முகில் தினகரன்

நடுநிசி 12.00 மணி.

அந்த தியேட்டர் முன் கூடியிருந்த இளைஞர் பட்டாளம் படு பிஸியாயிருந்தது. மறுநாள் ரிலீஸாகவிருக்கும் அவர்களின் அபிமான நடிகன்…தானைத் தலைவன்…தங்கத்தலைவன்…’இளஞ் சூறாவளி’ ராகவ் நடித்த படத்தை வரவேற்க விதவிதமான பேனர்களையும்…கட்அவுட்களையும்…தோரணங்களையும்…வரவேற்பு வளையங்களையும் தியேட்டர் வாசலெங்கும் கட்டி அசத்திக் கொண்டிருந்தனர். இரண்டாம் ஆட்டம் முடிந்து வெளியே வந்த ஜனக் கூட்டம் அங்கு அரங்கேறிக் கொண்டிருந்த அமர்க்களத்தைக் கண்டு திறந்த வாய் மூடாமலேயே வீடு வரை சென்றது.

ஒரு மணி வாக்கில் ஓரளவிற்கு எல்லா வேலைகளையும் முடித்து விட்ட ரசிகர் கூட்டம் புறப்படத் தயாரானது.

தன் அபிமான நடிகன் ‘ராகவ்’வுடன் தான் நிற்கும் புகைப்படத்தை ஒரு பெரிய பேனராக்கி தியேட்டர் முகப்பில் அதைக் கட்டி வைத்து அழகு பார்த்துக் கொண்டிருந்த மாவட்டத் தலைவர் பிரசனனாவிடம் வந்த ரசிகர் பட்டாளம்,

‘அப்ப..நாங்க புறப்படறோம் பிரசன்னா’

‘ஓ.கே.ம்மா…காலைல எல்லோரும் சரியா ஆறு மணிக்கு இங்க ஆஜராயிடணும்…சிறப்புக்காட்சி ஏழு மணிக்குத் துவங்கிடும்’

‘கண்டிப்பா வந்துடுவோம் பிரசன்னா’

அவர்கள் சென்ற சிறிது நேரத்தில் பிரசன்னாவும் தன் பைக்கில் ஏறிப் பறந்தான்.

காலை நாலரை மணியிருக்கும்,

யாரோ கதவை ‘தட…தட’வெனத் தட்டும் ஓசை கேட்டு வாரிச் சுருட்டிக் கொண்டு எழுந்தான் பிரசன்னா. ‘யாராயிருக்கும்….இந்த நேரத்துல..?’ யோசனையுடன் கதவைத் திறந்து கொண்டு வெளியே வந்தான்.

கோகலே வீதி ரசிகர் மன்றத்தைச் சேர்ந்த நாலைந்து இளைஞர்கள் நிற்க,

‘என்னப்பா….என்ன விஷயம்?’

‘வந்து…வந்து…’

‘அட..என்ன..’ சற்றுக் கடுப்புடனே கேட்டான் பிரசன்னா. இரவு லேட்டாய் வந்து படுத்ததில் கண்கள் தீயாய் எரிந்தன.

‘தியேட்டர் வாசல்ல நாம கட்டியிருந்த பேனர்களுக்கும் வளையங்களுக்கும் யாரோ தீ வெச்சுட்டாங்க பிரசன்னா…’

‘என்ன…தீ வெச்சுட்டாங்களா?’ அதிர்ந்து போன பிரசன்னா பதட்டமாய்க் கிளம்ப, பாதித் தூக்கத்தில் எழுந்து வந்த அவன் தாய், ‘டேய்…டேய்…என்னடா…என்னாச்சுடா?’ அவன் பின்னாடியே வந்து கேட்டாள்.

‘ப்ச்….வந்து சொல்றேன்மா…’ தாவிச் சென்று பைக்கில் ஏறி, மின்னல் வேகத்தில் பறந்தான்.

தியேட்டர் வாசல் சாம்பல் குவியலாயிருந்தது. ஆங்காங்கே பாதி எரிந்த நிலையில் பேனர்களும்…கட்அவுட்களும்…வளையங்களும் கிடக்க, இன்னொரு புறம் அவன் ஆசை ஆசையாய்க் கட்டி அழகு பார்த்த, தலைவனோடு அவன் நிற்கும் பேனர் குற்றுயிராய்க் கிடந்தது.

ஆத்திரத்தில் வலது கையால் இடது உள்ளங்கையில் ஓங்கிக் குத்தினான் பிரசன்னா.

‘யாரு…யாரோட வேலைடா இது…?’ கண்கள் சிவக்கக் கேட்டான்.

எதிர் டீக்கடையிலிருந்து நிதானமாய் நடந்து வந்த அந்தக் கட்டம் போட்ட லுங்கிக்காரன், ‘தம்பி…நான் பார்த்தேன்…தீ வெச்ச ஆளுங்களை..’ என்றான் பிரசன்னாவைப் பார்த்து.

பாய்ந்து வந்து அவன் சட்டைக் காலரைப் பற்றிய பிரசன்னா கத்தலாய்க் கேட்டான், ‘சொல்லு…சொல்லு…யாரு…யாரு?’

‘த பாரு தம்பி…அவனுக யாரு எவருன்னு எனக்குத் தெரியாது…ஆனா தீயை வெச்சுப்புட்டு அவனுக கத்திட்டுப் போனது மட்டும் எனக்கு நல்லாக் காதில் விழுந்தது’

‘சரி…அதையாவது சொல்லித் தொலை…என்ன கத்திட்டுப் போனானுங்க?’ சட்டைக் காலரை உதறலாய் விடுவித்தான் பிரசன்னா.

‘விக்டரி ஸ்டார் விமலன் வாழ்க..! விக்டரி ஸ்டார் விமலன் வாழ்க’ன்னு கோஷம் போட்டுக்கிட்டே ஓடினானுக’

‘நெனச்சேன்….அவனுகளாத்தான் இருக்கும்னு நெனச்சேன்!…விட மாட்டேன்டா.. இதுக்கு அவனுக பதில் சொல்லாம விட மாட்டேண்டா…!’ என்று ஓங்கிய குரலில் கத்திவிட்டு, தன் சகாக்கள் பக்கம் திரும்பி, ‘டேய்…ரவி…போடா…ஓடிப் போய் அஞ்சு லிட்டர் பெட்ரோல் வாங்கிட்டு வாடா’

‘பிரசன்னா….எதுக்கு நீ இப்ப பெட்ரோல் கேட்கறே?’ அந்த ரவி புரியாமல் கேட்க,

‘டேய்…கேள்வி கேட்காத…சொன்னதை மட்டும் செய்’

அந்த ரவியாகப்பட்டவன் தயங்கி நிற்க, “இப்ப நீ போறியா?…இல்ல நானே போய் வாங்கிட்டு வரட்டுமா?” விழிகள் சிவக்க பிரசன்னா அதட்டிய அதட்டலில் ரவி பாய்ந்தோடினான்.

பெட்ரோல் கேன் கைக்கு வந்ததும், ‘இளஞ் சூறாவளி ராகவ் ரசிக கண்மணிகளே….. நம்ம தலைவரோட பேனர்களையும்….கட்அவுட்களையும் அந்த விமலனோட ரசிகர்கள் கொளுத்தினதுக்கு நீதி கேட்டு என்னை நானே கொளுத்திக்கப் போறேன்…!’

அந்த அதிகாலை நேரத்தில்….அவ்வளவாக கூட்டமில்லாத சாலையில்…தனக்குத் தானே பெட்ரோல் அபிஷேகம் செய்து கொண்டு, தனக்குத் தானே தீபாராதனை காட்டிக் கொண்டு, அபிமான நடிகனுக்காக அமரனானான் பிரசன்னா.

காட்சிகள் ரத்து செய்யப்பட்டு…தியேட்டர் சீல் வைக்கப்பட்டது. ஆனால், தாறுமாறாய் கிடைத்த தீக்குளிப்பு விளம்பரத்தினால் இளஞ் சூறாவளி ராகவ்வின் திரைப்படம் ரிலீஸ் ஆன மற்ற எல்லாத் தியேட்டர்களிலும் பிய்த்துக் கொண்டு ஓடியது.

தமிழகமெங்கும் பத்தே நாளில் ஐம்பது நாள் வசூலை வாரிக் குவித்தது.

தனக்காக உயிரை மாய்த்துக் கொண்ட அந்த ரசிகனின் குடும்பத்திற்கு ஒரு சொற்ப….அற்ப….தொகையை பெரும் விளம்பர ஏற்பாட்டிற்குப் பிறகு வழங்கிய இளஞ்சூறாவளி, தன் படத்தின் நூறாவது நாள் விழாவிற்காக காத்திருந்தார்.

இரவு 11.30.

இளஞ் சூறாவளி ராகவ்வின் பிரத்யேக கைப் பேசி ராகமிசைக்க எடுத்துப் பார்த்தார். ‘விக்டரி ஸ்டார் விமலன்’

‘ஹல்லோ…விக்டரி ஸ்டார் …எப்படியிருக்கீங்க?’ இளஞ் சூறாவளி சிரிப்புடன் கேட்க,

‘ஐ யாம் ஃபைன்!…அது சரி இளஞ் சூறாவளி…எப்ப உன் படத்தோட நூறாவது நாள் விழா?’

‘ம்ம்ம்….அதுக்கு இன்னும் இருபது நாளிருக்கே’

‘ம்…ம்…ஜமாய்ங்க…’ விமலன் சொல்ல

‘எல்லாம் உங்க தயவுதானே விமலன்?…நீங்க மட்டும் அன்னிக்கு உங்க ஆளுங்களை வெச்சு…அந்த தியேட்டர் முன்னாடி என்னோட ரசிகர்கள் கட்டின பேனர்களை எரிக்கலைன்னா…அந்தப் பையன் தீக்குளிப்பானா?…அப்படி அவன் தீக்குளிச்சதுதானே பெரிய விளம்பரமாகி…என் படத்தையே அமோக வெற்றியடைய வெச்சிருக்கு’

‘சரி…சரி…இப்ப நான் உங்களைக் கூப்பிட்டது எதுக்குன்னா…அடுத்த வாரம் என்னோட புதுப்படம் ரிலீஸாகப் போகுது…அந்தப் படமும் வெற்றிப் படமாகணும்…உங்க படத்துக்கு நான் எப்படி ஹெல்ப் பண்ணினேனோ, அதே மாதிரி நீங்களும் ஏதாவது ஹெல்ப் பண்ணி என்னோட படத்தையும் ஜெயிக்க வைக்கணும்’

‘செஞ்சுட்டாப் போகுது விமலன்…உங்க பின்னாடியும்….என் பின்னாடியும் லட்சக் கணக்குல முட்டாள் ரசிகனுங்க இருக்கற வரைக்கும் நமக்கென்ன கவலை?’ இளஞ் சூறாவளி ராகவ் சொல்லி விட்டுச் சிரிக்க,

பதிலுக்குச் சிரித்தது விக்டரி ஸ்டார்.

அதே நேரம்,

மகன் சாவிற்குப் பின் பைத்தியமாகிப் போன அந்தப் பிரசன்னாவின் தாய் மகனின் போட்டோவைப் பார்த்துப் பேசிக் கொண்டிருந்தாள்.

‘ஏண்டா…”வந்து சொல்றேன்மா” ன்னுட்டுப் போனியே ஏண்டா வரலை? சொல்லுடா ஏண்டா வரலை?’

(முற்றும்) 

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “வந்து சொல்றேம்மா…

  1. ரசிகரகள் என்ற பெயரில் முட்டாள் தனமாக திரியும் இளவட்டங்களுக்கு நல்ல பாடம் சொல்லும் கதை வாழ்த்துக்கள்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *