கே.எஸ்.சுதாகர்

மின்னஞ்சலில்  படைப்புகளை அனுப்பும் காலம் இது. நேரம், தபால் செலவு மிச்சம். ஒரு முறை முரசு அஞ்சலில் படைப்பை அனுப்பியிருந்தேன். சற்று நேரத்தில், ‘Please send Bamini or Tharini” என்று பதில் வந்தது. ‘பாமினியும் தாரிணியும் எனது கசின்மார்கள். அவர்களை எப்படி நாம் அனுப்ப முடியும்?’ என்கின்றார் மனைவி. ஒரு சிலர் எந்த எழுத்துரு என்றாலும், அதை மாற்றி எடுக்கும் வல்லமை பெற்றவர்களாக இருக்கின்றார்கள். அப்படி இயலாதவர்களுக்காக நாம்தானே மாற வேண்டும். இப்பொழுதெல்லாம் நான் அவரவர்களுக்குத் தகுந்தமாதிரி பாமினி, முரசு அஞ்சல், யுனிகோட் என்ற எழுத்துருக்களில் அனுப்பி வருகின்றேன். 

இந்தக் கணினியின் வருகையானது ஆரம்பத்தில் எனக்கு மிகவும் பயப்பீதியைத்தான் ஏற்படுத்தியது. 1983 ஆம் ஆண்டளவில்தான் இலங்கைப் பல்கலைக்கழகங்களில் கல்குலேட்டரையே (calculator) அனுமதித்திருந்தார்கள். அதற்கடுத்த வருடமளவில் பேராசிரியர் குணசேகரா ( ‘குண்டா’ என்பது நாம் அவருக்கு அழைக்கும் செல்லப் பெயர்.) அவர்களால்தான் எமக்கு இந்த கணினி யுகம் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இந்தச் சந்தர்ப்பத்தில் அவரைப் பற்றியதொரு சிறு அறிமுகம். மெலிந்த தோற்றம். ஆஸ்மா நோயாளி. அப்போது ஜனாதிபதியாகவிருந்த ஜே.ஆர். ஜெயவர்த்தனாவிற்கு ஆலோசனை வழங்கும் ஏழு விஞ்ஞானிகளுள் ஒருவர். 

நன்றாக ஞாபகம் இருக்கின்றது. அவர் எங்களுக்கு விரிவுரைகள் ஆரம்பித்து இரண்டாவதோ மூன்றாவதோ நாள். ஒட்டி உலர்ந்த நாயொன்று வகுப்பறைக்குள் நுழைந்தது. நாங்கள் ஆரவாரத்துடன் அதைத் துரத்தும் முயற்சியில் ஈடுபட்டோம். அந்த நாய் வகுப்பறைய விட்டுப் போவதாக இல்லை.  அது வாசலுக்கு வரும் வரைக்கும் காத்திருந்த பேராசிரியர் குணசேகரா, பந்தொன்றை உதைக்கும் வீரனைப் போல அந்த நாயைப் பந்தாடினார். அது காற்றிலே பறந்து போய் வெளியிலே விழுந்தது. சம்பவம் ஒரு அதிர்ச்சியாக இருந்தாலும், காட்சி சிரிப்பாக இருந்தது. அடக்க முடியாமல் வாய் பொத்தி – விட்டு விட்டுச் சிரித்தோம். ஆத்திரம் தாளாமல் ‘டஸ்ர’ரைத் தூக்கி எங்களுக்குள் எறிந்துவிட்டுப் போய் விட்டார் பேராசிரியர். 

அதன்பிறகு ‘FORTRAN’ என்றொரு ‘கொம்பியூட்டர் மொழி’ படிப்பு. சிறிய துளைகள் கொண்ட கட்டுக்கட்டான மட்டைகள். ஒரு பெரிய இராட்சத இயந்திரம், ‘கொம்பியூட்டர் லாப்’பின் முன்னால் இருந்தது. அதற்குள் அந்த மட்டைகளைப் போட்டு எடுக்க வேண்டும். மூன்று மாதம் அந்தப் படிப்பு. உண்மையில் இற்றை வரைக்கும் அதிலே என்னத்தைத்தான் அடித்தோம் படித்தோம் என்று விளங்கவில்லை. மூன்றுமாத காலத்தில் ஒருமுறைதான் அந்த இயந்திரத்தின் பக்கம் சென்றதாக நினைவு. எனது நண்பன் சிவகுமார் அதில் கரை கண்டவன். மூன்றுமாத காலமாக ஒவ்வொரு நாளும், சளைக்காமல் காலை ஏழுமணிக்கே எழுந்து அந்தக்கட்டுகளைத் தூக்கிக் கொண்டு புறப்பட்டு விடுவான். அதில் அவன் எனக்கு ‘குட்டி லெக்சரர்’. 

அந்தப் படிப்பிற்குப் பின்னர்தான் பேராசிரியர் எங்களையெல்லாம் ‘கொம்பியூட்டர் லாப்’பிற்குள் செல்வதற்கு அனுமதி தந்தார். அதற்குள் போவது கிட்டத்தட்ட கொலைக்களத்திற்குப் போவது போல. அது ஒரு ஏ.சி றூம். அந்தக்காலத்தில் கொம்பியூட்டர்கள் எல்லாம் ஏ.சி றூமிற்குள்தான் வீற்றிருந்தன. வெளியே சப்பாத்துகளைக் கழற்றி விட்டுத்தான் உள்ளே நுழையலாம். எலிகளுக்குப் பக்கத்தில் வெண்ணெய்க்கட்டிகளை வைத்து விட்டு, எப்பவாகிலும் அதன் மூக்கைப் பார்த்த அனுபவம் உங்களுக்கு இருக்கின்றதா? அப்படித்தான் – கொம்பியூட்டர் லாப்பைத் திறந்து, வாசலில் நின்றபடியே மூக்கை விரித்துச் சுருக்கி தனது நுகர்புலனை லாப்பிற்குள் விடுவார் பேராசிரியர். அச்சொட்டாக வந்து ஒரு சிலரை கொம்பியூட்டரில் இருந்து எழுப்பி அறையை விட்டு வெளியே போகும்படி கலைப்பார். இது எனக்கு ஏன் என்று ஆரம்பத்தில் பிடிபடவில்லை. சொக்ஸ் (socks) நாற்றமுடையவர்களைத்தான் அப்படி அவர் கலைக்கின்றார் என்பது பிறகு தெரிய வந்தது. அவரின் இந்த சேஷ்டையால் – அதன் பிறகு 20 – 25 கொம்பியூட்டர்கள் இருக்குமிடத்தில் 5 – 6 மாணவர்களே இருந்தார்கள். 

அதன்பின்பு திறந்தவெளிப் பல்கலைக்கழகம் (The Open University ), 1988 – 89 இல் வேலை செய்யும் வாய்ப்புக் கிடைத்தது. கள்ளனுக்குப் பொலிஸ் வேலை கொடுத்தது போல. பத்துக் கொம்பியூட்டர்கள். அறைக்கு ஏ.சி இல்லாததால் மூன்று மின்விசிறிகள். 

ஒருமுறை கொம்பியூட்டர் சம்பந்தமான புத்தகங்களைக் பார்த்துக் கொண்டிருந்த போது, அதனுள் ஒரு பேப்பரில் இருந்த தகவல் என்னைக் கவனத்தில் ஈர்த்தது. அதில் 30 floopydisks ‘நாவல’ என்னும் இடத்தில் இருந்த தலமைப்பீடத்தால் அனுப்பி வைக்கப்பட்டிருப்பதாக ஒரு தகவல். இயக்குனரிடம் சென்று அந்த floopy (குறுந்தகடு) பற்றி விசாரித்தேன். அவர் சற்று ஜோசித்துவிட்டு, “ஆ.. கொஞ்சப் பொருட்கள் வந்தன. cool ஆன இடத்திலை வைக்கச் சொல்லி எழுதியிருந்தார்கள். அதுதான் பத்திரமா ஒரு இடத்திலை வைச்சிருக்கிறோம்’ என்றார் அவர். அவற்றைத் தர முடியுமா என்று கேட்டேன். அவரும் கிளாக்குமாக என்னை ஒரு அறைக்குள் கூட்டிச் சென்று அங்குள்ள fridgeஐத் திறந்தார்கள். உள்ளே பால், பழம் – அவற்றின் மத்தியில் மதியச் சாப்பாட்டுடன் அந்தப் பொதி இருந்தது. “தம்பி, மூண்டு மாதமா இதுக்குள்ளை கிடக்கு. என்னெண்டு ஒருக்காப் பாரும்.” உள்ளே 30 floopydisk உம் நீரிலே ஊறி உப்பிப் போய் இருந்தன. நான் சிரிக்க அவர்களும் சேர்ந்து சிரித்துக் கொண்டார்கள். 

இன்னொருதடவை அவர் தனது பத்தாம் வகுப்புப் படிக்கும் மகனுக்கு கொம்பியூட்டர் சொல்லிக் கொடுக்கும்படி கேட்டார். அவனும் படிப்பதற்கு வந்தான். அவனுக்கு ஒன்றும் ஏறுவதாகத் தெரியவில்லை. கொஞ்ச நேரம் கொம்பியூட்டரை வெறித்தபடி பார்த்துக் கொண்டிருந்தான். “சேர், என்ரை மணிக்கூட்டை ஒருக்காப் பாருங்கோ. இது  இவ்வளவு காலமும் வெள்ளைக்கலராக இருந்தது. இப்ப செவ்விளநீர்க் கலராக மாறிப் போச்சுது” மணிக்கூட்டின் உள் முகப்பைக் காட்டினான். “கொம்பியூட்டரிலை இருந்து ஏதாவது கதிர்வீச்சு வருகிறதா? எனக்குப் பயமாக இருக்குது” என்று சொல்லிக் கொண்டே வகுப்பை விட்டு வெளியேறிவிட்டான். அதன் பிறகு அவன் அந்தப் பக்கம் வரவும் இல்லை. அவனின் தந்தையும் அதைப்பற்றி ஒன்றும் என்னிடம் கேட்கவுமில்லை. 

இலங்கையில் இருக்கும் காலங்களில் ஒருமுறைதானும் கொம்பியூட்டரில் தமிழ் எழுதும் வாய்ப்புக் கிட்டவில்லை. நியூசிலாந்தில் எனக்கு முரசு அஞ்சல் அறிமுகமானது. தமிழை அப்படியே ஆங்கிலத்தில் நேரடி மாற்றம் செய்யும்போது (ammaa – அம்மா) தமிழ் எழுத்துக்கள் உருவாகின. 1995 ஆம் ஆண்டிலிருந்து முரசைப் பாவித்து வருகின்றேன். 

நியூசிலாந்தில் எனது நண்பன் ஒருவனுக்கு ஏற்பட்ட அனுபவம் மிகவும் சுவையானது. அவன் கொம்பியூட்டர் நன்றாகத் திருத்துவான். ஒருமுறை டாக்டர் ஒருவரின் வீட்டிற்கு கொம்பியூட்டர் திருத்துவதற்காகச் சென்றான். கொம்பியூட்டருக்கு வைரஸ் பிடித்துவிட்டது. “டாக்டர் உங்கள் கொம்பியூட்டருக்கு வைரஸ் பிடித்துவிட்டது” என்றான் அவன். அவர் உடனே தனது மகனைக் கூப்பிட்டார். அவனுக்கு பத்து வயதிருக்கும். “காய்ச்சலோடை கொம்பியூட்டரிலை இருக்க வேண்டாம் எண்டு எத்தனை தரம் சொன்னனான். கேட்டால்தானே! இப்ப தன்ரை வைரசை கொம்பியூட்டருக்குக் குடுத்திட்டான்” என்று அவனை டாக்டர் ஏசினார். மகன் சிரித்துக் கொண்டே உள்ளுக்குப் போனான். இதை நான் எப்படி அடுத்தவருக்குச் சொல்வது என்று எனது நண்பன் எனக்குச் சொன்னான். 

இது அவுஸ்திரேலியாவில் நடந்தது. மூன்று அல்லது நான்கு வருடங்கள் இருக்கலாம். எனது குடும்ப வைத்தியரிடம் (Family doctor) சென்றிருந்தோம். முதுகுப்புறம் நோவினால் அவஸ்தைப்பட்டுக் கொண்டிருந்தேன். டாக்டரின் முகம் என்றுமில்லாதவாறு வாடியிருந்தது. அவர் இலங்கையில் இருக்கும்போது பிரபல சத்திரசிகிச்சை நிபுணராக (Surgeon) இருந்தவர். இங்கே குடும்பவைத்தியராகப் பணி புரிகின்றார். அறையைவிட்டு வெளியே வந்தார். தனது முதுகை தூண் ஒன்றிற்கு எதிராக முண்டு கொடுத்துக் கொண்டார். பாம்பு நெளிவது போல தனது உடலை மேலும் கீழும் தூண் மீது அசைத்தார். “எனக்கும் அடிக்கடி வாறதுதான். எழுபத்தெட்டு வயதான நானே இதுக்கு மருந்து எடுக்கிறதில்லை. உடற்பயிற்சிதான் இதுக்கு மருந்து. சிலவேளை என்ரை மனிசி மசாஜ் செய்து விடுவார்” கையைக் கூப்பி புட்டுக் கொத்துவது போல என் முதுகினில் குத்தினார். 

