்கு…ஒரு ஒண்ணாங் கிளாஸ்; படிக்கற குழந்தையைக் கூப்பிட்டு…’இந்தா பாப்பா…போயி எலக்ட்ரிக் பில் கட்டிட்டு வா’ன்னு சொல்லி பணத்தையும் கார்டையும் குடுத்திருந்தா அது கூட அழகா போய் ஷநறுக்ஷகுன்னு கட்டிட்டு வந்திருக்கும்!…அறுபத்தியேழு…அறுபத்தியெட்டு வயசாச்சு…இந்த வேலையக் கூட கரெக்டாச் செய்ய முடியலை நீயெல்லாம் இத்தனை வருஷம் பொழைச்சு என்ன பிரயோசனம்?’

    மகள் சந்திரா வீட்டிற்குள் தீபாவளிப் பட்டாசாய் வெடித்துக் கொண்டிருக்க, தலையில் கையை வைத்தபடி வெளித் திண்ணையில் குனிந்து அமர்ந்திருந்தார் வெள்ளிங்கிரி. தான் முகம் தெரியாத ஒரு இளைஞனால் ஏமாற்றப் பட்டு விட்டது கூட அவரை வெகுவாய்ப் பாதிக்கவில்லை. மகளின் வாயிலிருந்து சரமாரியாய் வந்து விழும் அமிலத் துண்டங்கள்தான் அவரை உருக்குலையச் செய்திருந்தன.

    சில நிமிடங்களுக்குப் பிறகு, மெல்ல வீட்டிற்குள் எட்டிப் பார்த்து, ‘அம்மா…சந்திரா’ ஒருவித பயத்துடனே அழைத்தார்.

    ‘என்ன…என்ன எழவைக் கொட்டிக் குடுக்கப் போறே சந்திராவுக்கு?’ உள்ளிருந்து வார்த்தைச் சாட்டைகள் வந்து விழுந்தன.

    ‘ஒண்ணுமில்லம்மா….நெஞ்சு ஒரு மாதிரி எரிச்சலாயிருக்கு…ஒரு வாய் காப்பித் தண்ணி…கீது…’

    ‘க்கும்…நீ பண்ணிட்டு வந்த காரியத்துக்கு அது ஒண்ணுதான் கொறைச்சல்…சும்மா வாயை மூடிட்டு கம்னு கெட…அதையும் இதையும் கேட்டு..எரிச்சலை மூட்டாதே…!…ஹும்….என்னைப் பெத்தவ எப்படித்தான் உன் கூட பொழப்புத்தனம் பண்ணினாளோ..?…அது செரி…அவ எங்க முழுசாப் பொழச்சா…அதான் பாதியிலேயே பரதேசம் போயிட்டாளே’

    வெள்ளிங்கிரிக்கு மனைவியின் ஞாபகம் வந்தது. ‘லட்சுமி….நானும் நீயும் வாழந்த வாழ்க்கையைப் பத்தி இதுகளுக்கு என்ன தெரியும்?…பேசாம நீ போனப்பவே என்னையும் கூடக் கூட்டிட்டுப் போயிருக்கலாமல்ல லட்சுமி…இப்படி பெத்த மகள் வாயிலிருந்து கேட்கக் கூடாத பேச்சையெல்லாம் கேட்க வேண்டியிருக்கே லட்சுமி’

    மதிய உணவிற்காக வீட்டிற்கு வந்த மாப்பிள்ளை விநாயகம், திண்ணையில் வெளிறிப் போன முகத்துடன் அமர்ந்திருக்கும் மாமனாரைப் பார்த்துமே புரிந்து கொண்டார் அங்கு சந்திரா கதகளி ஆடிக் கொண்டிருக்கின்றாள் என்று.

    வந்ததும் வராததுமாய் கணவனிடம் கொட்ட ஆரம்பித்தாள் சந்திரா. ‘ஏங்க…உங்க அருமை மாமனார் இன்னிக்கு என்ன காரியம் பண்ணிட்டு வந்திருக்கார் தெரியுமா உங்களுக்கு?’

    விநாயகம் வாயைத் திறக்காமல் புருவ உயர்த்தலிலேயே ‘என்ன?’ என்று கேட்க,

    ‘எலக்ட்ரிக் பில் கட்டிட்டு வரச் சொல்லி பணத்தையும் காரடடையும் கொடுத்தனுப்பினா…ரெண்டையும் தொலைச்சிட்டு வந்து நிக்குது கெழம்’

    ‘அடடே…அப்படியா?…’என்ற விநாயகம் மாமானார் பக்கம் திரும்பி, ‘என்ன மாமா?…எங்க மிஸ் ஆச்சு?…வரிசைல நிக்கும் போதா?…இல்ல போற வழியிலேயேவா?’

    சட்டென்று இடை புகுந்தாள் சந்திரா, ‘நீங்க வேற…அங்க வரிசைல நிக்கும் போது எவனோ வந்து, ‘என்ன பெரியவரே வெய்யில்ல நிக்கறீங்க?…என்கிட்டக் குடுங்க நான் என்னுடையதோட சேர்த்து உங்களோடதையும் கட்டித் தர்றேன்’னு சொன்னானாம்…இதுவும் நம்பிக் குடுத்துட்டுப் போய்…எங்கியோ ஒரு நிழல்ல பராக்குப் பார்த்திட்டு உட்கார்ந்திருக்கு…அவன் நைஸா…எஸ்கேப் ஆயிட்டான்…அவன் குடுத்து வெச்சவன்..நாலு நாளைக்கு குவாட்டரும்…கோழி பிரியாணியுமா ஜமாய்ப்பான்’

    கள்ளம் கபடம், சூது வாது, பொய் புரட்டு;;;;…..எதுவும் தெரியாத…அந்தக் காலத்து மனிதரான தன் மாமனார் இந்தக் கால மனிதர்களின் தகிடுதத்தங்கள் பற்றிச் சிறிதும் அறியாதவராய் இருந்ததுதான் அவர் ஏமாந்ததற்கான சரியான காரணம் என்பதை யூகித்து விட்ட விநாயகம், ‘சரி…சரி…விடு..விடு…அதையே திரும்பத் திரும்பப் பேசறதில் என்ன ஆகப் போகுது?’ என்று தன் மனைவியை அடக்கினார்.

    கணவனின் சொல்லுக்கு கட்டுப்பட்டு; அமைதியாய் வீட்டிற்குள் சென்று அவருக்கு மதிய உணவு பரிமாறுவதில் முனைப்பானாள் சந்திரா.

    உணவை முடித்து விட்டு வழக்கம் போல் அரை மணி நேரம் உறங்கி எழுந்த விநாயகம், போகும் போது தன் மனைவியிடம் சொல்லி விட்டுச் சென்றார். ‘த பாரு சந்திரா…நீ பாட்டுக்கு ரொம்ப ஓவரா சத்தம் போட்டுப் பேசி அவரோட மனசை நோகடிக்காதே…பாவம்…ஏற்கனவே ரொம்ப நொந்து போயிருக்கார்’

    ஆனால், அதைத் துளியும் காதில் வாங்கிக் கொள்ளாதவளாய் மறுபடியும் முழக்கத்தை ஆரம்பித்தாள் சந்திரா.

    ‘அங்கங்கே…வயசான கிழடு கட்டைகளை ஏண்டா முதியோர் இல்லத்துல கொண்டு போய்த் தள்ளிடறாங்கன்னு இப்பத்தான் புரியுது…இப்படிக் கேனத்தனமா நடந்து…கழுத்தறுத்தா யார்தான்…எத்தனை நாளைக்குத்தான் பொறுத்துக்குவாங்க?’

    வெள்ளிங்கிரியின் அடிவயிற்றில் பசி தன் இருப்பை உணர்த்த ஆரம்பித்தது. ‘சாப்பாடு கேட்கலாமா?…வேண்டாமா?’ யோசித்தார்.

    ‘எதற்கெடுத்தாலும்…’நாங்கெல்லாம் செய்யுற எந்தக் காரியமும்…எந்தக் காலத்திலேயும் சோடையே போகாது’ ன்னு வாய் கிழியப் பேசுவியே…இப்ப எங்க போச்சு…அந்த அனுபவச் சனியனெல்லாம்?’

    சற்றும் வாய் ஓயாமல், வார்த்தைகளில் துளியும் பிசகின்றி, தங்கு தடையில்லாமல் மடை திறந்த வெள்ளமாய்…வானைக் கிழித்துக் கொண்டு கொட்டும் அடர்த்தி மழையாய்…அவள் பேசுவதையே கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்த வெள்ளிங்கிரியின் நினைவுகள் பின்னோக்கிச் சென்று அந்த நாளை எண்ணிப் பார்த்தது.

    அப்போது சந்திராவிற்கு மூன்று வயதிருக்கும். நல்ல நிறம், சதைப் பிடிப்பான கன்னம், மற்றும் கை கால்களுடன் ‘கொழு…கொழு’வென்றிருந்த அவளை பார்ப்பவர்கள் அனைவரும் ரசித்துக் கொஞ்சுவர். கொஞ்சிக் கொஞ்சி மகிழ்வர்.

    பிறகு அவளின் திக்குவாய் குறை பற்றித் தெரிய வரும் போது, ‘த்சொ…த்சொ..’என்று பரிதாபப்பட்டு ‘அழகை அள்ளிக் கொடுத்த ஆண்டவன் இப்படி அநியாயம் பண்ணிட்டானே!’ என்று இறைவனையே நிந்தனை செய்தபடி நகர்வர்.

    ‘ஏங்க…..காலைல நம்ம சமுக்குட்டி அண்ணன் வீட்டுக்குப் போயிருந்தேன்….ஊரிலிருந்து அவங்க பெரியாத்தா வந்திருந்தாங்க…அவங்க நம்ம சந்திராவோட குறையைக் கேள்விப்பட்டு…ஒரு நிவர்த்தி சொன்னாங்க…’ லடசுமி ஒரு நம்பிக்கையோடு சொல்ல,

    ‘என்ன…என்ன சொன்னாங்க?’

    ‘அவங்க ஊர்ல ‘புலிப்பாணி’ன்னு சித்தர் இருக்காராம்…காது கேட்காதவங்களுக்கு கேட்க வைக்கறாராம்…வாய் பேசாதவங்களைப் பேச வைக்கறாராம்…’

    ‘நெஜம்மாவா?’

    ‘ஆமாங்க…பிறவி ஊமைகளையே பேச வைச்சிடறவரு…நம்ம பொண்ணுக்கு என்ன வெறும் திக்குவாய்தானே?…நிச்சயமா சரி பண்ணிடுவார்னு எனக்குத் தோணுதுங்க’

    எப்படியாவது தங்கள் குலக் கொழுந்தின் திக்குவாய் குறை தீர்ந்தாப் போதும் என்கிற ஆர்வத்தில் கணவனும் மனைவியும் அந்தப் புலிப்பாணிச் சித்தரைப் பார்த்து, சில தீர்த்தங்களையும்…பச்சிலைச் சாறுகளையும் வாங்கி வந்து மகளுக்கு கொடுத்துப் பார்த்தனர். ம்ஹும்…ஒன்றும் பலிக்கவில்லை.

    சித்த வைத்தியம்…இங்கிலீஸ் வைத்தியம்…சீன வைத்தியம்…ஹோமியோபதி என்று எல்லா வகையிலும் முயற்சி செய்து பார்த்து விட்டுத் தோல்வியில் துவண்டு கிடந்தவர்களிடம் பக்கத்து வீட்டுப் பாட்டி ஒரு வைத்தியம் சொல்ல,

    ‘அடப்போ கெழவி…எல்லாப் பண்டுதமும் பண்ணிப் பார்த்தாச்சு…இது ஒண்ணுதான் பாக்கி’ என்று சலித்துக் கொண்ட லட்சுமியிடம்,

    ‘அப்படியேன் சொல்லுறே லட்சுமி?…அதையும்தான் முயற்சி பண்ணிப் பார்ப்போமே…ஒரு வேளை அதனால கூட சரியாகலாமில்ல?’ என்று சொன்ன வெள்ளிங்கிரி தானே தன் முயற்சியில் அந்தப் பாட்டி சொன்ன உபாயத்தைச் செய்து பார்த்தார்.

    என்ன ஆச்சரியம்…’திடு..திப்’பென்று ஒரு நாள் காலையில் சந்திரா எந்தவித திக்கலும்…திணறலும் இன்றி சரளமாய்ப் பேச ஆரம்பித்தாள். பெற்றவர்கள் மனம் குளிர்ந்து போய் ஒரு கோயில் பாக்கி வைக்காமல் எல்லாக் கோயில்களுக்கும் சென்று தங்கள் நன்றியைச் செலுத்தினர்.

    ‘ஏய்…கெழம்….வயித்துக்கு ஆகாரம் போடணும்கற நெனப்பிருக்கா?…இல்ல…பணத்தையும் கார்டையும் தொலைச்ச மாதிரி அந்த நெனப்பையும் தொலைச்சிட்டியா?…’ சந்திரா கத்தலாய்க் கேட்க,

    பழைய நினைவுகளிலிருந்து மீண்ட வெள்ளிங்கிரி மலங்க மலங்க விழித்தார்.

    ‘போ…உள்ளார தட்டுல போட்டு வெச்சிருக்கேன்…போய்க் கொட்டிக்க…’

    எழுந்து தள்ளாட்டமாய் நடந்து சென்றவரைப் பார்த்து,

    ‘தள்ளாட்டத்தைப் பாரு…தண்ணி போட்டவனாட்டம்’ என்று சந்திரா நக்கலாய்ச் சொன்னது வெள்ளிங்கிரியின் காதுகளுக்கு சரியாய்க் கேட்காமல் போனதற்குக் காரணம் பசியின் காதடைப்பு.

    (முற்றும்)

    Share
  • ஈரத்துணி

     தமிழ்த்தேனீ

    மாலை ஐந்து மணி. சிமெண்டும், மணலும் அப்பிக்கிடந்த உடலைக் கழுவிக் கொண்டே, “கிருஷ்ணா, எனக்கு இன்னிக்கு ஒரு 100 ரூபா குடு. நாளைக்கு பொழுது விடிஞ்சா தீபாவளி, நான் அடுத்த வாரம் உனக்கு திருப்பிக் குடுத்துர்ரேன்”, என்று சக தொழிலாளியிடம் எப்படியோ கொஞ்சம் பணம் கடன் வாங்கிக்கொண்ட கருப்பசாமி, அந்தப் பணத்தில் பட்டாசுகளும், புதிய துணிகளும், இனிப்பு பலகாரங்களும் வாங்கிக் கொண்டு வீடு வந்து சேர்ந்தார்.

    வீட்டுக்கு வரும்போதே மாலை 6 மணி ஆகிவிட்டது. கைகால்களைக் கழுவிக்கொண்டு நிமிர்ந்தவர், “ஆமாம் ரமேஷ் பெங்களூருக்கு போனானே ஒரு இண்டெர்வியூக்காக, இன்னிக்கு வந்துருவேன்னு சொன்னானே, எங்கே இன்னும் வரவில்லையா? விடிஞ்சா தீபாவளி !” என்றார்.

    அவர் மனைவி அஞ்சலை, “தீபாவளிக்கு முத நாளு வந்துருவேன்னு சொல்லிட்டுதானே போனான். இன்னிக்கு வந்துடுவான். நீங்க கைகாலைக் கழுவிகிட்டு உள்ளார வாங்க”  என்றாள்.

    அன்றாட கவலைகளை மறந்து கிருஷ்ணன் நரகாசுரனை வதம் செய்த நாளைக் கொண்டாடத் தயாராகிக் கொண்டிருந்தனர் மக்கள். மறு நாள் தீபாவளி. நாடெங்கிலும் தீபாவளிக் கொண்டாட்டங்கள் வாண வேடிக்கைகளும், பட்டாசுகளின் சத்தமும், சங்கு சக்கரம், மத்தாப்பூ, புஸ்வாணம் போன்றவைகளின் ஒளியும், கண்ணைப் பறித்தது.

    விதவிதமான புதிய வகைப் பட்டாசுகள் நகரெங்கும் விற்பனையாகியது. புத்தாடைகள் சரசரக்க, பிள்ளைகள் பட்டாசுகளும், அவற்றைப் பாதுகாப்புடன் கொளுத்த நீண்ட ஊதுபத்திகளும் கையில் வைத்துக்கொண்டு கபடமில்லாமல் சிரித்துக்கொண்டே, பட்டாசுகள் வெடித்து மகிழ்ச்சியாக விளையாடிக் கொண்டிருந்தனர். 

    வாங்கி வந்த பட்டாசுகளையும், இனிப்பையும் வீட்டில் மனைவியிடம் கொடுத்து, “பத்திரமாக வைய்யிம்மா”  என்றார். அவருக்கு அவருடைய மகன் ரமேஷ் கம்பி மத்தாப்பூ கொளுத்தவே பயந்து, “அப்பா இதைப் பிடிப்பா பயமா இருக்குது” என்று அலறியது  நினைவுக்கு வந்தது. சிரித்தபடியே கைகால்களை கழுவிக்கொண்டு  உள்ளே வந்து உட்கார்ந்து செய்தித்தாளைப் பிரித்தார்.

    செய்தித்தாளில் கொட்டை எழுத்தில் போட்டிருந்த செய்தியையும், புகைப்படங்களையும்  பார்த்து அதிர்ந்தே போனார் அவர். பட்டாசுக் கம்பனியில் தீப்பிடித்தது, பட்டாசு வெடித்ததில் பட்டாசுக் கம்பனியின் கட்டிடம் சிதறியது. அதில் வேலை செய்துகொண்டிருந்த  மக்கள், மற்றும்  ஒரு மைல் சுற்று வட்டாரத்தில் உள்ள மக்கள் பாதிப்பு, பலபேர் சடலம் தோண்டி எடுக்கப் படுகிறது.  தீக்காயத்துடன் அவதிப் படுவோரை எடுத்துக்கொண்டு அவசரகால ஊர்திகள் மருத்துவமனைக்கு விரைகின்றன. தீயணைப்பு வண்டிகள் தீயை அணைக்க போராடி வருகின்றன.

    நாட்டிலே இருக்கற மக்கள் சந்தோஷமா இருக்கணும்னு தங்களோட உயிரையும் பணயம் வெச்சு பட்டாசு தயாரிக்கறாங்க, இந்தப் பட்டாசுக் கம்பனீலே வேலை பாக்கறவங்க  வயித்துப் பொழைப்புக்காக கூலிக்கு வேலை பாக்கறாங்க.  இப்பிடி தீயிலே மாட்டிகிட்டு கருகிப் போயிட்டாங்களே, அவங்க குடும்பம் என்னா பாடு படுதோ என்று மனதுக்குள் வருந்தினார்.

    “இந்தப் பய ரமேஷுக்கு ஒரு நல்ல வேலை கிடைச்சுதுன்னா  கொஞ்சம் நிமிரலாம். சரி அவன் வந்தா தெரியும் வேலை கிடைச்சுதா, நல்ல வேலையா? சம்பளம் எவ்ளோ ஒண்ணும் தெரியலை, சரி அவன் வந்த வுடனே அவனைக் கேள்வி மேலே கேள்வி கேட்டு தொந்தரவு செய்யாதே. படிச்ச புள்ளே ஆயிரம் யோசனை இருக்கும், அங்கே என்னாகேள்வி கேட்டாங்களோ, வேலையைப் பத்தி என்னா சொன்னாங்களோ. கஷ்டப்பட்டு படிக்க வெச்சிருக்கேன் நல்ல வேலை கிடைக்காமையா போயிரும், என் மவன் கெட்டிக்காரன், எல்லாம் நல்லபடியா நடக்கும், கவலைப்படாதே, வந்தவுடனே இந்த பலகாரத்தைக் குடு, நிதானமாப் பேசிக்கலாம்”, என்று அஞ்சலைக்கு ஆறுதல் சொல்வது போல் தன் மனதையே தேற்றிக் கொண்டார் கருப்பசாமி.

    தட்டின் முன் வந்து உட்கார்ந்து, “காவ்யாகுட்டி, அப்பா தீபாவளிக்கு பட்டாசு, இனிப்பு,உனக்கு கௌனு எல்லாம் வாங்கிட்டு வந்திருக்கேன். அண்ணன் வந்துரட்டும், புது கௌனு போட்டுகிட்டு வெடியெல்லாம் வெடிக்கலாம்” என்றார். அஞ்சலை அவர் தட்டில் பலகாரத்தை வைத்தாள்.  

    “போப்பா, அண்ணன் மத்தாப்பூ கொளுத்தவே பயப்படும், நானு தைரியமா பட்டாசு வெடிப்பேன், அண்ணன் பயந்தாங்கொள்ளி”, என்று சிரித்தாள் காவ்யாகுட்டி.

    “வீட்டுலே யாருங்க, வெளியே வாங்க”, என்று ஒரு குரல் கேட்டது. அஞ்சலை எட்டிப் பார்த்து, “ஏனுங்க வாசல்லே போலீஸ் ஜீப் நிக்கிது, உங்களை யாரோ கூப்புடறாங்க” என்றாள்.

    “சரி வந்து சாப்படறேன்” என்றபடி எழுந்து போய் வாசலில் பார்த்தார்.

