-மேகலா இராமமூர்த்தி

திருமிகு. நித்தி ஆனந்தின் கை வண்ணத்தில் காணக்கிடைக்கும் புகைப்படம் இது! மாடும் மங்கையும் இணைந்து நடமாடும் காட்சி கண்ணுக்கும் கருத்துக்கும் கவினைத் தருகின்றது. இந்தப் படத்தைப் படக்கவிதைப்போட்டிக்குத் தேர்ந்தெடுத்துத் தந்தவர் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி. சாந்தி மாரியப்பன். புகைப்படக் கலைஞர், தேர்வாளர் இருவருக்கும் என் நன்றி!

மாடே செல்வம் என்று மக்கள் வாழ்ந்த காலமொன்றிருந்தது. பின்பு நகரமயமாதலின் விளைவால் விவசாயமும் மாடுவளர்ப்பும் கிராமப்புறத் தொழில்களாய்த் தேங்கிப் போயின. இன்றோ… மாட்டை வைத்துப் பாடுபடுவதும் பராமரிப்பதும் வெகுசிலரே!

”ஆகாத் தோம்பி ஆப்பய னளிக்கும் கோவலர் வாழ்க்கை ஓர் கொடும்பாடில்லை” என்று ஆநிரை காக்கும் கோவலர் வாழ்வைப் புகழ்வார் இளங்கோவடிகள். அதுபோல் ஆவொடு செல்லும் ஆரணங்கைப் போற்றிடப் பாவொடு வருக எனக் கவிஞர் பெருமக்களைக் கனிவோடு அழைக்கிறேன். 

*****

வைக்கோற் பிரியென வறள்முடி ஊசலாட, செருப்பில்லா வெறும் பாதத்தோடும் வெறுப்பில்லா கால்நடை நேசத்தோடும் செல்லும் இப்பெண்ணின் தோழமை கண்டு நெஞ்சு நெகிழ்கின்றார் திருமிகு. அவ்வைமகள்.

விசித்தவொன்றெனப் பூட்டிய கயிறு
அசித்தையேறா சித்திநன்றிருந்தும்
வசித்தவாறே வசப்படும் விலங்கு
தசித்தவாறே அது அசைபோட்டயரும்!
நாசினிகளின் அங்குலப் (போ)பார்வை
பசிக்கு என் போகம் நீ என்றாள்
துசிவெறியிம்சையில் இசியும் நல்தேகம்
தூசி நீயென சொற்செயல் ரோதனை
ஊசித்தைதனம்; பாலியலிடுக்கண்
உசித்தம் வாலைப் பசுவெனப் பகர்ந்து
பூசித்தவாறே புசிக்கும் மும்மாமிசம்
ருசித்து ருசித்து ருசுவேறியதால்
ரசித்து ரசித்து ரணகள வன்முறை
ஏசித்து வேசித்து தொழுவினம் தாழ்முறை!
பிரசித்துக் கன்னிகை பசுபதிபாச முழக்கு
நிசித்தபடியே திருமகள் பசுவதை வழக்கு
ஒசித்துப்போட்ட அவளாசைகள் ஆயிரம்
மசித்துமசித்து விழுங்கிய பதினாயிரம்
முசித்த நெல்லின் வைக்கோற்பிரியென
திசித்த அவள் குஞ்சத்து வறள்முடி ஊசல்
கசித்தவாறே அவளெடுத்த வெறும்பாதம்
பிசித்தமனதுடன் கால்நடைப்பா(ர்)வை
ஓசித்து ஓசித்து உள்ளுள் உதிர மகோசம்
ரோசித்துச் சேர்ந்த இத்தோழமை நெகிழுதே!

*****

தன் இன்னொரு கவிதையில் காமதேனுவாய்த் திகழும் பசுவின்  வள்ளன்மையை, அதன் தெய்வத்தன்மையைப் பாங்குறப் பேசியிருக்கிறார் அவர்.

மடியில் தனம் புடைக்கும் காம்பில் வகிர்ந்தளிக்கும்
முடியில் கொப்புடைக்கும் காலில் பிள்ளை விளையாடும்
கெடிவாலைத்தெய்வமென்பர் உணர்வில் வசப்படுமே
துடி நங்கை காமதேனு வெனவோது.

*****

”பள்ளிசெலினும் பசுவை மறவாத உன் அன்பும் அருட்பண்பும் உன் வாழ்வில் ஏற்றத்தைத் தரும் பெண்ணே!” என்று இச்சிறுமியை வாழ்த்துகிறார் திரு. செண்பக ஜெகதீசன்.

பெண்ணே பெண்ணே…

பள்ளிசெலினும் பசுமாட்டை மறவாப் பெண்ணே
பண்பிதுதான் பேர்சொல்ல வைக்கும் உன்னை,
உள்ளம்நிறை அன்புடைய பசுவைப் பேணல்
உன்வாழ்வின் வழிகாட்டி யாவதைப் பாராய்,
கள்ளமில்லை கபடமில்லை கன்றுக் கூட்டும்
கருணையது உன்வாழ்வின் வழியைக் காட்டும்,
எள்ளளவும் வெறுப்பின்றி இதையே செய்வாய்
ஏற்றமுந்தன் வாழ்விலுண்டு காண்நீ பெண்ணே…!

*****

”ஆறறிவு மனிதனை நம்புவதினும் ஐந்தறிவு மிருகங்களை நம்புவது நன்மை பயக்கும். கிடேரியை ஓட்டிச்செல்லும் பெண்ணே! விரைவில் இந்தப் பசுவும் கன்றுதந்து உன்னைப் புரக்கும் கண்ணே!” என்று நல்வார்த்தை நவில்கின்றார் திரு. ரா. பார்த்தசாரதி.

பெண் பிள்ளையும், பெண் கன்றும்!

விவசாயத்தின் இன்றியமையாத பிராணிகள் எருதும் பசுவும்
விவசாயியின் பெண்ணே தன் இளம் கிடேரிக் கன்றை அழைத்துச் செல்கிறாள்!
அவள் பச்சை நிறச் சீருடையுடன் பச்சைப் புல்மேய கூட்டிச் செல்கிறாள்!
எதிர்காலத்தில் கன்றுஈந்து நன்மை பயக்கும் என எண்ணிச் செல்கிறாள்!
அது அவளுக்கும் நடைப்பயிற்சி, கூட வரும் கிடேரிக்கோ மேய்வதற்கு முயற்சி!
போறாளே போறாளே பள்ளிக்கூடப் பெண் மேய்க்கப் போறாளே!
அக் கிடேரி எதிர்காலத்தில் பால்தருமே என நினைந்து ஓட்டிக்கொண்டு செல்கிறாளே!
மனிதனை நம்புவதைவிட ஐந்தறிவுப் பிராணியை நம்பலாமே!
நாயும், பசுவும் செய்ந்நன்றிக்கு என்றும் ஓர் உதாரணமே!
இன்னும் ஓராண்டில் பசுவும் கன்றுமாய் அழகாய்க் காட்சியளிக்குமே!
ஒளிமயமான எதிர்காலம் என் உள்ளத்தில் நிறைந்து தோன்றுமே!

*****

”யாவர்க்குமாம் பசுவுக்கொரு வாயுறை” என்றார் புரட்சிச் சித்தர் திருமூலர். தலைமுதல் வால்வரை தெய்வத்தன்மை நிறைந்த பசுவிலிருந்து கிடைக்கும் அனைத்துப் பொருள்களுமே மனிதர்க்குப் பயனளிப்பவை. கால்நடை அபிவிருத்தியால் வீட்டிலே நிறையுமே பொருள்விருத்தி” என்கிறார் பெருவை திரு. பார்த்தசாரதி.

ஆய்க்குலப் பெண்ணும் ஆநிரையும்..!

திருமூர்த்தி மூவரின் தெய்வத் தன்மையை
……….தன்னுள் கொண்டுள்ள தெய்வீகப் பசுவாம்..!
திருப்பணிகள் நடக்கு மிடத்தில் தர்மத்தின்
……….உருவாய் உனக்கு உண்டு முதல்மரியாதை..!
திருமூலரும் சொன்னார் அறம் வளர்க்கவே
……….அருகம்புல் கொடுங்கள் பசுவுக் கென்றார்..!
திருக் கோவிலுள் தெய்வத்திற் கிணையாக
……….திருமகளாம் பசுவுக்கு மங்கே இடமுண்டு..!

வசுதேவன் மகனால் பசுவுக்குப் புகழதன்
……….வால்முதல் தலைவரையில் தெய்வீக முண்டு..!
பசுவென்றால் பெண்பாலே!அது கொடுக்கும்
……….பெருங் கொடையதுவாம் பாலும் நெய்யும்..!
அசுத்தத்தைச் சுத்தமாக்கும் அதன் சாணம்
……….அது கழிக்கும் சிறுநீரும் அருமருந்தாகும்..!
விசுவாசம் கொண்டே அதனை வளர்ப்பார்
……….வீட்டில் அதுவுமொரு செல்லப் பிராணியே..!

மாநிலம் தழைக்க மாடுகன்றைக் காக்கவும்
……….மகத்தான திட்டமொன்றை வகுக்க வேணும்..!
ஆநிரை அழித்தலைத் தடுத்திட நீங்களும்
……….அறிவுப் பூர்வமாய்ச் சிந்தித்திடல் வேணும்..!
கைநிறையப் பொருளீட்ட ஒரு வகையில்
……….கால்நடை அபிவிருத்தியும் மிக வேணும்..!
ஆநிரை மேய்க்கப் போகுமிளம் பெண்ணே
……….ஆய்ச்சிய ராவதற்கு ஆனாயனருள் வேணும்..!

*****

பசுவும் பாவையும் நம் கவிஞர்தம் உள்ளத்துள் நுழைந்து, நல்ல கவிதைகளை வெளிக்கொணர்ந்திருக்கின்றார்கள். அவர்களுக்குப் பாராட்டுக்கள்!

இனி இவ்வாரத்தின் சிறப்புக்குரிய கவிதையாய்த் தெரிவாகியிருப்பது…

கனவின் நிதர்சனம்!!

மருத்துவர்..பொறியாளர்..
மகத்துவப் படிப்புக்கள் என
மாரடிக்கும் நவீன காலத்தில்
மாடுவளர்ப்பும் விவசாயமும்
மாண்புமிக்கவை என்பதை
மாணவியின் நிமிர்ந்த நடை
மனிதருக்குணர்த்துகிறது!!
மட்டில்லாப் படிப்பினிடையே
மாலைதோறும் கிடாரியோடு
மாறாத அன்பைப்பொழிந்து
மற்றவர்க்கு உதாரணமாய்
மகிழ்விக்கும் பெண்பிள்ளை
மதியாலே விதி வெல்லும்
மார்க்கமதை அறிந்தவரே!!
மண்வாசம் மறந்துவிட்டால்
மற்றெதுவில் வளர்ந்தாலும்
மறுமலர்ச்சி கிடைத்திடுமா??
மழலையைப்போல் கால்நடை
மவுனமாய்க் குலம் காக்கும்…
மாயவனின் கோத்திரமுதித்த
மடிப்பால் பசு வளர்த்திட்டால்
மனை வளரும்…நம் மரபுயரும்!
மங்காத செல்வம் தங்கும்!
மக்களுக்கு வளம் பெருகும்!!

”மருத்துவர், பொறியாளர் படிப்புக்களுக்காக மல்லாடும் மாணாக்கர் மத்தியில், மாடு வளர்ப்பை மகிழ்வோடு நாடிநிற்கும் இந்தச் சிறுமி, பெருமைக்குரியவளே! மடியின்றித் (சோம்பல்) தன் மடியில் பால்சுரக்கும் பசுவினைப் பாசத்தோடு வளர்த்தால் மனை உயரும்; நம் மரபுயரும்; மாங்காத செல்வம் தங்கும்” எனும் பொருள்செறிந்த வார்த்தைகளைத் தன் கவிதையில் பொதிந்து தந்திருக்கும் திரு. ஏ.ஆர். முருகன் மயிலம்பாடி இவ்வாரத்தின் சிறந்த கவிஞராய்த் தெரிவுபெறுகின்றார். அவருக்கு என் பாராட்டு!

 

 

Leave a Reply

Your email address will not be published.