பவள சங்கரி

அன்பிற்கினிய நண்பர்களே!

வணக்கம். கண்ணையும், கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் திறமை கொண்டவரா நீங்கள்?

14249039_1086706751383523_1011865516_n

112795645@N05_rஷாமினி எடுத்த இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள். இதனை நம் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி. சாந்தி மாரியப்பன் தேர்ந்தெடுத்து அளித்துள்ளார்.

இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை நல்ல தலைப்புடன் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் சனிக்கிழமை (10.09.2016) வரை உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர்குழு உறுப்பினரும், தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான திருமதி மேகலா இராமமூர்த்தி தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பலமுறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப்படும் கவிஞர்களுக்கும் உண்டு. 12 மாதமும் தேர்வுபெறும் ஒளிப்படக் கலைஞர் / கவிஞர்களிலிருந்து ஆண்டின் சிறந்த கலைஞரும், கவிஞரும் தேர்வு பெறுவார்கள். ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி இது; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்குபெற அழைக்கிறோம்.

போட்டியின் நடுவரான திருமதி. மேகலா இராமமூர்த்தி புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்தவர். கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்ற இவர், அமெரிக்க தமிழ்ச்சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009, 2014-ஆம் ஆண்டுகளின் (ஆர்லாண்டோ, அட்லாண்டா & மிசௌரி) கவியரங்கம், இலக்கிய வினாடிவினா நிகழ்ச்சிகளில் பங்கேற்றுப் பாராட்டுக்களும், பரிசுகளும் பெற்றுள்ளவர். சங்கப் பாடல்களில் அதிக ஆர்வமும், இலக்கியக் கூட்டங்களிலும், பட்டிமன்றங்களிலும் சுவைபடப் பேசுவதில் வல்லமையும் பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடைபவளம்.

9 thoughts on “படக்கவிதைப் போட்டி (79)

 1. வேண்டாம் சோர்வு…

  கப்பல் மூழ்கிப் போனாலும்
  கடலாய்த் துன்பம் வந்தாலும்,
  எப்பவும் எதற்கும் சோர்ந்திடாதே
  எல்லாம் போய்விடும் கடலலைபோல்,
  தப்பே நடந்து போனாலும்
  தலையில் கைகள் வைக்கவேண்டாம்,
  தெப்பமாய் உதவிடும் நம்பிக்கை
  துணிவுடன் செயல்படு வென்றிடவே…!

  -செண்பக ஜெகதீசன்…

 2. கப்பல் மூழ்கியது போல் தலையில் இரு கைகள் வைத்தாயோதலை வலிக்கின்றது து என இரு கைகள் வைக்கின்றாயோ ,தலையில் இருகை வைத்து எதை நோக்குகின்றாயோ ,தலையில் இருகை வைப்பது நல்லது அல்ல என்பார் சான்றோர்உன் இரு கைக்கொண்டு,நம்பிக்கையுடன்  உழைத்தாலே  போதும் கைகளும், கால்களும் நமக்கு  தருமே பெரும் பதவிஅதில் காணும் திறமைதான் நமது செல்வம் !

 3. சுதந்திர தாகம்.

  சி. ஜெயபாரதன்

  ஆயுத மனிதா ! நாங்கள்
  காயிதப் படகுகள் !
  அடிக்கும் புயலில்
  துடிக்கும் எமது கொடிகள் !
  குப்புறச் சாயும்
  பாய்மரம் !
  குடியுள்ள சொந்த நாட்டில்
  விடுதலை கேட்டுக்
  கண்ணீர் விட்டோம் !
  குருதி கொட்டினோம் !
  ஆடை நீக்கப் பட்டு
  மானம் இழந்தார் மங்கையர்,
  முலை அறுபட்டு,
  பெண்குறி கிழிபட்டு,
  கை, கால்கள் வெட்டப்பட்டு,
  முகக் காயம் பட்டு !
  தந்தையர் இழந்தோம் !
  தாயை இழந்தோம் !
  தனையனை இழந்தோம் !
  அடே ! பாவிகளா !
  ஆயுத மில்லா
  ஆவி மனிதர் நாங்கள் !
  உணவின்றி, உடையின்றி,
  உற்றார் உறவினர்,
  மேற் கூரை இன்றி
  காயும் வெயிலில் வேகின்றொம் !
  ஆயுத மனிதா !
  கரம் தூக்கி விட்டேன் !
  சுடாதே ! சுடாதே ! சுடாதே என்னை
  என்று சொன்னேன் !
  செத்தவர் எல்லாம் சுதந்திரம்
  பெற்றார் !
  சுட்டெனக்கும் நிரந்தரச்
  சுதந்திரம் அளித்திடு !

  +++++++++++

 4. தன்னம்பிக்கை தலை தூக்கினால்

  கொக்கரிக்கும் அலைகள் -அங்கு
  கொஞ்சி விளையாடிய சிறுவன்

  காப்பாற்ற நினைக்க‌
  என் வீரத்தில் நீச்சலில்
  நான் வென்ற பதக்கத்தில்
  அசையா நம்பிக்கை

  தாவி குதித்து நீந்த முயல‌
  நீண்டது என் நீச்சல் நேரம்
  கண் இமைக்கும் நேரத்தில்
  கடல் காலனுக்கு அவனை தாரை வார்க்க‌

  ஐய்யோ
  காணாமல் போனான் சிறுவன்
  வென்றது கடல்
  வெந்து தோற்றேன் நான்

  என்னால் முடியும் என்பது தன்னம்பிக்கை
  என்னால் தான் முடியும் என்பது அகம் பாவம்
  உண்மை உறுத்துகிறது-இனி
  உணர்ந்தும் பயனில்லை

  நான் கொண்டது தன்னம்பிக்கையா இல்லை
  அகம் பாவமா…….
  ஆனால் இது நிஜம்..
  காப்பாற்றுவேன் என்ற நிஜம்
  நிழலாக நெஞ்சை பிளக்க‌
  அலையை தள்ளிய கைகள்-என்
  தலையை தஞசமடைகிறது தற்போது

  அனுப்புனர்
  திருமதி ராதா

  ..

 5. தனித்திரு!விழித்திரு

  தனிமனிதனாய் விடபட்ட வினாடி
  கரங்கள் அனிச்சையாய்
  சிரம் மேல் குவிவது
  மானிட இயல்பு
  தலை கவிழ்த்த கைகளும்
  கவலை ரேகையும்
  கட்டுண்டு உனை செயலறுக்கும்
  போகுமிடம் தூரமில்லை
  போனவரும் வருவதில்லை
  புலம்பது தேவையில்லை
  பாதைகளை நோக்கும் விழிகளுக்கு
  பாதங்கள் தடை ஆவதில்லை
  கடந்து செல்வோரும் கவனிக்கவில்லையா
  காட்சிப் பிழைகளாய் புறந்தள்ளு
  வெற்றியின் கனவுகளே
  மனதிற்கு மருந்தாய் அமையட்டும்
  தனித்திருக்க கற்றுக்கொள்
  புகழ்த் தடயங்களை விட்டுச்செல்வாய்
  விழித்திருக்க கற்றுக்கொள்
  விடியல் விலாசம் உன் பேர் சொல்லும்
  ஆன்மஒளி உன்னுள்ளே பிரகாசிக்கட்டும்
  சான்றோனாய் அவதரிப்பாய்.

 6. விரல்கள் பத்தும் மூலதனம்
  கரம் கோர்த்து சிரம் சேர்க்காதே
  கரங்களில் விரல்களே மூலதனம்
  கரங்களின் வரமே விரல்கள்
  விரல்களின் பயனே செயல்கள்
  விரலின் விந்தையால்
  வீணை தீண்டினால் ராகம் பெறலாம்
  உளி எடுத்தால் சிலை செதுக்கலாம்
  எழுத்தாணி பிடித்தவனும்
  பேனாமுனை பிடித்தவனும்
  அறியாமை இருளை
  விரல்பிடித்தே வித்திட்டனர்
  புறமுதுகுகாட்டியவன்
  புறஉலகை வென்றதில்லை
  உண்மையை நேருக்குநேர் நோக்கு
  உள்ளொளி பெருக்கி உன்னதம் பெறுவாய்.

 7. பற்று பாசத்தால் பரிதவித்து
  சுற்றுச் சூழலால் துடிதுடித்து
  கற்றதும் பயனில்லையேஎன்று
  கதறும்போது
  கரங்கள் சிரம்மேல் அமர்வது இயல்பு
  வெட்ட வெளிகளில் நின்று யோசித்தல்
  நினைவுகளின் மயக்கத்திலிருந்து விடுபடும்

  இருகரம் இறக்கு சிரம் தனை விடுத்து
  இடையூறுகளை களைந்திட புறப்படு
  பொறுப்புடன்கூடும் போராட்டம்
  விருப்புடன் ஏற்கப்படும்
  கர் நாடகா மனம் இறங்கி நீர் தரும்
  கருகும் பயிர்கள் செழிப்புரும்

  முடியாப்பொருளும்முடிந்துவிடும்
  விடாமுயற்சி செய்வதால்
  எடுத்தஎடுப்பு இனிதே முடிய
  தொடுத்தே தொடர் தொழில் செய்

  சரஸ்வதிராசேந்திரன்

 8. ஏதேதோ எண்ணங்கள்

  எத்தனையோ மனதிலே
  அத்த்னையின் மத்தியில் ஆழமாய் ஒரு சோகம், நிர்க்கதியாய் உலகினில்
  நீம்மதியான வாழ்வு தேடி
  வாழ்க்கையதைப் பணயம் வைத்து
  படகுகளில் பயணித்து
  ஆழமிகு நீலக்கடலில்
  அறிமுகமில்லா ஊரை நோக்கி
  சின்னஞ்சிறு மலர்கள் சிறகடித்து பறக்க முயன்று
  சீறிவரும் சமுத்திரத்தில் சிதறிப் போகும் காட்சிகள்
  கண்டும் ஏனோ அனைத்துலகும்
  காணாமல் வாழும் கோலம்
  இதுகூட மானிட உலகமென்றால்;
  இங்கே நான் வாழ்வது வீணே

  சக்தி சக்திதாசன்

Leave a Reply

Your email address will not be published.