இலக்கியம்கவிதைகள்

மரணவாசல் போகின்றார் !

எம். ஜெயராமசர்மா …. மெல்பேண் …. அவுஸ்திரேலியா

பணத்தினால் போதை வரும்
பதவியினால் போதை வரும்
பட்டம் பல பெற்றாலும்
போதை தலைக் கேறிவிடும்
இதனாலே வரும் போதை
எல்லோர்க்கும் இடைஞ்சல் தரா
போதை ஊட்டும் பொருளன்றோ
பொல்லாத விளைவைத் தரும் !

போதையூட்டும் பல பொருட்கள்
   புதுப் புதிதாய் வருகிறது
காதலுடன் பலர் வாங்கிக்
   காணுகிறார் இன்ப நிலை
இன்பமென எண்ணி எண்ணி
   ஏற்றுநிற்கும் பல பொருட்கள்
துன்பமாய் அமையும் என்று
   துளிகூட அவர் நினையார் !

போதை தரும் பலவற்றை
   பொழுது போக்காய் பயன்படுத்தி
பாதை தடுமாறி நின்று
   பலர் வாழ்வை இழந்துவிட்டார்
சாதனைகள் பல இருக்க
   சன்மார்க்க வழி இருக்க
போதையினை தலைக் கேற்றி
   பொசுக்குகின்றார் நாளை எல்லாம் !

போதைப் பொருள் ஏற்பதனால்
   பொறி புலன்கள் தடுமாறும்
வீதி தனில் செல்கையிலே
   வில்லங்கம் செய்யத் தூண்டும்
நாடி வரும் நற்குணங்கள்
   நம்மை விட்டே அகன்றுவிடும்
நமக்கு நாமே புதைகுழியை 
   நாம் வெட்டி நின்றிடுவோம் !

கொள்ளை அடியென நினைக்கும்
   குணம் அங்கே வந்துநிற்கும்
கொலை செய்து கற்பழிக்கும்
   குரூரமும் கூட நிற்கும்
நல்ல வல்ல எக்குணமும்
   நம்மிடத்து வந்து விடா
பொல்லாத செய் என்றே
   போதை அங்கு வழிநடத்தும் !

நீதி நேர்மை பார்க்காது
   நெஞ்சு உருக நினைக்காது
வாதமிடும் போர்க் குணத்தை
   வளர்த்து விடும் போதையது
புவி மீது வாழ்கின்றார்
   போதைப் பொருள் ஏற்பதனால்
மதியிழந்து வாழ் விழந்து
   மரண வாசல் போகின்றார் !

Print Friendly, PDF & Email
Share

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க