Category: போட்டிகளின் வெற்றியாளர்கள்

போட்டிகளின் வெற்றியாளர்கள்

  • படக்கவிதைப் போட்டி 170-இன் முடிவுகள்

    -மேகலா இராமமூர்த்தி

    திருமிகு. அனுபாலா எடுத்த இந்த நிழற்படத்தைத் திருமதி. சாந்தி மாரியப்பன் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்திலிருந்து தெரிந்தெடுத்துப் படக்கவிதைப் போட்டிக்கு அளித்திருக்கின்றார். இவ்விருவருக்கும் என் நன்றி!

    ”தொழுத கையராய் அழுத கண்ணராய் நிற்கும் அடியார்முன் ஆண்டவனும் நெகிழ்ந்திடுவான் உளம்!”

    இந்தப் படத்தினைக் காண்கையில் உம் உளத்தில் ஊறும் உணர்ச்சிகளைத் திரட்டிக் கவிதையாய்ப் படைத்திட கவிவலவர்களைக் கரங்கூப்பி அழைக்கின்றேன்.

    *****

    ”உள்ளத்தில் உறைந்திருக்கும் பரம்பொருளை வெளியில் தேடுவதில் பொருளில்லை. ஆகவே தேடுவோம் அவனை உள்முகமாய்” என்று உண்மை உரைக்கின்றார் ஆ. செந்தில் குமார்.

    கடவுளை சற்றே சிந்திப்போம்!

    இந்த
    உடலே திருக்கோயில்!
    உள்ளமே கருவறை! – அதில்
    உறைபவனே இறைவன்!
    உரைத்தாரன்றே திருமூலர்…

    இந்த
    உடலைப் பேணாமல்
    உள்ளத்தைக் காணாமல்
    உலகில் எங்கெங்கோ தேடினாலும்
    உட்பொருள் கிடைப்பானா?

    அந்த
    கோயிலின் புறத்தே
    கோவணத்திற்கும் வழியின்றி
    கோடி மக்கள் பசித்திருக்கக்
    கோயிலின் அகத்தே உண்டியலில்
    கோடி கோடியாய்க் கொட்டினாலும்
    கொலுவிருக்கும் குலசாமி அருளுமா?

    அந்த
    கடவுளைச் சற்றே சிந்திப்போம்!
    கடவுள் அதன் உட்பொருள்
    கட உள் என்பதாகும்!
    கண்களை மூடி மனதினுள்ளே
    கடந்து போவோம்!
    கடவுள் அங்கே இருப்பானே!

    அந்த
    உள்ளத்தின் உள் உறைபவன்தான்
    எங்கெங்கும் நீக்கமற நிறைந்துளான்!
    கண்ணைத் திறந்து காண்பவை எல்லாம்
    அவனின்றி வேறேது??

    *****

    ”நெஞ்சம் மகிழ நிறைந்திருக்கும் பிள்ளையார், நாம் தஞ்சம் அடைந்திடத் தாயாக வந்திடுவார்” என்று விநாயகரைத் தன் கவிதையின் நாயகராக்கிப் போற்றுகின்றார் பெருவை திரு. பார்த்தசாரதி.

    சாலை விநாயகர்..!

    நெஞ்சம் மகிழவே
    ……….நிறைந்ததொரு பிள்ளையார்
    தஞ்சம் அடைந்திடவும்
    ……….தாயாக வந்திடுவார்
    எஞ்சிய சாலையும்
    ……….எங்கேயும் இல்லையே
    விஞ்சியே நிற்கும்
    ……….வரையில்லா எண்ணிக்கை
    மஞ்சளும் குங்குமமும்
    ……….மக்களும் கொண்டுபோய்ப்
    பஞ்சமிலாது பூசிடுவார்
    ……….பட்டிதொட்டி யெங்குமாய்
    அஞ்சுவிரல் ஐந்தும்
    ……….இரண்டாகச் சேர்த்துயர
    அஞ்சனக் கண்மூடி
    ……….அங்கே தொழுதிடுவார்

    *****

    ”கூட்டுக் குடும்பமெல்லாம் சீட்டுக்கட்டாய்ச் சிதறிவிட, கும்பிட ஆளின்றிக் குலதெய்வமும் தனிமையில் வாடுதே” என்று வருந்திப் பாடுகின்றார் திரு. செண்பக ஜெகதீசன்.

    தனிமையில்…

    குடும்ப மெல்லாம் சேர்ந்திருக்க
    கூட்டுச் சேர்ந்து கும்பிட்டார்,
    குடும்ப நலனைக் காக்குமென்றே
    குலத்தின் தெய்வம் என்றுரைத்தார்,
    அடுத்து வந்த காலத்திலே
    அவரவர் பணியில் சென்றுவிட்டார்,
    கொடுத்து வந்த குலதெய்வமும்
    கொடிய தனிமையில் வாடிடுதே…!

    *****

    நல்ல கவிதைகளை நயமுடன் படைத்திருக்கும் கவிஞர்களுக்கு என் பாராட்டு!

    இவ்வாரத்தின் சிறந்த கவிதை அடுத்து…

    கடவுளைக் காணலாம்!

    இருகரம் கூப்பி இறைவனை வணங்கும் மனிதா!
    பணிந்தே இறைவனை வேண்டும் வரம் யாதோ மனிதா!
    மாட மாளிகை வேண்டி நின்றாயோ மனிதா!
    பொன்னும், பொருளும் யாசித்தாயோ மனிதா!
    பட்டம் பதவி கேட்டு நின்றாயோ மனிதா!
    உன் குடும்பம் நலமுடன் வாழ வணங்கி நின்றாயோ மனிதா!
    ஏழை, எளியோர்க்கு உதவாமல், இறைவனை வேண்டிப் பலனில்லை!
    அன்னை, தந்தையைப் பேணாமல் ஆலயம் செல்வதில் பலனில்லை!
    பாவத்தினால் வந்த பணத்தினிலே
    இறைவனுக்குப் பங்கு கொடுப்பதும் பலனில்லை!
    உழைப்பவரின் ஊதியம் குறைத்துத்
    திருப்பணி செய்வதில் பலனில்லை!
    எளியவரை மகிழ வைத்து இறைவனைக் காணலாம்!
    கடுஞ்சொல் தவிர்த்தால் கடவுளைக் காணலாம்!
    ஆசை துறந்தால் ஆண்டவனை அடையலாம்!
    பிறர்கென வாழ்ந்தால் கடவுளாய் வாழலாம்!

    ”மனிதா! இருகரம் கூப்பி இறையிடம் வேண்டுவதென்ன? பொன்னும் பொருளுமா? பட்டமும் பதவியுமா? தன்னலமே என்றும் குறியா யில்லாமல் பிறர் நலமும் நாடு; துன்ப வித்தான ஆசையைத் துறந்து ஆண்டவனைத் தேடு” என்று நல்வாழ்வுக்கு வழிகாட்டும் வரிகளைத் தாங்கிநிற்கும் இக்கவிதையின் ஆசிரியர் திரு. பழ. செல்வமாணிக்கத்தை இவ்வாரத்தின் சிறந்த கவிஞரென அறிவித்துப் பாராட்டுகின்றேன்.

     

     

    Share
  • படக்கவிதைப் போட்டி 169-இன் முடிவுகள்

    -மேகலா இராமமூர்த்தி

    முக்காடிட்டு முகம் மறைத்தபடி அக்கறையோடு அலைபேசியில் உலவிக்கொண்டிருக்கும் பாவையைத் புகைப்படமெடுத்து வந்திருப்பவர் திருமதி. கீதா மதிவாணன். ஃப்ளிக்கர் குழுமத்திலிருந்து இப்படத்தைப் படக்கவிதைப் போட்டிக்குத் தேர்வுசெய்து தந்திருப்பவர் திருமதி. இராமலக்ஷ்மி. புகைப்படக் கலைஞருக்கும் அதனைச் சுவைபடத் தேர்ந்தெடுத்த தெரிவாளருக்கும் எம் நன்றி!

    அலைபேசியின் பிடியில் அகிலமே சிக்குண்டிருக்கும் இத்தொழில்நுட்ப யுகத்தில், மெய்ந்நிகர் உலகே மெய்யான உலகாகிப் போனதால், கண்டம் தாண்டி வாழ்வோரே அண்டைவீட்டார் ஆனார்கள்; நாடுகடந்து வாழ்வோரே உளம்நாடு(ம்) நட்பும் ஆனார்கள். வீடுதேடிவந்த உண்மை உறவுகளெல்லாம் காணாமல் போனார்கள்!

    கவிஞர்களே! கண்ணுக்கு விருந்தளிக்கும் இவ் வண்ணப்படத்துக்கு உங்கள் எண்ணங்கள்வழி உயிரூட்டுங்கள்! ஒளி கூட்டுங்கள்!

    *****

    இணைய உலகில் இன்புற்றலைந்து, இச்சைப் பேச்சுக்களில் இதயம் பறிகொடுத்து, அகமும் முகமும் சேர்ந்தழியும் இளைய தலைமுறையினருக்காக இரங்குகின்றார் திருமிகு. கீதமஞ்சரி.

    இன்றைய வாழ்வின் இதம் மறந்து
    நாளைய வாழ்வின் தேடல் மறந்து
    உறக்கம் தவிர்த்து ஊண் மறந்து
    உறவு தவிர்த்து உலகம் மறந்து
    விழிவிலகாது கைக்கருவி பதித்து
    விரல்களால் திரைநகர்த்தி ரசித்து
    இரவும் பகலும் இடையறாது திரிந்து
    இணைய உலாக்களில் இன்புற்றலைந்து
    புனைந்த பெயர்களில் கதைகளில் மகிழ்ந்து
    பூச்சுகளில் மெய்வண்ணம் மறைத்து
    இங்கொரு முகம் அங்கொரு முகம் காட்டி
    இச்சைப்பேச்சுகளில் இதயம் பறிகொடுத்து
    நச்சுநாவின் தீண்டலுக்கு இரையாகி
    நலமழித்து குணமழித்து பொழுதழித்து
    முகமும் சேர்த்தழிக்கும் தலைமுறை முடக்கம்.

    *****

    ”பலனேதுமில்லாப் புலனம் உன்னைப் படுகுழியில் தள்ளும்; கலகங்கள் செய்யும்; உபயோகமில்லா இதனை ஒதுக்குதலே நன்று” என்று இப்பெண்ணுக்குப் பொன்னான கருத்துக்களைப்  புகல்கின்றார் பெருவை திரு. பார்த்தசாரதி.

    புலனத்தால் பயனில்லை

    அலங்காரம் செய்து கொண்டு
    ……….ஆருக்கும் தெரியா வண்ணம்
    புலனத்துள் முகத்தைப் புதைத்துப்
    ……….பொழுதுகளை இழந்த பெண்ணே.!
    சலனமேதும் இல்லா மலேயே
    ……….சத்தமின்றிச் செய்வ தென்ன
    பலனேதும் இல்லாப் புலனம்
    ……….படுகுழியில் தள்ளும் உன்னை.!

    உலகத்தில் எல்லா இடமும்
    ……….ஓரிடத்தை விடாது சுற்றி
    கலகத்தைச் செய்து குழப்பம்
    ……….கண்டபடி உண்டு செய்யும்.!
    இலகுவாக இதிலே இருந்து
    ……….இட்டபடி விலக முடியா
    உலகறிவு பெறவும் இதிலே
    ……….ஒன்றுக்கும் உபயோ கமிலை.!

    இடித்துரைத்தும் கேட்கா வயது
    ……….இந்தநிலை தவிர்க்க வேண்டும்.!
    துடிக்கின்ற இளம் பருவம்
    ……….துள்ளாமல் இருக்க வேண்டும்.!
    படிக்கின்ற வயதில் திருட்டுப்
    ……….புத்திகூட வேணாம் பெண்ணே.!
    படிக்காத பொழுதில் காதல்
    ……….பக்கத்தில் நெருங்க விடாதே.!

    *****

    இந்த மிடுக்கலைப்பேசி, ஒற்றைச் சொடுக்கில் கற்றைத் தகவல்கள் கொட்டும்; கம்பி வடமின்றி மன்பதையைக் கட்டும். இணையத்தொடர்பின்றி அது முடக்கம் கண்டால் மாந்தக்கூட்டமும் வாட்டம் கொண்டிடுதே என்று வியக்கின்றார் திரு. ஆ. செந்தில்குமார்.

    மிடுக்கலைப்பேசியின் மிடுக்கான வளர்ச்சியும்.. மெய்ம்மறக்கும் உலகமும்..

    ஒற்றைச்சொடுக்கில் கற்றைத் தகவல்கள் நம் கண்முன் கொணர்ந்திடுமே…
    சுற்றும் முற்றும் பார்க்காத பயனாளி இதனுள் ஐக்கியமே…

    திரட்டுகள் அனைத்தையும் புரட்டிப் பார்க்க உதவிடும் ஓர் கருவி…
    அறிவை வளர்க்கும் விருப்பத் தேர்வுகள் கொண்டது இக்கருவி…

    தம்படம் எடுத்து தம்பட்டம் அடிக்க வாய்ப்புகள் கொடுத்திடுமே…
    கம்பி வடமின்றி நம்மை இணைக்கும் மாபெரும் தொழில்நுட்பமே…

    தடங்காட்டி அமைப்பு நாட்காட்டி வசதி அனைத்தும் உள்ளடக்கம்…
    தொடுதிரை வடிவில் தொடர்புகள் அனைத்தும் இதனுள் அடக்கம்…

    வெள்ளோட்டம் மூலம் வசதிகள் அனைத்தையும் கற்றுத் தந்திடுமே…
    வேண்டிய செயலியைப் பதிவிறக்கம் செய்து நிறுவிக் கொள்ளலாமே…

    இணையத்தின் வழியே உலகைப் பிணைக்கும் வல்லமை இதற்குண்டு…
    தனதெனக் கொண்ட தக்கதோருலகை அவரவர்க்குத் தந்திடும் ஆற்றலுண்டு…

    பல்லூடகச் செய்திகள் படசெய்திகள் அனைத்தையும் புலனத்தில் பகிரலாமே…
    எல்லை கடந்த வானத்தளவு தகவல்கள் அனைத்தும் சேமித்து வைக்கலாமே…

    இயங்கலை சற்றே முடங்கிப் போனால் உலகு நின்றது போலாகிடுமே…
    இளைஞரின் மனதெல்லாம் முடக்கலையாகி துன்பத்தில் ஆழ்ந்திடுமே…

    படித்தவர் பாமரர் இளையோர் முதியோர் அனைவரும் மயங்கிடுவர்…
    நடுத்தர ஏழை செல்வந்த ரனைவரும் இதை உயர்வாய்க் கருதிடுவர்…

    மூன்றாம் நான்காம் தலைமுறை கடந்து மிடுக்காய் வளர்ந்ததுவே..
    மிடுக்கலைப்பேசியில் கட்டுண்ட உலகம் அதில் மூழ்கிப் போனதுவே…!

    *****

    புகுந்தவீட்டைப் பிறந்தவீடாய் எண்ணி, அங்குள்ள மனிதர்களைத் தன் சுற்றமாய்ப் பேணி, சற்றே இளைப்பாற ஓய்ந்திருக்கும் இக்காரிகைக்கு, அவளுக்கான தருணங்களை அளிப்பதிந்தக் கைப்பேசிதான் என்கிறார் முனைவர் இராஜலட்சுமி இராகுல்.

    எனக்கான தருணங்கள்

    கரம் பிடித்த நிமிடம் முதல்
    உயிரே உன் துணைவி யாக;
    கரு வினிலே சுமக்கா விடினும்
    உன் அன்னையை என் தாயாக;
    கல்வி கேள்வி நல்கா விடினும்
    உன் தந்தையை என் தகப்பனாக;
    ஒரு வயிற்றில் பிறக்கா விடினும்
    உன் சகோதரியை என் தங்கையாக;
    மைத்துனன் கொழுந்தன் மாமன் மாமி
    தமையன் தமைக்கை மற்றும் மருகன்
    என் றுன்னுற வினரனை வரையும்
    யென்னுறவாய் நெஞ்சில் சுமந்து கொண்டு ;
    உன் இல்லத்தில் உன் இடத்தை
    நிரப் பிடும் நற்பணி யேற்றேன் !!!

    என்ன வனே யென்னை யீன்ற
    அன்னை தந்தை இரு வருடன்;
    தன் னலம் சிறிதும் இன்றி
    எம் நன்மை பேணும் தோழியுடன்;
    கன்னம் தொட்டு என்னைக் கொஞ்சும்
    அண்ணன் தம்பி அனைவருடன்;
    ஆசை யுடன் சில நொடிகள்
    உரை யாடக் கூடு மென்னில்….

    நீயாக நான்மாறி நானாற்றும் பணிஓய்ந்து
    அவரவர் தேவைகளை மருமகளாய்ப் பூர்த்திசெய்து
    உறவினர் குழுமியுள்ள உன்னகத்தின் புறம்வந்து
    நானாக நானிருக்கும் எனக்கான தருணங்கள் !!!

    *****

    கைப்பேசியின் மகத்துவத்தை, அதனால் சகத்துக்கு விளையும் ஆபத்துக்களை என்று அதன் இருவேறு பக்கங்களையும் சரியாய் அடையாளப்படுத்தியிருக்கும் கவிஞர்பெருமக்களுக்கு என் பாராட்டுக்கள்!

    அடுத்து வருவது இவ்வாரத்தின் சிறந்த கவிதை…

    ஏந்திழையே! எதனை ஏந்தியபடி அமர்ந்திருக்கிறாய்?
    ஆயிழையே! ஆராய்ச்சி செய்வது எதனை?
    முழுச் சுதந்திரம் கொண்டவளோ, முக்காடிட்டவளோ?
    அத்துணைப் பேர் கையிலும் ஆன்ட்ராய்ட்!
    ஆன்ட்ராய்டோ, ஆப்பிளோ, கையும்,கண்ணும்
    கணினியில், உள்ளங்கையில் உலகு அடக்கினையோ?
    ஓய்வுப்பொழுது ஆய்வுப் பொழுதாய் ஆனதோ??
    வண்ண உடைக்குள் வசீகரம் மறைத்த
    வனிதையே, வானளந்தனையோ, கடல் தாண்டிச்
    சென்ற கணவனுக்குக் கடிதம் எழுதினையோ?
    அன்புள்ள தேவதையே, அகிலம் எட்டிப் பார்!
    வண்ணத்தால் வசீகரித்தாய், எண்ணத்தாலும்
    ஏற்றம் பெற்றிடு, கணக்குச் செய்தனையோ?
    கணக்காய்ச் செய்தனையோ? அன்பு
    பொழிந்தனையோ?ஆன்ட்ராய்டில்
    மொழிந்தனையோ? மாடப்புறாவே,
    மயக்கும் பேரெழிலே, மஞ்சள் வண்ணத்
    தாரகையே, மண்ணுலகிற்கு இறங்கி வா
    பொன்னுலகில் பூத்துக் கிடந்தது போதும்
    என்னுலகு சேர், ஏற்றமாய் வாழ்வோம் வா!

    ”முக்காடிட்டு முகம் மறைத்த பெண்ணே! இந்தக் கைப்பேசி உன் ஓய்வுப் பொழுதை ஆய்வுப்பொழுதாய் மாற்றியதோ? வானை அளக்கலாம்; இதன்மூலம் வம்பும் அளக்கலாம். பொன்னுலகில் பூத்திருக்கும் புதுநிலவே! மண்ணுலகிற்கு இறங்கி வா! ஏற்றத்தோடு வாழ்வோம் வா!” என்று மெய்ந்நிகர் உலகில் சஞ்சரிக்கும் பெண்ணை மெய்யுலகுக்குக் கைநீட்டி அழைக்கும் இக்கவிதையை யாத்த திருமிகு. முருகேஸ்வரி ராஜவேலை இவ்வாரத்தின் சிறந்த கவிஞராய் அறிவித்துப் பாராட்டுகின்றேன்.

     

     

    Share
  • படக்கவிதைப் போட்டி 168-இன் முடிவுகள்

    -மேகலா இராமமூர்த்தி

    கரத்தில் நீரெடுத்துச் சிரத்தையொடு வானரத்துக்கு ஊட்டும் மனித மாண்பைப் படமெடுத்து வந்திருப்பவர் திருமதி. சாந்தி மாரியப்பன். ஃப்ளிக்கர் குழுமத்திலிருந்து இதனைப் படக்கவிதைப் போட்டிக்குத் தெரிவுசெய்து தந்திருப்பவர் திருமதி. இராமலக்ஷ்மி.  இவ்விரு பெண்மணிகளுக்கும் என் நன்றி!

    மன்னுயிர்கள் அனைத்தும் இன்பமாய் வாழ்வதற்கென்றே படைக்கப்பட்டது இப்புவி! இதில் கவிக்குலங்களும் விலக்காமோ? ஆதலால், ஒருவரை ஒருவர் அடுதலும் தொலைதலும் விடுத்து, ஆருயிர்க்கெல்லாம் அன்பு செயல் வேண்டும்!

    இந்நிழற்படத்திற்குப் பொருத்தமாய்க் கவியெழுதக் கவிஞர்கள் எழுக! கவிமழை பொழிக! என வாழ்த்தி அமைகின்றேன்!

    *****

    கானம் அழிந்ததால் அங்கு  மகிழ்வோடு வாழ்ந்த வானரங்கள் உணவுதேடி ஊரைநாடி வருகின்றன; இதனைத் தவிர்க்க, பல்லுயிர் ஓம்பும் பண்புகொண்ட மானுடன், காடுகளை அழியாது காக்கவேண்டும். கானுயிர்களின் வாட்டத்தைப் போக்க வேண்டும் என்று வலியுறுத்துகின்றார் திரு. ஆ. செந்தில்குமார்.

    பல்லுயிரும் இன்புறத்தக்க பூவுலகம் படைத்திடுவோம்…
    பண்டு ஓர் காலத்தில்… வண்டு உலாவும் சோலையில்…
    கண்டு மாந்தர் மகிழ்ந்திட்டார்… மனிதன் போன்ற குரங்கினை…
    இன்று உள்ள நிலையிலே… கானம் யாவும் அழிந்ததால்…
    உண்டு வயிற்றை நிரப்பவே… அது ஊரைநாடி வருகுதே…!

    வானரத்தைக் கண்டதும்… மனம் மகிழ்ந்திடும் மாந்தரும்…
    மன முவந்து உணவினை… அதற் களித்து களித்திட்டார்…
    அன்பு மிக்க இச்செயல்… அதன் இயல்புகளைக் குலைத்திடும்…
    என்பதை உணர்ந்து நாம்… இயற்கைச் சூழல் பேணுவோம்…!

    மனிதன் என்ற பிறவியே… பரிணாம வளர்ச்சியின் உச்சமாம்…
    ஆன போதும் இவ்வுலகமே… அனைத் துயிர்க்கும் சொந்தமாம்…
    வன உயிரினங்கள் வாழவோர்… உரிய சூழல் செய்குவோம்…
    காணம் போன்று கானத்தைப்… போற்ற நாமும் கற்றிடுவோம்…!

    *****

    ”குரங்கைக் குறைவாய் எண்ணாதே மனிதா! அதற்கு(ம்) உணவளித்து உயர்வாய் இராமனாய்!” என்று தன் கவிவழியாய்ப் புவிக்கு மொழிகின்றார் திரு. செண்பக ஜெகதீசன்.

    குறைவில்லை…

    குரங்கி லிருந்து பிறந்ததாகக்
    கூறிக் கொள்ளும் மானிடனே,
    குரங்கைக் குறைவாய் எண்ணாதே
    குட்டியை வயிற்றில் கொள்வதைப்பார்,
    குரங்குச் சேட்டை பண்ணாமல்
    குரங்கைத் துணையாய்க் கொண்டிடவே
    குரங்குப் படைக்கும் உணவளித்துக்
    கொள்வாய் உயர்வு இராமனாகவே…!

    *****

    வானரத்தைப் போற்றித் தேனான பாக்கள் தந்த பாவலர்க்கு என் பாராட்டு!

    இனி இவ்வாரத்தின் சிறந்த கவிதை…

    படைப்பின் அதிசயம்..!

    உலகம் முழுதும் உயிர்கள் படைத்தான்
    உலகில் முதலாம் ஒருவனே இறைவன்.!

    அண்டவுயிர்க் கெல்லாம் அறிவைக் கொடுத்து
    ஆண்டுகள் பலவும் ஆயுளாய்க் கொடுத்தான்.!

    இயற்கை நமக்களித்த இன்ப வாழ்க்கை
    செயற்கை கலந்திடாது செலவழிக்கப் பழகு.!

    எத்தனை உயிர்கள் எண்ணிலா உயிர்கள்
    அத்தனும் கொடுத்தான் ஆசை கொண்டே.!

    அன்புடன் நடக்க அனைத்து உயிரிடம்
    அன்பாய்ப் பழகும் அரிய பிறவியாம்.!

    அதுதான் மனிதப் பிறவி
    இதுவே நமக்கு ஈடிலா அருளே.!

    குரங்கு முதல் குதிரைபோலப் பலவாக
    இரக்கமிகு ஜீவியை இவ்வுலகில் காணலாம்.!

    அப்பன் உதவுவார் அம்மா காப்பாளென…
    எப்பவுமே இவ்வுயிர் என்றும் வாழ்வதில்லை.!

    சனனம் முதற்கொண்டு சாவு வரையில்
    தனக்குதவி தன்கையில் தானென அறியும்.!

    மனிதன் போலிதற்கு மனமாசு இல்லை
    தனித்தன்மை கொண்டு தானாக வாழ்ந்திடும்.!

    விலங்கின வாழ்வை வைத்து மனிதனும்
    உலகில் தெரிந்துலவ எத்துணையோ உளது.!

    பரந்தமனம் படைத்த பகவனுமே
    மரணத்தால் மனத்தை அறிய வைத்தானே.!

    இயற்கை நமக்களித்த இன்பவாழ்வில் செயற்கைக் கலப்பைத் தவிர்த்து, மன மாசில்லாது, தன் கையே தனக்குதவி என வாழ்வும் விலங்குகள்போல் மனிதனும் புனிதனாய் வாழ வேண்டும் எனச் சாற்றியிருக்கும் இக்கவிதையின் ஆசிரியர் பெருவை திரு. பார்த்தசாரதியை இவ்வாரத்தின் சிறந்த கவிஞராய் அறிவித்துப் போற்றுகின்றேன். இக்கவிதையே அல்லாது மந்தியையும் மனிதனின் புந்தியையும் (புத்தி) ஒப்பிட்டும், மந்தியினத்தையும் அதனைத் தோழனாய் ஏற்ற சுந்தர ராமனை ஏத்தியும் மற்றுமிரு வெண்பாக்களை இயற்றியுள்ள அவருடைய கவி ஆர்வத்தையும் பாராட்டுகின்றேன். 

     

     

     

    Share
  • படக்கவிதைப் போட்டி 167-இன் முடிவுகள்

    -மேகலா இராமமூர்த்தி

    அழகு உடையணிந்து ஆடிமுன் நின்று புன்னகைக்கும் மழலையைத் தன் நிழற்படத்தில் பதிவாக்கியிருப்பவர் திருமதி. பவளசங்கரி அவர்கள். இதனை ஃப்ளிக்கர் குழுமத்திலிருந்து தேர்ந்தெடுத்துப் படக்கவிதைப் போட்டிக்குத் தந்திருப்பவர் திருமதி. இராமலக்ஷ்மி அவர்கள். பெண்மணிகள் இருவரும் என் நன்றிக்கு உரியோர்.

    கவலை வலையில் சிக்கிக்கொள்ளாது, களிப்போடு வாழ்வைக் கழிக்கும் இனிய பருவம் கனிமழலைப் பருவமே. அப்பருவம் கடந்துவிட்டால் வாழ்வின் சுமைகளும் ஆற்றவேண்டிய கடமைகளும் நமை நிம்மதியாய் இமைமூட விடுவதில்லை; சிரித்து மகிழவும் அனுமதிப்பதில்லை. 

    கள்ளமற்ற உள்ளத்தோடு வெள்ளைச் சிரிப்பை உதிர்த்துநிற்கும் இம்மழலையைப் பாட கவிஞர்களை அன்புபாராட்டி அழைக்கின்றேன்!

    *****

    கிள்ளைமொழிகள் பகன்றும், தொல்லையின்றித் திரிந்தும் மகிழ்ந்த அக்காலத்தை – பொற்காலத்தை இந்நிழற்படம் கதைகளாய் நினைவூட்டுவதைத் தன் கவிதையில் காட்சிப்படுத்தியிருக்கின்றார் திரு. ஆ. செந்தில்குமார்.

    நிழற்படம் சொல்லும் கதைகள்…!

    துள்ளித் திரிந்த கதைகளைச் சொல்லும்…
    துடிப்புடன் இருந்த காலத்தைச் சொல்லும்…!
    எள்ளி நகைத்த உலகைச் சொல்லும்…
    ஏதும் அறியா வயதைச் சொல்லும்…!

    வெள்ளி முளைத்தநம் வாழ்வைச் சொல்லும்…
    வெதும்பி வாடிய தருணத்தைச் சொல்லும்…!
    அள்ளித் தந்த கருணையைச் சொல்லும்…
    ஆறுதல் அளித்த நட்பைச் சொல்லும்…!

    கொள்ளை கொண்ட மனதைச் சொல்லும்…
    கொடுத்து வைத்த நிகழ்வைச் சொல்லும்…!
    பிள்ளைப் பருவத்து நினைவைச் சொல்லும்…
    படிப்பை முடித்துப் பறந்ததைச் சொல்லும்…!

    எல்லையே வானமாய் இருந்ததைச் சொல்லும்…
    எதிலும் நிறைவை உணர்ந்ததைச் சொல்லும்…!
    கிள்ளை மொழிகள் பகன்றதைச் சொல்லும்…
    கனவைச் சுமந்த இதயத்தைச் சொல்லும்…!

    தொல்லைகள் இல்லா நிலையைச் சொல்லும்…
    துன்பத்தில் மீண்ட அமைதியைச் சொல்லும்…!
    நல்லவை மனதில் நிலைக்கச் சொல்லும்…
    நிம்மதி அனைத்தையும் நிழலாய்ச் சொல்லும்…!

    *****

    அன்னை செய்த சிங்காரத்தில் சித்திரப் பதுமையாய்க் காட்சியளிக்கும் பெண் குழந்தையையும், அதன் தாயையும் போற்றி விருத்தம் பாடியுள்ளார் பெருவை திரு. பார்த்தசாரதி.

    உன்னைப் பெற்ற அன்னைக்குப் பெருமை..!

    (பெண் குழந்தைக்கு அலங்காரம் செய்து பார்த்த அன்னையைப் புகழும் விதத்தில் ஓர் அறுசீர் விருத்தம்)

    தினமும்தான் உனக்குத் தின்ன
    ……….தின்பண்டம் தந்தாள் அம்மா..!
    கனவில்நீ வருவாய் என்றே
    ……….கனவுலகில் கழிப்பாள் காலம்..!
    சினமில்லா அன்னை உன்னைச்
    ……….சிங்காரம் செய்ய வந்தாள்..!
    மனமார வாழ்த்தும் அன்னை
    ……….மங்கைநீயும் மகிழ வேணும்..!

    கண்ணாடி முன்னே நின்று
    ……….கண்ணழகு..காட்டும் கண்ணே..!
    பெண்களானால் அழகு சேரும்
    ……….பட்டாடை கூட்டும் மேலும்..!
    வண்ணமிகும் அழகு நீலம்
    ……….எண்ணமிகும் அம்மா பார்த்தால்..!
    கண்களையே இமைகள் காக்கும்
    ……….காவலாளி போன்ற அம்மா..!

    *****

    நல்ல கவிதைகளை நயம்பட உரைத்திருக்கும் கவிஞர்களுக்குப் பாராட்டு. (கவிதைகளின் வரத்து இவ்வாரம் குறைந்துபோயிருக்கிறது. வரும் வாரங்களில் மீண்டும் மிகும் என்று நம்புகின்றேன்.)

    இனி இவ்வாரத்தின் சிறந்த கவிதையாய்த் தெரிவாகியிருப்பது…

    பிள்ளையாய்…

    பிள்ளைநிலா கறைபடவில்லை,
    பிள்ளை மனதில்
    மனிதகுல மாசு ஒட்டுவதில்லை..

    பிஞ்சு நெஞ்சில்
    இன்னும்
    வஞ்சம் கலந்திடவில்லை..

    முகம்போல
    அகமும் அழுக்காகவில்லை,
    கண்ணாடியில் தெரியும்
    முக அழகைவிடத்
    தெரியாத
    அக அழகு
    இன்னும்
    அதிகமானது..

    மனிதனே நீயும்
    பிள்ளையாய் இரு-
    உள்ளத்தில்…!

    ”முகம்போலவே அகமும் களங்கமின்றி விளங்கும் இப்பிள்ளைபோல் மனிதர்கள் அனைவரும் வாழ்ந்திருந்தால் இந்த உலகம்தான் எத்துணை அழகாக இருக்கும்!” எனும் நற்சிந்தனையை நம்முள் விதைக்கும் கவிதையைப் படைத்திருக்கும் திரு. செண்பக ஜெகதீசனை இவ்வாரத்தின் சிறந்த கவிஞராய் அறிவித்துப் பாராட்டுகின்றேன்.

     

     

    Share
  • படக்கவிதைப் போட்டி 166-இன் முடிவுகள்

    -மேகலா இராமமூர்த்தி

    திருமிகு. நித்தி ஆனந்தின் கைவண்ணத்தில் உருவான புகைப்படம் இது. இதனைப் ஃப்ளிக்கர் குழுமத்திலிருந்து தேர்ந்தெடுத்துப் படக்கவிதைப் போட்டிக்கு அளித்திருக்கிறார் திருமதி. இராமலக்ஷ்மி. இவ்விருவருக்கும் என் நன்றி உரித்தாகின்றது.

    படத்தில் அம்மையார் மிகுந்த அர்ப்பணிப்போடு பானம் ஆற்றுவதுகூட ஒரு தியானம் போலவே இருக்கக் காண்கிறேன்.

    இனி அம்மையின் செயலைத் தமக்கே உரித்தான அழகுத்தமிழ் நடையில் செம்மையாய் வர்ணிக்கக் கவிஞர்கள் அணிவகுக்கிறார்கள்!

    ******

    ”எதிர்பார்ப்பில்லாமல் அனைவருக்கும் உழைக்கும் இந்தப் பெண்மணியல்லவோ கண்கண்ட கடவுள்“ என்று போற்றுகிறார் திருமதி. துளசி அருள்மோகன். 

    தன் பசி நினையாமல் தேநீருடன்
    இந்த பாச பெண்மணி இவ்வளவு மகிழ்ச்சியுடன் காத்திருப்பது
    தன் கணருக்காகவோ
    பிள்ளைக்காகவோ
    பேரக்குழந்தைக்காகவோ
    பாவம் இந்த பெண்மணியின் பசி தீர்க்க இவர்களில் யார் வருவார்?
    எந்த எதிர்பார்ப்புமில்லா
    பெண்ணே நீயே கடவுள்!

    *****

    ”கோடி கொடுத்தாலும் கிட்டாத தாயன்பை மறவாதே; அன்னையைத் துறவாதே!” என்று நல்லுரை நவில்கின்றார் திரு. செண்பக ஜெகதீசன்.

    உண்மை தெய்வம்…

    சூடாய்க் கொடுத்தால் சுடுமெனவே
    சுவையாய்க் காய்ச்சி ஆறவைத்து,
    தேடிப் பிள்ளை குடித்திடவே
    தேனீர் தந்திடும் தாய்மறவேல்,
    கோடி கொடுத்தும் கிடைக்காதே
    கொட்டிக் கொடுக்கும் தாயன்பே,
    வாட மட்டும் விட்டிடாதே
    உண்மை தெய்வம் தாயவளே…!

    *****

    ”தன் பசிமறந்து, அன்பைக் கலந்து உறவுகளுக்காக உற்சாக பானம் ஆற்றும் அன்னைக்கு மாற்று அகிலத்தில் இல்லை!” என்று வியக்கிறார் திரு. ரா. பார்த்தசாரதி.

    தன் மகனுக்கோ, கணவனுக்கோ
    தேநீர் ஆற்றும் பெண்மணியே!

    வாய்பொறுக்கும் சூட்டிற்குக் குடிக்க ஆற்றுகின்றாய்
    உன் தாகத்தை மறந்து குடும்பத்திற்காகப் பணிசெய்கின்றாய்!

    கொடுத்திடும் உன் தாயன்பிற்கு ஈடு இணையில்லை
    உன் அருமை அறியாத மனிதனும் பெருமையடைவதில்லை!

    இன்முகம் காட்டி, பாசத்தைத் தேநீரில் கலந்து, மகிழ்ந்து
    கொடுப்பதற்காக எதிர்நோக்கும் குடும்பப் பெண்மணியே!

    களைப்புடன் வீடு திரும்புவனுக்கோ இது உற்சாக பானம்
    உன் கையால் கொடுப்பது அன்பும், பாசமும் கலந்த உறவாகும்!

    *****

    சொந்தங்களின் ஆதரவின்றி, கல்வியின் துணையின்றி, காப்பியாற்றியபடி தன்னைத்தானே தேற்றிக்கொள்ளும் முதுமையை உருக்கமாய்ப் படம்பிடித்திருக்கிறார் பெருவை திரு. பார்த்தசாரதி.

    இளமையில் கல்

    பெற்ற மகனும்
    ……….பிரிந்து விட்டான்
    உற்ற மகளும்
    ……….ஓடியே விட்டாள்
    பற்றி ருப்போர்
    ……….பக்கத்தில் இல்லை
    ஆற்றுப் படுத்த
    ……….அண்டியவர் இல்லை
    எத்தனை துன்பம்
    ……….இடறிவிட்டது
    கத்தினால் என்ன
    ……….குழப்பம் தீர்ந்ததா
    என்னைப் போல
    ……….எவரும் இராதீர்.!
    முன்பேநீ யோசி
    ……….முடிவிலே சுகமே.!

    சிறிய வயதில்
    ……….சிறிதளவுக் கல்வி
    அறிவு பெற்றிடும்
    ……….ஆவலெனக் கில்லை
    முதிய வயதிலும்
    ……….முடியாத போதிலும்
    புதிதாய் யோசித்துப்
    ……….பயனும் இல்லை
    இளமையில் கற்பது
    ……….இயலாது போன(அ)து
    அளவிலாத துன்பம்
    ……….அள்ளிக் கொடுத்தது
    மூப்பு வந்தபோது
    ……….முக்கி முனகியிப்போ
    காப்பியாற்றி வாழ்வைக்
    ……….கழிப்பதென் தொழிலே

    *****

    மென்மலர்க் கைகள் கொண்ட பெண்மை ஆயினும், இன்முகத்தோடு செய்யும் வினைகள் அகிலத்தை வெல்லும் ஆற்றல் வாய்ந்தவை என விளம்புகின்றார் திரு. ஆ. செந்தில் குமார்.

    இன்முகத்தோடு செய்யும் வினைகள்… !

    இன் முகத்தோடு செய்யும் வினைகள்…
    இதயம் மகிழச் செய்யும் வினைகள்…
    பன்முகத் திறமைகள் பளிச்சிடும் வினைகள்…
    பலன்கள் பலவும் அளித்திடும் பாரீர்…!

    மென் மலரொத்த கைகளே எனினும்…
    மெல்லிய தேகம் கொண்டவ ரெனினும்…
    அன்பைப் பொழியும் உள்ள மதற்கு…
    அகிலத்தை வெல்லும் ஆற்றல் காணீர்…!

    தேனீ ராற்றும் செயலே ஆயினும்…
    தெய்வம் தொழுதிடும் செயலே ஆயினும்…
    ஒன்றிடும் மனமது இருந்து விட்டாலே…
    ஒளியாய்த் திகழ்ந்திடும் வாழ்வை உணர்வீர்…!

    கண்மூடித் தனமாய் செய்யும் வினைகள்…
    கடமை கருதிச் செய்யும் வினைகள்…
    நன்மையை என்றும் தந்திடா வினைகள்…
    நமக் குதவாது நினைவிற் கொள்வீர்…!

    *****

    பானம் ஆற்றும் பெண்மையின் சிறப்பைத் தம் கானத்தில் விளங்கச் சொல்லியிருக்கும் வித்தகக் கவிஞர்களைப் பாராட்டி மகிழ்கின்றேன்.

    இவ்வாரத்தின் சிறந்த கவிதை அடுத்து…

    அருமை மகளாகப் பூமியில பிறந்தேனே!
    அப்பா மடிமேலே அரசாட்சி செஞ்சேனே!
    தரைமேல நான் நடந்தா என் பாதம் நோகுமுன்னு தோளிலே சுமந்தாரு!
    பதினெட்டு வயசினிலே வாழ்க்கைப்பட்டு வந்தேனே!
    அப்பாவின் சொத்தெல்லாம் சீர் தனமா கொண்டு வந்தேன்!
    என்னைத் தொலைச்சுப்புட்டு, கணவனைத் தேடி வந்தேன்!
    என் புருசன் அழகில சுந்தரன்தான்! அறிவில சூரியன்தான்!
    அம்மா பேச்சத் தட்டாத உத்தமந்தான்!
    அம்மாவின் பேச்சக் கேட்டு என்ன அழவச்ச ஆம்பளதான்!
    மாமியார் பதவி வந்தா மனசு கெட்டுப் போயிருமா?!
    மருமகளும் பொண்ணு என்னும் உண்மை மறந்திருமா?!
    மாமியார் கொடுமைய. அப்பா பாத்தாரு! வாய்விட்டு அழுதாரு!
    மனுசியா நடத்தச் சொல்லி மாமியாரக் கேட்டாரு! கை கூப்பி நின்னாரு!
    மாமியார் மகராசி இரக்கம் காட்டலையே!
    தாலி தந்த. மகராசன் தயவு செய்யலையே!
    போதும் இந்த வாழ்க்கையின்னு நானே முடிவு செஞ்சேன்!
    அப்பா கண் தொடச்சு, அவரோட நான் நடந்தேன்!
    வருசம் பல போச்சு! வாழ்க்கையும் தொலைஞ்சாச்சு!
    சூடான காபித்தண்ணி ஆத்துனா ஆறிடுமே!
    சூடான நிகழ்வுகளை காலம் தான் ஆற்றிடுமே!
    உள்ளுக்குள் அழுதாலும், வெளியில சிரிக்கின்றேன்!
    அம்மா சொல் கேட்டு, மனைவியை வதைக்காதே!
    மனைவி சொல் கேட்டு மாதாவை ஒதுக்காதே!
    இரு கண்ணில் ஒரு கண்ணை குருடாக்க நினைக்காதே!
    குருடாகப் போகாதே!

    மாமியார்க் கொடுமையால் மணமிழந்த தன் மணவாழ்க்கையைக் காப்பியாற்றிக்கொண்டே மனத்தில் அசைபோடும் பெண்மணியாய் இந்த அம்மையாரை அடையாளப்படுத்தி, அவர் வாழ்வின் அவலநிகழ்வுகளைத் தன் கவிதையில் சிறுகதையாய் ஓடவிட்டிருக்கும் திரு. பழ. செல்வமாணிக்கத்தை இவ்வாரத்தின் சிறந்த கவிஞரென அறிவித்துப் பாராட்டுகின்றேன். 

     

     

    Share
  • படக்கவிதைப் போட்டி 165-இன் முடிவுகள்

    -மேகலா இராமமூர்த்தி

    சுட்டிக் குழந்தையை முதுகில் கட்டிக்கொண்டிருக்கும் அன்னையைப் படம்பிடித்து வந்திருப்பவர் திரு. அண்ணாகண்ணன். இப்புகைப்படத்தை ஃப்ளிக்கர் குழுமத்திலிருந்து தெரிந்தெடுத்துப் படக்கவிதைப் போட்டிக்கு அளித்திருப்பவர் திருமதி. இராமலக்ஷ்மி. இவர்கள் இருவருக்கும் என் நனிநன்றி!

    முந்தித் தவமிருந்து, தொந்திசரிய முந்நூறு நாள்சுமந்து பெற்ற குழந்தையை, பெற்ற பின்பும் கீழே இறக்காது தூளிகட்டிச் சுமக்கும் தாயன்பின் முன்னே தெய்வமும் மண்டியிடும்!

    தாயும் சேயும் இணைந்து நிற்கும் கண்கொள்ளாக் காட்சியிதனைக் கவிக்கண் கொண்டு நோக்கிக் கருத்தமைந்த பாடல்களைப் பொருத்தமாய்த் தர கவிஞர்களை அன்புபாராட்டி அழைக்கின்றேன்.

    *****

    கங்காருக் குட்டிபோல் தன் குழந்தையை முதுகில்கட்டிச் சுமக்கும் இந்தத் தன்னலமற்ற தாயன்புதான் போரில்லாப் புதிய உலகைப் படைக்கும் என்று பகர்கின்றார் திரு. ஏ. ஆர். முருகன்மயிலம்பாடி.

    வீட்டுமுற்றத்திலே தூளி கட்டி
    ஆட்டிஅழகு பார்க்கும்
    அம்மாமார் பார்த்ததுண்டு..
    மரக்கிளையில் சேலை கட்டி
    மழலை தனைத்தூங்கவைக்கும்
    மாதாக்கள் இங்கு உண்டு…
    எட்டி ஓடுகிற கங்காரு – தன்
    குட்டி சுமக்கின்றலாவகம் போல்
    மட்டிலா மகிழ்ச்சி ததும்ப
    சுட்டிக்குழந்தையை முதுகிலே
    கட்டித்தூக்கிச்செல்லும் தாய்!!
    எந்த ஊரோ? ..எந்த நாடோ?
    எங்கேயிருந்தாலும்-அன்பை
    மங்காமல் காப்பாற்றுவதில்
    இங்கு பங்கு இருப்பதாய்
    உலகத்தோர் எல்லோர்க்கும்
    உரக்க உரைப்பதுவாய்
    உயிர்களுக்கு உணர்த்துகிற
    பாங்கினைப்போற்றினால்
    பாருயரும்! பண்புயரும்!!!
    அன்புப் பரிமாற்றம் ஒன்றுதான்
    சண்டையில்லா உலகத்தை
    சாத்தியமாக்கிடும் என்பதுவே
    சத்தியத்திலும் சத்தியம்!!….

    *****
    கட்டிக்கொண்டவன் கள்ளுக்கடையிலேயே காலந்தள்ளுவதால் தான் வேலைசெய்யும் இடத்துக்கும் குழந்தையைத் தோளில் சுமந்துசெல்லும் இந்த அன்னையின் ஒரே ஆசை, ’இந்தக் குழந்தையேனும் உருப்படியாய் வளரவேணும்’ என்பதுதான் என்கிறார் திரு. அ. இராஜகோபாலன்.

    அவசரம்

    கட்டிக்கொண்டவன்
    கவலையற்று,
    வெட்டியாய்க்
    கள்ளுக்கடையில் காலந்தள்ள

    விட்டுச் செல்ல வழியின்றி
    வேலைக்குப் போகும்போதும்
    கூடவே
    கட்டுத் துணியில்
    முதுகில் குழந்தை.

    கைப் பிடித்து நடக்கவே
    இன்னும் காலம் உண்டு.
    அதற்குள்
    காலுக்குச் செருப்பெதற்கு?

    அப்பனைப் போல் ஆகிவிடாமல்
    ஆகாத காலத்துக்கு,
    எனக்கு
    அரை வயிற்றுக்கேனும் கஞ்சி ஊற்ற
    உழைத்துச் சம்பாதிக்க
    உருப்படியாய் வளரவேணும்.
    அவசரமாய்.

    *****

    ”வயிற்றில் சுமந்தது போதாதென்று முதுகிலும் சுமக்கும் அன்னையே! உன்னை இறைவன் படைத்தது பிள்ளைகள் செய்த பேறே!” என்று நெகிழ்கின்றார் திரு. பழ. செல்வமாணிக்கம்.

    சுமை தாங்கி 

    பத்து மாதம் பிள்ளையைச் சுமந்தாய்
    உன் உதிரத்தை உணவாய்த் தந்தாய்!
    கண்ணை இமை காப்பது போல!
    பிள்ளையைக் காத்தாய்!
    பிள்ளையைக் கருவில் சுமந்தாய்!
    கணவனை உள்ளத்தில் சுமந்தாய்!
    குடும்பத்தைத் தோளில் சுமந்தாய்!
    உன் சுகத்தை நினைக்க மறந்தாய்!
    வலியை நெஞ்சில் புதைத்தாய்!
    வயிற்றில் சுமந்தது போதாதென்றா!
    முதுகிலும் நீ சுமந்தாய்!
    சுமப்பதைக்கூட சுகமாய் நினைத்தாயோ!
    சுமப்பதினால் பூமியும் தாயானாள்!
    தாயன்பிற்கு உலகில் ஈடென்பதேது!
    தாயைக் கடவுள் படைத்தது பிள்ளைகள் செய்த பேறு!

     *****

    ”ஐயிரண்டு திங்கள் காத்திருந்து கருவுயிர்த்து, நீராட்டிச் சீராட்டி, கனமென்று கருதாது கணப்பொழுதும் பிரியாது தாய் சுமக்கும் சுகமான சுமைதான் இந்தச் சேய்” என்று அன்னைக்குப் பாராட்டு மடல் வாசிக்கின்றார் திருமிகு. சக்திப்ரபா.

    தாயன்பு

    ஐயிரண்டு திங்கள் காத்திருந்து கருப்பையில்
    பச்சிளம் மேனியை பதவிசாய் மார்பில்
    நீராட்டிச் சீராட்டி மிருதுவாய் முன்னங்கால்களில்
    துணியிலே தூளியிட்டு நெடுந்தூரம் முதுகில்
    மழலை மொழிகேட்டு முத்தமிட்டு மடியில்
    இமைப்பொழுதும் நீங்காத சிந்தனைச் சுவடுகளில்
    உயிருள்ள வரையிலும் உறையும் நினைவுகளில்
    உயிரற்று உதிர்ந்தாலும் தொடரும் உணர்வுகளில்
    புன்னகை விரித்துப் பொழுதெல்லாம் ரசித்து
    கனமென்று சிறு கணம் கூட கருதாமல்
    தாயுள்ளம் தாங்கும் சுமையற்ற சுகங்கள்

    *****

    ”தொட்டில் கட்டி வீட்டில் விட்டால் கவனிக்க ஆளில்லையென்றுத் தோளில் தூளிகட்டிப் பசியாற்றும் அன்புநிறை அன்னையிவள்” என்று வியக்கிறார் திரு. செண்பக ஜெகதீசன்.

    முதுகிலே…

    தொட்டில் கட்டி விட்டுவந்தால்
    தூங்க வில்லை வீட்டினிலே,
    விட்டுப் போன கணவனாலே
    வேலை பார்த்துப் பிழைக்கவேண்டும்,
    எட்டிப் பார்த்துப் பசியாற்ற
    எளிய வழியைத் தாய்கண்டாள்,
    கட்டிச் சுமக்கும் தூளியிலே
    கொண்டாள் பிள்ளையை முதுகினிலே…!

    ***** 

    ”குழந்தை பெற்றும் குடும்பமில்லாத அன்னையிவள்; அதனால் வயிற்றில் சுமந்த மகவை விடாது தோளிலும் சுமந்து உழைக்கிறாள்” என்று வேதனைப்படுகின்றார் பெருவை திரு. பார்த்தசாரதி.

    உழைக்கும் அன்னை..!

    வயிற்றில் சுமந்தது
    ……….வளையும் முதுகில்
    பயிற்சி வேண்டும்
    ……….பணிவாய்ச் சுமக்க
    குழந்தை பெற்றும்
    ……….குடும்பம் இல்லை
    அழுதால் மட்டுமே
    ……….அன்னை வருவாள்
    வியர்வை சிந்தி
    ……….வேலை செய்தும்
    துயரை நீக்கத்
    ……….தூளியே ஆறுதல்
    தாய்ப் பாசம்
    ……….தானாக வருவது
    தாய்மை என்பது
    ……….தரத்தினில் ஒன்றே

    தொட்டிலில் இட்டுக்
    ……….தாலாட்டி அன்னை
    பாட்டு ஒன்றைப்
    ……….பாடவும் முடியா
    கயிற்றுத் தூளியில்
    ……….குழந்தை போட்டால்
    வயிற்றை நிரப்ப
    ……….வழியிலா தாகிடும்
    பெற்ற குழவியால்
    ……….பெருமை உற்றும்
    பற்றுக் கொண்டு
    ……….பகல் முழுதும்
    அன்னை முதுகில்
    ……….அதுவே சுமை
    தன்னைக் காக்க
    ……….தனிமை உழைப்பே

    *****

    ”கொடிக்குக் காய் பாரமில்லை; குழந்தை தாய்க்கு பாரமில்லை! பெற்றெடுத்த மகவைக் கல்விபுகட்டி  நல்லறிஞனாய் வளர்ப்பாய்! நாளை உனக்கிவன் துணையாவான்!” எனத் தன் கவிதையில் நம்பிக்கை விதைக்கின்றார் திரு. ரா. பார்த்தசாரதி.

    தாயும் குழந்தையும்

    மண்ணுக்கு மரம் பாரமாகுமா?
    மரத்திற்கு கிளை பாரமாகுமா?
    கொடிக்குக் காய் பாரமாகுமா?
    குழந்தை தாய்க்கு பாரமாகுமா?
    பிழைப்பிற்காகக் குழந்தையைத்
    தோளை தூளியாக்கிச் சுமந்து
    வயிற்று பிழைப்பிற்காகத் தினம்
    சுமந்து செல்லும் மலைஜாதிப்
    பெண்ணே!

    உடலில் வலுவும், நெஞ்சில் துணிவுடன்
    உழைத்துப் பிள்ளையை காப்பாற்று
    கல்வியை புகட்டி, அறிவினை பெருக்கி
    நல்லறிஞனாய் வளர்ப்பாயாக!

    இன்று உன் நிழலில் உன் பிள்ளை
    நாளை அவன் மடியில் உன் தலை
    அவனே உன்னை தாங்கும் தூண்!
    என எண்ணிச் செயலாற்று!

    *****

    மகவைத் தோளில் சுமந்துநிற்கும் மகத்தான தாய்க்கு ஊக்கத்தையும், உற்சாகத்தையும் தம் நன்மொழிகளில் ஊட்டியிருக்கும் கவிஞர்களைப் பாராட்டி மகிழ்கின்றேன்!

    இவ்வாரத்தின் சிறந்த கவிதை இனி…

    மகிழ்ச்சியாய் வாழக் கற்றுக்கொள்வோம்!

    உலர்ந்த நிலப் பரப்பில்… பொழிந்திட்ட மழையைப் போல…
    அலர்ந்த மலர் ஒன்று… பரப்பிட்ட மணத்தைப் போல…
    வளர்ந்த தரு வொன்று… தந்திட்ட நிழலைப் போல…
    புலர்ந்த பொழு தெனவே… பிறந்த தன் மகவினாலே…
    குளிர்ந்த நில வெனவெ… இருக்கிறது அத்தாயின் முகமும்…!

    மலர் போன்ற பிள்ளைதன்னை… தன் முதுகில் சுமந்துகொண்டு…
    தளர்வறியாச் சூரியன் போன்று… தன் பணியைச் செய்வதுகண்டு…
    சிலரேனும் நினைத் திருப்பர்… சிக்கலான வாழ்க்கை யென்று…
    அளறுவென நினைக்கும் படி… அவனி வாழ்க்கை இருந்தாலும்…
    பலர் போற்ற வாழ்வோரும்… பாரினிலே மெத்த உண்டு…!

    எத்தனை எத்தனை இன்பங்கள்… இறைவன் படைப்பில் இருந்தாலும்…
    அத்தனையும் நமக் கில்லை… என்பது போல் இருந்துவிட்டால்…
    மொத்தமாய்த் துன்பமே மேலோங்கும்… என்பதை நன்கு ணர்ந்து…
    இத்தாயின் உறுதி கண்டு… சளைக்காத வலிமை கண்டு…
    எதற்குமயராத நிலை கொண்டால்… மகிழ்ச்சி நமக்கு உண்டு…!

    ”உலர்ந்த நிலத்தில் பொழிந்த மழையாய், அலர்ந்த மலராய், புலர்ந்த பொழுதாய்த் தன் வாழ்வுக்கு ஒளியூட்ட வந்த மகவால் களிகொண்ட அன்னையிவள் உழைக்கும் உறுதிகொண்டாள்; தன் துன்பத்துக்கு இறுதி கண்டாள். இவள்போல் மனவலிமை கொண்டால் மகிழ்ச்சி நமக்குண்டு!” என்று துன்பவாழ்வை வெல்லும் நல்வழியைச் சொல்லும் இக்கவிதையின் படைப்பாளி திரு. ஆ. செந்தில் குமாரை இவ்வாரத்தின் சிறந்த கவிஞராய் அறிவித்துப் பாராட்டுகின்றேன்.

     

     

     

    Share
  • படக்கவிதைப் போட்டி 164-இன் முடிவுகள்

    -மேகலா இராமமூர்த்தி

    திருமிகு. வனிலா பாலாஜி எடுத்திருக்கும் இந்தத் தலையாட்டி பொம்மையை ஃப்ளிக்கர் குழுமத்திலிருந்து தேர்ந்தெடுத்து, இவ்வாரப் படக்கவிதைப் போட்டிக்குத் தந்திருக்கிறார் திருமதி. இராமலக்ஷ்மி. மங்கையர் இருவர்க்கும் என் மனங்கனிந்த நன்றி!

    மனத்தில் நாணம் இல்லாதவர்கள் இவ்வுலகத்தில் இயங்குதல், மரப்பாவையைக் கயிற்றால்கட்டி இயக்கி உயிருள்ளதைப் போல் மயங்கவைத்தலுக்கு ஒப்பானது என்று நாணில்லாதோரைப் பழித்துரைப்பார் செந்நாப்போதார்.

    நாண்அகத்து இல்லார் இயக்கம் மரப்பாவை
    நாணால் உயிர்மருட்டி யற்று. 
    (1020)

    பிறரால் அசைத்துத் தலையாட்ட வைக்கப்படும் தலையாட்டி பொம்மையின் நிலையும் அஃதே.

    தலையாட்டும் பொம்மைகண்டு கலைவல்ல நம் கவிஞர் உள்ளத்துள் ஊறும் கற்பனையைக் கண்டுவருவோம்!

    *****

    தலைமைப் பதவியில் இருப்போர் தலையாட்டி பொம்மைகளாய் இருப்பதால் தமிழ்நாடு அடைந்துவரும் கேட்டைத் தன் பாட்டில் தொகுத்துரைக்கிறார் திரு. ஆ. செந்தில் குமார்.

    தஞ்சாவூரு பொம்மையிது… தலையாட்டும் பொம்மையிது…

    தஞ்சாவூரு பொம்மையிது…
    தலையாட்டும் பொம்மையிது…
    தொட்டுவிட்டால் போதுமே…
    தைதையென ஆடுமே…!

    தலைமைப்பதவி வகித்திட…
    தகுதியிது போதுமா…?
    ஆட்டுமந்தைக் கூட்டமாய்…
    ஆகிடுதல் நியாயமா…? (தஞ்சாவூரு…)

    தனதுபதவி நிலைத்திருக்க…
    தாழ்பணிதல் ஆகுமா…?
    தலைநிமிர்ந்துப் போராடும்…
    துணிவிருக்க வேண்டாமா…? (தஞ்சாவூரு…)

    காசுவாங்கி ஓட்டுப்போடும்…
    கயமைத்தனம் ஒழியணும்…!
    டாசுமாக்கு கடையெல்லாம்…
    தமிழ்நாட்டைவிட்டு ஓடணும்…! (தஞ்சாவூரு…)

    நீட்டுத்தேர்வு என்பதெல்லாம்…
    நாட்டிற்குத் தேவையா…?
    நியாயமானப் போராட்டத்தை
    நசுக்கிடுதல் நல்லதா…? (தஞ்சாவூரு…)

    நாதியற்ற மக்களுக்கு…
    நல்லவழி பிறக்குமா…?
    நேர்மையற்ற ஆட்சி நாட்டில்…
    நிலைத்திடுதல் ஆகுமா…? (தஞ்சாவூரு…)

    *****

    மத்திய அரசுக்குக் காவடி தூக்குவதையும் அவர்தம் சேவடி தொழுவதையுமே முழுநேர வேலையாய்ச் செய்துவரும் தமிழ்மாநிலக் கரைவேட்டிகள் மக்களின் துயர்துடைப்பதில் அக்கறை காட்டவில்லையே என்று அங்கலாய்க்கிறார் திரு. ரா. பார்த்தசாரதி.

    தலையாட்டும் நடன பொம்மை

    நாடகமே உலகம், ஆடுவதோ ஓர் நாட்டியமாடும் பொம்மை
    ஒருகை மேலே, ஒரு கை கீழே நின்று ஆடும் நடன பொம்மை
    இன்றைய ஆட்சியும் மேலிடத்திற்கு கீழ்ப்படிந்து நடக்குதே
    தன்னாட்சி கவிழாமல் இருக்க மேலிடத்திற்குப் பணிந்து நடக்குதே!
    இன்றைய அரசியல்வாதிகளே தலையாட்டும் பொம்மைகள்
    ஆட்சி கவிழாமலிருக்க மேலிடத்து உறவை நாடும் மனித பொம்மைகள்
    கொடுமைகள் புரிந்துவிட்டு பூசி,மழுப்பி நிற்கும் கொடுங்கோலர்கள்
    ஜனங்களை ஆட்டுமந்தையென நினைத்துச் செய்யும் கொடுமைகள்!
    தன் பதவி நிலைக்க தன்மானத்தை அடகு வைக்கும் கூட்டம்
    மக்கள் நலனை துன்பத்தையும் கண்டும் காணாத ஆட்சிக் கூட்டம்
    பணத்தை சுரண்டி அதனை மறைக்க, எடுபிடி செய்யும் கூட்டம்
    மக்கள் குறைகளை தீர்ப்பதுபோல், பொய்ப் பிரசாரக் கூட்டம்
    பணத்திற்காக வோட்டு போட்டு மண்டியிடும் ஒரு கூட்டம்
    அக்ஷய பாத்திரத்தைக் கொடுத்துப் பிச்சைஎடுக்கும் கூட்டம்
    புதிய மதுபானக் கடைகளை எதிர்த்துப் போராடும் கூட்டம்
    நடுத்தெருவில் கூடி நடத்தும் போராட்ட கூட்டம்
    ஆளுநரும், மந்திரிகளும் கைப்பொம்மையாய் செயல்படுதே
    இப்பொழுதும் மக்களின் குறைகளைத் தீர்க்கத் தயக்கம் காட்டுதே
    மக்கள் எதிர்த்தாலும், அடக்கு முறையைத் தயக்கமுமின்றி செய்யுதே
    ஜனநாயக நாடா, எதேச்சதிகாரம் கொண்ட அரசாக விளங்குதே
    மக்களே! பணத்திற்காகத் தன்மானத்தை அடகு வைக்காதீர்
    தண்ணீருக்காகவும், மணல்கொள்ளைக்கும் எதிர்த்து போராடுவீர்
    தமிழனின் தனித் தன்மையை உணர்ந்து உயிருள்ளவரை போராடுவோம்
    மக்களின் துயர் துடைக்காத அரசை பதவியில் இருந்து இறங்குவோம் !

    *****

    ”தன்னலம் செழிக்கத் தலையாட்டும் பொம்மைகளாய் மனிதர்கள் மாறிப்போனதால் நாட்டைச் சூழ்ந்தது கேடு” என்று வருந்துகின்றார் திரு. செண்பக ஜெகதீசன்.

    ஆட்டம்…

    ஆடும் பொம்மை ஆட்டமென
    ஆடியே அகில வாழ்வினிலே
    நாடும் நன்மைகள் நமக்கெனவே
    நாளும் தலையை ஆட்டிடுவர்,
    கேடு சூழ்ந்து வருவதையே
    கருத்தில் யாரும் கொள்வதில்லை,
    தேடு வாழ்வில் நல்லதையே
    தெரிந்து நடந்தால் இடரிலையே…!

    *****

    ”களிமண் தந்த கொடையால் உருவாகித் தனியே கொலுவிருந்து, கண்களுக்கு விருந்துபடைக்கும் தலையாட்டி பொம்மையின் சிங்காரச் சிற்றுடையும் ஓர் அழகுதான்!” என்று வியக்கிறார் பெருவை திரு. பார்த்தசாரதி.

    கலைக்கு அழகு

    வாடாது முகம்மலர வந்தவரை
    ……….வரவேற்பதில் ஒரு மகிழ்ச்சியாம்..!
    ஆடாது நிற்குமொரு காட்சியிலே
    ……….அருமை நடனமாடும் மங்கையாம்..!
    மூடாது கண்ணிமை விழித்திருக்கும்
    ……….முந்தானை இல்லாத பொம்மைதான்..!
    கூடாது மற்றொன்றுடன் தனிநின்று
    ……….கொலுவிலே வீற்றிருக்கும் நாயகி..!

    வீட்டுக்குள் உள்ள அலமாரியில்
    ……….வியக்கு மாறுநீயும் அலங்கரிப்பாய்..!
    பூட்டுப் போடவும் அவசியமில்லை
    ……….பொம்மைதானே எங்கே ஓடுவாய்..!
    ஆட்டுவிப்போர் இல்லாமலே நீ
    ……….ஆட்டம் போடுவது கடினம்தான்..!
    கூட்டுக் கொள்ளை அடிப்போரை
    ……….கண்டு விட்டால் கூத்தாடுவாயா..?

    தலையாட்டும் செய்கையைத் தானே
    ……….தன்னிச்சையாய்ச் செய்ய முடியாது..!
    விலை கொடுத்து வாங்கியபின்னே
    ……….விளையாடத் தட்டுவார் தலையை..!
    சிலைபோல நின்றாலும் உனக்குச்
    ……….சிங்காரச் சிற்றுடையும் அழகுதான்..!
    கலைப் பொருளாக உன்னையாக்க
    ……….களிமண்ணும் கொடுக்கும் கொடை..!

    *****

    பாவையே! அசையாது அசையும் அதிசயம் நீ! ஓசையொழிந்த உன் ஆடல் தெருக்கூத்தாவது திருக்கூத்தே! பயனில பேசாது நீ இதழ்மூடியிருப்பதும் சிறப்பே! என்று பொம்மையின் மெய்ப்பாடுகளைப் பாடுபொருளாக்கி நம்மை இரசிக்கவைக்கிறார் திருமிகு. அவ்வைமகள்.

    அசையாதசையும் நினதிசயம் என்னென்பேன் என்னென்பேன் பாவாய்
    ஆசைபடுமனம் தேடும் புனைவேடம் ஒழியெனக் காட்டுகிறாய் எம்பாவாய்
    இசைவதுவசையாதென்றோ ஏதொன்றும் பேசாயடி எந்தன் பாவாய்
    ஈசைவாழ்த்து ஈசை வாழ்த்துவெனவோ நின்வலக்கரம் வாழ்த்துது எம்பாவாய்
    உசைத்தாலும் விசைத்தாலும் நிலைநடுங்காது நில் என்பாய் எம்பாவாய்
    ஊசைமேனிமினுக்குள் மின்னமாய் ஞானம் சேரெனப் பார்க்குமென் பாவாய்
    ஒசித்தயோசனை பின்னி நிமிர்நெஞ்சுகொள்ளெனப் பணித்தனை எம்பாவாய்
    ஓசையொழிந்த உன்னாடல் தெருக்கூத்தாவது திருக்கூத்தே எம்பாவாய்
    ஒளவியம் கூடாதென பயனில பழுதென இதழ்பூட்டி இறுக்குமென் பாவாய்
    அஃ றிணைக்குயர்திணை சார்பெனவோ அபிநயநடை எடுத்தனை எம்பாவாய்?

    *****

    பொம்மைக்குச் செம்மையான கவிதைகளை அணிகளாய்ப் பூட்டிய பாவலர்க்கு என் பாராட்டு!

    இவ்வாரத்தின் சிறந்த கவிதை அடுத்து…

    பொம்மை சொன்ன உண்மை

    நான் நடனம் ஆடுகின்ற பொம்மை!
    காற்றிலாடும் பொம்மை!
    சொல்வதெல்லாம் உண்மை!
    இதைச் செவிமடுத்தால் விளையும் என்றும் நன்மை!
    பயனில்லா நிகழ்வுதானே மனிதனின் ஆட்டம்!
    நூல் இருக்கும் வரையில் தானே பட்டத்தின் ஆட்டம்!
    இலக்கில்லாப் பயணம்தானே மனிதா உன் ஆட்டம்!
    உயிர்இருக்கும் வரைதானே மனிதா உன் ஆட்டம்!
    ஆணவத்தில் நீ ஆடுகின்ற ஆட்டம்!
    உன் வாழ்வை அழித்துவிடும் ஆட்டம்!
    மதுஅருந்தி நீ ஆடுகின்ற ஆட்டம்!
    உன் குடும்பத்தை அழித்துவிடும் ஆட்டம்!
    ஆடம்பரத்தில் நீ ஆடுகின்ற ஆட்டம்!
    உன் அடுத்த தலைமுறையை அழித்துவிடும் ஆட்டம்!
    கடலின் ஆட்டம் ஆழிப்பேரலையாகும்!
    காற்றின் ஆட்டம் புயலாகும்!
    பூமியின் ஆட்டம் பூகம்பமாகும்!
    ஆற்றின் ஆட்டம் வெள்ளமாகும்!
    அளவிற்கு மீறிய ஆட்டமென்றும் அழிவாகும்!
    அடங்கி நடந்தால் உன் வாழ்க்கை இனிதாகும்!

    ”கடலின் ஆட்டம் ஆழிப்பேரலையாய், காற்றின் ஆட்டம் புயலாய், புவியின் ஆட்டம் பூகம்பமாய் உருமாறி உலகை அழிப்பதுபோல் மனக்கட்டுப்பாடின்றி மனிதன் ஆ(போ)டும் ஆட்டம் அவன் நல்வாழ்வைக் குலைத்துவிடும்!” என்று அமைதியாய் நிற்கும் பொம்மையின் மூலம் அரிய கருத்தை அவனிக்குச் சொல்லியிருக்கும் திரு. பழ. செல்வமாணிக்கத்தை இவ்வாரத்தின் சிறந்த கவிஞராய்த் தேர்ந்தெடுத்துப் பாராட்டுகின்றேன்.

     

     

    Share
  • படக்கவிதைப் போட்டி 163-இன் முடிவுகள்

    -மேகலா இராமமூர்த்தி

    திரு. கோபி சங்கரின் கேமரா வண்ணத்தில் உருவான படமிது. ஃப்ளிக்கர் குழுமத்திலிருந்து, இதனைப் படக்கவிதைப் போட்டிக்குத் தேர்வுசெய்து தந்திருப்பவர் திருமிகு. ராமலக்ஷ்மி. ஒளிப்பதிவாளர், தேர்வாளர் இருவரும் என் நன்றிக்கு உரியோர்.

    மழலையைத் தொட்டுமகிழும் இன்பத்துக்கு இணையான இன்பம் மன்பதையில் யாங்கணுமே இல்லை எனலாம். அதன் குதலை மொழிகளோ பெற்றோர்க்குக் குழலினும் யாழினும் இனிமை பயப்பவை.

    ”மழலையர் இல்லாத மன்னுலகம்,
    பூக்கள் இல்லாத சோலை!
    கதிரவன் இல்லாத காலை!”

    நேசக் கரங்களில் நிமிர்ந்து நிற்கும் இம்மழலையைப் பாசத்தோடு வாழ்த்த வருகின்றார்கள் கவிஞர்கள்!

    ”நஞ்சையும் அமுதாக்கிவிடும் பிஞ்சு மழலை; கெஞ்சினாலும் கிட்டாத வரமாய்க் கிடைத்த மழலையிடம் தஞ்சமடைவது சுகம்!” என்று குழந்தையின் வடிவில் காட்சிதரும் தெய்வத்தின் மாட்சியைப் போற்றுகிறார் திரு. ஏ.ஆர்.முருகன்மயிலம்பாடி.

    தெய்வதரிசனம்!!

    கொஞ்சும்பிஞ்சின் குமிழ்நகையில்
    நெஞ்சம் அமிழ்ந்துநெகிழ்கிறது!!
    வெஞ்சாமரமாய் வீசிடும் கரம்பட்டு
    பஞ்சாமிருதருசியாய் இனிக்கிறது!!
    அஞ்சாப்புப்படிச்ச நெனப்புலகிடந்து
    கஞ்சாடையால கலங்குது மனசு!
    வஞ்சிரம்போல வந்திங்குதித்திட்ட
    வஞ்சிக்கொடிதான்இனியெம்வாழ்வு!
    மிஞ்சி மிஞ்சிப்பணமிருந்தாலும்
    இஞ்சு இஞ்சா மகிழ்ச்சி தருஞ்சொத்து
    நஞ்சைக்கூடஅமுதமாக்கும் மருந்து –
    மஞ்சக்கிழங்காப்பிறந்த சிசு தானே!!
    கெஞ்சினாலும் கிட்டாத வரமெதுனா
    தஞ்சம்மழலையிடம்அடைவதொன்றே!
    எஞ்சியுள்ள எதிர்காலப்பலன் எதுனா
    சஞ்சீவியாய் சிறப்பாய் வளர்ப்பதுவே!
    ஆஞ்சு அறிஞ்சு உயர்ந்திருந்தாலும்
    சாஞ்சுபோனது உலகில் இல்லறம்!
    தேஞ்சு போன இகபர சுகங்களுக்குள்
    மீஞ்சிருப்பது பிள்ளைப்பேறுமட்டும்!
    ஈஞ்ச இலைகள் சித்திரை மாதத்தில்
    காஞ்சு சருகாய் விழுவது இயற்கை!!
    பாஞ்சு விழுகிற மழைத்துளிகளாக
    ஓஞ்சவர்களுக்குஉயிரோ குழந்தை!!

    *****

    பிஞ்சுக்காலால் நெஞ்சில் உதைத்துப் பரவசப்படுத்தும் வஞ்சிக்கொடியை அன்பைக் குழைத்துக் கொஞ்சி வாழ்த்துகிறார் திரு. ரா.பார்த்தசாரதி.

    பெண் பிள்ளை

    பெண் மனம் மகிழ பெண்ணைப் பெற்றாள்
    ஆண் மனம் மகிழ் ஆணைப் பெற்றாள்
    ஏனோ உலகில் பாசத்தைப் பிள்ளைகளிடம் வைத்தான்
    பெண்ணும், ஆணும் சமம் என உலகில் உணரவைத்தான்!
    மகளின் பாசம் என்றும் தந்தையிடத்திலே
    மகனின் பாசம் என்றும் தாயினிடத்திலே
    இதுவே இன்றைய பாசவலையாய்த் தொடர்கிறது
    தாய்தந்தையின் நேசக்கரங்கள் உதவுகிறது!
    மகளே, உன் பிஞ்சுக் கால்களால் என்னை உதைக்கின்றாய்
    என் நெஞ்சத்தையும், இதயத்தையும் நெகிழச்செய்கின்றாய்
    உன் பிஞ்சுக் கால்கள் என் மார்பில் நடனமாடுதே
    என் உள்ளம் மகிழ்ந்து திளைக்குதே!
    களைப்புடன் நான் வரும்போது உன் கண் என்னைத் தேடுதே
    உன்னை தூக்கச் சொல்லி என் கைகளை அழைக்கின்றதே
    உன் கைகள் சாமரம் வீசி, என் களைப்பினை நீக்குதே
    உன் கருவிழிக் கண்கள் என்னை அடிமையாக்குதே!
    உன்னை உயரே தூக்கும்போது சிரித்து என்மேல் உமிழ்கின்றாய்
    அதனை உமிழ்நீரை அமிர்தமாய் என்மேல் தெளிக்கின்றாய்
    உன் தண்டைக் கால்களை என் முகத்தின் மேல் பதிக்கின்றாய்
    என் வஞ்சிக் கொடியே, உன் பிஞ்சுக் காலால் மகிழ்வூட்டுகின்றாய்!
    பெண் மகள் என்றும் செல்ல மகள் ஆவாள்
    திருவிழாக் காலங்களில் மஹாலக்ஷ்மியாய் உலா வருவாள்
    தந்தைக்கு என்றும் தாதியாய் இருந்திடுவாள்
    தரணியிலே மகளே என்றும் போற்றப்படுவாள்!

    ***** 

    ”மண்ணில் கால்புதைய நீ ஓடும்போது அங்கே தெரிவது ஓவியமா? காவியமா? தாளால் (கால்) எனை உதைக்கும் கவிதையுனைக் கண்டபின்பு, தாளில் கவிவடிக்கும் எனதாசை போனதே!” என்று நெஞ்சு நெகிழ்கின்றார் திருமிகு. டி.திலகவதி.

    உன் வாய்மொழி
    வார்த்தைகள்…
    என்ன..
    புதுவித அகராதியா..?
    அர்த்தங்கள்
    இல்லையென்ற போதும்
    அதை ரசிக்காமல்
    இருக்க முடியவில்லை….
    இனி
    என் கண்ணீரைத்
    துடைக்கக்
    கைக்குட்டை
    தேவையில்லை…
    உன்
    கைகளே போதும்…
    அமைதி எனும்
    அற்புதத்தீவைக்
    கண்களில் கொண்டு அவதரித்தாயா…!
    உன்னை அணுகும்
    ஒவ்வொரு முறையும்
    வாஞ்சையுடன்
    பிடிபடுகிறது..
    என் மனம்…
    தொட்டுப் பேச
    வார்த்தைகள்
    இல்லை…
    விட்டு விலக
    மனமும் இல்லை…
    உன் ஈறுகள்
    பதித்து ஈரமாக…
    ஏங்குது என் கன்னம்…
    உன் இதழ் பதித்து
    நீ பேச
    தவிக்குது என் இதயம்…
    மண்ணில் கால்
    புதைய நீ ஓட…
    அங்கே..
    தெரிவது என்ன
    காவியம் பேசும்
    ஓவியமா..?
    ஒரே ஒரு முறை
    தான்..
    உன்னைத் தொட்டு
    தூக்கி இருப்பேன்…
    பிறகு ஏன்..?
    என் கரங்கள்
    கவி எழுதத்
    தயங்குகிறது…
    ஓ….
    நான் எழுதும்
    கவியை விட
    அரத்தமுள்ள கவிதையாய்
    உன்னைக்
    கண்டு கொண்டதா
    என் கரங்கள்…!!!

    *****

    ”கண்ணே உன் கனிமழலை கேட்டபின் காட்டுக்குயிலும் பாட்டை மறந்தது! பெண்ணைப் பெற்ற ஆண்களுக்கு மூன்று தாயடி! கொடுத்துவைத்தோர் எனைப்போல அவனியில் யாரடி?” என்று பெருமிதம் கொள்கிறார் திரு. பழ.செல்வமாணிக்கம்.

    தந்தையின் பெருமிதம்

    ஆண்டவன் அருளாலே நான் பெற்ற அஞ்சுகமே!
    அப்பா என்றழைத்து ஏற்றம் தந்தவளே!
    உன்னைச் சுமக்கையிலே சிந்தை மகிழுதடி!
    அன்னை சுமந்ததற்கு உள்ளம் நன்றி சொல்லுதடி!
    மகளாய் நீ பிறந்த பின்னே வாழ்க்கையின் அர்த்தம் புரிந்ததடி!
    நீ எட்டி உதைக்கையிலே கர்வம் தொலையுதடி!
    நீ முத்தம் தருகையிலே ஆயுள் கூடுதடி!
    உன் மழலை கேட்ட பின்,
    குயில் கூவ மறந்ததடி!
    உன்னைத் தழுவி மகிழ்ந்த பின்னே,
    மலரும் முள்ளாய்த் தோன்றுதடி!
    நீ நாக்கைக் காட்டையிலே
    உன் அன்னையின் தோற்றமடி!
    உன் மனதின் ஆசையெல்லாம்
    நிறைவேற்றும் உன் அன்புத் தந்தையடி!
    நான் துவண்டு விழும் போது
    உன் மடியே என் சொர்க்கமடி!
    என்னருகில் நீ இருந்தால்!
    மரணமும் மகிழ்ச்சியடி!
    பெண்ணைப் பெற்ற ஆண்களுக்கு மூன்று தாயடி!
    கொடுத்து வைத்தோர் எனைப் போல அவனியிலே யாரடி!
    எனைப் பெற்ற தாய் முதலானாள்!
    என் பெண்ணைப் பெற்ற மனையாளும் தாயானாள்!
    நான் பெற்ற என் பெண்ணே அன்பில், நீ மூன்றில் முதலானாய்!

    *****

    ”என் இரும்பெனும் இதயத்தை உன் மருந்துச் சிரிப்பால் நெகிழ்த்திய மலரே! நான் எத்தனை வெற்றிகள் பெறினும், பத்தரை மாற்றுத் தங்கமே உன்னிடம் மொத்தமாய்த் தோற்பதே இனிமை” என்று சந்தக் கவியில் சிந்தை தொடுகின்றார் திரு. ஆ. செந்தில் குமார்.

    அரும்பு மலரே.. அருமை மகளே..

    அரும்பு மலரே.. அருமை மகளே..
    கரும்புச் சுவையே..கனிவாய் மொழியே.. நான்
    விரும்பும் தமிழே.. விண்ணுறை மதியே.. என்
    இரும்பினை யொத்த இதய மதனை.. நீ
    மருந்தெனும் சிரிப்பால் இளக்கி விட்டாயே…!

    தென்கடல் முத்தே.. தெவிட்டாத அமுதே
    கண்ணே மணியே.. கனவுப் பூவே.. என்
    விந்தை உலகே.. வியத்தகு அழகே.. நான்
    முன்னர்ச் செய்த தவப்பயன் விளைவோ..
    பொன்னே யுந்தன் தந்தை யானது…!

    இதந்தரும் தென்றலே.. இனித்திடும் கவிதையே..
    இதயத் துடிப்பே.. எந்தன் உயிரே.. நான்
    எத்தனை எத்தனை வெற்றிகள் பெறினும்..
    பத்தரை மாற்றுத் தங்கமே உன்னிடம்..
    மொத்தமாய் பணிந்து தோற்பதே இனிமை…!

    *****

    பேசும் பொற்சித்திரமாம் கனிமழலையைப் பாராட்டிக் கற்கண்டுக் கவிவடித்த கவிஞர் குழாம் வாழியவே!

    இனி இவ்வாரத்தின் சிறந்த கவிதை…

    பெண்ணினத்தால் இம் மண்ணுலகம் சிறக்கும்…!

    திறத்தாலே உயர்வுற்று தாய்நாட்டுப் பற்றுடனே
    ……….தோன்றிய பெண்களால் நம்நாட்டுக்குப் பெருமை..!
    இறத்தலுக்கு அஞ்சா தாங்கிலேய ஆதிக்கத்திற்கு
    ……….எதிராக ஆயுதமேந்திப் போராடியவருமதில் உண்டு..!
    மறத்தியர்போல் வாழ்ந்த மறக்க முடியாதவரதில்
    ……….மங்கை வீர வேலுநாச்சியும் அஞ்சலையம்மாளும்..!
    அறத்தின் செல்வியெனச் சுதந்திரப் போராட்டத்தில்
    ……….ஆயிரமாயிரம் வீராங்கனைகள் இவர் போலுண்டு..!

    பெருமதிப்புக் கொண்டே அக்காலத்தில் கருத்துடன்
    ……….பெண்ணைக் கண்ணாகக் கருதியே காப்பாற்றினர்..!
    கருவிலேயே பெண்சிசுவை அழிக்கின்ற அடாத
    ……….காரியத்தைக் காணுகின்ற கொடுமை நிகழ்கிறது..!
    அருகிவரும் பாலினமாக இன்று பெண்ணினமே
    ……….சுருங்கிவிடுமோ என்கிற அச்சமும் எழுகின்றது..!
    அருங்கலம்போல் கிடைக்கின்ற அரிய உயிரை
    ……….அரும்புமுன் அழிப்பது கொடும்பாவச் செயலன்றோ..!

    பெண்ணாய்ப் பிறந்தாலே முழுதும் துன்பமெனப்
    ……….பெரிதே கவலையுறும் தாய்மார்கள் திருந்தவேணும்..!
    அண்டத்தில் பிறவி ஆணாயினும் பெண்ணாயினும்
    ……….அதிலரியது பெண்ணென்பதை அறிய வேண்டும்..!
    பெண்டாட்டி தாய்மகள் சகோதரியெனும் பலவாறு
    ……….பிறவியெடுக்கும் பிறப்புக்குப் பெண்ணே மூலமெனும்..
    கண்ணோட்டம் வந்துவிட்டால் கண்ணீர் அகலும்
    ……….காலமாற்றமும் இதற்கு நிச்சயமாய் உதவிசெய்யும்..!

    அரிது அரிது மானிடராய்ப் பிறத்தல் அரிது; அதனினும் அரிது பெண் மகவாய்ப் பிறப்பது என்பதை இவ் வையம் அறிய வேணும். பெண்ணவள் அன்னையாய் மாறி உயிர்க்குலத்தை வளர்க்காவிட்டால் மண்ணுலகில் மன்னுயிர்கள் ஏது?

    மறத்தோடு நம் மண் காத்த வீரமங்கையரை மறக்கவியலுமோ? பெண் குழந்தைகளை அருளின்றிக் கருவிலே கொல்லாமல், திருவெனக் காப்போம்! என நன்மொழி பகரும் இக்கவிதையின் படைப்பாளி பெருவை திரு. பார்த்தசாரதியை இவ்வாரத்தின் சிறந்த கவிஞரென அறிவித்துப் பாராட்டுகின்றேன்.

     

     

    Share
  • படக்கவிதைப் போட்டி (164)

    பவள சங்கரி

     

    அன்பிற்கினிய நண்பர்களே!

     

    வணக்கம். கண்ணையும் கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்?

     வனிலா பாலாஜி எடுத்த இந்தப்படத்தை திருமதி ராமலஷ்மி ஃப்ளிக்கர் குழுமத்திலிருந்து போட்டிக்காகத் தேர்ந்தெடுத்து வழங்கியிருக்கிறார்கள். இந்தப் படத்திற்கு  ஒரு கவிதை எழுதுங்கள்.

    இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை, 24 வரிகளுக்குள், நல்ல தலைப்புடன் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் சனிக்கிழமை (09.06.2018) வரை உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர்குழு உறுப்பினரும் தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான திருமதி மேகலா இராமமூர்த்தி தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பலமுறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு, ஏற்கனவே சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப் பெற்றவர்களுக்கும் உண்டு.

    ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி இது; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்குபெற அழைக்கிறோம்.

    போட்டியின் நடுவரான திருமதி மேகலா இராமமூர்த்தி புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்தவர். கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்ற இவர், அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009, 2014, 2016ஆம் ஆண்டுகளின் (ஆர்லாண்டோ, அட்லாண்டா & மிசௌரி) கவியரங்கம், இலக்கிய வினாடிவினா நிகழ்ச்சிகளில் பங்கேற்றுப் பாராட்டுகளும் பரிசுகளும் பெற்றுள்ளவர். சங்கப் பாடல்களில் அதிக ஆர்வமும், இலக்கியக் கூட்டங்களிலும், பட்டிமன்றங்களிலும் சுவைபடப் பேசுவதில் வல்லமையும் பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடை பவளம்

    Share
  • படக்கவிதைப் போட்டி 162-இன்  முடிவுகள்

    -மேகலா இராமமூர்த்தி

    இப்புகைப்படத்தை எடுத்திருப்பவர் திரு. ரகுநாத் மோகனன். இதனை, ஃப்ளிக்கர் குழுமத்திலிருந்து, படக்கவிதைப் போட்டிக்குத் தேர்ந்தெடுத்துத் தந்திருக்கின்றார் திருமிகு. ராமலக்ஷ்மி. இவர்கள் இருவருக்கும் என் நன்றி!

    மலர்ந்த முகங்களோடிருக்கும் இவ்விருவரையும் காண்கையில் நம் அகங்களும் மகிழ்ச்சியில் மலர்கின்றன. இவர்கள் மகிழ்வின் பின்னணியை ஆய்ந்து கவியெழுத வல்லமைமிகு கவிஞர்கள் வரிசைகட்டி நிற்பதால், அவர்களை விரைந்தழைக்கின்றேன் நற்கவிகள் வரைந்தளிக்க!

    *****

    வழித்துணையாய் வந்த வாழ்க்கைத் துணையோ முல்லை மல்லிகைபோல் வெள்ளை மனங்கொண்டவள். தில்லையாண்டவன் அருளால் அவளோடு பேணும் இல்லறம் சிறக்கவேண்டும் என வாழ்த்துகின்றார் திரு. சு. பாஸ்கரன்.

    வந்தாய் என் வழித்துணையாய் 

    கண்ணே உன் காதோரக் கம்மல்
    என்னைக் கவிபாடச் சொல்லுதம்மா
    பெண்ணே உன் விழிபேசும் மொழியின்
    மின்சாரத் தாக்கம் என் உயிருக்குள் செல்லுதம்மா

    மன்னனானேன் நானுனக்கு மாலையிட்டு மகிழ்வுடனே
    புன்னகையின் புதுவெள்ளமதில் என்னை நீந்தவைக்கும்
    மென்னகையாளே வாழ்க்கை என்னும் பூவனத்தில்
    என்னோடு வழித்துணையாய் என்றும் வருபவளே

    கொஞ்சும் மழலைச் செல்வங்களிரண்டு
    கொஞ்சி மகிழ்ந்திடத் தந்தாயே – திரைகூப்பி வெண்
    பஞ்சாய்த் தலைநரைக்கும் காலத்திலும்
    நெஞ்சமிரண்டும் அன்புடன் இணைந்திருப்போமே

    வேலைமுடித்து நான் களைத்துவரும்
    வேளையிலே கோலமயிலே நீ என்
    களைப்புத்தீர அன்பு நீர்க் குவளைதனை ஆசையோடு
    வளைக்கரங்களில் தாங்கி வந்து தருவாயே

    கவலை மறந்து சிரித்திருப்போம்
    கதைகள் பலபேசி மகிழ்ந்திருப்போம்
    கருணை மாறாது பல்லுயிர்க்கும் உதவிடுவோம்
    காலங்கள் கடந்தும் வாழ்ந்திருப்போம்

    முல்லை மல்லிகை மலர்களைப் போல
    வெள்ளை மனம்தான் கொண்டவள் நீ
    எல்லையில்லா அன்போடு என்றும் நன்றாய் வாழ்வோம்
    தில்லையாண்டவன் துணையோடு நாம்!

    ஆணும் பெண்ணும் ஒருவரையொருவர் புரிந்துவாழும் இல்லறமே பாரோர் போற்றும் நல்லறம் என்கிறது திரு. செண்பக ஜெகதீசனின் கவிதை.

    நல்லறம்…

    சண்டை போட்டுக் கொண்டிருந்தால்
    சரிவரா திந்த இல்லறமே,
    அண்டை அயலார் மெச்சிடவே
    அன்பாய்ப் பேசி இருவருமே
    பண்புடன் வாழத் தெரிந்துகொண்டால்
    பார்த்திதைப் பிறரும் தெரிந்திடுவர்,
    பெண்ணும் ஆணும் புரிந்துதம்முள்
    பழகி வாழ்தல் நல்லறமே…!

    மனையறம் சிறக்க மனைவியும் நல்லவளாய் வாய்க்கவேண்டும்; கணவனும் கனிவாய் நடக்கவேண்டும். குலக்கொழுந்தாய் மனைவி தளிர்விட, கணவன் பாசத்தோடு அவளுக்குத் தாசனானாலும் தவறில்லை என்பது பெருவை திரு. பார்த்தசாரதியின் கருத்து.

    பெண்டாட்டி தாசன்..!

    மண்ணுலகில் பிறவியெடுத்து மனிதனாய் வாழ
    ……….மனைவியும் அமைய வேண்டும் நல்லவளாக.!
    கண்ணாளனாக அமைய வேண்டும் கணவனும்
    ……….காலமதற்கு ஓரளவேனும் கைகூட வேண்டும்.!
    எண்ணத்தில் எத்துணையோ ஆசைகள் நிறைய
    ……….ஏங்கும் மனைவியின் தேவையும் அறியவேணும்.!
    வண்ணத் துணிமணிகளை வாங்கித் தருவீர்
    ……….வகையாய் கம்மல் ஜிமிக்கி அன்பளிப்பாக்குவீர்.!

    தவமிருந்து பெற்றதைப்போல் அவளுமே நல்ல
    ……….தாரமாக அமைதல் வேண்டும் இறையருளால்.!
    அவள் கொடுக்கும் அன்புக்கு வெகுமதியாக
    ……….ஆராய்ந்து பரிசளிப்பீர் இல்லறம் செழிக்கவே.!
    தவறென்று அவளெதையும் சுட்டிக் காட்டினால்
    ……….தவறாமலவை நடக்காது பார்த்துக் கொள்வீர்.!
    சுவரை வைத்தே சித்திரமும் என்பதுபோல்
    ……….சுகமாய்க் குறைவிலாமல் கவனித்துக் கொள்வீர்.!

    இலக்கு ஒன்றை நிர்ணயித்து இல்வாழ்க்கை
    ……….இன்பமாக்க இல்லாளின் துணை அவசியமே.!
    அலக்கழித்து அவளை அல்லல் படவைத்தால்
    ……….அத்துணையும் பாழாகும்! வாழ்வு நரகமாகும்.!
    சலசலப்பு இல்லாத சஞ்சலமற்ற வாழ்க்கை
    ……….சம்சாரியின் கையில்தான் என்பதை உணருக.!
    குலக்கொழுந் தாயவள் தளிர்விடக் குடும்பத்தில்
    ……….கட்டியவளுக்கு தாச னானாலும் தவறில்லை.!

    ”மச்சுவீடு கட்ட வேண்டும்; மழலையொன்று பிறக்கவேண்டும்” என்று தன் இல்லற ஆசைகளையெல்லாம் இனிக்கும் சொல்லெடுத்துப் பட்டியலிட்டிருக்கின்றார் திரு. ஆ.செந்தில் குமார். 

    அச்சாரம் போட்டுட்டேன்டி என் அத்த மகளே – இந்த
    மச்சான நீ கட்டிக்கடி என் அத்த மகளே…
    அச்சாணி இல்லாம வண்டி ஓடுமா? .. இந்த
    மச்சானும் இல்லாம உன் வாழ்க்கை இனிக்குமா…?

    ஒட்டியாணம் வாங்கிப் போட்டு அழகு பார்ப்பேன்டி.. கழுத்துக்கு
    ரெட்டவடச் சங்கிலியும் பூட்டிப் பார்ப்பேன்டி…
    மாட்டலோட கம்மலும் வாங்கித் தருவேன்டி. உன்ன
    பட்டணத்து கடைக்கெல்லாம் கூட்டிப் போவேன்டி…!

    சச்சரவு இல்லாத வாழ்க்கை வாழுவோம்.. ஊரார்
    மெச்சும்படி நல்லதோர் குடும்பம் நடத்துவோம்…
    கச்சிதமாய் இருக்குமொரு நெலத்த வாங்குவோம்.. அதிலே
    மச்சிவீடு ஒன்னு நாம பார்த்துக் கட்டுவோம்…!

    உன்ன அச்சில்வார்த்த குழந்தையொன்னு பொறக்கவேணுன்டி.. அந்த
    கண்மணியும் மழலைமொழி பேச வேணுன்டி..
    சின்னச்சின்ன சேட்டையெல்லாம் செய்ய வேணுன்டி.. அதை
    கண்டு நானும் ஆனந்தமாத் துள்ள வேணுன்டி..

    கண்ணெதிரே நின்று கனிமுகத்தைக் காட்டும் பெண்ணைக் கண்டால் கணவனின் கவலை பறக்கும்; மகிழ்ச்சி பிறக்கும்; இல்லறம் சிறக்கும் என்பதைத் தன் கவிதையில் பதிவுசெய்திருக்கின்றார்  திரு. ரா. பார்த்தசாரதி. 

    அன்பு உள்ளமே, பொங்கும் புன்சிரிப்பே
    கண் எதிரே நிற்கின்றாய், கனிமுகத்தைக் காட்டுகின்றாய்
    என்னை என்னவென்று உன் கண்ணால் கேட்கின்றாய்
    மாலையிட்ட மணாளனைக் கண்டவுடன் உனக்கு
    மனதிலே பல்வேறு நினைவுகள் தோன்றுதே!
    ஆசைக்கு ஒன்று, ஆஸ்திக்கு ஒன்று பெற்றோம்
    கொஞ்சி மகிழ்ந்திட, இதுவே நம்முலகம் என்றோம்
    வேலைமுடித்து வரும்போது களைப்புத் தீர தாகம் தீர்த்து,
    வளைக் கரங்களில் நீ தரும் தண்ணிரே என் பசி தீர்க்கும்!
    வேலை செய்த அன்று, சிரிப்புடன் நடந்ததைப் பகிர்வேன்
    அதனை வேடிக்கையாய்க் கேட்டு உனக்குள்ளே சிரிப்பாய்
    கவலைகள் மறந்து, கதைகள் பேசி இரவினைக் கழித்தோம்
    என்றும் நமது உள்ளமே, பொங்கும் மகிழ்ச்சி என அறிந்தோம்!
    நல்ல குடும்பம் ஒரு பல்கலைக்கழகம் எனச் சொல்வதுண்டு
    விட்டுக்கொடுத்து வாழ்ந்தாலே, இல்லறம் கெட்டுப்போவதில்லை
    என்றும் நம்மிடம் பிரிவில்லை, வாழ்க்கையில் ஒன்றானபின்னே
    ஆனந்தம் இன்று ஆரம்பம், அன்பில் பிணைந்தாலே பேரின்பம்
    நான் குடும்பப்பெண் என நினைக்கும் போதினிலே
    என் எண்ணம் என்றும் ஈடேறும் போதினிலே
    உன் முகச்சிரிப்பினை என் அருகினிலே

    கண்டுகொண்டேன் என் ஆசை மணாளனை நேரினிலே!

    இணையரைக் கண்ட எம் இணையிலாக் கவிகள், இல்லறத்தில் வெல்வதற்கான சூக்குமங்களை இனிய கவிதைகளாய்ப் பொழிந்திருக்கின்றார்கள். அவர்களுக்கு என் பாராட்டு!

    அடுத்து வருவது இவ்வாரத்தின் சிறந்த கவிதை…

    மணியோசையவள்! அவள் பின்னே தப்பாமல் வருஞ்சாமான்- எம்
    மணிமாடத்தவை எத்தனை நாள் சாகையோ? அவளொன்றே அதுவறிவள்!
    பணித்தமகனாய்ப் பகட்டத்திறந்து கைத்தலத்து ஒத்தாசை தரவேணும்
    கணித்துக் காசுரைத்தால் எது தெறிக்குமெது பறக்கும் ஏதறியேன் நான்கணவன்!
    துணிக்குக் கூடையா தூக்குப்பெட்டியா பாக்குப்பாயா பிளாஸ்டிக் கட்டிலா ஏன்
    ஏணிக்கும் கூட வீட்டில் எண்ணிக்கையில்லை எம்பரணிலோ இமியிடமில்லை!
    ஆணியடித்து ஓய்ந்து போயிற்று அலமாரிகள் வளர்த்து ஓய்ந்து போயிற்று
    அணியணியாய்ச்சேரும் அட்டைப்பெட்டி வளருதலிங்கே மாபெரும் சாதனை!
    வேணி முடிப்புக்கு மூணு மேசைகள் அரிதாரம் பூச நாலு கண்ணாடிகள் புதுப்
    பாணியென்றே குப்பி-தொப்பிகள்! சந்தைவிரிக்கலாம் சுரிதார்கள் நிஜார்கள்!
    மணிபார்க்க மாத்திரம் பத்துக் கடியாரங்கள் எனினும் நிதமும் தாமதச் சமையல்!
    பணிபாணியிலிங்கே நவீனப்புரட்சி! நான் வீட்டிலிருந்தே வேலைசெய்பவன்!!
    மணிக்குமணியமர்ந்துழைக்கும் மணியன்; வீட்டிற்குமோர் இலவச நாயகன்
    மணியழைப்போயா வாசற்படியில் பணிவிட்டெழுவது எனக்குடற்பயிற்சி!
    கணினிஆடவர் வாழ்க்கை போகுது! வயதேறிப் போனால் சிக்கலே மிஞ்சுது!
    மணியாய்ப் பொறுமை உண்டெனக்கேன்றே பேசிமுடித்த இல்லறபந்தம்
    “மணி!” மனைவிமக்கள் அழைப்பொலி! அவரடிபட நானொரு நல்மணி தானே?
    துணியோ பொன்னோ போக்குவரத்தோ யாதுக்கும் நானொரு சத்தியச் சாட்சி
    துணிந்து சொல்ல வாயிறந்தவன்; துணித்துப்போகவும் மனமில்லாதவன்
    பணியில் நட்டம் எனக்காகாது! நானா அவரை முறைப்பேன்? எதிர்ப்பேன்?
    பணிந்து போவதே பாதுகாப்பென மவுனம் காக்கும் நான் சிரிப்பொலிச் சித்தன்!

    சிரிப்பொலிச் சித்தனாய், பொறுமைமிகு மணாளனாய், இல்லிருந்து உழைக்கும் கணினிப் பணியாளனாய், அனைத்திற்கும் மேலாய் மனையாள் வாங்கிக் குவிக்கும் ஆடம்பரப் பொருள்களுக்கு அட்டியேதும் சொல்லாமல் வட்டிகட்டிக் கொண்டிருக்கும் உத்தமக் கணவனாய்த் திகழ்பவனை நகைச்சுவை இழையோட அழகாய்ப் படம்பிடித்திருக்கும் இக்கவிதையின் ஆசிரியர் திருமிகு. அவ்வைமகளை இவ்வாரத்தின் சிறந்த கவிஞரென அறிவித்துப் பாராட்டுகின்றேன்.

     

     

    Share
  • படக்கவிதைப் போட்டி 161-இன் முடிவுகள்

    -மேகலா இராமமூர்த்தி

    உழைப்பின் உயர்வை உலகுக்குணர்த்தும் உழைப்பாளர் சிலையைக் கலைநயத்தோடு படம்பிடித்து வந்திருக்கின்றார் திரு. வெங்கட்ராமன். எம். இதனைப் படக்கவிதைப் போட்டிக்குத் தெரிவுசெய்து தந்திருக்கின்றார் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி. சாந்தி மாரியப்பன். இவ்விருவருக்கும் என் நன்றி உரித்தாகுக!

    ”காடுகொன்று நாடாக்கிக் குளந்தொட்டு வளம்பெருக்கியும்
    கல்பிளந்து மலைபிளந்து கனிகள்வெட்டித் தந்தும்
    ஆலைகள் மலர்ச்சோலைகள் கல்விச்சாலைகள் அமைத்தும்
    நாட்டையும் வீட்டையும் நலமடையச் செய்வோர் உழைப்பாளிகள்!”

    அவர்தம் பெருமையை மேலும் தம் கவிதைகளில் விரித்துரைக்கக் கவிஞர்களை அன்போடு அழைக்கிறேன்!

    ”பாட்டாளிக் கூட்டத்தால் உருவானோரே பெரும் பணக்காரர்கள்! ஆகவே வீட்டுக்கு வீடு கூட்டாய் உழைப்போம்; சோம்பல் எனும் கேட்டை ஒழிப்போம்!” என்று பாட்டாளிகளின் பலத்தைத் தன் பாட்டால் விளக்குகின்றார் ஏ.ஆர். முருகன் மயிலம்பாடி.

    பாட்டாளிகளே பலம்!!!!

    எட்டாத தூரமந்த இமயமலை _ அதைக்
    கிட்டால கொண்டுவர தொடர்ந்து உழை!
    பட்டாளத்தார் பணியில் நாட்டின் எல்லை
    கெட்டியாயிருப்பதினால் ஏது தொல்லை!
    வெட்டி முறித்தபின்பு கரம் விரித்தால்
    கொட்டிக்கிடக்கிறது கமல வண்ணம்!!
    சட்டங்களைப் போடுகிற அரசாங்கமும்
    சிட்டாயாயுழைப்போரால் பேறுபெரும்!
    விட்டாத்திரும்பிடாத நேரங்காலத்தை
    முட்டாளாயில்லாமல் செயலாற்றினால்
    துட்டு ஏராளம் சம்பாத்தியம் பெற்று
    இட்டு நிரப்பிடலாம் இல்லச் சுமையை!!
    எட்டும் அறிவினில் ஆணும்பெண்ணும்
    கூட்டாயியங்கையிலே வெற்றிபெறலாம்!
    காட்டைவெட்டி நிலமாக்கிப் பயிரிடுவோர்!
    ராட்டைநூத்துத் தறியாலே நெய்திடுவோர்!
    போட்டிபோட்டுத் தொழிற்சாலைதோறும்
    ஈட்டுகிற பொருள்களை அள்ளிவழங்கி
    நாட்டுக்கு வளம்தரும் தொழிலாளிகள்!!
    டாட்டா பிர்லாக்கள் நிறையப் பேர்கள்
    பாட்டாளிக் கூட்டத்தால் உருவாகுவார்!!
    ஓட்டாண்டி இல்லாத உலகமைப்போம்
    வீட்டுக்கு வீடு உழைப்பாலுயர்வோம்!!!
    சூட்டிடுவோம் மகிழ்வினை மக்களுக்கே!

    ”ஊழலை ஒழிக்க ஏற்றவழி உழைப்பவர் குரலை மதிப்பதே! உழைக்கும் கரங்கள் மன்பதைக்குக் கிடைத்த வரங்கள்!” என்று உழைப்பாளிகள் புகழ்பாடுகின்றார் திரு. செண்பக ஜெகதீசன்.

    உழைக்கும் கரங்கள்…

    உழைக்கும் கரங்களை உழைக்கவிடு
    உதவிக் கரங்களாய்ச் சேர்ந்துவிடு,
    மழையைத் தந்திடும் மேகம்போல்
    மன்பதை காத்திடும் கரங்களவை,
    உழைப்பைச் சுரண்டிடும் கூட்டத்தினர்
    உண்மை நிலையைக் காட்டிவிடு,
    உழைப்பவர் குரலதை மதித்திருந்தால்
    ஊழல் உலகினில் வாராதே…!

    ”வாய்ப் புரட்டை வெட்டிப்போடு! ஊழல்செய்யும் திருடர்களைத் தட்டிக்கேளு! உழைக்கும்வர்க்கம் ஆளவும், ஆளும்வர்க்கம் உழைக்கவும் வழிதேடு!” என்று நடைமுறைப்படுத்தவேண்டிய நல்ல மாற்றங்களைத் தன் கவிதையில் பட்டியலிடுகின்றார் திருமிகு. அவ்வைமகள்.

    பெயர்த்துப்போடு புரட்டிப்போடு புரட்டியதை வகுத்துப்போடு
    வகுத்துப்போட்ட தத்தனையும் வாரிவாரி நிரவிப்போடு – நீ
    மேடறுத்துச் சமனம் நாட்டு! மேடறுத்துச் சமனம் நாட்டு!வீழ்ந்தவற்றை நிமிர்த்திப்போடு நிமிர்ந்தவற்றைப் பதித்துப்போடு
    பதிப்புகளை மாற்றியாக்கி ஏழை மதிப்புயர வாய்ப்புச் சேரு – நீ
    வாய்ப்புரட்டை வெட்டிப்போடு! வாய்ப்புரட்டை வெட்டிப்போடு!
    தளங்கள் போட்டுக் களங்கள் கூட்டு களங்களிலே மக்கள் கூட்டு

    கூட்டம் போட்டு அத்தனைக்கும் காட்டமான திட்டம்போடு – நீ
    திட்டங்களை முழுச் செயலிலாக்கு! திட்டங்களை முழுச் செயலிலாக்கு!
    உழைப்பவர்க்கு ஊதியத்தை உண்மையாக வழங்கலாக்கு

    வழங்கலிலே ஊழல் செய்யும் திருடர்களைத் தட்டிக்கேளு – நீ
    தட்டும் தடைகள் இடித்துப்போடு! தட்டும் தடைகள் இடித்துப்போடு!
    வாட்டம் போக்கு கட்டம் போக்கு வேலைவாய்ப்பு பெருகலாக்கு

    பெருத்தப் பணமுதலைகளை, ஈனர்களை வளைத்து வீழ்த்து – நீ
    வீழ்த்தும் சூழ்ச்சிவலை சுருட்டி வீசு! வீழ்த்தும் சூழ்ச்சிவலை சுருட்டி வீசு!
    அரசியலைப் புரட்டிப்போட்டு புரட்டி அதை நிறுத்திப்போடு
    நிறுத்திப்போட்டு உழைக்கும் வர்க்கம் ஆளுமாறு மாற்றிப்போடு – நீ
    ஆளவந்தார் உழைக்கக் கோரு! ஆளவந்தார் உழைக்கக் கோரு!
    எஃகு உடல் வைரமனம் மானுடர்க்கு நல்பாடம் காட்டு
    காட்டுமாறு கட்டுடலை வாட்டமாக வளர்க்கக்காட்டு – நீ
    வளர் நலவாழ்வை வளமையாக்கு! வளர் நலவாழ்வை வளமையாக்கு!
    பாறைகாத்து தரையைக் காத்து, மேகம் காத்து, மாரி காத்து

    மாரிசேரும் நீர் நிலைகள் காத்து – நீ
    காத்துத் தூய்மை பாதுகாப்புச் சேரு! காத்துத் தூய்மை பாதுகாப்புச் சேரு!

    தன் பிறிதொரு கவிதையில், ”உழைப்பின் கானமே உதிர கானம்! உழைப்பாளர் உறுதிமுன்னே பெரும்பாறையும் பணியுது; கருங்கடலும் கைத்தட்டுது! இத்தகு உழைப்பாளர் வாழ்வுயர உதவிகள் புரிந்திடுவோம்!” என்று நன்மொழிகள் பகர்ந்திருக்கின்றார் அவர்.

    ஏஏய்———! ய்—–ஏஏய் –! ம்ம்ம்ம்ம்!
    இன்னும் போடு! வலிடா! இசுடா! டேய் நிறுத்து!

    உழைப்பின் கானம் உதிர கானம்
    வேர்வை ஊற்றம் நாற்றம் பாடுது
    பாரம் தூக்குமவர் கானம்தானே
    பாரைக்கூட நகர்த்தி இயக்குது

    உடலின் உரமும் மனதின் பலமும்
    இணைந்தசைந்திசைந்தோர் அபிநயம்
    எலும்பு தசை நரம்பு சிரைதமனி
    புருவ கண்நெளிவின் சுருதிலயம்

    நெம்புகோல்கள் நெட்டித்தள்ள
    அவர் மூச்சு சுவாசம் தேங்குது
    விலாக்குள்ளே முணுக்குமிதயம்
    நொடித்தவாறுயிரும் சேர்ந்தியங்குது

    பெரும்பாறையங்கே பணியுது
    பெருங்கடலும் கைதட்டி மகிழுது
    சேர்ந்தியக்கும் அவர் தவநிலையைக்
    கருடன் சேர்ந்து வந்து வணங்குது

    அமர்ந்தவாறு பணமுதலையங்கே
    பல குட்டிபோட்டுப் பெருக்குது
    சிம்மாட்டு கோவணாண்டியாக இவர்
    மறைவர் நீதியெங்கிருக்குது?

    உழைப்பு மட்டும் மூலதனம்
    உடைக்கலமாய்ப் போகவிடுவதா?
    உழைக்கும் மாந்தர் வாழ்வினிக்க
    மேலும் பெருக்கிடுவோம் உதவிகள்!

    ”வாழ்வில்சூழ் தீவினைகளை ஊழ்வினை என்றெண்ணி மருளாமல், உடலுழைப்பால் உயரவேண்டும்! புல்லர்களின் பேச்சால் பொன்னான வாழ்வை இழக்கக்கூடாது” என்று உழைப்பின் உயர்வைச் சிறப்பாய் உரைக்கின்றார் பெருவை திரு. பார்த்தசாரதி.

    உழைப்பின்றி இல்லை உயர்வு..!

    சூழ்ந்திருக்குது நம்மைச் சுற்றி வட்டமாய்
    ……சூழ்ச்சி வலைகளெங்கும் சிதறிக் கிடக்குது..!
    வாழ் வனைத்தும் துன்பங்கள் வினைகள்
    ……வஞ்சனை நிறைந்த வழியாகவே தெரியுது..!
    ஊழ்வினை இதெல்லாம் என்று நினையாது
    ……உடலுழைப்பால் உயரும் வகை அறிவீர்..!
    ஏழ்பிறப்பும் மனிதனாய்ப் பிறந்து வாழ்வில்
    ……ஏற்றமுற நித்தமுமே உழைக்கமுன் வருவீர்..!

    இரும்புக் கரங்களால் உழைத்து உருவாகி
    ……எழுந்து நிற்கிறது விண்முட்டும் கோபுரம்..!
    இருநூறடிக்கு மேல் எண்பதாயிரம் கிலோ
    ……எடையை உழைப்பிலே காணும் அதிசயம்..!
    அரும் பெரும் உழைப்பால் உருவானது
    ……ஆயிர மாண்டாக அதிசயமாய்த் திகழ்கிறது..!
    பெரு வுடையார் கோவிலின் புகழாலதற்குப்
    ……பெரிதாய் உழைத்த வரின்றும் வாழ்கிறார்..!

    எல்லாமிங்கே இனாமாகக் கிட்டும் போது
    ……எதற் குழைக்க வேணுமென எண்ணாதே..!
    புல்லர்களின் பயனற்ற பேச்சில் மயங்கிப்
    ……பொன்னான வாழ்வையும் நீஇழந் திடாதே..!
    பொல்லாப்பு யாரிடமும் வேணாம் தம்பி
    ……பொறுப்பாக நடந்து கொள்ள முயலுவாய்..!
    நல்லொழுக்கம் ஒன்றுதான் நாமுயர வழி
    ……நாட்டில் இன்றிது முக்கியத் தேவையப்பா..!

    பாட்டாளியின் உழைப்பே முதலாளியின் உயர்வு! ஆதலால் உழைக்கும் கரங்களே! நீங்கள் உங்கள் உரிமைக்குக் குரல்கொடுங்கள்! வெற்றியைப் பெற்றிடுங்கள்!” எனப் பாட்டாளி மக்களின் உழைப்பைத் தன் கவிதையில் உருக்கமாய் உரைத்திருக்கின்றார் திரு. ரா.பார்த்தசாரதி. 

    பாட்டாளி மக்கள்!

    நான்குபேர் சேர்ந்து கல்லை நகர்த்துவது
    நம் மனதில் அவன்படும் துன்பத்தைக் காண்கின்றோம்
    மூச்சைப் பிடித்து கல்லை நகர்த்துவதும் மிக கஷ்டம்
    நான்காம் நெம்புகோல் கொண்டு நிமிர்த்துவதும் தெரிகின்றதே
    அவன் உழைப்பை உறிஞ்ச சமுதாயமும் சற்றே நினைப்பதில்லை
    உழைப்பிற்கேற்ற ஊதியமும் அவன் என்றும் பெறுவதில்லை
    பாட்டாளி உழைப்பே முதலாளியின் உயர்வு
    பணத்தாலே உழைப்பை உறிஞ்சும் ஒரு கூட்டம்
    படிப்பு அறிவில்லாத பாட்டாளி என்றும்
    நேரம் காலமின்றிக் கடுமையாக உழைக்கின்ற கூட்டம்
    உழைத்தால்தான் ஊதியம் பெறமுடியும்

    உழைப்பாளியின் வேர்வைக்கு என்ன பலன்?
    […]
    அறிவுத்திறன் கொண்டு உழைப்பவனுக்கு ஊதியம் அதிகம்

    உடல் உழைப்பைக் கொண்டு உழைப்பவனுக்கோ ஊதியம் குறைவு
    இமயமலைப் பனிமலையில் நின்று
    அயல்நாட்டு ஊடுருவலைத் தடுத்து நிறுத்தும்

    பட்டாளத்துப் பாட்டாளி மக்களையும் நினைவு கொள்ளுங்கள்
    நம் பசியைத் தீர்க்கும் விவசாயியும் ஒரு பாட்டாளிதான்

    அவன் அருமை தெரியாமல் நசுக்க முற்படுவதும் அரசுதான்!
    உழைக்கும் கரங்களே, உரிமைக்குக் குரல் கொடுங்கள்

    அடக்குவோரை எதிர்த்துநின்று வெற்றி வாகை சூடுங்கள்! 

    ”விதிக்கே விதி செய்த தேசம்; இன்று விக்கித் திணறுவது மோசம்! கறுப்புப்பணமே நாம்கண்ட வளர்ச்சி; அதைவைத்துச் செய்கிறாரே வெற்றுப் புரட்சி!” என்று நாட்டுநடப்பைத் தன் கவிதையில் போட்டுடைத்திருக்கின்றார் திரு. சத்தியமணி. 

    தடைக்கல் த‌டைகளைப் புறம் சாய்ப்போம் – அது
    சாயாதிடின் உடைத்தெறிவோம்!
    உடைகல் உடைகளை உடன்கிழித்தால் – அது
    கரையும்வரை வியர்த்துழைப்போம்!

    கரிகள் பூசி நமைச் சேர்ப்பார் – பெரும்
    வரிகள் விதித்து நலம் கேட்பார்
    நரிக ளாளும் இந்த நாட்டில் – எங்கு
    நியாயம் தர்மங்களைப் பார்ப்பார்?
    உழைக்கும் சிலையதற்கு மாலை, பின்னர்
    ஊழல் அணிவகுப்பில் சாலை!
    விதிக்கும் விதிசெய்த தேசம் – இன்று
    விக்கித் திணறுகிற மோசம்!

    வானங் கறுக்கவில்லை வறட்சி – சிலர்
    மனத்தில் கற்பழிக்கும் உணர்ச்சி!
    கறுப்புப் பணக்குவியல் வளர்ச்சி அதைக்
    காட்டி நடத்தும் இவர் புரட்சி!
    தனக்குத் தேவை வருமானம் அதை
    மடக்கிப் பிடுங்கும் அவமானம்!
    கிடைத்த பேர்க்கு வெகுமானம் – அது
    கிட்டாவிடின் ஏது பிரமாணம்?

    ”ஏர்முனைக்கு நேர் இங்கே எதுவுமே இல்லை; வேளாண்மை இல்லையேல் வாழ்வே இல்லை. ஆதலால் கனிவுமிக்க மனிதராய்க் கழனிகளில் பயிர்த்தொழில் செய்து உயிர்கள் காப்போம்” என்று உழவின் பெருமையை உரக்கப் பேசுகின்றார் திரு. சி. ஜெயபாரதன். 

    ஏர் முனைக்கு நேரில்லை

    அங்கிங்கு எனாதபடி எங்குநாம்
    நோக்கித் தொழிற்துறைச்
    சாதனங்களைச்
    சீர்தூக்கிப் பார்த்தால்
    ஏர் முனைக்கு நேராக
    எதுவுமே இல்லே!
    வேளாண்மை இல்லையேல்
    வாழ்வே இல்லை
    தலை அறுக்கும் கூரிய
    வாளை எல்லாம் நெளித்து
    ஏர் முனை ஆக்கு!
    வேலை எல்லாம் வளைத்து
    ஏர் முனை ஆக்கு!
    மடிவெடித் தட்டி அப்பாவிக்
    குடிகளைத் துண்டாக்கும்
    மூர்க்கரைப் பற்றிச் சிறையில்
    சேர்க்காது,
    ஏர்முனை பிடித்து, நிலம்
    உழுது பயிரிட்டு
    உயிர்களை வளர்க்கும்,
    கனிவு மனிதராய் ஆக்கு!
    இனிமேல் அதுவே
    பணி நமக்கு! பாசம் நமக்கு!
    பாதை நமக்கு!

    உழைப்பாளர் சிறப்பை உயரிய வகையில் விதந்தோதியிருக்கும் கவிஞர்கள் குழாத்துக்கு என் கனிவான பாராட்டு!

    இவ்வாரத்தின் சிறந்த கவிதையாய்த் தெரிவுசெய்யப்பட்டிருப்பது இனி…

    வெற்றியின் வேதம்

    முடிவதில்லை எதுவும் முயலாமல் தன்னாலே
    முடியாததில்லை எதுவும் முயன்றாலே
    முடியுமென்று முன்னேறு – உன்னாலே
    முடிந்து உடையும் தடைகள் பல பின்னாலே

    கடமையை மட்டும் செய் கவனமாய்
    கடுமையின் கொடுமைகள் கட்டளையிடும்
    கடைசி வாய்ப்பாயினும் கைவிட்டுவிடாதே
    கடினமாய்ப் போராடி வாழ்வை உனதாக்கி உயர்வுகொள்!

    வெம்மை காட்டும் சுடுபொழுதில் உடல்
    வெளியேற்றிய உப்புக்கரிக்கும் வியர்வைக்கிடையில்
    வளைந்த முதுகின் வலிமையால்
    விளைந்த வெற்றியே உழைப்பின் பெருமை!

    காடு மலை மேடு எல்லாம் உன்
    கடும் உழைப்பால் காட்சிபெறும்!
    கழனியாய், காய் கனி விளையும் சோலையாய்க்
    காலம் கடந்தும் நிற்கும் உன் உழைப்பு வெற்றி மாலையாய்!

    நெம்புகோல் தத்துவமே வாழ்க்கை
    தெம்புகொண்டு எழுந்து நட நம்பிக்கையோடு!
    நம்பு நீ ஒரு நெருப்புக்கோள் – சிற்றுளி
    அம்புகள் பிளக்கும் பெருமலைப் பாறைகள் ஏராளம்!

    உழைத்துக் களை! உடல் இளைக்க உழை! யாருக்கும்
    சளைத்தவனல்ல நீ – உன்னால் முடியாது என்றதை எல்லாம்
    விளைவித்துக் காட்டு என்னாலும் முடியும் என்று – ஓங்கி உயர்ந்த உழைப்பாளர் சிலை போதிக்குமே உனக்கு வெற்றியின் வேதத்தை!

    ”நெம்புகோல் தத்துவமே வாழ்க்கை! தெம்புகொண்டு போராடினால் உப்புக் கரிக்கும் வேர்வைக்கிடையில் வெற்றிகள் வேர் வைக்கும்! ஓங்கி உயர்ந்த உழைப்பாளர் சிலை வெற்றியின் வேதத்தை மேதினிக்குப் போதிக்கும்!” என்று உழைப்பினால் கிட்டும் உறுதிகளைச் சுவைபடத் தன் கவிதையில் இழைத்துத் தந்திருக்கும் திரு. சு. பாஸ்கரனை இவ்வாரத்தின் சிறந்த கவிஞர் என அறிவித்துப் பாராட்டுகின்றேன்.

     

     

    Share
  • படக்கவிதைப் போட்டி 160-இன் முடிவுகள்

    -மேகலா இராமமூர்த்தி

    திருமிகு. நித்தி ஆனந்தின் கை வண்ணத்தில் காணக்கிடைக்கும் புகைப்படம் இது! மாடும் மங்கையும் இணைந்து நடமாடும் காட்சி கண்ணுக்கும் கருத்துக்கும் கவினைத் தருகின்றது. இந்தப் படத்தைப் படக்கவிதைப்போட்டிக்குத் தேர்ந்தெடுத்துத் தந்தவர் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி. சாந்தி மாரியப்பன். புகைப்படக் கலைஞர், தேர்வாளர் இருவருக்கும் என் நன்றி!

    மாடே செல்வம் என்று மக்கள் வாழ்ந்த காலமொன்றிருந்தது. பின்பு நகரமயமாதலின் விளைவால் விவசாயமும் மாடுவளர்ப்பும் கிராமப்புறத் தொழில்களாய்த் தேங்கிப் போயின. இன்றோ… மாட்டை வைத்துப் பாடுபடுவதும் பராமரிப்பதும் வெகுசிலரே!

    ”ஆகாத் தோம்பி ஆப்பய னளிக்கும் கோவலர் வாழ்க்கை ஓர் கொடும்பாடில்லை” என்று ஆநிரை காக்கும் கோவலர் வாழ்வைப் புகழ்வார் இளங்கோவடிகள். அதுபோல் ஆவொடு செல்லும் ஆரணங்கைப் போற்றிடப் பாவொடு வருக எனக் கவிஞர் பெருமக்களைக் கனிவோடு அழைக்கிறேன். 

    *****

    வைக்கோற் பிரியென வறள்முடி ஊசலாட, செருப்பில்லா வெறும் பாதத்தோடும் வெறுப்பில்லா கால்நடை நேசத்தோடும் செல்லும் இப்பெண்ணின் தோழமை கண்டு நெஞ்சு நெகிழ்கின்றார் திருமிகு. அவ்வைமகள்.

    விசித்தவொன்றெனப் பூட்டிய கயிறு
    அசித்தையேறா சித்திநன்றிருந்தும்
    வசித்தவாறே வசப்படும் விலங்கு
    தசித்தவாறே அது அசைபோட்டயரும்!
    நாசினிகளின் அங்குலப் (போ)பார்வை
    பசிக்கு என் போகம் நீ என்றாள்
    துசிவெறியிம்சையில் இசியும் நல்தேகம்
    தூசி நீயென சொற்செயல் ரோதனை
    ஊசித்தைதனம்; பாலியலிடுக்கண்
    உசித்தம் வாலைப் பசுவெனப் பகர்ந்து
    பூசித்தவாறே புசிக்கும் மும்மாமிசம்
    ருசித்து ருசித்து ருசுவேறியதால்
    ரசித்து ரசித்து ரணகள வன்முறை
    ஏசித்து வேசித்து தொழுவினம் தாழ்முறை!
    பிரசித்துக் கன்னிகை பசுபதிபாச முழக்கு
    நிசித்தபடியே திருமகள் பசுவதை வழக்கு
    ஒசித்துப்போட்ட அவளாசைகள் ஆயிரம்
    மசித்துமசித்து விழுங்கிய பதினாயிரம்
    முசித்த நெல்லின் வைக்கோற்பிரியென
    திசித்த அவள் குஞ்சத்து வறள்முடி ஊசல்
    கசித்தவாறே அவளெடுத்த வெறும்பாதம்
    பிசித்தமனதுடன் கால்நடைப்பா(ர்)வை
    ஓசித்து ஓசித்து உள்ளுள் உதிர மகோசம்
    ரோசித்துச் சேர்ந்த இத்தோழமை நெகிழுதே!

    *****

    தன் இன்னொரு கவிதையில் காமதேனுவாய்த் திகழும் பசுவின்  வள்ளன்மையை, அதன் தெய்வத்தன்மையைப் பாங்குறப் பேசியிருக்கிறார் அவர்.

    மடியில் தனம் புடைக்கும் காம்பில் வகிர்ந்தளிக்கும்
    முடியில் கொப்புடைக்கும் காலில் பிள்ளை விளையாடும்
    கெடிவாலைத்தெய்வமென்பர் உணர்வில் வசப்படுமே
    துடி நங்கை காமதேனு வெனவோது.

    *****

    ”பள்ளிசெலினும் பசுவை மறவாத உன் அன்பும் அருட்பண்பும் உன் வாழ்வில் ஏற்றத்தைத் தரும் பெண்ணே!” என்று இச்சிறுமியை வாழ்த்துகிறார் திரு. செண்பக ஜெகதீசன்.

    பெண்ணே பெண்ணே…

    பள்ளிசெலினும் பசுமாட்டை மறவாப் பெண்ணே
    பண்பிதுதான் பேர்சொல்ல வைக்கும் உன்னை,
    உள்ளம்நிறை அன்புடைய பசுவைப் பேணல்
    உன்வாழ்வின் வழிகாட்டி யாவதைப் பாராய்,
    கள்ளமில்லை கபடமில்லை கன்றுக் கூட்டும்
    கருணையது உன்வாழ்வின் வழியைக் காட்டும்,
    எள்ளளவும் வெறுப்பின்றி இதையே செய்வாய்
    ஏற்றமுந்தன் வாழ்விலுண்டு காண்நீ பெண்ணே…!

    *****

    ”ஆறறிவு மனிதனை நம்புவதினும் ஐந்தறிவு மிருகங்களை நம்புவது நன்மை பயக்கும். கிடேரியை ஓட்டிச்செல்லும் பெண்ணே! விரைவில் இந்தப் பசுவும் கன்றுதந்து உன்னைப் புரக்கும் கண்ணே!” என்று நல்வார்த்தை நவில்கின்றார் திரு. ரா. பார்த்தசாரதி.

    பெண் பிள்ளையும், பெண் கன்றும்!

    விவசாயத்தின் இன்றியமையாத பிராணிகள் எருதும் பசுவும்
    விவசாயியின் பெண்ணே தன் இளம் கிடேரிக் கன்றை அழைத்துச் செல்கிறாள்!
    அவள் பச்சை நிறச் சீருடையுடன் பச்சைப் புல்மேய கூட்டிச் செல்கிறாள்!
    எதிர்காலத்தில் கன்றுஈந்து நன்மை பயக்கும் என எண்ணிச் செல்கிறாள்!
    அது அவளுக்கும் நடைப்பயிற்சி, கூட வரும் கிடேரிக்கோ மேய்வதற்கு முயற்சி!
    போறாளே போறாளே பள்ளிக்கூடப் பெண் மேய்க்கப் போறாளே!
    அக் கிடேரி எதிர்காலத்தில் பால்தருமே என நினைந்து ஓட்டிக்கொண்டு செல்கிறாளே!
    மனிதனை நம்புவதைவிட ஐந்தறிவுப் பிராணியை நம்பலாமே!
    நாயும், பசுவும் செய்ந்நன்றிக்கு என்றும் ஓர் உதாரணமே!
    இன்னும் ஓராண்டில் பசுவும் கன்றுமாய் அழகாய்க் காட்சியளிக்குமே!
    ஒளிமயமான எதிர்காலம் என் உள்ளத்தில் நிறைந்து தோன்றுமே!

    *****

    ”யாவர்க்குமாம் பசுவுக்கொரு வாயுறை” என்றார் புரட்சிச் சித்தர் திருமூலர். தலைமுதல் வால்வரை தெய்வத்தன்மை நிறைந்த பசுவிலிருந்து கிடைக்கும் அனைத்துப் பொருள்களுமே மனிதர்க்குப் பயனளிப்பவை. கால்நடை அபிவிருத்தியால் வீட்டிலே நிறையுமே பொருள்விருத்தி” என்கிறார் பெருவை திரு. பார்த்தசாரதி.

    ஆய்க்குலப் பெண்ணும் ஆநிரையும்..!

    திருமூர்த்தி மூவரின் தெய்வத் தன்மையை
    ……….தன்னுள் கொண்டுள்ள தெய்வீகப் பசுவாம்..!
    திருப்பணிகள் நடக்கு மிடத்தில் தர்மத்தின்
    ……….உருவாய் உனக்கு உண்டு முதல்மரியாதை..!
    திருமூலரும் சொன்னார் அறம் வளர்க்கவே
    ……….அருகம்புல் கொடுங்கள் பசுவுக் கென்றார்..!
    திருக் கோவிலுள் தெய்வத்திற் கிணையாக
    ……….திருமகளாம் பசுவுக்கு மங்கே இடமுண்டு..!

    வசுதேவன் மகனால் பசுவுக்குப் புகழதன்
    ……….வால்முதல் தலைவரையில் தெய்வீக முண்டு..!
    பசுவென்றால் பெண்பாலே!அது கொடுக்கும்
    ……….பெருங் கொடையதுவாம் பாலும் நெய்யும்..!
    அசுத்தத்தைச் சுத்தமாக்கும் அதன் சாணம்
    ……….அது கழிக்கும் சிறுநீரும் அருமருந்தாகும்..!
    விசுவாசம் கொண்டே அதனை வளர்ப்பார்
    ……….வீட்டில் அதுவுமொரு செல்லப் பிராணியே..!

    மாநிலம் தழைக்க மாடுகன்றைக் காக்கவும்
    ……….மகத்தான திட்டமொன்றை வகுக்க வேணும்..!
    ஆநிரை அழித்தலைத் தடுத்திட நீங்களும்
    ……….அறிவுப் பூர்வமாய்ச் சிந்தித்திடல் வேணும்..!
    கைநிறையப் பொருளீட்ட ஒரு வகையில்
    ……….கால்நடை அபிவிருத்தியும் மிக வேணும்..!
    ஆநிரை மேய்க்கப் போகுமிளம் பெண்ணே
    ……….ஆய்ச்சிய ராவதற்கு ஆனாயனருள் வேணும்..!

    *****

    பசுவும் பாவையும் நம் கவிஞர்தம் உள்ளத்துள் நுழைந்து, நல்ல கவிதைகளை வெளிக்கொணர்ந்திருக்கின்றார்கள். அவர்களுக்குப் பாராட்டுக்கள்!

    இனி இவ்வாரத்தின் சிறப்புக்குரிய கவிதையாய்த் தெரிவாகியிருப்பது…

    கனவின் நிதர்சனம்!!

    மருத்துவர்..பொறியாளர்..
    மகத்துவப் படிப்புக்கள் என
    மாரடிக்கும் நவீன காலத்தில்
    மாடுவளர்ப்பும் விவசாயமும்
    மாண்புமிக்கவை என்பதை
    மாணவியின் நிமிர்ந்த நடை
    மனிதருக்குணர்த்துகிறது!!
    மட்டில்லாப் படிப்பினிடையே
    மாலைதோறும் கிடாரியோடு
    மாறாத அன்பைப்பொழிந்து
    மற்றவர்க்கு உதாரணமாய்
    மகிழ்விக்கும் பெண்பிள்ளை
    மதியாலே விதி வெல்லும்
    மார்க்கமதை அறிந்தவரே!!
    மண்வாசம் மறந்துவிட்டால்
    மற்றெதுவில் வளர்ந்தாலும்
    மறுமலர்ச்சி கிடைத்திடுமா??
    மழலையைப்போல் கால்நடை
    மவுனமாய்க் குலம் காக்கும்…
    மாயவனின் கோத்திரமுதித்த
    மடிப்பால் பசு வளர்த்திட்டால்
    மனை வளரும்…நம் மரபுயரும்!
    மங்காத செல்வம் தங்கும்!
    மக்களுக்கு வளம் பெருகும்!!

    ”மருத்துவர், பொறியாளர் படிப்புக்களுக்காக மல்லாடும் மாணாக்கர் மத்தியில், மாடு வளர்ப்பை மகிழ்வோடு நாடிநிற்கும் இந்தச் சிறுமி, பெருமைக்குரியவளே! மடியின்றித் (சோம்பல்) தன் மடியில் பால்சுரக்கும் பசுவினைப் பாசத்தோடு வளர்த்தால் மனை உயரும்; நம் மரபுயரும்; மாங்காத செல்வம் தங்கும்” எனும் பொருள்செறிந்த வார்த்தைகளைத் தன் கவிதையில் பொதிந்து தந்திருக்கும் திரு. ஏ.ஆர். முருகன் மயிலம்பாடி இவ்வாரத்தின் சிறந்த கவிஞராய்த் தெரிவுபெறுகின்றார். அவருக்கு என் பாராட்டு!

     

     

    Share
  • படக்கவிதைப் போட்டி 159-இன் முடிவுகள்

    -மேகலா இராமமூர்த்தி

    கரத்தால் தன் முகத்தை மறைக்கும் இந்தப் பெரியவரைத் தன் புகைப்படப் பெட்டிக்குள் பதுக்கி வந்திருப்பவர் திரு. லோகேஷ். இதனைப் படக்கவிதைப் போட்டிக்குத் தெரிவுசெய்து தந்திருப்பவர் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி. சாந்தி மாரியப்பன். இவர்கள் இருவரும் என் நன்றிக்குரியோர்!

    ”ஐயன்மீர்! என் ஆடை கசங்கியிருக்கலாம்; அதில் கறைபடிந்திருக்கலாம். ஆனால் என் கரம் உழைத்து உரம்பெற்றது; கறையற்றது. அதனைக் காண்மின் காண்மின்!” என்று தன் கையகத்தை இவ்வையகத்துக்குக் காட்டுகின்றாரோ இப்பெரியவர்?

    சிந்தனைக்கு விருந்தளிக்கும் இப்படத்துக்குச் சீரிய கவியெழுத வருக என்று கவிஞர்களை அன்புபாராட்டி அழைக்கின்றேன்!

    *****

    கூடா ஒழுக்கம்கொண்ட சிலரால் உண்மைத் துறவும் கேலிக்கும் கேள்விக்கும் உள்ளாகின்றது என்று சுட்டும் திரு. ஆ. செந்தில்குமார், துறத்தலும் ஒருவித அறமே எனினும் வெறுத்தலைவிட்டுப் பொறுத்துவாழ்தலே அதனினும் சாலச் சிறந்தது என்கிறார் முத்தாய்ப்பாய்!

    வாழ்வில் வெறுமை எதற்காக?

    வையத்தில் படர்ந்த போலிகள் மிகுதியால்
    பொய்யோஇத் துறவியின் தோற்ற மென்று..
    ஐயம் தோன்றிடக் குழம்பும் மனத்தில்..
    மெய்ந்நிலை உணர்தலே அனைத்திலும் மேன்மை..!

    முன்புள வினைகளைப் போக்கிட நினைக்கின்..
    அன்புளம் கொண்டு அனைத்துயிர் ஓம்ப..
    தென்புலத் தெய்வத்தின் அருளது கிட்டும்..
    துன்புள தெனினும் தெரித்து விலகும்..!

    துறவறம் பூண உருத்திராட்சை எதற்கு?
    துறவறத்திற் கென்றோர் அடையாளம் எதற்கு?
    அறநிலை வழுவாது சுற்றத்தைப் பேணல்..
    துறவறம் என்னும் நிலையினும் மேலாம்..!

    இறத்தலும் பிறத்தலும் இயற்கை எனினும்..
    துறத்தலும் ஒருவித அறமே எனினும்..
    வெறுத்தலை விட்டுப் பொறுத்து வாழ்ந்தால்..
    சிறத்தல் என்பது மாந்தர்க்கு திண்ணம்…!

    *****

    ”கடவுளைத் தேடுபவனும், உடலிச்சை தாண்டியவனும் தன் முகத்தை விடுத்துத் திறமையையே முன்னிறுத்துவான்! படத்தில் தெரியும் இந்தக் கரம் தேய்ந்துபோனதன்று! ஆய்ந்துவாழ்வோனின் அரத்தமுள்ள கையசைப்பே இது! மனிதா! உன் தனித்திறமையை அறி! வெற்றிக்கனியைப் பறி” என்று மாந்தர்க்கு நல்வழி காட்டுகின்றார் திரு. ஏ.ஆர்.முருகன்மயிலம்பாடி.

    உயிரின் சலனம்

    கடவுளைத் தேடுபவன்
    உடலிச்சை தாண்டியவன்
    எதையும் காட்டிக்கொள்ளாமல்
    எதார்த்தமாய் வாழ்கிறவன்
    இப்படித்தான் முகத்தைவிட
    திறமையை முன் நிறுத்துவான்!!
    வாழ்ந்து முடித்தவனுடைய
    தேய்ந்துபோன கரம் அல்ல!!
    ஆய்ந்து வாழ்கிறவனின்
    அர்த்தமுள்ள கையசைப்பு…
    அதிலுண்டு ஆயிரம்அர்த்தங்கள்!
    ஒவ்வொருவருவருக்குள்ளும்
    ஒளிந்துள்ளது தனித்திறமை
    வெளிக்கொண்டு வந்தால்
    வெளியுலகம் கொண்டாடும்!!
    சலனப்பட்டுச் சாய்ந்துவிட்டால்
    சரித்திரத்தில் இல்லை இடம்!
    விசனமுதறி எழுகிற போது
    விண்ணின்தூரம் பக்கமாகும்!
    ஐம்புலன்களடக்கம் கற்றால்
    அமைதிவழி மனம் இயங்கும்!!
    அனைத்தின்பமும் வசமாகும்!!

    *****

    ”விதவிதமாய் முகங்காட்ட விரும்பும் மனிதர்க்கிடையே முகத்தை மறைத்துக்கொள்ளும் விதிவிலக்குகள் வியப்பைத் தருகின்றன. மனிதனே! நீ முகங்காட்டு நல்ல மனிதனாக!” என்று அர்த்தமுள்ள அறிவுரை தருகின்றார் திரு. செண்பக ஜெகதீசன்.

    முகம் காட்டு…

    விதம்விதமாய் முகங்காட்ட
    விரும்புகிறவன் மனிதன்..

    புகைப்படம் தொடங்கி
    திரைப்படம் வரைக்கும்
    திரும்பிடும் பக்கமெல்லாம்
    மூழ்கிக் கிடக்கிறான் மனிதன்
    முகம்காட்டுதலிலேயே..

    விதிவிலக்குகள்
    வியப்பிலாழ்த்துகின்றன,
    நல்லது செய்பவன்
    விளம்பரம் பிடிக்காமல்
    முகம் மறைத்தால்,
    மேலும் உயர்த்திடும்
    மதிப்பை..

    சிலர்
    தப்பைச் செய்துவிட்டு
    தண்டனைக்குப் பயந்து
    தலைகுனிந்து
    முகங்காட்ட மறுப்பது,
    தள்ளிவிடுகிறது கீழே
    மதிப்பை..

    மனிதனே நீ
    முகத்தைக் காட்டு-
    (நல்ல) மனிதனாக…!

    *****

    சிற்றின்பப் பற்றறுத்துப் பேரின்பம் காணவிழையும் சித்தம் தெளிந்த சித்தனின் சத்தான மொழிகளைத் தன் கவிதையில் தந்திருக்கின்றார் பெருவை திரு. பார்த்தசாரதி.

    சித்தன் ஆனேன்..சித்தம் தெளிந்தேன்..!

    சற்றே யோசித்தேன் சகலத்தையு மறிந்தேன்
    ……சித்தரின் வாழ்வியல் கூறுகளைக் கற்றேன்..!
    பற்றின்மை பற்றி அறிந்தபிறகு இல்லறம்
    ……விலக்கிப் பற்றறுத்து வாழும்கலை அறிந்தேன்..!
    புற்றீசல் போல் வாழ்வில் தொடர்ந்து வரும்
    …..பிரச்சினை அண்டாத தொரு வழியறிந்தேன்..!
    தற்காலிக வாசமாக எங்கும் அலைவேன்
    ……தரையும் மணலும் தங்கும் இருப்பிடமாகும்..!

    பொற்காலம் ஒன்று உண்டென்றால் அது
    …..பொய்ம்மை நீக்கி மெய்யறியும் வாழ்வாம்..!
    முற்காலம் வாழ்ந்திருந்த முற்றும் துறந்த
    …..முனிவனும் இதைத் தானே மொழிந்தான்..!
    பற்பல வாழ்வியல் அனுபவமும் முடிவில்
    …..பற்றற்ற வாழ்வுக்கே வழி வகுக்குமன்றோ..!
    சிற்றின்பம் தானே நம்மையும் வதைக்கிறது
    …..சிறிது காலமதைத் துறக்கவும் நினைத்தேன்..!

    நடமாடும் நம்முடம்பைப் பேணிக் காக்க
    …..நல்லபல வழிகளை நவின்றார் ஆன்றோர்..!
    அடக்க ஐம்புலனைச் சித்தரிடம் கற்றேன்
    …..ஆறறிவின் பயனை அடைய வேண்டியே..!
    தடங்கலிலாது தம்பிறவி கடக்க வொரு
    …..தகும் வழியெனச் சித்தனொடு சித்தனானேன்..!
    படமெடுத்து என்னைப் பிரபல மாக்காதீர்
    …..பன்முகத்தை நான் மறைத்துக் கொள்வேன்..!

    *****

    ”வரம்பின்றிப் பேசித்திரியும் மனிதர்கள் மத்தியில், ’மோனம் என்பது ஞானவரம்பு’ என்பதை உணர்ந்த பெரியோர் வெற்றுச்சொல் பேசார். மானுடனே! நீ பகட்டும் படாடோபமும் விடுத்துத் தாய் சேய் நலம் போற்று! நாவினையும் நன்முறையில் போற்று!” என்று பொருள்செறிந்த பொன்மொழிகளைத் தன் கவிதையில் பொதிந்து தந்துள்ளார் திருமிகு. அவ்வைமகள்.

    கற்றைச்சடைமுடித்தான் பூசிட்ட வெண்ணீர்மை
    ஒற்றைக்கரமுயர அவன் காட்டுமக் குறி காணீர்
    எற்றைக்கும் பேசும் நீர் பேசார்கள் பெரியோரே
    பொற்றைக் கருங்கல் போலசையாதசைந்திடுதல்
    நீற்றைப் புனைந்த நேர்மைமேல் நேர்மையென
    அற்றை நீதிகள் தாம் கூறியதவன் காட்டுகிறான்!
    சொற்றை போதனைகள் சொலாத சொல்லதனை
    இற்றைக்கேனும் நீர் பணிந்தவோ? பணிந்தார்கள்
    சோற்றுத் துருத்தியாய் வாழ்ந்தவோ? வாழ்ந்தார்கள்
    பேற்றை நினைந்தொழுகி சிறியரெவர் பெரியரென
    பெற்றைப் படம்பிடித்தோ சென்றனர் சென்றார்கள்?
    பூற்றைப் பொடிநிகழ்வைப் பாம்பாய்ப் படமெடுத்து
    போற்றிப் பொய்யுரைத்து பகட்டு மினுமினுக்கி வீழாதே! வீழாதே!
    நேற்றைக் கதைவிடுத்து பொறை பொறாமை விட்டு
    பிற்றைக்கும் நிலைக்குமாறு நீர் செய்த ஒழுக்கென்ன?
    தேற்றையொளிக்கூர்மை மழுங்காபுத்தியென வலக்கை
    தோற்றிடினும் நீ திடங்கொள்வாய்! மடங்கொள்வாய்!
    இறைக்கை நிலைத்திருக்க உன்கர லீலைதனைப் பேராயம் செய்யாதே!
    உறைக்கைக் காதலுடன் உடல்குழைய நெக்குருகி விழிநீரால் நீ உரையாடு!
    நெற்றைப் பயிர் காத்து, மைவிடாதெழுநீல வான்போர்வை நீ போர்த்து!
    புற்றைப் புறந்தள்ளி, கர்த்தவ்யம் நீ காத்துத் தாய் போற்று! சேய் போற்று!
    சொற்றைக் குறைத்தொழுகி வாயாற் பிதற்றாது நா போற்று! தொனி போற்று!
    சோற்றைக் குறைத்தொழுகி உடலால் பிறளாது கற்பெனும் காவல் போற்று!
    கற்றை நீ கல்விதனை, எழுத்ததனை விழுமியமாய் குற்றமற வார்த்துப் போடு!

    *****

    ”பெருநோய் கொண்ட என்னைப் படமாக்கிப் பத்திரிகையில் போட்டு வருவாய் ஈட்ட முயலாதீர்!” என்று எச்சரிக்கும் மனிதரைத் தன் கவிதையில் காட்சிப்படுத்தியிருக்கின்றார் திரு. சி. ஜெயபாரதன்.

    தீண்டத் தகாதவன்

    கிழிந்த உடுப்பில் கிடக்கும்
    இழிந்த இனத்தைச்
    சேர்ந்தவன்!
    கழிப்பிடம் சுத்தம் செய்யும்
    கறுப்பி
    என் பெண்சாதி!
    மாடுகள் மேய்த்து
    காடுகளில் அலைவது
    என் மகன்!
    குப்பை வண்டி வாகனம்
    சப்பாணியின் தேர்!
    பெண்சாதிக்கு
    தினக்கூலி
    பிச்சைச் சோறு!
    குஷ்ட ரோகி நான்,
    தேமல் படந்திருக்கு
    முகத்தில்!
    படம் எடுக்க வேண்டாம்
    என்னை!
    பத்திரிகையில் முகத்தை
    வித்து உடனே,
    பணமாக்க வேண்டாம்
    சாமி!

    *****

    மனத்தைத் தொடும் மகத்தான சிந்தனைகளைத் தம் கவிதையில் பளீரிட வைத்த வித்தகக் கவிஞர்கள் அனைவருக்கும் என் மனங்கனிந்த பாராட்டும் நன்றியும்!

    இனி, இவ்வாரத்தின் சிறந்த கவிதையாய்த் தெரிவுபெற்றிருப்பது…

    பெயரிலி

    நிறத்தைப் பாரத்து முகம் சுளிக்காதே!
    எளிமையைக் கண்டு எள்ளி நகையாடாதே!
    அமைதியாக இருப்பதால் அறிவுரைகள் அடுக்காதே!
    அயலான் என்பதால் அத்துமீறிப் பேசாதே!

    நான் கேளாமலே
    எனக்கும் ஜாதிக்குறியிட்டு – உன்
    சிறுமதியின் சிறையில் சீரழிக்காதே!

    போதும் நிறுத்து!

    என்னைப் படச்சுருளில் புதைத்து விடாதே!
    நான் அடையாளம் தொலைத்தவன்…

    என்னைக் கேள்விக்கு உட்படுத்தாதே!
    நான் சுதந்திரத்தை நேசிப்பவன்
    தொல்லையின்றித் திரிபவன்
    எல்லைகள் கடந்தவன்
    அவமானங்களுக்கு அப்பாற்பட்டவன்
    அசாதாரணமானவன்!

    நீயோ சராசரி பாதசாரி,
    ஆகையால்…
    எதையும் மதிப்பிடாமல்
    சலனமின்றிக் கடந்து போ!

    தம் முகத்தைக் காட்டிப் பிறர் அகத்தைக் கவர நினைக்கும் மாந்தர்களே இந்த அவனியில் அதிகமாய்ப் பவனி வருபவர்கள். அத்தகு சராசரிகள் நடுவில் படச்சுருளில் புதையவும், சாதிக்குறிக்குள் சிக்கிச் சிதையவும் விரும்பாத அசாதாரண மனிதர் இவர் என்று இந்தப் புகைப்பட மனிதருக்குத் தனித்ததோர் தகைமையைத் தந்திருக்கும் இந்தக் கவிதையின் ஆசிரியர் திருமிகு. சக்திப்ரபா இவ்வாரத்தின் சிறந்த கவிஞர் எனும் பெருமையைப் பெறுகின்றார். அவருக்கு என் பாராட்டு!

     

     

     

    Share
  • படக்கவிதைப் போட்டி 158-இன் முடிவுகள்

    -மேகலா இராமமூர்த்தி

    ஐந்து திரிகளிட்டு அழகாய் ஏற்றிய குத்துவிளக்கின் முத்துச் சுடரொளியைத் தன் ஒளிப்படப்பெட்டிக்குள் அடக்கிவந்திருப்பவர் திரு. மோகன்தாஸ். இவ்வெழிற் படத்துக்குக் கவிதையெழுதும் வாய்ப்பை கவிஞர்கட்கு வழங்கியிருப்பவர் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி. சாந்தி மாரியப்பன். இவ்விருவருக்கும் என் நன்றி!

    ஐம்பூதங்களில் மனிதரை மருட்டும் இருட்டை விரட்டி வெளிச்சமூட்டுவது தீயெனும் ஒளியே ஆகும். கீழே இழியாது மேல்நோக்கி நிற்கும் இயல்பே அதன் தனிச்சிறப்பு எனலாம். அதுபோல் மனிதரும் எத்தகு சூழலிலும் நிலைதுவளாது தன்னம்பிக்கையின் கரம்பற்றி உரத்தோடு நிமிர்ந்திருந்தால் வெற்றிக்கனியை எட்டிப் பறிக்கலாம்!

    இனி, முத்துப்போல் எரியும் குத்துவிளக்கைத் தம் கவிதையில் ஏற்றிப் போற்றக் கவிஞர்கள் அணிவகுக்கிறார்கள்!

    ”மணல்விளக்காம் காவிரியில் நெய்யாய் நீர் வந்ததால் இதுவரை உயிர்வளர்த்தோம்; இப்போதோ தீர்ப்புகள் நமக்குத் தீராத வேதனையைத் தருவதால் நிலைகுலைந்தோம். இயற்கை ஏற்றிவைத்த காவிரி விளக்கைக் காக்கப் போராடுவோம்” என்று அறைகூவல் விடுக்கிறார் திரு. ஏ.ஆர்.முருகன்மயிலம்பாடி.

    காவிரி விளக்கு!

    இயற்கையது ஏற்றி வைத்த
    மணல் விளக்காம் காவிரியில்
    நெய்யாகநீர் நெடுக ஓடிவர
    எரிந்து வந்த வெளிச்சத்தினால்
    இதுவரைக்கும்உயிர்வளர்த்தோம்!
    இப்போது வந்த தீர்ப்பதினால்
    ஏதோ கொஞ்சம் நிம்மதியுற்றோம்!
    நந்தாசுடராக அணையாமலிருந்து
    காத்ததுபோல் இனி எப்போதும்
    தப்பாமல் காக்குமென நம்பியபின்
    மேலாண்மை அமைத்திடாமல்
    இழுத்தடிக்கும் போக்கதினால்
    ஐந்துதிரிகளிலும் பிரகாசம் தந்த
    ஐமுகத் தீவெளிச்சம் குறைகின்ற
    ஐயம் …நம்நெஞ்சில் கவலைதந்து
    போராட்டக்களம் புகுந்து விட்டோம்!!
    ஆனாலும் இதுவரைக்கும்எந்தவித
    ஆதாயமும் கிடைக்கின்ற சூழ்நிலை
    அகப்படாமல் ஆலாய்ப் பறக்கின்றோம்!
    துறைதோறும் வளர்ந்திட்டாலும்
    குறைவந்து குடிதண்ணீருக்குக்கூட
    இறைஞ்சும்நிலைஏற்பட்டிருப்பதினால்
    இனிநம் எதிர்காலம் இனித்திடுமா??
    எழுவோம்!!ஏற்றியதீபம்காப்போம்..!!!

    *****

    ”மணவிழாவில் சுடர்விடும் இந்தக் குத்துவிளக்கு, தத்துவப் பொருளாய் ஒளிசிந்தி, மணமக்களை வாழ்த்திடும் பந்தலிலே” என்கிறார் திரு. செண்பக ஜெகதீசன்.

    வாழ்த்தும் விளக்கு…

    குத்து விளக்கின் ஒளியினிலே
    கல்வி கற்ற பெரியோர்முன்,
    குத்து விளக்காம் மணமகளின்
    குடும்பம் போற்றும் மணவிழாவில்,
    தத்துவப் பொருளாய் ஒளிதந்திடும்
    தன்மை கொண்ட விளக்கதுவும்,
    நித்தம் வாழ மணமக்களை
    நிறைவாய் வாழ்த்திடும் பந்தலிலே…!

    *****

    எத்துணைப் பெரிய விழாவாக இருந்தாலும் வனிதையர் வளைகுலுங்க, முத்துச்சுடர் சிந்தும் குத்துவிளக்கினை ஏற்றாவிட்டால் ஏது சிறப்பு என்று வினவுகின்றார் பெருவை திரு. பார்த்தசாரதி.

    குத்துவிளக்கேற்றித் தொடங்கிய விழா..!

    பத்துப்பேர் கூடுமிடத்தில் பந்தலும் மேடையும்
    ……….பார்த்துப் பார்த்துப் போடப் பட்டிருக்குமாம்..!
    கொத்துக் கொத்தாய் மலர்கள் தொங்குமாம்
    ……….கூடியிருப்போரெலாம் மகிழ்ந்தே தோன்றுவர்..!
    பொத்தாம் பொதுவாக அதுவோர் விழாவாம்
    ……….பகட்டுக்கு அங்கே பஞ்சமில்லை என்றாலும்..!
    குத்துவிளக்கொன்று அங்கே ஏத்தா விட்டால்
    ……….கொண்டாட்டத் திற்கங்கே என்ன மதிப்பாம்..!

    எத்துணை விழாக்கள் அமைத்தாலும் அவை
    ……….எல்லாவற்றுக்கும் மேலே ஒருமேடை தேவை..!
    ஒத்துழைப்பு அங்கே இல்லாவிட்டால் மேடை
    ……….ஒன்றுக்கும் உதவாத செயல் போலாகிவிடும்..!
    அத்துணை பேரும் விழிவைத்துக் காக்கவே
    ……….அனைவருக்கு மொரு தலைவரும் வருவார்..!
    புத்தாடை உடுத்திய புதுத் தோரணையோடு
    ……….குத்துவிளக் கேற்றியதைத் துவக்கி வைப்பார்..!

    சித்திரப் பூப்போலேச் சிரிக்கின்ற சிங்காரிகள்
    ……….சீராக சப்தஒலி எழுப்பியே கைதட்டுவார்கள்..!
    மத்தியில் நிற்பவரைச் சுற்றிச் சூழ்ந்துகொண்டு
    ……….மலர்க் கொத்தைக் கொடுத்தபின் வாழ்த்துவர்..!
    முத்திரை பதிப்பதுபோல் அனைவரும் தம்
    ……….முத்தான வாழ்த்தை யெலாமங்கே உதிர்ப்பார்..!
    வித்தகராமவர் மனிதரில் மாணிக்க மென்றும்
    ……….வித்தியாசம் இல்லாத வரென்றும் முழங்குவர்..!

    *****

    தெண்ணீரேந்திய திரள்கால் பாத்திரம் பொலிய, கதலி இலையில் நல்லணிச் சேற்றம் நறுநாற்றம் வீச, பஞ்சுத் திரியில் எரியும் பஞ்சமுகப் பட்டொளிக் கிரணத்தின் தோற்றத்தை நம் உளங்கவரும் வகையில் எழிலாய் விவரிக்கிறார் திருமிகு. அவ்வைமகள்.

    பாத்தியன்ன தாழி ஊற்றம், கருதுகள் பொழிந்த பொன்னொளி தீர்த்தம்
    மத்தியன்ன நெடிது பாயும் பஞ்சுத் திரியின் பிணை வரிப்படிவம்
    கத்தியன்ன கூர்முனை பணிந்து நடுநாயகமாய் நல்லொளிச் சிரசம்
    சுத்தியன்ன சுடரொளி ஏற்கும் பஞ்சமுகத்தின் பட்டொளிக்கிரணம்
    ஒத்தியன்ன ஒழுங்கு செய்து நேர்த்தி விளைக்கும் நல்லுடல் தண்டம்
    நெத்தியன்ன தெங்கு சுமக்கும் பசுங்குடை வார்த்தத் தங்கக் குடலம்
    ஆத்தியன்ன வெண்ணீர்க்கலயம், மஞ்சள் சொரிந்த மற்றொரு கலயம்
    பத்தியன்ன மறைமுறைபோற்றலில் தெண்ணீரேந்திய திரள்கால் பாத்திரம்
    சத்தியன்ன ஓதனம் சாற்றும் கதலி இலையிலோர் நல்லணிச் சேற்றம்
    முத்தியன்ன முழுமுனை ஏற்றம்! மோனவரப்பில் மங்கலத் தோற்றம்!
    எத்தியன்ன அளவு அறிந்து போகம் காக்கும் நல்லெழில் போதகம்!

    *****

    தங்கநிறப் பதுமையாய்க் காட்சிநல்கும் குத்துவிளக்கில் பஞ்சுத் திரியே கலைமகள்; பரவும் ஒளியே அலைமகள், ஒளிரும் ஐந்து தீபங்களும் ஐம்புலன்கள் என்று சாத்திர விளக்கத்தை நேர்த்தியாய்ச் செப்புகிறார் திரு. ஆ. செந்தில் குமார். 

    குத்துவிளக்கெனும் இறைவடிவம்…

    தங்கநிறப் பதுமையென விளங்குகின்ற விளக்கு..
    மங்களங்கள் நிறைவேறச் செய்கின்ற விளக்கு..
    எங்கும் நிறைந்திருக்கும் பரம்பொருளின் வடிவாய்..
    மங்கையர் பூச்சொரிந்து வழிபடுகின்ற விளக்கு…!

    அங்கத்தின் உச்சியில் கலசமொன் றிருக்கும்..
    அகல்போன்ற அமைப்பில் ஐந்துமுகம் இருக்கும்..
    அடிபாகப்பீடம் அலர்ந்த தாமரை போன்றிருக்கும்…
    அழகிய வோர் தண்டு இவையிரண்டையும் இணைக்கும்…!

    அடியிடைநுனியெனும் பாகங்கள் முத்தொழில் புரிந்திடும் தேவர்கள்..
    அகலெனும் அமைப்பின் தீபங்கள் நமதுடற்கூறின் ஐம்புலன்கள்..
    பஞ்சுத்திரியே கலைமகளாம் பரவுமொளியே அலைமகளாம்..
    நெஞ்சத்தினுள்ளே ஒளிவடிவாய் இருக்குமுருவே இத்திருவிளக்காம்…!

    *****

    விளக்கை வைத்து நல்ல தத்துவ விளக்கங்களை, அதன் வாழ்வியல் பயன்பாடுகளைச் சத்தான கவிதைகளாய் வடித்துத் தந்திருக்கும் வித்தகக் கவிஞர்களை மெத்தப் பாராட்டுகின்றேன்.

    இவ்வாரத்தின் சிறந்த கவிதையாய்த் தெரிவாகியிருப்பது இனி…

    தீபம்

    ஆதியும் அந்தமும்
     காணவியலா ஒளிப்பிழம்பினுள்
    ஆண்டவனும் ஆதவனும்,
    அவனி மாந்தரின் அறியாமை இருளகற்றும் ஒளியாக
    அவதாரமும் ஆன்றோரும்,
    புறஉலகை அறியும் காட்சியும் ஜோதியாலே…….
    அகவுணர்வின் தரிசனமும் ஜோதியாலே………
    விளக்கின் ஒளியில் பேதமில்லை
    விளக்கம் புரிந்தால் மோதலில்லை
    எந்த வடிவ விளக்கானாலும்
    நெய்யும் திரியும் இணைந்தே ஒளிரும்
    ஒருமித்த நிலையில் ஒளிரும் ஜோதி
    நீ அறியவே விளக்கிடும் விளக்கு,
    வடிவத்தில் இல்லை ஒளியின் கூர்மை
    வைக்கும் இடத்திலும் இல்லை ஒளியின் கூர்மை
    ஏற்றும் கரத்திலும் இல்லை ஒளியின் கூர்மை
    ஏற்றத்தாழ்விலாமை போதிப்பதே ஒளியின் மேன்மை,
    ஐந்து முகமும் ஒளியின் தீட்சண்யம்
    ஐந்தின் ஒளியேற்றலில் சாத்திர விதிகளாம்,
    ஒன்றாம் முகத்தில் நினைத்த காரியம் கைகூடுமாம்
    இரண்டாம் முகத்தில் குடும்ப ஒற்றுமை ஓங்குமாம்
    மூன்றாம் முகத்தில் புத்திர விருத்தி கிட்டுமாம்
    நான்காம் முகத்தில் சர்வபீடை நிவர்த்தியாம்
    ஐந்தாம் முகத்தில் ஐஸ்வர்யம் கூட, சகலமும் கை கூட
    சாத்திர சூத்திரம் ஒளியின் பலனை ஓதுவது போல
    ஐம்புலனையும் ஆறாம் அறிவால் ஒளியூட்டிடு
    ஒவ்வொரு புலனும் இருண்மை கிழிக்கட்டும்
    ஒளியாய்ப் புலனைப் பட்டை தீட்டிடு
    உன்னுள் எரியும் உள்ளொளி கண்டிடு
    ஆன்ம தரினத்தால் அமைதி கொண்டிடு!

    ஆதியும் அந்தமுமிலாச் சோதிப் பிழம்பாய்த் திகழும் அந்த ஆண்டவனும் ஆதவனும்போல, அகிலத்து மாந்தரின் அறியாமை இருளகற்றும் அறிவொளியாய்த் திகழ்வோர் அவதாரங்களும் சான்றோரும். எங்கும் பேதமின்றி ஒளி பரப்பும் விளக்கு, அனைவரும் சமம் எனும் அரிய உண்மையை அவனிக்கு விளக்கி நிற்கின்றது.

    ஐந்து முகங்களிலும் ஒளிசிந்தும் இவ்விளக்கைப்போல் நாமும் ஐம்புலன்களிலும் அறிவு கொளுத்தி ஆன்ம சோதியைக் கண்டிடவேண்டும் என்று உள்ளொளி பெருக்க உபாயம் சொல்லிடும் இக்கவிதையை இயற்றிய திருமிகு. மா. பத்ம பிரியா இவ்வாரத்தின் சிறந்த கவிஞர் எனும் பெருமையைப் பெறுகிறார். அவருக்கு என் பாராட்டு!

     

     

     

     

    Share
  • படக்கவிதைப் போட்டி (159)

     

    பவள சங்கரி

     

    அன்பிற்கினிய நண்பர்களே!

    வணக்கம். கண்ணையும் கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்?


    லோகேஷ் எடுத்த இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள். இதனை நம் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி சாந்தி மாரியப்பன் தேர்ந்தெடுத்து அளித்துள்ளார்.

    இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை, 24 வரிகளுக்குள், நல்ல தலைப்புடன் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனைக் கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் சனிக்கிழமை (05.05.2018) வரை உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர்குழு உறுப்பினரும் தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான திருமதி மேகலா இராமமூர்த்தி தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பலமுறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு, ஏற்கனவே சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப் பெற்றவர்களுக்கும் உண்டு.

    ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி இது; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்குபெற அழைக்கிறோம்.

    போட்டியின் நடுவரான திருமதி மேகலா இராமமூர்த்தி புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்தவர். கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்ற இவர், அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009, 2014, 2016ஆம் ஆண்டுகளின் (ஆர்லாண்டோ, அட்லாண்டா & மிசௌரி) கவியரங்கம், இலக்கிய வினாடிவினா நிகழ்ச்சிகளில் பங்கேற்றுப் பாராட்டுகளும் பரிசுகளும் பெற்றுள்ளவர். சங்கப் பாடல்களில் அதிக ஆர்வமும், இலக்கியக் கூட்டங்களிலும், பட்டிமன்றங்களிலும் சுவைபடப் பேசுவதில் வல்லமையும் பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடைபவளம்

    Share