வல்லமையாளர்
திவாகர்
கடுதாசி எழுதுவது என்பதே ஒரு இன்பம். அது போல கடுதாசி நமக்கு வரும்போதெல்லாம் அதைப் படிக்குபோதெல்லாம் ஒரு இன்பம் வரும். உலகத்தில் நடக்கின்ற நிகழ்வுகளின் செய்திகள் உடனுக்குடன் வரும் இந்த அதி நவீன காலத்தில், எங்கு நோக்கினும் எல்லோரிடமும் கைபேசி இருக்கும் இந்தக் காலத்தில், அறிந்தவர் அறியாதவர் என்று எந்நேரமும் நம் காதுகள் ஒரே பிஸி பிஸிதான். மொபைல் வந்தாலும் வந்தது.. போயே போய் விட்டது எழுத்தால் செய்தி தெரிவிப்பது என்பது.. புருஷன் ஊருக்குப் போகிறான். உள்ளூர் ஸ்டேஷன் போய் வண்டி ஏறுமுன்பு மனைவிக்கு ஒரு கால், ஸ்டேஷன் வந்தாச்சு, வண்டிக்கு காத்திருக்கிறேன் என்று, சரி, வண்டி வந்து விட்டது – வண்டி ஏறிவிட்டேன்.. வேற? என்று இன்னொரு கால், பிறகு வண்டியில் போய்க்கொண்டிருக்குபோதே நிறைய பேச்சுகள், இறங்கவேண்டிய ஸ்டேஷன் வந்தவுடன் பேச்சுகள்.. பேச்சுகள்.. இந்த உலகில் ஒருத்தரை ஒருத்தர் பிரிவது என்பது சாத்தியமே இல்லை என்பதாக ஆகிவிட்டது
பிரிவு என்பது அன்பை வலுப்படுத்த மிகவும் அவசியம் என்றெல்லாம் ஒரு காலத்தில் சொல்வார்கள். அந்தப் பிரிவெல்லாம் இனி இல்லை.. ஒருவரை ஒருவர் பிரிந்தால் கூட பிரிவு நேரத்தில் வசதியாக . மொபைல் போன் இருக்கவே இருக்கிறது. எந்நேரமும் பேசலாம், கொஞ்சலாம், சண்டை போடலாம், திட்டலாம், எரிச்சல் படலாம்.. தாம் என்னென்ன அந்தந்த நேரத்தில் செய்து கொண்டிருக்கிறோம் என்று அவ்வப்போது சொல்லிக் கொண்டிருக்கலாம்.. ஆஹா எத்தனை வசதிகள்..
ஆனாலும் கொஞ்சம் கடந்த காலத்தை நினைத்துப் பார்க்க விரும்புகிறேன். அதே மனைவி, அதே கணவன்.. வீட்டை விட்டு வெளியூர் சென்ற கணவன் திரும்பி வரும் வரை காத்திருப்புதான், மனையாளுக்கு எத்தனையோ கவலைதான்.. அதோ தபால்காரர் வருகிறார்.. கணவர்தான் கடிதம் எழுதியிருப்பார்.. ஆமாம்.. அவரோட கடிதம்தான்.. அடடா.. இரண்டு வரியில் எத்தனை அன்பு வெளிப்படுகிறது அவரிடம்.. இவள் இல்லாமல் பொழுதும் கொஞ்சமும் நகர்வது இல்லையாமே.. இங்கு மாத்திரம் என்ன வாழுகிறதாம்.. உடனுக்குடன் பதில் எழுதவேண்டும் என்று அவள் கை துடிக்கிறது.. முதல்நாள் வாங்கி வைத்திருந்த அந்த இன்லாண்ட் லெட்டர் உடனுக்குடன் மேசையிலிருந்து உருவப்பட்டு அவள் தன் ஆசை எண்ணங்களால் அன்பு எனும் மை கொண்டு நிரப்பப்படுகிறது. பிரிவுதான் எத்தனையோ இன்பத்தை அவன் திரும்பி வரும்போதுதான் அதிகம் வெளிப்படுத்தும், இடையில் இந்தக் கடிதங்களின் இன்ப உலா.. ஆஹா!!
ஆனால் இந்தக் கடிதங்களெல்லாம் கதைகளிலும் கற்பனைகளிலும் மட்டுமே இனி காணலாம். கொஞ்சம் அதிர்ஷ்டமிருந்தால் இரவில் கனவு கூட வரலாம்தான்.. யாருக்காவது கனவில் தான் கடிதம் எழுதுவது போல கண்டால் காலையில் ஞாபகம் வைத்துக் கொண்டு வெளியேயும் சொல்லி விடுங்கள்.. இவர் கனவில் கடிதம் எழுதினாராம் என்று அதிசயப் பிறவியாகப் பார்க்கலாம்.
அப்படிப்பட்ட அதிசயம் படைத்த ஒரு கடிதத்தை இந்த வாரம் திரு பழமைபேசி வல்லமையில் https://www.vallamai.com/literature/short-stories/27373/ அம்மாவுக்குக் கடிதம்’ என் சிறுகதையில் கொடுத்திருக்கிறார். இக்கடிதம் ஒரு வகையில் மாறுபட்ட உணர்ச்சியில் எழுதப்பட்ட கடிதம் என்றாலும், மனதில் எழுந்த கருத்துக்களை அழகாக வெளிப்படுத்தி எழுதப்பட்டது என்பதில் எள்ளளவு சந்தேகமும் இல்லை.
அன்புடன் அம்மாவுக்கு,
சுகாதாரத்தில் நான் மிகவும் நலமாய் இருப்பதாகவே உணருகிறேன். இன்று நான் உன்னைச் சந்திக்கிற வரையிலும் மனரீதியாகவும் நலமாய்த்தான் இருந்தேன். ஆனால் தற்போது அப்படி இல்லை. மிகவும் வருத்தமாய் இருக்கிறது.
நீயும் உன் கணவனுமாகச் சேர்ந்து கொண்டு என் பள்ளிக்கூட முன்றலுக்கு ஏன் வந்தீர்கள்? வந்ததோடு மட்டுமல்லாமல், ஏதேதோ பேசி நண்பர்கள் மத்தியில் பெரிய அவமானத்தை ஏற்படுத்தி விட்டிருக்கிறீர்கள்.
எனக்கு நன்கு நினைவிருக்கிறது. இனிமையான கோடைகால விடுமுறை அது. ஆறாம் வகுப்புத் தேர்வு எழுதி விட்டு, பெருமைமிகு ராபின்சன் இடைநிலைப் பள்ளியில் அடுத்த ஆண்டு படிப்பினைத் தொடரப் போகிறேன் எனும் மகிழ்ச்சியில் திளைத்து மகிழ்ந்தோடிக் கொண்டிருந்தேன்.
என்னைச் சுற்றிலும் என்ன நடக்கிறது என்பதை உணர்ந்து கொள்ள முடியாத பருவம்; வீடெங்கும் தேடிப் பார்க்கிறேன்; அப்பாவைக் காணவில்லை. கூட்டத்தினின்று ஒதுக்கி வைக்கப்பட்ட ஆட்டுக்குட்டி போல உணர்ந்தேன். வழிதவறி அல்லாடும் என்னைக் கொண்டு போய்ச் சேர்ப்பதற்கு மேய்ப்பன் எவனும் வர மாட்டானா என ஏங்கிப் புழுங்கித் தவித்தேன். அடிமேல்தான் அடி விழும் என்பார்களே, அதைப் போலத்தான் எனக்கும்.
என்மீதான உன் கவனிப்பும் அருகிப் போனது. உனக்கு எல்லாமே ஸ்டீவ் என்றாகி விட்டது. நீயும் என்னைக் கவனிக்கவில்லை. அப்பாவையும் சந்திக்க விடவில்லை. நொறுங்கிப் போனேன் நான்.
அந்த ஏழு மாதங்களும் எனக்கு வெம்மையான மாதங்கள்தாம். அங்கே நீதிமன்றக் கதவுகளைத் தட்டியெழுப்பிக் கொண்டிருந்தார் அப்பா. அதுவும் எனக்காக! போராட்டத்தின் முடிவில் வாரம் ஒருமுறை என்னையவர் பொது இடத்தில் வைத்துப் பார்க்கலாம் என்றாகிப் போனது.
வாரத்தில் கிடைக்கும் அந்த இரண்டு மணி நேரமும் எனக்கு வசந்த காலம். இறைவனின் திருவுலகிற்கே அழைத்துச் செல்வார் அவர். அவர் சந்திக்குமந்த மெக்டொனால்ட்சு கடையோ, இசுடார் பாக்சு கடையோ, அது எனக்கு புனிதத் தலமானது. எனக்குப் பொன் தரவில்லை. பொருள் தரவில்லை. சந்திக்கும் போதெல்லாம் என் அப்பா எனக்கு ஊட்டியது நம்பிக்கையான சொற்களை மட்டுமே. அவைதான் இன்றளவும் என்னை இருத்திக் கொண்டுள்ளது.”
பாருங்களேன், ஒரு சிறு கடிதத்திலே ஒரு உணர்ச்சிக்காவியமே நடந்து முடிந்துள்ளது. உணர்ச்சிகள் மட்டும் மனிதனுக்கு இல்லையென்றால் மனித வாழ்க்கையே நமக்கு தேவையில்லாததுதான். அழகான கதையில் ஒரு கருத்துள்ள கடிதத்தை உணர்ச்சிக் கலவையோடு கலந்து கொடுத்த திரு பழமை பேசி அவர்களை இந்த வார வல்லமையாளராக வல்லமை குழுவின் சார்பில் தேர்ந்தெடுக்கப்படுவதற்கு மகிழ்ச்சி தெரிவிப்பதோடு பழமையை அதன் தரம் அறிந்து வெளியிட்டு வாசகர்களை தன்னோடு கூடவே அழைத்துச் செல்லும் பாணிக்காக அவருக்கும் நம் வாழ்த்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
கடைசி பாரா: இசைக்கவி ரமணன் அவர்களால் ஆரம்பிக்கப்பட்ட இந்த நவராத்திரி கவிதைக் கொலுவில் கவிஞர் மரபின் மைந்தன் முத்தையா அவர்களின் பொன்னூஞ்சல் கவிதைதான் இந்தக் கடைசி பாராவில் இடம் பெறுகிறது. அன்னையிடம்தான் இவருக்கு எத்தனைப் பிரியம் பாருங்கள்:
அல்லைப் பழிக்கும் அடர்நிறத்தாள்-என்
அல்லல்கள் தீர்க்கும் அபிராமி
தில்லைக் கரசனின் தாண்டவத்தில்-நல்ல
தாளமென்றானவள் சிவகாமி
சொல்லைக் கள்ளாய் மாற்றித்தரும்-அருள்
சொக்கன் மகிழ்கிற மாதங்கி
தொல்லை வினைகள் தொலைத்தெறிந்தே-உயிர்
துடைத்துக் கொடுக்கும் சாமுண்டி
விண்வரை அசைகிற பொன்னூஞ்சல்-அந்த
விதியை உதைக்கும் அதிசயமாம்
மண்வரை வந்த உயிர்களுக்கோ-அவள்
மலரடி நிழலே பெரும்சுகமாம்
எனக்கு அழுகையாக வருகிறது. அனைவருக்கும் நன்றி!!
மடல் எழுதும் பழக்கம் இன்னும் வழக்கத்தில்தான் உள்ளதுங்க ஐயா. கணவன் – மனைவி இடையே பிணக்குகள் அல்ல; ஊடல் நேரும் போது கடிதப் போக்குவரத்துதான். அதுவும் தாளில் எழுதியது. இஃகி!
இந்த இடத்தில் முக்கியமாக ஒன்றைக் குறிப்பிட்டே ஆக வேண்டும். சகோதரி பவளா அவர்கள் என் முகவரியைக் கேட்டிருந்தார். நானும் என் பெயரை எழுதி, என் பிறந்த ஊர் முகவரியை அளித்திருந்தேன். அவ்வண்ணமே எழுத்தாளர் மதிப்பிற்குரிய வையவன் ஐயா அவர்களும் நூலும் பரிசிலும் அம்முகவரிக்கு அனுப்பி வைத்திருக்கிறார். அதற்குப் பின் நடந்ததுதான் உச்சம்; உயர்திரு.திவாகர் ஐயா அவர்கள் குறிப்பிட்டதைப் போல!
அந்தியூர் எனும் சிற்றூரின் கிழக்கு வீதியில் இருக்கும் என் அண்டை வீட்டாரிடம் சென்று என் பெயரைச் சொல்லித் தபால்காரர் கேட்க, அவர்கள் அப்படியொருவர் இங்கு இல்லை எனச் சொல்லி இருக்கிறார்கள். நான் முகவரியில் கவனத்துடன், “அம்முலு அம்மாள் இல்லம்” எனக் குறிப்பிட்டிருந்தேன். அவ்வளவுதான் மிக எளிதில் கண்டுபிடித்து விட்டார்கள். அம்முலு அம்மாள் என்பவர் 20 ஆண்டுகளுக்கு முன்பே மறைந்த என் பாட்டியார். அவர் இன்னும் வாழ்ந்து வருவதையும் உறுதிப்படுத்தி ஆயிற்று.
அடுத்து, வீட்டிற்குச் சென்று என் அப்பாவை எழுப்பி இன்னாருக்குக் கடிதம் வந்திருக்கிறது எனச் சொல்லி இருக்கிறார் அஞ்சல்காரர். தபாலைப் பெற்ற கையோடு, அமெரிக்காவிலிருந்து மகனே வந்திருப்பதாக கிழக்கு வீதி மட்டுமல்லாது, ஊர் முழுக்க வலமும் வந்திருக்கிறார் அப்பா. அதைச் சொல்லிச் சொல்லி இன்புறும் அம்மா. இதற்கு என்ன விலை கொடுப்பது?
தள்ளாடும் வயதில் இருக்கும் என் பெற்றோருடைய இன்பத்திற்கும், பெரும்பொருள் ஈட்டியவர் பெற்றவர் அடைந்த இன்பத்திற்கும் ஒப்பீடு?? சிறு நிகழ்வு ஒன்றின் மூலம் எத்தகைய பேரின்பம்? இயற்கையான வாழ்க்கை மிகவும் தனித்தன்மையானது!!
வல்லமை குழுவினர் மற்றும் எழுத்தாளர் வையவன் ஐயா அவர்களுக்கும் எனது அன்பு தோய்ந்த கண்ணீர்த் திவலைகளுடனான நன்றிகள் உரித்தாகட்டும்!!
பணிவுடன்,
பழமைபேசி.
வாழ்த்துகள்…வாழ்த்துகள்!
சிறுகதைக் கடிதம் மட்டுமின்றி, பின்னூட்டக் கடிதமும் மனதைத் தொடுவதாக இருக்கிறது.
கடைசி பாராவில் இடம் பெற்ற கவிஞருக்கும் அன்பான வாழ்த்துகளும் பணிவான வணக்கங்களும்.