    ஒரு காவல் துறை ஜீப் அவர் வீட்டருகே வந்து நின்றது.

    “இந்தாங்க, இந்த தினசரியைப் பாருங்க”, என்று அவர் முன் ஒரு தினசரியை நீட்டினார்கள்.  தினசரியை பிரித்தவர் கண்ணில் பட்டது அந்தச் செய்தி. அதிர்ந்து போய் பேச்சு வராமல் அப்படியே தலையில் கைவைத்துக்கொண்டு கண்களில் நீர்வழிய உட்கார்ந்திருந்த அவரைப் பார்த்த அஞ்சலை, “என்னங்க ஏன் ஒரு மாதிரியா இருக்கீங்க ?” என்றாள். அவர் கையிலிருந்து தினசரியை வாங்கிப் பார்த்து அதிர்ந்தாள்.

    “வண்டியிலே ஏறுங்க”, என்று அவரையும், அஞ்சலையையும் அழைத்துக் கொண்டு  காவல்துறை ஜீப் புறப்பட்டது. “காவ்யாக் குட்டி, பத்திரமா வீட்டிலேயே இரு”,  என்ற கருப்பசாமியின் குரல் காற்றிலே தேய்ந்தது. 

    “உங்க புள்ளதானே இந்த ரமேஷ், உண்மையைச் சொல்லுங்க, உங்களுக்கும்  தீவிரவாதிகளுக்கும் எவ்ளோ வருஷமாத் தொடர்பு இருக்கு ?” என்றார் அதிகாரி.

    “ஐயா, சத்தியமாச் சொல்றேனுங்க. அதெல்லாம் ஒண்ணும் கிடையாதுங்க. என் மவன் பெங்களூருக்கு ஒரு இன்டெர்வியுவுக்காகப் போயிட்டு வரேன்னு போனான். இன்னிக்கு வந்துடுவேன்னு சொல்லிட்டுப் போனான்.  அவ்ளோதாங்க எங்களுக்குத் தெரியும்.  அவன் வந்தா உடனே நானே தகவல் சொல்றேனுங்க, நானே அவனைக் கையோட கூட்டிகிட்டு வந்து உங்க கிட்ட ஒப்படைக்கிறேனுங்க.”  என்று சொல்லிவிட்டு, வீட்டுக்கு வந்து  உள்ளே போய் அந்தப் பட்டாசு, இனிப்பு அத்தனையையும் எடுத்துவந்து   தண்ணீரில் முக்கி ஈரத்துணியில் முடிந்து  வெளியே எறிந்தார். 

    அக்கம்பக்கத்து மனிதர்கள் வேடிக்கை பார்க்கத் தொடங்கினர். அக்கம்பக்கம் மனிதர்கள், “என்னா ஆச்சு அஞ்சலை ?”ன்னு  அவருடைய மகனைப் பற்றி விசாரிக்கத் தொடங்கினர். ஒரு சிறுவன் “டேய் நம்ம ரமேசு குண்டு போட்டானாம்டா, அவனைப் போலீசு தேடுது ” என்று கத்திக் கொண்டே ஓடினான்.

    திபுதிபுவென்று கருப்பசாமியின் குடிசை வாசலில் அவரைத்தேடி கும்பலாக பத்திரிகைக்காரர்களும் வந்தனர். மக்கள் அவர் வீட்டு வாசலில் கூடினர். கண்ணீருடன் நிமிர்ந்த அவரிடம் ஒரு பத்திரிகை நிருபர், “நீங்க பத்திரிகை பாத்தீங்களா, உங்க மகன் தீவிர வாதிகளோட சேந்துகிட்டு குண்டு வெச்சிருக்கான்”  என்றார்.

    “பாத்தேனே…… என்னால தாங்கிக்க முடியலையே…. அப்பப்பா எத்தனை உயிர்கள், எத்தனை உடல்கள் சிதறிப்போச்சு, யாரு பெத்த புள்ளைகளோ, மனிதமே செத்துப்போச்சே, என் மவன் இப்பிடி பல உயிர் போறதுக்கு காரணமா தீவிர வாதியா மாறி குண்டு வைப்பான்னு நான் நெனைச்சு கூடப் பாக்கலையே, என் குடும்பத்திலே அவனாவது படிக்கணும்னு வயித்திலே ஈரத் துணியைக் கட்டிகிட்டு பட்டினியா பசியா உழைச்சேனே, இப்பிடி செஞ்சிட்டானே”,  என்று கதறினார் கருப்பசாமி, அஞ்சலை மயங்கிச் சாய்ந்தாள். பதறிப்போய் அவளை தாங்கிக் கொண்டு கண்ணீரைக் கட்டுப்படுத்த முடியாமல் குமுறிய அவர்.

    “அவனை எங்க மகன்னு சொல்லிக்கறதுக்கே அவமானமா இருக்கு.எங்களுக்கு மகனே பொறக்கலைன்னு நெனைச்சுக்கறேன். எப்பிடியாவது அவனைக் கண்டு பிடிச்சு…. கொன்னுடுங்க ! மனிதத்தையே அழிக்கிற இந்த தீவிர வாதத்திலே ஈடுபடற நரகாசுரன்களை எந்த கிருஷ்ணன் வந்து எப்போ கொல்றானோ, அப்போதான் நம்ம உலகத்துக்கே உண்மையான தீபாவளி அவனைக் கொன்னுடுங்க… கொன்னுடுங்க…” என்று கதறினார் கருப்பசாமி !

    Share
  • நாத்திகம்

    தமிழ்த்தேனீ

    என்னது, ராசைய்யா இறந்து போயிட்டாரா ! அதிர்ச்சியா.. துக்கமா… ஆச்சரியமா… ஏதோ ஒன்று தாக்கியது வேணுகோபாலை. செய்தி கேள்விப்பட்டு பதறி அடித்துக்கொண்டு கையில் கிடைத்த சொக்காயைப் போட்டுக்கொண்டு ஓடினார் வேணுகோபாலன். ராசையா வீட்டிற்கு சென்று அவருடைய உடல் கிடத்தப்பட்டு இருந்ததைப் பார்த்த  வேணுகோபாலுக்கு, ஏதோ ஒரு பாதி தன் உடலிலிருந்து பிரிந்து போனதைப் போன்ற உணர்வு ஆட்கொண்டது. அவரை அறியாமல் மனதின் துயரம் கண்களில் வெளிப்பட்டது.

    எழுவத்தி இரண்டு வயதான ராசைய்யா நேற்று இரவு வழக்கம் போல தூங்கச் சென்றார். ஆனால் காலையில் தூக்கத்திலேயே அலுங்காமல் குலுங்காமல் இல்லாமல் இறந்து போயிட்டார். ராசையா வீட்டு உள்ளே அவரின் பூத உடல் கிடத்தப்பட்டு, மாலை அணிவிக்கப்பட்டிருந்தது. வேணுகோபால் உள்ளே நுழைந்தவுடன் அவரைப் பார்த்து, ராசையாவின் உறவினர் அனைவரும் ஒருமித்த குரலில் உரக்க அழ ஆரம்பித்தனர். யாருக்கும் ஆறுதல் சொல்ல வழியில்லாமல் மௌனமாய் இருந்தார் வேணுகோபாலன்.

    எத்தனையோ ஆத்திகர்கள் யாருக்கும் தொந்தரவு கொடுக்காமல் படுத்த படுக்கையாய் இராமல் பட்டென்று உயிர் போய் விடவேண்டும் என்று வேண்டிக்கொண்டே இருக்க, எந்த ஒரு வேண்டுதலும் இல்லாதிருந்த ராசைய்யா கல்யாணச்சாவு என்பார்களே அதுபோல ஒரு அருமையான முடிவை எட்டியிருந்தார்.

    கடந்த 72 வரை எந்த நோயும் தாக்காது, விருப்பமான உணவுகளை சாப்பிட்டு ஆரோக்கியமாக இருந்த அவர் இது வரையில் கடவுளைக் கும்பிட்டதே இல்லை. கோயிலுக்கு போனதில்லை, ஆனால் யார் வந்து உதவி என்று கேட்டாலும், அல்லது யாருக்கேனும் உதவி தேவைப்பட்டால், உடனடியாக களத்தில் இறங்கி தம்மால் இயன்ற உதவிகளைச் செய்யத் தயங்கியதும் இல்லை. மற்றவர்களையும் உதவிகள் செய்யத் தூண்டுபவர். மொத்தத்தில் மனித நேயத்தை இறையாகக் கொண்டவர்.

    அப்படிப்பட்ட ராசைய்யா தன் அந்தரங்கங்களை பகிர்ந்து கொள்ளும் ஒரே ஆதமார்த்தமான நண்பர்  வேணுகோபால். இறை நம்பிக்கை உடையவர். ராசையா போலவே மற்ற அனைத்து நற்குணங்களும் பொருந்தியவர். மாற்று சாதியைக் கொண்டவராக இருந்தாலும்  ராசையாவின்மேல் சிறு வயது முதற்கொண்டே ஒரு ஆதமார்த்தமான நட்பு கொண்டவர். இருவருக்கும் உள்ள மன ஒற்றுமை ஊரே வியக்கும் அளவுக்கு இருந்தது.

    ராசையாவையே பார்த்துக்கொண்டு நின்றிருந்தார் வேணுகோபால்.  ராசையாவின் மனைவி, “அண்ணா பாத்தீங்களா, என்னைத் தனியா விட்டுட்டு அவருமட்டும் போய்ட்டாரு. நான் என்னா செய்வேன் !” என்று கதறிக்கொண்டிருந்தாள்.

    ராசையாவின் மூத்த மகன் வேணுகோபாலின் அருகிலே சென்று, “மாமா பார்த்தீங்களா அப்பாவை !” என்றான். அதற்குமேல் அவனுக்கு வார்த்தை வரவில்லை. குலுங்கிக் குலுங்கி அழத்தொடங்கினான். ஆறுதலாக அவன் கைகளைப் பிடித்துக்கொண்டு, முதுகைத் தடவிக் கொடுத்துவிட்டு, “தம்பி சுரேஷ், நீங்கதான் தைரியமா இருக்கணும். அம்மாவை யார் சமாதானப் படுத்த முடியும்? ஆகவேண்டிய காரியங்களைப் பாருங்க. நாம கொடுத்து வெச்சது அவ்ளோதான்! அவரோட ஆன்மா சுத்தமானதுன்னு உங்களுக்கும் தெரியும், எனக்கும் தெரியும். அவ்வளவு ஏன் ஊருக்கே தெரியும்.

    ஆறுதல் சொல்லி ப்ரயோசனமே இல்லாத ஒரு நிகழ்வு இதுதான் உலகத்திலே, என்னா செய்யிறது” என்றார் வேணுகோபால்.

    “உங்களுக்கு நம்பிக்கை இருந்தால் அவரோட ஆன்மா நல்லவிதமா கரையேற தேவையான காரியத்தை செய்யுங்க. வேறென்ன சொல்ல ?” என்றவர் அடுத்து மற்ற ஏற்பாடுகளைக் கவனிக்க ஆரம்பித்தார். ஆனால் மனம் மட்டும் ராசைய்யாவையே சுற்றி வந்துகொண்டிருந்தது.

    மருமகள்களும்,மாப்பிள்ளையும், பெண்ணும் மற்றும் உறவுக்காரர்கள் அனைவருமே கதறிக்கொண்டிருக்கின்றனர். ஒரு மனிதரால் இப்படி வாழ முடியுமா.? வேணுகோபாலுக்கு ஆச்சரியம், ஆனால் வாழ்ந்து காட்டியிருக்கிறாரே  ராசையா. ராசையா போன்ற மனிதர்கள் இறக்கும் போதுதான் மனிதம் வாழவே ஆரம்பிக்கிறது என்னும் உண்மை வேணுகோபாலுக்கு உள்ளுக்குள் விளைந்தது.

    திரு ராசையாவுக்கு மூன்று பிள்ளைகள், ஒரு பெண். எல்லோரும் அவரவர் இல்லறத் துணைகளோடு வந்திருந்தனர். எல்லா சம்பந்திகளும் வந்திருந்தனர். அனைவரின் கண்களிலும் சத்தியமான வருத்தம், கண்ணீர். எப்படி இது சாத்தியமாயிற்று திரு ராசையாவுக்கு..?

    அவருக்கு இது நியாயமாகக் கிடைக்கவேண்டிய புஷ்பாஞ்சலிதான் என்று தோன்றியது வேணுகோபாலுக்கு. ஒவ்வொரு பிள்ளைக்கும் திருமணம் செய்து வைக்கும்போதும், பெண்ணைப் பெற்றவர்களிடம் நான் பிள்ளையைப் பெத்து வெச்சிருக்கேன், நீங்க பெண்ணை பெத்து வெச்சிருக்கீங்க, அவ்ளோதான் நமக்குள்ளே வித்யாசம். எனக்கு பணத்தைவிட மனுஷங்கதான் முக்கியம். அதுனாலே கடன்படாமல் உங்களாலே என்ன செய்ய முடியுமோ அதைச் செய்யுங்க போதும். என்னோட பிள்ளைங்க கல்யாணம் மட்டுமில்லை இது பொண்ணா இருந்தா என்ன, பிள்ளையா இருந்தா என்ன? அதுனாலே நம்ம புள்ளைங்களோட கல்யாணம். அது நல்லபடியா மகிழ்ச்சியா நடக்கணும்.

    அதுக்கும் மேலே எனக்குன்னு ஒரு விருப்பம் இருக்கு. உங்க பொண்ணுங்க என்னை மாமனாரா நடத்தக் கூடாது. என்னையும் தகப்பன் ஸ்தானத்திலே வச்சி அன்பு செலுத்தச் சொல்லுங்க, அது போதும். கல்யாணம் செய்துகொள்ளும் சின்னஞ்சிறுசுகள் மகிழ்ச்சியா இருக்கணும். அவங்க மனசுலே எந்த பாரமும் இருக்கக் கூடாது. பட்டாம் பூச்சி போல அவங்க வாழ்க்கையை மகிழ்ச்சியா அமைச்சுக்கணும்.

    அதுக்கு பெத்தவங்க நாமதானே உதவணும் ? அதுதான் நம்மோட கடமை. அதுனாலே கல்யாணச் செலவிலே பாதி எங்களோடது. நாம சேர்ந்து இந்தக் கல்யாணத்தை ஒரு மகிழ்ச்சியான விழாவா கொண்டாடலாம் என்று சொல்லி, அதே போல வரதக்ஷணையோ, வேற எந்தப் பொருட்களோ வாங்காமல், ஒரு தகப்பனா நீங்க உங்க பொண்ணுக்கு உங்க சக்திக்கு ஏத்தா மாதிரி கல்யாணம் செய்யுங்க போதும்னு சொல்லி, மூன்று கல்யாணத்தையும் நடத்தி வெச்சாரு ராசைய்யா. அதுக்கு ஏத்தா மாதிரி வந்த மூணு மருமகள்களும் ஒத்துமையா இன்னிக்கு வரைக்கும் குடும்பம் நட்த்திவராங்க.

    அது மட்டுமில்லே, அவர் பொண்ணுக்கும் இவரை மாதிரியே ஒரு நல்ல சம்பந்தியும் கிடைச்சது அதிர்ஷ்டம். மாப்பிள்ளையும் இவருக்கு மகன் மாதிரியே அமைஞ்சது அதைவிட அதிர்ஷ்டம். இப்பிடி ஒரு அதிர்ஷ்டமான வாழ்க்கை எல்லாருக்கும் அமைவதில்லை. வாழ்க்கையை சரியான கோணத்தில் புரிந்து கொண்டவர் திரு ராசையா.
    உரில் உள்ள அனைவரும் அதிர்ச்சியையும் உண்மையான வருத்தத்தையும் கண்களில் தேக்கி, வீட்டு வாயிலில் குழுமி இருந்தனர். ஆளுக்கொரு வேலையை பொறுப்பெடுத்துக்கொண்டு செய்து கொண்டிருந்தனர். எப்படிப்பட்ட மனிதர் ! நினைவு தெரிந்த நாள் முதல் தன்னுடைய வேலையைத் தானே செய்துகொண்ட நல்லவர். யாருக்கும் தீங்கு நினைக்காதவர். ஒரு முறையும் கோயிலுக்குள் நுழையாதவர் திரு ராசையா. ஒரு நாளும் இறைவனை வணங்கியதும் இல்லை. நிந்தனை செய்ததும் இல்லை. இறைவன் இல்லையென்று அவர் வாயால் கூறியதும் இல்லை.