டாக்டர் எனக்கு மருந்து தந்துவிட்டார். இனி மகனுக்கு! “மகனின்ரை வளர்ச்சி குறைவாக இருக்கு. ஏதாவது விட்டமின்கள் தரமுடியுமா?’ கேட்டு முடிவதற்கு முன்பே பதில் வந்தது. “இதிலை நான் டொக்டரா அல்லது நீர் டொக்டரா? இஞ்சை விட்டமின்கள் எழுதித் தந்தா நான் ஜெயிலுக்கைதான் பிறகு இருக்க வேண்டி வரும். அவுஸ்திரேலியாவிலை நல்ல சத்துள்ள உணவு வகைகள் எல்லாம் இருக்கு. அதைச் சாப்பிட்டாலே போதும்.” 

அதிகம் கதைத்துவிட்டேனோ என்னும் தோரனையில் அறையின் மூலையை வெறித்துப் பார்த்தார் டாக்டர். “இப்பெல்லாம் முன்னையப்போல ஒன்றும் செய்துவிட முடியாது. எப்பொழுதும் எங்களைக் கவனித்தபடியே இருக்கின்றார்கள். இஞ்சை பாருங்கள் இதை…! இது ஒண்டு இப்ப வந்து என்னைப் பயப்பிடுத்துது.” அவர் காட்டிய திக்கில் ஒரு கொம்பியூட்டரும் ஒரு பிறின்ரரும் பெட்டி பிரிக்கப்படாமல் இருந்தன.  அவரது சலிப்புத் தன்மைக்கு அதுவே காரணம் என்பதைப் புரிந்து கொண்டோம். தனது நாற்பது வருட சேவையில் இப்பொழுதுதான் ஒரு பேரிடி வந்திருக்கின்றது என்றார். அதைப் படித்து வேலை செய்வதற்கு தனக்கு வயது போய்விட்டது என்றார். 

இது நடந்து சிலகாலங்களின் பின்னர் மீண்டும் சென்ற போது கொம்பியூட்டரும் பிறின்ரரும் அவரது மேசையில் இருந்தன. ஆனால் இணைப்புகள் தொடுக்கப்படாமல் தன்னந் தனியனாக அவரை வெறித்துப் பார்த்தபடி இருந்தன. 

அவரை வேவு பார்ப்பதற்கென்றே இப்பொழுது வருத்தம் அடிக்கடி வருகின்றது. அவர் மேசைமீது தனது பேனாவினால் தாளம் போட்டுத் தட்டியபடி ஏதோ ஒரு சினிமாப்பாடலை முணுமுணுத்துக் கொண்டிருந்தார். கொம்பியூட்டர், பிறின்ரருடன் கை கோர்த்த கழிப்பில் விழாக்கோலம் பூண்டிருந்தது. “உமக்கொரு full blood test செய்ய வேணும்!” என்று சொல்லியபடி விசைப்பலகையை (keyboard)  தனது ஒரு விரலினால் குத்தத் தொடங்கினார். “கொலஸ்ரோல், சுகர், லிவர் எல்லாம் செக் பண்ணச் சொல்லி இதிலை எழுதி இருக்கிறன்.” பிறின்ரரில் இருந்து சத்தம் போட்டபடி அரையும் குறையுமாக வெளியே வந்த பேப்பரை இழுத்தெடுத்தார். என்னிடன் நீட்டியபடி புன்முறுவல் செய்தார். உலகத்திலை நடக்காதது என்று ஏதாவது உண்டா என்பது போன்ற பார்வை. எல்லாம் சரியாகத்தான் இருந்தது. ஆனால் பெயர்தான் செல்லத்துரை சுதாகரன் என்பதற்குப் பதிலாக செல்லத்துரை சிவராஜா என்று இருந்தது.

 

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “கணினி விளையாட்டுக்கள்

  1. Could you please send the links for the publications in the websites – canada thamby

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.