வெற்றியும், தோல்வியில் பாடமும்!

பவள சங்கரி

 

தலையங்கம்

 

கால்பந்து விளையாட்டுத் திருவிழா நடந்து முடிந்தது. இருபது ஆண்டுகளுக்குப் பிறகு பிரான்சு இரண்டாவது முறையாக வெற்றி பெற்று உலகக் கோப்பையைப் பெற்றுள்ளது. முதல் முறையாக இரண்டாவது இடத்தை குரோசிய அணி பெற்றுள்ளது. இவ்விரு அணிகளுக்கும் மனமார்ந்த பாராட்டுகளைத் தெரிவிப்போம். அதே நேரத்தில் நடந்தேறிய பல்வேறு மனிதாபிமானமிக்க சிறப்பு நிகழ்வுகளையும் குறிப்பிட வேண்டியுள்ளது.

பல்வேறு இனம், நாடு என அனைத்து மக்களும் ஒன்றிணைந்து ஒரே அணியில் போட்டியிட்டு பிரான்சு நாட்டிற்கு வெற்றியைத் தேடித் தந்துள்ளனர். நிறம், மதம் என அனைத்தையும் கடந்து வெற்றி என்ற இலக்கை மட்டும் மனதில் கொண்டு தங்கள் நாட்டிற்கு வெற்றியைத் தேடித் தந்துள்ளனர்.
இந்த கால்பந்துத் திருவிழாவில் பல்வேறு நாட்டு மக்களின் சிறந்த கலாச்சாரத்தையும், பண்பாட்டையும் பிரதிபலித்த நிகழ்வுகளும் நடந்துள்ளன. வெற்றி பெற்ற பிரான்சு நாட்டை பாராட்டுவது போன்றே அதைவிட இன்னும் ஒரு பங்கு அதிகமாகத் தோல்வியடைந்த ஒரு அணியையும் பாராட்ட வேண்டுமென்றால் அது ஜப்பான் அணி என்றால் அது மிகையாகாது. ஜப்பானிய அணி தோல்வி அடைந்த பிறகு சில மணித்துளிகளே அந்தத் தோல்வியைத் தாங்காமல் வேதனையில் வெதும்பிக் கொண்டிருந்தனர். அதற்குப் பிறகு அவர்கள் செய்த காரியங்களே உள்ளம் நெகிழச் செய்ததோடு அனைவரின் பாராட்டுதல்களையும், மெய்சிலிர்ப்பையும் பெற வைத்தன. தங்களுடைய தோல்விக்குப் பிறகு தாங்கள் தங்கியிருந்த அறைகள் மற்றும் அதன் கழிவறைகள் அனைத்தையும் ஒவ்வொரு வீரரும் தாமாகவே சுத்தம் செய்து நிர்வாகத்திடம் ஒப்படைத்துள்ளனர். நிர்வாகத்தினர், அவர்கள் இப்படித் தாங்களே சுத்தம் செய்ய வேண்டியதில்லை என்ற நிலையிலும் ஏன் சுத்தம் செய்ய வேண்டும் என்று வினவியபோது, அவர்கள் தாங்கள் வந்தபோது எப்படி அளிக்கப்பட்டதோ அதேபோன்று திரும்ப அளிக்க வேண்டியதுதானே முறை என்று கூறிவிட்டு அதோடு நிற்காமல், தாங்கள் விளையாடிய கால்பந்து அரங்கிற்குள் நுழைந்தனர். அங்கு தங்கள் நாட்டு விளையாட்டு வீரர்களின் தோல்வியைத் தாங்காத இரசிகர்கள் தூக்கி எறிந்த காலி புட்டிகள், மற்ற குப்பைகளை அள்ளிப்போட்டு அந்த அரங்கத்தை சுத்தம் செய்ய ஆரம்பித்தனர். இதைவிட முக்கியமான விசயம் அதைப் பார்த்துக்கொண்டிருந்த ஜப்பானிய இரசிகர்களும் அரங்கிற்குள் நுழைந்து தாங்கள் போட்ட குப்பைகளைத் தாங்களே சுத்தம் செய்ய ஆரம்பித்தனர். இதைக்கண்ட நிர்வாகத்தினர் பல சுனாமிகளையும், எரிமலைச் சீற்றங்களையும், இரண்டாம் உலகப்போரில் அனுகுண்டு பேரழிவுகளையும் சந்தித்த உங்கள் நாடு இன்று உலக அரங்கில் தலை நிமிர்ந்து நிற்பதோடு பொருளாதாரத்தில் வல்லரசாக இருப்பதன் காரணமும் அறிய முடிகின்றது என்று மனம் நெகிழ அவர்களுக்கு வாழ்த்தும் தெரிவித்தனர்.

இதையெல்லாம் பார்க்கும்போது, நமது நாட்டில், ஒரு நகராட்சித் தேர்தலிலோ, சட்டமன்ற தேர்தலிலோ தோல்வியடைந்தால் அந்தப் பகுதிகளையே இரணகளமாக்கிவிடும் நமது மக்களின் தன்மைகளையும் நினைக்காமல் இருக்க முடியவில்லை …

 

 

Leave a Reply

Your email address will not be published.