-மேகலா இராமமூர்த்தி

முக்காடிட்டு முகம் மறைத்தபடி அக்கறையோடு அலைபேசியில் உலவிக்கொண்டிருக்கும் பாவையைத் புகைப்படமெடுத்து வந்திருப்பவர் திருமதி. கீதா மதிவாணன். ஃப்ளிக்கர் குழுமத்திலிருந்து இப்படத்தைப் படக்கவிதைப் போட்டிக்குத் தேர்வுசெய்து தந்திருப்பவர் திருமதி. இராமலக்ஷ்மி. புகைப்படக் கலைஞருக்கும் அதனைச் சுவைபடத் தேர்ந்தெடுத்த தெரிவாளருக்கும் எம் நன்றி!

அலைபேசியின் பிடியில் அகிலமே சிக்குண்டிருக்கும் இத்தொழில்நுட்ப யுகத்தில், மெய்ந்நிகர் உலகே மெய்யான உலகாகிப் போனதால், கண்டம் தாண்டி வாழ்வோரே அண்டைவீட்டார் ஆனார்கள்; நாடுகடந்து வாழ்வோரே உளம்நாடு(ம்) நட்பும் ஆனார்கள். வீடுதேடிவந்த உண்மை உறவுகளெல்லாம் காணாமல் போனார்கள்!

கவிஞர்களே! கண்ணுக்கு விருந்தளிக்கும் இவ் வண்ணப்படத்துக்கு உங்கள் எண்ணங்கள்வழி உயிரூட்டுங்கள்! ஒளி கூட்டுங்கள்!

*****

இணைய உலகில் இன்புற்றலைந்து, இச்சைப் பேச்சுக்களில் இதயம் பறிகொடுத்து, அகமும் முகமும் சேர்ந்தழியும் இளைய தலைமுறையினருக்காக இரங்குகின்றார் திருமிகு. கீதமஞ்சரி.

இன்றைய வாழ்வின் இதம் மறந்து
நாளைய வாழ்வின் தேடல் மறந்து
உறக்கம் தவிர்த்து ஊண் மறந்து
உறவு தவிர்த்து உலகம் மறந்து
விழிவிலகாது கைக்கருவி பதித்து
விரல்களால் திரைநகர்த்தி ரசித்து
இரவும் பகலும் இடையறாது திரிந்து
இணைய உலாக்களில் இன்புற்றலைந்து
புனைந்த பெயர்களில் கதைகளில் மகிழ்ந்து
பூச்சுகளில் மெய்வண்ணம் மறைத்து
இங்கொரு முகம் அங்கொரு முகம் காட்டி
இச்சைப்பேச்சுகளில் இதயம் பறிகொடுத்து
நச்சுநாவின் தீண்டலுக்கு இரையாகி
நலமழித்து குணமழித்து பொழுதழித்து
முகமும் சேர்த்தழிக்கும் தலைமுறை முடக்கம்.

*****

”பலனேதுமில்லாப் புலனம் உன்னைப் படுகுழியில் தள்ளும்; கலகங்கள் செய்யும்; உபயோகமில்லா இதனை ஒதுக்குதலே நன்று” என்று இப்பெண்ணுக்குப் பொன்னான கருத்துக்களைப்  புகல்கின்றார் பெருவை திரு. பார்த்தசாரதி.

புலனத்தால் பயனில்லை

அலங்காரம் செய்து கொண்டு
……….ஆருக்கும் தெரியா வண்ணம்
புலனத்துள் முகத்தைப் புதைத்துப்
……….பொழுதுகளை இழந்த பெண்ணே.!
சலனமேதும் இல்லா மலேயே
……….சத்தமின்றிச் செய்வ தென்ன
பலனேதும் இல்லாப் புலனம்
……….படுகுழியில் தள்ளும் உன்னை.!

உலகத்தில் எல்லா இடமும்
……….ஓரிடத்தை விடாது சுற்றி
கலகத்தைச் செய்து குழப்பம்
……….கண்டபடி உண்டு செய்யும்.!
இலகுவாக இதிலே இருந்து
……….இட்டபடி விலக முடியா
உலகறிவு பெறவும் இதிலே
……….ஒன்றுக்கும் உபயோ கமிலை.!

இடித்துரைத்தும் கேட்கா வயது
……….இந்தநிலை தவிர்க்க வேண்டும்.!
துடிக்கின்ற இளம் பருவம்
……….துள்ளாமல் இருக்க வேண்டும்.!
படிக்கின்ற வயதில் திருட்டுப்
……….புத்திகூட வேணாம் பெண்ணே.!
படிக்காத பொழுதில் காதல்
……….பக்கத்தில் நெருங்க விடாதே.!

*****

இந்த மிடுக்கலைப்பேசி, ஒற்றைச் சொடுக்கில் கற்றைத் தகவல்கள் கொட்டும்; கம்பி வடமின்றி மன்பதையைக் கட்டும். இணையத்தொடர்பின்றி அது முடக்கம் கண்டால் மாந்தக்கூட்டமும் வாட்டம் கொண்டிடுதே என்று வியக்கின்றார் திரு. ஆ. செந்தில்குமார்.

மிடுக்கலைப்பேசியின் மிடுக்கான வளர்ச்சியும்.. மெய்ம்மறக்கும் உலகமும்..

ஒற்றைச்சொடுக்கில் கற்றைத் தகவல்கள் நம் கண்முன் கொணர்ந்திடுமே…
சுற்றும் முற்றும் பார்க்காத பயனாளி இதனுள் ஐக்கியமே…

திரட்டுகள் அனைத்தையும் புரட்டிப் பார்க்க உதவிடும் ஓர் கருவி…
அறிவை வளர்க்கும் விருப்பத் தேர்வுகள் கொண்டது இக்கருவி…

தம்படம் எடுத்து தம்பட்டம் அடிக்க வாய்ப்புகள் கொடுத்திடுமே…
கம்பி வடமின்றி நம்மை இணைக்கும் மாபெரும் தொழில்நுட்பமே…

தடங்காட்டி அமைப்பு நாட்காட்டி வசதி அனைத்தும் உள்ளடக்கம்…
தொடுதிரை வடிவில் தொடர்புகள் அனைத்தும் இதனுள் அடக்கம்…

வெள்ளோட்டம் மூலம் வசதிகள் அனைத்தையும் கற்றுத் தந்திடுமே…
வேண்டிய செயலியைப் பதிவிறக்கம் செய்து நிறுவிக் கொள்ளலாமே…

இணையத்தின் வழியே உலகைப் பிணைக்கும் வல்லமை இதற்குண்டு…
தனதெனக் கொண்ட தக்கதோருலகை அவரவர்க்குத் தந்திடும் ஆற்றலுண்டு…

பல்லூடகச் செய்திகள் படசெய்திகள் அனைத்தையும் புலனத்தில் பகிரலாமே…
எல்லை கடந்த வானத்தளவு தகவல்கள் அனைத்தும் சேமித்து வைக்கலாமே…

இயங்கலை சற்றே முடங்கிப் போனால் உலகு நின்றது போலாகிடுமே…
இளைஞரின் மனதெல்லாம் முடக்கலையாகி துன்பத்தில் ஆழ்ந்திடுமே…

படித்தவர் பாமரர் இளையோர் முதியோர் அனைவரும் மயங்கிடுவர்…
நடுத்தர ஏழை செல்வந்த ரனைவரும் இதை உயர்வாய்க் கருதிடுவர்…

மூன்றாம் நான்காம் தலைமுறை கடந்து மிடுக்காய் வளர்ந்ததுவே..
மிடுக்கலைப்பேசியில் கட்டுண்ட உலகம் அதில் மூழ்கிப் போனதுவே…!

*****

புகுந்தவீட்டைப் பிறந்தவீடாய் எண்ணி, அங்குள்ள மனிதர்களைத் தன் சுற்றமாய்ப் பேணி, சற்றே இளைப்பாற ஓய்ந்திருக்கும் இக்காரிகைக்கு, அவளுக்கான தருணங்களை அளிப்பதிந்தக் கைப்பேசிதான் என்கிறார் முனைவர் இராஜலட்சுமி இராகுல்.

எனக்கான தருணங்கள்

கரம் பிடித்த நிமிடம் முதல்
உயிரே உன் துணைவி யாக;
கரு வினிலே சுமக்கா விடினும்
உன் அன்னையை என் தாயாக;
கல்வி கேள்வி நல்கா விடினும்
உன் தந்தையை என் தகப்பனாக;
ஒரு வயிற்றில் பிறக்கா விடினும்
உன் சகோதரியை என் தங்கையாக;
மைத்துனன் கொழுந்தன் மாமன் மாமி
தமையன் தமைக்கை மற்றும் மருகன்
என் றுன்னுற வினரனை வரையும்
யென்னுறவாய் நெஞ்சில் சுமந்து கொண்டு ;
உன் இல்லத்தில் உன் இடத்தை
நிரப் பிடும் நற்பணி யேற்றேன் !!!

என்ன வனே யென்னை யீன்ற
அன்னை தந்தை இரு வருடன்;
தன் னலம் சிறிதும் இன்றி
எம் நன்மை பேணும் தோழியுடன்;
கன்னம் தொட்டு என்னைக் கொஞ்சும்
அண்ணன் தம்பி அனைவருடன்;
ஆசை யுடன் சில நொடிகள்
உரை யாடக் கூடு மென்னில்….

நீயாக நான்மாறி நானாற்றும் பணிஓய்ந்து
அவரவர் தேவைகளை மருமகளாய்ப் பூர்த்திசெய்து
உறவினர் குழுமியுள்ள உன்னகத்தின் புறம்வந்து
நானாக நானிருக்கும் எனக்கான தருணங்கள் !!!

*****

கைப்பேசியின் மகத்துவத்தை, அதனால் சகத்துக்கு விளையும் ஆபத்துக்களை என்று அதன் இருவேறு பக்கங்களையும் சரியாய் அடையாளப்படுத்தியிருக்கும் கவிஞர்பெருமக்களுக்கு என் பாராட்டுக்கள்!

அடுத்து வருவது இவ்வாரத்தின் சிறந்த கவிதை…

ஏந்திழையே! எதனை ஏந்தியபடி அமர்ந்திருக்கிறாய்?
ஆயிழையே! ஆராய்ச்சி செய்வது எதனை?
முழுச் சுதந்திரம் கொண்டவளோ, முக்காடிட்டவளோ?
அத்துணைப் பேர் கையிலும் ஆன்ட்ராய்ட்!
ஆன்ட்ராய்டோ, ஆப்பிளோ, கையும்,கண்ணும்
கணினியில், உள்ளங்கையில் உலகு அடக்கினையோ?
ஓய்வுப்பொழுது ஆய்வுப் பொழுதாய் ஆனதோ??
வண்ண உடைக்குள் வசீகரம் மறைத்த
வனிதையே, வானளந்தனையோ, கடல் தாண்டிச்
சென்ற கணவனுக்குக் கடிதம் எழுதினையோ?
அன்புள்ள தேவதையே, அகிலம் எட்டிப் பார்!
வண்ணத்தால் வசீகரித்தாய், எண்ணத்தாலும்
ஏற்றம் பெற்றிடு, கணக்குச் செய்தனையோ?
கணக்காய்ச் செய்தனையோ? அன்பு
பொழிந்தனையோ?ஆன்ட்ராய்டில்
மொழிந்தனையோ? மாடப்புறாவே,
மயக்கும் பேரெழிலே, மஞ்சள் வண்ணத்
தாரகையே, மண்ணுலகிற்கு இறங்கி வா
பொன்னுலகில் பூத்துக் கிடந்தது போதும்
என்னுலகு சேர், ஏற்றமாய் வாழ்வோம் வா!

”முக்காடிட்டு முகம் மறைத்த பெண்ணே! இந்தக் கைப்பேசி உன் ஓய்வுப் பொழுதை ஆய்வுப்பொழுதாய் மாற்றியதோ? வானை அளக்கலாம்; இதன்மூலம் வம்பும் அளக்கலாம். பொன்னுலகில் பூத்திருக்கும் புதுநிலவே! மண்ணுலகிற்கு இறங்கி வா! ஏற்றத்தோடு வாழ்வோம் வா!” என்று மெய்ந்நிகர் உலகில் சஞ்சரிக்கும் பெண்ணை மெய்யுலகுக்குக் கைநீட்டி அழைக்கும் இக்கவிதையை யாத்த திருமிகு. முருகேஸ்வரி ராஜவேலை இவ்வாரத்தின் சிறந்த கவிஞராய் அறிவித்துப் பாராட்டுகின்றேன்.

 

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *