அன்பிற்கினிய நண்பர்களே!

வணக்கம். கண்ணையும் கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்?

வெங்கட்ராமன், எம். எடுத்த இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள். இதனை நம் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி சாந்தி மாரியப்பன் தேர்ந்தெடுத்து அளித்துள்ளார்.

இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை, 24 வரிகளுக்குள், நல்ல தலைப்புடன் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் சனிக்கிழமை (19.05.2018) வரை உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர்குழு உறுப்பினரும் தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான திருமதி மேகலா இராமமூர்த்தி தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பலமுறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு, ஏற்கனவே சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப் பெற்றவர்களுக்கும் உண்டு.

ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி இது; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்குபெற அழைக்கிறோம்.

போட்டியின் நடுவரான திருமதி மேகலா இராமமூர்த்தி புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்தவர். கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்ற இவர், அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009, 2014, 2016ஆம் ஆண்டுகளின் (ஆர்லாண்டோ, அட்லாண்டா & மிசௌரி) கவியரங்கம், இலக்கிய வினாடிவினா நிகழ்ச்சிகளில் பங்கேற்றுப் பாராட்டுகளும் பரிசுகளும் பெற்றுள்ளவர். சங்கப் பாடல்களில் அதிக ஆர்வமும், இலக்கியக் கூட்டங்களிலும், பட்டிமன்றங்களிலும் சுவைபடப் பேசுவதில் வல்லமையும் பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடை பவளம்

பதிவாசிரியரைப் பற்றி

9 thoughts on “படக்கவிதைப் போட்டி (161)

  1. பாட்டாளிகளே பலம்!!!!
    ====================
    எட்டாத தூரமந்த இமயமலை _ அதை
    கிட்டால கொண்டுவர தொடர்ந்துஉழை!
    பட்டாளத்தார்பணியில்நாட்டின்எல்லை
    கெட்டியாயிருப்பதினால்ஏதுதொல்லை!
    வெட்டி முறித்தபின்பு கரம் விரித்தால்
    கொட்டிக்கிடக்கிறது கமல வண்ணம்!!
    சட்டங்களைப்போடுகிற அரசாங்கமும்
    சிட்டாயாயுழைப்போரால் பேறுபெரும்!
    விட்டாத்திரும்பிடாத நேரங்காலத்தை
    முட்டாளாயில்லாமல்செயலாற்றினால்
    துட்டு ஏராளம் சம்பாத்தியம் பெற்று
    இட்டு நிரப்பிடலாம் இல்லச் சுமையை!!
    எட்டும் அறிவினில்ஆணும்பெண்ணும்
    கூட்டாயியங்கையிலேவெற்றிபெறலாம்!
    காட்டைவெட்டி நிலமாக்கிப்பயிரிடுவோர்!
    ராட்டைநூத்துத்தறியாலேநெய்திடுவோர்!
    போட்டிபோட்டுத்தொழிற்சாலை தோறும்
    ஈட்டுகிற பொருள்களைஅள்ளி வழங்கி
    நாட்டுக்குவளம்தரும்தொழிலாளிகள்!!
    டாட்டா பிர்லாக்கள் நிறையப் பேர்கள்
    பாட்டாளிக்கூட்டத்தால்உருவாகுவார்!!
    ஓட்டாண்டி இல்லாத உலகமைப்போம்
    வீட்டுக்குவீடுஉழைப்பாலுயர்வோம்!!!
    சூட்டிடுவோம்மகிழ்வினைமக்களுக்கே!
    ==================================
    ஏ.ஆர்.முருகன்மயிலம்பாடி…
    பவானி…ஈரோடு….
    9442637264….
    ==================================

  2. வெற்றியின் வேதம்

    முடிவதில்லை எதுவும் முயலாமல் தன்னாலே
    முடியாததில்லை எதுவும் முயன்றாலே
    முடியுமென்று முன்னேறு – உன்னாலே
    முடிந்து உடையும் தடைகள் பல பின்னாலே

    கடமையை மட்டும் செய் கவனமாய்
    கடுமையின் கொடுமைகள் கட்டளையிடும்
    கடைசி வாய்ப்பாயினும் கைவிட்டுவிடாதே
    கடினமாய் போராடி வாழ்வை உனதாக்கி உயர்வு கொள்

    வெம்மை காட்டும் சுடு பொழுதில் உடல்
    வெளியேற்றிய உப்புக்கரிக்கும் வியர்வைக்கிடையில்
    வளைந்த முதுகின் வலிமையால்
    விளைந்த வெற்றியே உழைப்பின் பெருமை

    காடு மலை மேடு எல்லாம் உன்
    கடும் உழைப்பால் காட்சிபெறும்
    கழனியாய், காய் கனி விளையும் சோலையாய்
    காலம் கடந்தும் நிற்கும் உன் உழைப்பு வெற்றி மாலையாய்

    நெம்பு கோல் தத்துவமே வாழ்க்கை
    தெம்பு கொண்டு எழுந்து நட நம்பிக்கையோடு
    நம்பு நீ ஒரு நெருப்பு கோள் – சிற்றுளி
    அம்புகள் பிழக்கும் பெருமலை பாறைகள் ஏராளம்

    உழைத்துக் களை உடல் இளைக்க உழை யாருக்கும்
    சளைத்தவனல்ல நீ – உன்னால் முடியாது என்றதை எல்லாம்
    விளைவித்து காட்டு என்னாலும் முடியும் என்று -ஓங்கி உயர்ந்த
    உழைப்பாளர் சிலை போதிக்குமே உனக்கு வெற்றியின் வேதத்தை

    சு.பாஸ்கரன்
    22-ஒலப்பாளையம்
    புன்னம் சத்திரம் அஞ்சல்
    கரூர் மாவட்டம்- 639136
    9789739679, 8903292398
    http://noyyal.blogspot.in/

  3. உழைக்கும் கரங்கள்…

    உழைக்கும் கரங்களை உழைக்கவிடு
    உதவிக் கரங்களாய்ச் சேர்ந்துவிடு,
    மழையைத் தந்திடும் மேகம்போல்
    மன்பதை காத்திடும் கரங்களவை,
    உழைப்பைச் சுரண்டிடும் கூட்டத்தினர்
    உண்மை நிலையைக் காட்டிவிடு,
    உழைப்பவர் குரலதை மதித்திருந்தால்
    ஊழல் உலகினில் வாராதே…!

    செண்பக ஜெகதீசன்…

  4. பெயர்த்துப்போடு புரட்டிப்போடு புரட்டியதை வகுத்துப்போடு
    வகுத்துப்போட்டதத்தனையும் வாரிவாரி நிரவிப்போடு – நீ
    மேடறுத்து சமனம் நாட்டு! மேடறுத்து சமனம் நாட்டு!

    வீழ்ந்தவற்றை நிமிர்த்திப்போடு நிமிர்ந்தவற்றை பதித்துப்போடு
    பதிப்புகளை மாற்றியாக்கி ஏழை மதிப்புயர வாய்ப்பு சேரு – நீ
    வாய்ப்புரட்டை வெட்டிப்போடு! வாய்ப்புரட்டை வெட்டிப்போடு!

    தளங்கள் போட்டு களங்கள் கூட்டு களங்களிலே மக்கள் கூட்டு
    கூட்டம் போட்டு அத்தனைக்கும் காட்டமான திட்டம்போடு – நீ
    திட்டங்களை முழுச் செயலிலாக்கு! திட்டங்களை முழுச் செயலிலாக்கு!

    உழைப்பவர்க்கு ஊதியத்தை உண்மையாக வழங்கலாக்கு
    வழங்கலிலே ஊழல் செய்யும் திருடர்களைத் தட்டிக்கேளு – நீ
    தட்டும் தடைகள் இடித்துப்போடு! தட்டும் தடைகள் இடித்துப்போடு!

    வாட்டம் போக்கு கட்டம் போக்கு வேலைவாய்ப்பு பெருகலாக்கு
    பெருத்தப் பணமுதலைகளை, ஈனர்களை வளைத்து வீழ்த்து – நீ
    வீழ்த்தும் சூழ்ச்சிவலை சுருட்டி வீசு! வீழ்த்தும் சூழ்ச்சிவலை சுருட்டி வீசு!

    அரசியலைப் புரட்டிப்போட்டு புரட்டி அதை நிறுத்திப்போடு
    நிறுத்திப்போட்டு உழைக்கும் வர்க்கம் ஆளுமாறு மாற்றிப்போடு -நீ
    ஆளவந்தார் உழைக்கக் கோரு! ஆளவந்தார் உழைக்கக் கோரு!

    எஃகு உடல் வைரமனம் மானுடர்க்கு நல்பாடம் காட்டு
    காட்டுமாறு கட்டுடலை வாட்டமாக வளர்க்கக்காட்டு – நீ
    வளர் நலவாழ்வை வளமையாக்கு! வளர் நலவாழ்வை வளமையாக்கு!

    பாறைகாத்து தரையைக் காத்து, மேகம் காத்து, மாரி காத்து
    மாரிசேரும் நீர் நிலைகள் காத்து – நீ
    காத்துத் தூய்மை பாதுகாப்பு சேரு! காத்துத் தூய்மை பாதுகாப்பு சேரு!

  5. உழைப்பின்றி இல்லை உயர்வு..!
    =============================

    சூழ்ந்திருக்குது நம்மைச் சுற்றி வட்டமாய்
    ……சூழ்ச்சி வலைகளெங்கும் சிதறிக் கிடக்குது..!
    வாழ் வனைத்தும் துன்பங்கள் வினைகள்
    ……வஞ்சனை நிறைந்த வழியாகவே தெரியுது..!
    ஊழ்வினை இதெல்லாம் என்று நினையாது
    ……உடலுழைப்பால் உயரும் வகை அறிவீர்..!
    ஏழ்பிறப்பும் மனிதனாய்ப் பிறந்து வாழ்வில்
    ……ஏற்றமுற நித்தமுமே உழைக்கமுன் வருவீர்..!

    இரும்புக் கரங்களால் உழைத்து உருவாகி
    ……எழுந்து நிற்கிறது விண்முட்டும் கோபுரம்..!
    இருநூறடிக்கு மேல் எண்பதாயிரம் கிலோ
    ……எடையை உழைப்பிலே காணும் அதிசயம்..!
    அரும் பெரும் உழைப்பால் உருவானது
    ……ஆயிர மாண்டாக அதிசயமாய்த் திகழ்கிறது..!
    பெரு வுடையார் கோவிலின் புகழாலதற்கு
    ……பெரிதாய் உழைத்த வரின்றும் வாழ்கிறார்..!

    எல்லாமிங்கே இனாமாகக் கிட்டும் போது
    ……எதற் குழைக்க வேணுமென எண்ணாதே..!
    புல்லர்களின் பயனற்ற பேச்சில் மயங்கி
    ……பொன்னான வாழ்வையும் நீஇழந் திடாதே..!
    பொல்லாப்பு யாரிடமும் வேணாம் தம்பி
    ……பொறுப்பாக நடந்து கொள்ள முயலுவாய்..!
    நல்லொழுக்கம் ஒன்றுதான் நாமுயற வழி
    ……நாட்டில் இன்றிது முக்கியத் தேவையப்பா..!

  6. பாட்டாளி மக்கள்

    நான்கு பேர் சேர்ந்து கல்லை நகர்த்துவது

    நம் மனதில் அவன் படும் துன்பத்தை காண்கின்றோம்

    மூச்சைப் பிடித்து கல்லை நகர்த்துவதும் மிக கஷ்டம்

    நான்காம் நெம்பு கோல் கொண்டு நிமிர்த்துவதும் தெரிகின்றதே

    அவன் உழைப்பை உறிஞ்ச சமுதாயமும் சற்றே நினைப்பதில்லை

    உழைப்பிற்கேற்ற ஊதியமும் அவன் என்றும் பெறுவதில்லை

    பாட்டாளி உழைப்பே முதலாளியின் உயர்வு

    பணத்தாலே உழைப்பை உறிஞ்சும் ஒரு கூட்டம்

    படிப்பு அறிவில்லாத பாட்டாளி என்றும்

    நேரம் காலமின்றி கடுமையாக உழைக்கின்ற கூட்டம்

    உழைத்தால்தான் ஊதியம் பெறமுடியும்
    உழைப்பாளியின் வேர்வைக்கு என்ன பலன்

    படிப்பு அறிவில்லாத பாட்டாளி என்றும்

    நேரம் காலமின்றி கடுமையாக உழைக்கின்றான்

    படித்தவன் கணினியில் வேலை செய்து

    இரவு பகல் பாராமல் உழைக்கின்றான்.

    அறிவுத்திறன் கொண்டு உழைப்பவனுக்கு ஊதியம் அதிகம்
    உடல் உழைப்பை கொண்டு உழைப்பவனுக்கோ ஊதியம் குறைவு

    இமயமலைப் பனி மலையில் நின்று

    அயல்நாட்டு ஊடுருவளை தடுத்து நிறுத்தும்
    பட்டாளத்து பாட்டாளி மக்களையும் நினைவு கொள்ளுங்கள்

    நம் பசியை தீர்க்கும் விவசாயும் ஒரு பாட்டாளிதான்
    அவன் அருமை தெரியாமல் நசுக்க முற்படுவதும் அரசுதான் !

    உழைக்கும் கரங்களே, உரிமைக்கு குரல் கொடுங்கள்
    அடக்குவோரை எதிர்த்து நின்று வெற்றி வாகை சூடுங்கள் ~

    ரா.பார்த்தசாரதி

  7. தடைகல் த‌டைகளை புறம் சாய்ப்போம் – அது
    சாயாதிடின் உடைத்தெறிப்போம்
    உடைகல் உடைகளை உடன் கிழித்தால் – அது
    கரையும் வரைவியர்த்துழைப்போம்

    கரிகள் பூசி நமை சேர்ப்பார் – பெரும்
    வரிகள் விதித்து நலம் கேட்பார்
    நரிக ளாளும் இந்த நாட்டில் – எங்கு
    நியாயம் தர்மங்களைப் பார்ப்பார்
    உழைக்கும் சிலையதற்கு மாலை பின்னர்
    ஊழல் அணிவகுப்பில் சாலை
    விதிக்கும் விதிசெய்த தேசம் – இன்று
    விக்கி திணறுகிற மோசம்

    வானங் கறுக்கவில்லை வறட்சி – சிலர்
    மனதில் கற்பழிக்கும் உணர்ச்சி
    கறுப்பு பணக்குவியல் வளர்ச்சி அதை
    காட்டி நடந்தும் இவர் புரட்சி
    தனக்கு தேவை வருமானம் அதை
    மடக்கி பிடுங்கும் அவமானம்
    கிடைத்த பேர்க்கு வெகுமானம் – அது
    கிட்டாவிடின் ஏது பிரமாணம்

  8. ஏர் முனைக்கு நேரில்லை

    சி. ஜெயபாரதன், கனடா

    அங்கிங்கு எனாதபடி எங்குநாம்
    நோக்கி தொழிற்துறைச்
    சாதனங்களை
    சீர்தூக்கிப் பார்த்தால்
    ஏர் முனைக்கு நேராக
    எதுவுமே இல்லே !
    வேளாண்மை இல்லையேல்
    வாழ்வே இல்லை
    தலை அறுக்கும் கூரிய
    வாளை எல்லாம் நெளித்து
    ஏர் முனை ஆக்கு !
    வேலை எல்லாம் வளைத்து
    ஏர் முனை ஆக்கு !
    மடிவெடி தட்டி அப்பாவிக்
    குடிகளைத் துண்டாக்கும்
    மூர்க்கரைப் பற்றிச் சிறையில்
    சேர்க்காது,
    ஏர் முனை பிடித்து, நிலம்
    உழுது பயிரிட்டு
    உயிர்களை வளர்க்கும்,
    கனிவு மனிதராய் ஆக்கு !
    இனிமேல் அதுவே
    பணி நமக்கு ! பாசம் நமக்கு 1
    பாதை நமக்கு !

    +++++++++

  9. ஏஏய்———! ய்—–ஏஏய் –! ம்ம்ம்ம்ம்!
    இன்னும் போடு! வலிடா! இசுடா! டேய் நிறுத்து!

    உழைப்பின் கானம் உதிர கானம்
    வேர்வை ஊற்றம் நாற்றம் பாடுது
    பாரம் தூக்குமவர் கானம்தானே
    பாரைக்கூட நகர்த்தி இயக்குது

    உடலின் உரமும் மனதின் பலமும்
    இணைந்தசைந்திசைந்தோர் அபிநயம்
    எலும்பு தசை நரம்பு சிரைதமனி
    புருவ கண்நெளிவின் சுருதிலயம்

    நெம்புகோல்கள் நெட்டித்தள்ள
    அவர் மூச்சு சுவாசம் தேங்குது
    விலாக்குள்ளே முணுக்குமிதயம்
    நொடித்தவாறுயிரும் சேர்ந்தியங்குது

    பெரும்பாறையங்கே பணியுது
    பெருங்கடலும் கைதட்டி மகிழுது
    சேர்ந்தியக்கும் அவர் தவநிலையை
    கருடன் சேர்ந்து வந்து வணங்குது

    அமர்ந்தவாறு பணமுதலையங்கே
    பல குட்டிபோட்டு பெருக்குது
    சிம்மாட்டு கோவணாண்டியாக இவர்
    மறைவர் நீதியெங்கிருக்குது?

    உழைப்பு மட்டும் மூலதனம்
    உடைக்கலமாய்ப் போகவிடுவதா?
    உழைக்கும் மாந்தர் வாழ்வினிக்க
    மேலும் பெருக்கிடுவோம் உதவிகள்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *