முகில் தினகரன்

‘வயசாயிட்டா…தலைல இருக்குற முடிதான் கொட்டிடும்னு கேள்விப்பட்டிருக்கேன்…மூளையுமா கொட்டிடும்?…சனியன் என்னோட உயிரை வாங்கறதுக்குன்னே வந்து சேர்ந்திருக்கு…ஒரு ஒண்ணாங் கிளாஸ்; படிக்கற குழந்தையைக் கூப்பிட்டு…’இந்தா பாப்பா…போயி எலக்ட்ரிக் பில் கட்டிட்டு வா’ன்னு சொல்லி பணத்தையும் கார்டையும் குடுத்திருந்தா அது கூட அழகா போய் ஷநறுக்ஷகுன்னு கட்டிட்டு வந்திருக்கும்!…அறுபத்தியேழு…அறுபத்தியெட்டு வயசாச்சு…இந்த வேலையக் கூட கரெக்டாச் செய்ய முடியலை நீயெல்லாம் இத்தனை வருஷம் பொழைச்சு என்ன பிரயோசனம்?’

மகள் சந்திரா வீட்டிற்குள் தீபாவளிப் பட்டாசாய் வெடித்துக் கொண்டிருக்க, தலையில் கையை வைத்தபடி வெளித் திண்ணையில் குனிந்து அமர்ந்திருந்தார் வெள்ளிங்கிரி. தான் முகம் தெரியாத ஒரு இளைஞனால் ஏமாற்றப் பட்டு விட்டது கூட அவரை வெகுவாய்ப் பாதிக்கவில்லை. மகளின் வாயிலிருந்து சரமாரியாய் வந்து விழும் அமிலத் துண்டங்கள்தான் அவரை உருக்குலையச் செய்திருந்தன.

சில நிமிடங்களுக்குப் பிறகு, மெல்ல வீட்டிற்குள் எட்டிப் பார்த்து, ‘அம்மா…சந்திரா’ ஒருவித பயத்துடனே அழைத்தார்.

‘என்ன…என்ன எழவைக் கொட்டிக் குடுக்கப் போறே சந்திராவுக்கு?’ உள்ளிருந்து வார்த்தைச் சாட்டைகள் வந்து விழுந்தன.

‘ஒண்ணுமில்லம்மா….நெஞ்சு ஒரு மாதிரி எரிச்சலாயிருக்கு…ஒரு வாய் காப்பித் தண்ணி…கீது…’

‘க்கும்…நீ பண்ணிட்டு வந்த காரியத்துக்கு அது ஒண்ணுதான் கொறைச்சல்…சும்மா வாயை மூடிட்டு கம்னு கெட…அதையும் இதையும் கேட்டு..எரிச்சலை மூட்டாதே…!…ஹும்….என்னைப் பெத்தவ எப்படித்தான் உன் கூட பொழப்புத்தனம் பண்ணினாளோ..?…அது செரி…அவ எங்க முழுசாப் பொழச்சா…அதான் பாதியிலேயே பரதேசம் போயிட்டாளே’

வெள்ளிங்கிரிக்கு மனைவியின் ஞாபகம் வந்தது. ‘லட்சுமி….நானும் நீயும் வாழந்த வாழ்க்கையைப் பத்தி இதுகளுக்கு என்ன தெரியும்?…பேசாம நீ போனப்பவே என்னையும் கூடக் கூட்டிட்டுப் போயிருக்கலாமல்ல லட்சுமி…இப்படி பெத்த மகள் வாயிலிருந்து கேட்கக் கூடாத பேச்சையெல்லாம் கேட்க வேண்டியிருக்கே லட்சுமி’

மதிய உணவிற்காக வீட்டிற்கு வந்த மாப்பிள்ளை விநாயகம், திண்ணையில் வெளிறிப் போன முகத்துடன் அமர்ந்திருக்கும் மாமனாரைப் பார்த்துமே புரிந்து கொண்டார் அங்கு சந்திரா கதகளி ஆடிக் கொண்டிருக்கின்றாள் என்று.

வந்ததும் வராததுமாய் கணவனிடம் கொட்ட ஆரம்பித்தாள் சந்திரா. ‘ஏங்க…உங்க அருமை மாமனார் இன்னிக்கு என்ன காரியம் பண்ணிட்டு வந்திருக்கார் தெரியுமா உங்களுக்கு?’

விநாயகம் வாயைத் திறக்காமல் புருவ உயர்த்தலிலேயே ‘என்ன?’ என்று கேட்க,

‘எலக்ட்ரிக் பில் கட்டிட்டு வரச் சொல்லி பணத்தையும் காரடடையும் கொடுத்தனுப்பினா…ரெண்டையும் தொலைச்சிட்டு வந்து நிக்குது கெழம்’

‘அடடே…அப்படியா?…’என்ற விநாயகம் மாமானார் பக்கம் திரும்பி, ‘என்ன மாமா?…எங்க மிஸ் ஆச்சு?…வரிசைல நிக்கும் போதா?…இல்ல போற வழியிலேயேவா?’

சட்டென்று இடை புகுந்தாள் சந்திரா, ‘நீங்க வேற…அங்க வரிசைல நிக்கும் போது எவனோ வந்து, ‘என்ன பெரியவரே வெய்யில்ல நிக்கறீங்க?…என்கிட்டக் குடுங்க நான் என்னுடையதோட சேர்த்து உங்களோடதையும் கட்டித் தர்றேன்’னு சொன்னானாம்…இதுவும் நம்பிக் குடுத்துட்டுப் போய்…எங்கியோ ஒரு நிழல்ல பராக்குப் பார்த்திட்டு உட்கார்ந்திருக்கு…அவன் நைஸா…எஸ்கேப் ஆயிட்டான்…அவன் குடுத்து வெச்சவன்..நாலு நாளைக்கு குவாட்டரும்…கோழி பிரியாணியுமா ஜமாய்ப்பான்’

கள்ளம் கபடம், சூது வாது, பொய் புரட்டு;;;;…..எதுவும் தெரியாத…அந்தக் காலத்து மனிதரான தன் மாமனார் இந்தக் கால மனிதர்களின் தகிடுதத்தங்கள் பற்றிச் சிறிதும் அறியாதவராய் இருந்ததுதான் அவர் ஏமாந்ததற்கான சரியான காரணம் என்பதை யூகித்து விட்ட விநாயகம், ‘சரி…சரி…விடு..விடு…அதையே திரும்பத் திரும்பப் பேசறதில் என்ன ஆகப் போகுது?’ என்று தன் மனைவியை அடக்கினார்.

கணவனின் சொல்லுக்கு கட்டுப்பட்டு; அமைதியாய் வீட்டிற்குள் சென்று அவருக்கு மதிய உணவு பரிமாறுவதில் முனைப்பானாள் சந்திரா.

உணவை முடித்து விட்டு வழக்கம் போல் அரை மணி நேரம் உறங்கி எழுந்த விநாயகம், போகும் போது தன் மனைவியிடம் சொல்லி விட்டுச் சென்றார். ‘த பாரு சந்திரா…நீ பாட்டுக்கு ரொம்ப ஓவரா சத்தம் போட்டுப் பேசி அவரோட மனசை நோகடிக்காதே…பாவம்…ஏற்கனவே ரொம்ப நொந்து போயிருக்கார்’

ஆனால், அதைத் துளியும் காதில் வாங்கிக் கொள்ளாதவளாய் மறுபடியும் முழக்கத்தை ஆரம்பித்தாள் சந்திரா.

‘அங்கங்கே…வயசான கிழடு கட்டைகளை ஏண்டா முதியோர் இல்லத்துல கொண்டு போய்த் தள்ளிடறாங்கன்னு இப்பத்தான் புரியுது…இப்படிக் கேனத்தனமா நடந்து…கழுத்தறுத்தா யார்தான்…எத்தனை நாளைக்குத்தான் பொறுத்துக்குவாங்க?’

வெள்ளிங்கிரியின் அடிவயிற்றில் பசி தன் இருப்பை உணர்த்த ஆரம்பித்தது. ‘சாப்பாடு கேட்கலாமா?…வேண்டாமா?’ யோசித்தார்.

‘எதற்கெடுத்தாலும்…’நாங்கெல்லாம் செய்யுற எந்தக் காரியமும்…எந்தக் காலத்திலேயும் சோடையே போகாது’ ன்னு வாய் கிழியப் பேசுவியே…இப்ப எங்க போச்சு…அந்த அனுபவச் சனியனெல்லாம்?’

சற்றும் வாய் ஓயாமல், வார்த்தைகளில் துளியும் பிசகின்றி, தங்கு தடையில்லாமல் மடை திறந்த வெள்ளமாய்…வானைக் கிழித்துக் கொண்டு கொட்டும் அடர்த்தி மழையாய்…அவள் பேசுவதையே கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்த வெள்ளிங்கிரியின் நினைவுகள் பின்னோக்கிச் சென்று அந்த நாளை எண்ணிப் பார்த்தது.

அப்போது சந்திராவிற்கு மூன்று வயதிருக்கும். நல்ல நிறம், சதைப் பிடிப்பான கன்னம், மற்றும் கை கால்களுடன் ‘கொழு…கொழு’வென்றிருந்த அவளை பார்ப்பவர்கள் அனைவரும் ரசித்துக் கொஞ்சுவர். கொஞ்சிக் கொஞ்சி மகிழ்வர்.

பிறகு அவளின் திக்குவாய் குறை பற்றித் தெரிய வரும் போது, ‘த்சொ…த்சொ..’என்று பரிதாபப்பட்டு ‘அழகை அள்ளிக் கொடுத்த ஆண்டவன் இப்படி அநியாயம் பண்ணிட்டானே!’ என்று இறைவனையே நிந்தனை செய்தபடி நகர்வர்.

‘ஏங்க…..காலைல நம்ம சமுக்குட்டி அண்ணன் வீட்டுக்குப் போயிருந்தேன்….ஊரிலிருந்து அவங்க பெரியாத்தா வந்திருந்தாங்க…அவங்க நம்ம சந்திராவோட குறையைக் கேள்விப்பட்டு…ஒரு நிவர்த்தி சொன்னாங்க…’ லடசுமி ஒரு நம்பிக்கையோடு சொல்ல,

‘என்ன…என்ன சொன்னாங்க?’

‘அவங்க ஊர்ல ‘புலிப்பாணி’ன்னு சித்தர் இருக்காராம்…காது கேட்காதவங்களுக்கு கேட்க வைக்கறாராம்…வாய் பேசாதவங்களைப் பேச வைக்கறாராம்…’

‘நெஜம்மாவா?’

‘ஆமாங்க…பிறவி ஊமைகளையே பேச வைச்சிடறவரு…நம்ம பொண்ணுக்கு என்ன வெறும் திக்குவாய்தானே?…நிச்சயமா சரி பண்ணிடுவார்னு எனக்குத் தோணுதுங்க’

எப்படியாவது தங்கள் குலக் கொழுந்தின் திக்குவாய் குறை தீர்ந்தாப் போதும் என்கிற ஆர்வத்தில் கணவனும் மனைவியும் அந்தப் புலிப்பாணிச் சித்தரைப் பார்த்து, சில தீர்த்தங்களையும்…பச்சிலைச் சாறுகளையும் வாங்கி வந்து மகளுக்கு கொடுத்துப் பார்த்தனர். ம்ஹும்…ஒன்றும் பலிக்கவில்லை.

சித்த வைத்தியம்…இங்கிலீஸ் வைத்தியம்…சீன வைத்தியம்…ஹோமியோபதி என்று எல்லா வகையிலும் முயற்சி செய்து பார்த்து விட்டுத் தோல்வியில் துவண்டு கிடந்தவர்களிடம் பக்கத்து வீட்டுப் பாட்டி ஒரு வைத்தியம் சொல்ல,

‘அடப்போ கெழவி…எல்லாப் பண்டுதமும் பண்ணிப் பார்த்தாச்சு…இது ஒண்ணுதான் பாக்கி’ என்று சலித்துக் கொண்ட லட்சுமியிடம்,

‘அப்படியேன் சொல்லுறே லட்சுமி?…அதையும்தான் முயற்சி பண்ணிப் பார்ப்போமே…ஒரு வேளை அதனால கூட சரியாகலாமில்ல?’ என்று சொன்ன வெள்ளிங்கிரி தானே தன் முயற்சியில் அந்தப் பாட்டி சொன்ன உபாயத்தைச் செய்து பார்த்தார்.

என்ன ஆச்சரியம்…’திடு..திப்’பென்று ஒரு நாள் காலையில் சந்திரா எந்தவித திக்கலும்…திணறலும் இன்றி சரளமாய்ப் பேச ஆரம்பித்தாள். பெற்றவர்கள் மனம் குளிர்ந்து போய் ஒரு கோயில் பாக்கி வைக்காமல் எல்லாக் கோயில்களுக்கும் சென்று தங்கள் நன்றியைச் செலுத்தினர்.

‘ஏய்…கெழம்….வயித்துக்கு ஆகாரம் போடணும்கற நெனப்பிருக்கா?…இல்ல…பணத்தையும் கார்டையும் தொலைச்ச மாதிரி அந்த நெனப்பையும் தொலைச்சிட்டியா?…’ சந்திரா கத்தலாய்க் கேட்க,

பழைய நினைவுகளிலிருந்து மீண்ட வெள்ளிங்கிரி மலங்க மலங்க விழித்தார்.

‘போ…உள்ளார தட்டுல போட்டு வெச்சிருக்கேன்…போய்க் கொட்டிக்க…’

எழுந்து தள்ளாட்டமாய் நடந்து சென்றவரைப் பார்த்து,

‘தள்ளாட்டத்தைப் பாரு…தண்ணி போட்டவனாட்டம்’ என்று சந்திரா நக்கலாய்ச் சொன்னது வெள்ளிங்கிரியின் காதுகளுக்கு சரியாய்க் கேட்காமல் போனதற்குக் காரணம் பசியின் காதடைப்பு.

(முற்றும்)

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.