Category: நறுக்..துணுக்…

  • சுய மரியாதை!

    பவள சங்கரி

    kiran-bedi

    புதுச்சேரி யூனியனின் துணை நிலை ஆளுநர் கிரண்பேடி.. புதுச்சேரி யூனியனை குற்றமில்லா பிரதேசமாக உருவாக்குவோம் என்று உறுதியோடு இருப்பவர். 1972இல் இந்தியாவின் முதல் பெண் ஐ.பி.எஸ். அதிகாரி. திகார் சிறையில் கைதிகளின் நலன் கருதி (3C மாடல் அதாவது C-Collective, C-corrective, C-Communicative என்ற பொருளில்) கிரண்பேடி நல்ல சீர்திருத்தங்களைக் கொண்டுவந்துள்ளார். டென்னிஸ் போட்டியில் ஆசிய சாம்பியன் பட்டம் வென்றவர். அவருடைய கம்பீரமான குரலும், மிடுக்கான தோற்றமும் அவர் 61 வயதைக்கடந்தவர் என்று அறியும்போது ஆச்சரியம் கொள்ளவைக்கும். ஐ.நா.சபையில் இந்தியாவின் பிரதிநிதியாகப் பணியாற்றியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

    ஆஸ்திரேலியாவின் மேகன் டோன்மேன் என்பவர் இவரைப் பற்றி, “யெஸ், மேடம் சார்” என்ற ஆவணப்படம் உருவாக்கியிருக்கிறார் .

    சமீபத்தில் திருமணமான ஒரு இளம் இணையர் இவரிடம் ஆசிகள் பெறுவதற்காக காலில் விழுந்திருக்கின்றனர். அவர் உடனே அதைத்தடுத்து காலில் ஏன் விழுகிறீர்கள் என்று கூறிவிட்டு தானும் அவர்கள் காலில் விழுந்துள்ளார். இனியொருவர் இதுபோன்று சக மனிதர் காலில் விழவேண்டியதில்லை என்ற சுய மரியாதை விழிப்புணர்வை ஏற்படுத்தி பலமடங்கு உயர்ந்து நிற்கிறார்!

    Share
  • வன்முறை தடுப்புச்சட்டம்!

    பவள சங்கரி

    சாதிவாரியான வன்முறைகளில் 1,38077 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அதில் 43.3% வழக்குகள் நீதி மன்றங்களால் தீர்க்கப்பட்டுள்ளன. இதில் 25.7% குற்றங்கள் நிரூபிக்கப்பட்டு தீர்ப்பளிக்கப்பட்டுள்ளன. இதில், 2013 – 2015 வரையிலான காலகட்டத்தில் முதல் இடத்தில் உள்ள மாநிலம் ராஜஸ்தானில் தாழ்த்தப்பட்ட, மிகவும் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மக்கள் மீது மிக அதிகமான தாக்குதல் நடைபெற்றுள்ளன. உத்திரப் பிரதேசம் பீகார் இந்த வன்முறையில் இரண்டாவது இடத்தில் உள்ளதாக அரசு அறிவிப்பு தெரிவிக்கிறது. தமிழகம் இதில் ஒன்பதாவது இடத்தில் (5,131 வழக்குகள் பதிவு) இருக்கிறது. 14 மாநிலங்களில் வன்முறை தடுப்புச்சட்டத்தைச் செயல்படுத்த விரைவு நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் வன்முறை தடுப்புச்சட்டத்தின் 14வது பிரிவின்படி ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட மாவட்டங்களில் தனி நீதி மன்றங்களை அமைக்க வழிவகுக்கிறது. 8 மாநிலங்களில் ஒற்றைப்படை இலக்கங்களில் குற்றங்கள் நிரூபிக்கப்பட்டுள்ளன. மகாராஷ்டிராவில் 7.6%, தமிழ்நாடு, தெலுங்கானாவில் 7.5%, குஜராத்தில் 3.1% மேற்கு வங்கத்தில் மிகக்குறைவாக 3% குற்றங்கள் நிரூபிக்கப்பட்டுள்ளன.  சமூகநீதி அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவல்கள் இவை.

    Share
  • தண்டனை

    க. பாலசுப்பிரமணியன்

    நாட்டின் தலைநகரான புதுடில்லியில் நேற்றும் இன்றும் காணக்கிடைக்காத காட்சி… உண்மை…. கண்களை அகலமாய் திறந்து பார்த்தாலும் உங்களுக்கு முன்னால் செல்லும் வாகனங்களோ அல்லது மனிதர்களோ  கண்ணில் பட மாட்டார்கள் .. இது பனிமூட்டமல்ல.. புகைமண்டலம்! குழந்தைகளின் பாதுகாப்பிற்காக சுமார் 1800 பள்ளிகள் இரண்டு நாட்களுக்கு மூடப்பட்டன.

    மாலை நேரத்தில் காற்றில் மிதந்துநின்ற கரித்துகள்களும் தூசியும் மற்றும் விஷத்தன்மை வாய்ந்த கலவைப் பொருள்களும் கீழிறங்கி வந்து புகைமண்டலமாக மனிதர்கள் மூச்சு விடுவதற்கே தடையாகவும் ஆபத்தாகவும் அமைந்தது. சுவாசிப்பதில் சாதாரணமாக இருக்கும் மனிதர்களுக்கே இந்த கதியென்றால் ஆஸ்த்மா மற்றும் நுரையீரல் சம்பந்தப்பட்ட வியாதிகள் இருப்பவர்களை பற்றிக் கேட்கவே வேண்டாம்… என்ன கொடுமையிது!

    மனிதர்களுடைய அடிப்படைத்தேவையான காற்றே கலப்படமாகி சுவாசிக்க முடியாமல் போனால்.. நாம் எங்கே போய்க்கொண்டு இருக்கிறோம்? இதற்க்கு என்ன காரணம்? இதற்கு யார் பொறுப்பு?

    உடனே மத்திய அமைச்சரவை கூடி அபாய மணியை அடித்தது.. டில்லியின் ஆளுநர் மந்திரிசபையின் கூட்டத்தைக் கூட்டினார்.. டில்லியின் முதலமைச்சர் தன்னுடைய மந்திரிசபையைக் கூட்டினார்… இன்னும் சில நாட்களுக்கு கட்டுமானத் தொழில் மற்றும் ஜெனரேட்டர் இயக்குதல் போன்றவை தடைசெய்யப்பட்டன. இதெல்லாம் சரி.. இவையெல்லாம் எரியும் நெருப்பை அணைக்கும் செயல்கள்தானே? இவற்றிற்கான மூலகாரணங்களை அறிந்து அதற்கான நடவடிக்கைகள் எடுக்க வேண்டாமா?

    சில ஆண்டுகளுக்கு முன்பு  ஒரு காரில் ஐந்து நிமிடத்தைக் கடந்த தூரத்தை இன்று கடக்க அரைமணி நேரம் ஆகின்றது.. அத்தனை நெரிசல்.. அலை அலையாகக் கார்கள்.. ஒவ்வொரு வீட்டிலும் ஒவ்வொருவருக்கும் ஒரு கார்..

    நாம் தேவைகளை அதிகரித்துக்கொண்டு விட்டோம் .. ஆனால் உண்மையில் அவை தேவைகளா? இல்லை பல நேரங்களில் நமது தேவையற்ற ஆசைகளுக்கும் விருப்பங்களுக்கும் நாம் இயற்கையை பயன்படுத்திக்கொண்டும் மாசுபடுத்திக்கொண்டும் இருக்கின்றோமா?  சிந்திக்க வேண்டிய நேரம்..

    இன்று புதுதில்லியில் நடப்பது நாளை மும்பையில் நடக்கும். இன்னொருநாள் பெங்களூரிலோ அல்லது சென்னையிலோ நடக்கும். இது ஒரு நகரத்தில் மட்டும் நடக்கும் நிகழ்வு அல்ல.. இது ஒரு சமுதாயத்தின் சிந்தனையின் தேக்கத்தையும் பொறுப்பற்றத்தன்மையையும் வெளிப்படுத்துவதாக அமைகின்றது.

    நேற்று விமானத்தில் ஏறும் பொழுது பலர் அங்கலாய்த்துக்கொண்டிருந்தனர்.. “இந்த நிலைமைக்கு அரசாங்கம் என்ன செய்து கொண்டிருக்கின்றது. என்ன செய்யப்போகின்றது?” இந்த மாதிரி பேச்சுக்களில் ஏதோ அரசாங்கத்திற்கும் நமக்கும் சம்பந்தம் இல்லாதது போல் நாம் சிந்திக்கிறோம்… உண்மைதான்.. ஒரு அரசாங்கத்தின் கொள்கைகள், சட்டங்கள், விதிமுறைகள் நல்லபடியாக கண்காணிக்கப்பட்டால் இந்த நிலைமை வாராது இருக்கலாம். ஆனால் இதற்கு முக்கிய காரணம் முழுமையாக சமுதாய நோக்கும் போக்கும்தானே?

    இந்த தண்டனை யாருக்கு யார் கொடுத்தது?

    Share
  • தாய்மொழி!

    பவள சங்கரி

    உலகளாவிய ஆய்வு நிறுவனத்தின் முடிவுகளின்படி, குழந்தைகள், வாசிக்கவும், எழுதவும் கற்கவேண்டிய முதல் மொழி தங்கள் தாய்மொழி மட்டுமேதான்! குறைந்தபட்சம், ஒரு நிமிடத்திற்கு 45 முதல் 60 வார்த்தைகள் வரை சரளமாக வாசிக்க முடிந்தால் மட்டுமே அவர்களால் வாசித்த அந்த விசயத்தை முழுமையாக உள்வாங்க முடியுமாம். இத்தன்மை அவரவர்கள் தாய்மொழியால் மட்டுமே சாத்தியமாகுமாம். இந்த அடிப்படை ஞானம் வாய்க்கப்பெற்ற குழந்தைகள் மிக எளிதாக இரண்டாம் மொழியில் வல்லமை பெற்று சாதனையும் படைத்துவிடுகிறார்களாம்… பெற்றோர்கள் அவசியம் சிந்தித்துணரவேண்டிய விசயம்!

    பள்ளியில் சேர்வதற்கு முன்பாகவே மழலைப்பள்ளியில் படித்துவிட்டு வரும் வசதியான குழந்தைகள் 3000 வார்த்தைகள் கற்று வருகிறார்கள். ஆனால் வசதி வாய்ப்பற்ற குழந்தைகள் முதல் வகுப்பில் சேரும்போது 500 வார்த்தைகள் மட்டுமே தெரிந்து வைத்திருக்கிறார்கள். இங்கேயே இவர்களின் போராட்டம் ஆரம்பித்து விடுவதால் இரண்டாம் மொழி கற்பதில் இவர்களுக்கு பெரும் போராட்டம்தான் என்பதைச் சொல்ல வேண்டியதில்லை..

    பொதுவாக ஒருவர் ஒரு நொடிக்கு ஒரு வார்த்தை வாசிக்கக்கூடியவர்களாக இருக்கவேண்டும். வெளி வட்டாரம் அல்லது செயல்பாட்டு வாசகர்கள் என்றால் 1.5 நொடியில் ஒரு வார்த்தை வாசிக்க வேண்டும். இதைவிட மெதுவாக வாசிக்கும்போது இறுதியாகப் படித்து முடிக்கும் அந்த பத்தியின் முதல் வரியை மறந்தவர்களாகிவிடுகிறார்கள். குழந்தைகள் புதிய மொழி எழுத்துகளின் குறியீடுகளை அறிவதில் சிரமப்படுகிறார்கள். அவர்களால் போதிய விரைவில் வாசிக்க முடியாவிட்டால் அவர்கள் கவனம் முழுவதும் அந்தக் குறியீடுகளிலேயே நிலைத்துவிடுவதால் அந்தப் பத்தியின் கருத்துகளை உள்வாங்குவதில் கவனம் சிதறிப்போய்விடுகிறது. விரைவாக வாசிக்க முடியாத குழந்தையால், பாடப்புத்தகத்தில் உள்ள பாடத்தையோ அல்லது ஆசிரியர் கற்பிப்பதையோ உள்வாங்க முடியாது. இப்படிப்பட்ட குழந்தைகளை வெகு எளிதாக ஒதுக்கி வைத்துவிடுகின்றன பள்ளிகள். எட்டு ஆண்டுகள் பள்ளியில் படிக்கும் குழந்தையை மக்கு என்று ஒதுக்கிவிடுகிறார்கள். இந்நிலை நம் இந்தியாவில்தான் மிகப்பரவலாக இருக்கிறதாம். உலக ஆய்வறிக்கை சொல்லும் வருத்தமான செய்தி இது…

    மழலைமாறா இளம் சிறார்களுக்கு ஆங்கிலம் போன்ற இரண்டாம் மொழியை முதலில் கற்பிப்பதனால் அக்குழந்தை தம் தாய் மொழியில் தேவையான அளவு வேகமாக வாசிப்பதற்கு தடை ஏற்பட்டுவிடுகிறது. குழந்தைகளுக்கு ஆரம்பக்கல்வி மிகவும் இன்றியமையாதது. இரண்டாம் வகுப்பில் சரளமாக வாசிக்க இயலாத குழந்தைகள் உயர் வகுப்புகளில் சக மாணவர்களுக்கு நிகராக நன்கு வாசிக்கும் திறன் கொண்டிருப்பது சாத்தியமே இல்லாமலும் போகலாம் என்கின்றனர் ஆய்வாளர்கள்.

    Share
  • எளிமை – வலிமை!

    பவள சங்கரி

    lal-bahadur-shastri

    நம் முன்னாள் பிரதமர் உயர்திரு லால் பகதூர் சாஸ்திரி அவர்களுக்கும் இன்று பிறந்த தினம். அவர் சிறுவனாக பள்ளி செல்லும்போது அவரும் நம் இந்தியாவும் மிகவும் ஏழ்மையில் இருந்த காலகட்டம் 🙁 அப்பொழுது ஆற்றைக் கடந்து பள்ளிக்குச் செல்லும் நிலைமை. பாலம் கட்ட வசதியில்லாத நம் பாரத மாதா.. சாஸ்திரிக்கு படகில் செல்ல காசில்லாமல், புத்தகங்களை துணியில் கட்டி தலையில் சுமந்துகொண்டு, ஆற்றில் நீச்சல் அடித்து அன்றாடம் அதே ஈர உடையுடன் பள்ளி செல்வாராம்.. அப்படியெல்லாம் கடினப்பட்டு படித்துதான் சிறந்த அறிவாளியாக நம் நாட்டை வழிநடத்தினார்..

     
     
    Share
  • ஆராரோ ஆரிரரோ ஆராரோ ஆரிரரோ…

    பவள சங்கரி

    e_1363937474

    ஆராரோ ஆரிரரோ
    ஆராரோ ஆரிரரோ…

    குழந்தையின் தாலாட்டு! இந்த இரு சொற்களில் எத்தனைத் தத்துவங்கள்!

    தால் என்பது நாவைக் குறிக்கும் சொல். நாவை ஆட்டி இசையாய் எடுத்து, ஊட்டி செல்லக்குழந்தையை ஆராட்டுதல் “தாலாட்டு” எனப்படுகிறது. இந்தத் தாலாட்டில் வல்லினமும், மெல்லினமும் தவிர்த்து, இடையினத்தில் மென்மையாக இசைப்பதே இனிய தாலாட்டுப் பாடலாம். (கசடதபற வல்லினம், ஙஞணநமன மெல்லினம், யரலவழள இடையினம்) இதுவே குழந்தைகளை அமைதியாக உறங்கச்செய்து, மூளை வளர்ச்சியையும் ஊக்குவித்து, குழந்தையை அமைதியான சூழலில் வளரச்செய்கிறது. வன்மையான வல்லினப்பாடல் குழந்தையை அச்சுறுத்தும். மென்மையான மெல்லினப்பாடல் குழந்தையின் அழுகைச்சத்தத்தில் அமிழ்ந்துவிடக்கூடும். ஆகவே இடையினத்தில் இசைக்கும் பாடலே குழந்தைக்கு ஏற்றதாகும்.  தமிழரின் தன்னிகரில்லா தாலாட்டு, தரணியில் தனித்து நிற்பதன்றோ! வாழ்க தமிழ்! வாழ்க தமிழர் தம்பெருமை!

    ஆராரோ ஆரிரரோ
    ஆராரோ ஆரிரரோ…
    கண்ணே கண்மணியே
    ஆரடிச்சு நீ அழுதே
    அடிச்சாரை சொல்லியழு
    ஆராரோ ஆரிரரோ…
    ஓடும் மான் கண்ணோ என் கண்ணே
    நீ கவரிமான் பெற்ற கண்ணோ
    புள்ளி மான் கண்ணோ என் கண்ணே
    நீ புத்திமான் பெற்ற கண்ணோ
    முத்தோ ரத்தினமோ என் கண்ணே
    நீ தூத்துக்குடி முத்தினமோ…
    முல்லை மலரோ என் கண்ணே
    நீ அரும்புவிரியா தேன்மலரோ..
    கண்ணே கண்ணுறங்கு
    கனியமுதே நீ உறங்கு….

    Share
  • தமிழின் சுவை!

    பவள சங்கரி

    நம் தமிழ் மொழியின் சுவையை உணர முற்பட்டால் திகட்டத்திகட்ட சுவைக்க ஆயிரமாயிரம் விசயங்கள் உள்ளன. அதிலும் இலக்கணச்சுவையை அறிந்தோர் என்றால் கேட்கவே வேண்டாம். ஆனாலும் இலக்கணம் அதிகம் அறியாத என் போன்றோரும் கொண்டாட நிறையவே இருக்கின்றன. அதில் ஒன்றுதான் இந்த வஞ்சப்புகழ்ச்சி அணி. வஞ்சப்புகழ்ச்சி அணி என்பது ஒருவரைத் திட்டுவது போல் பாராட்டுவது. நம் ஆதிகாலப் புலவர்களில் மிகவும் குசும்பு படைத்தவர்கள் பலர்.. இரட்டுற மொழிதல் – சிலேடை அணிப் பாடல் என்ற ஒருவகை உள்ளது. அதில் வல்லவர் நம் கவி காளமேகப்புலவர். இவர் அம்மனையே வம்புக்கு இழுக்கிறார் என்றால் இந்தப் புலவர்களுக்கு அந்த தெய்வங்களே எவ்வளவு செல்லம் கொடுத்து வைத்திருந்திருக்கிறார்கள் பாருங்கள். இவர் தில்லை சிவகாமி அம்மை மீது பாடிய வஞ்சப்புகழ்ச்சிப் பாடல் இதோ:

    images-4மாட்டுக்கோன் தங்கை மதுரைவிட்டுத் தில்லைநகர்
    ஆட்டுக்கோ னுக்குப்பெண்டு ஆயினாள்; கேட்டிலையோ
    குட்டி மறிக்கஒரு கோட்டானையும் பெற்றாள்
    கட்டிமணிச் சிற்றிடைச்சி காண்!

    இந்தப்பாடலில் வஞ்சப்புகழ்ச்சி மட்டுமன்றி இரு பொருள் தரும்படியாகவும் அமைந்துள்ளது பாருங்கள். முதலில் மேலோட்டமாக, திட்டுவது போல் உள்ள பொருளைப் பார்ப்போம்.

    மதுரைவாசியான ஆடுமாடு மேய்க்கும் ஒருவனின் தங்கை தம் வீட்டைவிட்டு தில்லை நகரில் வசிக்கும் ஆடு மேய்ப்பவனுக்குத் துணைவியாகிவிட்டாள். ‘கோனான்’ என்பது இடையர் குலத்தோரின் பட்டப்பெயர். அதாவது ஆடு, மாடு மேய்க்கும் இடையர். கோட்டான் போல ஒரு மகனையும் பெற்றாள் அந்த சிற்றிடைச்சி. அதாவது சிறிய இடையர் குலப்பெண் என்று கிண்டலாகப் பாடுவது போல் உள்ள இந்தப்பாடலுக்கு இன்னொரு பொருளும் உண்டு. அதையும் பார்க்கலாம் ;

    ‘கோன்’ என்பதற்கு மன்னன், அரசன், தலைவன் என்று பல பொருள்கள் உள்ளன. ஆடு என்றால் நடனம் ஆடுவது என்ற பொருளும் உண்டல்லவா? ஆக ’ஆட்டுக்கோன்’ என்றால் ஆடலரசன் என்ற பொருள் வருகிறதல்லவா. தில்லை நடராசப்பெருமான் தான் ஆட்டுக்கோன். அதேபோல் மாட்டுக்கோன் என்பதற்கும் உட்பொருள் உண்டு. மாடு என்றால் செல்வம். செல்வத்திற்கு அதிபதியான ஆண்டவன், பெருமாள் அல்லவா. மாடுகளின் மன்னனான கோபாலனின் தங்கை என்றும் பொருள் கொள்ளலாம். அதாவது பெருமாளின் தங்கை மதுரையை விட்டு தில்லைக்கு வந்து நடராசரின் மனைவியானாள் என்பதே முதல் இரண்டடியின் பொருள்.

    அது சரி. அடுத்த ஈரடியில், குட்டிமரிக்க ஒரு கோட்டானைப் பெற்றாள் என்கிறாரே .. இங்குதான் நம் புலவர் தம் சொற்திறத்தைக் காட்டி விளையாடியிருக்கிறார். குட்டிமரிக்க என்றால் குட்டிகளைக் கிடையில் அமர்த்துவது என்று ஒரு பொருள் இருந்தாலும், கைகளை குறுக்கே வைத்து தலையில் குட்டிக்கொள்வது , அதாவது மரித்துக் குட்டுவது என்றும் மற்றொரு பொருள் உள்ளது. ‘மரித்து’ என்பதற்கு ‘நினைத்து’ என்ற பொருளில், விநாயகரை நினைத்து வணங்கும்போது குட்டிக்கொள்வதைக் குறிப்பால் உணர்த்தி, விநாயகரைப் பெற்றவள் என்கிறார்.

    ‘கோட்டானை’ என்ற சொல் கோடு + ஆனை என்ற இரண்டு சொற்களின் கூட்டணி. இங்கு கோடு என்பதற்கு யானைத்தந்தம் என்று பொருள் வருகிறது. அதாவது ஒரு தந்தமுடைய யானைமுகமுடைய விநாயகரைக் குறிப்பிடும் சொல்லே கோட்டானை என்ற பொருளாகிறது.

    இறுதி அடியாக வருவது கட்டிமணிச் சிற்றிடைச்சி. கட்டி என்றால் பொன் என்று ஒரு பொருள் உண்டு. அதாவது பொன்னால் ஆன மணியைத் தம் சிற்றிடையில் (ஒட்டியாணம்) அணிந்தவள் அம்மை. இப்படி அழகாக சிவகாமி அன்னையை வர்ணித்துள்ளார்.

    இன்றும் பல கவிஞர்கள் இந்த உத்தியைக் கையாண்டு இரட்டை அர்த்தப் பாடல்களும், வஞ்சப்புகழ்ச்சிப் பாடல்களும் பாடிக்கொண்டிருக்கிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

    Share
  • குட்டு போடுங்க… !

    பவள சங்கரி

    kaveri5

    குட்டு போடுவதின் பொருள் என்ன? அச்சோ இது ஆசிரியர் மண்டையில நங்குணு வைக்கிற கொட்டு இல்லீங்க… நம்ம பிள்ளையார் முன் தலையில் மூன்று முறை குட்டிக்கொள்கிறோமே -அதன் பொருள் பற்றியது.
    நமது காதுக்கு அருகில், தலையில் இருபக்கங்களும் அமிர்த நாடி இருக்கிறதாம். தலையில் நாம் மூன்று முறை குட்டிக் கொள்ளும்போது அந்த அமிர்த நாடியைத் தட்டிவிடும்போது நமது உடல் முழுவதும் அதன் ஆற்றல் பரவி குண்டலினியை எழுப்பிவிடுவதால் நமது உடலுக்கும் மனதுக்கும் புத்துணர்வையும், நல்ல நினைவாற்றலையும் கொடுக்க வல்லது என்பது ஐதிகம். இதை உண்மை என்று அறிவியலும் ஒப்புக் கொண்டுள்ளதுதான் ஆச்சரியத்தின் உச்சம். அதேபோல் தோப்புக்கரணம் போடுவதிலும் அறிவியல் நோக்கு உள்ளதாம். இதனை யேல் பல்கலைக்கழகத்தின், நரம்பியல் நிபுணர் டாக்டர் யூஜினியஸ் ஆங் ( Dr.Eugenius Aug) என்பவர் நிரூபித்துள்ளார். அதாவது இடது கையால் வலது காதையும் வலது கையால் இடது காதையும் பிடித்துக் கொள்வதன் மூலம் அக்குபஞ்சர் புள்ளிகள் தூண்டப்படுகின்றது என்கிறார். அதுமட்டுமன்றி மூளைக்கலங்களும் அதிக சக்தி பெறுவதாகவும் கூறுகிறார். பல மாணவர்களைக் கொண்டு ஆய்வின் மூலம் நிரூபித்துள்ளார். ஆகா, நம் ஆன்மீக நெறிகள் அனைத்தும் அறிவியலின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்டுள்ளது என்பதை மறுக்கமுடியாது..

    Share
  • “செக்கிழுத்த செம்மல்”

    பவள சங்கரி

    13265875_1041261599295798_1419961015002010470_n

    “செக்கிழுத்த செம்மல்” என்று போற்றப்படும் வள்ளியப்பன் உலகநாதன் சிதம்பரம்பிள்ளை – வ.உ.சி அவர்கள் பிறந்த புனித நாள் இன்று. ராஜராஜ சோழன், ராஜேந்திர சோழன், பின்னர் வந்த முகலாய மன்னர்கள் போன்றவர்களின் ஆட்சிக்காலங்களில் பிரபலமாக இருந்த கப்பல் போக்குவரத்து மற்றும் பிரம்மாண்டமான கப்பல்கள் என அனைத்தும் கிழக்கிந்திய கம்பெனி நம் இந்திய நாட்டில் நுழைந்து முன்னூறு ஆண்டுகள் ஆதிக்கம் செலுத்திய காலங்களில் முற்றிலும் செயலிழக்கச் செய்யப்பட்டன. ஆங்கிலேயர்களின் கப்பல் போக்குவரத்து கோலோச்ச ஆரம்பித்துவிட்டது. சுதந்திரப் போராட்டத்தின் ஒரு முக்கியப் பகுதியாக, கப்பலோட்டிய வரலாற்றில் பெரும் பங்காற்றியர் வ.உ.சி, அவர்கள். தம் சொத்துகள் அத்தனையும் விற்று சுதேசி கப்பலை உருவாக்கி அதன் மூலம் ஆங்கிலேயரின் வணிகத்தை முடக்க நினைத்த அவர்தம் போராட்டமும் விடா முயற்சியும் குறிப்பிடத்தக்கது. நம் கப்பல்களை இந்தியர்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று காந்தியடிகளும் பரிந்துரைத்தார். ஆனாலும் அந்த முயற்சி வெற்றியடையாமல் போனது நம் சுதந்திரப் போராட்டத்தில் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது. சமூகத்தில் ஏற்றத்தாழ்வுகளை ஒழிக்கவேண்டி அதன் பொருட்டும் பெரிதும் போராடியவர் வ.உ.சி.

    “அவன் என்னைச் சணல்கிழி யந்திரம் சுற்றெனச்
    சுற்றினேன். என்கைத் தோல் உரிந்து ரத்தம்
    கசிந்தது. என்னருங் கண்ணீர் பெருகவே
    திங்கட் கிழமை ஜெயிலர் என் கைத்தோல்
    உரிந்ததைப் பார்த்தான். உடன் அவன் எண்ணெய்
    ஆட்டும் செக்கினை மாட்டிற்குப் பதிலாய்ப்
    பகலெல்லாம் வெயிலில் நடந்து தள்ளிட
    அனுப்பினன். அவனுடைய அன்புதான் என்னே!”
    வ.உ.சி. அவர்களின் கண்ணீர்த்துளிகள்…

    Share
  • கிளிகள் பேசுமா?

    images (5)

    உண்மையில் கிளிகள் பேசுமா? ஆம் கிளிகளின் மூளையில் உள்ள வித்தியாசமான கட்டமைப்பு தான் அவைகளை மனிதன் பேசுவதை உள்வாங்கிப்பின் அதே போல் பேச வைக்கிறது என்று அமெரிக்காவின் டியூக் பல்கலைக்கழகத்தின் ஆய்வில் விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். மற்ற பறவைகளுக்கு இல்லாத இந்த விசேசமான தன்மை கிளிகளுக்கு மட்டுமே உள்ளது. மனிதர்களைப் போலவே ஒலி எழுப்ப முடிகிறது கிளிகளால். பயிற்சி அளித்தால் ஒரு சில வார்த்தைகளைக்கூட பேசமுடியும். கிளிகளின் மூளை உடற்கூறு நைட்டிங்கேல், காகம் போன்ற பிற பாடும் பறவைகளின், Structural differences என்ற மூளை உடற்கூற்றில் இருந்து வேறுபட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. கிளியின் மூளையில் உள்ள defined centers என்ற வரையறுக்கப்பட்ட மையம் கிளிகள் குரல்களை உள்வாங்கிக் கொள்ளும் செயலில் முக்கிய பங்கு வகிப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது.

    Share
  • தட்டொளி

    பவள சங்கரி

    தட்டொளியின் புறக்காட்சிகளனைத்தும்
    அறச்சீற்றத்தின் அகக்காட்சிகள்! 

    life 26

    தட்டொளி – உலோகத்தாலான கண்ணாடி
    உக்கம் – விசிறி

    ஆண்டாள் சந்நிதியின் நேர் எதிரில் வெண்கலத்தால் செய்யப்பட்ட தட்டொளி இருக்கிறது. (படத்தில் உள்ளது). இதில் தான் ஆண்டாள் தன் முகத்தை பார்த்தாளாம். தற்போது பளபளப்பு குறைந்துள்ளது. ஆண்டாள் திருப்பாவையில், ‘உக்கமும் தட்டொளியும்’ என்று குறிப்பிட்டிருக்கிறாள் – கோதைத்தமிழ்!

    ஆண்டாள் அருளிய திருப்பாவை (493)large_133341970

    முப்பத்து மூவர் அமரர்க்கு முன்சென்று
    கப்பம் தவிர்க்கும் கலியே துயில்எழாய்
    செப்பம் உடையாய் திறல்உடையாய் செற்றார்க்கு
    வெப்பம் கொடுக்கும் விமலா துயில்எழாய்
    செப்பென்ன மென்முலைச் செவ்வாய்ச் சிறுமருங்குல்
    நப்பின்னை நங்காய் திருவே துயில்எழாய்
    உக்கமும் தட்டொளியும் தந்துஉன் மணாளனை
    இப்போதே எம்மை நீராட்டேலோர் எம்பாவாய்.

    Share
  • வாசுகியாயணம்!

    பவள சங்கரி

    1330 குறட்பாக்களும் இரண்டடியில் எழுதிவைத்த வள்ளுவப்பெருந்தகை, தமது மனைவி வாசுகி அம்மையாருக்காக எழுதிய வெண்பா மட்டுமே 4 வரிகளில் எழுதியுள்ளார்! இதோ:

    அடிசிற் கினியாளை அன்புடை யாளை
    படிசொற பழிநாணு வாளை … அடிவருடி,ப்
    பின்தூங்கி முன்னெழூஉம் ப யான்பிரிந்தால்
    என்தூங்கும் என்கண் எனக்கு.

    பின்னே, திருமணம் ஆன நாளிலிருந்து இறக்கும் தருணம் வரை திருவள்ளுவர் அன்றாடம் உணவு அருந்தும்போது தமதருகில் வைக்கச்சொன்ன ஒரு கொட்டாங்குச்சியில் தண்ணீரும், ஒரு ஊசியும் எதற்கு என்ற கேள்வியே கேட்காமல் அன்றாடம் வைத்துக்கொண்டிருந்தாராம்! காலம் முழுவதும் விளங்காமலே செய்த பணிவிடைக்கு தமது உயிர்பிரியும் இறுதி நேரத்தில் விளக்கம் கேட்டாராம் அம்மையார்..

    images
    அதாவது, ஐயனுக்கு உணவு பரிமாறும்போது சாதப்பருக்கை கீழே இறைந்துவிட்டால் அதை ஊசியால் எடுத்து தண்ணீரில் அலம்பி சாப்பாட்டில் சேர்த்துக்கொள்வதற்காக வைக்கச்சொன்னாராம். ஆனால் இறுதிவரை ஒருநாள் கூட அதற்கான தேவை ஏற்படவேயில்லையாம்!

    Share
  • உலகிலேயே மிகவும் நாகரீகம் அடைந்த நாடு!

    பவள சங்கரி

    முந்தைய காலத்தில் தமிழ், கிரேக்கம், இலத்தீன் ஆகிய மொழிகளில் நூல் இல்லை. எபிரேயம் என்ற ஹீப்ரு மொழி மற்றும் சீன மொழியில் சில எழுத்துக்கள் இருந்திருக்கின்றன. பைபிளின் பழைய ஏற்பாடு தோன்றியதும்கூட கி. மு.1000 ஆண்டுகளில்தான். ஆனால் இதெல்லாம் தோன்றுவதற்கு வெகுகாலம் முன்பே அதாவது 3000 ஆண்டுகளுக்கு முன்னரே, கடோபநிததத்தில் குறிப்பிட்டுள்ளபடி, தோன்றிய நசிகேதன் எனும் சிறுவன் எமனை வாக்குவாதத்தில் வென்று மூன்று வரங்கள் வாங்கி வருகிறான். அதேபோல் கார்க்கி போன்ற சில இந்துப் பெண்மணிகளும் சாதித்துள்ளனர். புத்தர், மகாவீரர், கன்பூசியசு, லாவோட்சே போன்றோருக்கும் முன்னரே இவர்களின் புகழ் பரவியிருந்தது. அதாவது உலகிலேயே மிகவும் நாகரீகம் அடைந்த நாடு நம் இந்தியாதான் என்பதற்கு இதுபோன்று பல உதாரணங்கள் உள்ளன!

    Share
  • மனிதாபிமானம்

    பவள சங்கரி

    ஒரு பிரபலமான வங்கியில் முதியோர் ஓய்வூதியம் வாங்க வந்திருந்த ஒரு தம்பதியரின் மிக மோசமான நிலையை அறிந்தபோது இதயம் துடித்தது. வங்கி மேலாளரிடம் ஓய்வூதிய மனு நிரப்பும்போதே அடுத்த மாதத்திலிருந்து பணம் கைக்கு கிடைத்துவிடுமா என்று கேட்க அவர் சிரித்துவிட்டு ஒரு ஆண்டு ஆகும், இன்னும் எத்தனை வேலை இருக்கிறதே என்கிறார். கிராம நிர்வாக அதிகாரி, தாசில்தார் போன்றோரிடம் கையெழுத்து வாங்க வேண்டும் போன்ற சட்ட திட்டங்கள்… நொந்துபோய் வந்தவரிடம் ஒருவர் தலைக்கு 2000 செலவு செய்தால் ஒரு மாதத்தில் பென்சன் கிடைத்துவிடும் என்று ஆறுதல் சொல்கிறார். இந்த தம்பதியரின் நிலையில் இந்த 4000 மிகப்பெரியத் தொகையாகத் தெரிய மலைத்துப்போய் நிற்கிறார்கள். ஆண் ஒன்று பெண் ஒன்று என இரு குழந்தைகள் பெற்ற மகராசர்கள். மகள் வீட்டில் பெரியவர்கள் ஒரு பகுதியிலும் மகன் ஒரு பகுதியிலும் தனித்தனியாக குடித்தனம் செய்கிறார்கள். மகனும் தன் வசதிக்கு பெற்றவர்களுக்கு சாப்பாட்டிற்கு தன்னால் முடிந்ததைத் தருகிறாராம். இந்த நிலையில் ஓரளவிற்கு வசதியாக இருக்கும் மகள் தன் வீட்டிற்கு பெற்றோர் சரியாக வாடகை தருவதில்லை என்பதற்காக வெளியே முடுக்கிவிடச் சொல்லிவிட்டாராம்… இந்தக்கொடுமையான சூழ்நிலையில் முதியோர் ஓய்வூதியம் பற்றி அறிந்து, அம்மா புண்ணியத்தில் 500 ரூபாய் அதிகம் உயர்ந்து 1500 கிடைக்கிறது என்று மகிழ்ச்சியோடு வந்தால் இங்கு இந்த நிலை..

    முதியோர் ஓய்வூதியம் என்பது அழிவு நிலையில் இருக்கும் பயிருக்கு உயிர்நீர் ஊற்றுவது போலத்தானே.. இதற்கு எத்தனை கையெழுத்துகள், சட்டதிட்டங்கள், கையூட்டுகள்…! சரி அப்படியே இருந்தாலும், இந்த முதியவர்கள் அங்கங்கு அலைந்து திரிந்து கையெழுத்து வாங்கும் சிரமத்தைக் குறைக்கும்விதமாக குறிப்பிட்ட வங்கிகளில் குறிப்பிட்ட ஒரு சில மணி நேரங்கள் கிராம நிர்வாக அதிகாரியோ அல்லது சம்பந்தப்பட்ட வேறு அதிகாரிகளோ அங்கேயே வந்திருந்து அந்த கையெழுத்தை போட்டுத் தருவதற்கு ஏதாவது ஏற்பாடு செய்யலாமே? அவர்கள் கையூட்டு தரும் அவலமும் தீரலாமே? இது மனிதாபிமான அடிப்படையில் தீர்க்கவேண்டிய பிரச்சனை அல்லவா?

    Share
  • பொது சார்புக் கோட்பாடு

    பவள சங்கரி

    qeaow870

    புகழ்பெற்ற விஞ்ஞானி ஐன்ஸ்டீன் கண்டறிந்த பொது சார்புக் கோட்பாடு – theory of relativity என்ற தத்துவம். இதைத்தானே நம் பாட்டனார்கள் மிக இயல்பாக ‘கண்ணால் காண்பதும் பொய், காதால் கேட்பதும் பொய், தீர விசாரிப்பதே மெய்’ என்று பண்டைக்காலம் தொட்டே கூறி வந்திருக்கிறார்கள்.

    ஒரு முறை விஞ்ஞானி ஐன்ஸ்டீன், இந்த தத்துவத்தை அதாவது “நாம் காண்பதெல்லாம் உண்மையல்ல” என்ற கோணத்தில் தாம் கண்டறிந்த தத்துவத்தை விளக்கிக் கொண்டிருந்தாராம். அதைக் கேட்டுக்கொண்டிருந்த அந்த இளைஞர்களில் ஒருவன் அவரிடம், “இதை என்னால் ஒப்புக்கொள்ள முடியாது. நான் இப்போது உங்களைப் பார்க்கிறேன், நீங்கள் இருப்பது உண்மைதானே?” என்று கேட்டானாம். அதற்கு ஐன்ஸ்டீன் அவனிடம் வானத்தில் அழகாக மின்னிக் கொண்டிருந்த ஒரு நட்சத்திரத்தைச் சுட்டிக் காட்டி, “அதோ பார். அங்கு நட்சத்திரம் தெரிகிறதா?” என்று கேட்க அவன், “ஆம்” என்று பதிலளித்தான். உடனே ஐன்ஸ்டீன், “அந்த நட்சத்திரம் வெகு காலத்திற்கு முன்பே எரிந்து மறைந்து விட்டதொன்று. நீ இப்போது பார்க்கும் ஒளி அந்த நட்சத்திரம் பல நூறு ஆண்டுகளுக்கு முன்னர் அது வெளியிட்ட ஒளி மட்டுமே என்பதை விளக்கமாகக் கூறி அந்த இளைஞனுக்கு புரிய வைத்தபோது அவன் வாயடைத்து நின்றானாம்!.

    அப்படியானால், நாம் காண்பவை அனைத்தும் பொய்யா? மெய் என்று ஏதும் இல்லையா? நாம் இருப்பதும் பொய்யா? வானும், நதியும் கடலும் மலையும் நீரும், ஊரும், வனமும், சோலையும், மான்களும் மீன்களும் என நாம் பார்க்கும் அனைத்தும் மெய்யில்லையா? அனைத்தும் பொய்யா?

    நம்ம பாரதி பாடலை இப்ப கேளுங்க!

    நிற்பதுவே நடப்பதுவே
    நிற்பதுவே நடப்பதுவே பறப்பதுவே நீங்களெல்லாம்
    சொற்பனந்தானோ? பல தோற்ற மயக்கங்களோ?
    கற்பதுவே கேட்பதுவே கருதுவதே நீங்களெல்லாம்
    அற்ப மாயைகளோ? உம்முள் ஆழ்ந்த பொருளில்லையோ?

    வானகமே இளவெயிலே மரச்செறிவே நீங்களெல்லாம்
    கானலின் நீரோ? வெறும் காட்சிப் பிழைதானோ?
    போனதெல்லாம் கனவினைப்போல் புதைந்தழிந்தே போனதனால்
    நானும் ஓர் கனவோ? இந்த ஞாலமும் பொய்தானோ?

    காலமென்றே ஒரு நினைவும் காட்சியென்றே பல நினைவும்
    கோலமும் பொய்களோ? அங்குக் குணங்களும் பொய்களோ?
    சோலையிலே மரங்களெல்லாம் தோன்றுவதோர் விதையிலென்றால்
    சோலை பொய்யாமோ? இதைச் சொல்லொடு சேர்ப்பாரோ?

    காண்பவெல்லாம் மறையுமென்றால் மறைந்ததெல்லாம் காண்பமன்றோ?
    வீண்படு பொய்யிலே நித்தம் விதி தொடர்ந்திடுமோ?
    காண்பதுவே உறுதிகண்டோம் காண்பதல்லால் உறுதியில்லை
    காண்பது சக்தியாம்; இந்தக் காட்சி நித்தியமாம்.

    https://youtu.be/LhirpTCGTHY

    Share