    எத்தனையோ பழுத்த ஆன்மீக வாதிகள் இல்லறத்திலிருந்துகொண்டு படுக்கையில் படுக்காமல் யாருக்கும் தொந்தரவு அளிக்காமல்,நினைத்தவுடன் உயிர் போய்விடவேண்டும் என்று பல வேண்டுதல்களைச் செய்தவர்களுக்கெல்லாம் கிட்டாத, அமைதியான முடிவை வெகு சுலபமாக எட்டியிருக்கிறார் திரு ராசைய்யா. திரு ராசையா மனிதர்களை மனித நேயத்தை மட்டுமே மதித்து வாழக்கற்றவர்.

    மகள் திருமணம், பிள்ளைகள் கல்வி, கோயில் திருவிழா எல்லாவற்றையும் சமமாகப் பார்க்க கற்றவர். யார் வந்து கேட்டாலும் எல்லோருக்கும் ஒரே விதமான மரியாதையை அளித்து அவரால் முடிந்த பொருளுதவியைச் செய்தவர். நினைக்க நினைக்க ஆச்சரியமாய் இருந்தாலும் வேணுகோபாலுக்கு இவையெல்லாம் பழகிப் போயிருந்தன. ஆனாலும் ஆச்சரியம் விலகவில்லை வேணுகோபாலுக்கு.

    ஒரு சிறந்த நாணயமான நாத்திகவாதி. ஒரு நாத்திகவாதி, பகுத்தறிவுவாதி என்பவர் எப்படி வாழவேண்டும் என்றும் நாத்திகவாதியாக இருந்தாலும் ஆத்திகவாதிகளை மதிக்கத் தெரிந்த மனிதர். மனிதம் முக்கியம் என்றுணர்ந்த நாத்திகவாதியும் ஆத்திகவாதியே என்று உணர்ந்த மனிதர். ஒரு மனிதன் எப்படி வாழவேண்டும் என்பதற்கும் உதாரண புருஷனாக வாழ்ந்த மறைந்தவர் நினைக்க நினைக்க ஆச்சரியமாக இருந்தது வேணுகோபாலுக்கு. அதனால்தான் இப்படி ஒரு அருமையான முடிவு கிடைத்ததோ..?

    எப்படி இது எப்படி முடிந்தது ? என் எண்ண ஓட்டங்கள் திரு ராசைய்யாவையே சுற்றிச் சுற்றி வந்தது . எப்படி இந்த மனிதருக்கு இப்படி ஒரு அருமையான முடிவு கிட்டியது? எல்லோருக்கும் இந்த சுபமான முடிவு கிடைக்குமா..? யோசிக்க யோசிக்க ஆத்திகவாதியான வேணுகோபாலுக்கு ஒரு எண்ணம். ஒரு முடிவு  திடமாக உறுதியானது.

    நிச்சயமாக பூர்வ ஜென்ம நடத்தைகள், நம்மை அடுத்த ஜென்மத்திலும் பாதிக்கிறது என்பது உண்மைதான். ஒன்று வாழவைக்கிறது அல்லது வீழ வைக்கிறது என்பது சத்தியமான உண்மை. பூர்வஜென்மம்,மறுஜென்மம் எனபதெல்லாம் கட்டுக்கதை இல்லை. சத்தியமான உண்மை. இந்த எண்ணங்கள் மனதில் வந்ததும், தம்மையறியாமல் சில மனிதர்களின் கபடநாடகங்களை எண்ணிப் பார்த்தார். எதற்குமே கொடுத்து வைக்க வேண்டும். வேணுகோபால் நாத்திகவாதியான ராசையாவையே கடவுளாக நினைத்து நண்பா ‘எனக்கும் இது போன்ற வரம் தா’ என்று வேண்டிக்கொண்டார்.

    அனுபவப்பட்டாலும் மனிதர்களுக்கு மாயை விலகுவதில்லை என்னும் உண்மை உறைக்கவே சிரிப்பு வந்தது. அவருக்கு அடுத்த கணமே,  யாராவது பார்த்தால் இந்த இடத்திலே சிரிக்கிறாரே என்று தவறாக நினைத்துக்கொள்ளப் போகிறார்களே என்று அந்த விரக்திச் சிரிப்பை அடக்கிக்கொண்டார்.

    ஆனாலும் அவரை அறியாமலே அவருக்கு உள் மனதிலிருந்து துக்கம் பொங்கி வந்தது. வேணுகோபால் எதற்காக அழுகிறோம் என்பதே தெரியாமல் அவரையறியாமல் ஏதோ ஒன்று அவரை உலுக்கியது. ஒரு ஓரமாகச் சென்று மௌனமாகக் கண்ணீர் வடித்து துக்கத்தை தோளில் கிடந்த துண்டால் அடக்கியும் முடியாமல், குலுங்கிக் குலுங்கி அழ ஆரம்பித்தார் வேணுகோபால். 

    Share