-மேகலா இராமமூர்த்தி

ஐந்து திரிகளிட்டு அழகாய் ஏற்றிய குத்துவிளக்கின் முத்துச் சுடரொளியைத் தன் ஒளிப்படப்பெட்டிக்குள் அடக்கிவந்திருப்பவர் திரு. மோகன்தாஸ். இவ்வெழிற் படத்துக்குக் கவிதையெழுதும் வாய்ப்பை கவிஞர்கட்கு வழங்கியிருப்பவர் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி. சாந்தி மாரியப்பன். இவ்விருவருக்கும் என் நன்றி!

ஐம்பூதங்களில் மனிதரை மருட்டும் இருட்டை விரட்டி வெளிச்சமூட்டுவது தீயெனும் ஒளியே ஆகும். கீழே இழியாது மேல்நோக்கி நிற்கும் இயல்பே அதன் தனிச்சிறப்பு எனலாம். அதுபோல் மனிதரும் எத்தகு சூழலிலும் நிலைதுவளாது தன்னம்பிக்கையின் கரம்பற்றி உரத்தோடு நிமிர்ந்திருந்தால் வெற்றிக்கனியை எட்டிப் பறிக்கலாம்!

இனி, முத்துப்போல் எரியும் குத்துவிளக்கைத் தம் கவிதையில் ஏற்றிப் போற்றக் கவிஞர்கள் அணிவகுக்கிறார்கள்!

”மணல்விளக்காம் காவிரியில் நெய்யாய் நீர் வந்ததால் இதுவரை உயிர்வளர்த்தோம்; இப்போதோ தீர்ப்புகள் நமக்குத் தீராத வேதனையைத் தருவதால் நிலைகுலைந்தோம். இயற்கை ஏற்றிவைத்த காவிரி விளக்கைக் காக்கப் போராடுவோம்” என்று அறைகூவல் விடுக்கிறார் திரு. ஏ.ஆர்.முருகன்மயிலம்பாடி.

காவிரி விளக்கு!

இயற்கையது ஏற்றி வைத்த
மணல் விளக்காம் காவிரியில்
நெய்யாகநீர் நெடுக ஓடிவர
எரிந்து வந்த வெளிச்சத்தினால்
இதுவரைக்கும்உயிர்வளர்த்தோம்!
இப்போது வந்த தீர்ப்பதினால்
ஏதோ கொஞ்சம் நிம்மதியுற்றோம்!
நந்தாசுடராக அணையாமலிருந்து
காத்ததுபோல் இனி எப்போதும்
தப்பாமல் காக்குமென நம்பியபின்
மேலாண்மை அமைத்திடாமல்
இழுத்தடிக்கும் போக்கதினால்
ஐந்துதிரிகளிலும் பிரகாசம் தந்த
ஐமுகத் தீவெளிச்சம் குறைகின்ற
ஐயம் …நம்நெஞ்சில் கவலைதந்து
போராட்டக்களம் புகுந்து விட்டோம்!!
ஆனாலும் இதுவரைக்கும்எந்தவித
ஆதாயமும் கிடைக்கின்ற சூழ்நிலை
அகப்படாமல் ஆலாய்ப் பறக்கின்றோம்!
துறைதோறும் வளர்ந்திட்டாலும்
குறைவந்து குடிதண்ணீருக்குக்கூட
இறைஞ்சும்நிலைஏற்பட்டிருப்பதினால்
இனிநம் எதிர்காலம் இனித்திடுமா??
எழுவோம்!!ஏற்றியதீபம்காப்போம்..!!!

*****

”மணவிழாவில் சுடர்விடும் இந்தக் குத்துவிளக்கு, தத்துவப் பொருளாய் ஒளிசிந்தி, மணமக்களை வாழ்த்திடும் பந்தலிலே” என்கிறார் திரு. செண்பக ஜெகதீசன்.

வாழ்த்தும் விளக்கு…

குத்து விளக்கின் ஒளியினிலே
கல்வி கற்ற பெரியோர்முன்,
குத்து விளக்காம் மணமகளின்
குடும்பம் போற்றும் மணவிழாவில்,
தத்துவப் பொருளாய் ஒளிதந்திடும்
தன்மை கொண்ட விளக்கதுவும்,
நித்தம் வாழ மணமக்களை
நிறைவாய் வாழ்த்திடும் பந்தலிலே…!

*****

எத்துணைப் பெரிய விழாவாக இருந்தாலும் வனிதையர் வளைகுலுங்க, முத்துச்சுடர் சிந்தும் குத்துவிளக்கினை ஏற்றாவிட்டால் ஏது சிறப்பு என்று வினவுகின்றார் பெருவை திரு. பார்த்தசாரதி.

குத்துவிளக்கேற்றித் தொடங்கிய விழா..!

பத்துப்பேர் கூடுமிடத்தில் பந்தலும் மேடையும்
……….பார்த்துப் பார்த்துப் போடப் பட்டிருக்குமாம்..!
கொத்துக் கொத்தாய் மலர்கள் தொங்குமாம்
……….கூடியிருப்போரெலாம் மகிழ்ந்தே தோன்றுவர்..!
பொத்தாம் பொதுவாக அதுவோர் விழாவாம்
……….பகட்டுக்கு அங்கே பஞ்சமில்லை என்றாலும்..!
குத்துவிளக்கொன்று அங்கே ஏத்தா விட்டால்
……….கொண்டாட்டத் திற்கங்கே என்ன மதிப்பாம்..!

எத்துணை விழாக்கள் அமைத்தாலும் அவை
……….எல்லாவற்றுக்கும் மேலே ஒருமேடை தேவை..!
ஒத்துழைப்பு அங்கே இல்லாவிட்டால் மேடை
……….ஒன்றுக்கும் உதவாத செயல் போலாகிவிடும்..!
அத்துணை பேரும் விழிவைத்துக் காக்கவே
……….அனைவருக்கு மொரு தலைவரும் வருவார்..!
புத்தாடை உடுத்திய புதுத் தோரணையோடு
……….குத்துவிளக் கேற்றியதைத் துவக்கி வைப்பார்..!

சித்திரப் பூப்போலேச் சிரிக்கின்ற சிங்காரிகள்
……….சீராக சப்தஒலி எழுப்பியே கைதட்டுவார்கள்..!
மத்தியில் நிற்பவரைச் சுற்றிச் சூழ்ந்துகொண்டு
……….மலர்க் கொத்தைக் கொடுத்தபின் வாழ்த்துவர்..!
முத்திரை பதிப்பதுபோல் அனைவரும் தம்
……….முத்தான வாழ்த்தை யெலாமங்கே உதிர்ப்பார்..!
வித்தகராமவர் மனிதரில் மாணிக்க மென்றும்
……….வித்தியாசம் இல்லாத வரென்றும் முழங்குவர்..!

*****

தெண்ணீரேந்திய திரள்கால் பாத்திரம் பொலிய, கதலி இலையில் நல்லணிச் சேற்றம் நறுநாற்றம் வீச, பஞ்சுத் திரியில் எரியும் பஞ்சமுகப் பட்டொளிக் கிரணத்தின் தோற்றத்தை நம் உளங்கவரும் வகையில் எழிலாய் விவரிக்கிறார் திருமிகு. அவ்வைமகள்.

பாத்தியன்ன தாழி ஊற்றம், கருதுகள் பொழிந்த பொன்னொளி தீர்த்தம்
மத்தியன்ன நெடிது பாயும் பஞ்சுத் திரியின் பிணை வரிப்படிவம்
கத்தியன்ன கூர்முனை பணிந்து நடுநாயகமாய் நல்லொளிச் சிரசம்
சுத்தியன்ன சுடரொளி ஏற்கும் பஞ்சமுகத்தின் பட்டொளிக்கிரணம்
ஒத்தியன்ன ஒழுங்கு செய்து நேர்த்தி விளைக்கும் நல்லுடல் தண்டம்
நெத்தியன்ன தெங்கு சுமக்கும் பசுங்குடை வார்த்தத் தங்கக் குடலம்
ஆத்தியன்ன வெண்ணீர்க்கலயம், மஞ்சள் சொரிந்த மற்றொரு கலயம்
பத்தியன்ன மறைமுறைபோற்றலில் தெண்ணீரேந்திய திரள்கால் பாத்திரம்
சத்தியன்ன ஓதனம் சாற்றும் கதலி இலையிலோர் நல்லணிச் சேற்றம்
முத்தியன்ன முழுமுனை ஏற்றம்! மோனவரப்பில் மங்கலத் தோற்றம்!
எத்தியன்ன அளவு அறிந்து போகம் காக்கும் நல்லெழில் போதகம்!

*****

தங்கநிறப் பதுமையாய்க் காட்சிநல்கும் குத்துவிளக்கில் பஞ்சுத் திரியே கலைமகள்; பரவும் ஒளியே அலைமகள், ஒளிரும் ஐந்து தீபங்களும் ஐம்புலன்கள் என்று சாத்திர விளக்கத்தை நேர்த்தியாய்ச் செப்புகிறார் திரு. . செந்தில் குமார். 

குத்துவிளக்கெனும் இறைவடிவம்…

தங்கநிறப் பதுமையென விளங்குகின்ற விளக்கு..
மங்களங்கள் நிறைவேறச் செய்கின்ற விளக்கு..
எங்கும் நிறைந்திருக்கும் பரம்பொருளின் வடிவாய்..
மங்கையர் பூச்சொரிந்து வழிபடுகின்ற விளக்கு…!

அங்கத்தின் உச்சியில் கலசமொன் றிருக்கும்..
அகல்போன்ற அமைப்பில் ஐந்துமுகம் இருக்கும்..
அடிபாகப்பீடம் அலர்ந்த தாமரை போன்றிருக்கும்…
அழகிய வோர் தண்டு இவையிரண்டையும் இணைக்கும்…!

அடியிடைநுனியெனும் பாகங்கள் முத்தொழில் புரிந்திடும் தேவர்கள்..
அகலெனும் அமைப்பின் தீபங்கள் நமதுடற்கூறின் ஐம்புலன்கள்..
பஞ்சுத்திரியே கலைமகளாம் பரவுமொளியே அலைமகளாம்..
நெஞ்சத்தினுள்ளே ஒளிவடிவாய் இருக்குமுருவே இத்திருவிளக்காம்…!

*****

விளக்கை வைத்து நல்ல தத்துவ விளக்கங்களை, அதன் வாழ்வியல் பயன்பாடுகளைச் சத்தான கவிதைகளாய் வடித்துத் தந்திருக்கும் வித்தகக் கவிஞர்களை மெத்தப் பாராட்டுகின்றேன்.

இவ்வாரத்தின் சிறந்த கவிதையாய்த் தெரிவாகியிருப்பது இனி…

தீபம்

ஆதியும் அந்தமும்
 காணவியலா ஒளிப்பிழம்பினுள்
ஆண்டவனும் ஆதவனும்,
அவனி மாந்தரின் அறியாமை இருளகற்றும் ஒளியாக
அவதாரமும் ஆன்றோரும்,
புறஉலகை அறியும் காட்சியும் ஜோதியாலே…….
அகவுணர்வின் தரிசனமும் ஜோதியாலே………
விளக்கின் ஒளியில் பேதமில்லை
விளக்கம் புரிந்தால் மோதலில்லை
எந்த வடிவ விளக்கானாலும்
நெய்யும் திரியும் இணைந்தே ஒளிரும்
ஒருமித்த நிலையில் ஒளிரும் ஜோதி
நீ அறியவே விளக்கிடும் விளக்கு,
வடிவத்தில் இல்லை ஒளியின் கூர்மை
வைக்கும் இடத்திலும் இல்லை ஒளியின் கூர்மை
ஏற்றும் கரத்திலும் இல்லை ஒளியின் கூர்மை
ஏற்றத்தாழ்விலாமை போதிப்பதே ஒளியின் மேன்மை,
ஐந்து முகமும் ஒளியின் தீட்சண்யம்
ஐந்தின் ஒளியேற்றலில் சாத்திர விதிகளாம்,
ஒன்றாம் முகத்தில் நினைத்த காரியம் கைகூடுமாம்
இரண்டாம் முகத்தில் குடும்ப ஒற்றுமை ஓங்குமாம்
மூன்றாம் முகத்தில் புத்திர விருத்தி கிட்டுமாம்
நான்காம் முகத்தில் சர்வபீடை நிவர்த்தியாம்
ஐந்தாம் முகத்தில் ஐஸ்வர்யம் கூட, சகலமும் கை கூட
சாத்திர சூத்திரம் ஒளியின் பலனை ஓதுவது போல
ஐம்புலனையும் ஆறாம் அறிவால் ஒளியூட்டிடு
ஒவ்வொரு புலனும் இருண்மை கிழிக்கட்டும்
ஒளியாய்ப் புலனைப் பட்டை தீட்டிடு
உன்னுள் எரியும் உள்ளொளி கண்டிடு
ஆன்ம தரினத்தால் அமைதி கொண்டிடு!

ஆதியும் அந்தமுமிலாச் சோதிப் பிழம்பாய்த் திகழும் அந்த ஆண்டவனும் ஆதவனும்போல, அகிலத்து மாந்தரின் அறியாமை இருளகற்றும் அறிவொளியாய்த் திகழ்வோர் அவதாரங்களும் சான்றோரும். எங்கும் பேதமின்றி ஒளி பரப்பும் விளக்கு, அனைவரும் சமம் எனும் அரிய உண்மையை அவனிக்கு விளக்கி நிற்கின்றது.

ஐந்து முகங்களிலும் ஒளிசிந்தும் இவ்விளக்கைப்போல் நாமும் ஐம்புலன்களிலும் அறிவு கொளுத்தி ஆன்ம சோதியைக் கண்டிடவேண்டும் என்று உள்ளொளி பெருக்க உபாயம் சொல்லிடும் இக்கவிதையை இயற்றிய திருமிகு. மா. பத்ம பிரியா இவ்வாரத்தின் சிறந்த கவிஞர் எனும் பெருமையைப் பெறுகிறார். அவருக்கு என் பாராட்டு!

 

 

 

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *