கிரேசி மோகன்

—————————————–

முத்தை பவழத்தைப் பொத்தி ஜலத்திற்குள்
நித்தம் அவைமுதிர நோன்பிருந்து -கத்தும்
கடலரசன் தாருகன் காலடியில் கெஞ்சி
அடபரிசாய் அந்தோ அளிப்பு….(96)

வாசுகியும் தோழர்களும் வீசுமொளி ரத்தினத்தால்
நீசனவன் மாளிகையில் நள்ளிரவில் -தாசியென
தீபங்கள் தாங்கித் திரிகின்றார் தேவனே
பாபமென் செய்தோம் புகல்….(97)

கற்பகத் தாருதரும் அற்புதங்கள் யாவையும்
அற்பனவன் ஆட்சி அருள்வேண்டி -நிற்பவனாம்
இந்திரனே தாரகன் இன்னல் தவிர்த்திட
தந்தருளி ஆனான் தொழும்பு….(98)

காட்டிடும் அன்புக்குக் கட்டுப் படாதவன்
வாட்டு கிறான்மூ உலகத்தை -போட்டு
அடியாத மாடு படியாதாம் என்று
முடிவாகச் சொன்னான் முனி….(99)

இந்திர லோகத்து சுந்தரிகள் வாஞ்சையாய்
வந்து தளிர்களுக்கு வேதனை -தந்திடாது
நேசமொடு கொய்திடும் நந்தவனம் தாரகனின்
நாசத்தால் நாணுது நைந்து….(100)
மூச்சுவிடும் காற்றளவு வீச்சடக்கி, தம்கண்ணீர்
பூச்சொரிய தேவகுலப் பாவையர் -கூச்சமொடு
தாமரைக் கைகளால் தாரகன் தூங்கிட
சாமரம் வீசி சளைப்பு….(101)….கிரேசி மோகன்….!

இரவிதன் தேரின் புரவிக் குளம்பு
உரசுமம் மேரு சிரசை -கருவியவன்
பேர்த்தெடுத்து மாளிகைப் பூங்காவில் குன்றுகளாய்ப்
பார்ப்பதவன் கேளிக்கைப் போக்கு….(102)

அட்டதிக் கஜங்களின் கொட்டும் மதஜலம்
மட்டுமே கொண்டதால் மாகங்கை -குட்டையாம்
பொற்றா மரைப்பயிர் போகமவன் வாவியில்
குற்றப்பேர் மந்தா கினிக்கு….(103)

அமானுஷ் யமாக அவன்வந்தால் போகும்
சமாச்சாரம் ஆகுமே சோகம் -விமானத்தில்
ஆதலால் தேவர்கள் பூதலம் சுற்றிடும்
காதலுக்கு வந்ததாம் கேடு….(104)

தீயவன் மூலம் தருமவிர் பாகத்தை
தீயவன் தாரகன் தேவரெம்முன் -மாயமாய்
வேள்வியில் அக்கினிக்கு வாரிசாய் வந்துண்டு
தோல்விக்(கு) அளிப்பான் தபஸ்….(105)

மிச்சைஸ்வர் யத்தோடு மந்தரம் சுற்றுங்கால்
இச்சையாய் இந்திரன் ஈட்டிய -உச்சைச்
ரவஸ்ஸை அபகரித்த ராட்ஷஸனால் காப்பு
கவஸம் இழந்தாற்போல் கோன்….(106)

கபவாத பித்தம் கலந்திடத் தோன்றும்
அபவாத மாய்சன்னி பாதம் -உபவேதம்
தீராப் பிணியென்ற தொல்லை யிதற்கீடாம்
தாரா சுரன்செய்யும் தீங்கு….(107)….கிரேசி மோகன்….!

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *