தமிழ்த்தேனீ

 

ஒரு பெட்டைக் கோழிக்கும் கட்டுச் சேவலுக்கும் ஊடல்.  வாக்குவாதம் முற்றியது.

“இதோ பாரு இப்பிடி இனிமே  எல்லாத்துக்கும் எங்கிட்ட வாக்குவாதம் செஞ்சே, மனுஷங்க மாதிரி நானும் உன்னை  விவாகரத்து செஞ்சுடுவேன். நான் மத்தவங்க மாதிரி இல்லே மானமுள்ள ஆம்பிள்ளை” என்றது கட்டுச் சேவல்.

“நீ எப்பவும் பெட்டைதான். சேவலாக முடியாது”, என்றது. விதிர் விதிர்த்துப் போனது பெட்டைக் கோழி.

“ஓஹோ  இந்த  ஆம்பிள்ளைத் தனத்தெல்லாம் எங்க கிட்ட மட்டும் காட்டுங்க . யாராவது கையை  ஓங்கிட்டு  வந்தா உடனே ஆம்பிள்ளைங்கறதை எல்லாம் மறந்துட்டு கொக்கரகோன்னு ஓடிப் போயிடுங்க.

காலமே கெட்டுப் போச்சு..நீங்க  என்னவேணா செய்வீங்க. இப்பல்லாம் ஆம்பிள்ளைங்க,பொம்பளைங்க  எல்லாருக்கும்   வெவஸ்தையே இல்லாமப் போச்சே. விவாகரத்து செஞ்சாலும் செய்வீங்க.  மனுஷனுக்குதான் அறிவில்லாம போயிடிச்சுன்னா, இயற்கையா வாழற நமக்குமா இப்பிடி புத்தி போகணும்….?    ..இனிமே விளையாட்டுக்கு கூட இப்பிடி சொல்லாதீங்க”, என்று கண்ணைக் கசக்கியது  பெட்டைக் கோழி,  தலையைக் குனிந்துகொண்டு.  

“அப்பிடி வா வழிக்கு ” என்றது சேவல் தலையை நிமிர்த்தி  ஆணின் கர்வத்துடன்.

ஒரு பெண் தன்னுடைய கணவனிடம் ஏதோ வாக்குவாதம் செய்து கொண்டிருந்தாள். அது என்னவென்று அறிய பெட்டைக் கோழிக்கும் கட்டுச் சேவலுக்கும் ஆசை. அவர்கள் பக்கமாக இரண்டும்  ஏதோ காரியம் இருப்பது போன்ற பாவனையுடன் அருகில் சென்றன.

அங்கே, அந்தப் பெண் அவள் கணவனிடம் சொல்லிக் கொண்டிருந்தாள், “இதோ பாருங்க, திருப்பி திருப்பி பயித்தியம் மாதிரி, சொன்னதையே சொல்லாதீங்க. ஆமா நான் தெரியாமத்தான் கேக்கறேன்,  நாமே ரெண்டு குழந்தைகளை பெத்து வெச்சுருக்கோமே, அதுங்களுக்கு என்னவழி?

இப்போ காலம் இருக்குற இருப்புல, நம்ம கையில தேவையான காசு இருந்தாதான் நாமளும் சுகமா இருந்து அதுங்களையும்  வாழ வைக்க முடியும். புரியுதா?”

அதற்கு அந்தக் கணவன் “சரிம்மா,  சரி” என்று வேகமாக  தலையை ஆட்டிவிட்டு, ” நான் என்ன சொல்ல வரேன்னா…” என்று இழுத்தான்.

உடனே அவள் “போதும் நீங்க என்ன சொல்லப்  போறீங்க, என்ன இருந்தாலும் உங்களைப்  பெத்தவங்க அவுங்க , உங்களைப் படிக்க வெச்சு ஆளாக்கி நீங்க  ஆசைப்பட்டா மாதிரியே என்னையும் உங்களுக்கு கட்டி வெச்சவங்க அவுங்க.  அவுங்களுக்கு இப்போ உடம்பு சரியில்லைன்னா நாமதானே கவனிக்கணும்,நம்ம கடமை இல்லையா இது.”  இதானே சொல்லப் போறீங்க?

“கேட்டுக் கேட்டு காது புளிச்சுப் போச்சு. இதோ பாருங்க இப்போ நாம ஊருக்குப் போனா  மொத்த செலவும் நம்ம தலையிலெதான் விழும். உங்கப்பாக்கு ஹார்ட் அட்டாக். அவசர சிகிச்சை முடிஞ்சு பாத்துகிட்டு இருக்காங்க. அது ரொம்ப நல்ல மருத்துவமனை, நல்லா பாத்துப்பாங்க. இப்போ நாம அங்க போனா,  எல்லா செலவும் நம்ம தலையிலதான் விழும். அதுனாலதான் சொல்றேன், நீங்க சும்மா இருங்க எல்லாத்தையும் நான் பாத்துக்கறேன்.      அப்பிடி யாராவது கேட்டா உங்களுக்கு உடம்பு சரியில்லைன்னு சமாளிச்சுக்கறேன், புரியுதா” என்றாள். 

உடனே சரி சரி என்று தலையை ஆட்டினான் கணவன்.

இப்போது பெட்டைக் கோழி சேவலைப் பார்த்து, “என்னைப் பெட்டை என்று திட்டினீங்களே, இப்போ சொல்லுங்க  யாரு பெட்டை?” ன்னு அப்பிடீன்னுது……..? 

நிமிர்ந்திருந்த தலையைக் குனிஞ்சு பரிதாபமாகப் பார்த்தது சேவல்!!!!

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “பெட்டைகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *