Category: சிறுகதைகள்

கதைகள்

  • சராசரிகள்

    முகில் தினகரன்

    வழக்கத்திற்கு மாறாக பேருந்து நிறுத்தத்தில் கூட்டம் அதிகமாயிருக்க எனக்குள் ஏதோவொன்று பிறாண்டியது. கைகளைப் பிசைந்தபடி கலவர முகத்துடன் நின்று கொண்டிருந்த அந்தப் பெண்ணிடம் மெல்ல விசாரித்தேன்.

    ‘அதையேன் சார் கேட்கறீங்க?…மெயின் ரோட்டுல ஏதோ ஜாதிக் கட்சியோட பேரணியாம்…இந்த ரோட்டுக்கு இன்னும் ரெண்டு மூணு மணி நேரத்துக்கு பஸ்ஸே வராதாம்..கர்மம்..ஆபீஸ் முடிஞ்சு போகிற நேரத்தில்தானா இந்த சோதனையெல்லாம் வரணும்?…ச்சை’ சொல்லும் போது அஷ்டகோணலாய்ப் போனது அந்த அழகு முகம்.

    அவளைப் போலவே பல யுவதிகள் பஸ் இப்போதைக்கு வராதென்று தெரிந்தும் அது வரும் திசையை திரும்பித் திரும்பிப் பார்த்து திட்டிக் கொண்டிருந்தனர்.

    ‘ஏய்..நாம இப்படி நின்னுட்டிருந்தா நின்னுட்டே இருக்க வேண்டியதுதான்! டூவீலர்க போயிட்டுத்தானே இருக்கு? பாரு…எத்தனை ஆம்பளைங்க தனியாளா சிங்கிள்ஸ்லே போய்க்கிட்டிருக்காங்க!….அவங்களை நிறுத்தி லிப்ட் கேட்டா என்னடி?’ துணிச்சலாய்ப் பேசிய சுடிதார்ப்பெண் என் கவனத்தை ஈர்க்க, ‘அட…பரவாயில்லையே’ கவனிக்கலானேன்.

    சொன்னதோடு நில்லாமல் அந்தப் பேருந்து நிறுத்தத்தைக் கடந்து செல்லும் டூவீலர் ஆசாமிகளை குறுக்கே கை நீட்டி மறித்தாள்.

    ‘என்னம்மா…என்ன வேணும்?’ ஹெல்மட் தலையனொருவன் கத்தலாய்க் கேட்க,

    ‘சார்..இந்த ரோட்டுக்கு இப்போதைக்கு பஸ் வராது..பாருங்க எத்தனை லேடிஸ் பரிதாபமா நின்னுட்டிருக்காங்க…நீங்க தனியாத்தானே போறீங்க…யாராவது ஒருத்தருக்கு லிப்ட் கொடுத்து உதவலாமில்ல?’

    ‘வாட?;…லிப்ட்டா?..நோ…நோ..நமக்கு அந்தப் பழக்கமெல்லாம் கெடையாது…அதுக்குன்னு எவனாச்சும் வருவான் அவன்கிட்டக் கேளுங்க!..வழிய விடுங்க மொதல்ல..’

    ‘என்ன சார் லேடீஸ்க்கு லிப்ட் குடுத்தா என்ன சார் தப்பு?..மனுசனுக்கு மனுசன் இந்த உதவி கூடச் செய்யக் கூடாதா?’ சுடிதாரப்பெண் விடாமல் பேசினாள.;

    ‘த பாரும்மா..பொண்ணுங்களையெல்லாம் நான் டபுள்ஸ் ஏத்தினதில்லை…ஏத்தவும் மாட்டேன்’

    ‘அதான் ஏன்னு கேட்கறேன்?..பயமா?…யாராச்சும் பார்த்து ஏதாச்சும் கதை கட்டிடுவாங்களோன்னு பயமாயிருக்கா?..இல்ல உங்க சம்சாரத்துக்கு தெரிஞ்சு..குடும்பத்துல குழப்பம் உண்டாயிடுமோன்னு அச்சமாயிருக்கா?’

    அவன் மௌனமாய் விழிக்க,

    ‘என்ன சார்…அதைப் பத்திக் கவலைப்பட வேண்டிய பொண்ணுங்களே தைரியமா லிப்ட் கேக்கறாங்க…நீங்க ஆம்பளை..அதுவும் அடர்த்தியா மீசை வெச்சிருக்கற ஆம்பளை நீங்க பயப்படறீங்களே’

    ‘இல்லம்மா…அது..வந்து..பிரச்சினை…’

    ‘யோவ்…பிரச்சினைக்கு பயப்படற நீயெல்லாம் எதுக்கய்யா வெளிய வர்றே,..வீட்டுக்குள்ளாரவே முடங்கிக் கெடக்க வேண்டியதுதானே?’

    அவள் பேச்சில் மரியாதை தடாலென்று இறங்க அவன் தர்ம சங்கடமாய் எல்லோரையும் பார்த்தான்.

    ‘இங்க பாருய்யா..உம்மனசு சுத்தமான மனசுன்னா..யாராவது ஒருத்தரை கூட்டிக்கிட்டுப் போ’ என்றவள் பெண்கள் பக்கம் திரும்பி ‘ஏய் காயத்ரி…நீ இந்தப் பக்கம்தானே போகணும்?..வா..வந்து சார் வண்டில உட்காரு’ என்றழைக்க,

    அந்த காயத்ரி நிதானமாய் நடந்து வந்து ‘ணங்’கென்று பில்லியனில் ஏறி அமர்ந்து கொண்டாள்.

    ஹெல்மட்காரன் வேறு வழியில்லாமல் முனகியபடியே வண்டியைக் கிளப்பினான்.

    எனக்கு அந்தச் சுடிதார்ப்பெண்ணின் பேச்சும் செயல்பாடும் மிகவும் பிடித்திருந்தது. ‘வெரிகுட்..பெண்கள்ன்னா இப்படித்தான் இருக்கணும்..பாரதி கண்ட புதுமைப்பெண்’

    தொடர்ந்து அதே போல் பல இருசக்கர வாகனாதிபதிகளை நிறுத்தி சாம…பேத…தான…தண்ட முறைகளைப் பயன்படுத்தி கிட்டத்தட்ட பத்துக்கும் மேற்பட்ட பெண்களை அங்கிருந்து வெற்றிகரமாக அனுப்பி வைத்தாள்.

    இறுதியில் அந்த சுடிதார்ப்பெண் மட்டும் தனித்து நிற்கையில் ஒரு டூவீலர்க்காரன் கடந்து செல்ல நான் கேட்டேன். ‘என்னம்மா…ஒரு வண்டி போகுது…அத நிறுத்தி அதுல நீ போகலாமே?’

    ‘இல்ல சார் எங்க வீட்டுக்காரர் வந்திட்டிருக்கார்..என்னை பிக்அப் செய்ய’

    அடுத்த ஐந்தாவது நிமிடம் ஒரு பைக் வந்து நின்றது. அதிலிருந்து இறங்கிய அந்த இளம்பெண் ‘ரொம்ப தேங்க்ஸ் சார்…எங்க ஹாஸ்டல் இங்கிருந்து பக்கம்தான்…நான் நடந்தே போயிடறேன்’ என்று சொல்லி விட்டு நகர,

    அந்த பைக்காரனை நோக்கி வேகவேகமாயச் சென்றாள சுடிதார்க்காரி.

    ‘யார் அவ?’ கேள்வியில் கோபம் தெறித்தது.

    ‘தெரியாதுடா…இங்கதான் எங்கியோ லேடீஸ் ஹாஸ்டல்ல தங்கியிருப்பா போலிருக்கு!..இந்த ரோட்டுலதான் பஸ் வரலையே…தனியா நடந்து வந்;திட்டிருந்தா…நான்தான் நிறுத்தி…கேட்டு..லிப்;ட் குடுத்தேன்’

    கண்களைப் பெரிதாக்கிக் கொண்டு பற்களை ‘நற..நற’வென்று கடித்த சுடிதார்க்காரி ‘கொஞ்சம் செவப்பா…அழகா இருந்தாப் போதுமே…உடனே.. ‘ஈஈஈஈ’ ன்னு இளிச்சுட்டு லிப்ட் குடுத்துடுவீங்களே’

    ‘அட என்னம்மா…இதுல என்ன இருக்கு?..மனுசனுக்கு மனுசன் செய்யற உதவிதானே?’

    ‘போதும் பேசாதீங்க’ ‘சட்’டென அவன் வாயை அடைத்து விட்டு, பிசாசுத்தனமாய் பில்லியனில் ஏறி அமர்ந்தாள்.

    அவன் நிதானமாக வண்டியைக் கிளப்ப,

    ‘வீட்டுக்குப் போய் உங்கள வெச்சுக்கறேன் இருங்க’

    போகிற போக்கில் அவள் கோபமாய்ச் சொல்லிக் கொண்டே சென்றது என் காதுகளில் விழ நான் மூரச்சையாகாத குறைதான். ‘அடிப்பாவி..போறவனையெல்லாம் நிறுத்தி…இல்லாத வசனமெல்லாம் பேசி லிப்ட் குடுக்க வெச்சிட்டு…உம்புருஷன் ஒரு பெண்ணுக்கு லிப்ட் குடுத்ததுக்கு இந்த உறுமு உறுமுறியே..ச்சே..உன்னைப் போயி புதுமைப்பெண்ணுன்னு நெனச்சேனே…நீயும் சராசரிதானா?’

    Share
  • அம்மாவுக்குக் கடிதம்!

    பழமைபேசி

    இலையுதிர் காலம்! வீட்டின் முன்புறம் இருக்கும் பழுப்பேறிக் கொண்டிருந்த மேப்பில் மரங்கள் தன் இலைகளைச் சாவகாசத்துடன் ஒவ்வொன்றாய் உதிர்த்துக் கொண்டிருந்தன. ஆறு மாதங்களாய்ப் பச்சையத்தை முழுவீச்சில் பூசிக்கொண்டிருந்த தரைப் புல்வெளி வெளிறத் துவங்கிருந்தது. பரணிலும் பெட்டியிலுமிருந்த குளிர்கால ஆடைகளுக்கு மறுபிரசவம் நெருங்கிக் கொண்டிருந்தது.

    இப்படியான இந்நாளின் இத்தருணத்தில், அதே ஊரில் அமைந்திருக்கும் பேங்க் ஆஃப் அமெரிக்காவின் தலைமையகத்தில் பல நூறு மில்லியன்களுக்கான ஒப்பந்தம் கையெழுத்தாகிக் கொண்டிருக்கக் கூடும்.  கொல்லப்படப் போகும் பயங்கரவாதிக்கு  அங்கிருக்கும்  உளவு நிறுவனத்தில் வைத்து நாள் குறிக்கும் தருணமாகவும் இது இருக்கக் கூடும்.  இவையாவிலும் ஒன்றாகத்தான், சார்லட் பெருநகரத்தின்  பேலன்ட்டைன் பகுதிலிருந்து  மடலொன்றும் தீட்டப்பட்டுக் கொண்டிருக்கிறது இத்தருணத்தில்.

    அன்புடன் அம்மாவுக்கு,

    சுகாதாரத்தில் நான் மிகவும் நலமாய் இருப்பதாகவே உணருகிறேன். இன்று நான் உன்னைச் சந்திக்கிற வரையிலும் மனரீதியாகவும் நலமாய்த்தான் இருந்தேன். ஆனால் தற்போது அப்படி இல்லை. மிகவும் வருத்தமாய் இருக்கிறது.

    நீயும் உன் கணவனுமாகச் சேர்ந்து கொண்டு என் பள்ளிக்கூட முன்றலுக்கு ஏன் வந்தீர்கள்? வந்ததோடு மட்டுமல்லாமல், ஏதேதோ பேசி நண்பர்கள் மத்தியில் பெரிய அவமானத்தை ஏற்படுத்தி விட்டிருக்கிறீர்கள்.

    எனக்கு நன்கு நினைவிருக்கிறது. இனிமையான கோடைகால விடுமுறை அது. ஆறாம் வகுப்புத் தேர்வு எழுதி விட்டு, பெருமைமிகு ராபின்சன் இடைநிலைப் பள்ளியில் அடுத்த ஆண்டு படிப்பினைத் தொடரப் போகிறேன் எனும் மகிழ்ச்சியில் திளைத்து மகிழ்ந்தோடிக் கொண்டிருந்தேன்.

    என்னைச் சுற்றிலும் என்ன நடக்கிறது என்பதை உணர்ந்து கொள்ள முடியாத பருவம்; வீடெங்கும் தேடிப் பார்க்கிறேன்; அப்பாவைக் காணவில்லை. கூட்டத்தினின்று ஒதுக்கி வைக்கப்பட்ட ஆட்டுக்குட்டி போல உணர்ந்தேன். வழிதவறி அல்லாடும் என்னைக் கொண்டு போய்ச் சேர்ப்பதற்கு மேய்ப்பன் எவனும் வர மாட்டானா என ஏங்கிப் புழுங்கித் தவித்தேன். அடிமேல்தான் அடி விழும் என்பார்களே, அதைப் போலத்தான் எனக்கும்.

    என்மீதான உன் கவனிப்பும் அருகிப் போனது. உனக்கு எல்லாமே ஸ்டீவ் என்றாகி விட்டது. நீயும் என்னைக் கவனிக்கவில்லை. அப்பாவையும் சந்திக்க விடவில்லை. நொறுங்கிப் போனேன் நான்.

    அந்த ஏழு மாதங்களும் எனக்கு வெம்மையான மாதங்கள்தாம். அங்கே நீதிமன்றக் கதவுகளைத் தட்டியெழுப்பிக் கொண்டிருந்தார் அப்பா. அதுவும் எனக்காக! போராட்டத்தின் முடிவில் வாரம் ஒருமுறை என்னையவர் பொது இடத்தில் வைத்துப் பார்க்கலாம் என்றாகிப் போனது.

    வாரத்தில் கிடைக்கும் அந்த இரண்டு மணி நேரமும் எனக்கு வசந்த காலம். இறைவனின் திருவுலகிற்கே அழைத்துச் செல்வார் அவர். அவர் சந்திக்குமந்த மெக்டொனால்ட்சு கடையோ, இசுடார் பாக்சு கடையோ, அது எனக்கு புனிதத் தலமானது. எனக்குப் பொன் தரவில்லை. பொருள் தரவில்லை. சந்திக்கும் போதெல்லாம் என் அப்பா எனக்கு ஊட்டியது நம்பிக்கையான சொற்களை மட்டுமே. அவைதான் இன்றளவும் என்னை இருத்திக் கொண்டுள்ளது.

    பழைய கதை எதற்கு? நடப்புக்கு வருவோம்.பள்ளிக்குச் சென்றுவிட்டுத் திரும்பி உன் வீட்டிற்கு வரவே மனம் ஒத்துக் கொள்ள மாட்டேன் என்கிறது. உன் அழகிய மணாளன், அதான் அந்த ஸ்டீவ் என்னை அங்குல அங்குலமாய் கீழிருந்து மேலாய் வெறித்தும் உற்றும் பார்க்கிறான். தொட்டுப் பேசுகிறான். போதாக்குறைக்கு, வார ஈறின் போது அவனது நண்பர்களையும் அழைத்து வந்து கூத்தடிக்கிறான். நீயும் என்னை அவர்களுக்கு விருந்தோம்பச் சொல்கிறாய். அதுதான் முடிவாக நான் இங்கேயே வந்து விட்டேன்.

    அதில் உனக்கு என்ன இடைஞ்சல்? எனக்கு இன்னும் பதினெட்டு வயது ஆகவில்லையென்பதற்காக என்னவெல்லாமோ செய்கிறாய். நான் இங்கு மிகவும் பாதுகாப்பாய் இருக்கிறேன். பள்ளிக்குச் சென்று வந்த நேரம் போக, எஞ்சிய நேரத்தை என் படிப்புக்காக மட்டுமே செலவிடுகிறேன்.

    கடந்த இலையுதிர்காலப் பருவத்தின் கடைசிக் கட்டத்தில்தான் இங்கு வந்தேன். இந்த எட்டு மாதங்களில் ஒரு தடவை கூட என் அறைக்குள் அவர் வந்தது கிடையாது. அதே வேளையில் என்னைக் கவனித்துக் கொள்வதனின்றும் அவர் தவறியது இல்லை.

    காலையில் ஆறரை மணிக்கெல்லாம் கிளம்பி, சார்லட் நகர மையத்தில் இருக்கும் தன் அலுவலகத்திற்குச் சென்று விடுகிறார். மாலை ஏழு மணிக்கு வந்ததும் வீட்டு வேலைகளைச் செய்து விட்டு, உடற்பயிற்சிக்காக ஒரு மணி நேரம்; அவ்வளவுதான்! பிறகு ஒன்பது மணிக்கெல்லாம் தன் அறைக்குள் போய் விடுகிறார். காலையில் எனக்கான சிற்றுண்டியை அவரே செய்து வைத்து விட்டுப் போகிறார். இந்த எட்டு மாதங்களில் ஒரு தடவை கூட என்னையவர் கடிந்து கொண்டது கிடையாது.

    ஒவ்வொரு நாள் காலையில் கிளம்பும் போதும் என் அறைக்கதவுக்கு வெளியே நின்று கொண்டு, காலையில் சாப்பிடுவதற்கு இன்னது செய்து வைத்திருக்கிறேன்; வெளியே தட்பவெட்பம் இப்படி இருக்கிறது; இன்று மழை வரும், குடை எடுத்துக் கொண்டு போ என்றெல்லாம் அக்கறையுடன் சொல்வார். குளிர்நாள் என்றால், அதற்கான ஆடை இருக்கிறதா எனக் கேட்டுத் தெரிந்து கொள்வார்.

    மாலை நேர உணவு வேளையின் போது, அன்றைய நாள் எப்படி இருந்தது எனக் கேட்பார். நிறைய நூல்களையும், நூல்களில் குறிப்பிட்டுள்ள வாசகங்களையும் மேற்கோள் காண்பித்துப் பேசுவார். இப்படித்தானம்மா நாட்கள் நகர்ந்து கொண்டிருக்கிறது எனக்கு.

    நீ, உன்னை நீயே ஏமாற்றிக் கொண்டாய் அம்மா. என்னைக் கடத்திக் கொண்டு போய் அடைத்து வைத்திருப்பதாய் நீ வழக்கெதுவும் பதிந்து விடாதே! இன்னும் இரண்டு மாதங்கள்தானே? எனது பதினெட்டாவது பிறந்த நாள் வந்து விடும். அதையும் பிரையனுடன் சேர்ந்து மகிழ்வோடு கொண்டாட விரும்புகிறேன். தயவு கூர்ந்து என் விருப்பத்தை நிறைவேற்று. ஸ்டீவுடன் சேர்ந்து கொண்டு இனிமேலும் என் பள்ளிக்கு வராதே! இறைஞ்சுகிறேன்!!

    இதோ கதவு திறக்கப்படும் ஓசை கேட்கிறது அம்மா. அவர் வந்து விட்டார் போல தெரிகிறது மீண்டும் சந்திப்போம்.. இறைவனது அருள் உனக்கு உரித்தாகட்டும்!!

    அன்பு மகள்,

    டீனா.

    மாடத்தில் இருக்கும் தன் அறையிலிருந்து இறங்கிப் போனாள் டீனா. இரண்டு ரொட்டிகள், பழச்சீப்பு ஒன்று, மூன்று காலன் பாலுக்கான நெகிழிக்கலம் ஆகியனவற்றைச் சுமந்தபடி உள்ளே வந்து கொண்டிருந்தார் பிரையன். ஓடிப் போய், அவர் கையிலிருக்கும் பாலை வாங்கி, சமையலறையில் இருக்கும் குளிர்மிக்குள் வைத்தாள்.

    “என்ன டீனா? ஒரு மாதிரி சோர்ந்து போயி இருக்கியே?! இன்னைக்கு பாடங்கள் எதும் அதிகமோ?”, கேட்டுவிட்டுத் தனக்கே உரிய சிரிப்பினை உதிர விட்டார் பிரையன்.

    ”ஸ்டீவும் அம்மாவும் பள்ளிக்கே வந்து மத்தவிங்க முன்னாடி அலப்பறை பண்ணிட்டாங்க அப்பா. அவமானமா இருக்கு!”, ஓவெனப் பெருங்குரலெடுத்து பிரையனின் கால்களைக் கட்டிக் கொண்டு அழுதாள்.

    ”ஏய், இதுக்கெல்லாம் இப்படி நீ உணர்ச்சிவசப்படலாமா? அடுத்த கோடைகாலத்துல நீ மருத்துவத்துறை மாணவி. அமெரிக்காவுக்கும், இந்த உலக மக்களுக்கும் நீ செய்ய வேண்டிய பணிகள் ஏராளமா இருக்கு. மருத்துவத் துறையில் நீ காலூன்றதுலதான் இருக்கு எல்லாமே! அதை நினைச்சுப் பாரு டீனா!”

    இரு கைகளாலும் தன் இரு தோள்ப்பட்டைகளைப் பற்றித் தூக்கி நிறுத்தி அவர் குலுக்கியதிலும், பொலிவு மிகுந்த அவரது முகத்தின் ஒளிவீச்சிலும் புத்துணர்வு பெற்றாள் டீனா.

    ”இன்னைக்கு நான் உடற்பயிற்சிக்குப் போகலை. குளிச்சிட்டு வா சாப்பிடலாம். நல்லா, எதனா செய்து வைக்கிறேன்!”, கிளம்பி தன் அறைக்குப் போனார் பிரையன்.

    சிறு ஓய்வுக்குப் பின்னர், கலைந்து கிடந்த தன் பாடப்புத்தகங்களை நேர்த்தியாகத் தன் மேசையின் மீது அடுக்கிக் கொண்டிருக்கிறாள் டீனா.  அஞ்சல் செய்வதற்கும், செய்யாமல் கசக்கித் தூக்கி எறியப்படுவதற்குமான இடைவெளியில் ஊசலாடிக் கொண்டிருக்கிறது மேசையின் மறுகோடியிலிருக்கும் அம்மாவுக்கு எழுதிய அந்தக் கடிதம்!

    Share
  • பெட்டைகள்

    தமிழ்த்தேனீ

     

    ஒரு பெட்டைக் கோழிக்கும் கட்டுச் சேவலுக்கும் ஊடல்.  வாக்குவாதம் முற்றியது.

    “இதோ பாரு இப்பிடி இனிமே  எல்லாத்துக்கும் எங்கிட்ட வாக்குவாதம் செஞ்சே, மனுஷங்க மாதிரி நானும் உன்னை  விவாகரத்து செஞ்சுடுவேன். நான் மத்தவங்க மாதிரி இல்லே மானமுள்ள ஆம்பிள்ளை” என்றது கட்டுச் சேவல்.

    “நீ எப்பவும் பெட்டைதான். சேவலாக முடியாது”, என்றது. விதிர் விதிர்த்துப் போனது பெட்டைக் கோழி.

    “ஓஹோ  இந்த  ஆம்பிள்ளைத் தனத்தெல்லாம் எங்க கிட்ட மட்டும் காட்டுங்க . யாராவது கையை  ஓங்கிட்டு  வந்தா உடனே ஆம்பிள்ளைங்கறதை எல்லாம் மறந்துட்டு கொக்கரகோன்னு ஓடிப் போயிடுங்க.

    காலமே கெட்டுப் போச்சு..நீங்க  என்னவேணா செய்வீங்க. இப்பல்லாம் ஆம்பிள்ளைங்க,பொம்பளைங்க  எல்லாருக்கும்   வெவஸ்தையே இல்லாமப் போச்சே. விவாகரத்து செஞ்சாலும் செய்வீங்க.  மனுஷனுக்குதான் அறிவில்லாம போயிடிச்சுன்னா, இயற்கையா வாழற நமக்குமா இப்பிடி புத்தி போகணும்….?    ..இனிமே விளையாட்டுக்கு கூட இப்பிடி சொல்லாதீங்க”, என்று கண்ணைக் கசக்கியது  பெட்டைக் கோழி,  தலையைக் குனிந்துகொண்டு.  

    “அப்பிடி வா வழிக்கு ” என்றது சேவல் தலையை நிமிர்த்தி  ஆணின் கர்வத்துடன்.

    ஒரு பெண் தன்னுடைய கணவனிடம் ஏதோ வாக்குவாதம் செய்து கொண்டிருந்தாள். அது என்னவென்று அறிய பெட்டைக் கோழிக்கும் கட்டுச் சேவலுக்கும் ஆசை. அவர்கள் பக்கமாக இரண்டும்  ஏதோ காரியம் இருப்பது போன்ற பாவனையுடன் அருகில் சென்றன.

    அங்கே, அந்தப் பெண் அவள் கணவனிடம் சொல்லிக் கொண்டிருந்தாள், “இதோ பாருங்க, திருப்பி திருப்பி பயித்தியம் மாதிரி, சொன்னதையே சொல்லாதீங்க. ஆமா நான் தெரியாமத்தான் கேக்கறேன்,  நாமே ரெண்டு குழந்தைகளை பெத்து வெச்சுருக்கோமே, அதுங்களுக்கு என்னவழி?

    இப்போ காலம் இருக்குற இருப்புல, நம்ம கையில தேவையான காசு இருந்தாதான் நாமளும் சுகமா இருந்து அதுங்களையும்  வாழ வைக்க முடியும். புரியுதா?”

    அதற்கு அந்தக் கணவன் “சரிம்மா,  சரி” என்று வேகமாக  தலையை ஆட்டிவிட்டு, ” நான் என்ன சொல்ல வரேன்னா…” என்று இழுத்தான்.

    உடனே அவள் “போதும் நீங்க என்ன சொல்லப்  போறீங்க, என்ன இருந்தாலும் உங்களைப்  பெத்தவங்க அவுங்க , உங்களைப் படிக்க வெச்சு ஆளாக்கி நீங்க  ஆசைப்பட்டா மாதிரியே என்னையும் உங்களுக்கு கட்டி வெச்சவங்க அவுங்க.  அவுங்களுக்கு இப்போ உடம்பு சரியில்லைன்னா நாமதானே கவனிக்கணும்,நம்ம கடமை இல்லையா இது.”  இதானே சொல்லப் போறீங்க?

    “கேட்டுக் கேட்டு காது புளிச்சுப் போச்சு. இதோ பாருங்க இப்போ நாம ஊருக்குப் போனா  மொத்த செலவும் நம்ம தலையிலெதான் விழும். உங்கப்பாக்கு ஹார்ட் அட்டாக். அவசர சிகிச்சை முடிஞ்சு பாத்துகிட்டு இருக்காங்க. அது ரொம்ப நல்ல மருத்துவமனை, நல்லா பாத்துப்பாங்க. இப்போ நாம அங்க போனா,  எல்லா செலவும் நம்ம தலையிலதான் விழும். அதுனாலதான் சொல்றேன், நீங்க சும்மா இருங்க எல்லாத்தையும் நான் பாத்துக்கறேன்.      அப்பிடி யாராவது கேட்டா உங்களுக்கு உடம்பு சரியில்லைன்னு சமாளிச்சுக்கறேன், புரியுதா” என்றாள். 

    உடனே சரி சரி என்று தலையை ஆட்டினான் கணவன்.

    இப்போது பெட்டைக் கோழி சேவலைப் பார்த்து, “என்னைப் பெட்டை என்று திட்டினீங்களே, இப்போ சொல்லுங்க  யாரு பெட்டை?” ன்னு அப்பிடீன்னுது……..? 

    நிமிர்ந்திருந்த தலையைக் குனிஞ்சு பரிதாபமாகப் பார்த்தது சேவல்!!!!

    Share
  • ஆண்மீக இச்சை..! (இது எழுத்துப் பிழை அல்ல….மனத்துப் பிழை…)

     
     
    ஜெயஸ்ரீ ஷங்கர், தில்லை.
     
    வாசல் தெளித்துக் கோலம் போட வாளியில் தண்ணீரோடு சென்ற சந்திராவுக்கு நிலைப்படி தடுக்கி த்ண்ணீர் தளும்பி விழவும் … மேலும் அதிலேயே அவளது காலடி தடுக்கி வழுக்க……  சுதாரித்தவள், என்னாச்சு இன்னைக்கு காலங்கார்த்தாலே இப்படி ஒரு தடைச்சகுனம்  இன்றைய நாள் எந்தப் பிரச்சனையும் இல்லாமல் சுமுகமாப் போகணுமே”
     

    சகுனமே சரியில்லையே….என்று எண்ணிக் கொண்டே புள்ளி வைத்துக் கோடு இழுக்க…கோலம் வராமல், கோடுகள் எங்கேயோ போய் நின்று வரமாட்டேன் என்று அடம் பிடித்தது.

    அழித்து…அழித்து மனதில் உள்ள கோலம் விரலிடுக்கில் அடங்காமல் அழிச்சாட்டியம் செய்ய….கூடவே நகரும் மேகங்களாக மனம்..எண்ணத்தில் மாறிக் கொண்டே…கை கோலத்தைக் அவசரத்தில் கிறுக்கிவிட்டு .இன்று ஞாயிற்றுக் கிழமை தானே….அவசர அவசரமாப் பறக்க வேண்டாம்…என்று எண்ணியபடியே நிமிர்ந்தவள்… “அம்மா..நேற்று ..எல்லாம் தான் படிச்சேன்..இப்போ ஒண்ணுமே ஞாபகத்துக்கு வரலைம்மா…” என்ற பிரவீன் தன் கவலையை பயத்துடன்  சொல்கிறான்.

    என்னடா பிரவீன் ?…இப்பப் போய் இப்படிச் சொல்றே….இது க்வாடர்லி எக்ஸாம்ஸ் ….நீ சரியா எழுதணும்..கண்ணா…..இன்னும் நேரம் இருக்கு..நாளைக்குத் தானே பரீட்சை….பயப்படாமல் .போய் உட்கார்ந்து நிதானமாப்  படி…எல்லாம் மனசில் ஏறும் ….என்று சொல்லிக் கொண்டே பாலை அடுப்பில் ஏற்ற….எண்ணம் பின்னோக்கிச் சென்று கால் வழுக்கலில் சென்று நின்றது..! இடரின காலே இடரும்….! எனக்கு என்னாகுமோ…? மனசுக்குள் வழக்கம் போல கறுப்புப் பூனை எழுந்து  நடக்க ஆரம்பித்தது…சந்திராவுக்கு.

    நல்ல வேளை….நான் கீழே விழலை…பிரவீனுக்குப் பரீட்சை நேரம்..இப்பப் .பார்த்து எனக்கு எதுவும் ஆனால்..அவ்ளோ தான்..!நினைத்துக் கொண்டிருக்கும்போதே…பால்…”புஸ்” என்று பொங்கிப்  படமெடுத்தது.

    டேய்..பிரவீன்….சித்தியை எழுப்பி சொல்லித் தரச் சொல்லேன்….என்று குரல் கொடுத்தவள்….சித்ரா…சித்ரா பிரவீனுக்கு கொஞ்சம் கணக்குச் சொல்லித் தாயேன்…ஒண்ணுமே தெரியலைன்னு சொல்றான்.பாவம்…பயப்படறான்…..நீதான் மாத்ஸ் ஜீனியஸ் ஆச்சே … என்றவள்….பையன் நல்லபடியாப் பரிட்சைக்குப் போகணும்..இன்னிக்கு உனக்கு லீவு தானே…? என்று சொல்லிக் கொண்டே காலில் சக்கரத்தைக் மாட்டிக் கொண்டு வேலையில் மூழ்கினாள்.

    படுக்கையை விட்டு எழுந்து நெளிந்த சித்ரா….என்னக்கா…பிரவீன் அஞ்சாவது தானே படிக்கறான்? …என்ன ஐ.ஏ.எஸ்’க்கா படிக்கிறான்..நீ..என்னமோ .இவ்ளோ அலுத்துக்கறே….டேய்..பிரவீன் நோட்புக் எடுத்துண்டு வாடான்னு கொட்டாவி விட்டபடியே…சோம்பல் முறித்து வாயருகில் சொடக்குப் போட்டபடியே சொல்கிறாள்..

    “ம்ம்ம்…உனக்கும் இந்த சொகுசெல்லாம்  இந்த மாசத்தோட கடைசி…. அடுத்த மாசமே…நீயும் கால்ல சக்கரம் தான் கட்டிக்கணும்…சந்தோஷ் உன் கழுத்தில் மூணு முடிச்சுப் போடற வரைக்கும் தான்…நீ இந்த வீட்டு மகாராணி..அப்புறம் நீயும்…என்னை மாதிரியே…கௌரவ வேலைக்காரி, தெரிஞ்சுக்கோ….” சொல்லிக் கொண்டே.

    நம்ம வீட்டு வேலையை நாம பண்றதுக்கு வேலைக்காரின்னு ஏன் நினைச்சுண்டு பண்ணனும்…உரிமையா…அன்பாப் பண்ண வேண்டியது தானேக்கா….நம்ப அம்மா…பாட்டி பண்ணாததையா நீ பண்றே…?.என்று சித்ரா விடாமல் சந்திராவை வம்புக்கு இழுக்கிறாள்.

    “ஏன்னா…..இங்க கொஞ்சம் வரேளா….இந்த பீன்சைக் கொஞ்சம் பொடிப் பொடியா நறுக்கித் தந்தா ஆகாதா…? என்று காப்பியைக் கலக்க ஆரம்பித்தாள்.

    இதோ பாருடா….வேலைக்காரி வீட்டுக்காரரை…வேலை வாங்கறதை…என்று கிண்டலடித்துச் சிரிக்கிறாள் சித்ரா.

    என்ன சந்திரா…இப்போ தான் நியூஸ் பேப்பர் படிக்க ஆரம்பித்தேன்… அதுக்குள்ளே உன் மூக்கு வியர்க்குதா….? அட….இங்க பாரேன்…நம்ம ரவீந்திர பாரதியில். இன்னைக்கு சாயங்காலம் ..உனக்குப் பிடிச்ச சுதா ரகுநாதனின் சங்கீதக் கச்சேரி இருக்காம்..  ரெண்டு பாஸ் அன்னிக்கே போஸ்ட்ல வந்துதே….இன்னைக்குப் போலாம்’ன்னு நினைக்கிறேன் ?   வரியா ? சுதா ரொம்ப நன்னாப் பாடுவா.. .என்றவர்.. தூரத்தில் பாடம் சொல்லிக் கொடுக்கும் சித்ராவைப் பார்த்தார் !   கண்கள் சந்திராவை நோக்கவில்லை.  ! மனசு …நீ வரமாட்டே…எனக்கேத் தெரியும் என்றது.,

    நானா….? என்ன விளையாட்டா…பிரவீனுக்கு நாளையிலிருந்து  கால் பரீட்சை ஆரம்பம்… நானும் வந்துட்டா அவனுக்கு யார் சொல்லித் தருவா…? நான் எங்கேயும்  வரலை…நீங்க போறதுன்னாப் போய்ட்டு வாங்கோ…நான் வேண்டாம்னு சொல்லலை..என்றவள்…பீன்ஸையும் கத்தியும்  கொண்டு வந்து “டொக்கென்று”  வைத்தாள்.

    ஒ.. ..பரிட்சை இருக்கா….சரி.  நான் மட்டும் தனியா எப்படிப் போறது ?  அப்போ …. நான்….   சித்ரா சும்மாத் தானே வீட்லே இருப்பா..?அவளை அழைச்சுண்டு போறேன்…அவளும் வீட்டிலயே அடைந்து கெடக்கா பாவம்…என்றவர்…கண்கள் மச்சினி சித்ராவைத் தேடியது.

    சந்திராவுக்கு நெஞ்சு  திக்கென்றது  !  என்ன சித்ராவா ?   அவள் கல்யாணப் பெண்,  என் கணவனோடு பாட்டுக் கச்சேரிக்குப் போவதா ?  இதென்ன அல்பமான  ஆசை….இவருக்கு..! இந்த வயசில் இந்த ஆசை ரொம்பத் தேவை…இவருக்கு….கஷ்டம்…கஷ்டம்…என்றது  அவளின் மனது.

    கல்யாணம் ஆகப் போறவள்….இப்போதான்.நிச்சயம் ஆயிருக்கு…இப்ப வெளியில்…கச்சேரிக்கெல்லாம் அழைச்சுண்டு போறது அவ்வளவு சரியில்லை..யாராவது பார்த்தால் தப்பா நினைப்பா..நீங்க மட்டும் போய்ட்டு வந்தால் ஆகாதா?

    அடிப் போடி..நீ தான் சுத்த கர்நாடகம்…எந்தக் காலத்தில் இருக்கே இன்னும் நீ…?..எதுக்கெடுத்தாலும்….எப்பப் பாரு…சகுனம்…நாலுபேரு….அது இதுன்னு…சொல்லி பொழுதைப் போக்குவ..சித்ரா  இதுக்கெல்லாம் நேர்மாறு. நீயே பாரேன்….நான் வான்னு கூப்பிட்டால் உடனே சரி வரேன் அத்திம்பேர்ன்னு சொல்வா…நீ வேற எதையும் சொல்லி அவள் மனசையும் கெடுக்காமல் இருக்கணும்…ஆமா….கொடு…கொடு…பீன்ஸை நறுக்கி வைக்கிறேன்…என்று அவசரப்பட்டார்…சபாபதி.

    சித்ரா செதுக்கி வைத்த சிலை.  பளிங்குப் பதுமை !  பேரழகி !  சந்திரா முகத்தில் .. தேமல் மேடு பள்ளங்கள்.  

    சந்திராவுக்குக் கோபம் பொங்கியது.  எப்படியோ அடக்கிக் கொண்டாள். சரி நான் பாட்டுக் கச்சேரிக்கு வரேன்.   சித்ரா வேண்டாம்.  கல்யாணப் பெண் உங்களோடு போவதை நான் விரும்ப வில்லை.

    ஒருதரம் நான் அவளோடு வெளியே உலாவப் போகணும்’ன்னு எனக்கு ஆசை சந்திரா.  நீ வர வேண்டாம், அவள் வரட்டும்.  தப்பா நினைக்காதே !

    என்னவோ செய்யுங்கோ …நீங்களாச்சு…உங்க மாடர்ன் மச்சினியாச்சு.. நான் ஏன் அவள் மனசைக் கெடுக்கப் போறேன்?…நீங்க உங்க மனசை பத்திரமாப் பார்த்துக்கோங்கோ…அது போதும் நேக்கு, என்று சிலேடையாகச்  சொல்லிவிட்டு சிரித்துக் கொண்டே நகர்ந்தாள் சந்திரா. உள்ளுக்குள்ளே அவளின் மனம் அழுதது. கண்ணாடியைப் பார்த்தாள்….கன்னமெல்லாம் வடுக்கள்…இந்த அம்மிக்கல்லு முகத்தை எனக்கே பிடிக்கலை…பாவம்..அவர்…! தன்னோட மனைவி அம்சமா இருக்கணும்னு கனவு கண்டிருப்பார்…விதி…என் லக்ஷணத்தில் அவருக்கு வாய்ச்சிருக்கு….என்று சொல்லிக் கொண்டே கண்ணாடியை விட்டு நகர்ந்தாள்.

    பீன்ஸை நறுக்கிக் கொண்டே…அப்போ…இன்னைக்கு சித்ராவுடன் மோட்டர் பைக்கில் தனியாகப் போகப் போறேன்….என்ற மிதப்பில் கிறங்கியபடியே..”பார்த்த முதல்நாளே….உன்னைப் பார்த்த முதல் நாளே…” என்று சீட்டியடித்தபடியே…மனமெல்லாம்  சித்ரா வர சம்மதிப்பாளா…? என்று யோசனையில் ஆழ்ந்தார் சபாபதி.

    என்னதான் இருந்தாலும்…ஆண்மனம் சபலம் அடையும்,  மரத்துக்கு மரம் தாவும்.  கையில் கொய்யாப் பழமிருக்க  மரத்தில் தொங்கும் மாங்கனிக்கு ஏங்கும் !  பல சமயங்களில் தன்னை மீறி அலைபாயும்..இது தவறு…இது சரி.. என்ற எல்லைக் கோட்டைத் தாண்டுவதில் மகிழும். ஷண நேர சந்தோஷத்தில் கூத்தாடும். விதி விலக்குகள் இருந்தாலும். பெரும்பான்மை யானவர்களின் வரிசையில் தான் சித்ராவின் அத்திம்பேரும்  நின்றார், பெண் குழந்தைகளுக்குத் தகப்பனாயிருந்திருந்தால்  கொஞ்சம் பொறுப்பு வந்திருக்கும். அதற்கும் வழியில்லை இப்போது. நாற்பது வயதை நெருங்கும் சமயம் இளமை அவருக்கு ஊஞ்சல் ஆடுகிறது.  வாலிப முறுக்கு திரும்பிய எண்ணம் அவருக்கு.

    கண்ணருகில்….இளவயதில்….மெழுகு பொம்மை நடமாடிக் கொண்டிருந்தால்…அலைபாயும் மனசோடு அலையும் ஆண்மகனுக்குக் கேட்கவா வேண்டும்.? வயது என்ற சாக்குப் போக்கெல்லாம் அங்கே செல்லாது. குடும்பத்தின் தலைவனாகவே இருப்பினும் உள்ளுக்குள்ளே  ஒரு கண்சித்ராவையே தொட்டு  விட வட்டமிடும்.

    சித்ராவுக்கு “ஹை-டெக்” சிட்டியில் வேலைக் கிடைத்ததும்…அக்கா சந்திராவின் வீடு தான் இருக்கே…அங்கேயே தங்கி வேலை பார்க்கலாம்.என்ற எண்ணத்தில்….சென்னையிலிருந்து ஹைதராபாத்துக்கு தைரியமாக வந்திறங்கினாள் பெற்றோருடன்.. சந்திரா….இவள்  ஒரு ரெண்டு மூணு மாசம் இங்க இருக்கட்டும்… கொஞ்சம் பார்த்துக்கோ..தெரியாத ஊர், புரியாத பாஷை வேற…அதற்குள் இவளுக்கும் சீக்கிரமா ஒரு வரனைப் பார்க்கிறோம்…என்று .சித்ராவை விட்டுட்டு சொல்லிச் சென்றவர்கள்  முழுமூச்சாக வரன் பார்த்ததில் ஒரே மாசத்தில் இங்கேயே ஆக்சிஸ் பாங்கில் வேலை பார்க்கும் சந்தோஷுக்கு நிச்சயம் செய்து விட்டு நிம்மதியானார்கள்.

    அடுத்த மாசம் சித்ராவின் கல்யாணம். அதற்கான ஏற்பாட்டில் சந்திராவும் மும்முரமானாள்…சித்ராவும் இதே ஊரில் வந்து வாழப் போவதில் அவளுக்கு பரம  சந்தோஷம்.  

    டிபன் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் சித்ராவைப் பார்த்து, அப்பறம்… சந்தோஷ் உனக்கு ஃபோன் பண்ணி பேசினாரா? என்று சந்தடிசாக்கில் சந்திரா கேட்க.

    இல்லக்கா…அவரோட அம்மா…சொன்னாளாம்…அடிக்கடி ஃ போன் பண்ணிப் பேசி, அவாளுக்குத் தெரியாமல் வெளில போறது…இதெல்லாம் செய்யக் கூடாதுன்னு. அவங்க கொஞ்சம் ஸ்ட்ரிக்டாம்.  என்னவோ… பெரிசா….இந்தக் காலத்திலும் இப்படியெல்லாம் இருக்காங்க பாரேன்க்கா.  இவரும்…அவங்க சொல்றதைக் கேட்டுட்டு எனக்கு ஒரு தரம் ஃபோனில் சொன்னார்..அவ்ளோ தான். நானும்..என்ன சீப்பா…? சரி. இனிமேல் ஃபோன் பண்ணாதீங்க…கல்யாண மேடையில் சந்திக்கலாம்னு சொல்லிட்டு வெச்சிட்டேன். மனசுக்குள்ளே….இவருக்கும் எனக்கும் ஒத்துப் போகுமா? பிரச்சனை வருமான்னு ஒரே கவலையாத் தான் இருக்கு. ஆனால் இப்போ என்ன பண்ண முடியும்.? அதான் அவசர அவசரமா நிச்சயம் ஆயாச்சே… எல்லாம் தலைவிதிப் படி தான் நடக்கும்.என்று அலுத்துக் கொண்டாள் சித்ரா.

    அக்கா…உன் கணவர் உனக்கு ரொம்ப நல்லபடியா அமைஞ்சுட்டார்… பாரேன்… எனக்குத்  தான் சரியான தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை.!..”என் அம்மா சொல்லிட்டாங்க…..” என்று வக்களித்துக் காட்டியபடியே….இவரை நான் தான் அங்கே போய் மாற்றி என் வழிக்குக் கொண்டு வரணும்….அதுக்கு நான் என்னெல்லாம் பண்ண வேண்டி வருமோ…?என்றாள் சித்ரா.

    அப்படியெல்லாம்  சொல்லாதே சித்ரா..அவங்க கண்ணோட்டத்தில் அவங்க சொல்றது தான் நிஜம். கல்யாணத்துக்கு முன்னாடியே அங்கே..இங்கே..சுத்திட்டு அந்த நேரத்தில் ரெண்டு பேருமே தங்களைப் போல நல்லவங்க இல்லைன்னு ஒரு அபிப்பிராயத்தை ஒருவருக் கொருவர் ஏற்படுத்திக் கொண்டு…அப்பறம்..யதார்த்தமான வாழ்கைச் சூழ்நிலைக்கு திரும்பும்போது, அது கொஞ்சம் முரணாத் தெரியும்.. அப்போதான் பிரச்சனை வரும்.அதற்கு கல்யாணம்’னு ஆனபின்பு ஒருத்தரை ஒருத்தர் சரியாப் புரிஞ்சுண்டு வாழ ஆரம்பித்தால்…எந்த பகட்டும் இல்லாமல் யதார்த்தமாக வாழலாம் இல்லையா? இது மாதிரி நிறைய விஷயங்கள் இருக்கும்..பெரியவர்கள் எதையும் தெரியாமல்  சொல்ல மாட்டா.

    அதுவும் சந்தோஷ் அவர்களுக்கு ஒரே பிள்ளை.அதனால் கூட அவரோட அம்மா நிறைய செல்லம் கொடுத்து வளர்த்திருக்கலாம். நிச்சயம் நீ போனபிறகு அவர்கள் உன்னையும் மகளாகத் தான் பார்ப்பார்கள். பெண் குழந்தைகள் இல்லாத வீட்டில் மருமகளை மகளாகத் தான் நினைச்சுப் பார்ப்பா…நீயாக எதையும் மனதில் போட்டுக் குழப்பிக்காதே..அவர்களைப் பார்த்தால் ரொம்ப நல்ல மாதிரியா தான் தெரிகிறார்கள். யாருமே.. மருமகளை துவேஷமாக நினைப்பதில்லை. அதே சமயம் வந்த பெண்….அவர்களது மகனை உரிமை அது இதுன்னு யோசிச்சு பெற்றவர்களிடம் இருந்து ஒரேயடியாப் பிரிக்க முயலும்போது தான்….அவர்களால்  தாங்க முடியாது…எப்பவும் ரெண்டு பக்கமும் பார்க்கணும்.

    ஆனாலும்..ஒண்ணு சொல்றேன் கேட்டுக்கோ..நாம எப்போ..நம்ம கணவரோட..குடும்பம் தனின்னு பிரிச்சுப் பார்க்காமல் அந்தக் குடும்பத்தில் உன்னையும் ஒருத்தியா மனதோட இணைத்துப் புகுத்திக் கொள்கிறாயோ..  அப்போது தான் அவர்களுக்கும் நம்ம குடும்பத்தின் மேலயும் உன் மேலயும்  ஒரு பற்றும்..பாசமும்…மதிப்பும் உண்டாகும்.  எப்பவுமே…உரிமைகளை யாருமே இந்தா… எடுத்துக்கோன்னு கூப்பிட்டுக் கையில்  தருவதில்லை…அதை நாம் தான் யாருக்கும் மனம் வருத்தப் படும்படியாக நடந்து கொள்ளாமல் உரிமையோடு  எடுத்துக் கொள்ள வேண்டும். ஒரு குடும்பத்தில் மருமகளாக இருப்பது கூட கம்பி மேல் நடப்பது போலத் தான். அதே போல ஒரு மாமியாராக பொறுப்பு எடுப்பதும் ரொம்ப கஷ்டம் தான். தெரியுமா…?  இதெல்லாம் ஆண்களுக்கு அவ்வளவா பிரச்சனையாக இருப்பதில்லை.

    அக்கா…போதும்…உன் “சந்திரோபதேசம்….”. இப்படியெல்லாம் சொல்லி என்னை இன்னும் பயமுறுத்தாதே..ப்ளீஸ். ஞாயிற்றுக் கிழமையும்  அதுவுமா..நன்னா வீட்டில் ரெஸ்ட் எடுக்கணும்..சாயங்கால வேளையில் எங்கேயாவது வெளியில் போகணும்..ஹோட்டல்ல டின்னர் சாப்பிடணும்…வந்து அக்கடான்னு படுத்து நிம்மதியாத் தூங்கணும்.அப்போ தான் அடுத்த ஒரு வாரத்துக்கு சரியா வேலை பார்க்க முடியும்.

    ஆமாம்மாம்…வேலைக்குப் போகும் உங்களுக்கென்ன சண்டே ரெஸ்ட் டே…என்னை மாதிரி “அகழியிலிருக்கும் முதலைக்கு அதுவே வைகுண்டம் போல”…இருக்கறவளுக்கு ஏது ரெஸ்ட் டே..! கேட்டால்..வருஷம் முழுதும் உங்களுக்கு ரெஸ்ட் தானேன்னு சொல்வேள்..எங்களுக்குத் தானே தெரியும்…ஒரு நாள் நாங்க ரெஸ்ட் எடுத்தால்…எப்படி உங்க டப்பா….டான்ஸ் ஆடும்னு…!

    சித்ரா…இன்னைக்கு இவர் ரவீந்திர பாரதியில் சுதா ரகுநாதனோட பாட்டுக் கச்சேரிக்குப் போறாராம்…உன்னையும் அழைச்சிண்டு…போயிட்டு வா.

    என்னக்கா…நீ போறது தானே…? நான் என்னத்துக்கு…? நான் அத்திம்பேரோட  எங்கியும் போகலை.

    பிரவீனுக்கு நாளைக்கு பரீட்சை ஆரம்பம்…நான் தான் கூட உட்கார்ந்து சொல்லித் தரணும். இல்லாட்ட படிக்க மாட்டான். அத்திம்பேர் என்ன உன்னை கடிச்சா முழுங்கப் போறார்….?  அவரே சொன்னார்…சித்ராவை அழைச்சுண்டு போறேன்னு…போயிட்டு  வாயேன். அப்படியே நல்ல ஹோட்டல்ல நீ சொன்ன மாதிரி டின்னர் சாப்பிட்டுட்டு வா,.எனக்கும் வேலை மிச்சம்.

    ஐயய்யோ… இது என்ன? இல்லக்கா….நான் இவரோட தனியால்லாம் போகலை…சரிப்பட்டு வராது.

    எது சரிப்பட்டு வராது……? நீயா ஏன் எப்படியெல்லாமோ நினைக்கறே. உன் அத்திம்பேர் என்னடான்னா…சித்ரா ரொம்ப மாடர்ன், பிராட் மைன்டெட்  அப்டீன்னு பெருமை பேசறார்…நீ இப்படி சொல்றே…நானே போயிட்டு  வான்னு சொல்றேன்..உனக்கும் ஒரு அவுட்டிங். ஏதோ உன்னையும் அழைச்சுண்டு போகணும்னு அவருக்கு ஒரு ஆசை…இனிமேல் உனக்கு கல்யாணம் ஆயாச்சுன்னா முடியுமா? சுதா ரகுநாத்தின் கச்சேரி…ரொம்ப நன்னாருக்கும்…மிஸ் பண்ணாதே. இல்லாட்டி நீ பிரவீனுக்கு கணக்குச் சொல்லிக் கொடு..நான் போய்ட்டு வரேன்…என்று சந்திரா சொன்னதும்..

    அம்மாடி…அந்த பனிஷ்மென்ட் எனக்கு வேண்டாம்…நானே போறேன்…. நீயே உன் வாழை மட்டைக்குப் பாடம் எடு…அது உன்னால் மட்டும் தான் முடியும்..என்று கையைக் கூப்புகிறாள்.

    நேரம் ஆக ஆக…சித்ரா…போகணுமா..வேண்டாமா..? என்ற குழப்பத்தில் இருந்தாள். அதே சமயம் கச்சேரியை விடவும் மனசு இல்லை.சரி.. அத்திம்பேர் தானே…போய்ட்டு வரலாம்…என்று கிளம்பத் தயாரானாள் சித்ரா.

    அவளுக்கும் முன்னால் சபாபதி கிளம்பி மைனர் மாதிரி சென்ட்…மணக்க தயாரா வந்து நின்றபோது  சந்திராவே  அசந்து மயங்கிப் போனாள்.

    என்ன அத்திம்பேர்…அசத்தலா கிளம்பிட்டேள்…சுதா ரகுநாதன்னா…. அவ்ளோ இஷ்டமா?…அவங்க மேடையில் கச்சேரி பண்ண வராங்க…நினைவு வெச்சுக்கோங்க…என்று கிண்டல் செய்தாள் சித்ரா.

    இவரும் சிரித்துக் கொண்டே…மனசுக்குள்….அடி அசட்டுப் பெண்ணே….”மனசுலோனி மர்மம்….தெலுசுகோ…..” என்று ராகம் இழுத்தார்..

    ஒரு வழியாக கிளம்பி மோட்டர் பைக்கில் இருவரும்  ஏறியாச்சு…!

    முன்புற கண்ணாடியை சரி செய்தவர்…அப்போ…போலாமா..என்று கண்ணாடி வழியாகவே இவளைப் பார்த்துச் சிரித்தபடியே  கேட்க,

    இவளும்…கண்ணாடியைப் பார்த்தே…”ம்ம்ம்…ம்ம்ம்” என்று பதில் சொன்னாள் சித்ரா.”சிரிப்பைப் பாரு…” என்று அவரை இவள் மனம் ஏளனம் செய்தது.

    ஏனோ மனதிற்குள் ஊசியாகக் குத்த புது மாதிரியாக இன்ப வேதனையை உணர்ந்தாள். “சே…சே…என்று மனசைக் கட்டுப் படுத்தி பார்வையை வேறு புறம் திருப்பி..”நல்லதும்..கெட்டதும் …நெஞ்சுக்குள்ளே. .” அதை மீறி வெளியே வரவேண்டும்…என்று மனசுக்குள் சொல்லிக் கொண்டாள். இருந்தும்…சித்ராவின் “யௌவன கர்வம்” பார்ப்பவர்கள்  எல்லாம் தவறுபவனாகவே….ஆள்காட்டிக் கொண்டிருந்தது.

    அங்கங்கே…சிக்னலில் நிறுத்தும் போது போடும் ப்ரேக்கில்…சர்வ ஜாக்கிரதையாக தன்னை ஒடுக்கிக் கொண்டு இறுக்கமாக பின்னால் நகர்ந்து தள்ளிக் கொண்டவள்……..இதுல…இந்தப் பிரச்சனை எல்லாம் வேற இருக்கா…அட பகவானே…தெரியாமல் போச்சே….என்று தடுமாறி  எண்ணியவள்…

    அடிக்கடி கண்ணாடியைப் பார்க்கும் சாக்கில்  அவரது கண்கள் தன்னைத் தொட்டுச் செல்வது போலவே உணந்தாள் சித்ரா.

    நான் வர வேண்டாம்னு தான் நினைச்சேன்…இந்த சந்திரா கேட்டால் தானே…போயிட்டு வா….போயிட்டு வான்னு…கட்டாயப் படுத்தி அனுப்பினாள்…இருக்கட்டும் அவளை…வீட்டுக்கு போய் கவனிச்சுக்கறேன்….என்று மனசுக்குள் சிடு சிடுத்தவள்….

    அத்திம்பேர்….உங்களுக்கு தான் சிரமம்….இத்தனை தூரம்…ரவீந்திர பாரதி…”சலங்கை ஒலி ” சினிமாவில் கமலஹாசன்..ஷைலஜா…டான்ஸ் ஆடுவதைப் பார்க்க வரும் இடம் இது தானே…என்று கேட்க..

    ஆமாம்…அதே தான் சித்ரா…அந்தப் படம் பாதி இங்கே தான் ஷூட்டிங் ஆச்சு. அப்போ…நான்…என்று ஏதேதோ பேசிக் கொண்டே வந்தவர்….இதோ வந்தாச்சு…பிடிச்சுக்கோ….என்று “விர்ரென்று” அந்த ஏற்றத்தில் ஏற்றும் போது…அந்த செங்குத்தான ஏற்றத்தில் பைக் ஜோராகச் சென்றது.

    சித்ராவின் மனசுக்குள்….சந்தோஷிடம் சொல்லி இப்படித் தானும், அவரும்  பைக்கில் வெளியில் செல்ல வேண்டும் என்ற ஆவலைத் தூண்டியது. இதுவே இன்று அவரோடு வந்திருந்தால் எவ்வளவு இனிமையாக இருந்திருக்கும்….என்றும் எண்ணிக் கொண்டாள்.

    உள்ளே சென்று மூன்றாவது வரிசையில் இடம் பிடித்து அமர்ந்ததும்…அந்த பிரம்மாண்டமான ஹாலில் “ஜில்லென்ற” குளிரில்…மெத்து மெத்தென்ற இருக்கையில் அமர்ந்தபடியே….அதன் அழகை ரசித்துக் ஆச்சரியத்துடன் ரசித்துக் கொண்டிருந்தவளுக்கு அந்த நிமிடங்கள் வேறெந்த நினைவுமின்றி  இன்பமாகக் கரைந்து கொண்டிருந்தது.

    திடீரென கோரஸாக  குரல்கள்….ஏய்…சித்ரா….”ஏன்ட்டி….நூவு…இக்கட….! இதநேனா….நீ காப்போயே… வாரு..”
    (என்ன…நீ… இங்க…! இவரா…உனக்கு வரப் போறவர்…?) என்று அருகில் அமர்ந்திருந்த  சபாபதியைப் பார்த்து…சிரித்தபடியே  கேட்க…..அவர்கள் கேள்வி இவளை உலுக்க..திடுக்கிட்டுத் திரும்பினாள்.

    (இதைக் கேட்டதும் சபாபதி…கண்களில் சந்தோஷத்தோடு முகத்தை எங்கேயோ திருப்பிக் கொண்டு பார்த்தாலும் மனம் முழுதும் ஏதோ பரவசமாக உணர்ந்தார்….அவருக்கு மனசுக்குள் ஆஹா…என்று இச்சையை அதிகமாக்கியது….)

    அவர்கள் கண்களில் குறும்பு…ஹேய்…நோ…நோ…நோ..நோ….ஹி இஸ் மை சிஸ்டர்’ஸ் ஹஸ்பெண்ட்” என்று அவசரமாக சொல்ல…!

    சாரி…சாரி….வெரி சாரி….ஏமி அனுகக்கு… (ஒன்றும் நினைச்சுக்காதே…) என்று கலைந்து போனார்கள்.

    சித்ராவின் தர்ம சங்கடமான நிலைமை இப்போது சபாபதியையும் தாக்க…! என்ன சித்ரா…..தப்பா நினைக்காதே…தெரியாமல் கேட்டிருப்பா….உன் கொல்லீகா…? என்று பேச்சை மாற்றப் பார்த்தார்.

    இவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போதே….சந்தோஷின் அப்பாவும்..அம்மாவும் உள்ளே நுழைந்து அரங்கை ஒரு பார்வை பார்த்துக் கொண்டிருக்கும் போதே..பளிச்சென்று அவர்கள் கண்ணில் பட்டார்கள் இவர்கள் இருவரும்..

    அந்த இடத்தில் அப்படியே நின்ற சந்தோஷின் அம்மா….என்னன்னா…. அங்கே பாருங்கோ…அவள் நம்ம கல்யாணப் பெண் சித்ரா மாதிரி இருக்காளே….சித்ரா தானே..? என்று சந்தேகத்தை கேட்க..

    அட…ஆமாம்…சித்ராவே தான்…அவர்….அவர்….ஏய்…அவர் சபாபதிடி….அவாளும் குடும்பத்தோட கச்சேரிக்கு வந்திருக்கா போல..!

    இல்லையேன்னா ..சந்திராவைக் காணோம்…இவா ரெண்டு பேரும் மட்டும் தனியா வந்திருக்கா மாதிரி தெரியறது…!
    என்ன பழக்கம் இதெல்லாம்…! நாம் சரியா இந்தக் குடும்பத்தைப் பத்தி விசாரிக்காமல்  தெரியாமல் தப்பு பண்ணிட்டோமோ…?

    நம்ம பையனுக்கு நிச்சயமான பெண்ணை இவர் வெளில அழைச்சுண்டு வரதாவது..? கொஞ்சம் கூட நன்னாயில்லைன்னா..நன்னா விசாரிச்சு பெண்ணை நிச்சயம் பண்ணியிருக்கணும்….தப்புப் பண்ணிட்டோமோ…வெறும் அழகையும், வேலையையும் மட்டும் பார்த்து…என்று புலம்ப ஆரம்பித்த சந்தோஷின் அம்மாவைப் பார்த்து அவர்.

    என்ன இது கற்பகம்?….கண்ணால் காண்பதுவும் பொய்…காதால் கேட்பதுவும் பொய். .கொஞ்சம் அமைதியா இரேன்..டக்கு டக்குன்னு நீயா ஒரு முடிவுக்கு வராதேன்னு எத்தனை தடவை சொல்லியிருக்கேன். சித்ராவை நமக்குத் தெரியாதா என்ன..? கொஞ்சம் பொறுமையா இரு,,,,பாப்போம்..என்றதும்..

    எனக்கு மூட் போச்சு…கிளம்புங்கோ…ஆத்துக்குப் போவோம்…கச்சேரியும் வேண்டாம்..கிச்சேரியும் வேண்டாம்….என்று கற்பகம் கிளம்பத் தயாராகத திரும்பவும்..

    வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த சித்ரா…இவர்களை கவனிக்கவும்….. .மனசுக்குள் ஏக மகிழ்ச்சியில் டக்கென்று சீட்டை விட்டு எழுந்து, வேகமாக நடந்து போய் அவர்களது கையைப் பிடித்து…..சந்தோஷமாக பேச…அங்கிருந்த மூவரும்…சபாபதியை நோக்கி வர……!

    சந்தோஷின் அப்பா…தான் மனைவியைப் பார்த்துக் கண்களால்….” இப்போப் பார்த்தியா? அவசரக் குடுக்கை….”என்று சீண்டியது.

    இவரும் எழுந்து…கைகுலுக்கி….நானும் உங்களை இங்கே சந்திப்பேன்னு நினைக்கவே இல்லை…சர்ப்ரைஸ்…! என்று சிரிக்க.

    சந்திரா வரலையா..?

    பையனுக்கு பரிட்சை சார்… சித்ரா தான் வீட்டில் போர் அடிக்கறதுன்னு சொன்னா…நான் தமிழ் சங்கத்தில் மெம்பர் பாஸ் வீணாக்க வேண்டாமேன்னு…வந்தோம்…

    குட்…நாங்களும்…அதே தான். சந்தோஷ் தான் டிவீயில் கிரிகெட் மாட்ச் பார்த்துண்டு இருக்கான்…அதான் நாங்க மட்டும் கிளம்பி வந்தோம்…!

    சித்ரா வந்திருக்காள்னு தெரிந்தால் அவனும் உடனே கிளம்பி வந்துடுவான்…என்று மாமி சந்தோஷமாகச் சிரித்தபடியே சொல்ல…

    கூப்பிடலாமா அவனையும்…என்று சந்தோஷின் அப்பாவும் கேட்க..

    அதற்குள்…நிகழ்ச்சியின் ஆரம்பிக்கும் அறிகுறிகள் தென்படுமாறு திரை…விலக..பளீரென்ற அரங்க மேடையின் அலங்காரம் கண்களைப் பறிக்க…அனைவரும் ஒருவித எதிர்பார்ப்பில் அமைதியாகிறார்கள்.

    அம்மா…நீங்க இங்கே வந்து உட்காருங்கோ என்று சித்ரா தனக்கு அருகில் இருக்கும் இருக்கையில் அழைக்க, சபாபதி சந்தோஷின் அப்பாவின் அருகில் சென்று அமருகிறார்.

    சபாபதிக்கு அவரது இச்சையெல்லாம் அடங்கிப் போயிருந்தது. பேசாமல் சந்திராவையே அழைச்சுண்டு வந்திருக்கலாம்…அவளுக்கும் சுதாவின் பாட்டுப் பிடிக்கும்…என்று நினைத்துக் கொண்டார்.

    மேடையில் நிகழ்ச்சி ஜோராக ஆரம்பமாகிறது. இடையிடையில் கிடைத்த நேரத்தில் சந்தோஷின் அம்மா சித்ராவிடம் பேச்சுக் கொடுக்கவும்…சித்ராவும் அவர்களோடு ரொம்ப அன்பாகவும், மதிப்போடு பேசிக் கொள்ள அங்கே அவர்களுக்குள் ஒரு “புரிதல்” ஆரம்பமாகிக் கொண்டிருந்தது.

    இடையில் கிடைத்த சிறு இடைவேளையின் போது…சித்ரா தனது கைபேசியை எடுத்து….”உரிமைகளை யாரும் கையில் எடுத்துத் தர மாட்டார்கள்…நாம் தான் எடுத்துக்கணும்…” என்ற சந்திராவின் குரல் உள்ளுக்குள் எதிரொலிக்க,
    “அம்மா…நான் சந்தோஷுக்கு ஃபோன் பண்ணி, நானும் உங்களோடத் தான் இருக்கேன்னு சொல்லட்டுமாம்மா…” என்று பணிவோடு கேட்கிறாள்.

    “சொல்லேன்….அவனும் சந்தோஷப் படுவான்….” என்கிறாள் அம்மா.

    இவளும் விஷயத்தை சுருக்கமாகச் சொல்லிவிட்டு வைக்கிறாள்.. அம்மா…நீங்கள் சொன்னா மாதிரி அவருக்கும் ரொம்ப சந்தோஷம்…என்று முகமெல்லாம் வெட்கத்தோடு சொல்லும் சித்ராவைப் பார்த்து…அம்மா… அவளது கன்னத்தைத் செல்லமாகத் தட்டுகிறாள்.

    தன்னுடைய வருங்கால மருமகள்..பெரியவர்களுக்குத் தரும் மதிப்பையும், மரியாதையையும் கண்டு  நிறைந்த மனதோடு கச்சேரியை ரசித்துக் கொண்டிருக்கிறார்கள்..இருவரும்.

    ஆர்வத்தை அடக்க முடியாமல்…சித்ரா, சந்திராவுக்கும்  போன் செய்து “அக்கா..நான் கச்சேரிக்கு வந்தது நல்லதாச்சு….இங்கே யார் வந்திருக்கா…தெரியுமா? அவரோட அம்மாவும், அப்பாவும்…இதோ என் பக்கத்தில் தான்…இருக்கா…பேசறியா…இரு தரேன்..என்று சொல்லி…”அம்மா…சந்திரா….லைன்ல இருக்கா…பேசுங்கோ…” என்று கைபேசியை தரவும்.

    “கச்சேரி ரொம்ப பிரமாதமா இருக்கு சந்திரா….கேட்கிறதா? சித்ரா வந்தது எங்களுக்கு ரொம்ப சந்தோசம்..” என்று சொல்லி ஃபோனை வைக்கிறாள், அம்மா.

    குடும்பத்துக்குள் இறுகி இருக்கும் சில முடிச்சுகள் மெல்ல மெல்ல அவிழ்ந்தது போல…இறுக்கம் தளர்ந்தது போலிருந்தது சித்ராவுக்கு.

    சுதா ரகுநாதனின்…வெண்கலக் குரல்…அரங்கம் முழுதும் நிரம்பி அத்தனை இதயங்களையும் கட்டிப் போட்டு வைத்தது.

    “நீ….ரஜ…ரமணீ….ய  கிருஷ்ணா……தேஹி…..ஜெய…ஜெயா……மாம்பாஹி….”

    கணீரென்று அம்ருத வர்ஷிணியாய் இசை மழை பொழிந்து கொண்டிருந்தது.,

    ஆயிரம் பேர்கள் அந்த ஒரு இசைக் குரலுக்குக் கட்டுப் பட்டு மகுடிக்கு ஆடும் பாம்பு போல் தனை மறந்து ஐக்கியமாகி இருந்தனர்.

    சந்தோஷின் அப்பா..அவ்வபோது சபாபதி பக்கம் திரும்பி…பரஸ்பரமாகப் பேசிக் கொள்கிறார்கள்.

    இரண்டு மனங்களோ….இரண்டு குணங்களோ…சில வேளைகளில் உறவுகள் பலப்பட இது போன்ற ஒரு நிகழ்வு…அவசியம் தேவை என்று சொல்லாமல் சொன்னது.

    சித்ராவுக்கு தான் மனதுக்குள் இருந்த இனம் புரியாத கல்யாண பயம் விலகி….தெளிவானது.

    சந்தோஷின் அம்மாவும்..அப்பாவும்…கூட சித்ராவின் எளிமையான, இனிமையான குணமும்…அவளின் அக்கா தங்கையின் ஒட்டுதலைப் புரிந்து கொள்ள முடிந்தது.

    சந்திராவின் கணவருக்கும்…தனது உறவின் பங்கும்…பதவியும் விளங்கியது போலிருந்தது. பயிருக்கு தான் வேலியாக மட்டும் தான் இருக்க வேண்டும் என்ற உண்மை ஆழமாகப் புரிந்தது.

    நிகழ்ச்சி முடிந்து அரங்கம்  கலைந்ததும்…வெளியில் வந்து புறப்படத் தயாரானவர்கள்…”அம்மா…அப்பா…நாங்க போயிட்டு வரோம்” …என்று சொல்லவும்.

    எங்கம்மாக் கிளம்பறே…இரு…இரு….எல்லோரும் சேர்ந்து டின்னர் சாப்ட்டுட்டு போகலாம்…சரியா..என்றனர்.

    சபாபதியிடம்…எங்க போகலாம் டின்னருக்கு..?..என்று பேசிக் கொண்டிருக்கும் அப்பாவும்… இப்போது அவன் அம்மாவே…”சித்ரா…நீ வேணா..சந்தோஷைக் கூப்பிடேன்…வந்தாலும் வருவான்…கிரிகெட் முடிஞ்சிருக்கும்..” என்று சொல்லவும்..

    அதற்காகவே காத்திருந்தவள், அவசர அவசரமாய் தன் கைபேசியை எடுத்து சந்தோஷுக்கு இடத்தைச் சொல்லிவிட்டு வரச் சொன்னவள்.. இன்னும் சற்று நேரத்தில் அவனது  வருகைக்காக இப்போதிருந்தே இவளது மனம் சந்தோஷ மயக்கத்தில் காத்திருந்தது.

    தான் நினைத்தது ஒன்று…நடந்து கொண்டிருப்பது வேறொன்றாக இருந்தாலும்….சந்திராவின் கணவன் சபாபதிக்கு இந்தப் பொழுதுகள்  மிகவும் பிடித்திருந்தது., எல்லோரிடமும் தான்…மிகவும் பொறுப்புள்ளவனாக வெளிக்காட்டிக் கொண்ட தருணமாக அமைத்துக் கொண்டு அவர்களிடம் தன்னை பற்றி ஒரு உயர்ந்த  அபிப்ராயத்தை உருவாக்கி  அவர்கள் மனதில் இடம் பிடித்து விட்ட திருப்தியில் இருந்தார். இன்னும்  அதை தக்க வைத்துக் கொள்ள சந்திராவுக்கு  போன் செய்து…அவளுக்கு என்ன வேண்டும் ? என்று கேட்டுப் பேசி….சந்தோஷ் வந்ததும், அவனுடனும் சிரித்துப் பேசி…தன்னுடைய  சுய கௌரவத்தை அழகாகக் காப்பாற்றிக் கொண்டிருந்தார் சபாபதி.

    இரவு டின்னர் “கிராண்ட் மினர்வா”வில்  பேசியபடியே…இரவோடு சேர்ந்து நகர்ந்து கொண்டிருந்தது. நேரம் போவதே தெரியாமல்  சிரிப்பும்… மகிழ்வுமாக.

    வீட்டில் பிரவீன் படித்து முடித்த களைப்பில் உறங்கிப் போனான்…சந்திரா,  கணவனின் வருகைக்காகக் காத்திருந்தாள்.

    இவர்கள் வீட்டை விட்டுப் புறப்பட்ட நிமிஷத்திலிருந்து மனக் குழப்பத்தினூடே…குழம்பித் தவிக்க…என்னைக்கும் இல்லாத திருநாளா…இன்னைக்கு இவர் போனில் சிரித்து சிரித்துப் பேசுகிறார்…..என்னவாயிருக்கும்…இவ்வளவு சந்தோஷப் படும் படியாக?

    “சித்ரா போக மாட்டேன் என்று எவ்வளவு சொன்னாள்..!.நான் தானே அவள் பேச்சைக் கேட்காமல்..அனுப்பி வைத்தேன்… இவர் ஏதாவது அவளிடம் ஏடாக்  கூடமாக பேசி இருப்பாரோ…? அவளுக்குக் கோபம் வந்திருக்குமோ…? அப்படி என்ன இவருக்கு அவளோட ஊர் சுத்த ஆசை…? இப்போ அவளோட மாமியார், மாமனார் இப்படிப் பார்த்து  தப்பா நினைக்க ஆரம்பிச்சா என்னாவது…? நானே சித்ராவுக்கு கெடுதல் செய்வது போலத் தானே…. இன்னைக்கு கார்த்தால …கால் இடறியது…”இடறிய கால் இடரும்” ன்னு சொல்லியிருக்கு…அப்போ இன்னைக்கு என்னவெல்லாம் நடக்கப்  போறதோ…? இன்னும் வரலையே…இத்தனை லேட்டாகிறதே….இன்னைக்கு சகுனமே சரியில்லையே….என்றெல்லாம் கவலைப் பட்டவள்…

    வாசலுக்கு வந்து நின்று காலையில் தான் போட்ட தப்புக் கோலங்களைப் பார்வையிட்டாள்

    தெருவிளக்கின் ஒளியில் கூட காலையில் அவள் அழித்து அழித்துப் போட்ட தப்புக் கோலத்  தடயங்கள் அப்படியே இருந்தாலும் அதையும் மீறி அவள் இழுத்த கோடுகள்….போல…..பளிச்சென “நட்சத்திரமாக”  மின்னி “நல்லதே நடக்கும்” என்று சொல்வது போலிருந்தது.

    அத்தனை நேரம் அவள் மனசுக்குள் குறுக்கும் நெடுக்குமாக ஓடிக் கொண்டிருந்த கறுப்புப் பூனை  எல்லா சகுனங்களையும்  புறந்தள்ளி விட்டு வெளியேறியது. அவள் அந்த நட்சத்திரக் கோலத்தைப் பார்த்தபடியே நின்றிருந்தாள்.

    குற்ற உணர்வில், தப்புக் கோலங்கள் போட்டது நானா அல்லது கணவனா என்று தராசில் சற்று நிறுத்துப் பார்த்தாள் சந்திரா !  தன் கணவனின் ஆண்மீக இச்சையால் சித்ராவுக்குத் திருமணம் நின்று போகாமல் தப்பிய தாளங்களை ஊழ்விதி  எப்படியோ சரி செய்து விட்டது இவர்கள் அறியாமலே.

    Share
  • கூவமும் கங்கைதான்

    தமிழ்த்தேனீ

     

    சாணக்கியரின் வாக்கு :–

    “நேர்மையான, அறிவாளியான  மக்கள்தான் ஒரு நாட்டின் முன்னேற்றத்துக்கு வழி வகுக்கும். மக்களின்றி நாடில்லை, நாடின்றி ராஜ்ஜியமில்லை. ஒரு இடத்தின் மதிப்பே அந்த இடத்தில் வசிக்கும் மக்களால் உருவாக்கப்படுவதே. நாட்டின் மேன்மையை விரும்பும் மன்னன் அந்த நாட்டு மக்களை  நல்ல முறையில் அறிவாளிகளாக உருவாக்கவேண்டும். பொருளாதாரத் தடைகள் ஏற்படாவண்ணம் தடுத்து  வருவாயைப் பெருக்க வேண்டும்”-   சாணக்கியர்

    ஒரு மனிதனின் மரியாதை, ஒரு மனதின் வலி, ஒரு வார்த்தையின் கனம், ஒரு அன்பின் அருமை, ஒரு பாசத்தின் பெருமை, ஒரு தியாகத்தின் விலை, ஒரு மண்ணின் பெருமை, ஒரு தேசத்தின் உயர்வு, ஒரு குடும்பத்தின் பாரம்பரியம், மக்களின் அருமை புரியாதவனுக்கு மனசாட்சியின் குரல் கேட்காது. அப்படிப்பட்டவன் நாட்டையாளத் தகுதி இல்லாதவன். –  தமிழ்த்தேனீ

     **************************

    ஐயா, நான் உள்ளே வரலாங்களா  என்று கேட்டபடியே வந்த அவனை ஏறிட்டுப் பார்த்த  கிருஷ்ணன் வாப்பா  தாராளமா வரலாம் என்றார்.

    தயங்கித் தயங்கி உள்ளே நெடுஞ்சாண்கிடையாக விழுந்து வணங்கி அவர் காலைப் பிடித்துக்கொண்டு  கொண்டு, “என்னை ஆசீர்வாதம் செய்யுங்க சார்” என்று கெஞ்சும் அவனை அவருக்கு அடையாளம் தெரியவில்லை.

    சரி யாரென்று பிறகு பார்த்துக்கொள்ளலாம், “நல்லா இருப்பா” என்று  அவனை வாழ்த்திவிட்டு, “எழுந்திருப்பா” என்று வாஞ்சையோடு தோள் தொட்டுத் தூக்கி அவன் தலையில் கை வைத்து ஆசி வழங்கினார் கிருஷ்ணன். நேருக்கு நேர் அவனைப் பார்த்த போது அவருக்கு அவனைப் பிடித்துப் போயிற்று.

    சில நேரங்களில் நம்மை விட நம் உள் மனதுக்கு  சக்தி அதிகம் என்று உணரும் தருணங்கள் வரும். நம்மைவிட நம் உள் மனது மிகச்சரியாக எடைபோடும் விந்தையை அனுபவித்திருக்கிறார் அவர்.

    நல்ல தீர்க்கமான நாசி, ஆண்பிள்ளைக்கு அடையாளமாக வாளிப்பான உடல்வாகு, பரந்து விரிந்த மார்பகம், திண்ணென்ற தோள்கள், நேருக்கு நேர் கண்களைப் பார்த்துப் பேசும் திடம், தீர்க்கம், அறிவு விசாலத்துக்கு அடையாளமாக ஒளிரும் கண்கள். அவரையறியாமல் அவன் மேல் ஒரு மதிப்பு வந்தது   கிருஷ்ணனுக்கு.

    “வாப்பா இங்கே உக்காரு” என்று எதிரில் இருந்த நாற்காலியைக் காட்டினார் கிருஷ்ணன். “இல்லே சார், பரவாயில்லை நான் நிக்கறேன்” என்றான் அவன்.

    “அனாவசியமான மரியாதையை நான் எதிர்பார்க்கறதில்லே, எப்போ என் கால்லே விழுந்து நீ வணங்கினியோ நீயும் என்னோட பையன் மாதிரிதான். பரவாயில்லே உக்காரு” என்றார் கிருஷ்ணன். தயங்கியபடியே உட்கார்ந்தான் அவன்.

    “அம்மா நல்லா இருக்காங்களா? அவங்க உள்ள இருக்காங்களா ?”.

    அவன் கண்கள் ஆவலுடன் காமாக்ஷியைத் தேடின.

    “இல்லேப்பா அவ கோயில் வரைக்கும் போயிருக்கா. இப்போ வர்ற நேரம்தான்”, சொல்லும்போதே வாயிலில் நிழலாடியது  காமாக்ஷி வந்துவிட்டாள்.

    “சொல்லுப்பா உன் பேரென்ன? நீ யாரு ,எதுக்கு என் கால்லே விழுந்து வணங்கறே?” என்றார் கிருஷ்ணன்.

    “சார்.. நான்..என்னை உங்களுக்கு ஞாபகம் இல்லையா? நான்தான் சார்  குமரன். என்னை என்னோட பத்து வயசிலே ஒரு ஹாஸ்டல்லே சேத்துட்டு, எனக்கு படிக்கறதுக்கு வேண்டிய எல்லா வசதிகளையும் செஞ்சு குடுத்து, நான் எவ்வளவு படிக்கணுமோ அவ்வளவு படிக்கலாம்ன்னு சொல்லி எல்லா ஏற்பாடும் செஞ்சு குடுத்தீங்க”. 

    அங்கே வந்த காமாக்ஷி “ஏங்க இவன் நம்ம குமரனுங்க, இவனை அடையாளம் தெரியலையா?”  என்றாள்.

    “அம்மா என்னை ஆசீர்வாதம் செய்யுங்க” என்றபடி அவள் காலிலும் விழுந்தான் குமரன். “நல்லா இருப்பா” என்று ஆசிகூறினாள் காமாக்ஷி. அதிர்ந்தார் கிருஷ்ணன். “நீ இவனை எப்பிடி நியாபகம் வெச்சிருக்கே ?” என்றார் ஆச்சரியத்துடன்.

    புன்னகைத்தாள் காமாக்ஷி. எத்தனை வருடம் கழித்துப் பார்த்தாலும் தாய் மனம் கொண்டவர்களுக்கு  குழந்தையை அடையாளம் தெரியும் என்று நிரூபிப்பது போல  புன்னகை புரிந்தாள் காமாக்ஷி.

    இன்னிக்கு நான் ஒரு கம்ப்யூட்டர் கம்பெனிலே  இஞ்சினீயரா இருக்கேன். உங்களைப் பாக்கணும்னு எவ்வளவோ நாள் நெனைச்சிருக்கேன். ஆனா படிப்பை முடிக்காமே உங்களை வந்து பாக்கக் கூடாதுன்னு சொல்லிட்டீங்க. அதுனாலே மனசைக் கட்டுப்படுத்திண்டு இவ்ளோ வருஷமா படிப்பே குறிக்கோளா இருந்து படிச்சிட்டேன் சார். என்னோட கனவு ஓரளவு நிறைவேறி இருக்குன்னா அதுக்கு நீங்கதான் சார் காரணம் என்றான் குமரன்.

    அவன் கண்களிலிருந்து நன்றிக் கண்ணீர் பெருக்கெடுத்து வழிந்துகொண்டிருந்தது. பரம திருப்தியுடன் அவனை உச்சி மோர்ந்தார் கிருஷ்ணன். இந்த மாதிரி உன்னைப் பாக்கணும்னு நானும் மனசைக் கல்லாக்கிகிட்டு  உன்னைப் பார்க்க வரல்லே, ஆனா எப்பவும் விசாரிச்சிகிட்டே இருந்தேன்  நீ நல்லாப் படிக்கிறியான்னு. ஒன்னோட வளர்ச்சியை அணு அணுவா ரசிச்சவன் நான். 

    “காலம் என்னோட தோற்றத்திலே பெரிய மாறுதலைச் செய்யலை, அதுனாலே நீ என்னை கண்டு பிடிச்சிட்டே. ஆனா உங்கிட்ட எவ்ளோ மாற்றம்! என்னாலே  கண்டு பிடிக்க முடியலை.  இங்கே இல்லைப்பா வெளிநாடு போயிட்டேன், இப்போதான் திரும்பி வந்தேன் ஆனா ரொம்ப சந்தோஷமா இருக்கு, உன்னைப் பாக்க” என்ற  கிருஷ்ணன், அவனையே பார்த்துக்கொண்டிருந்தார்.

    அவருக்கு பல வருடங்களுக்கு முன் நடந்த அந்த சம்பவம் நினைவுக்கு வந்தது.

    புதியதாக குடிபெயர்ந்திருந்த இடத்தில் என்னென்ன கடைகள் எங்கே இருக்கின்றன என்று பார்த்து வைத்துக்கொள்ள வேண்டிய அவசியம், அதன் காரணமாக ஒரு சின்ன நடைப்பயிற்சியும் மேற்கொண்டாற்போல் இருக்கும் என்று நினைத்து கடை வீதியில் வந்து கொண்டிருந்தார் கிருஷ்ணன்.

    அவர் மனைவி ஏங்க இங்கே பச்சைஅம்மன் மளிகைக் கடைன்னு ஒண்ணு இருக்காம், நாம வேண்டிய பொருட்களோட பட்டியலைக் குடுத்துட்டா வீட்டிற்கே வந்து குடுத்துடறாங்களாம் என்று கூறியது நினைவுக்கு வந்தது. எதிரே அந்த பச்சைஅம்மன் மளிகைக் கடை தென்பட்டது. அதன் உள்ளே நுழையலாம் என்று எண்ணிக் காலை வைத்தார். சேறும் சகதியுமாக இருந்த அந்த இடம் அவரை வழுக்கிவிட்டு கீழே தள்ளியது தலைகீழாய். நல்லவேளை கையில் கிடைத்த எதையோ பற்றிக்கொண்டு ஒருவாறு கீழே விழாமல் தப்பித்து நிமிர்ந்தார்.         

    பக்கத்தில் ஒரு பையன் அவரை பிடித்துக்கொண்டு  “என்னா பெரியவரே, பாத்து வரக் கூடாதா” என்றான். அவன் கண்களில் வெறுப்பு மண்டிக்கிடந்ததைக் கண்ட கிருஷ்ணன், “மன்னிச்சிக்கோப்பா பாக்காம காலை வெச்சிட்டேன், ரொம்ப நன்றிப்பா” என்றார்.

    “நன்றியெல்லாம் இருக்கட்டும், என் தோளை விடுங்க நான் போவணும், எனக்கு வேலை இருக்கு” என்று கூறியபடியே அவர் கையை தள்ளிவிட்டுவிட்டு நகர்ந்தான் அந்தப் பையன்.

    ஒருவாறு சமாளித்துக்கொண்டு கடைக்குச் சென்று  அங்கே இருந்தவரிடம், “நான் இந்த பகுதிக்கு புதுசா வந்திருக்கேன். மளிகை லிஸ்டைக் கொடுத்தா  வீட்டுக்கு பொருளை அனுப்புவீங்கன்னு கேள்விப்பட்டேன், அனுப்புவீங்களா?” என்றார்.

    கடைக்காரர், “ஆமாம் சார் அப்பிடிதான் அனுப்பிகிட்டு இருந்தேன், வரவர வேலை செய்ய சரியான ஆட்களே கிடைக்க மாட்டேங்கறாங்க, அப்பிடியே கிடைச்சாலும் நாலு நாளைக்கு வேலை செய்யறாங்க, அதுக்குப் பிறகு ஓடிப் போயிர்றாங்க என்னா செய்யிறது. எதுக்கும் நீங்க லிஸ்டைக் குடுத்துட்டுப் போங்க முடிஞ்சா அனுப்பறேன்” என்றார்.

    பேசிக்கொண்டே இருக்கும்போது கிருஷ்ணன் மேலே ஒரு கொத்துக் குப்பை வந்து விழுந்தது. கையால் அந்தக் குப்பையை தள்ளிவிட்டுவிட்டு  “என்னாப்பா கடையைப் பெருக்கும்போது யாராவது நிக்கிறாங்களான்னு கவனிச்சு பெருக்கக் கூடாதா” என்றார் ஆதங்கமான குரலில். ஒரு தலை நிமிர்ந்து “நான்தான் பெருக்கினேன், வேணும்னுட்டா உங்க மேலே போடுவாங்க? போவீங்களா! என்னாமோ பெரிசா குரல் விடுறீங்களே” என்று ஒரு குரலும்.

    அந்தக் குரலுக்கு சொந்தமான வெறுப்பு நிறைந்த கண்களும் கோவமான முகமும் தென்பட்டன.  இவரைத் தாங்கிப் பிடித்த அதே பையன்தான்.

    “என்னாங்க இது இப்பிடிப் பேசறான் இந்தப் பையன்” என்றார் கடைக்காரரிடம் கிருஷ்ணன்.

    “டேய் ஏண்டா இப்பிடி வர கஸ்டமரையெல்லாம் வெரட்டறதிலேயே இருக்கே, அவர்கிட்டே மன்னிப்பு கேளுடா முதல்லே” என்றார் கடைக்காரர்.

    “மன்னிப்பெல்லாம் கேக்க முடியாது. வேணும்னா வேலைக்கு வெச்சிக்கோங்க இல்லேன்னா நானு இப்பவே போறேன். எங்கூருக்கு, ரெயிலேத்தி அனுப்பிருங்க”  என்றான் பையன்.

    “எப்பிடிப் பேசறான் பாத்தீங்களா சார், இவங்க அம்மா கஷ்டப் படறாங்களேன்னு அவங்ககிட்ட எடுத்துச் சொல்லி  இவனை கூட்டி கிட்டு வந்து பத்திரமா பாத்துப்பாத்து வெச்சிக்கறேன். தொழில் சொல்லிக் குடுக்கறேன். இவன் சம்பாரிச்சா அந்த அம்மாவோட மத்த  புள்ளைங்கல்லாம் ஒருவேளை கஞ்சி குடிக்கும் அப்பிடீன்னு அந்த அம்மாகிட்ட கெஞ்சி, பணம் செலவழிச்சு ரெயில் டிக்கட்டு எடுத்து கூட்டிவந்து,  இங்கே வெச்சு சாப்பாடு போட்டு தங்க இடம் குடுத்து,  வெச்சிருக்கேன். கொஞ்சமாவது நன்னி இருக்கா பாருங்க, இவன் இப்பிடி நடந்துக்கறான்” என்று சலித்துக்கொண்டார் கடைக்காரர்.

    “இதோ பாருங்க முதலாளி,  நான் உங்களை ஒண்ணும் குறை சொல்லலையே! எனக்கு வேணாம், நான் போறேன்னு சொல்றேன். என்னைய அனுப்பிருங்கன்னு சொல்றேன், கேக்கமாட்டேங்கறீங்க. என்னைய விட்ருங்க, அனுப்பிருங்க” என்று தன் துணி மணிகளை எடுத்து வைத்துக்கொண்டு “நீங்க என்னா அனுப்பறது, நானே போயிக்கறேன்” என்றபடி வெளியே சென்று நடக்கத் தொடங்கினான்.

    இந்தச் சிறு வயதில் இவனுக்கு எங்கே இருந்து இவ்வளவு வெறுப்பும் ஆத்திரமும் வருகிறது  என்று யோசித்தார் கிருஷ்ணன். “சரி மளிகை பொருட்களை நானே வாங்கிட்டு போயிடறேன் நீங்க குடுங்க” என்று சொல்லிவிட்டு  நின்று வாங்கிக்கொண்டு வீட்டுக்கு கிளம்பினார்.  இரவு சப்பிட்டுவிட்டு படுத்தார். அவர் மனதில் ஏனோ மீண்டும் மீண்டும் அந்தப் பையனின் நியாபகமே வந்துகொண்டிருந்தது. நல்ல தூக்கத்தில் ஏதோ சப்தம் கேட்டு  எழுந்தார். 

    வாசலில் அக்கம்பக்கத்து வீடுகளில் இருப்போர் கூடியிருந்தனர். “ஒரு திருடன் வகையா மாட்டிகிட்டான், கட்டி வெச்சிட்டு  போலீசுக்கு சொல்லி இருக்கோம்” என்று ஒரே குரலில் சொன்னார்கள். அந்தத் திருடனை எழுப்பி  ஓங்கி ஒரு அறைவிட்டார் கீழே போய் விழுந்தான் அவன். இன்னமும் அவருக்கு ஆத்திரம் தாங்கவில்லை. இந்தச் சின்னஞ்சிறு வயசிலே திருட்டா  நினைக்க நினைக்க ஆத்திரமாய் வந்தது.

    மீண்டும் அவனை எழுப்பி அவர் பக்கமாகத் திருப்பி அவன் முகத்தைப் பார்த்து அதிர்ந்து போனார். ஆமாம் காலையில் சந்தித்த அதே கடைக்காரப் பையன். ஆத்திரமாக வந்தது அவருக்கு. “ஏண்டா நியாயமா வேலை செஞ்சு  சம்பாதிக்க முடியலே, இந்தச் சின்ன வயசிலே  திருட மட்டும் முடியுதா ?  உன்னையெல்லா கட்டி வெச்சு உதைக்கணும். தப்பே இல்லே”  என்றார் ஆக்ரோஷமான குரலில்.   

    கண்களில் கண்ணீருடன்  இவரைப் பார்த்து  “என்னை அடிங்க சார், எவ்ளோவேணா அடிங்க சார் ஆனா திருடன்னு மட்டும் சொல்லாதீங்க, சார் நான் திருட வரல்லெ சார், ஊருக்கு போக டிக்கட் எடுக்கப் பணம் இல்லே. பசிவேற குடலைப் புடுங்குது அப்பிடியே மயக்கத்திலே  இங்க படுத்திருந்தேன். அதோ அந்தப் பெரிய நாயி என் பையை எடுத்துகிட்டு ஓடிடிச்சு, அதைத் துரத்திகிட்டு வந்தேன். அந்தப் பையிலேதான் சார் எங்க அம்மாவோட  படம் வெச்சிருக்கேன். அதைத் துரத்திகிட்டுவந்தேன் சார். அந்தப் பையை வாங்கிக் குடுங்க சார்  எங்கம்மா படம் இருக்குது அதிலே என்று கதறினான். எங்க அம்மாவை படத்திலேதான் சார் தினோம் பாக்கறேன். அவங்களோட சேந்து இருக்க எனக்கு குடுத்து வைக்கலே. அந்தப் பையை வாங்கிக் குடுத்திருங்க சார்.”

    கிருஷ்ணனுக்கு  இவன் ஒரு புண்யாத்மா, திருடனில்லை என்று உள்மனம் சொல்லியது. அவர்களிடமிருந்து அந்தப்பையை வாங்கி இவனிடம் கொடுத்துவிட்டு, “சரி நீங்கள்ளாம் போங்க நான் இவனைப் பாத்துக்கறேன்” என்று  கூறிவிட்டு உடனடியாக காவல் நிலையத்துக்கு  போன் செய்து, “சார் தப்பா சொல்லிட்டாங்க. இங்கே திருட யாரும் வரலை, அந்தப் பையன் எங்க வீட்டுக்கு வந்திருக்கான். வழிதெரியாம தடுமாறும் போது திருடன்னு நெனைச்சிகிட்டாங்க. நீங்க கஷ்டப்படாதீங்க  அந்தப் பையனை நான் பாத்துக்கறேன்” என்று கூறிவிட்டு, “நீ வாப்பா போகலாம்”, என்று அவன் கையைப் பிடித்து அழைத்துக்கொண்டு உள்ளே சென்றார்.

    “வாப்பா நீ இங்கே உக்காரு, காமாக்ஷி  இவனுக்கு வயித்துக்கு  ஏதாவது குடு” என்றார். காமாக்ஷி ஒரு தட்டில் உணவு எடுத்துவந்து அவனிடம் வைத்தாள். “சாப்புடுப்பா”  என்றார்.  அள்ளி அள்ளி விழுங்கிவிட்டு, “தட்டை எஙக சார் கழுவணும்”  என்றான். “அதோ அங்கே போயி வாஷ் பேசின்லே சுத்தம் செஞ்சு கொண்டு வா”  என்றார் கிருஷ்ணன்.

    அவனுக்கு துடைத்துக்கொள்ள ஒரு துண்டைக் கொடுத்துவிட்டு, கையை துடைத்துக்கொண்டு  வந்த அவனை தன் பக்கத்தில் உட்கார வைத்துக்கொண்டு, “ஆமாம், உனக்கு ஏன் இவ்ளோ சின்ன வயசிலே இவ்வளவு ஆத்திரமும், கோவமும் வருது ?” என்றார்.

    “அந்த மளிகைக் கடைக்காரர்  உன்னை சரியா நடத்தலையா. கொடுமைப் படுத்தறாரா? என்கிட்ட சொல்லு  அவனை ஒரு வழி பண்றேன்”  என்றார்.

    “அவரு பாவம் சார், நல்ல மனுஷன்  அவருமேலே தப்பில்லே, துட்டுக்கு ஆசைப்பட்டு எங்க ஊர்லேருந்து நிறையா பேரு  படிக்கணும்னு ஆசைப்படுற  சின்னப் புள்ளைங்களையெல்லாம்  மெட்ராசுக்கு அனுப்பறாங்க. இவரு கூட்டியாந்து கடையிலே வேலைகுடுத்து  நல்லாத்தான் வெச்சிக்கறாரு.

    முடவன் கொம்புத்தேனுக்கு ஆசைப்பட்ட கதை சார் என்னோடது.  என் அம்மா என்னைப் படிக்க வைக்க முடியாம ரொம்பக் கஷ்டப்படறாங்க. எங்க அப்பா தினோம் குடிச்சிட்டு வந்து அம்மாவைப் போட்டு அடிக்கறாரு, தம்பி தங்கையெல்லாம் கஷ்டப்படுது, ராத்திரி குடிச்சிட்டு வந்து எல்லாரையும் அடிக்கறாரு. காலையிலே  மன்னிப்பு கேக்கறாரு, மறுபடியும் ராவிக்கு  குடிச்சிட்டு வந்து நிக்கறாரு.

     சாப்பாட்டுக்கு கூட வழியில்லாம அம்மா கஷ்டப்படுது. எங்கம்மா என்னா செய்வாங்க? ஆனா  ஒரு நாளுகூட  எங்கப்பனை திட்டாது எங்கம்மா. இதமா அவரு வாயைத் துடைச்சு விட்டு படுக்க வெச்சு விசிறியாலே வீசறாங்க . அவரு தூங்கறாரு,  ஏம்மா ஒரு நாளைக்காவது  நீ கேள்வி கேட்டாதானே அவரு திருந்துவாரு அப்பிடீன்னு நான் கேட்டா, “அடப் போடா  அவரு நல்ல மனுஷன்டா. ஏதோ போறாத காலம் குடிக்க ஆரம்பிச்சிட்டாரு, நீ அவரு பெத்த மகன்டா  என் முன்னாலே அவரை எது சொன்னாலும் நான் ஒப்புக்க மாட்டேன்”னு எங்கிட்ட  சண்டை பிடிக்குது. இத்துப்போன கயிறாலே இறுக்கிக் கட்ட முடியாது, உறவு நல்லா இருக்கணும்னா  உண்மையான பாசமும் நேசமும், அன்பும், கருணையும், நடிப்பு கலக்காத நேர்மையும் அவங்கவங்களுக்கா  வரணும், சொல்லிக்குடுத்து வரவைக்க முடியாது,  அப்பிடீன்னு ஏதேதோ சொல்றாங்க.   எனக்கு புரியமாட்டேங்குது.

    உனக்கென்னா நான் கூலி வேலை செய்தாவது உன்னைப் படிக்க வைக்கிறேன் அப்பிடீங்குது. எனக்குன்னு ஒரு மனசு இருக்குதில்லே.  எனக்கு மனசு வரலே. அதுனாலே எங்க அம்மாவை நல்லபடியா வெச்சிக்க, நான் சம்பாரிக்கணும், என் குடும்பம் என்னாலே முன்னுக்கு வரணும், அதுக்காகத்தாங்க இந்த வேலைக்கு வந்தேன்.

    ஆனா இங்கே வேலைக்கு வந்தபெறகுதான் தெரியுது, எவ்ளோபேரு  படிக்க வழியில்லாமே எங்களை மாதிரி கஷ்டப்படறாங்கன்னு. நாங்கள்ளாம் குழந்தைங்க.  ஆனா விளையாடணும்னுகூடத் தோணலீங்க, பாடுபட்டு முன்னுக்கு வரணும்னு தோணுது. அது தப்பாங்க? ஆனா அதுக்குகூட வழியில்லையே ? காலம் காலமா  நாங்க இப்பிடி  கஷ்டப்பட்டுகிட்டேதான் இருக்கணுமா? எங்களோட எதிர்காலமே விணாகுதே நாங்க படிக்க முடியலையே. எங்களுக்கு விடிவுகாலமே இல்லையா ன்னு யோசிச்சேனுங்க, கோவம் கோவமா வருது.

    குழந்தைங்களை வேலைக்கு வெச்சுக்க கூடாதூன்னு சட்டம் மட்டும் போட்டுட்டா போதுமா சார்?  அந்தக் குழந்தைங்களோட வயித்துப் பசியையும்   அதுங்க எதிர்காலத்தையும் யாரு சார் பாக்கறாங்க? எங்களை மாதிரி சின்னப் பசங்களைப் படம்பிடிச்சு வருங்காலத் தூண்கள்னு போஸ்டர் அடிச்சு ஒட்றாங்க சார், ஓட்டு வாங்கறதுக்காக. 

    ஆனா என்னா சார் செய்யறாங்க எங்களுக்கு? எங்க அப்பனெல்லாம் குடிச்சு அழியறதுக்கு  நாட்டுலே நிறைய சாராயக் கடை திறக்கறாங்க, ஏன் சார் சாராயம் விக்காம நம்ம நாட்டை  முன்னுக்கு கொண்டு வரமுடியாதா  ?

    ஏன் சார் இந்த அரசியல்வாதிங்க  இப்பிடி செய்யறாங்க? அந்தக் கோவம்தான் சார். இவ்ளோ வெறுப்பை வெச்சுகிட்டு எப்பிடி சார் நான் சிரிக்க முடியும்? எப்பிடி கோவப்படாம இருக்க முடியும்? நான் எப்பிடிங்க வேலை செய்வேன்.” மூச்சு வாங்கியது குமரனுக்கு…..

    “தூங்க முடியலைங்க  பாடமெல்லாம் கனவா வருதுங்க திடுக்கிட்டு எழுந்துக்கறேன்.  மளிகைக் கடையிலே ஒவ்வொரு மூட்டையைப் பாக்கும்போதும்  ஒவ்வொரு பாடபுத்தகம் நினைவுக்கு வருதுங்க.

    எங்க வாழ்க்கை இப்பிடி சிதறிப் போனக் கடுகு மூட்டை மாதிரி ஆயிப்போச்சுங்க”, என்றபடியே குமுறிக் குமுறி  அழ ஆரம்பித்த குமரன் உணர்ச்சியின் வேகம் தாங்காமல் அப்படியே மயங்கினான்.

    காமாக்ஷி அவனை மடியில் கிடத்திக்கொண்டு  இதமாகத் தடவிக் கொடுத்துக்கொண்டிருந்தாள்.  கண்களைத் துடைத்துக்கொண்டு ஓடிப்போய்  ஒரு பாத்திரத்தில்  தண்ணீர் கொண்டு வந்தார் கிருஷ்ணன்.  அந்தத் தண்ணீரை வாங்கி குமரன் கண்களைத் துடைத்துவிட்டு கொஞ்சம் கொஞ்சமாக அவன் வாயில் ஊற்றினாள் காமாக்ஷி.

    உணர்வுக்கு வந்த குமரன் திடுக்கிட்டு எழுந்தான்.

    “அம்மா அய்யா என்னை மன்னிச்சிருங்க. ஒழுங்கா படிக்கக் கூட வக்கில்லாத  ஏழைங்க நானு என்னைப் போயி  உங்க மடியிலே. என்னை மன்னிச்சிருங்க, தெரியாம நான் உங்க மடியிலே படுத்துகிட்டேன், என்று நடுங்கினான் குமரன். அவனை இழுத்து அணைத்து மீண்டும் தன் மடியில் கிடத்திக்கொண்டு   அவன் முதுகை இதமாகத் தடவிக் கொடுத்தபடியே,  நானும் உங்க அம்மா மாதிரிதான் படுத்துக்கோப்பா என்றாள். அவள் கைகள் அவனை தடவிக் கொடுத்துக்கொண்டிருந்தன.

    எங்கும் இருப்பான் நாராயணன் என்று கூறிய ப்ரகலாதனின், தன் பக்தனின்,  வாக்கைக் காப்பாற்ற ஜகமெங்கும் நிறைந்து, அணுவைச் சதகூறிட்ட அணுவிலும் உளன் என்று ஆழ்வார்கள் பாடும்படியாக  சர்வ வியாபியாக நிறைந்து  தூணிலிருந்து வெளிப்போந்து நரசிம்மமாக வந்து ஹிரணியனின்  வயிற்றைக் கிழித்து குடலை மாலையாகப் போட்டுக்கொண்ட நாராயணன், அதன் பிறகு  ஹிரணியனுடைய மார்பில் கையை விட்டுத்  துழாவி அவனுடைய ஹிருதயத்தை தன்னுடைய கைகளால் தடவிக் கொடுத்தானாம்.

    ஏனென்றால் அவன் சொன்னதைக் கேட்டுக் காவல் புரிந்து,  அதன் காரணமாக முனிவரால் சபிக்கப்பட்டு ஹிரணியனாகப் பிறந்து உள்ளே பக்தி இருந்தாலும் பிறப்பின் காரணமாக நாத்திகன் போல் நடித்து, மகனைக் கொடுமைப்படுத்தி எல்லோரிடமும் கெட்ட பெயரெடுத்து, அசுரன் என்று ஏசப்பட்டு, ஹிரணியன் தன்னை அடைய  எவ்வளவு கொடுமைகளை அனுபவித்தான் என்று உணர்ந்து மனம் இரங்கி அவனுடைய ஹிருதயத்தை இதமாகத் தடவிக் கொடுத்த நாராயணனைப் போல என்று பௌராணிகர்  சொன்னது நினைவுக்கு வந்தது. 

    இந்தச் சின்னஞ்சிறு வயதில்  எவ்ளோ கஷ்டப்பட்டிருக்கிறான்  குழந்தை,  என்றுணர்ந்து இதமாக தடவிக் கொடுத்துக்கொண்டிருந்தாள்  காமாக்ஷி . இந்தக் குழந்தைகளைக் கூட முறையாகக் காப்பாற்றாமல் இருக்கும் ஹிரண்யர்களை சம்ஹாரம் செய்ய எப்போது நாராயணுனுக்கு மனம் வருமோ என்ற எண்ணம் வந்தது காமாக்ஷிக்கு.

    சுதாரித்துக்கொண்டு எழுந்த குமரன், “அம்மா நான் போன ஜென்மத்திலே செஞ்ச புண்ணியம் உங்களை மாதிரி இன்னொரு அம்மா அப்பா கிடைச்சது.  ஐயா  உங்ககிட்டகூட மரியாதை இல்லாம நடந்துகிட்டேன். என்னை மன்னிச்சிடுங்க. நான் கிளம்பறேன் எப்பிடியாவது கஷ்டப்பட்டு முன்னுக்கு வருவேன் சார்  ஆனா உங்க ரெண்டு பேரையும் மறக்க மாட்டேன்.  நான் வரேன்”, என்று கிளம்பினான்.

    “கொஞ்சம் நில்லுப்பா.   நீ படிக்கறதுக்கு நான் உதவறேன், நல்லா படிச்சு முன்னுக்கு வருவியா ?” என்றார். கிருஷ்ணன். “சத்தியமா படிச்சு முன்னுக்கு வருவேனுங்க   இது எங்க அம்மா மேலே  சத்தியம்” என்றான் குமரன்.

    அத்தனையும் மனக்கண்ணில் படமாக ஓடியது  கிருஷ்ணனுக்கு.

    “ஐயா குப்பையை தூக்கி உங்க மேலே நான் போட்டேன், ஆனா நீங்க என்னைக் கோபுரத்தில் ஏத்தி வெக்கறீங்க. எத்தனை பிறவி எடுத்தாலும் உங்களுக்கு நன்றிக் கடன் பட்டிருக்கேன் நானு.”, என்ற குமரன் நெடுஞ்சாண்கிடையாக காலில் விழுந்தான் .  

    சுதாரித்துக்கொண்டு  “குமரா நீ ஆளே அடையாளம் தெரியாத அளவுக்கு வளந்துட்ட”, என்றவர் அவனைத் அணைத்துக்கொண்டு, “உன்னைய மாதிரி பசங்க இந்த நாட்டுக்கே வழிகாட்டிப்பா. உங்க அம்மா நல்லா இருக்காங்களா என்றார். கூச்சப்பட்டுக்கிட்டு   வெளியிலே நிக்கறாங்க சார்” என்றான் குமரன். 

    “அப்பா எங்கே இருக்காரு ?”  என்றார் கிருஷ்ணன்.

    “அப்பா இல்லீங்க  அவரு குடல் வெந்து  எங்களையெல்லாம் தவிக்க விட்டுட்டு  இறந்து போயிட்டாரு” என்றான் குமரன்.

    “வருத்தமா இருக்குப்பா  ஆனா எங்களை மாதிரி இருக்கறவங்க வருத்தப் படறதைத் தவிற வேறொண்ணும் செய்ய முடியலை.”

    “நீங்க உள்ளே வாங்கம்மா. பிள்ளையைப் படிக்கவைக்கணும்னு நெனைக்கிற உங்களை மாதிரி  அம்மாக்கள்தான்  இந்த நாட்டுக்கு தேவை. நீங்க இந்த மாதிரி பிள்ளையைப் பெத்ததுக்கு  தலைநிமிர்ந்து நடக்கணும். நீங்க கூச்சப்படக் கூடாது.

    இந்த நாட்டிலே  சுதந்திரம் வாங்கி 65 வருஷம் ஆகியும் உங்க நெலைமைய இதே மாதிரி வெச்சிட்டிருக்கோமே.  நாங்கதான் கூச்சப்படணும். கூவத்தையெல்லாம் கங்கையாக்கணும்னு நெனைக்காம கங்கையையுயும் கூவமாக்கிட்டு இருக்கோமே நாங்கதான் கூச்சப்படணும்”  என்றார் கிருஷ்ணன்.

    குமரனின் அம்மா கையைக் கூப்பிக்கொண்டு, “நீங்களும் அம்மாவும் நல்லா இருக்கணுங்க”  என்றாள் கண்ணில் நீருடன்.  

    எல்லாப் பெண்மணிகளிலும் உள்ளே அம்மா இருக்கிறாள். தாய்மை ப்ரபஞ்சத்தின் மூலைமுடுக்குகளில் கூட சர்வ வியாபியாய் இருக்கிறது என்று எண்ணம் ஓடியது கிருஷ்ணனுக்கு அவருடைய அம்மாவே அவரை  ஆசீர்வதித்தது போல் ஒரு உணர்வு வந்தது.  கிருஷ்ணனும் கையைக் கூப்பினார் தன் அம்மாவை நினைத்துக்கொண்டு.

                             சுபம்

    Share
  • நோ-பால் – No Ball

    மணி ராமலிங்கம்

     

    டிசம்பர் 27ந் தேதி. அந்த மேட்சில்தான் அம்பயர் – ரமணி சரியாக மாட்டிக்கொண்டு மைதானத்திலிருந்து வெளியேற்றப்பட்டான்.

    ரயில்வே அணிக்கு எதிரான மேட்சு அது.

    ஆறு அணிகள் விளையாடும் டோரணமெண்டில், இந்த மேட்சில் ஜெயித்தால் தான் அடுத்த கட்டம். எடுக்க வேண்டியது சொற்ப ரன்கள் என்றாலும் விக்கெட்டுகள் சரிந்தது பயத்தை ஏற்படுத்தியது. குமார் அன்று பந்தால் துவம்சம் செய்து கொண்டிருந்தான்.

    இருக்கிற ஓரே நல்ல விக்கெட் சீனிவாசன் அண்ணா. அவர் நின்று விளையாட வேண்டும். போன ஓவரில் ரன்னராய் வந்த போது கிளவுசை கழட்டினார் அண்ணா. நிறைய வேர்த்திருந்தது. கொஞ்சம் கை நடுக்கமாய் இருந்தது. பயந்திருக்கிறார்.

    பக்கத்து ரன்னரோடு பேசுவது போல சொன்னார் .. “ அடுத்த ஓவர் அவனுக்கு கடைசி பாத்துக்கடே.. நா வெளிய வந்து எல்லாத்தையும் கால்ல தான் வாஙக போறேன்.. நோ பால்ன்னு அழுத்திடுடே. “  ரமணிக்கு  மட்டும் கேட்குமாறு சொல்லிப் போனார்.

    அவுட்டானவுடன் நோபால் கொடுப்பது அம்பயரின் பொறுப்பு. நல்ல பாலை நோபாலாக காட்ட வேண்டும். நோபால் – பேட்ஸீமேனுக்கு புனர்ஜென்மம். இரண்டாம் வாய்ப்பு. அநுபவங்கள் மிகுந்த இரண்டாம் வாய்ப்பு. அடுத்த வாழ்க்கை.

    எதிர்முனையில் சுழலும் காலச்சக்கரம். உடலின் ஓவ்வொரு செல்லும், படிப்பினை கற்று கொண்டு விட்ட பின்பு, வரும் வாரணம் ஆயிரம் பலம்.  நோபால் அவுட்டில் தப்பிக்கிற பேட்ஸ்மேன், வாதம் வந்து பிழைத்த வயோதிகன் போல. அவ்வளவு எளிதாய் அடுத்த முறை சாவதில்லை. இறப்பை கடந்து வந்த முனிவன் மனநிலை.

    முதல் இரண்டு பந்துகள் குமார் வெளியே ஸ்விங் செய்தான். சீனிவாசன் அண்ணா, அதை அப்படியே விட, மூன்றாவது பந்து மிகச் சரியாக உள்ளே திரும்பி வந்த போது அண்ணா அதை சமாளிக்க பிட்சில் இறங்கினான். பந்து கால்வழியாய் நுழைந்து குச்சியை கழட்டியது. அண்ணா இறங்கிய கணமே ரமணிக்குத் தெரிந்தது விக்கெட் வீழப்போகிறதென்று.

    பந்து கால்வழியே நுழைந்த அந்த கணத்தில் கத்தினான்.

    “ நோ-பால் “

    கத்தினதெல்லாம் சரிதான். அந்த பதட்ட்த்தில் ’பொய்த்தடம்’ வைக்க மறந்ததுதான் துரதிர்ஸ்டம்.

    மைதானத்தின் ஓரத்தில் பசியோடு காத்திருந்த சண்டை யட்சி காற்றாய் உள்ளே வந்தது. ரமணிக்கு தன் தவறு புரிந்தது.

    “ யே உளத்துறாண்டா.. “ என்று கத்திய வார்த்தைக்கு பின்னான எதுவும் ரமணிக்கு செவி தாண்டவில்லை. அந்த காட்சிகள் வார்த்தையற்ற பிம்பமாய் கண் முன்னே ஓடிக்கொண்டிருந்தது. அடிவயிற்றில் எதுவோ சுரந்து சுரணையைத் தின்று கொண்டிருந்தது. ஒரு சிலந்தி உடம்பெல்லாம் தவழ்ந்து தனது பிரஞ்ஞையை உறிஞ்சிக்கொண்டிருந்தது போல தோன்றிற்று. தொண்டை கமிறி வரும் கண்ணீரை உள்ளே அனுப்ப வேண்டியிருந்தது. இருந்த இடத்திலே நின்று கொண்டு திரும்ப திரும்ப சொல்லிக் கொண்டிருந்தான்.

    “நோ- பால்னா, நோ-பால்தான், சொல்லியாச்சுல்ல.. நோ-பால் தான்.. காட்டெல்லாம் முடியாது.. ஒன்ஸ் டோல்டு நோ-பால்.. தட் இஸ்.. நோ-பால்.. நா பாத்தது.. நான் சொன்னது.. சொன்னது தான்.“ அவன் சொல், மனம், சில இந்திரியங்கள் அவன் முழுக்கட்டுப்பாட்டிலில்லை.

    செந்தில் உள்ளே குதித்து ஓடிவருவது சந்தோசமாய் இருந்தது. சண்டை ஒரு பத்து நிமிடங்கள் நீடித்தது. ரமணி அம்பயராக நிற்க கூடாது என்று சொல்லி வெளியேற்றி விடப்பட்டு அச்சுவை உள்ளே வர இருதரப்பினரும் சம்மதித்தனர்.

    மைதானத்திலிருந்து விளிம்பு வரை நடந்து வந்த போது, உலகத்தின் எந்த சத்தங்களும் மொன்னையாக்கப்பட்டு பெரிய அமைதி நிலவியது. வெளி மட்டுமல்ல, உள்ளுக்குள்ளும் அந்த மாபெரும் அமைதி சத்தம்.

    நோபால் – பிழைத்தலுக்கு பின், அதிகமான அநுபவத்தோடும், காற்றில்லாதவிட்த்தில் வைக்கப்பட்ட தீபம் போலவும் மனம் குவிய நம்பிக்கையோடு வருவதை எதிர்கொள்வது ஆயிரம் யானை பலம். நிகழ்கால அநுபவச் செறிவோடு இறந்தகால நிகழ்வுகளை எதிர்கொள்ளுதல், ஆபிஸில் வேலை பார்ப்பவனுக்கு ஐந்தாம் வகுப்பு தேர்வு போல்தானே.

    சீனி அண்ணாவுக்கு இரண்டாவது வாழ்க்கை. வாரண பலத்தோடு விளையாடினான். சீனி அண்ணா தனி ஆளாய் நின்று விளையாடி அந்த மேட்சு ஜெயித்தான்.

    இருட்டிய பின் வெளிச்சமற்ற அந்த தெருவில் வெற்றிவிழா. ஆட்டுக்கால் சூப்பு குடித்து அணி வெற்றியை கொண்டாடியது. ரமணிக்கு தனியாய் தனது ஈரமற்ற வெதுவெதுப்பான கைகோர்த்து அணைத்து நன்றி சொன்னான் சீனி அண்ணா.

    “ஸ்டார்டிங் ட்ரபிள்மா.. கொஞசம் பதட்டமா இருந்த டயத்தில காப்பாத்தினம்மா.. அந்த நோபால் மட்டும் இல்லைன்னா நம்ம கவிந்துருப்போம். தேங்க்ஸ்ம்மா. ”

    ரமணி அதற்குப் பின் அம்பயரிங்கிற்கும், மறைந்து குடிக்கும் ஆட்டுக்கால் சூப்பிற்கும் போவதேயில்லை. பொய்த்தடம் அவனிடமிருந்து குமாரின் கால்வழியே நுழைந்து கழன்ற குச்சி போல விழுந்து விட்டது.

    *

    அம்பயரிங் காலத்திற்கு முன்பான காலத்தில்,  சண்டையில்லாமல் முடியாத திருநெல்வேலி கல்யாணம் போல, மேட்சில் ஒரு சண்டையாவது  இருக்கும். தெருக் கிரிக்கெட்டுகள் கூட சண்டையோடுதான் நடந்திருக்கின்றன. அல்லது முடிந்திருக்கின்றன. சண்டைகள் அவசியம். கொஞ்சம் கிரிக்கெட். நிறைய சண்டை.

    பின்பு சண்டைகள் குறைய, பெரிய மேட்சுகளில் பேட்டிங் டீமிலிருந்து ஒரு அம்பயர் என்ற வழக்கம். அந்த நபர் எதிர் டீமால் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும். சில நபர்களை அம்பயராக்குவதற்கு எந்த டீமும் ஓத்துக் கொள்ளாது.

    அப்படிப்பட்ட ஒரு நபர்தான் எங்கள் அணியின் செந்தில்.

    கிரிக்கெட் ஒரு ஜெண்டில்மேன் கேம் என்பதில் கொஞ்சம் கூட நம்பிக்கையில்லாதவன் செந்தில். எங்களூர் ரயில்வே கிரவுண்டு, மேட்டுப்பாளையம் கிரவுண்டு, எம்ஸ்பி திடல், மேலத்தெரு, வடக்கு மற்றும் தேர்த்தெரு, மொட்டை மாடி, பாப்பாத்தி மைதானம், ஆகியவற்றில் – விளையாடப்படும் கிரிக்கெட் ஜெண்டில்மேன் கேமாக இருக்க முடியாது என்று ஆழமாக எண்ணுபவன். கால்பந்தோ, பம்பரமோ, நொண்டிசிங்கியோ எதுவும் அவன் விளையாடாத வரைக்கும் அது ஜெண்டில்மேன் கேமாகா இருப்பதில் அவனுக்கு எந்தப் பிரச்சனையுமில்லை.

    அம்பயர் பதவியின் பலத்தை அவன் உணர்ந்திருந்தான். உணரவைத்தான். அவனால் எத்தனையோ மேட்சுகளில் எங்களுக்கு ஜெயம்.

    கொட்டை, கொட்டையாய் நடுக்குச்சி கழன்று விழும் எத்தனையோ பந்துகளை கூட அவன் நோபால் கொடுத்திருக்கிறான். எப்போதும் இந்த அழுகூணித்தனம் தேவையில்லை. சில பந்துவீச்சாளர்களிடமிருந்து, சில முக்கியமான விக்கெட்டுகளை மட்டும் காப்பாற்றிவிட்டால் போதும், ஆட்ட்த்தின் போக்கு மாறிவிடும்.

    இடம், பொருள், ஏவல் அறிந்து தனது அம்பயர் அட்டூழியங்களை, சாம, தான பேதமின்றி, தண்டத்தோடு செய்து எங்களது வெற்றிக்கு அருள்பாலித்தான்.

    அவனது கருத்த திருமேனியையும், வாயில் வரும் வண்டை வண்டையான திருவாய் மொழியையும் நம்பியே நாங்கள் நிறைய மேட்சில் ஜெயித்திருக்கிறோம். சில பெட்டிங் மேட்சிலும் பணம் சம்பாதித்திருக்கிறோம். ஆட்டுக்கால் சூப்பு, முட்டை போண்டா, சைவர்களுக்கு மசாலா தோசா, ஒரு படம் என மிக அதிகமான சம்பாத்தியத்தை எங்களுக்கு கொடுத்திருக்கிறது.

    அவனது முடிவை எதிர்த்து கேட்க வருபவர்களிடம் ஒரு கட்டத்திற்கு மேல் செந்தில் சட்டை அவிழ்த்து விட்டான் என்றால் அவ்வளவுதான், எதிர்த்த டீம் நேச நாடுகளுக்கு தூது அனுப்பி தங்களை பாதுகாத்து கொள்ள வேண்டி வரும். அதற்கு மேலும் அதிகமாக பேசுபவர்களை நோக்கி கத்தியபடியே முதலில் ரன்னர் ஸ்டெம்பை பிடுங்குபவன் அவனாகத்தானிருக்கும். அவன் அழிச்சாட்டியத்திற்கு மெல்ல மெல்ல எதிர்ப்பு கிளம்பியது. அவனது அழுகுணி அம்பயரிங்கிற்கு எதிராக மெல்ல புகை கிளம்பியது. நிறைய புகார்கள் வந்தன.

    மற்றவர்களை விட எங்கள் டீமே அவனை கண்டு பயப்பட ஆரம்பித்தது. அவனுக்கு எதிராக சில சமயம் நியாயம் சொல்லி எங்கள் அணியிலேயே நிறைய பேர் மூக்குடைப்பட்டார்கள். விரிவாக சொன்னால், இரண்டு பேருக்கு மூக்கும், ஒருவனுக்கு முதுகில் கீறலும், கபீருக்கு நகமும் பெயர்ந்தது, கொஞ்ச பேருக்கு பரம்பரை திட்டும் விழுந்தது.

    யாராயிருந்தாலும் தன்னைப் பற்றி பேசியவர்களை செந்தில் மைதானத்திற்குள்ளாகவோ, வெளியிலோ – நேரடியாகவோ, மறைமுகமாகவோ தாக்கிக் கொண்டேயிருந்தான்.

    இலட்சுமணன் மைதானத்தில் விளையாடும் போதும் முதல் ஸ்லிப்பிங்கில் நின்றபடி செந்தில் சொன்னது.  ’வெங்காயம் வாடையடிக்குதேடே.. வெங்காய சோப்பு போட்டு குளிப்பாங்களாடா..  வெங்காய நாற வாயோட குத்தம் வேற சொல்லறாங்கப்பா..’ –  இலட்சுமணன் அப்பா வெங்காய தரகு மண்டி வச்சிருந்தார். மறைமுகம்.

    ’என்னடே.. நீ பேர்ல மட்டும் குஞ்சா மணி இல்லடே.. பேருக்கு ஏத்த மாதிரி டாண்டான்னு வத்தி வைக்கேல்ல.. ஊரெல்லாம் போயி செந்தில் கள்ளன்னு மணியடிச்சிட்டு வந்திருக்கியேடே.. சரியான குஞசா மணிதாண்டே.. இன்னும் நிறைய ஆட்டுடே..’ – நேர்முகம். செந்திலுக்கு எதிராக எல்லா அணியிடமும் ஆதரவு திரட்டிக் கொண்டிருந்த குஞ்சா மணி டென்சானாகி அந்த மேட்சில் பதினாலு வொயிடு பால்கள் போட்டான்.

    ‘அறுத்த பயல்கிட்ட என்னடே பேச்சு’ என்று அழூகுணி அம்பயரிங்கின் போது வார்த்தை சொல்லிவிட கிட்டதட்ட மேலைத்தெரு முழுவதும் குவிந்து செந்திலை கும்மத் தயாராகின. மேலைத்தெரு பெரும்பாலும் இஸ்லாமிய நண்பர்கள். எப்படியோ எதோ சொல்லி ச்மாதானமாகி வெளிவந்தாலும் செந்தில் மன்னிப்பு கேட்கவேயில்லை. ’அறுத்த பயன்னு சொன்ன என்னடே தப்பு’ன்னு சண்டையின்போதே ஒரு இருபது தடவை சொல்லிவிட்டான்.

    நிறைய முறை சொல்லிவிட்ட்தாலோ என்னவோ ஒரு கட்ட்த்திற்கு மேல், அவர்களது காதிற்கு அது பழகிப் போய்விட்ட்து. வார்த்தை அதன் அர்த்தம் அறுந்து போய் உருகிப் போயிற்று. ரொம்ப நாளைக்கு அது ’அறுத்த பயக’ டீமாகத்தானிருந்த்து.

    இவ்வாறான நிறைய திருவிளையாடல்களுக்கு பிறகு, எங்களது அணியோடு எந்த அணியும், செந்தில் நடுவராயிருந்தால் விளையாடமாட்டோம் என்று சொல்லுமளவிற்கு வந்தது. எப்படியோ செந்திலை சமாதானம் செய்து அம்பயரிங்கிலிருந்து வெளியேற்றுவதற்குள் நாக்கு வெளியே வந்துவிட்ட்து.

    சதா கொந்தளிப்பும், துடிப்பும் அதனடியில் ஓடும் ஒரு பதைபதைப்புமாய் அவன் உலவிக்கொண்டிருந்தது ஏதோ ஒரு மெகா கூண்டுக்குள் சுடப்பட்ட காயத்தோடு திரியும் கழுகு போலிருந்தது.

    *

    அப்படிப்பட்ட செந்திலின் காலியிடத்தை அச்சு பூர்த்தி செய்ததை இயற்கையின் வரப்பிரசாதமாகத்தான் எங்களின் கிரிக்கெட் புலம் நோக்கியது. மைக்கேல் சார் கொடுத்த வெங்கட்ராகவன் தொப்பியா, சரியாக வராத பேட்டிங்கா, போட்டியற்ற ஒரு நாற்காலியில் தான் பிணைந்ததால் வந்த அதிசயமா.. எதுவோ ஓன்று அவனை ஒரு சுயம்புவான அம்பயராய் பிரகாசிக்க செய்தது.

    அம்பயர் என்பது அற வெளிப்பாடு. எப்போதும் நம்மை பார்க்க்கும் நீதி தேவதை போல. கண்ணைக் கட்டிக்கொண்டு தராசு சுமக்கும் தேவதைக்கும் அம்பயருக்கும் அதிக வித்தியாசமில்லை. ’என்னா சொன்னாலும் பெரிசு ஓழுங்காத்தான் சொல்லும்’ என்று நடந்து போகும் ஒரு பெரியவரின் வெளியை ஊர் எப்படி பார்க்கிறதோ அப்படியானது தான் அம்பயரிங்க். – அச்சு அப்படித்தான் இருந்தான்.

    அச்சுவிடம் ஏதோ எழுத்தில் சொல்ல முடியாத அறம் இருந்தது போல. ஒரு சில நாட்களுக்குப்பின் அவன் தனக்கு இடப்பட்ட கட்டளையாய் அம்பயரிங்கை அரவணைத்துக் கொண்டான். ஏதாவது ஒரு தேவதையோ, யட்சியோ அவன் கனவில் வந்து காதில் சொல்லிவிட்டு போயிருக்கலாம். ‘ நீ அம்பயராக கடவது என்று ‘

    சோதனை, விரிந்த கண், களத்திலிருந்தாலும் விழிப்புடன் இருத்தல், முடிவுகள் தன்னை தொடாத தூரத்தில் செயல், பிரபஞ்ச ஓழுங்கு. அவனே மைதானத்தின், பிரபஞ்சத்தின் மையம். அவனே ஆக்கமும் அழித்தலும்

    அச்சு அவன் ஊரிலிருந்த இறுதி கால கட்டங்களில் ரொம்ப பிசியான அம்பயராகியிருந்தான். எப்போதும் ஹிண்டு பேப்பர் மற்றும் விளையாட்டு பத்திரிக்கைகளின் சில கட்டுரைகளோடு திரிந்தான். சில மேட்சுகளுக்கு முன்னால் இரண்டு டீமையும் கூப்பிட்டு புது ரூல் சொல்லி க்ளாஸ் எடுக்கும் அளவுக்கு அவனது மரியாதை வளர்ந்திருந்தது.

    விடுமுறைக்கு சென்னைக்கு போகும்போதெல்லாம் சேப்பாக்கம் வளாகத்தை பார்த்த கதையை ஓவ்வொரு டீமுக்கும் சொல்லிவருவான். ஸ்கோர் கார்டு புதுமாதிரி என்ன வந்திருக்கிறது என்பதை அவன் தான் எங்களுக்கு எல்லாம் அறிமுகப்படுத்திக் கொண்டிருந்தான்.

    யானை, கடல், ரயில், கல்யாண மாமாவின் கர்ண மோட்சம் போல, அச்சுவின் கிரிக்கெட் கதையும் அலுப்பூட்டாதது. அடிவயிற்றில் அட்ரீனல் சுரக்க வைப்பது. எப்போதும் மனத்துள்ளல் அளிப்பது.  

    *

    அம்பயர் அச்சு அந்த ஊரிலிருந்து மாற்றாலாகி போனது எங்களூர் கிரிக்கெட் புலத்திற்கு ஈடுகட்ட் முடியாத இழப்பு.

    அச்சு போன சில தினங்களுக்கு – கூட்டணி காலத்தில் இடைப்பட்ட பிரதமர்கள் போல கொஞ்ச நாள் அம்பயரிங் செய்தார் நாராயணன். டீம் பெரிசுகள் அண்ணா என்றும், சிறுசுகள் மாம என்றும் அவரை அழைத்தனர்.  அது அவருக்கு முற்பெயர், அதாவது முன்னே சொல்வது, பிற்பெயர் [ பின்னால் சொல்வது]  ’தொடை சொறிஞ்சி  நானா ‘

    ’தொடை சொறிஞ்சி நாராயணன்’ பதவிக்காலம் அவ்வளவு பெரியதாக இல்லை. காதில் மர்பி ட்ரான்ஸ்பார்மரொடு திரியும் நாராயணன், எங்களூர் திவ்ய செளந்திர்ராச பெருமாள் போல அலங்காரமும்,  திரிநேகஸ்வர சிவன்போல தனிவாழ்க்கையும் வாழ்பவர்.

    தெருக்கடைசி திண்ணையில் உட்கார்ந்து வயதான கிழங்களோடு அவர்கள் கூட்ட்த்தில் இளைய பெருமாளாய் வீட்டிருந்து கிரிக்கெட் கேட்பதே (கிரிக்கெட் இல்லாத காலத்தில் ரேடியோ) நாராயணன் நம்பியின் முழுநேர வேலை.

    அரசு ஓய்வுபெற்ற அம்மா, அப்பா. ஊட்டி வளர்த்த பிள்ளைக்கு எப்போதும் ஓய்வு. உட்கார்ந்து திங்க வீடு, இலையில் நிரம்ப விழுமளவிற்கு ஒத்திகை நிலம்.

    வேலைக்கு போவது எவ்வளவு பெரிய பாபம், அதுவும் ஊர் தாண்டி வேலைக்கு போக்க் கூடாதென்று நிறைய சாஸ்திரங்களே சொல்லியிருக்கும்போது அதை உதாசீனப்படுத்துவது ஊருக்கே நல்லதல்ல என்கிற தத்துவத்தை சிரமேற்கொண்டு தன் கால அட்டவணையை தயார்படுத்திக் கொண்டவர்.

    திருப்பள்ளி எழுச்சி, காலைக்கடன்கள் ( நேரமிருந்தால் மட்டும்), காலைச்சாப்பாடு, திண்ணையடைதல், மதியச்சாப்பாடு, திண்ணையடைதல், அங்கயே பொன்னாமாமி கேண்டினிலிருந்து வரும் பஞ்சி மற்றும் சுக்கு காபி, சாயரட்சை கோவில் தரிசனம் (மாமிகளிடம் பேச்சு, குறை தீர்க்கும் படலம்) வீட்டைதல், இரவுச்சாப்பாடு, ரேடியோ கேட்டபடி தூங்கல், வாரமிரு முறை எண்ணெய் தேய்த்து குளித்தல், அதற்கு முன் துரிய ஸ்கலிதம், மாதமிரு முறை சினிமா, எப்போதும் ரேடியோ, அவ்வப்போது ஹிண்டு பேப்பர், எப்போதும் பேசத்தயாராயிருக்கும் கிரிக்கெட்.

    நேரத்தை கொல்வது எவ்வளவு பெரிய வேலை. அதை மிக இலகுவாய், எளிதாய் செய்து கொண்டிருந்த நாராயணன் நம்பியின் அம்ப்யர் காலம் – எங்களூர் கிரிக்கெட்டின் ஒரு கற்காலமாய் போனது துரதிருஸ்டம்தான்.

    தூக்கிக்கட்டிய கைலியோடு, தொடை சொறிஞ்சுகொண்டே நாராயணன் நம்பி செய்யும் அம்பயரிங் ஏன் பிரபலமாகவில்லை என்பது ஆராய்ச்சிக்குரிய விடயம். அவரால் ஒரு முழு மேட்சுக்கு நிற்க முடியாது. அவர் திடீரென்று கிளம்பி விட்டால் இன்னொரு அம்பயர் அமையும் வரை மேட்சு நிற்க வேண்டும். அவரால் பேசாமலும் நிற்க முடியாது.

    ரேடியோ கேட்டு கமெண்ட்ரி சொல்வது போல அவரே பேசிக்கொண்டிருப்பார்.

    அவர் அம்பயரிங் செய்த்தை விட வர்ணனையாளராகவே வாழ்ந்தார். ரேடியோ போல ஏதோ குரல் அவருக்கு கேட்டுக்கொண்டேயிருக்க வேண்டும். இல்லை அவர் பேசிக்கொண்டேயிருக்க வேண்டும். மேட்சு முழுக்க குத்தல் பேச்சு, கமெண்ட்ரி என்று பேசிக்கொண்டேயிருப்பார் நானா.

    ’ஏ சரவணா இந்த ஸ்பீடு போடறதுக்கு ஏண்டா இவ்வளவு தூரம் ஓடி வர்ற.. என் பின்னாடி நின்னே போடேண்டா.. இன்னிக்கு ஆத்தில பொங்கலா.. தூங்கி வழியறயேடா.. ஒரு ஜமக்காளம் போடவா.. ‘

    ‘ ஏலே ரமணி மட்டை போடலாம்.. கட்டை போடலாம்.. டீமுக்கு மொட்டை போடதலா..’

    ‘ கிரிக்கெட் ஆடச் சொன்னா டேன்ஸ் ஆடறயேடா..’ 

    அழகான ஓவல் வடிவத்தில் குவிந்து நல்ல கட்டாந்தரையும், சிலயிடங்களில் உட்கார்ந்து மக்கள் பார்க்கும் வசதியும் கொண்ட ரயில்வே மைதானத்தை லாட்ர்ஸ் மைதானம் என்பார். பச்சை பசேலென தென்னை மரங்களோடு கூடி எப்போதும் காற்று வீசிக் கொண்டிருக்கும் எம்ஸ்பி திடலை சிட்னி மைதானம் என்பார். தொலைக்காட்சிகளில் இப்போதெல்லாம் அதைப் பார்க்கும்போதே நாராயணன் நம்பியின் பெயர் பொருத்தம் மெய்சிலிரிக்க வைக்கிறது.

    சின்ன பசங்களை கண்டால் அவர் பேசும் மொழியே வித்தியாசமடைந்து விடும். பச்சை, பச்சையாய் பேசுவது. ரன்னருக்கு நிற்கிற பையன்களின் அக்கா, தங்கை, அம்மாக்களின் குசலம் விசாரிப்பது, வெள்ளையாய் கொழுக் மொழுக்கென்று நிற்கிற எல்லா பையன்களையும், அளவுக்கதிகமாய் அரவணைத்து ஊக்குவிப்பது போன்ற செயல்களால் ரன்னர்கள் அம்பயரை தாண்டி பாதுகாப்பான தூரத்திலே நிற்க வேண்டியிருந்த்து.

    எல்லாவற்றிற்கும் உச்சமாய் வில்லியம் விளையாட்டாய் கேட்ட கேள்வி வினையாய் முடிந்தது.

    “ஏந் அண்ணாத்த, இப்படி சாரம் போட்டு அவஸ்தைப்படறதுக்கு ஒரு பேண்டு மாட்டலாம்ல.. “

    “ ஆமாண்டே.. பேண்டுக்கு பதிலா ஒரு ஃபாதர் (பாதிரியார்) அங்கி வாங்கி கொடுத்திடுடே.. வாங்கி மாட்டிகிட்டா ஊரு உலகத்துக்கு தெரியுமா, அங்கிகுள்ள கைவிட்டு நோண்டிக்கலாம் பாரு.. இப்படி லோகமே பாக்கற மாதிரி தொடை தடவ வேண்டாம்ல.. “

    ஏற்கனவே தோற்றுப் போகும் நிலையிலிருந்த மேட்டுப்பட்டி அன்பர்கள், இதை சாக்காய் வைத்து துள்ளிக் குதித்து கெட்ட வார்த்தைகள் சொல்லி நானாவின் பரம்பரையையே நாறடித்துவிட்டார்கள். நானாவின் தகப்பனார் விடும் தில தர்ப்பணத்தில் மூன்று தலைமுறைகளும் மூக்கை பிடித்திருக்கும்.

    ”ஏல. நானா.. தா??. “ என்று ஆரம்பிக்கும் அந்த ஸகஸ்ரநாம அர்ச்சனையோடு தொடை சொறிஞ்சு நானாவின் உன்னதமான அம்பயரிங் வாழ்க்கை முடிவுக்கு வந்தது.

    *

    எல்லோராலும் நிராகரிக்கப்பட்ட செந்தில், எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட அச்சு, துரத்தப்பட்ட நானாவிற்கு பின்பு ரமணிக்கு அந்த மூட்கீரிடம் வந்த்து. ஸ்பின்னிற்கு பதிலாக வெயிடாகவும், இரண்டு ரன்களை கப்பையின் வழியே நாலாகவும் மாற்றிக்கொண்டிருந்த ரமணிக்கு அந்த பொறுப்பை கொடுத்து, ஊக்கம் கொடுத்து அவன் பின்னால் செயல்பட்டான் செந்தில்.

    கழுகின் முகமாய் கோழி களத்தில்.

    ரமணிக்கு செந்தில் நிறைய டிப்ஸீகளை சொல்லிக் கொடுத்தான். அம்பயரின் முக்கியமான வேலை –  நல்ல பாலை நோபாலாக்குவது. செந்தில் ரமணிக்கு அதில் குரு தீட்சை அளித்தான்.

    ரயில்வே டீமில் குமார், ரமணன் பந்துகள் அதி பயங்கரமாய் சுழலும். அதை இறங்கி ஆடாவிட்டால் ரொம்ப ஆபத்து. இறங்கி ஆடினாலும் ஸ்டெம்பிங்கோ, எல்பிக்கோ கண்டிப்பான வாய்ப்புகள் உண்டு. மிக கவனமாய் ஆன் – டிரைவ் செய்ய வேண்டிய பந்துகள் அவை. அவன் பந்தின் வேகத்தையும், உயரத்தையும் மாற்றி மாற்றி போடுவான். பில்டர்களையும் லாவாகமாய் நிற்க வைத்து பேட்ஸ்மேன்களை பயமுறுத்தி விடுவான். புதுசாய் வந்த பேட்ஸ்மேன் ஒரு சில பந்துகளை தாக்கு பிடித்தபின்பு தான் ஓரளவு நிம்மதி பெருமூச்சு விடமுடியும்.

    மேலத்தெரு மஜீத்தின் பந்துகள் வெளியே போவது மாதிரி தலை காட்டிவிட்டு, டுபுக்கென பின் காலால் பாயும் நாய் போல ஸ்டெம்பை நோக்கி திரும்பும். கடைசி நிமிட்த்தில் வேகமாய் திரும்பும் பந்துகளை பதட்ட்த்தோடு தொடும் பேட்ஸ்மேனின் ஆயுட்காலம் அங்கே நிற்கிற அப்துலால் முடித்து வைக்கப்படும். விழுந்து, விழுந்து எப்படியாவது கேட்ச் பிடித்து விடுகிற அவனை திட்டுக்கொண்டே வரும் பேட்ஸ்மேன்கள் சொல்வது .. “ சரியான ரப்பர் தா..டே.. அம்மை இவனை குரங்குக்கு பெத்தாளொ.. “

    மேட்டுப்பட்டி கிற்ஸ்டோபரின் புல்டாஸ் பந்தை,  காற்றிலே சுழற்றி வீசப்படும் பந்தை, விக்கெட் கீப்பர் கைக்கு போகும் என்று நினைத்து பேட்ஸ்மேன் அதற்கு ஸ்டைலாய் வழிவிடும் போது, அது ஸ்டெம்பின் பைல்ஸை  கழற்றும். அந்த ஒரு நல்ல ப்ந்துக்காக அவன் நிறைய வொயிட் பால்கள் போடுவான். எந்த பந்து குச்சியை கழற்றும் என தெரியாது.

    இப்படியான நல்ல, அபாயமான பந்தின் தருணங்களில் ’நோ-பால் என்று கத்தியபடி ஒரு தட்த்தை காட்ட வேண்டும். அந்த தட்த்தை அவன் கேட்கும் முன்னரே யாருக்கும் தெரியாமலோ அல்லது அவன் கேட்கும் போது போட்டுக்காட்டியோ உருவாக்கிவிட வேண்டும். சொன்னதை எதாவது சொல்லி சாதித்துவிட வேண்டும். இடம், பொருள், ஏவல் முக்கியம். அந்த ’பொய்த்தடம்’ பற்றி கேள்விகள் சூழ எதிரிகள் வந்தால் உள்ளே குதிப்பான் செந்தில், சூர சம்காரத்திற்காக.

    ரமணியின் பொய்த்தடம் அந்த டிசம்பர் 7ம் தேதி மேட்சில் கழன்று விழுந்தது. அணிக்கு வெற்றிதான். அழிச்சாட்டியம் பண்ணி சாதித்த்திற்கு அணி நண்பர்கள் எல்லோரும் பாராட்ட்த்தான் செய்தார்கள். மதிப்பு கூட்த்தான் செய்த்து.

    சடக்கென்று ஏதோ ஒரு பூதம் தன் மீது ஏறி உட்கார்ந்து அழுத்தியதாய் மனக்கிலேசம்.

    எல்லோரும் தன்னை கையும், களவுமாய் பிடித்த்தால் வந்த அவமானமா. இது எல்லா அணிகளிலும் தெரிந்தே நடக்கிற உளத்தல்தான் எனினும், தன்னை ஏன் அதிகம் பாதித்த்து என்பதை பார்க்க, அதில் தனக்கு முன்பிருந்தே அந்த செயலில் அக ஓட்டுதல் இல்லை என்பது தெரிந்தது.

    ’நாம இல்லைன்னா இன்னொருத்தன் இருந்து இந்த நோபாலை கொடுத்திருப்பான், இதெல்லாம் சகஜம் ‘ என்று எத்தனையோ சாந்தி யஞ்ஞங்கள் செய்தாலும்  – ஓயாத மன அலையின் பேரிரைச்சல்.

    ‘ப்ச. செய்திருக்க வேண்டாம் தானே. வேறு யாரேனும் செய்யட்டுமே உனக்கென்ன.. வெற்றியை விட உனக்கு உன் அகம் முக்கியமல்லவா.. ’  அதே அலைவரிசையில் மனக்குரல் சலிக்காமல் அர்ச்சனை செய்து கொண்டிருந்தது.

    பொய்த்தடம் விழுந்த இட்த்தில் ஒரு பெரிய ஆலமரத்தின் குழி போல தனக்குள் அமைதி ஏற்பட்டிருந்தது. புயலின் மையத்தின் அமைதி போல, பொய்யின் மையத்தில் சுழலில் சுருண்டுவிடுவதுண்டு. ரமணியால் அந்த நோபாலுக்கு பிறகு எங்குமே பொய் சொல்ல முடியவில்லை.

    *

    சீனி அண்ணாவிற்கு நிறைய முடி கொட்டிருந்தது. எந்த உணர்ச்சியையும் மிகைப்படுத்தாத அண்ணா, என்னை சந்தித்ததில் ரொம்பவே மகிழ்ச்சியாகவேயிருந்தான். சொந்த ஊரிலே வாழ்க்கை அமைத்துக் கொண்ட பாக்கியவான்களில் அவனும் ஓருவன்.

    அதுவும் ரயில்வே கிரிக்கெட் மைதானத்திலே. ஆமாம். இப்போது அந்த மைதானத்தின் பெரும்பகுதியில் கான்கீரீட் கட்டிடங்கள் எழுந்து நிற்கின்றன. மெட்ரோ போல் இல்லாமல் வெறும் இரண்டு அடுக்கு கட்டிடங்களாகவே நின்றது கொஞ்சம் ஆசுவாசம். மைதானத்திற்கு பக்கத்திலிருந்த சுடுகாடும் இப்போது ரொம்பவே தள்ளிப்போயிருந்தது. மனித வாழ்க்கை பெருக்கும்போது பிணங்கள் எரிக்கும் நிலங்களின் மதிப்பும் கூட்த்தானே செய்யும்.

    அண்ணாவிற்கு ஏதோ அரசாங்க உத்தியோகம். ஒரு டூவீலர். சூ தேவையில்லாது  செருப்பு மட்டுமே கொண்டு நடத்தி முடித்துவிடுகிற ஒரு சிறு நகர வாழ்க்கை. ஆச்சிக்கு நிறையவே கூன் விழுந்திருந்தது.

    “ என்னது.. ரமாக்குட்டி பிள்ளையா.. பாத்து பல நாளாச்சுதேப்பா.. அம்மை நல்லாயிருக்காளா..“ ஆச்சி கேட்டுக்கொண்டே போனாள். நான் சொல்கிற பதில்கள் எதுவும் தேவையற்ற உலகத்தில் அவளிருந்தாள். அண்ணா அவளுக்கு மிசின் எடுத்து கொடுத்து காதில் வைத்துக் கொள்ள சைகையால் சொன்னான்.

    மறுபடியும் கேட்ட கேள்விகளையே கேட்டு பதில் வாங்கிக்கொண்டாள்.

    “ கல்யாணத்துக்கு கூட பத்திரிக்கை அனுப்பாம பண்ணிட்டேகளேப்பா.. “ குறை பட்டுக்கொண்டாள்.

    ” ஆச்சி.. சொல்ற நிலமையிலே கல்யாணமாகல பாத்துக்க.. வடக்கு பொண்ணு.. அம்மைக்கு முழுசா சம்மதிமில்லைல்லா.. சுருக்கமா.. பண்ணவேண்டி.. அண்ணமாருங்க செஞ்சு வைச்சது.. “

    ”என்னயிருந்தா.. என்னப்பா.. மனுசாளுக்குத்தானப்பா வாக்கபடுதோம்.. சீக்கிரம் குழந்தை ஓண்ண பெத்துக் கொடுப்பா.. உங்கம்மை பாவம்பா.. அதுக்கு பீ, மூத்திரமள்ள முத ஆளா நிப்பாப்பா.. கூறுகெட்ட குப்பச்சி.. வாய்தான் அதுக்கு பெரிசு.. குழந்தையை மடில எறிஞ்சா  சிரிச்சிட்டேல்ல நாங்க அழுவோம்.. “

    அதை சொல்லியபடியே ஆச்சி தனக்குள்ளே அழ் ஆரம்பித்தாள். சத்தம் வராத அழுகை. தாரை தாரையாய் கண்ணீர் வர ஆரம்பித்தது. சீனி அண்ணாவிற்கு ரொம்ப சங்கடமாயிருந்திருக்க வேண்டும்.

    “ யே.. அம்மா.. ரொம்ப நாள் கழிச்சு வந்தவண்ட்டயும் ஒப்பாரி ஆரம்பிசிட்டயா.. “ அவன் இயல்பை மீறிய சத்தம். கத்தல். பதட்டம். இயலாமை.. இருவருக்கும் ரொம்ப நாள் தொடர்ந்து கொண்டிருக்கிற ஆதங்கத்தில், உரையாடலின் தொடர்ச்சியான குரல்.

    சண்டை  யட்சி வீட்டிக்குள்ளே மூலையில் உட்கார்ந்திருப்பது போலயிருந்தது.

    ஆச்சியிடம் சொல்லிவிட்டு வெளியே வந்த போது, அண்ணா மனைவியின் குரல் மேல்மாடியிலிருந்து கேட்டுக்கொண்டிருந்தது. அண்ணா மனைவி மல்லிகா அக்கா டீச்சர். அரசாங்க பள்ளியில் டீச்சர். பெருத்த சரீரம். டியுசன் வகுப்பில் மட்டும் பெருத்த சாரீரம். கண்டிப்பான டீச்சர். இருபது வருட தாம்பத்தியம். மழலை சொல் கேளாத இல்லம். ஆச்சியின் கண்ணீராய்.

    “அண்ணே, அக்காகிட்ட சொல்லியிருங்க.. நான் இன்னிக்கு ராவே கிளம்பறேன்.. சென்னைல செந்தில, அச்சுவா பாத்துட்டு போலாம்னு ஒரு ஐடியா.. இருக்கு.. “

    அண்ணா பேசாமல் கூடவே நடந்து வந்தான். எல்லாயிடமும் கட்டிடங்களான அந்த பகுதியின் நடுவிலும் சின்னதாய் ஒரு கிரவுண்டு இருந்தது. சிறுவர்கள் சைக்கிள் ஓட்டிக்கொண்டு, சின்னதான கிரிக்கெட் விளையாடிக்கொண்டு இருந்தனர்.

    அண்ணா அந்த மைதானத்தின் நடுவில் நின்று மறுபடியும் சுத்தி பார்த்தான். அவன் தன்னை பின் நோக்கி சுழற்றிக் கொள்கிறானா, காலச்சக்கிரத்தில். அந்த இடம் பழைய மைதானத்தின் எந்த இடமாக இருந்திருக்கும் என்று என்னால் கணிக்க முடியவில்லை. அண்ணாவிற்கு அது தெரிந்திருக்கலாம்.

    ரமணியை பார்த்து சிரித்தான். ரமணியும் அவனைப் பார்த்து சிரித்தான். அந்தக் கேள்வி அவனுக்குள்ளே குதித்துக் கொண்டெயிருந்தது. கேட்கலாமா ? கூடாதா ? அவனை அறியாமலே கேள்வி ஒரு இன் – சுவிங்கர் பெளன்சர் போல எழும்பி வந்தது .

    “ ஏண்ணே, என்னன்னே பிரச்சனை ? “

    அண்ணாவிற்கு புரிந்தது. பதில் சொல்ல விருப்பமின்றி தன்னை காலச்சக்கரத்திற்குள் புகுத்திக் கொண்டான் போல. நான் கேட்டிருக்க கூடாதோ ?

    ஒரு சில தப்படிகள் மெளனமாக நகர்ந்தபின், தலையை உயர்த்தி அண்ணா சொன்னான்..

    “  நோ-பால் கொடுக்கறதுக்கு யாருமேயில்லடா.. “

    சொல்லிவிட்டு என் கைகளை இறுக்கி அணைத்து கொண்டார். நான் எதிர்பார்க்காத சிரிப்பை, அவனே இதுவரை சிரிக்காத சிரிப்பை சத்தமிட்டான்.

    கிளவுசில்லாமலே அவன் கை நிறைய வேர்த்திருந்தது.

    புகைப்படத்துக்கு நன்றி:

     http://www.leadersquest.org/cms/wp-content/uploads/Ruralvisit3.jpg#.UG1mHphhwqw

    Share
  • நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால்

    விசாகை மனோகரன்

    சென்னை வரும் லுப்தாஸா பிளைட் துபாயிலிருந்து புறப்பட்ட 10 நிமிடத்தில் நித்திராதேவியின் மடியில் தவழ ஆரம்பித்து விட்டான் அரவிந்த். ஆனால் நிம்மதியான தூக்கம் வரவில்லை. ஏதேதோ எண்ணங்கள் அவன் மனதிற்குள். அந்த எண்ண ஓட்டத்தை ‘ தாகத்திற்க்கு ஏதாவது வேண்டுமா’ என்று ஒயிலாக வந்த ஏர் ஹோஸ்டஸ் கேட்டு தடுத்துவிட்டாள்.

    இங்கு நான் கட்டாயம் அரவிந்த் பற்றி சொல்ல வேண்டும். நான் எதற்கு உங்கள் நடுவே. அவன் வாயாலேயே கேளுங்க அவன் கதையை.

    என் வயது இருபத்தேழு. பெத்தவங்களுக்கு ஒரே மகன். ஒரு சாதாரன கம்பெனியில் சாதாரண குமாஸ்தா எங்கப்பா. வீட்டைத் தவிர வேறு உலகம் தெரியாத அம்மா. மாதம் 3ம் தேதி சம்பளம். 5ம் தேதி தட்டுப்பாடு ஆரம்பம். கீழ் நடுத்தர வர்க்கம். படிப்பில கெட்டிக்காரன். விளையாட்டுகளிலும் அப்படியே. ஆனா நான் காரணமில்லாத ஒரு தப்பால வாழ்க்கையில அவதிப்பட்டவன். அந்த தப்பு நான் மேல்ஜாதின்னு சொல்லப்படற குலத்தைச் சேர்ந்தவன் என்பது தான். எந்த ஸ்காலர்ஷ்ப்பும் கிடைக்கல. ஆனா படிக்கணும்கிற வெறி மட்டும் இருந்தது. அந்த கஷ்டத்திலேயும் என்னை படிக்க வைச்சாங்க. 10ம் கிளாஸ் தேறினேன். +2வும் முடித்தவுடன் வீட்டின் நிலைமை புரிந்து எனது ஆசைகளை புதைத்து விட்டு படித்தது போதும் எங்காவது வேலைக்கு போகலாம் என்று முடிவு செய்தேன்.

    ஒரு நாள் ‘அம்மா! நான் படிச்சது போதும்மா. ஏதாவது வேலைக்கு போய் சம்பாதிச்சா கொஞ்சம் கஷ்டம் குறையும்’ அப்படின்னேன்.

    ‘டேய் அரவிந்தா! நீ நல்லா படிக்கற பிள்ள. ஏண்டா நிப்பாட்டனும். நல்லா படிச்சு பெரிய வேலைக்கு போடா. என் உயிரகொடுத்தாவது நான் படிக்கவெக்கறேண்டா.’

    ‘சரிம்மா. இனிமே என் லட்சியமே படிப்பு படிப்பு படிப்பு தான்மா.’

    அப்ப ஆரம்பிச்சு ஒவ்வொரு பொருளா அடமானம் வெச்சு அதத் திருப்ப முடியாம வித்து என் படிப்பு தொடர்ந்திச்சு. M.Tech கடைசி வருஷம். Project Work பண்ண எங்க அப்பாவோட பழைய ஸ்கூட்டரையும் வித்தாச்சு. கடைசியா பரிட்சைக்கு பணம் கட்டனும். வெக்கவும் ஒண்ணுமில்ல விக்கவும் ஒண்ணுமில்ல. பணம் கட்ட கடைசி நாள் அம்மா என் கையில பணத்த கொடுத்தாங்க. எனக்கு ஒன்னும் புரியல.

    ‘அம்மா! ஏதும்மா பணம்?’

    பதில் இல்ல.

    ‘அம்மா உன்னத்தான் கேட்டேன் ஏது பணம். சொல்லலேன்னா நான் அத தொடமாட்டேன்’. அப்பத்தான் அம்மா கண்ல நான் எந்த கஷ்டத்திலயும் பாக்காத கண்ணீர பாத்தேன்.

    டேய் போய் பணத்த கட்டிட்டு வாடா அப்பறமா பேசிக்கலாம்ன்னு சொன்ன அம்மாவ உத்துப் பார்த்தேன். ஏதோ வித்தியாசமா புதுசா தெரிஞ்சிச்சு. சட்னு பொறி தட்டிச்சு. புதுசா தெரிஞ்சது அம்மா கழுத்துல மஞ்ச கிழங்கு தாலிக்கு பதிலா. கட்டிபிடிச்சிட்டு அழுதேன்.

    அம்மா சொன்ன ஒரே வார்த்தை ‘சீக்கிரம் போய் பணத்த கட்டு’

    எனக்கு வேற வழி தெரியல. போய் கட்டிட்டு வந்து அசுரத்தனமா படிச்சு ஒரு அமேரிக்க சாப்ட்வேர் கன்பெனில வேலைக்கு சேர்ந்து இரண்டு வருஷம் கழிச்சு இப்ப வரேன் பெத்தவங்கள பாக்க. இதோ இன்னும் ஒருமணி நேரத்தில சிங்காரச் சென்னை. அங்கேந்து ரெண்டுமணி நேரப் பயணம்.

    சொன்னபடி 3மணி நேரத்தில் வீட்டில் இருந்தேன். அப்பா அம்மா ரெண்டு பேர் கண்லேயும் கண்ணீர். ஆனா இது ஆனந்தக் கண்ணீர். கட்டிபிடிச்சு கால்ல விழுந்து வணங்கியபின். ரெண்டு பேரையும் உட்காரவெச்சு அவங்க காலடில நான் வாங்கி வந்திருந்த ஒரு பெட்டிய வெச்சுட்டு ‘அம்மாஇ இதுல நீ எனக்காக கடைசியா கழட்டிக் கொடுத்தியே தாலி அதுவும் மிச்சம் நகையும் இருக்கும்மா. மொதல்ல அப்பாவ அந்த தாலிய கட்டச் சொல்லும்மா’

    அரவிந்த் நீ நல்லா இருந்தா போதும்பா. தங்கத் தாலி கட்டிக்கிட்டாத்தான் பொண்டாட்டியா? தங்கத்தவிட மஞ்சளுக்கு மகிமை ஜாஸ்திப்பா.

    அம்மா சும்மா சினிமா டைலாக் பேசாதம்மா. கட்டிக்கம்மா

    சரிடா நாளைக்கு வெள்ளிக்கிழமை நீயும் நல்லபடியா திரும்பி வந்திருக்கே. கோயிலுக்கு போய் சாமி முன்னாடி கட்டிக்கலாம்.

    ராத்திரி சூப்பர் விருந்து. சாப்டுட்டு 12மணி வரைக்கும் பேசிக்கிடிருந்துட்டு படுத்துட்டோம் காலேல சீக்கிரம் எழுந்திரிச்சு கோயிலுக்கு போகணும்னு சொல்லிட்டு.

    சூரியன் முகத்தில பட்டு எழுந்திரிச்சு உக்காந்தேன். அப்பத்தான் ஞாபகம் வந்துச்சு கோயிலுக்கு போகணுமேன்னு. அம்மா ஏன் எழுப்பல? இப்படியா தூங்க விடுவாங்கன்னு சொல்லிக்கிட்டே போய் கை கால் கழுவிட்டு உள்ள போய் அம்மான்னு கூப்பிட்டா பதில் இல்ல. எங்க போனாங்க? ஒரு வேள பிள்ள அசதியா தூங்குதுன்னு எழுப்பாம கோயிலுக்கு போய்ட்டாங்களா? நினச்சிக்கிட்டே அவங்க ரூம தாண்டும்போது அம்மா படுத்திருந்தது தெரிஞ்சிச்சு. அம்மா இந்நேரத்துல படுத்திருக்காங்கன்னா ஏதாதவது உடம்பு சரியில்லயான்னு யோசிச்சிக்கிட்டே கதவ தெறந்தேன்.

    அங்க அப்பா அம்மா ரெண்டு பேரும் படுத்திருக்க, நடுவில நான் வாங்கி வந்திருந்த நகைங்க கிடக்க, அந்த தாலிய மட்டும் கையில பிடிச்சிட்டு அம்மாவும் அம்மாவ பிடிச்சிட்டு அப்பாவும் அவங்க கடமை முடிஞ்சிருச்சின்னு நிம்மதியா நிரந்தரமா துங்கிட்டிருந்தாங்க.

    அந்த மஞ்சகிழங்கு அம்மா கழுத்தில தங்கத்தவிட அதிகமா ஜொலிக்குது.

    எந்த பிடிப்பும் இல்லாம நான் தனியா நிக்கிறேன். டாக்டர்லாம் வந்தாங்க. ஏதோதோ சொன்னாங்க ரெண்டு பேருக்குமே இதயம் வீக் ரொம்ப ரேர் இப்படி வர்ரது அது இதுன்னு. கொடுத்துவச்சவங்கன்னு சில பேர் சொன்னாங்க. ஆனந்த அதிர்ச்சில போய்ட்டாங்கன்னு சில பேர் சொன்னாங்க.

    ஆனா போனவங்க போனவங்க தானே.

    எந்த பிடிப்பும் இல்லாம நான் தனியா நிக்கிறேன்

    எங்கேயோ பாட்டு கேட்குது

    ‘நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் தெய்வம் ஏதுமில்லை’. 

    Share
  • நாக்பூருக்குப் போ!

    முகில் தினகரன்

    பேராசிரியர் சிவஞானம் இறந்து விட்டார்.

    தகவல் கிடைத்த நிமிடத்தில் மனசு கனத்துப் போய் தாங்க முடியாத வேதனையுடன் தனிமை நாடி அமர்ந்தேன் பார்வை சூன்யத்தை பலவந்தமாய் வெறித்தது.

    ‘வாட் எ கிரேட் மேன்?அவரும்…அவரோட அந்த அறிவரையும்தானே இன்றைக்கும் நான் உயிரோட இருக்கக் காரணம்…அவர் மட்டும் அன்றைக்கு என் மனதை மாற்றி..இந்த நாக்பூருக்கு ரயிலேற்றி அனுப்பி இருக்காவிட்டால்…..’

    யோசித்துப் பார்த்ததில் உடல் சிலிர்த்தது.

    இருபத்தியிரண்டு ஆண்டுகளுக்கு முன்….ஒரு மழை இரவில்…மந்திரி சண்முகநாதனின் அடியாட்கள் அவருடைய மகளை காதலிக்கிறேன்…என்கிற ஒரே காரணத்திற்காக என்னை துவம்சம் செய்ய என்னுடைய கல்லூரி ஹாஸ்டலுக்கு வந்த போது நண்பர்களின் உதவியோடு அங்கிருந்து தப்பி பேராசிரியர் சிவஞானத்திடம்தான் தஞ்சம் புகுந்தேன். காரணம்,? அவர்தான் எங்கள் அனைவருக்குமே வழிகாட்டி…அறிவு ஜீவி…இளம் ஜீனியஸ்.

    ‘நீ உயிரோட இருக்கணும்னு விரும்பினா….உடனே உன் காதலைத் தூக்கிப் போடு..கேவலம் அற்ப காதலுக்காக..அற்பத வாழ்க்கையை இழந்திடாதே…உன் கிட்ட படிப்பிருக்கு…திறமை இருக்கு…எதையும் சாதிச்சுக் காட்டற உத்வேகம் இருக்கு…அதை உழைப்புல காட்டு…என்னோட நண்பர் ஒருத்தரோட கம்பெனி நாக்பூர்ல இருக்கு…நான் போன்ல சொல்லிடறேன்…உடனே கிளம்பு…உனக்கான வெளிச்ச எதிர்காலம் அங்க இருக்கு…உயர்வு சிம்மாசனம் காத்திருக்கு….இங்கிருந்து மரணத்தைச் சுவைக்காதே…நாக்பூருக்குப் போ…விடியல் ரெடியா இருக்கு’

    ரயில் நிலையம் வரை எனக்குப் பாதுகாப்பாக வந்து டிக்கெட்டை என் கையில் திணித்து தடம் புரள இருந்த என் வாழ்க்கைக்கு உயர்வு திசை காட்டிய அந்த உத்தம பேராசிரியர் இன்று இறந்து விட்டார்.

    கடந்து போன இருபத்தியிரண்டு ஆண்டுகளில் ஒரு முறையேனும் ஊருக்குத் திரும்பிச் சென்று அவரைப் பார்த்திருக்கணும்….ப்ச்…தப்புப் பண்ணிட்டேன்…’உயரணும்..உயரணும்…’ன்னு உயிரைக் குடுத்து உழைத்து அவர் சொன்னபடி உயர்வுச் சிம்மாசனத்தில் அமர்ந்தாச்சு…ஆனா..ஊர்…உலகம்…உறவு…நட்பு…எல்லாத்தையும் மறந்து ஒரு எந்திர வாழ்க்கை வாழ்ந்து விட்டோமே…என்கிற ஆயாசம் இப்போது தெரிகின்றது. ஓரிரு முறை அவரிடம் கேட்டிருக்கின்றேன்…’ஊருக்கு ஒரு தரம் வந்திட்டுப் போறேனே சார்…பெத்தவங்களை…நண்பர்களை…உங்களையெல்லாம் பார்க்கணும்னு ரொம்ப ஆசையாயிருக்கு..சார்’

    கண்டிப்பான ஒரே பதில்தான் வரும் ‘வேண்டாம் தியாகு…அந்த மந்திரிக்கு இன்னும் உன் மேல் கோபம் தீரலை…எப்ப நீ வருவேன்னு காத்திட்டிருக்கான்…நீ வந்தே…அவ்வளவுதான்…இத்தனை நாள் நீ பட்ட கஷ்டமெல்லாம் வீணாப் போய்டும்….எங்கியோ கண் காணாத ஊர்ல நீ உயிரோட இருக்கறே..அதுவும் நல்லா இருக்கறே…அந்த சந்தோஷம் போதும் எங்களுக்கு அதைக் கெடுத்திடாதே’

    அவர் சொல்படியே நியூஸ் பேப்பரில் விளம்பரம் கொடுத்து ஒரு மும்பை வாழ் தமிழ்ப் பெண்ணை மணந்து இரண்டு மகன்களைப் பெற்று இன்று ஒரு பொறுப்பான தந்தை ஸ்தானத்தில் அமர்ந்திருக்கின்றேன்.

    தீர்மானித்து விட்டேன்.

    அவரது சாவக்குச் செல்வதென்று. விமான டிக்கெட்டுக்கு மின்னலாய் ஏற்பாடு செய்து புயலாய்க் கிளம்பினேன்.

    விமான நிலையத்திலிருந்து டாக்ஸி பிடித்து பேராசிரியரின் முகவரியை டிரைவரிடம் கொடுத்து விரட்டினேன். ‘எப்படியாவது பாடிய எடுக்கறதுக்கு முன்னாடி போயிடணும்’

    நல்லவேளையாக நான் போய்ச் சேர்ந்த போது பேராசிரியரின் உடல் சுடுகாடு நோக்கி பயணிக்காமல் இருந்தது. ‘கடைசியா ஒரு முறை அவர் முகத்தைப் பார்க்க இறைவன் கொடுத்த வாய்ப்பு’.

    முன் ஹாலில் கிடத்தப்பட்டிருந்த பேராசிரியரின் உடலை இறுகிய முகத்துடன் பார்த்து உள்ளுக்குள் குமுறினேன். ‘எப்பேர்ப்பட்ட மனிதர்….எப்படி முடிந்தது இவரால் மட்டும்….எப்போதும்….எல்லோருக்கும்…நல்லது மட்டுமே நினைக்க…நல்லது மட்டுமே செய்ய…,’

    அழும் பெண்கள் கூட்டத்தில் தேடினேன் பேராசிரியரின் மனைவியை. ‘இதில் பேராசிரியரின் மனைவி யார்?…துக்கம் விசாரிக்க வேண்டுமே…எப்படிக் கண்டுபிடிப்பது?’

    பக்கத்தில் நின்று கொண்டிருந்தவரிடம் நாசூக்காய் விசாரித்தேன்.

    ‘மிஸஸ் சிவஞானம் தானே?..அதோ அந்த….கறுப்பு ஸாரி…’

    அவர் காட்டிய திசையில் திரும்பிப் பார்த்த நான் ஒரு விநாடி அதிர்ச்சியின் உச்சத்திற்கே சென்று திரும்பினேன்.

    இது…இது…

    நான் காதலித்த….

    மந்திரி சண்முகநாதனின்…மகள்…அல்லவா?

    இவளா…பேராசிரியரின் மனைவி?

    எனக்கு எதுவுமே புரியவுமில்லை…தோணவுமில்லை. ‘எப்படி?.’

    என் மனம் ரீப்ளே பட்டனை அழுத்தி சோதித்தது.

    ‘சார்….உங்க கல்யாணத்திற்கு நான் வராமல் எப்படி சார்?…வருவேன் சார்…கண்டிப்பா ஊருக்கு வரத்தான் சார் போறேன்’

    ‘ப்ளீஸ்…தியாகு புரிஞ்சுக்கப்பா…உனக்கு எது நல்லது எது கெட்டதுன்னு எனக்குத் தெரியாதா?…உனக்கு நான் இன்விடெஷன் அனுப்பியதே ஒரு இன்ஃபர்மேஷனுக்காகத்தான்…நீ வரணும்’ என்பதற்;காக அல்ல…..நீ வரக்கூடாது…அங்கிருந்தே வாழ்த்து அது போதும்’

    (முற்றும்)

     

    Share
  • அம்மணி

    தலைக்கோழி கூப்பிட்ட சித்த நேரத்துக்கெல்லாம் பழநி போகும் அஞ்சு மணி ரயில் கூகூவென சங்கூதியபடி, அக்கம்பக்கத்து கிராமங்களை எழுப்பிக் கொண்டே போனது.  இயற்கை வளம் வாசு அய்யா வீட்டிலிருந்து கேட்கிறது உலக்கை போடும் சத்தம். இந்த நவீன காலத்திலும் கைக்குத்தல் அரிசிதான் வாசு அய்யா வீட்டில். ஒவ்வொரு வீட்டுப் புறக்கொல்லையிலும் ஏதாகிலும் வீட்டுவளர்ப்புச் செடிகள் பயிரிட வேண்டுமென்பதைச் செயல்படுத்துவதில் ஊரே அவருக்கு ஒத்தாசை செய்கிறது.

    கிழபுறத் தாழ்வாரத்தின் கீழ் எல்லுசாமி இன்னும் படுத்திருக்க, அம்மணி எழுந்து போய் விட்டிருந்தாள். அவள் இந்நேரம் கொல்லையிலிருக்கும் மாடுகளுக்குத் தீவனம் போட்டுக் கொண்டிருக்கலாம்; கட்டுத்தறியைத் துப்புரவாக்கிய கையோடு, சாணம் கரைத்து சாணவாயுத் தொட்டியில் ஊற்றிக் கொண்டுமிருக்கலாம். விலகியிருந்த சத்திரப்பட்டி துப்பட்டியை நன்கு போர்த்தியபடி புரண்டு ஒருக்களித்துப் படுத்தார் எல்லுசாமி. வாசல் தெளிக்கும் ஓசை கேட்டது.

    மாடு கன்னுகளுக்குத் தீவனம் போட வேண்டுமென்றால்,  கொல்லைக்குப் போய் வெளியில் நறுக்கி வைத்திருக்கும் தட்டுக் கத்தைகளைக் கொஞ்சம் அள்ளிப் போட வேண்டும். இதெல்லாம் எதுவும் எல்லுசாமி செய்ய மாட்டார். தட்டுப்போரிலிருந்து நான்கு கத்தைகளை உருவி, ஒவ்வொன்றையும் மூன்றாகக் கத்தரித்து மூலையில் அடுக்கி வைப்பதோடு முடிந்தது அவரது வேலை. இராத்திரிக்கு ரெண்டு தரம் எழுந்து தீவனம் போடுவது என்னவோ அம்மணிதான்!

    ரெண்டாங்கோழி கூப்பிட்டு வெகுநேரமாயிற்று. தமயந்தியம்மா வீட்டுக்குப் பால் கறக்க வரும் பால்காரன் சைக்கிள் மணியடித்துக் கொண்டு போகிறான். இன்னும் தூங்கிக் கொண்டிருந்தால் அம்மணி வந்து சத்தம் போட்டு ஊரைக் கூட்டுவாள். ‘விருக்’கென்று எழுந்து பால்கும்பாவோடு பால் கறக்கப் போனார் எல்லுசாமி.

    தவுட்டுத் தொட்டியிலிருக்கும் எஞ்சிய புழுதண்ணியை இறைத்துக் கீழே கொட்டிய பிறகு, ரெண்டு குடம் தண்ணீரைத் தவுட்டுத் தொட்டியில் ஊற்றினாள் அம்மணி. அதனுள் சாமைத் தவிட்டோடு எள்ளுப் புண்ணாக்கு கொஞ்சமும் போட்டுக் கரைத்து விட்டு, கறந்த பாலை எடுத்துக் கொண்டு சமையற்க் கொட்டத்திற்குப் போனாள். எல்லுசாமியும் பின்னாடியே போய் அடுப்படியின் அருகே உட்கார்ந்து கொண்டார். அடுப்புச்சூட்டின் கதகதப்பு இதமாக இருந்தது. பால்கும்பாவை அப்படியே பெரிய அடுப்பில் வைத்து விறகு தள்ளியபின், பால் இருந்த சுண்டாச்சட்டியை கண்ணடுப்பில் இருக்கும் காப்பிச்சட்டியின் மேல் வைத்தாள். ஓரிரு மணித்துளிகளில் கண்ணடுப்புப்பால் சட்டிக்குள்ளேயே பொங்கிக் கொதித்தது.

    கண்ணடுப்புக் காப்பியுடன் சற்றுப் பாலையும் சீனியையும் கலந்து ஆத்தி நல்ல பெரிய லோட்டா ஒன்றில் ஊற்றிக் கொடுத்தாள். குத்திட்டு உட்கார்ந்திருந்த எல்லுசாமி காப்பியை அனுபவித்துக் குடித்தார். ஒவ்வொரு வாய் குடித்துக் கொண்டே அதை எடுப்பதும் இதை எடுப்பதுமாக இருந்தாள் அம்மணி. ஏரித்தோட்டத்து மராமத்து வேலைகளைப் பற்றிச் சொல்லி, என்ன செய்யலாம் என்ன செய்யக்கூடாது என்பது குறித்து அம்மணியிடம் யோசனை கேட்டார் எல்லுசாமி.

    கொட்டாவி விட்டபடியே உள்கொட்டத்திலிருந்து எழுந்து வந்தான் பெரியவன் துரைசாமி. “அம்மா காப்பி ஆச்சா?!”

    “பெரிய தங்கம்! ஊர் சோலியெதுக்கும் போகாம நாலு வண்டி மண்ணாச்சும் இன்னிக்கு அடிச்சிப் போடோணும். வேசை இருக்குறப்பவே இந்த குப்பை மேட்டு மண்ணு முச்சூடும் தோட்டத்துக்குக் கடத்திப் போடோணுஞ் சரியா கண்ணூ?”

    “சரிம்மா! எத்தினிவாட்டிதான் இதையே சொல்லுவ? கொண்டா காப்பிய!”

    தோளில் இருந்த துண்டையெடுத்து உதறிய பின், தலைக்கு உருமாலையாகக் கட்டிக் கொண்டு கிளம்பினார் எல்லுசாமி. தூக்குப் போசியில் முதல் நாள் சோத்துடன் மோர் ஊற்றிக் கரைத்து, அதையே தோட்டத்து நாய் பேச்சிக்குக் கொடுத்தனுப்பினாள் அம்மணி.

    அடுப்படியில் விறகு தள்ளிவிட்டுக் கொண்டிருந்தவள், வேகமாகத் தண்ணிக் கொட்டத்துக்குப் போனாள். அங்கிருந்த தண்ணியடுப்பில் தென்னை மட்டை ரெண்டினை வைத்துப் பற்ற வைத்தாள். பெரியவன் குளிக்காமல் சாப்பிடமாட்டான். பெரியடுப்பில் உலை காய்ந்து விட்டிருந்தது. கழுவி அரித்த அரிசியை உலையில் போட்டு, அதன் மேல் தட்டத்தை வைத்து மூடினாள். கண்ணடுப்பில் இன்னும் காப்பிச்சட்டி சுண்டிக் கொண்டிருந்தது. பருப்புச்சட்டியைக் கண்ணடுப்பில் வைத்து, அதற்கு மேல் காப்பிச்சட்டியை இடம் மாற்றிக் கொண்டாள்.

    “நேராப் போயி ஒரு வண்டி மண்ணடிச்சுட்டு வந்துரு. அதுக்குள்ள சோறாக்கி, தெவரைப் பருப்பு கடைஞ்சி கத்தரிக்காக் குழம்பும் செய்து போடுறன் நானு!”

    “செரீம்மா”, கிளம்பிப் போனான் பெரிய மகன் துரைசாமி. போடிபட்டியில் இருக்கும் தன்னுடைய அண்ணன் வீட்டுக்குப் போன சின்னவன் மணியன் இன்னைக்காவது வருவானா மாட்டானா? யோசித்துக் கொண்டே தயிர் மொடாவைச் சிலுப்பு கொக்கிகளுக்குக் கீழே வைத்தாள் அம்மணி.

    கழுவிக் கொண்டு வந்த ஆளுயர தயிர்மத்தினை மொடாவில் நிறுத்தி, மேல்க்கொக்கிக்கும் கீழ்க்கொக்கிக்கும் உண்டான பனம்பட்டைகளைப் பூட்டினாள். பட்டைகளுக்கு இடையில் நின்று சுழலத் தயாரானது மத்துக்கோல். மத்துக்கோலில் சுருட்டிக் கட்டப்பட்டிருந்த கயிறினை அவிழ்த்து முன்னும் பின்னுமாக மத்தினை இழுத்தாடியபடி தயிர் சிலுப்பினாள். இடையிடையே அடுப்படியில் நடந்து கொண்டிருந்த சமையல் வேலைகளும் கவனிக்கப்பட்டுக் கொண்டிருந்தன.

    வெண்ணெய் திரண்டு மிதக்கத் துவங்கியது. மத்துக்கீற்றிலும் நிறைய வெண்ணெய் திரண்டு அப்பிக்கொண்டிருந்தது. வெண்ணெய் திரண்டிருந்த மொடாவிலும், மத்துக் கீற்றிலும் இருந்த வெண்ணெய் முழுவதையும் ஒன்று திரட்டிப் பெரிய உருண்டையாக்கினாள். திருப்பதி இலட்டு அளவுக்குத் திரண்டு இருந்தது. மோர் வித்த காசும், வெண்ணெய் வித்த காசும் போதும் அவளுக்கு, வீட்டு செலவுகளைச் சரிக்கட்ட.

    பாத்திரங்கழுவுதல், மோர் சிலுப்புதல், பண்டங்கன்னுக்கு தீவனம் போடுதல், கொல்லையில் இருக்கும் செடிகளுக்கு தண்ணீர் ஊற்றுதல், பால் மோர் கேட்டு வருபவர்களுக்கு ஊற்றிக் காசு வாங்குதல், துணி துவைத்தல், சில்வானங்கேட்டு வந்தவர்களுக்கு நோட்டு முறித்துக்  கொடுத்தல், குறியாப்புக் கேட்டு வந்தவர்களிடம் குறியீடாக ஒன்றை வாங்கி வைத்துக் கொண்டு மற்றொன்றைக் கொடுத்தல் என பதினாறு கவனக வேலையாகப் பலதையும் ஒரே நேரத்தில் செய்து, காலைநேரப் பணிகளை முடித்தாள் அம்மணி.

    பெரியவன் துரைசாமி முதல் வண்டி மண்ணடித்து விட்டு வந்திருந்தான். “கைகால் மூஞ்சி கழுவீட்டு வந்து உக்காரு கண்ணு!”, அவனுக்கு வட்டல் வைத்து சோத்தைப் போட்டுவிட்டு, கூடையில் அனைத்தையும் எடுத்து வைத்துக் கொண்டாள்.

    ”செரி கண்ணூ. நான் பொடக்காளிக்குப் போயி பண்டங்கன்னுக்குத் தண்ணி காமிச்சிர்றேன். அப்படியே தோட்டத்துக்குப் போயி அப்பங்கூடவே உக்காந்து சோறுண்டுக்குறேன். நீ ஊட்டைப் பூட்டி தொறப்புக்குச்சியை எறவாரத்து மேப்படி மேல வெச்சிட்டு, மாடு கன்னுகளையும் ஓட்டிட்டு வந்துரு! செரியா?”

    லெட்சுமாபுரத்திலிருந்து குண்டலப்பட்டி எல்லையில் இருக்கும் ஏரித்தோட்டத்துக்கு ஒன்னரை மைல் தூரம். அந்த ஒன்பது ஏக்கர் ஏரித்தோட்டம்தான் எல்லுசாமி அம்மணி தம்பதியினருக்குக் கிடைத்த பூர்விகச் சொத்து.

    சும்மாட்டுத் தலையில் இருந்த கூடையில் காலைச்சோறு, மத்தியானச் சோறு எல்லாமும் இருந்தது. வலது கை கூடையைப் பிடித்திருக்க, இடது கையில் காப்பி இருந்த திருகணிச் சொம்பினைத் தொங்கவிட்டபடி புறப்பட்டுப் போனாள். ஊர் எல்லை தாண்டும் வரையிலும், மாறி மாறி யாராவது ஒருவர் எதிரில் வந்து கொண்டே இருந்தனர். அவர்களிடம் ஞாயம் பேசுவதும் நலம் விசாரிப்பதுமாகப் பேசிக்கொண்டே தன் வழியில் போய்க் கொண்டிருந்தாள்.

    தோட்டத்து இட்டேரிக்கு இவள் போனதுமே தோட்டத்து நாய் பேச்சி ஓடோடி வந்து இவளை முகர்ந்து பார்த்து நக்கியபடியே வளைய வந்தது.

    “அடியே பேச்சி, சும்மா போ! எதோ காணாதவளைக் கண்டவளாட்ட? என்ன நீயி?! உங்க அப்பன் உனக்கு சோறு ஊத்துனாரா, ஊத்தாமயே உட்டுட்டாரா? செரி வா, சாளைக்கு வந்ததும் நான் ஊத்தறேன்!”, வாஞ்சையாகத் தன் மகளைச் செல்லம் கொண்டாடினாள். அம்மணி வருவதைக் கவனித்த எல்லுசாமி கிணற்றடியில் இருந்து வேப்பங்குச்சிப் பல்துலக்கோடு சாளையை நோக்கி வந்து கொண்டிருந்தார்.

    சாளைத் திண்ணையில் கூடையையும், திருகணிச்சொம்பினை சாளைக்குள் இருந்த மரப்பொட்டி ஒன்றின் மேலுமாகத் தன் சுமையை இறக்கி வைத்தாள்.

    “டே பேச்சி, வாடா கண்ணு!! கூழ் குடிப்பியாமா!!” எறவாரத்தில் தொங்கிக் கொண்டிருந்த தூக்குப் போசியில் இருந்த கூழை பேச்சியின் தட்டில் ஊற்றிவிட்டு, தண்ணித்தொட்டிக்குப் போய் தூக்குப் போசியைக் கழுவினாள். அது நிரம்ப தண்ணீர் கொண்டு வந்து எல்லுசாமியின் அருகே வைத்தாள். ஏற்கனவே கூடையை எல்லுசாமி இறக்கி வைத்திருந்தார். அதில் இருந்தவற்றை ஒருவருக்கொருவர் பரிமாறிக் கொள்ள, காலை வேளைச் சாப்பாடு ஆனது.

    உண்ட மசமசப்பு தீரக் கையில் பீடியோடு உலாத்தப் போனார் எல்லுசாமி. தான் கொண்டு வந்திருந்த கொத்தினைக் கையில் எடுத்துக் கொண்டு, பருத்திக்காடு களையெடுக்கப் போனவள் மத்தியானம் ரெண்டுமணி நெகமத்து வண்டியின் சத்தம் கேட்டுத்தான் சாளைக்குத் திரும்பினாள். களையெடுப்பதில் மற்றவரை விட எப்போதும் ரெண்டு மூணு பாத்தி முன்னாடிதான் இருப்பாள். ஒரு களை தப்பாது; பயிருக்கும் சேதாரம் ஆகாது. பண்ணையத்து வேலைகளில் அம்மணியோடு போட்டியிடுவதற்கு சிஞ்சுவாடி கிராமத்தில் இருப்பவர் எவரும் யோசிக்கவே செய்வர்.

    சொல்லி வைத்தாற்போல பெரியவன் துரைசாமியும் மத்தியானச் சாப்பாட்டுக்கு வந்து சேர்ந்து கொண்டான். எல்லுசாமி மேவரத்துக்குழியில் இருந்த பட்டுப் போன மரமொன்றை வெட்டிச் சாய்த்துக் கொண்டிருந்தார்.

    “ஏனுங்! உங்களைத்தானுங்.. வாங்க. உச்சி மேக்க சாஞ்சு வெகுநேரமாயிருச்சு பாருங்க. வாங்க, வந்து சோறுண்ட்டு பார்ப்பீங்களாமா!!”, தண்ணித்தொட்டி மேல் ஏறி நின்று குரல் கொடுத்தாள்.

    அருகே இருந்த வாழை மரத்தில் மூன்று கீற்று இலையைக் கொய்துவந்து, கடை பரப்பிச் சோறு பரிமாறினாள். தன் வாலைக் குழைத்தபடி பேச்சியும் அருகில் வந்து நின்று கொண்டது. அம்மணியின் முகத்தையே பார்த்துக் கொண்டு இருந்தது அது. அதற்கும் வட்டல் கொண்டுவரப்பட்டு சோறு போடப்பட்டது. ஊர் நாயத்தோடு பண்ணையத்து நடப்பு வேலைகள் குறித்தும் பேசியபடி மத்தியான வேளை உண்டியை முடித்துக் கொண்டனர்.

    உண்ட மயக்கம் தொண்டனுக்கும்! இட்டேரியிலிருக்கும் பூவரச மரத்தின்கீழ் இருக்கும் வண்டியின் மீது ஏறிப்படுத்துக் கொண்டார் எல்லுசாமி. ஆனைமலைக் காற்று சில்லென்று அடிக்க, தென்னை மரத்தோப்பிலிருந்து செம்போத்தும் குயிலும் அதனதன் சுதியில் பாடிக் கொண்டிருந்தன. பெரியவன் பக்கத்துச் சாளையில் இருக்கும் சோடிக்காரப் பையன் தங்கவேலுவிடம் போனான். சோத்துப் போசியை கழுவிக் கமுத்திவிட்டு, சாளை முழுவதையும் கூட்டிப் பெருக்கினாள் அம்மணி.

    தெற்கே எரிசனம்பட்டி வரை போய்த் திரும்பிய நெகமத்து வண்டி, வடதிசையை நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்தது. அதைக்கவனித்த அம்மணி, “ஏனுங், நாம்போயி மிச்சமிருக்குற கொஞ்சநஞ்ச பாத்திகளையும் செதுக்கிட்டு வந்துர்றேன்”. மறுபேச்சுக்குக் காத்திராமல் பருத்திக்காட்டுப் போய்த் தன் வேலையைத் தொடர்ந்தாள்.

    குண்டலப்பட்டியில் யாருக்கோ தெரட்டிச்சீர் போலிருக்கிறது. பாட்டுப்பொட்டி கொண்டு வந்து பாட்டெல்லாம் போட்டிருந்தார்கள். அதையும் மீறி எதோ சிலுசிலுவென்ற சத்தம் கேட்டது. தலையைத் தூக்கிப் பார்த்தால்  கஞ்சம்பட்டி மூலையிலிருந்து படைக்குருவிகள் ரெண்டு படைகளாக ஆகாயத்தில் வந்து கொண்டிருந்தன. படை ஒன்றுக்கு ரெண்டாயிரத்திலிருந்து ஐயாயிரம் குருவிகள் வரை கூட இருக்குமாம். பெரிய நாவற்பழம் போன்ற வடிவில் ஒரு படையும், ஆலிலை வடிவில் ஒரு படையும் தோற்றமளித்தது. இலாகவமாய் ஒரு சேர வளைந்து நெளிந்து பறக்கும் படைக்குருவிகளின் சாகசக் காட்சியைச் சொக்குண்டு பார்த்துச் சிரித்தாள் அம்மணி.

    பெரியவன் மாய்ந்து மாய்ந்து வேலை பார்க்கிறான். எப்போதும் நாலு வண்டி மண்ணடிப்பவன் இன்றைக்கு ஆறாவது நடை போய்க் கொண்டிருந்தான்.

    “செரி நீ கிளம்பு! பொழுது வுழுகுறதுக்கு முன்னாலயே ஊடு போய்ச்சேரு. சின்னவன் மேக்க இருந்து வந்தாலும் வருவான்!!”

    ஊரெல்லாம் நிழல் படர்ந்திருந்தது. நேராக புறக்கொல்லைக்குப் போய், எல்லாம் இருந்தது இருந்தபடி இருக்கிறதா எனச்சரி பார்த்ததும் அவளுக்கு மனம் நிறைந்தது. தண்ணித்தொட்டியில் இருந்து தண்ணீர் மொண்டு, கை கால் முகம் கழுவித் தன் முந்தானையாலேயே துடைத்துக் கொண்டாள்.

    அவ்வளவுதான், வீட்டுக்கு வந்தாயிற்று! பத்துப் பதினாறு கவனத்துடன் பல வேலைகளை ஒருசேர ஒருங்கே பார்க்கத் துவங்கினாள். துணிகளை அலசிப் போட்டாள். நல்லதண்ணிக் கிணத்துக்கு ஒரு நடை போய் தலையில் ஒரு குடம், இடுப்பில் ஒரு குடமாக இரண்டு குடந்தண்ணி கொண்டு வரப்பட்டது. கரியூட்டுச் சேந்து கிணத்திலிருந்து நாற்பது குடம் சப்பைத் தண்ணி கொண்டு வரப்பட்டு பண்டங்கன்னுகளுக்கெல்லாம் தண்ணி காண்பிக்கப்பட்டது. வீடெல்லாம் பெருக்கித் துப்புரவு செய்யப்பட்டது.

    முதலில் அம்மணி குளித்து முடித்தாள். அதே கையோடு வாசல் தெளிக்கப்பட்டு வீட்டில் விளக்கேற்றப்பட்டது. தோட்டத்தில் இருந்து வந்த எல்லுசாமியும் பெரியவனும் குளிக்கப் போகுமுன்னர், ஒருவர் பால் கறந்து கொடுக்க மற்றவர் வைக்கோற் போரிலிருந்து வக்கிப்புல் அரிந்து வந்தார்கள். கறந்த பாலில் மணக்க மணக்க காப்பி தரப்பட்டது. அம்மணியும் ஒரு லோட்டா குடித்துக் கொண்டாள்.

    விநாயகங்கோயில் திண்ணையில் உட்கார்ந்து கொண்டு ஊர்ப்பெரியவர்களும் எல்லுசாமியும் ஊர்ப்பழமை பேசிக் கொண்டிருந்தனர். பெரியவன் அவஞ்சோட்டுப் பையன்களோடு தலைவாசலில் நின்றுகொண்டு, கரட்டுமடம் சுகந்தி கொட்டாயில் என்ன படம் ஓடிக்கொண்டிருக்கிறது என்பது பற்றிப் பேசிக்கொண்டிருந்தான்.

    அரிசிபருப்புக் கூட்டாஞ்சோறு ஆக்கி ’பயித்தம்பயிறு அடை’யும் சுட்டு வைத்திருக்க, எல்லாருமாகச் சேர்ந்து சாப்பிட்டார்கள். திண்ணையில் மற்றவர்களோடு என்ன பேசிக்கொண்டிருந்தோம் என்பதை எல்லுசாமி சொல்லச் சொல்ல, அம்மணியும் கிணத்தடியில் தான் அறிய நேர்ந்தவற்றைப் பகிர்ந்து கொண்டாள். பேச்சு நெடுகிலும், பெரியவன் தன் அம்மாவைக் கிண்டலடித்துக் கொண்டே இருந்தான்.

    சாப்பாட்டு வேளை முடிந்ததும், எல்லுசாமி புறக்கொல்லைக்குப் போனார் பீடி இழுக்க. பழுதான மருந்துத் தெளிப்பானை நோண்டிக் கொண்டிருந்தான் பெரியவன் துரைசாமி.

    காற்று பதமாய் வீசியது. மதுரைவீரன் கோயில் பாட்டுச் சத்தம் விட்டுக் விட்டுக் கேட்டது. நான்கு வீடு தள்ளி இருக்கும் சுசீலா டீச்சர் வீட்டில் ஒரே சிரிப்பும் கும்மாளமுமாய் இருந்தது. யாரோ அவர்களுடைய உறவினர்கள் வந்திருக்கிறார்கள் போலத் தெரிகிறது. காரவாசலில் உட்கார்ந்து, அம்மணியும் பக்கத்து வீட்டு ருக்மணியும் புளியம்பழம் தட்டிக் கொட்டைகளைத் தனியாகவும் புளியைத்தனியாகவும் பிரித்தெடுத்துக் கொண்டே ஊர் ஞாயம் பேசிக் கொண்டிருந்தனர்.

    முதலில் எல்லுசாமி வந்து படுக்கையைப் போட்டார். சித்த நேரத்திலெல்லாம் பெரியவன் போய்ப் படுத்துக் கொண்டான். ருக்மணி அக்காவை அனுப்பி வைத்த கையோடு, பண்டங்கன்னுக்கெல்லாம் தீவனம் போட்டு வந்தாள் அம்மணி. முன்வாசக்கதவு, பின்வாசக்கதவு எல்லாம் நாதாங்கி பூட்டப்பட்டு இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொண்டாள்.

    கீழ்த்தாழ்வாரத்தில் எல்லுசாமி கட்டிலில் படுத்திருக்க, அதனருகே தரையில் பாயை விரித்து தலையணை இடப்பட்டது. கம்மாளபட்டி போர்வை ஒன்றும் தலையணை மேல் கிடத்தப்பட்டது.

    பித்தளைச் சொம்பு நிறையத் தண்ணீரும் அதை மூடிய வாக்கில் டம்ளர் ஒன்றுமாகக் குடிதண்ணீரைக் கட்டிலின் கீழ் கைக்கெட்டும் தூரத்தில் வைத்துக் கொண்டாளவள்.

    தூங்குவதாய் இருந்தாலும் அது ஒரு வேலையாக இருக்க வேண்டும். அல்லாவிடில் அம்மணிக்குத் தூக்கம் வராது. மின்விளக்கெல்லாம் அணைக்கப்பட்டு, ஒளிரும் குறுஞ்சிமினி விளக்கொன்றைத் தலைமாட்டில் வைத்துப் படுத்துக் கொண்டாள்.

    முதலாவது வேலையாகப் பெரியவன் எப்படி ஒன்பது ஏக்கர் நிலத்தை பதினெட்டு ஏக்கராக்கப் போகிறான் எனும் யோசனை; அடுத்து, சின்னவனை எப்படிப் படிக்க வைத்து வெளிநாட்டுக்கு அனுப்பலாமென்கிற யோசனை; குடிக்கத் தண்ணீர் கேட்பது போன்ற உதவிகளைத் தன் மணவாளன் கேட்டால் உடனே அதைச் செய்ய வேண்டும் என்கிற ஆவல்; புறக்கொல்லையில் மாடு கன்றுகள் இருக்குமிடத்திலிருந்து ஏதாவது சலசலப்புக் கேட்டால், உடனே போய் எட்டிப் பார்க்க வேண்டும் என்கிற எச்சரிக்கையுணர்வு. இப்படியான பலவற்றுடன்தான்  இரவு கழியப் போகிறது அவளுக்கு.

    தூக்கத்தில் திடீரென எதையோ நினைத்துத் தனக்குத்தானே பேசிச் சிரித்துக் கொண்டாள். சிரிப்பொலி கேட்ட எல்லுசாமி தன் தலையைச் சற்றுத் தூக்கித் தன்னருகே தரையில் படுத்திருக்கும் அம்மணியை ஏறிட,   இன்று பூத்த பூப்போலக்  கொள்ளை அழகாய் இருந்தாள் அவள்!

    Share
  • ஒரு முடிவின் மறு பக்கம்

    ஸ்ரீஜா வெங்கடேஷ்

    நேற்றுவரை பிரபல கிரிமினல் வக்கீலாக இருந்த சத்தியமூர்த்தி இன்று நீதிபதி ஆகிவிட்டார். வாழ்த்துக்கள் வந்து குவிந்த வண்ணம் இருந்தன. அவர் நீதிபதியானதில் அவருடைய பெற்றோருக்குத்தான் மிகவும் மகிழ்ச்சி. வருவோர் போவோரிடத்தில் எல்லாம் சொல்லிச் சொல்லிப் பெருமைப் பட்டனர். சத்திய மூர்த்திக்கு வயது ஐம்பத்து எட்டு. 65 வயது வரை நீதிபதி பதவியில் இருக்கலாம் என்பது சட்டம். அதனால் அவருக்கு இன்னும் ஏழு வருட சர்வீஸ் இருக்கிறது.

    சத்திய மூர்த்தியை நீதிபதியாக நியமித்ததை எதிர்த்து மற்றொரு வக்கீலான சங்கரன் கோர்ட்டில் ஸ்டே வாங்க முயற்சி செய்தார். கிடைக்கவில்லை. சத்தியமூர்த்தியின் பழைய ரெக்கார்டுகள் அப்பழுக்கில்லாமல் இருந்தன. அதனால் சங்கரனால்  ஒன்றும் செய்ய முடியவில்லை. இருந்தாலும் மனதுக்குள் கருவிக் கொண்டிருந்தார்.

    சத்திய மூர்த்தியின் குடும்பத்துக்கென்று ஒரு பெரிய பங்களா ஒதுக்கப் பட்டது. சென்னையில் அமைச்சர்கள் குடியிருப்புகளுக்கு மத்தியில் இருந்த அந்த மாளிகை மிகவும் பெரியது. ஏழோ  எட்டோ அறைகள் இருந்தன. போதாததற்கு விசாலமான சாப்பாட்டுக் கூடம் அதற்கு அளவில் சற்றே குறைந்த சமையலறை மாடியில் வேறு அறைகள் என்று வீடு பிரம்மாண்டமாக இருந்தது. இது போதாதென்று தோட்டம் வேறு இருந்தது. மா  கொய்யா  மாதுளை போன்ற பழ மரங்கள் நிறைந்து ஒரு வனம் போலக் காட்சியளித்தது. இவற்றை எல்லாம் பராமரிக்க கூப்பிட்ட குரலுக்கு வேலையாட்கள் வேறு. கிட்டத்தட்ட ஒரு அரசனைப் போன்ற அந்தஸ்து. பின்னே நீதிபதி என்றால் சும்மாவா? நாட்டில் தூண்களில் ஒன்றல்லவா அவர்?

    சத்தியமூர்த்தியும்  அவர் மனைவியுமாக இரண்டே பேர் அத்தனை பெரிய வீட்டில் குடியேறினர். அவர்கள் மகன்கள் இருவரும் வெளி நாட்டில் இருந்ததால் அவர்கள் வரவில்லை. இது அனைவருக்கும் தெரியும். ஆனால் சத்திய மூர்த்தியின் தாய் தந்தையர் வராதது அனைவரின் கேள்விக்கும்  விமரிசனத்துக்கும் ஆளானது. இது குறித்து நேரிடையாக யாரும் நீதிபதியிடம் கேட்கவில்லை. கேட்கும் தைரியமும் இல்லை. சனி ஞாயிற்றுக் கிழமைகளில்  நீதிபதியும்  அவர் மனைவியும் அவர்களுடைய சொந்த வீட்டிற்குப் போய்விடுவார்கள். அந்த இரண்டு நாளும் சத்தியமூர்த்தி தான் ஒரு ஜட்ஜ் என்பதையே மறந்து சாதாரணமாகக்  காய் வாங்குவது  ஒட்டடை அடிப்பது  சோஃபா கவர் மாற்றுவது போன்ற வேலைகளைச் செய்வார். சாயங்காலம் ஆனால் பக்கத்தில் இருக்கும் பெசண்ட் நகர் பீச்சுக்கு பெற்றோர்களோடு போவார். ஞாயிறன்று முழு ஓய்வு. மீண்டும் திங்கட் கிழமை நீதிபதிகள் குடியிருப்புக்கு வந்துவிடுவார்கள்.ஒரு வாரம் கூட இந்த நியதி தவறியதில்லை.

    நீதிபதியின் மனைவியின் கை வண்ணத்தில் தோட்டம் அவர்கள் தோட்டம் மிளிர்ந்தது. வெற்றிலை  மிளகு போன்ற அபூர்வக்கொடிகள் இடம் பெற்றன. அதோடு பூசணி வெள்ளரி போன்றவையும் பயிரிடப் பட்டு  அவர்கள் தேவை போக வேலைக்காரர்கள் அவற்றை வீட்டுக்கு எடுத்துச் சென்றனர். கத்தரி  வெண்டைச் செடிகளும் போடப்பட்டுக் காய்த்துக் குலுங்கின. அந்த அம்மையார் கிராமத்தைச் சேர்ந்தவர் என்பதால் தானே முன்னின்று தோட்ட வேலைகள் எல்லாவற்றையும் மேற்பார்வை பார்த்தார்.

    கொஞ்சம் கொஞ்சமாக ஜட்ஜ் தன்னுடைய தாய் தந்தையரை தன்னுடன் வைத்துக்கொள்ளவில்லை என்ற செய்தி பரவியது. அது வக்கீல் சங்கரன் காதிலும் விழுந்தது. இந்தச் செய்தியை அவர் தனக்கு சாதகமாக எப்படி உபயோகித்துக் கொள்ளலாம் என்று சிந்தித்ததில்  அவர் மனதில் ஒரு யோசனை உதித்தது. அதைச் செயலாக்க வேண்டி நீதிபதி சத்தியமூர்த்தியின் பழைய வீட்டைத் தேடி ஒரு செவ்வாய்க் கிழமை சென்றார்.

    சங்கரன் எதிர்பார்த்தபடியே வயாதான தம்பதிகள் தனியாக இருந்தார்கள். அவர்களைப் பார்த்ததும் சரியான படிக்காத கிராமத்து ஆட்கள் என்பது தெரிந்து போனது அவருக்கு. ‘இவர்களைத் தன் பெற்றோர் என்று சொல்லக் கூச்சப்பட்டுத்தான் சத்தியமூர்ததி அவர்ளை உடன் அழைத்துச் செல்ல வில்லை போலும்’ என்று நினைத்துக் கொண்டார் சங்கரன். தன்னை அறிமுகப் படுத்திக்கொண்டு பேச ஆரம்பித்தார். அவர்கள் வந்தவரை உபசரித்து  காபி கொடுத்தனர். சங்கரன் மெதுவாக அவர்கள் மன நிலையை அறிய சத்தியமூர்த்தியைப் பற்றிக் கேள்விகள் கேட்டுப் பார்த்தார். அவர்கள் பதில் ஒன்றும் திருப்தி அளிப்பதாக இல்லை. இருந்தும் முயற்சியைத் தளர விடாத வக்கீல் இ இப்படித் தனியாக வாழ்வதன் கொடுமையைப் பற்றி பேச ஆரம்பித்தார்.

    ‘இத்தனை வசதிகள் இருந்தும்  மகனோடு இருக்க முடியலியேன்னு உங்களுக்கு ஏக்கமா இருக்கும் இல்லேம்மா?’

    ‘ஆமாம்ப்பா! என்ன பண்ண? பல்லக் கடிச்சுப் பொறுத்துக்கத் தான் வேணும். மகன் பெரிய பதவியிலே இருக்காம்லா?’

    ‘ஏன் நீங்க கூடப் போயி இருந்தா என்ன?’

    ‘அது சரியா வராதுல்லா! எங்களுக்கு இங்ஙனக்குள்ள பழகிட்டு. அதான் நாங்க அங்கே போகல’ என்றார்கள்.

    ‘மகனை விட்டுக் கொடுக்கிறார்களா பார்’ என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டவர் மீண்டும் தொடர்ந்தார். ‘அம்மா! உங்களை மாதிரி வயசான பெத்தவங்களை பையன் கவனிக்கல்லேன்னா  மகனுக்குத் தண்டனை வாங்கிக் குடுக்கலாம்னு சட்டம் வந்துடுச்சு தெரியுமா? நீங்க ஒண்ணும் பண்ண வேணாம் ! நான் சொல்ற இடத்துல கையெழுத்து மட்டும் போட்டா போதும். மிச்சத்தை நான் பாத்துக்கறேன் ‘ என்றார்.

    ‘யாரு நீ? எதுக்கு எங்களை என் மகனுக்கு எதிராத் தூண்டி விடுதே? உனக்கு என்னலே வேணும்? ‘என்று பெரியவர் கேட்டார் என்றால்

    ‘வாரியலால சாத்துங்க சொல்லுதேன். என்ன தைரியம் இருந்தா நம்ம வீட்டுப் படியேறி வந்து இப்பிடிப் பேசுவான்? நாசமத்துப் போறவனே! போ வெளியே’ என்று கடுமையாகத் திட்டி சங்கரனை வீட்டை விட்டு விரட்டாத குறையாக வெளியேற்றினார்கள். வெளியில் யாருக்கும் இந்த அவமானம் தெரியாமல் மறைத்து விட வேண்டும் என்று முடிவு செய்து கொண்டு அங்கிருந்து அசடு வழியத் திரும்பினார் சங்கரன்.

    இது நடந்து சில நாட்களுக்கெல்லாம் நீதிபதி சத்தியமூர்த்தி  சங்கரனைக் கூப்பிட்டு அனுப்பினார். அவருக்கு உள்ளூர உதறல். தான் செய்தது நீதிபதிக்குத் தெரிந்து விட்டதோவென்று கவலைப் பட்டார். அப்படித் தெரிந்தால் நீதிபதி என்ன செய்வார்? அவர் நினைத்தால் தன்னைப் பழி வாங்க வழியா இல்லை? ஐயையோ அவசரப்பட்டுத் தவறு செய்து விட்டோமேயென்று பயந்து கொண்டு இருந்தார் சங்கரன். கூப்பிட்டனுப்பியும் போகவில்லை என்றால் அது மரியாதை இல்லை என்று நினைத்து பலியாடு போல அவருடைய அறைக்குச் சென்றார்.

    சங்கரன் எதிர்பார்த்துச் சென்றது போல நீதிபதி அவ்வளவு கோபமாக இல்லை. சாதாரணமாகப் பேசி டீ கொடுத்து உபசரித்தார். சங்கரனுக்குத்தான் முள் மேல் உட்கார்ந்திருந்தது போல இருந்தது. சற்று நேரம் உலக விஷயங்கள் எல்லாம் பேசிய பிறகு விஷயத்துக்கு வந்தார் நீதிபதி.

    ‘ஏன் சங்கரன் நீங்க எங்க வீட்டுக்குப் போயிருந்தீங்களாமே? ‘

    ‘ஆமாம் சார்’

    ‘ஏன் சார் ? எங்க அம்மா அப்பாவை எனக்கு எதிராத் தூண்டி விட்டதாகக் கேள்விப்பட்டேனே உண்மையா அது?’

    இதற்கு சங்கரன் என்ன பதில் சொல்லுவார்? மௌனத்தை சம்மதமாக எடுத்துக் கொண்டு தொடர்ந்தார் நீதிபதி. ‘உங்களுக்கு இந்தப் போஸ்ட் கிடைக்கல்லேன்னு நீங்க கோபத்துல ஸ்டே வாங்க முயற்சி பண்ணுனீங்க ! அது சரி. ஏன்னா அது நேரிடையான அணுகுமுறை. அதை விட்டுட்டு வீட்டுல வயசானவங்க கிட்ட போயி இல்லாத்தையும் பொல்லாததையும் சொல்றது சுத்தக் கோழைத்தனம் சார். அது ஏன் உங்களுக்குப் புரியல்லே?’

    இதற்கும் மௌனம் சாதித்தார் வக்கீல்.

    ‘நான் ஏன் எங்க அப்பா அம்மாவை கூட வெச்சுக்கல்லேங்கறதுக்கு உங்களுக்கு விளக்கம் சொல்ல வேண்டிய அவசியம் எனக்கு இல்லை. இருந்தாலும் சொல்றேன் ஏன்னா மத்தவங்களும் நீங்க செஞ்ச மாதிரி முயற்சி செய்யக் கூடாது. எங்கப்பா அம்மாவை யாரும் தொந்தரவு பண்ணி அவங்களுக்கு மனசுக் கஷ்டம் குடுக்கக் கூடாது அதனால சொல்றேன்.’ என்றவர் ஒரு வாய்த் தண்ணீர் குடித்து விட்டுத் தொடர்ந்தார்.’ கவர்ன்மெண்ட் சார்பா எனக்குப் பெரிய வீடு  வேலைக்காரங்க எல்லாம் குடுத்திருக்காங்கன்னு நீங்க பொறாமைப் படறீங்க இல்லே! அது தான் காரணம் நான் என் பேரண்ஸை கூட வெச்சிக்காததுக்கு. ‘

    வக்கீல் விழித்தார்.

    ‘புரியும்படியாவே சொல்றேன். நான் வக்கீலா இருந்தப்போ என் சக்திக்குத் தகுந்த மாதிரி திருவான்மியூர் தாண்டி 900 சதுர அடியில ஒரு அப்பார்ட்மெண்ட் வாங்கினேன். அங்க தான் நாங்க எல்லாரும் இருந்தோம். இப்போ புதுசா பெரிய வீடு  வேலை ஆளுங்கன்னு எல்லா வசதியும் இருக்கு. இதெல்லாம் அவங்களுக்குப் பழகிடுச்சுன்னா  நான் ஏழு வருஷம் கழிச்சு ரிடயர் ஆகும் போது திரும்ப அந்த சின்ன வீட்டுல அட்ஜஸ்ட் பண்ணிக்க ரொம்பக் கஷ்டப் படுவாங்க. அது மட்டுமில்லே  இத்தனை வேலை ஆட்களையும் அவங்களுக்கு என்னால குடுக்க முடியாது. அப்போ அவங்க மனசு ரொம்ப வருத்தப்படும். வயசான காலத்துல அவங்க மனசு அதையெல்லாம் நெனச்சு ஏக்கப் படக் கூடாதுன்னும் இ எங்களுக்கும் பழைய பழக்கம் விட்டுப் போகக் கூடாதுங்கறதாலயும் தான் நான் அவங்களை என் பழைய வீட்டுலேயே ஒரு குறையும் இல்லாமே வெச்சிருக்கேனே தவிர வேற எந்தக் காரணமும் இல்லை.’ என்று நீண்ட தன் பிரசங்கத்தை முடித்தார்.

    மிகவும் உயர்ந்து விட்ட அந்த நீதிபதியின் எதிரில் கூனிக் குறுகியபடி ஒன்றும் பேசாமல் வெளியேறினார் சங்கரன்.

     

    Share
  • தாசரி

    நாகை வை. ராமஸ்வாமி

    ‘ஹாய் ரியாஸ் ஹௌ ஆர் யூ? வாட்ஸ் குகிங்?’

    ‘ஹல்லோ சந்திரன் வாங்க குகிங் நதிங்?’

    ‘அட அந்த ரியல் குகிங் இல்லப்பா என்ன விசேஷம்னு கேட்டேன்?’

    ‘அது தெரியுமில்ல நானும் சும்மா தான் சொன்னேன் ஒண்ணும் விசேஷம் இல்ல. ஆமா இன்னிக்கு ஹாலிடே தானே ஜாலிடேயா கொண்டாடுவோமே?’

    ‘அந்த ஐடியாவோட தாம்ப்பா நான் வந்தேன் தனியா சமைச்சு சமைச்சு போரடிச்சு போச்சு வெளிலே சாப்பிடுவோமா?’

    ‘ஓ சாப்பிடலாமே ஒய் நாட் கால் தாமஸ் டூ?’

    ‘யா ஐ வாஸ் ஆல்ஸோ தின்கிங் அபவுட் ஹிம்’

    ‘ஓகே கால் ஹிம்’

    ‘ஹலோ தாமஸ் ரியாஸ் ஹியர்’

    ஹை ப்ரதர் சர்ப்ரைசிங் அட் திஸ் அவர் ஆஃப் ஹாலிடே சொல்லுங்க’

    ‘ஒண்ணுமில்ல ப்ரதர் நானும் சந்திரனும் சந்திச்சோம். இன்னக்கு ஹாலிடேயை ஜாலிடேயாக்கலாமுன்னு யோசிச்சோம். என்ன ரெடியா? வீ வில் எஞ்சாய் டுடே நாளைக்கு கட் அடிப்போம். தென் சாடர்டே ரூ சன்டே. ரெஸ்ட் அண்ட் வாஷிங் எட்செட்ரா.’

    ‘யா லவ்லி ஐடியா. எங்க வரணும் எப்ப வரணும் டெல் மீ வில் பீ தேர் பிஃபோர் யூ’

    இந்தியாவின் வெவ்வேறு மாநிலத்திலுள்ளவர்களானாலும் வேறு வேறு மதத்தவர்களானாலும் தாமஸ் சந்திரன் ரியாஸ் தமிழைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள். வெவ்வேறு கம்பெனிகளின் வேலை
    நிமித்தம் மும்பையிலிருந்து ஒரே நாளில் ஒரே விமானத்தில் அமெரிக்காவின் ‘சான் ஃப்ரான்ஸில்கோ’ விமான தளத்தில் இறங்கிய பின் மிக நெருங்கிய நண்பர்கள்.

    அமெரிக்காவில் ‘ஸான் ஹோஸே (ளுயn துழளந)’யில் வாசம். ஆறு மாதங்களே ஆனாலும் அடிக்கடி சந்திப்பு ஊர் சுற்றல் அரட்டை சாப்பாடு.

    மாதச் சம்பளம் இந்திய ரூபாய் மதிப்பில் ஐந்து லட்சம். இந்த ஆரம்ப நிலை வேலையே இந்தியாவிலிருந்தால் ரூபாய் ஒன்றிலிருந்து ஒன்றரை லட்சம். அமெரிக்காவில் மேக்டோனால்ட் போன்ற இடங்களில் ஒரு கப் காபி 300 ரூபாய். அதுவே இந்தியாவில் ஒரு சாதாராண ஹோட்டலில் முப்பது.

    அவர்கள் அப்பா காலத்தில் அமெரிக்காவில் காபி 150 ரூபாயும் இந்தியாவில் ஐந்தாகவும் இருந்தது. அதற்கேற்ற சம்பளம் விலைவாசி. எதையும் ஒப்பிட்டுப் பார்த்தால் மலைப்பாகத்தான் இருக்கும்.

    ஒரு டாக்சி பிடித்து ஒரு இந்திய ஹோட்டலைக் கண்டுபிடித்து மூவருக்கும் பொதுவான வட இந்திய பஞ்சாபி வெஜ் ரோடி சாப்பாடு ஒரு பிடி பிடித்தார்கள்.

    பிறகு அங்கிருந்து கோல்டன் கேட் ஃபிஷர்மேன் வார்ஃப் முதலிய இடங்களுக்குச் சென்றுவிட்டு அன்று இரவு எல்லோருமே சந்திரன் ரூமிற்குச் சென்றுவிட்டார்கள்.

    எல்லோரும் டயர்டாக இருந்தாலும் மிகவும் மகிழ்ச்சியாக இருந்ததால் தூக்கம் வரவில்லை.

    ‘என்ன தாமஸ் ஆறு மாதமாக பழகி வருகிறோம் இன்னும் நாம் ஒருவருக்கொருவர் முழுவதுமாக தெரிந்து கொள்ளவில்லையே?’ என்றான் ரியாஸ்.

    ஒவ்வொருவராக அவர்களைப்பற்றி சொல்லவேண்டியது என்று தீர்மானித்தார்கள்.

    ‘முதலில் நீங்க சொல்லுங்க சந்திரன். வேர் ஆர் யூ ஃப்ரம்இ அபவுட் யுர் ஃபமிலி’

    ‘என்னத்த….சொல்ல?’

    ‘நிறைய தமிழ் படம் பார்ப்பீர்களா? என்னத்த கன்னயா மாதிரி இழுக்கிறீங்க?’

    ‘நாட் லைக் தட். எப்படி பிகின் பண்ணறது?…..ம்?.. ஓகே. ஐ வில் ஸ்டார்ட். ஐ வாஸ் பார்ன் ரூ ப்ராட் அப் இன் மும்பை. மை ஃபாதர் வாஸ் ஆல்சோ எ ஸாஃப்ட்வேர் எஞ்ஜினீர் ஆஃப் தோஸ் டேஸ் அண்ட் வீ ஆர் ஆல் மிடில் க்ளாஸ். ரென்டல் அகாமொடேஷன் தான் சொந்த வீடு கிடையாது.’ கொஞ்சம் அப்செட் ஆனான் சந்திரன்.

    ‘கமான் டியர். நன் ஆஃப் அஸ் ஆர் ஃப்ரம் ஹெவன். ப்ளீஸ் கன்டின்யூ.’ என்றார்கள் மற்ற இருவரும்.

    ‘எங்க கிராண்ட் டாட் தான் முதலில் மும்பை வந்தார் சம்வேர் இன் 1960. அவங்க அப்பா மை கிரேட் கிராண்ட் டாட் எல்லாம் மதுரை பக்கம் ஒரு கிராமம்.’

    ‘ஈஸ் இட்?’

    ‘யெஸ். மை கிராண்ட் டாட் லைஃப்ல ரொம்ப ஃபேமிலிக்காக சேக்ரிஃபைஸ் பண்ணி ஸஃபர் பண்ணியிருக்காங்கன்னு மை டாட் யூஸ்டு டெல்.’

    ‘ஒய்?’

    ‘அவங்க ஃபேமிலி ரொம்ப பெரிசு வித் லெஸ் இன்கம். அதனால தான் கிராண்ட் டேட் மும்பைக்கு வந்தாராம். அந்த காலத்து எஸ்.எஸ்.எல்.சி. மட்டும் 10 டைப்ரைட்டிங் ரூ ஷார்ட்ஹேண்ட்’

    ‘வாட் ஈஸ் திஸ் ஷார்ட்ஹேண்ட்?’

    ‘எ மெதேட் ஆஃப் ரைடிங் ஸ்போகன் வேர்ட்ஸ் இன் ஷார்ட் சைன் ஃபார்ம். அப்போ அவங்களுக்கு நல்ல டிமாண்ட்..’

    ‘ஓ நல்ல சேலரி கிடைத்திருக்கும்?’

    ‘யூ வில் நாட் பிலீவ். ஸ்டார்ட்டிங் சேலரி ஜஸ்ட் ருபீஸ் 150.’

    ‘வாட்? பெர் டே?’

    ‘நோ யார் மந்த்லி. அண்ட் அவங்க சிலவு போக மாதம் ரூபாய் ஐம்பது ஊருக்கு அனுப்பிடுவாங்களாம்.’

    ‘கிரேட். தென்?’

    தென் ஹி காட் மேரீட் அண்ட் மை ஃபாதர் வாஸ் பார்ன். அவங்க எஞ்னீயிரிங் படித்து யுஎஸ்ல ஸேன்ஹோஸேயில் ஒன் அண்ட் ஹாஃப் யியர்ஸ் இருந்தாங்க. அப்பத்தான் அவங்க மேரேஜ் ஃபிக்ஸ் ஆச்சு. அதாவது இங்கே ட்வின் டவர்ஸ் தாக்கப்பட்டதே அப்போ.’

    ‘ஓ மை காட். வேர் வாஸ் ஹி அட் தட் டைம்.?

    ‘வெரி ஃபார். நோ ப்ராப்ளம். அதுக்கப்புறம் இந்தியாவுக்கு திரும்பிவிட்டார். அப்புறம் அவருக்கு கல்யாணம். பட் ஹீ குட் நாட் ரிடர்ன் டு யு எஸ்.’

    ‘தென் ஐ வாஸ் பார்ன் என்னை நல்லா படிக்க வச்சார். போஸ்ட் கிராஜுவேட் இன் கம்ப்யூட்டர் டெக்னாலஜி பிஸைட்ஸ் சம் அடிஷனல் க்வாலிபிகேஷன் இன் மேனேஜ்மெனட் அண்ட் ஹியர் ஐ ஆம் வித் யூ ஆல். மை அம்பிஷன் ஈஸ் டு மேக் மை பேரன்ட்ஸ் ஹேப்பி ஹெல்தி அண்ட் கம்ஃபர்டபிள். தட்ஸ் ஆல் அபவுட் மீ. நௌ ரியாஸ் யூ ஸ்டார்ட்.’

    ‘வொன்டர்ஃபுல் அண்ட் இன்டரஸ்டிங். தாமஸ் நீங்க சொல்லுங்க. தென் ஐ வில்.’

    ‘ஓகே.. கொஞ்சம் வாக் போய்விட்டு வரலாம். வெதர் நல்லா இருக்கே. தூக்கம் வரலே. நாளைக்கு எல்லோரும் ப்ரேக் அடிச்சிட்டு ரெஸ்ட் எடுப்போம்.’

    ‘தட்ஸ் நைஸ். இப்போ வாக் போய்க்கிட்டே பேசுவோமே. தாமஸ் சொல்லுங்க.’

    ‘யா நாங்க டெல்லியிலே இருக்கோம். எங்க மதர் கிரிஸ்டியன் பட் டாட் ஹிந்து ஃப்ரம் மும்பை. மை மாம் இன்ஸிஸ்டட் தட் மை டாட் ஆல்ஸோ ஷுட் பிகம் எ கிரிஸ்டியன் பிஃபோர் மேரேஜ்னு கண்டிஷன் போட்டாங்க. ஸோ ஹீ பிகேம் ஜார்ஜ் ஃப்ரம் ஜானகிராம்.’

    ‘அப்படியா?’

    ‘யா டெல்லி ஈஸ் லவ்லி நாட் லைக் தோஸ் டைம்ஸ். எல்லாம் இன்டர் நேஷனல் ஸ்டான்டர்டு. மை டாட் ஒரு ஸ்மால் பிசினஸ்மேன்.’

    ‘ஓ ஆண்டர்ப்ரனர்?’

    ‘யெஸ். அப்பர் மிடில் க்ளாஸ். நல்லா படிக்க வெச்சாங்க. எனக்குப் பிடித்த டெக்னாலஜி. வேலை கிடைச்சுது. வந்துட்டேன். அவ்ளோதான்.’

    ‘ஹேய் வாட் ஈஸ் திஸ்? ஸோ சிம்பிள். உங்களுக்கு எந்த ஊர்?’

    ‘ஓ மை டாட் டோல்டு மீ தட் ஹிஸ் டாட் வாஸ் ஃப்ரம் டமில்நாட்.’

    ‘விச் ப்ளேஸ் இன் டமில் நாட்?’

    ‘மதுரைன்னு தான் சொன்னாங்க.’

    ‘அட என்ன ஒற்றுமை? ரியாஸ் நீங்க கூட சொன்னீங்க இல்ல? ஒங்க கிராண்ட்ஃபாதர் வாஸ் ஃப்ரம் மதுரை?’

    ‘யெஸ். யூ நோ வீ ஆர் கன்வர்டட் முஸ்லிம்ஸ். எங்க மதர் ஹிந்து. பட் எங்க ஃபாதர் முஸ்லிம்.

    ‘அவங்களும் மும்பையிலிருந்துதான் வந்தாங்க. சண்டிகர்ல செட்டில் ஆகிட்டாங்க.’

    ‘ஃபாதர் என்ன செய்றாங்க?’

    ‘லாயர்.’

    ‘நிறைய நடந்துட்டோம். ரூமுக்குப் போவோமா? வீ வில் டேக் சம் ஸ்லீப். நாளைக்குத் தான் ப்ரேக் அடிக்கப் போறோமே. பாக்கி நாளைக்குப் பேசலாம்.’

    ‘தட்ஸ் பெட்டர். கொஞ்சம் டயர்டாகத்தான் இருக்கு.’

    அடுத்த நாள் அவர்கள் எல்லோரும் சூரியனைப் பார்க்கும்பொழுது சூரியன் உச்சிக்கு வந்தாகிவிட்டது.

    குளித்து காபி போட்டு குடித்துவிட்டு வெளியே சாப்பிடக் கிளம்பும் நேரம் சந்திரனுக்கு இந்தியாவிலிருந்து செல் ஃபோனில் அழைப்பு வந்தது.

    ‘ஹலோ சந்திராஇ கண்ணா எப்படிப்பா இருக்கே? நீ இல்லாம ரொம்ப லைஃப்லெஸ்ஸா இருக்குப்பா. நல்லா சாப்பிடுகிறாயா? உடம்பு நல்லா இருக்கா?’

    ‘அப்பா நீங்க எப்படி இருக்கீங்க? அம்மா எப்படி இருக்காங்க? ரெண்டு பேரும் ‘செக்கப்’ போனீங்களா?’

    ‘எக்சலன்ட். ஒன்லி திங் ஈஸ் வீ மிஸ் யூ டூ மச்.’

    ‘அப்பா ஒங்க ரெண்டு பேரையும் நான் த்ரீ மச் மிஸ் பண்றேன்.’

    ‘டேய் என்ன கடி ஜோக்கா? சரி ஃப்ரண்ட்ஸ் எல்லாம் பிடிச்சிட்டியா?’

    ‘யெஸ். அப்பா நானே சொல்லணும்னு இருந்தேன். எனக்கு பெஸ்ட் ஃப்ரண்ட்ஸ் ரெண்டு. ப்யூட்டி ஈஸ் அவங்க ஒருத்தர் தமிழ் கிரிஸ்டியன் இன்னொருத்தர் தமிழ் முஸ்லிம் பட் அவங்க கிராண்ட் பேரண்ட்ஸ் எல்லாம் மதுரை தான்.’

    ‘அப்படியா? இன்டரஸ்டிங்.’

    ‘அப்புறம் ஒரிஜினலி அவங்க ஹிந்துக்கள்.’

    ‘ஈஸ் இட்?. ஓகே ஜாக்கிரதையா இருப்பா. அம்மா தூங்கியாச்சு’

    ‘ஓகே. அம்மாவை எழுப்ப வேண்டாம். என்னுடைய வந்தனம் சொல்லிட்டு கவலைப்படாமல் இருக்கச் சொல்லுங்க. டேக் கேர்.’

    மற்ற இரு நண்பர்களும் அவர்கள் பெற்றோர்களுடன் பேசி நண்பர்கள் பற்றி சொன்னார்கள்.

    எல்லோருடைய பெற்றோர்களுக்கும் நண்பர்களின் தாத்தா பாட்டி மதுரை என்று கேள்விப்பட்டதும் அவர்களைப் பற்றி விபரம் சேகரிக்கச் சொன்னார்கள்.

    முதலில் ரியாஸ் அவன் அம்மாவிடம் பேசினான். ‘அமீ எப்படி இருக்கீங்க’

    ‘ரியாஸ் ரியாஸ்…’

    ‘அமீ ஏன் பேச மாட்டேங்கறீங்க? ரோத்தீ ஹை? (அழுகிறீர்களா?) நல்லா இருக்கீங்களா? வாப்பா எப்படி இருக்காங்க?’

    ‘நஹீ பேட்டா ஒன்ன நினைச்சு கண் கலங்கிட்டேன். இன் ஷா அல்லா நல்லா இருக்கோம். நீ எப்படி இருக்கே? சாப்பாடு கிடைக்குதா? வேலை பிடிச்சிருக்கா? நேத்து தானே பேசினே? உடம்பு சுகமில்லையா?’

    ‘நஹீ அமீ. ஒரு விஷயம் தெரிஞ்சுக்கணும். இங்க எனக்கு பெஸ்ட் தோஸ்த் கிடைச்சிருக்காங்க. தமிழ்காரங்க அவங்க பேரண்ட்ஸ் கூட மும்பையிலிருந்தவங்க. ஆனால் அவங்க தாத்தா பாட்டி மதுரை பக்கம் ஏதோ குள்ளிப் பள்ளம்னு சொன்னாங்க. நம்ம தாத்தா ஊரும் மதுரை பக்கம்னு நீங்க சொல்லியிருக்கிங்களே?’

    ‘ஹாங் பேட்டா. அது குள்ளிப் பள்ளம் இல்ல முள்ளிப் பள்ளம். ஆமா. எதுக்கு இந்த கபர் (விஷயம்) எல்லாம் கேக்கிற? அதெல்லாம் வாணாம்ப்பா நானே மறந்துகிட்டிருக்கேன்.’

    ‘சும்மா சொல்லுங்க அமீ. எங்க தோஸ்த்துங்களுக்கு தெரிஞ்சிருக்கலாமில்ல?’

    ‘அவிங்களுக்கு எப்படிப்பா தெரியும்? தாத்தா பாட்டி இறந்து 35 40 வருஷம் ஆகிப்போச்சே?’

    ‘அவங்க அப்பா அம்மாவுக்குத் தெரிந்திருக்குமில்ல?’

    ‘டீக் ஹை டீக் ஹை. அவங்க பேர் சங்கரன் கௌரி.’

    ‘தேங்க் யூ அமீ. அப்புறம் எங்க மாமா பேரும் சொல்லுங்க.’

    ‘அதெல்லாம் வாணாம்ப்பா எங்க அண்ணன் ரெண்டு பேரும் என்னய மறந்துட்டாங்கப்பா’ என்ற போது அம்மாவின் துயரம் தெரிந்தது ரியாஸுக்கு.

    ‘நஹீ தோ சோட் தீஜியே அமீ (வேண்டாமென்றால் விட்டு விடுங்கள்). நீங்க வருத்தப் படாதீங்க.’

    ‘நஹீ பேட்டா பெரிய மாமா பேர் சுந்தரம் சிறியவர் ஜானகிராம்.’

    ‘பஹுத் அச்சா அமீ. இது போதும். நான் அப்புறம் பேசுகிறேன். வாப்பாகிட்ட சொல்லுங்க சப் டீக் சல்தா ஹை. குதா ஹாஃபிஸ்’

    ‘ஓகே பேட்டா நல்லா இரு ஜாக்கிரதையா இரு. குதா ஹாஃபிஸ்’

    இந்த விபரங்களைக் கேட்ட தாமசுக்கு ஏதோ பொறி தட்டினாற் போல் இருந்தது. ஏனென்றால் அவன் அப்பா கிறிஸ்தவராக மாறுவதற்கு முன் அவர் பெயர் ஜானகிராம்.

    உடனே அவன் அப்பாவுடன் தொடர்பு கொண்டு விபரங்களைச் சொன்னவுடன் அவருக்கு அதிர்ச்சியான மகிழ்ச்சி ஏற்பட்டது. ஏனெனில் அவரது தங்கை தான் ரியாஸின் அம்மா.

    சந்திரனும் அவன் அம்மாவிடம் பேசியதில் அவன் அப்பாதான் ரியாஸின் பெரிய மாமா சுந்தரம் என்பதும் தெரிந்தது.

    விபரங்கள் ஒவ்வொன்றாக வர ஆரம்பித்து பெற்றோர்களிடம் தெரிவித்ததும் தான் ஆச்சரியம் காத்திருந்தது. ஒரே தாத்தா பாட்டியின் பேரர்கள் தான் நண்பர்கள் மூவரும் என்று தெரிந்ததும் வியப்பும் மகிழ்ச்சியும் பொங்கின.

    சகோதர் இருவரும் சகோதரி ஒருவரும் திருமணத்திற்குப் பின் மதத்தால் வேறுபட்டதால் பேச்சு வார்த்தை அறுந்தது. உறவு முறிந்தது. இழந்த உறவு அவர்களின் குழந்தைகளால் ஒன்றாகியது.

    அதைக் கொண்டாட மூவரின் பெற்றோர்களும் அமெரிக்காவுக்கு வரவழைக்கப்பட்டனர். எல்லோருக்கும் உலகம் மிகச் சிறியது அதில் வாழும் காலமோ கொஞ்சமே அதை ஏன் கெடுத்துக்கொள்ளவேண்டும் என்ற உணர்வு மேலோங்கியது

    இளமைப் பிராயத்தில் பிரிந்து சுமார் 25 ஆண்டுகளுக்குப் பின் முதுமையைத் தொடும் வயதில் சந்தித்த, அந்த ரத்த பாச பழுத்த இலைகள் (மலர்கள் என்று சொல்லலாம் என்றால் வயதானவர்களாயிற்றே) கண்கள் குளமாகி வார்த்தைகள் குளறி, நெஞ்சங்கள் விம்மின. பிரிந்தவர் கூடினால் பொங்கும் மகிழ்ச்சி வெள்ளம் அங்கும் பெருகியது.

    50 ஆண்டுகளுக்கு முன் அங்கொன்றும் இங்கொன்றுமாக பெற்றோர்களுக்குத் தெரிந்தும் தெரியாமலும் ஒப்புதலுடனும் ஒப்புதல் இல்லாமலும் காதல் கலப்புத் திருமணங்கள் நடக்கத்தொடங்கிய காலம்.

    காலப்போக்கின் கட்டாயத்தினாலும் சமூக நிர்பந்த்தத்தினாலும் சினிமா தொலைக்காட்சி ஊடகங்களின் தாக்கத்தினாலும் இம்மாதிரி நிகழ்வுகளை பல பெற்றோர்கள் சங்கடத்துடனும் சிலர் சந்தோஷத்துடனும் ஏற்றுக்கொள்ளும் கட்டாய நிலை உருவாகிவிட்டது.

    இன்னும் 50 ஆண்டுகளுக்குப் பின் இந்நிலை இன்னும் மாறுதல் அடையக் கூடும். சாதி மத அடையாளம் காட்ட முடியாத அளவுக்கு கலப்புத் திருமணங்கள் பெருகிவிடுமாதலால் அங்கொன்றும் இங்கொன்றுமாக ஒரே சாதி மத வகுப்பைச் சேர்ந்தவர்களுக்குள் (அப்படி எங்காவது இருந்தால்) திருமணங்கள் நடைபெற குறைந்த பக்ஷ வாய்ப்புக்கள் மட்டுமே இருக்கும்.

    கலப்பு காதல் திருமணங்கள் ஏறத்தாழ ஒவ்வொரு குடும்பத்திலும் ஏன் சாதி சம்பிரதாயத்தில் ஊறி வெளியே வர இயலாத குடும்பங்களிலும் கூட சகஜமாகி விடும்.

    ஆனால் இந்நிலை வருங்கால சந்ததியினரின் நன்மைக்கா இல்லையா என்பதை காலம் தான் சொல்லவேண்டும். மதச் சார்பில்லா மனிதத்தை நேசிப்பவர்கள் நன்மையே என்று தான் வாதாடுவார்கள்.

    Share
  • சுழல்

    முகில் தினகரன்

    குடிசைக்கு வெளியே குத்துக்காலிட்டு அமர்ந்தவாறு ஒருவித ரசிப்புடன் பீடியை உறிஞ்சிக் கொண்டிருந்தான் வீரண்ணன். சற்றுத் தள்ளி அவன் மனைவி சிகப்பி பாத்திரங்களைத் தேய்த்துக் கொண்டே இவனையும் கரித்துக் கொட்டிக் கொண்டிருந்தாள்.

    ‘த பாருய்யா…மூத்தவ தலைப் பிரசவத்துக்கு வந்து உட்கார்ந்துட்டிருக்கா…எப்படியும் ரெண்டு மூணு நாளுல வலி கண்டிடும்…எனக்கென்னமோ நம்மூரு கவருமெண்டு ஆசுபத்திரி தோதுப்படாதுன்னு தோணுது…பக்கத்தூரு பிரைவேட்டு ஆசுபத்திரிக்குத்தான் இட்டுட்டுப் போவணும்…அதுக்கெல்லாம் காசு பணம் கொஞ்சங் கூடுதலா ஆவும்….அதப் போயி ஏற்பாடு பண்ணுவியா….அத விட்டுட்டு இங்க உக்காந்து பீடி வலிச்சிட்டிருக்கியே…உனக்கு எதுனாச்சும் இருக்கா?’

    ‘அட ஏண்டி சும்மா கெடந்து கூவுற?…வேலை வெட்டி ஒண்ணும் சரியா கெடைக்கலைடி…மழைக்காலமாப் போனதால் டூர் வர்ற ஜனங்க எண்ணிக்கையும் கொறைஞ்சிடுச்சு…இந்தச் சமயத்துல ‘ரெண்டாயிரம் ஆவும்…மூவாயிரம் ஆவும்’ ன்னா எங்கடி போவேன் நான்?’ வீரண்ணனும் பதிலுக்குக் கத்த,

    பாத்திரங்களை அப்படியே போட்டு விட்டு எழுந்து அவனருகே வந்தவள் சுற்றும் முற்றும் பார்த்து விட்டு அவன் காதோரமாய் ‘த பாருய்யா…தேவை பெரிய தொகை….அதனால பாவ புண்ணியம் பாக்காம….ஆளிழுக்கற வேலையப் பண்ணிடு…’ என்றாள்.

    ‘என்னடி சொல்றே?’

    ‘காலேஜி பசங்க ஆத்துக்கு குளிக்க வர்றாங்கல்ல?…அதுல எவனாச்சும் ஒருத்தனை உள்ளார கொண்டு போய் பாறையிடுக்குல சொருகிடு…அப்புறம் பேரம் பேசி சவமெடுக்கறதுக்குன்னு பெரிய தொகையா வாங்கிடலாம்’

    ‘சீச்சீ…பாவம்டி அது…’

    ‘ஆமா…இப்படி பாவ புண்ணியம் பார்த்துட்டே இருக்கறதாலதான் இன்னமும் நீ இப்படியே அஞ்சுக்கும் பத்துக்கும் அல்லாடிட்டிருக்கே….இதே அந்த ரெங்கனைப் பாரு….எப்படியும் மாசம் ரெண்டு ஆளை இழுத்துடறான்…பெரிய தொகை பாத்துப் போடறான்…’

    நிறைமாத வயிறோடு குடிசைக்குள்ளிருந்து வெளியே வந்த மூத்த பெண் சுந்தரி ‘அய்யா…கவருமெண்டு ஆசுபத்திரி ஆவாது…பிரைவேட்டு ஆசுபத்திரிலதான் புள்ளப் பெக்கணும்னு எங்க மாமியா சொல்லியே அனுப்பிச்சிருக்கு…’ என்று அவள் பங்குக்கு சொன்னாள்.

    ‘க்கும்…நீயே சொல்லு…நானும் சொல்லிச் சொல்லி ஓய்ஞ்சு போயிட்டேன்..’ சிகப்பி மீண்டும் பாத்திரங்களுக்கு நடுவில் சென்றமர்ந்தாள்.

    ஒரு நீண்ட மனப் போராட்டத்திற்குப் பிறகு எழுந்து ஆற்றங்கரையை நோக்கி நடந்தான் வீரண்ணன்.

    ஆற்றகரையில் கூட்டம் அவ்வளவாக இல்லை. ஆங்காங்கே வாலிபப் பசங்க கூட்டம் மட்டும் ‘காச்…மூச்’ சென்று கத்திக் கொண்டு தண்ணீரில் குதியாட்டம் போட்டுக் கொண்டிருந்தது.

    சற்றுத் தள்ளி கூட்டம் குறைவான பகுதியில் ஐந்தாறு இளைஞர்கள் நீரில் விளையாடிக் கொண்டிருக்க அவர்களை குறி வைத்தான் வீரண்ணன்.

    நீருக்குள் இறங்கி மூச்சடக்கி, ஆழப்பகுதிக்குச் சென்று அந்த இளைஞர்கள் இருக்கும் பகுதியை அடைந்தான். மெல்ல மேல் நோக்கி வந்து, கையில் சிக்கிய ஒரு காலை இழுத்துக் கொண்டு மறுபடியம் ஆழத்திற்குச் சென்றான். பாறைகள் நிறைந்த பகுதி வரை இழுத்துச் சென்றவன் ஒரு பாறை இடுக்கில் அந்தக் காலைச் செருகி விட்டு, நீருக்கடியிலேயே நகர்ந்து நீண்ட தூரம் சென்ற பின் மேலெழும்பி வந்தான். எதுவுமே நடக்காதது போல் நீரிலிருந்து வெளியேறி கரையில் நடந்து சென்ற வீரண்ணனை யாருமே கண்டு கொள்ளவில்லை.

    அங்கிருந்து புறப்பட்டு அரைக் கிலோ மீட்டர் தள்ளியிருக்கும் ஒரு டீக்கடையில் வந்தமர்ந்து அழைப்புக்காகக் காத்திருந்தான்.

    ஒரு டீ…ஒரு பீடி!…ஒரு டீ….ஒரு பீடி!…என மாறி மாறி உறிஞ்சிக் கொண்டிருந்தவனை நோக்கி ஒரு கூட்டம் கத்திக் கொண்டெ ஓடி வர எதுவும் தெரியாதவன் போல் விசாரித்தான். ‘ஏம்பா…என்னாச்சு உங்களுக்கு?…எதுக்கு இப்படி ஓடி வர்றீங்க?’

    ‘அய்யா…அய்யா…எங்களோட வந்த ஒருத்தனைக் காணலை…உள்ளார போயிட்டான் போலிருக்கு….காப்பாத்துங்கய்யா…ப்ளீஸ்…’ கதறியவன் கண்களில் வண்டி வண்டியாய்ப் பீதி.

    ‘அடடே…’ என்றபடி அவசரமாய் எழுந்து வேட்டியை மடித்துக் கொண்டு வேக வேகமாய் ஓடினான் வீரண்ணன். அந்த இளைஞர் கூட்டமும் கூடவே ஓடி வந்தது.

    ‘எந்த எடத்திலப்பா குளிச்சிட்டிருந்தீங்க?’ தெரியாதவன் போல் கேட்டான் வீரண்ணன்.

    ஒரு இளைஞன் காட்டிய இடத்தைப் பார்த்து உதட்டைப் பிதுக்கி ‘அய்யய்ய…அங்க தண்ணிக்குள்ளார நிறைய சுழலு இருக்குதப்பா…அங்க ஏன் போனீங்க?’

    ‘எங்களுக்குத் தெரியாதுங்கய்யா…நாங்க வெளியூரு’

    ‘சரி…சரி…எவ்வளவு நேரமாச்சு…ஆளு காணாமப் போயி?’

    ‘ஒரு….முக்கால் மணி நேரம் இருக்கும்ங்கய்யா’

    ‘ப்ச்…அப்பக் கஷ்டந்தான்….சொழலுல சிக்கி உள்ளார பாறைல போய் மாட்டியிருந்தா இந்நேரத்துக்கு உசுரு போயிருக்கும்…’

    வீரண்ணன் சொன்னதும் அந்த இளைஞர்கள் கோரஸாய் அழ ‘சரி…சரி…இருங்க பாத்துடலாம்…’

    அவர்கள் குறிப்பிட்ட இடத்தில் முங்கி சில நிமிடங்களுக்குப் பிறகு மேலே வந்து ‘உள்ளார ஆள் இருப்பதாத் தெரியலையே…’ என்றான் வீரண்ணன்.

    ‘அடிச்சிட்டுப் போயிருக்குமோ என்னவோ?’ கூட்டத்தில் எவனோ ஒருவன் பொத்தாம் பொதுவாய்ச் சொல்ல,

    ‘அப்படி அடிச்சிட்டுப் போயிருந்தா…இன்னேரத்துக்கு அஞ்சாறு கிலோ மீட்டராவது தாண்டிப் போயிருக்கும்…’

    அழுது கொண்டிருந்த இளைஞர் கூட்டத்தில் சற்று தைரியமான ஒருவன் முன் வந்து ‘அய்யா….என்ன ஆனாலும் சரி…எவ்வளவு பணம் ஆனாலும் சரி…எங்களுக்கு பாடிய எடுத்துக் குடுத்துடுங்க…இப்பத்தான் அவங்க பேரண்ட்ஸ்க்குப் போன் பண்ணியிருக்கேன்…அவங்க வந்திட்டிருக்காங்க….’

    ‘ஆஹா…அப்ப பெரிய தொகை வந்திட்டிருக்கு…சரி…அந்தப் பையனைப் பெத்தவங்க வர்ற வரைக்கும் தேடுற மாதிரி பாவ்லா பண்ணிட்டு அவங்க வந்தப்புறம் பாடிய எடுத்து காசு வாங்கிடணும்’ மனசுக்குள் கணக்குப் போட்டான் வீரண்ணன்.

    ஆனால் இதையெல்லாம் மேலிருந்து பார்த்துக் கொண்டிருக்கும் ஆண்டவன் அதே கணக்கை வேறு விதமாய்ப் போட்டுக் கொண்டிருப்பது பாவம் அவனுக்குத் தெரியாது.

    மூன்று மணி நேரத்திற்குப் பிறகே அவர்கள் வந்து சேர்ந்தனர். வந்தவுடன் தாயும் தகப்பனும் கதறிய கதறல் வீரண்ணனை சந்தோஷப்படுத்தியது. ‘பய மேல ரொம்ப பாசம் போலிருக்கு…பாடிய எடுத்துக் குடுக்க எவ்வளவு கேட்டாலும் நிச்சயம் தருவாங்க’

    சிறிது நேரத்திற்குப் பிறகு, பாவ்லா போதுமென முடிவு செய்த வீரண்ணன் தண்ணீருக்குள் முங்கி தான் செருகி வைத்த இடத்திலிருந்து அந்த உடலை இழுத்துக் கொண்டு மேலே வந்தான்.

    கரையில் தூக்கி வந்து போட்ட அந்த சடலத்தைப் பார்த்த வீரண்ணன் அதிர்;ந்து போனான். அந்த இளைஞனுக்கு வலது கை சிறிய வெள்ளரிப் பிஞ்சு போல் சூம்பிப் போய் தோளிலிருந்து அரையடியெ இருந்தது. முன் பகுதியில் பேருக்கு இரண்டு குட்டி விரல்கள் ஒட்டிக் கொண்டிருந்தன.

    முதன் முறையாக வீரண்ணனுக்கு மனசு வலித்தது.

    ‘ஏம்பா! இப்படி இருக்கற பையன் ஏனப்பா தண்ணில எறங்கணும்?’ தன் அங்கலாய்ப்பை வீரண்ணன் கேட்டே விட,

    ‘இந்த எடத்துல ஆழமில்லைன்னு சொன்னாங்கய்யா…அத நம்பித்தான் நாங்க இவனை எறங்க அனுமதிச்சோம்…’

    சடலத்தைச் சுற்றி அமர்ந்து நீண்ட நேரம் அழுது கொண்டிருந்தவர்களிடம் ‘நான் கௌம்பனும்…என்னை கவனிங்க’ வீரண்ணன் சொன்னான.

    மூவாயிரம் ருபாய் கைமாறியதும் புறப்பட்டான்.

    ‘ச்சே….கை சூம்பிப் போன பையனை இழுத்திட்டுப் போய்ச் சொருகிட்டோமே…’ வீடு வந்து சேரும் வரைக்கும் அந்த உறுத்தல் வீரண்ணனை கொல்லாமல் கொன்றது.

    குடிசையில் யாரும் இல்லாதிருக்க தெருவுக்கு வந்து தலையில் துணி மூட்டையோடு சென்று கொண்டிருந்த வண்ணாத்தியிடம் கேட்டான்.

    ‘அடக் கெரகமே….தெரியாதா உனக்கு?…உன்ர மவளுக்கு பிரசவ வலி வந்து…பிரைவேட்டு ஆசுபத்திரிக்குக் கொண்டு போயிருக்காங்க…பணங் கட்டுறதுக்கு உன்னையக் காணோம்னு வலை போட்டுத் தேடிட்டிருந்தாங்க…சீக்கிரமா ஓடு’

    ஓடினான்.

    இன்னும் பிரசவம் ஆகவில்லை. பணம் கட்டி விட்டுக் காத்திருந்தனர்.

    நொடிகள் நிமிடங்களாக….நிமிடங்கள் மணியாக கரைந்து கொண்டிருக்க…

    ‘ஆம்பளக் கொழந்த பொறந்திருக்கு’ நர்ஸ் ஒருத்தி வந்து சொன்னாள்.

    ‘அப்பாடா….’ நிம்மதிப் பெருமூச்சு விட்டபடி அறைக்குள் சென்று தொட்டிலில் கிடந்த அந்த ஆண் குழந்தையைப் பார்த்த வீரண்ணனின் தலை ‘கிர்’ரென்று சுழன்றது.

    ஒரு கை சூம்பிப் போய் பாதியே இருக்க, முன்பகுதியில் பேருக்கு இரண்டே இரண்டு குட்டி விரல்கள் ஒட்டியிருந்தன.

    (முற்றும்)

    பின்குறிப்பு: எங்கள் கோயமுத்தூரில், நகரத்தை விட்டுத் தள்ளி இருக்கும் ஒன்றிரண்டு நீர் நிலைகளில் சில கும்பல்கள் செய்து கொண்டிருக்கும் இந்த கொடூரச் செயல் பற்றி கிட்டத்தட்ட பல பேர் அறிந்திருந்த போதும், மாதம் ஒன்றிரண்டு இளைஞர்கள் பலியாகிக் கொண்டுதானிருக்கின்றனர்.

    இக்கதையைப் படித்த பிறகு கொஞ்சமேனும் விழிப்புணர்வு ஏற்பட்டால் அது போதும் எனக்கு.

     

    Share
  • மாற்றான் தோட்டம்

    தமிழ்த்தேனீ

    யதேச்சையாக கண்ணில் பட்டாள் அவள்.

    அப்பப்பா  என்ன அழகு, ஆனால் பல நூறு ஆண்டுகளாய்  சோகை படிந்த  தேவதையின் ஓவியம் கருமேகத்தின்  இடைவெளியில்  மின்னல் கீற்று பளீரென்று தெரியும் போது  தோன்றி மறைவது போல்  அவள் அழகைத் தாண்டி அவள் கண்ணில்  ஒரு சோகம். தெளிவாகத் தெரிந்தது. அவள் கண்களின் கீழே கருவளையம் அவள் முகத்தின்  சோகத்தை வெளிப்படையாகப் பறைசாற்றிக் கொண்டிருந்தது.

    அரசல் புரசலாக அவள்  வாழ்க்கை அம்பலத்துக்கு வந்தது. பார்யா ரூபவதி சத்ரு என்னும் பழமொழி நினைவுக்கு வந்தது. ஆனால் அந்தப் பழமொழி உண்மையானால் அவள் கணவன் கண்களில் அல்லவோ சோகம் தெரியவேண்டும், இங்கே மாறாக இருக்கிறதே?

    மனதில் தோன்றிய சந்தேகத்தை நிவர்த்தி செய்துகொள்ள அவளைப் பற்றி, அவள் குடும்பத்தைப் பற்றி விசாரிக்கத் தொடங்கினான் ரமேஷ்.

    அவள் குழந்தையிலேயே அழகாக இருந்ததால் அவளுக்கு ரூபா என்றே பெயரிட்டிருந்தனர் அவளுடைய பெற்றோர்.

    காலைத் தொடும் நீண்ட கருகருவென்ற  கேசம், தாமரைத் தடாகத்திலே நீந்தும் மீனைப் போன்ற அகலமான கரிய விழிகள், தீர்மையான நாசி, சற்றே இதழ் விரிந்திருக்கும் ரோஜா மொட்டுப் போன்ற உதடுகள், அசாத்தியமான, அலங்காரமான வளைவுகளுடன் மோவாய், அதற்கும் கீழே சங்குக் கழுத்து, இதற்கு மேலும் வர்ணிப்பது பாவம் என்று தோன்றியது ரமேஷுக்கு. என்ன இருந்தாலும் அவள் மாற்றான் தோட்டத்து மலர்.

    அந்த மலரை வாடாமல்  மெல்லிய கைகளின் அழுத்தமும் இல்லாமல் இடைவெளிவிட்டு  பொத்தி வைத்துக்கொண்டு,  காலம் முழுவதும்   வைத்துக்கொண்டு காப்பாற்றி, அவள் முகத்தில் ஆனந்த மயமான புன்னகையை வரவழைத்து, அவள் முகத்தில் சிரிப்பைத் தவிர சோகத்தின் நிழலே விழாதவாறு,   ஒரு தேவதையை உபாசனை செய்வது போல், அவளை உபாசித்தால்தான் தன் ஜென்மம் கடைத்தேறும்  என்று உணர்ந்தான் ரமேஷ். 

    எப்படி இது சாத்தியமாகும்? எப்படி அவளை அந்தச் சிறையிலிருந்து விடுவிப்பது என்பதே சிந்தனையாய் மூளைக்குள் சுழன்று சுழன்று அவனை அசத்திக்கொண்டிருந்தது. இதற்கு எப்படித் தீர்வு காண்பது என்னும் யோசனையில் இருந்த அவனுக்கு பலவிதமான சந்தேகங்கள். அவள் இவனை நம்புவாளா? ஏற்கெனவே ஒரு ஆண்மகனால் கொடுமைப் படுத்தப்பட்ட பெண்னின் மனநிலையில் இன்னொரு ஆண்மகனை நம்பி தன் வாழ்க்கையை ஒப்படைப்பாளா? அவள் நம்பிக்கையை எப்படிப் பெறுவது என்றெல்லாம் எண்ணங்கள் குறுக்கும் நெடுக்குமாக மூளைக்குள் வலம் வரத் தொடங்கின.

    ஒரு மனிதனுக்கு அழகான மனைவி அமைவது வரம். அப்படி வரம்போல் அமைந்த அழகான மனைவியை மகிழ்ச்சியாக வைத்துக்கொண்டு வாழாமல், எப்படி ப்ரச்சனைகளை உருவாக்கிக் கொண்டு தானும் நிம்மதியில்லாமல் அந்த தேவதையையும் நிம்மதியாக இருக்க விடாமல் இப்படி இருக்கிறார்கள் மனிதர்கள் என்று  நினைத்தால் ஆத்திரம் வந்தது ரமேஷுக்கு.

    எப்போதுமே மனிதன் கிடைக்காதவரையில் அது கிடைக்க ஏங்குகிறான், ஆனால் அது கிடைத்ததும் அதன் மதிப்பு தெரியாமலே வாழ்கிறான். எப்போதுதான் இவர்கள் திருந்துவார்களோ.

    சரி இந்த தேவதையை நாம் எப்படியாவது நல்லபடியாக வாழவைக்கவேண்டும். நாம் இவளை வைத்துக்கொண்டு வாழ்வதைப் பார்த்தாவது இவரைப் போன்ற மனிதர்கள் திருந்தட்டும்.  இவன் திருந்தினால் என்ன, திருந்தாவிட்டால் நமக்கென்ன, கண்ணுக்கெதிரே துன்பப்படும்  இவளை எப்பாடுபட்டாவது காப்பாற்ற வேண்டும் என்று மனது துடித்தது.

    அவன் எதிர் பார்த்த வாய்ப்பு அதிர்ஷ்டவசமாக அவனைத் தேடி வந்தது.

    ஆமாம் வாசலில் யாரோ அழைப்பு மணியை அடிப்பது கேட்கவே, ஜன்னல் வழியே பார்த்தவன் அதிர்ந்தான். அந்த அழகுத் தேவதை அவன் வீட்டு வாசலில் நின்றிருந்தாள். ஓடிப்போய்க் கதவைத் திறந்து, “என்ன வேண்டும் வாருங்கள் உள்ளே” என்றான். 

    “அதற்கெல்லாம் நேரமில்லை என் புருஷனுக்கு திடீரென்று நெஞ்சு வலி எனக்கு பதட்டமாக இருக்கிறது” என்று பதறினாள் அவள். இதோ ஒரு நொடியில் வருகிறேன் என்று கூறிவிட்டு, கதவைப் பூட்டிக்கொண்டு, அவனுடைய காரை எடுத்து ஓட்டிக்கொண்டு வந்து  அவர்கள் வீட்டு வாசலில் நிறுத்திவிட்டு,  கைத்தாங்கலாய் அவள் புருஷனைக் கூட்டிவந்து காரில் உட்காரவைத்துவிட்டு, அவளையும் ஏற்றிக்கொண்டு மருத்துவமனைக்கு சென்று,  அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்த்துவிட்டு….

    அவள் ஓய்ந்து போய் உட்கார்ந்திருந்தாள். “நீங்கள் கவலைப்படாதீர்கள், ஒன்றும் ஆகாது”  என்று அவளுக்கு ஆறுதல் கூறினான்.

    “நீங்கள் அவர்மேல் இவ்வளவு பாசத்துடன் இருக்கிறீர்களே அவர் ஏன் உங்களை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ள முடியாமல் இருக்கிறார்” என்றான்.

    “என்னை நீங்கள் நீ என்றே அழையுங்கள்”, என்றாள் அவள்.

    “என் தலைவிதி அப்படி இருக்கிறது, நான் அழகாகப் பிறந்ததுலே என்னோட தப்பு என்ன இருக்குன்னே புரியலை. எப்போ பாத்தாலும் என்னை சந்தேகப் பட்டுக்கொண்டே இருக்காரு. நான் எப்பிடி நிரூபிக்கிறதுன்னே புரியலை” என்று கேவினாள் அவள்.

    “நான் ஒண்ணு சொன்னா தப்பா நெனைக்க மாட்டீங்களே, உங்களோட அருமை அவருக்கு புரியலை. எனக்கு மட்டும் உங்களை மாதிடி ஒரு பொண்ணு கிடைச்சிருந்தா அப்பிடியே தங்கத் தாம்பாளத்திலே வெச்சுத் தாங்குவேன்” என்று கூறிவிட்டு  அவளையே பார்த்தான் ரமேஷ்.

    அவள் அவனை நோக்கி ஒரு விரக்திப் புன்னகையை வீசிவிட்டு “எப்படி உங்களால் இவரிடமிருந்து என்னைப் பிரித்து அழைத்துப் போகமுடியும், இதெல்லாம் நடக்கிற காரியமா” என்றாள்.

    “நீ மட்டும்  சரின்னு சொல்லு ரூபா, நீ மட்டும் சரின்னு ஒரு வார்த்தை சொல். இனிமே உன் கண்ணுலேருந்து ஆனந்தக் கண்ணிர்தான் வரணும், அதுக்கு நான் பொறுப்பு” என்றான் தீர்மானமாக.

    “இவரைப் பத்திக் கவலைப்படாம, இவர் கண்ணிலேயே அகப்படாத இடத்துக்கு உன்னைக் கூட்டிக்கிட்டு போய் நான் காலமெல்லாம் சந்தோஷமா வெச்சிக்கறேன், இது சத்தியம்” என்றான் உணர்ச்சி வசப்பட்டு.

    அவள் இவன் மேல் சாய்ந்து அழத்தொடங்கினாள், அவளை தலையை ஆதரவாகத் தடவிக் கொடுத்து, “இனிமேல் உன் கண்ணுலேருந்து ஆனந்தக் கண்ணீரமட்டும்தான் வரணும்.  நான் பாத்துக்கறேன்” என்றான் ரமேஷ்.

    சொன்ன வாக்கைக் காப்பாற்ற, தகுந்த இடமாகப் பார்த்து அவளை  பெங்களூருக்கு அழைத்துப் போய் ஒரு பெரிய வீட்டில் வாழத் தொடங்கினர் இருவரும். வாழ்க்கை மிக மகிழ்ச்சியாகப் போய்க்கொண்டிருந்தது.

    இவர்கள் இருந்த வீட்டிற்கு எதிர் வீட்டில் குடியிருந்தான் கமலேஷ், யதேச்சையாக கண்ணில் பட்டாள் அவள், அப்பப்பா  என்ன அழகு, ஆனால் பல நூறு ஆண்டுகளாய்  சோகை படிந்த  தேவதையின் ஓவியம் கருமேகத்தின்  இடைவெளியில்  மின்னல் கீற்று பளீரென்று தெரியும் போது  தோன்றி மறைவது போல்  அவள் அழகைத் தாண்டி அவள் கண்ணில்  ஒரு சோகம். தெளிவாகத் தெரிந்தது. அவள் கண்களின் கீழே கருவளையம் அவள் முகத்தின்  சோகத்தை வெளிப்படையாகப் பறைசாற்றிக் கொண்டிருந்தது.

    அவன் மனதில் ஒரு வைராக்கியம் தோன்றியது. சரி இந்த தேவதையை நாம் எப்படியாவது நல்லபடியாக வாழவைக்கவேண்டும். நாம் இவளை வைத்துக்கொண்டு வாழ்வதைப் பார்த்தாவது இவரைப் போன்ற மனிதர்கள் திருந்தட்டும், கண்ணுக்கெதிரே துன்பப் படும்  இவளை எப்பாடுபட்டாவது காப்பாற்ற வேண்டும் என்று மனது துடித்தது. மனதில் தோன்றிய சந்தேகத்தை நிவர்த்தி செய்துகொள்ள அவளைப் பற்றி, அவள் குடும்பத்தைப் பற்றி விசாரிக்கத் தொடங்கினான் கமலேஷ்.

    ஒரு நாள் அவள் மட்டும் தனியாக இருக்கும்போது “உன் புருஷன் ரமேஷைப்  பத்திக் கவலைப்படாம நீ மட்டும் சரின்னு ஒரு வார்த்தை சொல் ரூபா, இந்த ஆளு  கண்ணிலேயே படாத இடத்துக்கு உன்னைக் கூட்டிக்கிட்டு போய் நான் காலமெல்லாம் சந்தோஷமா வெச்சிக்கறேன், இனிமே உன் கண்ணுலேருந்து ஆனந்தக் கண்ணீர்தான் வரணும் அதுக்கு நான் பொறுப்பு. இது சத்தியம்” என்றான் தீர்மானமாக உணர்ச்சி வசப்பட்டு  கமலேஷ் . 

    Share
  • கொள்ளி எறும்பு

    சு.கோதண்டராமன்

     

    காலையில் காப்பி குடித்து விட்டு செய்தித் தாள் பார்த்துக் கொண்டிருந்த ராஜாராமின் முகம் சட்டென்று இறுகியது. “கமலா …. ”. அவரது குரலில் இருந்த வழக்கத்துக்கு மாறான கடுமையால் அதிர்ச்சி அடைந்த அவரது மனைவி ஓடி வந்தாள்.

    “சோதனைச் சாலையின் சாவி உன்னிடம் தானே இருக்கிறது, வேறு யாரிடமும் கொடுக்கவில்லையே? ” கோபத்துடன் அவர் கேட்டார்.

    “இல்லையே. என்னைத் தவிர வேறு யாரும் அதில் நுழையவில்லையே. என்ன ஆயிற்று? ” பதற்றத்துடன் கேட்டாள் கமலா.

    “சரி, சோதனைச் சாலையைத் திற, பார்ப்போம்” என்று எழுந்த அவர், மனைவியைத் தொடர்ந்து அதில் நுழைந்தார். பூட்டப்பட்டிருந்த கம்பி வலைப் பெட்டியைத் திறந்து அதனுள்ளிருந்த இன்னொரு கம்பி வலைப் பெட்டி, அதனுள் இன்னொன்று என்று மூன்று பூட்டுகளைத் திறந்து ஒரு சிறு அலுமினியப் பெட்டியை எடுத்தார். அதை அப்படியே வாளித் தண்ணீரில் முக்கி எடுத்து விட்டுத் திறந்தார்.

    உள்ளே பெரிய எறும்புகள் நிறைய இருந்தன. அவை தூங்கிக் கொண்டிருந்தன. ராஜாராம் அவற்றைத் தட்டில் கொட்டி எண்ணினார். மொத்தம் 30 எறும்புகள் இருந்தன.

    “சரியாகத் தான் இருக்கிறது. பின் அது எப்படி நடந்தது? ” எனத் தனக்குள்ளேயே பேசிக் கொண்டு உட்கார்ந்து விட்டார்.

    தந்தையின் கோபக் குரலைக் கேட்டு விழித்துக் கொண்ட சுரேஷ் அப்படிக் கோபமூட்டிய விஷயம் என்னவாக இருக்கும் என்று அவர் பார்த்துக் கொண்டிருந்த செய்தித் தாளை நோட்டம் விட்டான். மூன்றாவது பக்கத்தின் அடி மூலையில் இருந்த ஒரு செய்தி அவன் கவனத்தைக் கவர்ந்தது.

    “பர்னிச்சர் கடையில் திருடர்கள் கைவரிசை. நூற்றுக் கணக்கான பிளாஸ்டிக் நாற்காலி மேஜைகள் அபேஸ். பூட்டை உடைக்காமல் கொள்ளை அடித்த மர்மம்” என்று தலைப்பிட்ட திருநெல்வேலிச் செய்தி ஒன்று இருந்தது.

    “ரொக்கம், மரச் சாமான்கள் இரும்புச் சாமான்கள் அப்படியே இருக்க பிளாஸ்டிக் சாமான்களை மட்டும் திருடர்கள் சூறையாடிச் சென்றிருந்தனர். இந்தத் திருட்டு தினம் தோறும் நடைபெறுகிறது. போலீசார் இது பற்றிப் புலன் விசாரித்து வருகின்றனர். ”

    அப்பாவின் பதற்றத்துக்கு இந்தச் செய்தி தான் காரணம் என்று அவனுக்குப் புரிந்தது.

    யோசனையில் ஆழ்ந்திருந்த ராஜாராம் திடீரென்று ஏதோ ஞாபகம் வந்தவர் போல் எழுந்தார். உள்ளூர் காவல் நிலையத்துக்குப் போன் செய்து திருநெல்வேலி காவல்துறைக் கண்காணிப்பாளரின் எண்ணைத் தெரிந்துகொண்டு அவருடன் பேசத் தொடங்கினார்.

    “ஹலோ, நான் கோயம்புத்தூரிலிருந்து விஞ்ஞானி டாக்டர் ராஜாராம் பேசுகிறேன். உங்கள் ஊரில் பிளாஸ்டிக் சாமான் திருட்டு என்று ஒரு செய்தி பார்த்தேன். அதைத் தொடர்ந்து அக்கம் பக்கத்தில் இது போன்ற நிகழ்ச்சி வேறு ஏதேனும் நடந்ததா ? ”

    “வேறு எங்கும் நடக்கவில்லை. ஒரு கடையில் மட்டும் தினம் தோறும் 10, 15 பிளாஸ்டிக் சாமான்கள் காணாமல் போகின்றன. ”

    “என்னால் உங்களுக்கு உதவ முடியும் என நினைக்கிறேன். உங்களை நேரில் சந்திக்க விரும்புகிறேன். நாளை பகல் 12 மணிக்குள் 10 கிலோ உடைந்த பிளாஸ்டிக் வேண்டும். பாலிதீன் பைகளாகவும் இருக்கலாம். பழைய சாமான் கடைகளில் சொல்லி இதற்கு ஏற்பாடு செய்து விட்டு எனக்கு போன் செய்யவும். விபரம் நேரில் சொல்கிறேன். நான் உடனே புறப்பட்டு வருகிறேன். ”

    மறு நாள் காலை 9 மணிக்கு ராஜாராம் திருநெல்வேலி காவல் துறைக் கண்காணிப்பாளரின் முன் இருந்தார். தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டபின், “பிளாஸ்டிக் சாமான்கள் மட்டும் காணாமல் போயிருந்தால் அது திருட்டு அல்ல. அது ஒரு வகை எறும்புகளின் வேலை. நான் 15 வருடமாக ஆராய்ச்சி செய்து ஒரு வகை எறும்பு – அதற்கு கொள்ளி எறும்பு என்று பெயர் வைத்துக் கொள்ளுங்கள் – உருவாக்கி இருக்கிறேன். இதற்கு ஆகாரமே பிளாஸ்டிக் தான். ஒரு எறும்பு ஒரு நாளைக்கு அரை கிலோ பிளாஸ்டிக் வரை சாப்பிடும். இதோ பாருங்கள். இந்தப் பெட்டியில் 30 எறும்புகள் உள்ளன. இதற்குத் தான் நான் பிளாஸ்டிக் குப்பை கேட்டேன். இது போன்ற எறும்புகள் தான் இந்த வேலையைச் செய்திருக்க வேண்டும். ”

    அவர் கூறியதை நம்ப முடியாமல் கண்காணிப்பாளர் அவரை உற்றுப் பார்த்தார். ராஜாராம், “குப்பை இருக்கும் இடத்துக்கு நாம் போவோம். அவை சாப்பிடும் வேகத்தைப் பார்த்தால் தான் நீங்கள் நம்புவீர்கள். ”

    அவரது திட்டப்படி பத்தடிக்குப் பத்தடி ஒரு திட்டு அமைக்கப்பட்டு அதில் பிளாஸ்டிக் குப்பை கொட்டப்பட்டது. அதைச் சுற்றிலும் ஒரு அடி அகலத்திற்கு தண்ணீரால் நனைக்கப்பட்டது.

    ராஜாராம் தன் சூட்கேசில் இருந்து ஒரு சிறு அலுமினியப் பெட்டியை எடுத்தார். அதைத் தண்ணீரில் முக்கி விட்டுத் திறந்தார். மிகக் கவனமாகச் சிந்தாமல் சிதறாமல் எறும்புகளைத் திட்டில் கொட்டினார். சிறிது நேரம் மயக்க நிலையில் இருந்த எறும்புகள் பின்னர் அசைய ஆரம்பித்தன. திட்டில் கொட்டப்பட்டிருந்த பிளாஸ்டிக் பொருட்களைத் தின்னத் தொடங்கின. என்ன வேகம்! ஒரு மணி நேரத்துக்குள் அத்தனை குப்பையும் காலி. எல்லோரும் திறந்த வாய் மூடாமல் பார்த்துக் கொண்டிருந்தனர்.

    ராஜாராம் ஒரு வாளித் தண்ணீரைத் திட்டில் தெளித்தார். உடனே எறும்புகள் மயக்க நிலையை அடைந்தன. அவர் அவற்றை ஒவ்வொன்றாக எண்ணிப் பெட்டியில் போட்டார். எண்ணிக்கையை உறுதி செய்துகொண்டபின் பெட்டியைச் சூட்கேசில் பத்திரப்படுத்திவிட்டு நிமிர்ந்தார்.

    கண்காணிப்பாளர் ஆச்சரியம் தாங்காமல், “இது என்ன வகை எறும்பு ? எங்கிருந்து வந்தது ? உங்களிடம் மட்டும் தான் இருக்கிறதா ? ” என்று கேட்டார்.

    ராஜாராம் பேசத் தொடங்கினார். “நான் பூச்சி இனங்களைப் பற்றி ஆராய்ச்சி செய்வதற்காக ஆப்பிரிக்கா சென்றிருந்தேன். காங்கோ காட்டில் ஒரு இடத்தில் மரங்கள் பட்டுக் கொண்டிருப்பதைப் பார்த்தேன். அங்கே ஒரு எறும்புக் கூட்டம் இருநதது. அவை ஒவ்வொன்றின் வாயிலும் ஒரு கரையான். பல நாள் தொடர்ந்து கவனித்ததில் ஒரு உண்மை புலப்பட்டது. அந்த எறும்புகள் பயங்கரப் பசி கொண்டவை. ஒரு கூட்டம் ஒரு நாளில் ஒரு மரத்தைத் தின்று விடும். ஆனால் அவற்றுக்கு ஒரு விசித்திரமான குறைபாடு. ஈரம் அவற்றுக்குப் பகை. ஈர மரத்தை அவை நெருங்க முடியாது. அதற்காக அவை ஒரு தந்திரம் செய்கின்றன. ஒவ்வொரு எறும்பும் ஒரு கரையான் பூச்சியை வாயில் கவ்விக் கொண்டு மரத்தின் அடி வரை செல்கின்றன. கரையான்கள் எறும்புகளின் கட்டளைக்கு இணங்க மரத்தின் அடிப்பகுதியில் குடைந்து மரம் பட்டுப் போகச் செய்கின்றன. மரம் காய்ந்தபின் எறும்புகள் அதை உண்கின்றன.

    “நான் அந்த எறும்புகள் சிலவற்றைப் பிடித்து ஊருக்குக் கொண்டு வந்தேன். என்னுடைய ஆராய்ச்சிச் சாலையில் வைத்து மரபணு மாற்றம் மூலம் ஒரு புதிய வகை எறும்பை உருவாக்கினேன். நீங்கள் பார்த்த இது தான் அது. பிளாஸ்டிக் மட்டும் தான் சாப்பிடும். தண்ணீர் பட்டால் மயங்கிவிடும். என்னிடம் உள்ள எறும்புகளை எப்போதும் ஈரத்திலேயே வைத்திருக்கிறேன். பகல் 12 மணிக்கு எழுப்பி பிளாஸ்டிக் குப்பைகளை உணவாகக் கொடுத்துவிட்டு மறுபடியும் மயங்க வைத்து விடுவேன். அவை விழித்திருந்தால் நாள் பூராவும் உணவு உண்டு கொண்டே இருக்கும். என்னுடைய ஆராய்ச்சி இன்னும் முடியவில்லை. என்னுடைய கவலை என்னவென்றால் என் கட்டுப் பாட்டை மீறி திருநெல்வேலியில் ஒரு எறும்புக் கூட்டம் உருவாகி இருக்கிறது. இதை இப்படியே விட்டால் ஒரு வருடத்திற்குள் உலகம் முழுவதும் பரவி பிளாஸ்டிக் பொருட்களே இல்லாமல் செய்து விடும். ”

    “ஆம். இனிமேலும் இது பரவாமல் தடுக்க நீங்கள் தான் வழி சொல்ல வேண்டும். ”

    “உடனடியாக இந்தச் சம்பவம் நடந்த தெருவைச் சுற்றி அகழி போல்  தண்ணீரால் இடைவிடாது நனைத்துக் கொண்டிருக்க வேண்டும். அங்கு உள்ள பிளாஸ்டிக் பொருட்களை எல்லாம் அகற்ற வேண்டும். இப்படி மூன்று நாள் அவைகளுக்கு ஆகாரம் கிடைக்காமல் பார்த்துக் கொண்டால் அவை ஒன்றை ஒன்று தாக்கிக் கொன்றுவிடும். அப்பொழுது தான் நாம் பிழைக்கலாம்.

    அரசாங்கத்திற்குச் செய்தி பறந்தது. அனுமதி பெறப்பட்டது. பத்திரிகை, தொக்கா நிருபர்கள் அழைக்கப்பட்டனர். ராஜாராம் சொன்னபடி போர்க்கால முனைப்புடன் வேலைகள் நடந்தன. நகரம் முழுவதும் இதே பேச்சாக இருந்தது. 

    மறுநாள் வேறு எங்கும் இந்த மர்மத் திருட்டு நடக்கவில்லை. இப்படி 5 நாள் கழிந்தபின் தெரு மக்கள் தத்தம் பொருட்களை வீட்டுக்குக் கொண்டுவந்தனர்.

     திருநெல்வேலி நகரம் மட்டுமல்ல. உலகமே ஒரு நிம்மதிப் பெருமூச்சு விட்டது. ஆனால் டாக்டர் ராஜாராம் மட்டும் கவலையுடனேயே இருந்தார். தன்னுடைய ஆராய்ச்சி ரகசியம் யாராலோ திருடப் பட்டிருக்க வேண்டும் எனச் சந்தேகித்தார். குற்றவாளி சிக்காத வரை ஆபத்து நீங்கவில்லை என்பதைக் காவல் துறைக்குத் தெரிவித்தார்.

    காவல் துறையினர் டாக்டர் ராஜாராம் வீட்டுக்கு வந்து உள்ளும் புறமும் சுற்றிப் பார்த்தனர். அவரது உறவினர்களையும் அயலார்களையும் அவரது வீட்டுக்கு வரும் பால்காரர் முதலானவர்களையும் துருவித் துருவி விசாரித்தனர். சாவி ராஜாராமின் மனைவியிடம் இருந்ததால் அவளைத் திரும்பத் திரும்பக் கேள்விகளால் துளைத்தனர்.

    “நன்றாக யோசனை செய்து பாருங்கள். கடந்த 15 வருடத்தில் ஒரு நாள் கூட சாவியை நீங்கள் வேறு யாரிடமும் கொடுத்தது கிடையாதா ? ”

    கமலா ஆழ்ந்து யோசனை செய்தாள். “ஆம். ஒரே ஒரு நாள், சென்ற வருடம், உடல் நலமில்லாமல் படுத்திருந்த போது வேலைக்காரியை விட்டு அந்த அறையைச் சுத்தம் செய்யச் சொன்னேன். அவள் என் கண் எதிரிலேயே கூட்டிக் குப்பையை வாசலில் கொட்டி விட்டு வந்து பூட்டி என்னிடம் சாவியைக் கொடுத்து விட்டாள். ”

    காவலர்கள் வேலைக்காரியை விசாரித்ததில் விஷயம் வெளிவந்தது. ஒரு தாடிக்காரர் அடிக்கடி அவளிடம் வந்து ராஜாராமின் சோதனைச் சாலையில் எழுதப்பட்ட நோட்டுகள் ஏதேனும் இருந்தால் எடுத்துத் தரும்படி கேட்டுக் கொண்டிருந்தார். 5000 ரூபாய் தருவதாக ஆசை காட்டினார். நீண்ட நாட்களாகக் காத்திருந்த அவளுக்கு அன்று ஒரு வாய்ப்புக் கிடைத்தது. குப்பையை வாசலில் கொட்டப் போகும்போது அறையிலிருந்த டயரியையும் எடுத்துச் சென்றாள். அதன் பக்கங்களை பிரதி எடுத்துக் கொண்டு எடுத்தது தெரியாமல் வைத்து விட்டுப் பூட்டிச் சாவியைக் கொடுத்து விட்டாள்.

    அவள் கொடுத்த தகவலின் பேரில் காவலர்கள் அந்தத் தாடிக்காரரை வலை வீசிப் பிடித்து விட்டனர். திருநெல்வேலி வாசியான அவர் ராஜாராமுடன் கல்லூரியில் எம்.எஸ்சி. படித்தவர் என்றும் தேர்வில் காப்பி அடித்ததற்காக தடை செய்யப்பட்டவர் என்றும் தெரிய வந்தது. எப்படியாவது வி்ஞ்ஞானி என்று பெயர் எடுக்க வேண்டும் என்ற ஆசையில் ராஜாராமின் சோதனை ரகசியங்களைத் தெரிந்து கொள்ளப் பாடு பட்டதாகச் சொன்னார்.

    “டயரியில் இருந்தபடி பிளாஸ்டிக் தின்னும் எறும்புகளை உருவாக்குவதில் வெற்றி பெற்றேன். ஆனால் அவற்றைக் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கும் முறை அந்த டயரியில் இல்லை. எனவே அவை என் கையை மீறிச் சென்றுவிட்டன. ”

    டாக்டர் ராஜாராம் மீண்டும் தன் ஆராய்ச்சியைத் தொடர்கிறார். அவரது முயற்சி விரைவில் வெற்றி பெற வாழ்த்துவோம். 

    Share
  • தனியொருவனுக்கு உணவில்லையெனில்!

     

    பாரதி

    11 மணி வெயிலின் சூடு காலைத்தாக்க, ‘உச்‘ என்ற சப்தத்துடன் அலுத்துக்கொண்டார் காமராஜ்.

     “தாத்தா! 17டி பஸ் போயிடுச்சா?“

    “சாதா பஸ் போச்சுன்னு சொன்னாங்க! நானும் அதுக்குத்தான் நிக்கறேன்!“

     “என்ன! கொடியைத் தலைகீழாகப் பின் பண்ணியிருக்கே?“

    “அதுவா! ப்ச்! அப்பா பின் பண்ணச் சொன்னாரு. சரியா நான் பின் பண்ணலையா? நல்லவேளை! சொன்னீங்க! இல்லைன்னா என் ஃப்ரெண்ட்ஸ் சிரிச்சுருப்பாங்க!“

    “ஸ்கூல்ல கொடி ஏத்திட்டு திரும்பறியா!“

    “இல்ல தாத்தா! எங்க ஸ்கூல்ல எல்லாரையும் கூப்பிட மாட்டாங்க! “………………………..“

    “என் ஃப்ரெண்ட் இருக்கற தெருல இன்னைக்கு இண்டிபென்டன்ஸ் டே செலிப்ரேஷன். அங்க இருக்கற ஒரு அஸோஸியேஷன் மூலமா ஒரு ப்ரோக்ராம்“.

    காமராஜிக்கு தன் பையிலிருக்கும் ஸ்வீட்டை எடுத்து அந்தச் சிறுவனிடம் கொடுக்கும் ஆவல் மனசுக்குள் எழுந்தது. இருந்தாலும், பஸ் ஸ்டாப்பில் நின்று சிறுவனிடம் கொடுப்பதும் பேசுவதும் சரியாயிருக்காது என்றெண்ணி பஸ் வருகிறதா? எனப் பார்த்தார் காமராஜ். பழ வண்டிக்காரனிடம் வாங்கிய பழங்களும் ஃப்ரிட்ஜிலிருந்து எடுத்து வைத்த மில்க் ஸ்வீட் பையும் கையைக் கனக்கச் செய்தன.

    பிளாட்ஃபார்ம் நிறைய முளைத்த தள்ளுவண்டிக்கடைகள் மனிதர்களை நடுரோட்டில் நடக்கச் செய்ததைக் கவனித்தபடி நின்றிருந்தார்.

    சரேலென இடிக்கும்படி தன் பக்கத்தில் வந்து நின்ற காரை எரிச்சலுடன் பார்த்தார் காமராஜ்.

    “என்ன பஸ்ஸுக்கா காமராஜ்! பாத்து ரொம்ப நாளாச்சே! நெறைய சேஞ்சஸ் உங்கிட்ட எனக்குத் தெரியுதே!“ குளிர்பதன வசதியுடன் கூடிய அதிநவீன சொகுசுக் கார் கண்ணாடியை இறக்கியபடி, கதவைத் திறந்தபடி வந்த நேருவை உற்றுப் பார்த்தார் காமராஜ்.

    “நீ சக்கரைப் பொங்கல் எடுத்துட்டுப் போறியா?“

    “எதுக்கு?“ கையை ஆதுரத்துடன் தடவியபடி, மறந்துடு.

    “மறக்கக்கூடியதா நேரு! அந்தக்கால இன்டிபெண்டன்ஸ்டே செலிப்ரேஷன்“

    “சரி! அதெல்லாம் அந்தக்காலம்! இன்னைக்கு என்ன இந்தப்பக்கம்? வீடு இங்க வாங்கிட்டு வந்துட்டாலும் காளி கோயிலுக்குப் பழமும், ஸ்வீட்டும் அப்பப்ப பண்டிகைன்னா எடுத்துண்டு போவேன். இன்னைக்குன்னு பாத்து டிரைவர் வரலை. பேரன் டிவில ஏதோ சினிமான்னு டிரைவ் பண்ண வர மாட்டேன்னு சொல்லிட்டான். ஒண்டிக்கட்டை! அவ போனதுக்கப்புறம் நான் டிரைவ் பண்றதில்லை!“

    “அதான் பஸ்ல போயிடலாம்னு வந்தேன். செருப்பு போட மறந்துட்டேன்.“

    “உன் போலீஸ் டூயூட்டிக்கு இன்னைக்கு லீவா?“

    “வேலை எங்க என்னை விடும்? நானா தான் லீவு போட்டிருக்கேன். பேத்தி பிறந்திருக்கா எனக்கு! நாலு நாளா பாக்கப் போகலை! அவ்வளவு பிசி! இன்னைக்கும் போகலைன்னா அவ்வளவு நல்லாயிருக்காதுன்னு கிளம்பினேன். வழியில பழவண்டிக்காரனைப் பார்த்தேன். இவர் அப்பா அந்தக்காலத்து சுதந்திரப் போராட்ட வீரர். ரொம்ப நாளா இவருக்கு நான் ஒரு ரெகுலர் கஸ்டமர். எனக்குன்னா ரெண்டு பழம் கூடப் போட்டுத் தருவார்.

     எங்கோ ‘ஆடுவோமே! பள்ளுப் பாடுவோமே!‘ பாட்டின் ஒலியை ரசித்தபடி இருந்த பையனை வினோதமாகப் பார்த்தார் காமராஜ்.

    “என்ன தாத்தா பாக்கறீங்க! பஸ் வர்ற வழியாத் தெரியல?“ “இந்த சாங் எங்க தாத்தாவுக்கு ரொம்பப் பிடிக்கும். எனக்குக்கூட ரொம்பப் பிடிக்கும்“.

    “மொபைல்ல ஃபோன் பண்ணி அப்பாவை வரச்சொல்லி வண்டில போலாம்ல. என்கூட கார்ல வேணும்னா வர்றியா?“

    என்னிடம் மொபைல் கிடையாது. நாட் அலவ்ட் ஃபார் சில்ட்ரன்னு அப்பா சொல்லிட்டார்.

    “நோ தாங்ஸ் போலீஸ் தாத்தா!. தகுதிக்கு மீறி ஆசைப்படறது தப்புன்னு எங்க தாத்தா சொல்லியிருக்கார்“.

    “இன்னைக்குக் கார்ல போனா நாளைக்கும் அதே சுகம் கேட்கும்னு நினைக்கறியா“ நேரு கேட்டது சிறுவன் காதுக்குச் சென்றதோ இல்லையோ! அதையும் மீறிய பலத்த அடி விழும் ஓசை கேட்டது.

    “விடு! விடு! ஏம்பா அடிக்கற?“ எனக் கேட்டார் காமராஜ்.

    “பின்ன என்ன சார்! நானும் எம் பொஞ்சாதியும் கஷ்டப்பட்டு பழத்தை அடுக்கி வைச்சுட்டு உக்காந்துருக்கோம். நைசா லபக்குன்னு ஒரு ஆப்பிள் பழத்தை எடுக்குறான்“.

    “பசிக்குதுன்னு எடுத்தேன். திருடலை! நாளைக்குக் காசு கொடுத்துடுடலாம்னு நினைச்சேன். சின்ன பழந்தானே, அண்ணே! அதுக்குள்ள….“

    “ஒறவு மொறை சொல்ற லட்சணத்தைப் பாருங்க பிச்சைக்காரப்பய!“ என்னவோ கூடப்பிறந்த பொறப்பு மாதிரி!“

    “கிழிஞ்ச சட்டை போட்டிருக்கேன்னு தானே பிச்சைக்காரப்பயன்னு சொல்ற!“

    “ஐ யம் பி.எஸ்.ஸி  மேத்ஸ் ஃபர்ஸ்ட் கிளாஸ் கிராஜீவேட் தெரியுமா?“

    “எல்லாந் தெரியுண்டா?“ இங்க வளந்தவந் தானே!

    17டி பஸ் வந்து நின்றும் யாரும் ஏறவில்லை.

    “நீ கிராஜீவேட்டாயிருந்தாலும் திருடித் திங்கறது தப்பில்லையா?“

    “போலீஸ்ல பிடிச்சிக் குடுக்கணும் இவனை! பத்து ரூபாய் கொடுத்து ஒத்த பழம் வாங்க வக்கில்லை“.எனக் கூறிய காதில் மாட்டலுடன் கூடிய ஜிமிக்கி அணிந்த பழவண்டிக்காரனின் மனைவியை வெறிக்கப் பார்த்தார் நேரு.

    ரோட்டைத் தாண்டிய எதிர்ப்புறம் சாக்கடையை ஒட்டிய இடத்தில் கிழிசல் சட்டையைப் பார்த்தபடி 30 வயதுக்குரிய உடல் வளர்ச்சி எதுவுமின்றி சக்கர நாற்காலியில் துணியால் இறுகக்கட்டி வாயில் எச்சில் ஒழுகிய மனித ஜந்துவின் கண்ணில் கண்ணீர்.

     “காமராஜ்! நீ வண்டில ஏறிக்க! தம்பி நீயும் வா! “உன் பேரென்ன?“

    “கல்கி! தாத்தா“.

    இன்னைக்கு ஒரு நாளைக்கு உன் அப்பா கொள்கைய விட்டு வர்றதாலே ஒண்ணும் ஆயிடாது. காமராஜின் பழப்பை அவருக்கு இப்போது முன்னைவிடக் கனமாகத் தெரிந்தது.

    “தாத்தா! இந்தப்பழங்கள் யாருக்கு?“ என்றான் கல்கி.

    ஏதோ புரிந்தது போல்… கடவுளுக்குப்பா! என்றார் காமராஜ்.

    “நான் ஒண்ணு எடுத்துக்கட்டுமா?“

    “நான் இந்தப்பழ வண்டில வாங்கலைப்பா. நீ தாராளமா எடுத்துக்க!“

    ஒரே ஒரு பழத்தை மட்டும் எடுத்துக் கொண்டு, கிழிந்த சட்டை மாட்டியவனைக் கண்களால் தேடினான். அசோக் பில்லர் தூணை வெறித்தபடி அம்மன் கோயில் சுவரில் ஒண்டிக்கிடந்தவனிடம், “இந்தாண்ணா! வாங்கிக்கோ!“ எனப் பெரியவரிடம் வாங்கிய பழத்தைக் கொடுத்தான் கல்கி.

    “நாளைக்கு எங்க வீட்டுக்கு வாங்க! இது எங்க அப்பாவோட விசிட்டிங் கார்டு. இதுல எங்க வீட்டு அட்ரஸ் இருக்கு. எனக்கு மேக்ஸ் டியூஷன் எடுக்கறீங்களா? நான் மேக்ஸ்ல ரொம்ப வீக்!“ என்ற கல்கியை உணர்ச்சி மேலீட்டால் கட்டித் தழுவிக் கொண்டான் கிழிசல் சட்டைக்காரன்.

    “தனியொருவனுக்கு உணவில்லையெனில் ஜகத்தினை அழித்திடுவோம்“ என்ற வரிகள் ஏனோ நேருவுக்கு அந்த நேரத்தில் நினைவுக்கு வந்தது. “காமராஜ்! அந்தக் கல்கியைக் கூப்பிடு! போலாம். அந்தப் பையனுக்கு யார் அந்தப் பேர் வைச்சான்னு கேட்கணும்.

    “நீ எங்கே பழம் வாங்கினே? சொல்! அங்கேயே காரை நிறுத்தி வாங்கிடலாம்“.

    “ஆமாம்! ஆமாம்! என்பது போல் காரின் முன்பக்க பளிங்குப் பொம்மை காந்தி பொக்கை வாயைத் திறந்து சிரித்துக் கொண்டிருந்தார்.

    Share