-மேகலா இராமமூர்த்தி

அழகு உடையணிந்து ஆடிமுன் நின்று புன்னகைக்கும் மழலையைத் தன் நிழற்படத்தில் பதிவாக்கியிருப்பவர் திருமதி. பவளசங்கரி அவர்கள். இதனை ஃப்ளிக்கர் குழுமத்திலிருந்து தேர்ந்தெடுத்துப் படக்கவிதைப் போட்டிக்குத் தந்திருப்பவர் திருமதி. இராமலக்ஷ்மி அவர்கள். பெண்மணிகள் இருவரும் என் நன்றிக்கு உரியோர்.

கவலை வலையில் சிக்கிக்கொள்ளாது, களிப்போடு வாழ்வைக் கழிக்கும் இனிய பருவம் கனிமழலைப் பருவமே. அப்பருவம் கடந்துவிட்டால் வாழ்வின் சுமைகளும் ஆற்றவேண்டிய கடமைகளும் நமை நிம்மதியாய் இமைமூட விடுவதில்லை; சிரித்து மகிழவும் அனுமதிப்பதில்லை. 

கள்ளமற்ற உள்ளத்தோடு வெள்ளைச் சிரிப்பை உதிர்த்துநிற்கும் இம்மழலையைப் பாட கவிஞர்களை அன்புபாராட்டி அழைக்கின்றேன்!

*****

கிள்ளைமொழிகள் பகன்றும், தொல்லையின்றித் திரிந்தும் மகிழ்ந்த அக்காலத்தை – பொற்காலத்தை இந்நிழற்படம் கதைகளாய் நினைவூட்டுவதைத் தன் கவிதையில் காட்சிப்படுத்தியிருக்கின்றார் திரு. ஆ. செந்தில்குமார்.

நிழற்படம் சொல்லும் கதைகள்…!

துள்ளித் திரிந்த கதைகளைச் சொல்லும்…
துடிப்புடன் இருந்த காலத்தைச் சொல்லும்…!
எள்ளி நகைத்த உலகைச் சொல்லும்…
ஏதும் அறியா வயதைச் சொல்லும்…!

வெள்ளி முளைத்தநம் வாழ்வைச் சொல்லும்…
வெதும்பி வாடிய தருணத்தைச் சொல்லும்…!
அள்ளித் தந்த கருணையைச் சொல்லும்…
ஆறுதல் அளித்த நட்பைச் சொல்லும்…!

கொள்ளை கொண்ட மனதைச் சொல்லும்…
கொடுத்து வைத்த நிகழ்வைச் சொல்லும்…!
பிள்ளைப் பருவத்து நினைவைச் சொல்லும்…
படிப்பை முடித்துப் பறந்ததைச் சொல்லும்…!

எல்லையே வானமாய் இருந்ததைச் சொல்லும்…
எதிலும் நிறைவை உணர்ந்ததைச் சொல்லும்…!
கிள்ளை மொழிகள் பகன்றதைச் சொல்லும்…
கனவைச் சுமந்த இதயத்தைச் சொல்லும்…!

தொல்லைகள் இல்லா நிலையைச் சொல்லும்…
துன்பத்தில் மீண்ட அமைதியைச் சொல்லும்…!
நல்லவை மனதில் நிலைக்கச் சொல்லும்…
நிம்மதி அனைத்தையும் நிழலாய்ச் சொல்லும்…!

*****

அன்னை செய்த சிங்காரத்தில் சித்திரப் பதுமையாய்க் காட்சியளிக்கும் பெண் குழந்தையையும், அதன் தாயையும் போற்றி விருத்தம் பாடியுள்ளார் பெருவை திரு. பார்த்தசாரதி.

உன்னைப் பெற்ற அன்னைக்குப் பெருமை..!

(பெண் குழந்தைக்கு அலங்காரம் செய்து பார்த்த அன்னையைப் புகழும் விதத்தில் ஓர் அறுசீர் விருத்தம்)

தினமும்தான் உனக்குத் தின்ன
……….தின்பண்டம் தந்தாள் அம்மா..!
கனவில்நீ வருவாய் என்றே
……….கனவுலகில் கழிப்பாள் காலம்..!
சினமில்லா அன்னை உன்னைச்
……….சிங்காரம் செய்ய வந்தாள்..!
மனமார வாழ்த்தும் அன்னை
……….மங்கைநீயும் மகிழ வேணும்..!

கண்ணாடி முன்னே நின்று
……….கண்ணழகு..காட்டும் கண்ணே..!
பெண்களானால் அழகு சேரும்
……….பட்டாடை கூட்டும் மேலும்..!
வண்ணமிகும் அழகு நீலம்
……….எண்ணமிகும் அம்மா பார்த்தால்..!
கண்களையே இமைகள் காக்கும்
……….காவலாளி போன்ற அம்மா..!

*****

நல்ல கவிதைகளை நயம்பட உரைத்திருக்கும் கவிஞர்களுக்குப் பாராட்டு. (கவிதைகளின் வரத்து இவ்வாரம் குறைந்துபோயிருக்கிறது. வரும் வாரங்களில் மீண்டும் மிகும் என்று நம்புகின்றேன்.)

இனி இவ்வாரத்தின் சிறந்த கவிதையாய்த் தெரிவாகியிருப்பது…

பிள்ளையாய்…

பிள்ளைநிலா கறைபடவில்லை,
பிள்ளை மனதில்
மனிதகுல மாசு ஒட்டுவதில்லை..

பிஞ்சு நெஞ்சில்
இன்னும்
வஞ்சம் கலந்திடவில்லை..

முகம்போல
அகமும் அழுக்காகவில்லை,
கண்ணாடியில் தெரியும்
முக அழகைவிடத்
தெரியாத
அக அழகு
இன்னும்
அதிகமானது..

மனிதனே நீயும்
பிள்ளையாய் இரு-
உள்ளத்தில்…!

”முகம்போலவே அகமும் களங்கமின்றி விளங்கும் இப்பிள்ளைபோல் மனிதர்கள் அனைவரும் வாழ்ந்திருந்தால் இந்த உலகம்தான் எத்துணை அழகாக இருக்கும்!” எனும் நற்சிந்தனையை நம்முள் விதைக்கும் கவிதையைப் படைத்திருக்கும் திரு. செண்பக ஜெகதீசனை இவ்வாரத்தின் சிறந்த கவிஞராய் அறிவித்துப் பாராட்டுகின்றேன்.

 

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published.