தமிழ்த்தேனீ

மாலை ஐந்து மணி. சிமெண்டும், மணலும் அப்பிக்கிடந்த உடலைக் கழுவிக் கொண்டே, “கிருஷ்ணா, எனக்கு இன்னிக்கு ஒரு 100 ரூபா குடு. நாளைக்கு பொழுது விடிஞ்சா தீபாவளி, நான் அடுத்த வாரம் உனக்கு திருப்பிக் குடுத்துர்ரேன்”, என்று சக தொழிலாளியிடம் எப்படியோ கொஞ்சம் பணம் கடன் வாங்கிக்கொண்ட கருப்பசாமி, அந்தப் பணத்தில் பட்டாசுகளும், புதிய துணிகளும், இனிப்பு பலகாரங்களும் வாங்கிக் கொண்டு வீடு வந்து சேர்ந்தார்.

வீட்டுக்கு வரும்போதே மாலை 6 மணி ஆகிவிட்டது. கைகால்களைக் கழுவிக்கொண்டு நிமிர்ந்தவர், “ஆமாம் ரமேஷ் பெங்களூருக்கு போனானே ஒரு இண்டெர்வியூக்காக, இன்னிக்கு வந்துருவேன்னு சொன்னானே, எங்கே இன்னும் வரவில்லையா? விடிஞ்சா தீபாவளி !” என்றார்.

அவர் மனைவி அஞ்சலை, “தீபாவளிக்கு முத நாளு வந்துருவேன்னு சொல்லிட்டுதானே போனான். இன்னிக்கு வந்துடுவான். நீங்க கைகாலைக் கழுவிகிட்டு உள்ளார வாங்க”  என்றாள்.

அன்றாட கவலைகளை மறந்து கிருஷ்ணன் நரகாசுரனை வதம் செய்த நாளைக் கொண்டாடத் தயாராகிக் கொண்டிருந்தனர் மக்கள். மறு நாள் தீபாவளி. நாடெங்கிலும் தீபாவளிக் கொண்டாட்டங்கள் வாண வேடிக்கைகளும், பட்டாசுகளின் சத்தமும், சங்கு சக்கரம், மத்தாப்பூ, புஸ்வாணம் போன்றவைகளின் ஒளியும், கண்ணைப் பறித்தது.

விதவிதமான புதிய வகைப் பட்டாசுகள் நகரெங்கும் விற்பனையாகியது. புத்தாடைகள் சரசரக்க, பிள்ளைகள் பட்டாசுகளும், அவற்றைப் பாதுகாப்புடன் கொளுத்த நீண்ட ஊதுபத்திகளும் கையில் வைத்துக்கொண்டு கபடமில்லாமல் சிரித்துக்கொண்டே, பட்டாசுகள் வெடித்து மகிழ்ச்சியாக விளையாடிக் கொண்டிருந்தனர். 

வாங்கி வந்த பட்டாசுகளையும், இனிப்பையும் வீட்டில் மனைவியிடம் கொடுத்து, “பத்திரமாக வைய்யிம்மா”  என்றார். அவருக்கு அவருடைய மகன் ரமேஷ் கம்பி மத்தாப்பூ கொளுத்தவே பயந்து, “அப்பா இதைப் பிடிப்பா பயமா இருக்குது” என்று அலறியது  நினைவுக்கு வந்தது. சிரித்தபடியே கைகால்களை கழுவிக்கொண்டு  உள்ளே வந்து உட்கார்ந்து செய்தித்தாளைப் பிரித்தார்.

செய்தித்தாளில் கொட்டை எழுத்தில் போட்டிருந்த செய்தியையும், புகைப்படங்களையும்  பார்த்து அதிர்ந்தே போனார் அவர். பட்டாசுக் கம்பனியில் தீப்பிடித்தது, பட்டாசு வெடித்ததில் பட்டாசுக் கம்பனியின் கட்டிடம் சிதறியது. அதில் வேலை செய்துகொண்டிருந்த  மக்கள், மற்றும்  ஒரு மைல் சுற்று வட்டாரத்தில் உள்ள மக்கள் பாதிப்பு, பலபேர் சடலம் தோண்டி எடுக்கப் படுகிறது.  தீக்காயத்துடன் அவதிப் படுவோரை எடுத்துக்கொண்டு அவசரகால ஊர்திகள் மருத்துவமனைக்கு விரைகின்றன. தீயணைப்பு வண்டிகள் தீயை அணைக்க போராடி வருகின்றன.

நாட்டிலே இருக்கற மக்கள் சந்தோஷமா இருக்கணும்னு தங்களோட உயிரையும் பணயம் வெச்சு பட்டாசு தயாரிக்கறாங்க, இந்தப் பட்டாசுக் கம்பனீலே வேலை பாக்கறவங்க  வயித்துப் பொழைப்புக்காக கூலிக்கு வேலை பாக்கறாங்க.  இப்பிடி தீயிலே மாட்டிகிட்டு கருகிப் போயிட்டாங்களே, அவங்க குடும்பம் என்னா பாடு படுதோ என்று மனதுக்குள் வருந்தினார்.

“இந்தப் பய ரமேஷுக்கு ஒரு நல்ல வேலை கிடைச்சுதுன்னா  கொஞ்சம் நிமிரலாம். சரி அவன் வந்தா தெரியும் வேலை கிடைச்சுதா, நல்ல வேலையா? சம்பளம் எவ்ளோ ஒண்ணும் தெரியலை, சரி அவன் வந்த வுடனே அவனைக் கேள்வி மேலே கேள்வி கேட்டு தொந்தரவு செய்யாதே. படிச்ச புள்ளே ஆயிரம் யோசனை இருக்கும், அங்கே என்னாகேள்வி கேட்டாங்களோ, வேலையைப் பத்தி என்னா சொன்னாங்களோ. கஷ்டப்பட்டு படிக்க வெச்சிருக்கேன் நல்ல வேலை கிடைக்காமையா போயிரும், என் மவன் கெட்டிக்காரன், எல்லாம் நல்லபடியா நடக்கும், கவலைப்படாதே, வந்தவுடனே இந்த பலகாரத்தைக் குடு, நிதானமாப் பேசிக்கலாம்”, என்று அஞ்சலைக்கு ஆறுதல் சொல்வது போல் தன் மனதையே தேற்றிக் கொண்டார் கருப்பசாமி.

தட்டின் முன் வந்து உட்கார்ந்து, “காவ்யாகுட்டி, அப்பா தீபாவளிக்கு பட்டாசு, இனிப்பு,உனக்கு கௌனு எல்லாம் வாங்கிட்டு வந்திருக்கேன். அண்ணன் வந்துரட்டும், புது கௌனு போட்டுகிட்டு வெடியெல்லாம் வெடிக்கலாம்” என்றார். அஞ்சலை அவர் தட்டில் பலகாரத்தை வைத்தாள்.  

“போப்பா, அண்ணன் மத்தாப்பூ கொளுத்தவே பயப்படும், நானு தைரியமா பட்டாசு வெடிப்பேன், அண்ணன் பயந்தாங்கொள்ளி”, என்று சிரித்தாள் காவ்யாகுட்டி.

“வீட்டுலே யாருங்க, வெளியே வாங்க”, என்று ஒரு குரல் கேட்டது. அஞ்சலை எட்டிப் பார்த்து, “ஏனுங்க வாசல்லே போலீஸ் ஜீப் நிக்கிது, உங்களை யாரோ கூப்புடறாங்க” என்றாள்.

“சரி வந்து சாப்படறேன்” என்றபடி எழுந்து போய் வாசலில் பார்த்தார்.

ஒரு காவல் துறை ஜீப் அவர் வீட்டருகே வந்து நின்றது.

“இந்தாங்க, இந்த தினசரியைப் பாருங்க”, என்று அவர் முன் ஒரு தினசரியை நீட்டினார்கள்.  தினசரியை பிரித்தவர் கண்ணில் பட்டது அந்தச் செய்தி. அதிர்ந்து போய் பேச்சு வராமல் அப்படியே தலையில் கைவைத்துக்கொண்டு கண்களில் நீர்வழிய உட்கார்ந்திருந்த அவரைப் பார்த்த அஞ்சலை, “என்னங்க ஏன் ஒரு மாதிரியா இருக்கீங்க ?” என்றாள். அவர் கையிலிருந்து தினசரியை வாங்கிப் பார்த்து அதிர்ந்தாள்.

“வண்டியிலே ஏறுங்க”, என்று அவரையும், அஞ்சலையையும் அழைத்துக் கொண்டு  காவல்துறை ஜீப் புறப்பட்டது. “காவ்யாக் குட்டி, பத்திரமா வீட்டிலேயே இரு”,  என்ற கருப்பசாமியின் குரல் காற்றிலே தேய்ந்தது. 

“உங்க புள்ளதானே இந்த ரமேஷ், உண்மையைச் சொல்லுங்க, உங்களுக்கும்  தீவிரவாதிகளுக்கும் எவ்ளோ வருஷமாத் தொடர்பு இருக்கு ?” என்றார் அதிகாரி.

“ஐயா, சத்தியமாச் சொல்றேனுங்க. அதெல்லாம் ஒண்ணும் கிடையாதுங்க. என் மவன் பெங்களூருக்கு ஒரு இன்டெர்வியுவுக்காகப் போயிட்டு வரேன்னு போனான். இன்னிக்கு வந்துடுவேன்னு சொல்லிட்டுப் போனான்.  அவ்ளோதாங்க எங்களுக்குத் தெரியும்.  அவன் வந்தா உடனே நானே தகவல் சொல்றேனுங்க, நானே அவனைக் கையோட கூட்டிகிட்டு வந்து உங்க கிட்ட ஒப்படைக்கிறேனுங்க.”  என்று சொல்லிவிட்டு, வீட்டுக்கு வந்து  உள்ளே போய் அந்தப் பட்டாசு, இனிப்பு அத்தனையையும் எடுத்துவந்து   தண்ணீரில் முக்கி ஈரத்துணியில் முடிந்து  வெளியே எறிந்தார். 

அக்கம்பக்கத்து மனிதர்கள் வேடிக்கை பார்க்கத் தொடங்கினர். அக்கம்பக்கம் மனிதர்கள், “என்னா ஆச்சு அஞ்சலை ?”ன்னு  அவருடைய மகனைப் பற்றி விசாரிக்கத் தொடங்கினர். ஒரு சிறுவன் “டேய் நம்ம ரமேசு குண்டு போட்டானாம்டா, அவனைப் போலீசு தேடுது ” என்று கத்திக் கொண்டே ஓடினான்.

திபுதிபுவென்று கருப்பசாமியின் குடிசை வாசலில் அவரைத்தேடி கும்பலாக பத்திரிகைக்காரர்களும் வந்தனர். மக்கள் அவர் வீட்டு வாசலில் கூடினர். கண்ணீருடன் நிமிர்ந்த அவரிடம் ஒரு பத்திரிகை நிருபர், “நீங்க பத்திரிகை பாத்தீங்களா, உங்க மகன் தீவிர வாதிகளோட சேந்துகிட்டு குண்டு வெச்சிருக்கான்”  என்றார்.

“பாத்தேனே…… என்னால தாங்கிக்க முடியலையே…. அப்பப்பா எத்தனை உயிர்கள், எத்தனை உடல்கள் சிதறிப்போச்சு, யாரு பெத்த புள்ளைகளோ, மனிதமே செத்துப்போச்சே, என் மவன் இப்பிடி பல உயிர் போறதுக்கு காரணமா தீவிர வாதியா மாறி குண்டு வைப்பான்னு நான் நெனைச்சு கூடப் பாக்கலையே, என் குடும்பத்திலே அவனாவது படிக்கணும்னு வயித்திலே ஈரத் துணியைக் கட்டிகிட்டு பட்டினியா பசியா உழைச்சேனே, இப்பிடி செஞ்சிட்டானே”,  என்று கதறினார் கருப்பசாமி, அஞ்சலை மயங்கிச் சாய்ந்தாள். பதறிப்போய் அவளை தாங்கிக் கொண்டு கண்ணீரைக் கட்டுப்படுத்த முடியாமல் குமுறிய அவர்.

“அவனை எங்க மகன்னு சொல்லிக்கறதுக்கே அவமானமா இருக்கு.எங்களுக்கு மகனே பொறக்கலைன்னு நெனைச்சுக்கறேன். எப்பிடியாவது அவனைக் கண்டு பிடிச்சு…. கொன்னுடுங்க ! மனிதத்தையே அழிக்கிற இந்த தீவிர வாதத்திலே ஈடுபடற நரகாசுரன்களை எந்த கிருஷ்ணன் வந்து எப்போ கொல்றானோ, அப்போதான் நம்ம உலகத்துக்கே உண்மையான தீபாவளி அவனைக் கொன்னுடுங்க… கொன்னுடுங்க…” என்று கதறினார் கருப்பசாமி !

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “ஈரத்துணி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *