குட்டு போடுங்க… !
பவள சங்கரி
குட்டு போடுவதின் பொருள் என்ன? அச்சோ இது ஆசிரியர் மண்டையில நங்குணு வைக்கிற கொட்டு இல்லீங்க… நம்ம பிள்ளையார் முன் தலையில் மூன்று முறை குட்டிக்கொள்கிறோமே -அதன் பொருள் பற்றியது.
நமது காதுக்கு அருகில், தலையில் இருபக்கங்களும் அமிர்த நாடி இருக்கிறதாம். தலையில் நாம் மூன்று முறை குட்டிக் கொள்ளும்போது அந்த அமிர்த நாடியைத் தட்டிவிடும்போது நமது உடல் முழுவதும் அதன் ஆற்றல் பரவி குண்டலினியை எழுப்பிவிடுவதால் நமது உடலுக்கும் மனதுக்கும் புத்துணர்வையும், நல்ல நினைவாற்றலையும் கொடுக்க வல்லது என்பது ஐதிகம். இதை உண்மை என்று அறிவியலும் ஒப்புக் கொண்டுள்ளதுதான் ஆச்சரியத்தின் உச்சம். அதேபோல் தோப்புக்கரணம் போடுவதிலும் அறிவியல் நோக்கு உள்ளதாம். இதனை யேல் பல்கலைக்கழகத்தின், நரம்பியல் நிபுணர் டாக்டர் யூஜினியஸ் ஆங் ( Dr.Eugenius Aug) என்பவர் நிரூபித்துள்ளார். அதாவது இடது கையால் வலது காதையும் வலது கையால் இடது காதையும் பிடித்துக் கொள்வதன் மூலம் அக்குபஞ்சர் புள்ளிகள் தூண்டப்படுகின்றது என்கிறார். அதுமட்டுமன்றி மூளைக்கலங்களும் அதிக சக்தி பெறுவதாகவும் கூறுகிறார். பல மாணவர்களைக் கொண்டு ஆய்வின் மூலம் நிரூபித்துள்ளார். ஆகா, நம் ஆன்மீக நெறிகள் அனைத்தும் அறிவியலின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்டுள்ளது என்பதை மறுக்கமுடியாது..