Category: போட்டிகளின் வெற்றியாளர்கள்

போட்டிகளின் வெற்றியாளர்கள்

  • படக்கவிதைப் போட்டி 157-இன் முடிவுகள்

    -மேகலா இராமமூர்த்தி

    கோலாட்டம் ஆடும் பெண்ணின் முகபாவங்கள் அழகாய் வெளிப்படும் வண்ணம்  புகைப்படம் எடுத்துள்ளார் திருமிகு. ஷாமினி. இந்த இரசமிகு படத்தைப் போட்டிக்குத் தேர்வுசெய்து தந்திருக்கிறார் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி. சாந்தி மாரியப்பன். புகைப்படக் கலைஞர், தேர்வாளர் இருவருக்கும் என் நன்றி.

    கலைகளில் சிறந்தது நவரசங்களையும் (தமிழில் மெய்ப்பாடுகள் எட்டே) வெளிப்படுத்தி மக்களைக் கவர்ந்திழுக்கும் ஆடற்கலை. தில்லை அம்பலவனே ஆடவல்லானாய் – நடவரசனாய் ஆனந்த நடம் ஆடிக்கொண்டிருப்பது ஆடலின் மகத்துவத்தை அகிலத்துக்கு உணர்த்துகின்றது. 

    இனி, முகபாவத்தால் நம் அகம் மயக்கும் இந்த ஆரணங்கைத் தம் கவியாரத்தால் அணிசெய்ய வருகின்றார்கள் கவிவலவர்கள்!

    *****

    ”மனஅழற்சி போக்கும் பயிற்சி; உடல்நலத்தை, மனவளத்தைக் கூட்டும் முயற்சி” என்று இந்த அம்மணி ஆடும் அழகு ரங்கோலியைப் புகழ்கிறார்  ஏ. ஆர். முருகன்மயிலம்பாடி.

    ஆடு..உடல்வளம் நாடு!!

    அம்மிணியாடும் ரங்கோலி _
    ஜம்முனிருக்குது பங்காளி!!
    குச்சிரெண்டத்தூக்கிகிட்டு
    குதிச்சுக்குதிச்சு ஆடும்போது
    கூடச்சேந்து கும்மிகொட்டி
    ஆடுது ஆசை எனும் ஓங்காளி!
    கச்சிதமாய்க் கால வச்சுக்
    கைகள் செய்யும் சாகசத்தில்
    உறுப்புகள் முறுக்கேற…விளி
    உற்றுப்பார்க்கும்போதுகோடாலி
    கூர்மையோடு ஒளி வீசும்!!
    அடிமனசுக்கு ஏற்ற பயிற்சி
    அடித்துப்போகும்மன அழற்சி!!
    வடக்கிருந்துவந்த விருந்தாளி!
    இளமையிலே விளையாட்டு
    இரும்பாக்கும் உடல் வளத்தை
    கரும்பாக்கும் மன நலத்தை!! _
    நோய்நொடிக்குப்பகையாளி!!
    உண்ணுபவை உடன்செரிக்க,
    கண்ணயர்ந்து தூக்கம்வர
    பெண்களுக்கு பெரிதுதவி
    நன்குவாழ உதவும் கூட்டாளி! _
    கட்டுடலோடு நற்றவம் சேர
    பட்டொளிவீசி வாழ்வதே ஜாலி!!
    *****

    ”ஆடல்காண வந்தவரை வண்டுவிழிகள் துழாவ, கண்மலர்கள் வரவேற்க, வெண்முத்துப் பற்கள் ஒளிசிதறக் கோலாடிக் கொண்டாடினாள்” என்று பாவையின் எழிலைப் பழகு தமிழில் பாராட்டுகின்றார் திருமிகு. சக்திப்ரபா.

    வரவேற்பு

    ஆடை வனப்பு அழகைக் கூட்டி
    அங்கமெங்கும் வர்ணம் பூத்திருக்க,
    உற்றவரை உறவுக்கு உகந்தவரை
    அங்குமிங்கும் படபடக்கும்
    வண்டு விழிகளால் துழாவி
    கண்மலர்களால் வரவேற்று
    கோலாடிக் கொண்டாடினாள்.

    உடன் தாவிய முத்துக்குழைகளும் ஆரங்களும்
    சட்டென இதழ் விரித்த வெண்முத்துக்களுடன்
    கூடியாடிக் குதித்ததில்,
    மேடையெங்கும் ஒரே முத்துச் சிதறல்கள் !

    *****

    ”தமிழ்ப்பாட்டு காதில் தேனாய்ப் பாய, சேலாட்டம் விழிகள் ஆட, கோலாட்டம் ஆடு பெண்ணே! குவலயத்தில் தாய்த்தமிழ்க்கு முடிசூட்டு கண்ணே!” என்று உற்சாகமூட்டுகிறார் திரு. செண்பக ஜெகதீசன்.

    கலை வளர்க்க…

    ஆடு மயிலே கோலாட்டம்
    ஆடுமுன் விழிகள் சேலாட்டம்,
    பாடு பாடு தமிழ்ப்பாட்டு
    பாயவே காதில் தேனாட்டம்,
    சூடு சூட்டு முடிசூட்டு
    செந்தமிழ்த் தாய்க்கும் முடிசூட்டு,
    ஈடு இணையே இதற்கில்லை
    இக்கலை வளர்த்தே ஆடுநீயே…!

    *****

    ”அன்னக்கோல் துழவியாங்கு அமுத அட்சயம் வளர்த்திடு; எண்ணக்கோல் செலுத்தியாடி புதுசாத்திரம் சமைத்திடு; செங்கோல் உயர்த்தியாங்கு சட்டமாற்றம் வகுத்திடு எம் சுதந்திர தேவி!” என்று நடமிடும் சுந்தரிக்கு நல்லறிவு கொளுத்துகின்றார் திருமிகு. அவ்வைமகள்.

    சுதந்திரதேவி! சுதந்திரதேவி! சுதந்திரதேவி! சுதந்திரதேவி!

    கன்னக்கோல் சுழற்றியாங்கு கயவர் கள்வினை கவர்ந்திடு
    துன்னக்கோல் அசத்தியாங்கு மாதர் நல்வினை கோத்திடு
    அன்னக்கோல் துழவியாங்கு அமுத அட்சயம் வளர்த்திடு
    ஆனைக்கோல் தூக்கியாங்கு வலிய தீவினை ஒடுக்கிடு

    சுதந்திரதேவி! சுதந்திரதேவி! சுதந்திரதேவி! சுதந்திரதேவி!

    வண்ணக்கோல் தட்டியாடி உடல் சீர்மையைச் செழித்திடு
    திண்ணக்கோல் திருத்தியாடி உளஉறுதியை முறுக்கிடு
    தண்ணக்கோல் வீசியாட்டிக் கற்பு சூத்திரம் முழக்கிடு
    எண்ணக்கோல் செலுத்தியாடிப் புதுசாத்திரம் சமைத்திடு

    சுதந்திரதேவி! சுதந்திரதேவி! சுதந்திரதேவி! சுதந்திரதேவி!

    செங்கோல் உயர்த்தியாங்கு சட்ட மாற்றமும் வகுத்திடு
    வெங்கோல் நிறுத்தியாங்கு கடின விதிமுறை பதித்திடு
    அங்கோல் கரத்திலாங்கு மல்லாயுதம் எடுத்திடு
    தங்கோல் நாட்டியாங்கு நவயுவ பாரதம் எழுப்பிடு

    சுதந்திரதேவி! சுதந்திரதேவி! சுதந்திரதேவி! சுதந்திரதேவி!

    கொடுங்கோல் ஒடித்து ஆங்கு ஆணவம் அகற்றிடு
    கடுங்கோல் மடித்து ஆங்கு உபத்திரம் ஒழித்திடு
    தடுங்கோல் வளர்த்து ஆங்கு பத்திரம் வழங்கிடு
    நெடுங்கோல் வழங்கியாங்கு சுதந்திரம் பெருக்கிடு

    சுதந்திரதேவி! சுதந்திரதேவி! சுதந்திரதேவி! சுதந்திரதேவி!

    சுடுங்கோல் பொருத்தியாங்கு வஞ்சநெஞ்சகம் பொசுக்கிடு!
    அடுங்கோல் அணைத்து ஆங்கு அமைதியை நிறுத்திடு
    மடுங்கோல் திருத்தியாங்கு தமிழகநீர்வளம் மீட்டிடு
    எடுங்கோல் எழுப்பியென்றும் நல்லுறவினை உயர்த்திடு! ( சுதந்திரதேவி! —)

    *****

    நல்லதமிழ்ச் சொல்லெடுத்து நாட்டிய நங்கைக்கு இனிய தமிழ்மாலை சூட்டியிருக்கும் கவிஞர்கட்கு என் பாராட்டும் நன்றியும்!

    இவ்வாரத்தின் சிறந்த கவிதை எனும் பாராட்டைப் பெற்ற கவிதை அடுத்து…

    கோபாலா வா…வாவென்று கோலாட்டம் போடுங்கடி..!

    பெண்களின் கலைநயத்தைக் காணுகின்ற கலையில்
    ……….பெருங் கலையே கும்மியடிக்கும் கோலாட்டமாம்..!
    வண்ணம் கொண்ட கழிகளிரண்டைக் கையிலேந்தி
    ……….வகையாய்த் தட்டியே ஒலியெழுப்புமோர் ஆட்டம்..!
    எண்ணத்தை வெளிப்படுத்தும் விசேட ஒலியாய்
    ……….இங்குமங்கும் ஓடியாடி உல்லாசம் கொடுக்குமாம்..!
    கண்ணசைவால் கவரும் இளநங்கைகள் தாங்கள்
    ……….கால்விரலில் உடல்தாங்குமொரு உத்தியை அறிவர்..!

    கண்ணுக்குக் குளிர்ச்சிதரும் பட்டாடை உடுத்தி
    ……….கண்ணன் பிறந்தநாளில் கோலாட்டம் குதூகலமாம்..!
    மண்ணில் அன்னவனால் பிறவி கொண்டோமென
    ……….மாயவனைக் கூத்தாட அழைப்பதுவும் வழக்கமாம்..!
    பண்ணிசையால் பாவையர்கள் பாடுமழகைக் காண
    ……….பறந்தோடி வருவான் மாயப்பிரான் கண்ணனுமே..!
    அண்டத்தைத் தன்னண்ணத்தில் காட்டிய பெருமாயன்
    ……….அகமகிழ்ந்தே ஆயகலையும் கைவர அருளுவான்..!

    பண்ண(ணிய) கடுந்தவத்தால் பார்வதியின் கறுத்தமுகம்
    ……….பளிச்சென முகம்வெளிரப்…பலமாகக் கும்மியடி..!
    வெண்ணெய் திருடுமுன் அந்தத் தாழியுடையுமாறு
    ……….கண்ணன் வருவதற்குமுன் கழிதட்டி ஆடுங்கடி..!
    உண்ணவும் உழைக்கவும் உடல்பயிற்சி பெறவும்
    ……….ஓடியாடி ஒன்றாய்ப்பின்னிப் பிணைந்து கும்மியடி..!
    தண்டையணிந்த நம் குதிகாலும் தரையிலூன்றாது
    ……….வெண்தாடி விருத்தரும் விரைந்துவரக் கும்மியடி..!

    ”அண்ணத்துள் அண்டம் காட்டிய அந்த மாமாயன் அருள்பெறவே, அவன் பிறந்தநாளில் பாவையர் ஆடும் கோலாட்டம், அனைவர்க்கும் தந்திடும் கோலாகலம்! கெண்டை விழிகள் சுழன்றாட, தண்டையொலிகள் பண்பாட, இளம்பெண்டிர் ஆடும் இந்த எழிலாட்டம் வெண்தாடி விருத்தரையும் விருப்பத்தோடு காண வைக்கும் ஒயிலாட்டம்!” என்று கோலாட்டத்தின் சிறப்பைக் குவலயத்துக்கு இயம்பும் இக்கவிதையினைப் படைத்த பெருவை திரு. பார்த்தசாரதியை இவ்வாரத்தின் சிறந்த கவிஞராய்த் தெரிவுசெய்து பாராட்டுகின்றேன்.

     

     

    Share
  • படக்கவிதைப் போட்டி 156-இன் முடிவுகள்

    -மேகலா இராமமூர்த்தி

    திரு. பார்கவ் கேஷவ் எடுத்த இந்த ஒளிப்படத்தை இவ்வாரப் படக்கவிதைப் போட்டிக்கான படமாகத் தெரிவுசெய்து தந்தவர் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி. சாந்தி மாரியப்பன். இவர்கள் இருவருக்கும் என் நன்றி!

    இருளும் ஒளியும் இணைந்த இந்த வண்ணக் கலவை, பல்வேறு எண்ண அலைகளை நம் மனக்கடலில் எறிகின்றன. காரிருளும் பேரொளியும் இணைந்து ஒரு நாளை அமைப்பதுபோல், மகிழ்வெனும் ஒளியும் இடுக்கண் எனும் இருளும் இணைந்தே நம் வாழ்வைச் சமைக்கின்றன. ஆதலால் ஒளியைப் போலவே இருளையும் இரசிக்கக் கற்றுக்கொள்வது மனித வாழ்வை மாண்புறச் செய்யும்.

    இனி, இந்த அழகோவியத்துக்குத் தம் கவிதையால் அணிசெய்யக் கவிஞர் குழாத்தை அழைக்கிறேன்.

    *****

    ”வெட்டவெளிக்கருமையை விரட்டத் திட்டமிட்டு வந்திருக்கும் வெண்ணிலவின் வெளிச்சம் மண்ணுலகின் மகுடம்! சந்திரனில் மாந்தன் கால்பதித்தபின்புங்கூட அண்டத்தின் ஆதி அந்தத்தை அவனால் அறியக் கூடவில்லை” என வியக்கிறார் திரு. ஏ.ஆர்.முருகன் மயிலம்பாடி.

    சந்திரபிம்பம்!!

    வெய்யில் மங்கி இரவுவர
    வெட்டவெளிக்கருமையை
    விரட்ட வந்து ஒளிபாய்ச்சும்
    வெண்ணிலவின்வெளிச்சம்
    மண்ணுலகின் மகுடம்!!!
    கண்ணுறங்கும் நேரத்திலே
    விண்ணிருந்து காட்சிதரும்
    வதனத்துச் சந்திரனின்
    வரவினுக்கேங்கி நின்ற
    நிலமகளுக்குள்ளாறே
    நிழல்படிமம் நிஜம் போல!!
    அதனியக்கம்கடவுள்ரூபம்!
    ஆகாயச் சேதி சொல்ல
    ஆனந்தமாய் ஓடி வந்து
    அறிவிக்கும் நிலவுக்குள்ளும்
    அடியெடுத்து வைத்தாச்சு!!
    ஆனாலும்அண்டசராசரத்தின்
    ஆதியென்ன? அந்தமென்ன??
    அறுதியிட இயலவில்லை…
    நூலிலை மாறாது இயங்குகிற
    நுட்பத்தினால் வையகத்தை
    வழிநடத்தும் இயற்கையன்னை
    எழில் வாழி!! எப்போதும்தப்பாது
    இயக்கும்இறை நீடு வாழி!!!

    *****

    வானத்து இளவரசன் விட்டெறிந்து விளையாடும் வண்ணத் தட்டு  இந்தச் சூரியன்! உயிர்கட்கு ஆதாரமான நீயே எங்கள் சாமி; உன் சேயே இந்த பூமி என ஞாயிற்றைப் போற்றுகின்றார் திருமிகு. சக்திப்ரபா.

    சூரியகாந்தி

    வானத்து இளவரசன்
    இங்குமங்கும் வீசி விளையாடும்
    வட்டத்தட்டு

    மஞ்சளாய்ச் சிதறிப் பூவலம் முடித்து
    செம்மஞ்சளாகிச் சாயம் போகும்
    சாகசக்காரன்!

    நீர் நிலைகளில் பிம்பமாகி மிதக்கும்
    குளிர்-நிலா

    வெண்மேகத் திரைச்சீலையின்
    பின்னால் கண்ணாம்பூச்சியாடும்
    மாயத்திரள்!

    மேகங்களுக்கு அப்பால் ஒளிரும் நம்பிக்கை

    வானெங்கும் தங்கமெனப் பரவியிருக்கும்
    பிரபஞ்ச ஜோதி!

    கருமேகங்கள் கடத்திப் போயிருக்கும்
    மெய்ப்பொருள்

    உதிப்பதும் பின் மறைவதுமாய்
    கேளிக்கும் காதலன்

    பரிமாணங்கள் பல அணிந்தாலும்
    உயிர்கட்கு ஆதாரமாகிச்
    சோறூட்டிச் சீராட்டும்
    நீயே எங்கள் சாமி – உன்
    சேயே இந்த பூமி!

    *****

    சூரியன் எனும்  வானக்கூரையின் வண்ணவிளக்கு, நம் கண்களுக்குப் படைக்குதே ஒப்பற்ற விருந்து. இருளும் ஒளியும் ஒருங்கே தெரிவது இறைவன் உறையும் மனத்தின் காட்சியோ? என்று இயற்கையை இறையோடு பொருத்திப் பார்க்கிறார் திரு. ஆ. செந்தில்குமார்.

    அவ்விடத்தில் தெரிந்த அந்தி வானம்….!

    வானக் கூரையின் வண்ண விளக்கு…
    காணக் கண்களுக்கு படைத்தவோர் விருந்து…!
    கொண்டல்கள் நுரையாய்ச் செங்கடல் வானில்..
    தென்படும் காட்சி தெவிட்டாத அமுது…!

    அலைபேசிக் கோபுரமொன்று ஒய்யாரமாய் நின்று…
    தொலைவானும் தொட்டுவிடும் தூரமேயென்குது போலும்…!
    நிலையாய் நிற்கின்ற காற்றாலை விசிறிகள்…
    அலையலையாய் வீசும் காற்றுக்கேங்குது போலும்…!

    கடல்போல் தெரிந்த ஏரிகள் குளங்கள்…
    சடம்போல் மனதினைக் கொண்ட மனிதரால்…
    பரப்பில் சுருங்கிக் குட்டையாய்க் குறுகி இருக்கின்றபோதும்…
    நிறைவாய்த் தெரிந்தது ஆதவனின் பிம்பம்…!

    செம்மையும் கருமையும் ஒருங்கே தெரிவது…
    இம்மையும் மறுமையும் இங்குதான் என்குது…!
    இருளும் ஒளியும் ஒருங்கே தெரிவது…
    இறைவன் உறையும் மனமே என்குது…!

    *****

    ”தண்ணொளி வீசும் வெண்ணிலவே! கார்முகில் உனை மறைத்தாலும் அதிலும் காட்டுகிறாய் ஓர் எழில்! காதலர்களுக்கு நீயே ஓவியம்; உனைக்கண்டு அவர்கள் படைப்பர் காதல் காவியம்” என்கிறார் திரு. ரா. பார்த்தசாரதி.

    வெண்ணிலவே!

    மயக்கும் மஞ்சள் வெய்யில் பரவி நின்றதே
    தன் ஒளியை நீரிலும் மேகத்திலும் பாய்ச்சுதே
    கருமேகங்கள் இடையே மறைந்து காணுதே
    தண்ணொளி வீசி வெண்ணிலவாய்க் காட்சியளிக்குதே!
    இனிய மாலைப்பொழுதில் தென்றலாய் வீசுகின்றாய்
    காதலர்களுக்கு இன்ப உணர்ச்சியை ஊட்டுகின்றாய்
    எங்களுக்காகக் காற்றாலை இயக்கி மின்சாரம் அளிக்கின்றாய்
    நாட்டிற்கும், வீட்டிற்கும் ஒளிதந்து உதவுகின்றாய்!
    கைம்மாறு கருதாது இனிய இரவைக் குளிர்விக்கின்றாய்
    கருமுகில்கள் உன்னை மறைத்தாலும் ஒளி தருகின்றாய்
    மேகங்கள் இடையே எழில் ஓவியமாய்க் காட்சியளிக்கின்றாய்
    நீரில் உன்முகம் ஒளி பிம்பமாய்த் தெரிகின்றாய்!
    அந்தி வானமே இரவின் எழிலோவியம்
    உன்னைக் கண்டு காதலர்கள் பாடுவதோ காதலோவியம்
    தாரகையோடு இருந்து தனித்தே அழகாய்க் காண்கிறாய்
    காதலியை வர்ணிக்க நீயே எடுத்துக்காட்டாய் இருக்கின்றாய்!

    *****

    ”மனத்தில் ஏற்றுவோம் மனிதமெனும் தீபம்; அதில் பொசுங்கிப் போகட்டும் சுயநலமெனும் பேதம்” என்று நல்லுரை நவில்கின்றார் திரு(மிகு?). ஜீவா நாராயணன்.

    மனிதமென்னும்  தீபம்
    எங்கும்  உதிக்கின்ற  சூரியன் 

    ஒன்றே தானாகும்
    எங்கும்  விரிகின்ற  பூமி 
    ஒன்றே  தானாகும்

    உறக்கங்கள்  வேறு 
    கனவுகள் ஒன்றே  தானாகும்
    இலக்குகள்  வேறு 
    இலக்கங்கள் ஒன்றே  தானாகும்
    மொழிகள்  வேறு 
    மனங்கள் ஒன்றே  தானாகும்

    இங்கு  எல்லா 
    உயிர்களும்  ஒன்றே
    இந்த  ஒற்றுமை
    காணவதே  நன்று

    மனசிலே   ஏற்றுவோம்
    மனிதமென்னும்  தீபம்
    இதில் பொசுங்கிப்போகும் 
    சுயநலமென்னும் பேதம்

    உதிக்கட்டும்  நாளை
    புதிதான விடியல்!
    பிறக்கட்டும்  நாளை
    முறையான  மாற்றம்! 

    *****
    மின்சாரம் இல்லா நிலவுலகம் பெரும் விசாரம் தருகின்றது மாந்தர்கட்கு! அவ்வேளையில் ஏற்படும் அல்லல்களை நகைச்சுவையாகப் பட்டியலிட்டு நம்மை இரசிக்கவைக்கிறார் திரு. சி. ஜெயபாரதன்.

    கனல் சக்தி, எரிசக்தி, மின்சக்தி 

    வீட்டில் மின்விளக்கு யாவும்
    கண்மூடி விட்டன!
    தேர்வுக்குப் படிக்க முடியாது!
    மின் விசிறியும்
    விழித்துக் கொண்டு நிற்கிறது!
    எழுந்து கொண்ட பேபி
    அலறல்
    செவிப்பறை கிழிக்குது!
    மிக்ஸிக்கு
    மூச்சுப் போய் விட்டது!
    மாவரைக்க
    முடியாமல் போச்சு!
    மின்சக்தி இன்றேல், வீட்டில்
    நாட்டில் எல்லாம்
    வேலை நிறுத்தம் தான்!
    சூரியன்
    ஊழியம் செய்து
    விடை பெற்றுப் போகுது!
    காற்றாடி களுக்கும்
    கை ஓய்ந்து
    கரன்ட்டில்லையே
    பராபரமே!
    ஓலை விசிறி எடப்பா !
    அரிக்கேன்
    விளக்கைத் துடைப்பா!

    *****

    ”பணிமுடித்துத் தன் ஒளிமுகத்தை நீர்நிலைக் கண்ணாடியில் பார்த்துப் பரவசமடையும் கதிரவனே! வேலையில்லாச் சோம்பேறி மனிதர்கள் வாழ்ந்திட வழிசொல்லுவாய்” என்று வினவுகின்றார் திரு. செண்பக ஜெகதீசன்.

    நீயே சொல்…

    காலையில் கிழக்கே பணிதொடங்கி
    காசினி முழுதும் ஒளிகொடுத்து,
    மாலை வானை அழகாக்கி
    மண்ணில் நீர்நிலை முகம்பார்த்தே
    மேலைக் கடலில் பணிமுடிக்கும்
    மேன்மை மிக்கக் கதிரவனே,
    வேலை செய்யா மனிதரவர்
    வாழ்ந்திட வழியைச் சொல்வாயே…!

    *****

    அந்தி அத்தமிக்கும் நேரம், சந்திரனும் சூரியனும் காதல் புரியும் நேரம்! அக்காதலர்களை வரவேற்க விண்மீனும் நீரிலிடும் கோலம் என்று வானிடை நிகழும் வண்ணக் காட்சிக்கு அழகாய் எண்ணத் தூரிகை தீட்டுகின்றார் பெருவை திரு. பார்த்தசாரதி.

    அந்திப்போது..!

    அந்திசாயும் நேரத்தில் மட்டுமே வருவாள்
    ……….ஆதவனைத் தேடும் பணிமேற் கொள்வாள்..!
    மந்திரம் செய்வித்தது போலவன் மறைவான்
    ……….மாற்றமிலாமல் நிகழும் நித்தமிது இயற்கை..!
    சந்தி ரோதய மென்றவளை அழைப்போம்
    ……….சூரிய அஸ்தமன மென்றவனைக் கூறுவோம்..!
    சந்திரனும் சூரியனும் காதல்செய்யும் நேரம்
    ……….செவ்விதழ் போலக் கடலேழும் காட்சிதரும்..!

    காலையில் ஆதவனும் இரவினில் சந்திரனும்
    ……….காலமாற்றம் செய்கின்ற காதலர்கள் ஆவரோ..!
    மாலைத் தென்றலும் மலர்ச்சோலை புகுந்து
    ……….மணம் வீசும்! அக்காதலர்களை வாழ்த்துதற்கு..!
    கோலமிட்டு அவர்களை வரவேற்பது போல்
    ……….கடலில் விண்மீனும் தண்ணீரில் புள்ளியிடும்..!
    பாலமாக அமையும் அங்கே அந்திப்போது
    ……….பாங்காக அவர் களிருவரும் சந்திப்பதற்கு..!

    *****

    ”காற்றாலைகள் கவரி வீச, கார்முகில்கள் தாரெடுத்து வாழ்த்திவர, மக்களும் மாக்களும் தொழுதெழ, நித்தமும் நடக்கும் காய்கதிர்செல்வனின் நித்திரை ஒத்திகை இது!” என்று புளகிக்கிறார் திருமிகு. அவ்வைமகள்.

    ஒருகாலமன்றிது நித்திய நாளீட்டு நித்திரைக்கலை ஒத்திகை!!
    கருத்திரையுமொளித்திரையும் ஒருமியே விழித்து உறைந்திடுமப்போதிலே
    பருத்திரையுள் புகுந்த கதிர் நீரிலுறை விளம்பிட நித்திலத்துகிலாகுதோ?
    மேருவெனவசையாமல் நிற்கிற விசிறிகாள் சாமரமங்கு வருதோ?
    மருமலரெடுத்துவோ நெடியமுகிலேழும் தாரேந்தி வாழ்த்தும் வலமோ?
    பெருமண்ணே விணாதியாய் மெய்மொழிக்கூறுதோ திருவிக்ரமக்கோபுரம்?
    பருதிமதி பருதியும் பாரும் கடல்விசாலமும் பூராயன் இல்விலாசமோ?
    திருமருகத் தாவரப்பட்சியும் மாக்களும் மக்களும் தொழுதெழுந்து விரைக!
    ஒருகாலமன்றிது நித்திய நாளீட்டு நித்திரைக்கலை ஒத்திகை!!

    *****

    இருளும் ஒளியும் கலந்த இக்காட்சிக்குக் கவிஞர்கள் தம் கற்பனையால் ஒளியூட்டி அற்புதமாய்க் கவி படைத்துவிட்டார்கள். அவர்களுக்கு என் பாராட்டுக்கள்!

    அடுத்து வருவது இவ்வாரத்தின் சிறந்த கவிதையென நான் தேர்ந்தெடுத்தது…

    இரவா…? பகலா….?
    என வியக்கும்
    மயங்கொலிப்
    பிழை….
    கார்மேகத்தின்
    மடியில்
    கதிரவனின்
    கிரணங்கள்
    கண்ணுறங்கும்
    தாய்மைக் கோலம்…!
    இரவுக்கும் பகலுக்கும்
    இடையிலான
    எழிலோவியம்…!
    வான்மேகம்
    புகையுண்ட
    ஓவியமாய்
    எழில்கொண்ட காட்சி…!
    விண்மீனை
    வரவேற்கும்
    அந்தி வானத்தின்
    சிவப்புக் கம்பள
    வரவேற்பு!

    இருளும் ஒளியும் இணைந்து இரவா? பகலா? என மருளவைக்கும் இக்காட்சியில், வான்மேகம் கைபுனைந்து இயற்றாக் கவின்பெரு வனப்பாய்க் காட்சிதர, விண்ணிலே தோன்றவிருக்கும் உடுக்களுக்கு அந்தி வானம்  செந்நிறக் கம்பளம் விரித்து வரவேற்புக் கொடுக்கின்றது என்று சுவையாகப் பாடல் புனைந்திருக்கும் திருமிகு. டி. திலகவதியை இவ்வாரத்தின் சிறந்த கவிஞரென அறிவித்துப் பாராட்டுகின்றேன்.

     

     

    Share
  • படக்கவிதைப் போட்டி 155-இன் முடிவுகள்

    -மேகலா இராமமூர்த்தி

    நீரில் துள்ளும் மீனைப் பிடிக்கும் ஆவலில் துணியைப் பிடித்திருக்கும் இந்தச் சிறார்களின் முகத்தில் மகிழ்ச்சி துள்ளிவிளையாடக் காண்கிறேன்!

    கிராமத்துச் சிறுவர்களின் இயல்பான இச்செயலை வெகு நளினத்தோடு படம்பிடித்துவந்திருக்கும் திரு. வெங்கட் சிவாவுக்கும், இந்தப் படத்தைப் போட்டிக்குத் தேர்வுசெய்து தந்த, வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர், திருமதி. சாந்தி மாரியப்பனுக்கும் என் நன்றி!

    தூண்டில்போட்டுப் பிடித்தால்தான் மீன் சிக்குமா? இல்லை…எம்போல் துணிபோட்டுப் பிடித்தாலும் அது சிக்கும் என்று நமக்குச் சொல்லித்தருகிறார்கள் இச்சிறுவர்கள்!

    இனி, இப்படத்திற்குக் கனித்தமிழில் கவிபாட கவிஞர்களை அன்போடு அழைக்கிறேன்!

    *****

    ஐப்பசி மாத அடைமழையில் குட்டையில் துள்ளும் குட்டிமீன்களைத் துணிபோட்டுப் பிடிக்கக் காத்திருக்கும் சிறுவர்களை நமக்கும் காட்டிக் குதூகலிக்கிறார் திரு. ஆ. செந்தில்குமார்.

    சிறு வயதில்…
    ஐப்பசி மாசம் அடமழ…
    அப்பவும் குட்ட நெரம்பல…
    முட்டியளவு தண்ணிக்குள்ளே…
    குட்டி குட்டி மீனுங்க…
    கொசகொசன்னு மேயுது…
    கொண்டு வாடா துண்டத்தான்…
    கொஞ்சமாச்சும் பிடிக்கலாம்…
    அஞ்சு நாளு பள்ளிக்கூடம்…
    அதுக்கு பெறகு லீவுடா…
    அப்ப அங்க போகலாம்…
    அத பாஞ்சிபாஞ்சி பிடிக்கலாம்…
    ஒன்னு ரெண்டு மூனுடா…
    சொல்லி துண்ட வீசுடா…
    கெண்ட சிக்கும் பாருடா…
    கெண்ட ரெண்டு சிக்கிகிச்சு…
    கெட்டியாக பிடிச்சுக்கோ…
    நமக்கு கெடச்ச ரெண்டுமே…
    நழுவி ஓடப் பாக்குது…
    கொண்டு போயி சேக்கனும்…
    கொழம்பு வச்சி திங்கணும்…!

    *****

    கண்ணி வலையில் சிக்காத சின்னஞ்சிறு மீன்களைத் தலைகட்டும் துணியில்  பிடிக்கும் சிறுவர்களின் சாமர்த்தியத்தை வியக்கிறார் திரு. செண்பக ஜெகதீசன்.

    கிராமத்திலே…

    வலையைப் போட்டு மீன்பிடிக்க
    வசதி யில்லா வேளையிலே,
    தலையில் கட்டும் துண்டெடுத்துத்
    துணிவாய் நீரில் அரிக்கின்றார்,
    கலைந்து செல்லும் சிறுமீன்கள்
    கண்ணி வலையில் சிக்காதே,
    நிலையை யுணர்ந்த செயல்பாட்டை
    நீங்களும் பார்க்கலாம் கிராமத்திலே…!

    *****

    ”சேலைத் தூண்டிலில் பிடித்த மீன், குழம்பில் கொதித்தபோது உணர்ந்தேன் சேலை வாசம்; ஆயினும் என் தொண்டைக் குழிக்குள் மாட்டியதே முள்!”  என்று மீனைக்கொன்று சமைத்த உணவு தந்த குற்றவுணர்வை அழகாய் விவரிக்கிறார் திருமிகு. சக்திப்ரபா.

     மீனும் நானும்

    கொஞ்சம் கொஞ்சமாய்
    மெல்ல அடங்கியது மூச்சு
    முதலில் துள்ளி
    பின் துவண்டு விழுந்தது
    உயிர் துறந்தும்
    எமக்குணவாகியது
    குழம்பில் தக்கையாய்க்
    கொதித்த போதும்
    அதன் உடலெங்கும் சேலை வாசம்
    ஏனோ
    என் தொண்டைக் குழியில் தான்
    மாட்டிக் கொண்டது முள்!

    *****

    இரண்டாக நாலாக மடித்த  துணியை மீன்பிடிக்கும் வலையாக மட்டுமல்லாது, நீரைத் தூய குடிநீராக்கும் வடிகட்டியாகவும் பயன்படுத்தலாம் எனும் எளிய அறிவியல் வழிமுறையை இனிய பாடலில் விளக்குகிறார் திருமிகு. அவ்வைமகள்.

    பருத்திச்சேலைத்துண்டோ தாவணியோ வேட்டித் துண்டோ போதுமே!
    ஏரித்தண்ணி – கொளத்துத்துத் தண்ணிய குடிநீராக்க உதவுமே!
    எங்க பாட்டன்தாத்தான் சொல்லிப்போன தூய்மைப்பாட்டு சேதியை
    அகிலமெங்கும் சொல்லிச் சொல்லி நம்மைப் போற்றுறாங்க பாருங்க!

    ஒசத்தியான வடிகட்டிங்க! செலவில்லாத வடிகட்டிங்க! – ஓஹோ!
    வாட்டமான வடிகட்டிங்க! சுலபமான வடிகட்டிங்க!
    காலராக்கிருமி முதல் பாசி, முட்டைப்புழு பூச்சி வரை
    எல்லாம் தள்ளிப் போக்குத்துங்க! எல்லாம் தள்ளிப்போகுதுங்க!

    ஒத்தயாப்போடாதீங்க ரெட்டையா-நாலாப் போட்டிடுங்க!
    மடிச்சிமடிச்சிப் போடும்போது சல்லிக்கண்ணு சிறுத்திடுதே!
    ரெண்டுன்னா நாப்பது நாலுன்னா இருபது! மைக்ரான் அளவு அப்படி!
    சேலைக்கொண்டு வடிகட்டினா நீரை அப்படியே குடிக்கலாம்!

    அமெரிக்காவின் பள்ளிப்பாடத்திலே நம்மூர் பருத்திச் சேலை வடிகட்டி!
    ஐரோப்பா பள்ளிப்பாடத்திலே நம்மூர் பருத்திச்சேலை வடிகட்டி!
    கீழைநாட்டுப் பாடத்திலயும் நம்மூர் பருத்திச்சேலை வடிகட்டி!
    செய்து பார்த்து வியக்குறாங்க! வாழ்த்தி வாழ்த்தி வணங்குறாங்க!

    எங்க பள்ளிக்கூடப் பாடத்துக்கு நிரூபணம் பண்ணறோங்க – நாங்க
    நிரூபணம் பண்ணறோங்க! ஏரிக்குள்ள வடிகட்டிய கசண்டு
    கொண்டு காட்டணுங்க! கசண்டுக்குள்ள கிருமியோட்டம் காட்டணுங்க!
    பளிங்கு போல தண்ணி ஜோரா வடியுதே! நீங்க பார்த்திடுங்க!

    *****

    துணியில் மீன்பிடிக்கும் சிறுவரின் செயல் மிகவும் பாதுகாப்பானது. ஆனால் கடலில் மீன்பிடிக்கச் செல்லும் மீனவர் நிலையோ ஒவ்வொரு நாளும் துயரம்! அவர்கள் துயர்களைந்து உயர்வாழ்வளிக்கும் வழிவகை காணவேண்டும் என்ற நியாயமான ஆசையைத் தன் பாடலில் பதிவுசெய்துள்ளார் பெருவை திரு. பார்த்தசாரதி.

    வாழ்வுக்கும் தொழிலுக்கும் வகையாயொரு யோசனை..!
    உப்புநீரில் மீன்பிடிக்க ஓராயிரம் வழியுண்டு
    ……….ஓரளவு தேர்ச்சிபெற்றால் மட்டுமே சாத்தியம் *
    கப்பலிலே சென்று மீன்பிடிக்கும் வகையால்
    ……….கரைசேராமல் தவிக்கும் அபாயம் அதிலுண்டு *
    தப்பாமல் கரைதிரும்பி வந்து விடுவாரெனத்
    ……….தகுந்த பதிலொன்றும் சொல்வ தற்கில்லையே *
    அப்பாவை எதிர்பார்த்து அவர் குழந்தைகள்
    ……….அலைகடலை நோக்கி நாளும் காத்திருக்கும் *

    வெப்பம்மழை சூறாவளி சுழலும் பேரலையிவ்
    ……….விதுவெலாம் இவர்களுக் கொரு பொருட்டல்ல *
    சிப்பாய்கள் சீருடையில் சிட்டாகப் பறந்துவந்து
    ……….சிறை யெடுப்பார்!தானியங்கித் துப்பாக்கியுடன் *
    முப்போதும் விழித்து மீன்பிடிக்கும் தொழிலில்
    ……….முதலில் கரைசேருவதுதன் அதிலே முக்கியம் *
    இப்போதும் கரைதிரும்பாத எண்ணற்ற பலர்
    ……….இருந்தும்..யாரும் கண்டுகொள்ளா நிலைதான் *

    ஒப்பாரி வைத்தழுதால்கூட இங்கு ஒருவருமே
    ……….உதவிக்கு வரமாட்டார் ஒதுங்கியே நிற்பாரவர் *
    எப்போதுமிருக்கும் ஆபத்தைப் புரிந்து கொண்டு
    ……….இதற்கொரு வழியும் மீன்வளமும் தேடவேணும் *
    இப்பவும் நாம் பார்க்கின்றோம்…கிராமத்தில்
    ……….இருகையால் வலைவீசி மீன்பிடிப்பதை!அதிலும்*
    துப்பட்டாவை விரித்து மீன்பிடிக்கும் சிறுவர்
    ……….செயலே சிறந்ததுபோல் சிலசமயம் தோன்றும் *

    *****

    மீன்பிடிக்கும் சிறாரின் செயல், கவிஞர் ஒவ்வொருவரையும் ஒவ்வொரு கோணத்தில் சிந்திக்க வைத்திருப்பது சிறப்பு! அதன்பயனாய் எமக்குக் கிடைத்திருக்கும் கவிதைகளோ வனப்பு! பாராட்டுக்கள் கவிஞர்களே!

    இனி இவ்வாரத்தின் சிறந்த கவிதையாய்த் தெரிவுபெற்றிருப்பது…

    இழந்த வாய்ப்பு… 

    கொடியில் காய்ந்த சேலை
    கோடை வெயிலிலும்
    குளம் குட்டைகளில் நட்புடன்
    கூடி மீன்பிடிக்கும் வேலை

    செய்யவோ களைப்பில்லாத கலை
    சேர்ந்து விளையாடி
    நிற்காமல் துள்ளும் மீன்பிடிக்க
    நீரில் போடும் வலை

    எழிலான கிராமத்தில் இருந்து
    ஏக்கம் இல்லாமல்
    துள்ளித் திரிந்து தோழருடன்
    தூண்டில் போட்ட விருந்து 

    அகப்பட்ட துணியுடன் சென்று
    ஆறு குளங்களில்
    வலைவீசி மீன்பிடிக்க
    வாய்ப்புகள் இல்லாமல் இன்று 

    கிராமங்கள் நகரமாகி நிற்குதே!
    கீழிறங்கும் வெயிலால்
    மழையின்றி ஆறுகுளம் வற்றி
    மாசுடன் குடிநீரும் விற்குதே! 

    கிராமத்துக் குழந்தைகளுக்குக் கிடைக்கும் பல்வகையான வாழ்வியல் அனுபவங்கள் நகரத்துக் குழந்தைகட்கு வாய்ப்பதில்லை. அதில் ஒன்று…குளம் குட்டைகளில் இறங்கி இன்பமாய் மீன்பிடிப்பது!

    அன்று மழைக்குப் பஞ்சமில்லை; அதனால் தண்ணீர்ப் பஞ்சமில்லை. இன்றோ காடுகளைக் கொன்றழித்தோம்! ஏரி குளங்களைத் தூர்த்து வீடு கட்டினோம்! அதனால் வான் மழையுமில்லை; அப்படியே மழைபெய்தாலும் அதனைத் தேக்கிவைக்க ஏரி குளங்களும் இல்லை!

    விளைவு? குடிநீரையும் காசுகொடுத்து வாங்கும் அவலம்! இதே நிலை நீடித்தால் மாசில்லாத காற்றையும் நாம் காசுகொடுத்து வாங்கும் காலம் வெகுதொலைவில் இல்லை!

    இயற்கையைப் பேணாத மானுட வாழ்வின் இன்றைய இழிநிலையை, சிறார்களின் அன்றைய இனிய வாழ்வோடு ஒப்பிட்டுக் கவி வடித்திருக்கும் திருமிகு. நாகினியை இவ்வாரத்தின் சிறந்த கவிஞராய் அறிவித்துப் பாராட்டுகின்றேன்.

     

     

    Share
  • படக்கவிதைப் போட்டி 154-இன் முடிவுகள்

    -மேகலா இராமமூர்த்தி

    நெடிதுயர்ந்து நிற்கும் மரங்களையும் கீழே வீழ்ந்திருக்கும் அவற்றின் வரிநிழலையும் அழகாய்ப் படமெடுத்து வந்திருக்கிறார் திரு. ஆய்மன் பின் முபாரக்.  இப்படத்தை இவ்வாரக் கவிதைப் போட்டிக்காகத் தெரிவுசெய்து தந்திருக்கின்றார் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி. சாந்தி மாரியப்பன். இவ்விருவரும் என் நன்றியறிதலுக்கு உரியோர்.

    வரிசையாய் வானளாவி நிற்கும் இம்மரங்களின் தண்டுப்பகுதியும் கிளைகளுமே பார்வைக்குக் கிடைக்கின்றன. அவற்றின் இலைகள் துல்லியமாய்த் தெரியவில்லை. எனினும் பக்கவாட்டில் காணப்படும் இலைகளின் தோற்றம் வேங்கையை ஒத்திருப்பதால் மேலிருந்து புலிகள் சில கீழே பாயக் காத்திருப்பது போன்றதோர் தோற்றமும் கிடைக்கிறது.

    வேங்கை மரம் (Pterocarpus marsupium) என்றொரு மரம் நம் பண்டைத் தமிழ்நிலத்தில் பிரசித்தம். பொன்வண்ண மலர்களைச் சுமந்திருக்கும் அம்மரங்கள் பார்ப்பதற்கு உண்மையான வேங்கையைப் போலவே தோற்றம் காட்டும் என்பதைச் சங்க இலக்கியங்கள் நமக்கு அறியத்தருகின்றன. வேங்கை மலர்களால் தொடுத்த அசைகின்ற மாலைபோலக் கிடக்கும் புலிக்குட்டிகளை ஈன்று பசித்திருந்த தாய்ப்புலியை நற்றிணைப் பாடலொன்று நமக்கு அடையாளம் காட்டுகின்றது.

    கல்அயல் கலித்த கருங்கால் வேங்கை
    அலங்கல்அம் தொடலை அன்ன குருளை
    வயப்புனிற்று இரும்பிணப் பசித்தென வயப்புலி… (நற்: 383)

    தம் கற்பனை ஊற்றைக் கவிதையாய்ப் பாய்ச்சக் கவிஞர்கள் வரலாம் இனி…!

    *****

    கவின்மிகு காடுகளை அழித்ததால் மழை பொய்த்தது; நிலம் வறண்டது; விலங்குகள் அழிந்தன; புவிவெப்பம் உயர்ந்தது. இனியேனும் இயற்கையைக் காத்து, காற்றையும் வருங்காலத்தில் விலைகொடுத்து வாங்கும் அவலத்தைத் தடுப்போம் என்கிறார் திரு. ஆ. செந்தில் குமார். 

    இயற்கைவளங்களைக் காப்போம்… !

    கிளைகள் படர்ந்த மரங்களடர்ந்த சோலை…
    சோலை நடுவேயொரு செம்மண் சாலை…
    காலங் காலமாய் இருந்த இந்நிலை…
    காலத்தின் கோலத்தால் அழிவதேநம் கவலை…

    கிளைகள் படர்ந்தது…மரங்க ளடர்ந்தது…
    சோலை விரிந்தது… நிழலைத் தந்தது…
    தென்றல் வந்தது… இதமாய் இருந்தது…
    தண்ணென் றிருந்தது.. உள்ளம் மகிழ்ந்தது…

    காடுகள் அழித்தோம்… மழையினளவு குறைந்தது…
    காடுகள் அழித்தோம்… நிலமனைத்தும் வறண்டது…
    காடுகள் அழித்தோம்… வளமிகுஇயற்கை சிதைந்தது…
    காடுகள் அழித்தோம்… உலகின்வெப்பம் உயர்ந்தது…

    காடுகள் அழித்தோம்… விலங்குகள்பலவும் அழிந்தன…
    காடுகள் அழித்தோம்… நீர்நிலைகள்பலவும் வற்றின…
    காடுகள் அழித்தோம்… காற்றில்நச்சுக்கள் மிகுந்தன…
    காடுகள் அழித்தோம்… பருவநிலைகளும் மாறின…

    இன்றைய தலைமுறை மனிதர் நாம்…
    தண்ணீரை விலைகொடுத்து வாங்குகின்றோம்…
    இனிவரும் தலைமுறை மக்கள் தமக்கு…
    இனிய காற்றுக்கும் விலைதரும் நிலைவருமே…

    இனியேனும் விழித் தெழுவோம்…
    இயற்கை வளங்களைக் காத்திடுவோம்…
    இனிவரும் தலைமுறை மக்களுக்கு…
    இயற்கையைச் சிதைக்காது விட்டுச்செல்வோம்…

    *****

    விரிந்திருக்கும் மரக்கிளைகள் தேர்ந்த ஆடலரசியின் அபிநய முத்திரைகளாய்க் காட்சியளிக்கின்றனவே என வியக்கிறார் திருமிகு. திலகவதி.

    பரதத்தின் பாவனைகளா
    வாழ்நாள் முழுவதும் 
    இதன் விரல்களில்….
    ஆடலரசியா…
    இவள்…
    அபிநயம் பிடிக்கிறாள்…

    *****

    மரங்களை வெட்டி ஈட்டும் பணம் நிம்மதி தாராத தனம்; அதுதவிர்த்துச் சாலையெங்கும் நிழல்தரு மரங்களை வளர்ப்போம்; நீண்ட ஆயுளைப் பெறுவோம் என்கிறார் திருமிகு. நாகினி.

    போற்றப்படும் மண்வாழ்வு

    நின்றுநி ழல்தொட ரும்பாதை யென்றொரு
    .. நிம்மதி இல்லாமல் சேருந்த னம்
    அன்றாட வேலையென் றாகிம ரம்வெட்டி
    .. ஆயிர மாயிரம் ஈட்டும்ப ணம்

    சங்கடம் நீக்கலா மென்றெண்ணி டும்மாந்தர்
    .. சாலையில் சூடுதாங் காமல்வீழ் தல்
    இங்கிவர் பாடுக ளென்றாகி டுந்துயர்
    ..  இற்றிட காவலா கும்மரம் நல்

    வீரிய மாகிவ ளர்கின்ற நல்வித்து
    .. விண்ணையும் முட்டிட ஆரோக்கி யம்
    ஊரிலுள் ளோரெவர்க் குந்தரும்
    .. உற்றவோர் தூணாகி மாசிலா தம்

    காற்றுட னாடிடுஞ் சோலையின் மென்மையில்
    .. காலமெல் லாம்வாழ சாலையெங் கும்
    ஊற்றாய்ம ரம்வளர்க் கும்மனி தர்பணி
    .. உன்னத ஆயுளை ஏற்றமாக் கும்

    ஆற்றலும் நல்மனதின் பேரறி வும்பெறுவோர்
    .. அன்றாடம் நிற்கநி ழல்தரும் பேர்
    நாற்றென ஓங்கும ரம்வளர்ந் தால்நிதம்
    .. போற்றுத லானவாழ் வாகுமண் வேர்! 
     
    *****

    ”சாலையை விரிவுபடுத்துகிறோமென்று சோலையை அழித்து நாட்டைப் பாலையாக்காதீர்!” என்று இயற்கையைக் காக்கமறந்த மனிதரை எச்சரிக்கிறார் திரு. செண்பக ஜெகதீசன்.

    வெட்டாதே…

    சோலை வனத்திலே
    சொகுசாய்ச் செல்லத்தான்,
    பாதை வகுத்தனர்
    நம் முன்னோர்..

    முன்னேறிவிட்டதாகச் சொல்லும்
    மனிதா நீ,
    சாலை விரிவுபடுத்துகிறோமென்று
    சாகடித்துவிடுகிறாயே
    சாலையோர மரங்களை..

    முன்னோரெல்லாம்
    மரம் நட்டனர்,
    வெட்டுகிறாயே நீ..

    நிழலை அழித்துவிட்டு
    வெயிலில் செல்கிறாயே,
    வேகமாய்ச் செல்கிறாயே-
    அழிவுப் பாதையில்..

    வேண்டாம் இந்த
    விபரீத விளையாட்டு,
    வெட்டாதே மரத்தை..

    வெட்டுவது தேவையெனில்,
    நட்டுவிடு புதிதாய்-
    வெட்டுமுன்னே..

    மரம் வளர்ப்போம்,
    மண்ணைக் காப்போம்…!

    *****

    ”காவிரி தந்த நீர்வளமும் நிலவளமும் கானலானது!  மீதமிருக்கும் காடுகளையும் கழனிகளையும் அழித்து எண்ணெயும் எரிவாயுவும் எடுக்கின்றார். எல்லா வளங்களும் சேதமாகித் தமிழ்த்தேசமே பாலையானதே” என்று வருந்துகின்றார் பெருவை திரு. பார்த்தசாரதி.

    காவிரி தந்த பூவெழில் சோலை..!
    அன்று….
    தலைக்காவிரியில் தோன்றிய சிறுதுளியே பின்
    ……….தமிழகத்தைப் பெரு வளமாக்கியதாக வரலாறு *
    கலையுலகில் காவிரிக்கு என்றுமே சிறப்புண்டு
    ……….காரணப்பெயராம் பொன்னி யெனும் புகழுமுண்டு*
    குலைதள்ளும் வாழையும் வயலுமே செழிக்க
    ……….கருங்கயல் விளையாடிய காவிரியே காரணம் *
    “மலைத்தலைய கடற்காவிரியென” பட்டினப்
    ……….பாலையுமதன் மகத்துவத்தை எடுத்துரைக்கும் *

    மூன்று போகம் விளைந்தெங்கள் பூமிமுழுதும்
    ……….முத்தாகத் தவழ்ந்து வருமெங்கள் காவிரியாம் *
    அன்றெவரோர் வயல் வெளியை ஆராய்ந்தார்
    ……….அகழ்ந்துதோண்டி மண்ணை ஆய்வு செய்தார் *
    கொன்றழிக்கும் மீத்தேன் கிடைக்கும் என்றார்
    ……….கழனியும் காடுமழிக்கக் களத்தினில் இறங்கினார் *
    இன்று வற்றிய நீர்வளமும் வறண்டநிலமுமே
    ……….ஈன்றதின்று வெறும் வாயுவையும் எண்ணெயும்*

    இரைக்கும் பெருங்கடல் சூழ்ந்த நம்நாடுதான்
    ……….இறையன்புக்கு எடுத்துக் காட்டாய் விளங்கும் *
    நிறை நெஞ்சம்கொண்ட பாவலரும் புலவருமே
    ……….நிம்மதியாகப் பாவிசைக்கத் தகுந்த இடம்தான் *
    உரைக்கும்படி சொல்வேன் யாவர்க்கு முகந்த
    ……….உயர்ந்தநம் நாட்டிற்கிணை இல்லை! ஆனால்
    தரையிலின்று தன்குகின்ற தண்ணீர் இல்லை *
    ……….கரைபுரண்டு நீரோடிய ஆற்றில் மணலில்லை

    *****

    ”தலைவன் ஒருவன் தடம்பதித்து நடப்பதற்காகப் பாதைவகுத்து, மரக்குடை விரித்துக் காத்திருக்கின்றது இயற்கை. அவன் தடம்பதித்தால் பூக்கள் மாரியாய்ச் சொரிந்து அவனை வாழ்த்தும்” என்று தன் கற்பனைச் சிறகைக் கவிதையில் விரித்திருக்கின்றார் திருமிகு. சக்திப்ரபா.

    தலைவனின் தடம்

    இன்றைக்கேனும்
    ஒரு மாமனிதன்
    நடந்துவிட மாட்டானாவென
    மணல் மெத்தையிட்டு
    மரக்குடை விரித்து
    காத்திருக்கும் பாதை.

    கால்கள் பாவாத அரிய வழியிதென
    கண்டுணரும் தலைவன்,
    கோடியில் ஒருவன்,
    தடம் புரளாத எளியன்,
    தடம் பதிக்கும் தருணம்,
    பூக்களும் மலர்ந்து
    வாழ்த்துக்கள் சொரியும்.

    *****

    கனியும் நிழலும் தந்து எம்மைக் காக்கும் மரங்களே! நீங்கள் வாழவேண்டும்! நீங்கள் வீழ்ந்தாலும் மீண்டும் விதைபோட்டு உம்மை வளர்ப்போம்! மண்ணைக் காப்போம்!” என்று சூளுரைக்கிறார் திரு. சி. ஜெயபாரதன்.

    மரங்களை வளர்ப்போம்

    பச்சை மரங்களே !
    பழங்கள் தரும் மரங்களே !
    நிழல்தரும் மரங்களே !
    இளநீர் தரும் மரங்களே !
    நீரின்றிக்
    காய்ந்த மரங்களே !
    வேரறுந்து
    விழுந்த மரங்களே !
    முதிர்ந்து
    மூப்படைந்த மரங்களே !
    எரிந்துபோன
    பரிதாப மரங்களே !
    எங்கள் வீட்டு ஓடுகளைத்
    தாங்கும் மரங்களே !
    நீங்கள் வாழ வேண்டும் !
    உங்களை வெட்டினாலும்
    வீட்டுத் தூணுக்கு
    வேண்டும்!
    மீண்டும் மரம் விதைப்போம்,
    ஒன்றல்ல !
    ஆயிரம், ஆயிரம் மரங்கள்
    தாய் மண்ணிலே
    தழைக்கும் ! தழைக்கும் !
    தழைக்கும் !

    *****

    மரம் இயற்கை நமக்களித்த வரம்! மரங்களைக் கொன்றழித்ததால் நாம் சந்திக்கும் சீரழிவுகளைச் சிறப்பாகத் தம் கவிதைகளில் பதிவுசெய்திருக்கிறார்கள் கவிஞர்கள். அவர்களுக்கு என் பாராட்டுக்கள்!

    இவ்வாரத்தின் சிறந்த கவிதையாகத் தேர்வாகியிருப்பது அடுத்து…

    புலியின் வரிகள் கிளை நிழலே! நெருங்கித் தருக்கள் தீட்டும் வரைபடமே!
    புலியும் தருவும் பிணையென்றே இறைமை இயற்கை காட்டுதுவே!
    புலிஉண்டாமால் தருஉண்டாமால் என வலிமரமும் வேங்கையானதுவே!
    புலி இல்லாமால் தரு இல்லாமால் இன்று புவித்தரமும் வீழல் கொண்டதுவே!

    புலியே நாட்டின் சின்னமென்பர்; புலியோ அழிந்துபடுதென்பர்
    புலியே அழிந்துபடுமென்றால் நாட்டின் பீடும் சரியுது எனலாமா?
    புலிகள் வாழக் காடில்லை; புலிகள் வழக்காடவில்லை; மறை
    புலிகள் மறைந்தது அவையாலில்லை; இவரேயவற்றின் நமனானார்!

    புலிவழிப் பாடும் புலிவழக்கோடு எம்மூதையர் வாழ்ந்த எம் தாரணியில்
    புலியின் வீரம் இலக்கியமாம்! புலியே இறைவர் வாகனமாம்!
    புலியின் தோல் நகம் புனிதமென்றே போற்றிப் பொருத்தியவர் மகிழ்ந்தனராம்!
    புலிக்காடும் நரநாடும் வேறென்றே வரையறைபோட்டும் அவர் வாழ்ந்தனராம்!

    புலிகள் ஒதுங்கா தக்கை மரம்! தேவதாருவும் தேக்கும், சந்தனமும்
    சேர்ந்தாலங்கே புலியொதுங்கும்!
    புலிகள் பிறப்பு நூதனமே! இறைவன் படைப்பிலவை உன்னதமே! காட்டில்
    மட்டும்

    புலி பிறக்கும்! கூட்டில் பிறக்கா மூடர்களே! மாக்காடில்லா புவியதனில்
    புலி வாழேனென்றே முடிவெடுத்து கருமூடி மரணித்துப் போனதுவே!

    புலியைப்படத்தில் கண்டபடி புலியைக்கதையில் கேட்டபடி போகும் போக்கு
    முற்போக்கு?
    புலியை ஒழித்து காட்டை அழித்து சுயம் வாழ்ந்திடும் வாழ்வு பகுத்தறிவு?
    புலியின் படம் உயர் சுவர் நிறையாய் உள்ளமெல்லாம் சுயவுரிமைகளாய்
    புலிப்பிழையாய் பெருத்த பிழைசெய்து ஓட்டும் உம் வாழ்க்கை வீழ்வதெப்போ?

    நான் முன்னுரையில் குறிப்பிட்டதுபோல் புலியை ஒத்த தோற்றம் காட்டும் வேங்கை மரங்களை நம் தமிழ்ப் புலவர்கள் தம் சங்கப் பாடல்கள் பலவற்றில் சுவைபட விளக்கியுள்ளனர். வேங்கை பூத்தால், பெண்கள், ”புலி…புலி!” என்று ஆரவாரித்து அந்த மகிழ்ச்சியைக் கொண்டாடியுள்ளனர். வேங்கை மரத்தைக் கொண்டாடிக் குதூகலித்த தமிழ்ச் சமூகம், வேங்கை இனத்தையும் போற்றிப் புரந்தது.  அன்று காடுகள் மிக்கிருந்தன; அதனால் புலிகளின் எண்ணிக்கையும் குறையாமலிருந்தது. இன்றோ…காடுகொன்று நாடாக்கினோம்…இல்லை…சுடுகாடாக்கினோம்! அதனால் கம்பீரத்துக்கு இலக்கணம் வகுத்த புலியினமும் அழிவின் விளிம்பில் ஊசலாடிக்கொண்டிருக்கிறது.

    மரங்களை அழியாமல் காத்தால் மட்டுமே காட்டு விலங்குகளையும் நாம் அழியாமல் காக்கமுடியும் எனும் உண்மையைத் தன் கவிதையில் கவனத்தோடு பதிவுசெய்திருக்கும் திருமிகு. அவ்வைமகள் இவ்வாரத்தின் சிறந்த கவிஞராய்த் தேர்வாகிறார். அவருக்கு என் பாராட்டு!

     

     

     

     

     

    Share
  • படக்கவிதைப் போட்டி 153-இன் முடிவுகள்

    -மேகலா இராமமூர்த்தி

    இந்த மூதாட்டியின் முகத்தில் தெரிவது சோகமா? தவிப்பா? இல்லை எல்லா உணர்வுகளையும் அவித்துப் பெற்ற ஞானவரம்பான மோனநிலையா?

    திரு. முத்துக்குமாரின் கைவண்ணத்தில் உருவான இந்தக் கறுப்பு வெள்ளைப் புகைப்படத்தைக் கவிதைப் போட்டிக்குத் தெரிந்தெடுத்துத் தந்திருக்கிறார் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி. சாந்தி மாரியப்பன். புகைப்படக் கலைஞருக்கும் தேர்வாளருக்கும் என் நன்றி!

    உலகில் கலப்படமில்லாத் தூய்மையுடையது தாய்மை. அத்தாய்மை சுமந்துநிற்கும் தன்னலமற்ற தாயை, அவளுடைய முதுமையில் தனித்துவிடாது அரவணைத்துக் காக்கும் அரும்பொறுப்பு அவளின் பிள்ளைகளுடையது!

     இனி கவிஞர்களின் முறை…! வாருங்கள் கவிஞர்களே! தாருங்கள் உங்கள் சிந்தனையில் முகிழ்த்த நன்மலராம் கவிதைகளை!

    *****

    கருவைச் சுமப்பதோடு கருணையையும் சேர்த்தே சுமக்கும் தாயைப் பாரமாகக் கருதும் பிள்ளைகளால் தம் முதுமைக்காலத்தில் தனிமையில் வாடுகின்றனர் தாய்மார்கள் என்று வருந்துகிறார் திரு. ஆ. செந்தில் குமார்.

    முதுமையில் தனிமை…!

    பெற்றெடுத்த பிள்ளைகள் மனதில் சற்று
    ஈரம் குறைந்ததால் ஏற்பட்டதன் விளைவோ?
    கற்றுத் தெளியா வாழ்க்கை நெறியொடு
    சுற்றத்தைப் புறக்கணித்து வாழ்ந்ததன் விளைவோ?

    மனிதம் மறந்த மனித சமுதாயம்
    பணமே முதன்மையெனக் கொண்டதன் விளைவோ?
    புனிதம் நிறைந்த பாசப் பிணைப்புகள்
    கணக்குப் பார்த்து காசுக்கலைவதன் விளைவோ?

    வெளிநாட்டு வேலைகள் டாலர் கனவென
    இளைஞர் பலரும் பறந்ததன் விளைவோ?
    களிப்பென்றெண்ணும் எந்திர வாழ்க்கையில் நாம்
    தொலைத்துவிட்ட கூட்டுக்குடும்ப வாழ்க்கையின் விளைவோ?

    நீதிக்கதைகள் போதிக்க நேரமின்றி பிள்ளைகட்காய்
    பாதிவாழ்வைத் தொலைத்து பொருளீட்டியதன் விளைவோ?
    ஆதிக்கம் செலுத்தி பிள்ளைகள் மனதில்
    சாதிக்க தன்னலத்தை விதைத்ததன் விளைவோ?

    காரணம் பல நூறு இருந்தாலும்
    கருணை உள்ளம் கொண்டவரை
    இருகரம் நீட்டி அரவணைத்து
    அருமருந்தெனும் அன்பைச் சொரிந்திடுவோம்!

    *****

    அசைவற்று நிற்கும் இந்த அன்னையின் பார்வையில் தெரியும் வருத்தம்…அன்பாய் வளர்த்த மகனை விபத்தில் பறிகொடுத்த வேதனையால் வந்ததோ? என்று ஐயுற்று வினவுகின்றார் திரு. ஏ.ஆர்.முருகன் மயிலம்பாடி.

    மாதாவின் மகிமை!!

    ஜன்னலுக்கு அந்தப்புறம்
    அன்னையின் பார்வையில்
    மின்னுகிற வருத்தங்களில்
    என்னென்ன சேதிகளோ???
    சொத்து சுகம் சேத்துவச்சு
    கெத்தாய் வாழ்ந்த மகராசி
    மகன் போனவேதனையில்
    மதிகெட்ட சோதனையோ???
    வளமோடுவளந்தபிள்ளை
    வாகனவிபத்தில்பலியான
    சேதிவந்த நாள்முதலாய்
    சித்தபிரமையின்மவுனமோ?
    அகல்விளக்குநெய்தீர்ந்து
    அணைவதுண்டு,ஆதவனாம்
    அம்மாவின் உயிர்துடிப்புக்கு
    அஸ்தமனம் எப்போதோ???
    அதுவரையில்சளைக்காமல்
    அகலத்திறந்தகண்ணொளி
    அங்கிங்கு அலைபாயாமல்
    நிலைகுத்தி நிற்கிறதோ???
    அத்தனைக்கும் உதாரணம்
    அகிலத்தில்நிரம்ப உண்டு
    பெற்றவளின்பிரியத்துக்கு
    உற்ற உவமைஉலகிலேது???

    *****

    ”பிள்ளைகள் எனும் கிள்ளைகள் வெளியே பறந்துவிட, கூண்டுக்கிளியானாள் அன்னை. சன்னல் கம்பிகளுக்குப் பின்னே நின்றுகொண்டிருக்கும் தாயிவளின் பிள்ளைகளைத் தேடுவோம்!” என்கிறார் திரு. செண்பக ஜெகதீசன் வேதனையோடு.

    தேடுவோம்…

    கிளிகள் பறந்துவிட்டன
    வெளியே,
    கூண்டுக் கிளியானாள்
    அன்னை..

    பிள்ளைகளுக்குப் பலவேலை,
    பறந்துவிட்டார்கள் வெளியே-
    பெற்ற தாயை மறந்து..

    பெற்றவளுக்கு ஒரே வேலை,
    ஒரே நினைவு-
    பிள்ளைகளின் நல்வாழ்வு..

    ஆனாலும்,
    அவளுக்கும் உள்ளதே
    வாயும் வயிறும்..

    இப்படி
    சன்னல் கம்பிகளுக்குப்பின்
    காத்திருக்கும்
    அன்னையர் ஆயிரம்,
    அத்தனைபேர் எண்ணமும் ஒன்றாய்-
    பிள்ளைகள் பிள்ளைகள் என்றே..

    ஆனால் பிள்ளைகள்-
    தேடுவோம் அவர்களை…!

    *****

    ”தாயே! வதனத்தில் விசனம் வீற்றிருக்கும் காரணம் என்ன? கெட்ட சகுனம் கண்டதால் வந்த வாட்டமா? இறையைத் தரிசிக்க வேண்டும் என்ற நாட்டமா? எண்ணவோட்டத்தால் வார்த்தை மறந்து கொண்ட மோனமா?”  என்று அன்பாய் வினவுகின்றார் திருமிகு. அவ்வைமகள்.

    விசனம் வதனமிடும் விண்ணப்பம் ஏதோ?

    அசனம் மிகுந்தவோ இல்லிடை காட்டமோ?
    கசனம் விரைந்தவோ வல்லுரை வாட்டமோ?
    மசனம் நிறைந்தவோ மல்லுறை கொட்டமோ?
    திசனம் மறந்தவோ இறையுறை கோட்டமோ?
    உசனம் நினைந்தவோ சொல்லுரை தேட்டமோ?
    நிசனம் குறைந்தவோ கண்ணுறை வெட்டமோ?
    வசனம் உறைந்தவோ உள்ளுறை ஓட்டமோ? – அம்மே!
    விசனம் வதனமிடுமுன் விண்ணப்பம் ஏதோ?

    *****

    ”உதிரத்தைப் பாலாய்க் கொடுத்துவளர்த்த தாயை மதியாது, முதியோர் இல்லத்தில் அவளைத் தள்ளிவிடும் பிள்ளைகளே! முதுமை உமக்கும் ஒருநாள் வரும்! வாழ்க்கை என்றால் என்ன என்ற பாடத்தை அது உங்களுக்குக் கற்றுத்தரும்” என்பது திரு. பழ.செல்வமாணிக்கத்தின் கவிதை தரும் பொருள்பொதிந்த கருத்து. 

    துணையான தனிமை

    சோகமே உருவாய், ஒரு தாய்!
    தனிமையே துணையாகக் கொண்டிருந்தாய்!
    யாரின் வரவுக்காய், காத்திருந்தாய்?!
    பிள்ளையை எதிர்பார்த்தா நின்றிருந்தாய்?!
    முந்நூறு நாள் சுமந்தாய்!
    கருவில் உயிர் வளர்த்தாய்!
    வலிகள் நீ பொறுத்தாய்!
    உறக்கம் நீ தொலைத்தாய்!
    பத்தியம் நீ இருந்தாய்!
    உயிரைப் பணயம் வைத்து
    பிள்ளையைப் பெற்றெடுத்தாய்!
    உன் உதிரத்தைப் பாலாய் நீ கொடுத்தாய்!
    கண்ணை இமை காப்பது போல்
    பிள்ளையை காத்திருந்தாய்!
    நீ வளர்த்த பிள்ளைக்கு உன் அருமை புரியவில்லை!
    உன்னைத் தன்னோடு வைத்திருக்க ஏனோ மனமில்லை!
    முதியோர் இல்லத்தில், சேர்த்து விட்டான் உன் பிள்ளை!
    நீயே அனைத்தும் என்று இருப்பவள் உன் தாயே!
    இதை நினைக்க ஏனோ மறந்தாயே!
    உனக்கும் ஒரு நாள் முதுமை வரும்!
    கொடுத்தது திரும்பி வரும்!
    முதுமையில் தனிமை கொடுமை என்பது!
    உனக்குக் கட்டாயம் புரிய வரும்!
    தாயை அரவணைக்க மறக்காதீர் பிள்ளைகளே
    உயிர் கொடுத்த உத்தமியை ஒதுக்காதீர் பிள்ளைகளே!

    *****

    அறையெனும் சிறையில் தனிமையில் வாடும் தன்னேரிலாத் தாயுள்ளத்தின் சிறப்பை நினைந்தழும் மகனைத் தன் கவிதையில் காட்சிப்படுத்தியுள்ளார் திரு. எம். திவான் முகம்மது.

    அறையின் சிறையில் அன்பில் உள்ளம்
    அவள் மனதின் சிறையில் என்றும்
    மகனின் உள்ளம்…. 
    துள்ளி ஓடும் மானாய் இருக்கும் உன்னை 
    துள்ளாத மீனாய் மாற்றி கூண்டில் அடைத்தது ஏனோ?
    சமுத்திர நீராய் இருக்கும் உன் கண்ணீரை
    நிறுத்த வருவது யாரோ?
    சிந்தும் மழைகூடச் சிதறிவிடும்
    ஆனால் உன் அன்புக் கண்ணீர் என்றும் சிதறாது
    என் புகழ் பேச கடலாய் இருந்தாய் ஆனால் நான்
    உன் புகழ் பேச அணையாய் இருந்து விட்டேன்
    அன்பு அறையில் அடைந்தாய் ஆனால் நான்
    இரவுச் சிறையில் அடைந்து விட்டேன்
    ஆற்று நீராய் இருந்ததால் 
    உன் மனம் எங்கும் பார்க்க முடிந்தது
    கானல் நீராய் இருந்ததால் 
    தூரத்தில் மட்டும் பார்க்கமுடிந்தது
    ததும்பிப் ததும்பி என் அருகில் வந்தாய்
    வெதும்பி வெதும்பி அழ வைத்து விட்டேன்
                                                            -அழுகையுடன் அன்பு மகன்

    *****

    சுயநலப் பிண்டங்களைப் பெற்றதால் கவனிப்பாரன்றிச் சன்னல் கம்பியே பற்றுக்கோடாய் நிற்கும் அன்னையின் அவலத்தைத் தன் கவிதையில் அழகாய்ப் படம்பிடித்திருக்கிறார் திருமிகு. புதுவைப் பிரபா. 

    காத்திருப்பு!

    தவமிருந்து பெத்தெடுத்தேன்
    மொத்தமா நாலு புள்ள
    அதுல ஒன்னுகூட
    இப்போ என்கூட இல்ல

    அந்த மனுஷன் பென்ஷன்னுல
    வயித்துக்குச் சாப்புடறேன்
    துணைக்கந்த சாமியத்தான்
    அப்பப்போ கூப்பிடுறேன்

    பெத்ததலாம் பத்தி நான்
    கண்ட கனவு ஏராளம்
    ஒன்னுகூடப் பலிக்காம
    பொய்யாப் போச்சு பூராவும்

    அதில் பெருசா ஏமாந்தேன்
    எதைஎதையோ நம்பி நான் – இப்போ
    என் பிடியில் இருப்பதெல்லாம்
    இந்த ஜன்னல் கம்பிதான்

    சுயநலமா வாழும் நாலு
    பிண்டங்களப் பெத்துட்டேன்
    அவங்களோட செய்கை பார்த்து
    எப்பவோ நான் செத்துட்டேன்

    ஆனாலும் எப்பத்தான்
    எனக்கந்த மரணமுன்னு
    காத்துக்கிட்டு கெடக்குறேன் நான்
    சீக்கிரம் வரணுமுன்னு!

    *****

    அன்புக் கணவனைக் காலன் கொண்டுபோக, பெற்று வளர்த்த பிள்ளைகளோ அன்னைமீது அணுவளவும் அன்பின்றி அவளை முதியோர் இல்லத்தில் சேர்க்க, நிர்க்கதியாய் நிற்கும் மூதாட்டியின் மனக்குமுறலை மனந்தொடும் வண்ணம் பாவாக்கியிருக்கிறார் பெருவை திரு. பார்த்தசாரதி.

    முதுமையின் அனுபவம்..!

    பதிவிரதை என்னனுபவத்தை இங்கே பகிர்கிறேன்
    ……….பகட்டான வாழ்க்கை தந்தானென் அன்புக்கணவன் *
    அதிசயித்துப் பார்க்கிறேனென் கடந்தகால வாழ்வை
    ……….அனைத்து வசதிகளையும் அனுபவித்து உய்ந்தேன் *
    கதியேயென் கணவன்தானென இருந்தேன்! விதியால்
    ……….காலனும் கடிதேயவரை அழைத்துக் கொண்டான் *
    அதிட்டமில்லையோ?எனச் சொல்லியே அழுவேன்
    ……….ஆருக்கும் இந்நிலை வேண்டாமென வேண்டுகிறேன்*

    உதிரத்தைக் கொட்டித்தான் ஒவ்வொரு தாய்மாரும்
    ……….உயிராய் மதிக்கும்தன் பிள்ளையை வளர்ப்பார்கள் *
    எதிர்காலம் நினைக்காமல் எதிர்பார்ப்பு இல்லாமல்
    ……….என்றைக்கும் இருக்கின்ற மனம்தான் தாய்ப்பாசம் *
    துதிப்பாட்டு பாடுதற்கு தனக்கோர் துணையொன்று
    ……….தேடிக்கொண்ட சந்ததியும் வெறுக்கிறார் தாயையும் *
    அதிர்ச்சி யாயிருக்கும் அன்றாடமிதை நினைத்தால்
    ……….அன்னை நானே உணர்ந்தாலனைத்தும் மறையும் *

    பொதிசுமந்து பிள்ளையை வளர்த் தாளாக்கினேன்
    ……….பொறுப்பில்லை! போற்றும் குணம் அவரிடத்தில்லை *
    சதிசெய்தார்கள்! சேர்த்தவென் சொத்தைப் பிரித்து
    ……….சாதிக்கிறார் கிடைத்ததைப் பங்கு போட்டுக்கொண்டு*
    முதியோர் இல்லத்திலின்று…முகம்தெரியா நபர்களே
    ……….முகமலர்ந்த அன்பைப் பொழிந்தாலும்! நான்நிர்க்..
    கதியாய் நிற்கிறேன்! எதிர்ஜன்னலில் எனைப்போல
    ……….கலங்குவோர்கள் இன்னும் எத்தனைபேர் உளரோ.?

    *****

    ’இளமையில் கொடுமை வறுமை’ என்பதுபோல் ’முதுமையில் கொடுமை தனிமை.’ ஒரு தாயின் தனிமையை உணர்வுபூர்வமாகத் தம் கவிதைகளில் வடித்தெடுத்திருக்கும் கவிஞர்கள் அனைவரையும் நெகிழ்ச்சியோடு பாராட்டுகிறேன்.

    இவ்வாரத்தின் சிறந்த கவிதையாகத் தேர்வாகியிருப்பது இனி…

    அவருக்கெனக் காத்திருந்த
    கன்னிப்பொழுதெல்லாம்
    கடந்த காலம்!

    சீராட்டிய பிள்ளைச் செல்வங்களை
    எதிர்பார்த்துப் பூத்திருந்தது
    முடிந்த கணங்கள்!

    பேரப்பிள்ளையின் தளிர்நடையைக்
    காண விழித்திருக்கிறது
    முதுமையின் மிச்சம்!

    மாறிக்கொண்டே இருந்த காலவோட்டத்தில்
    மாறாத ஒன்றாக
    எனது காத்திருப்பு!

    காத்திருப்பின் பதட்டத்தை;
    துருவேறிய கம்பிகளின்
    தடம்சுமந்த என் கைகள்
    அழியாச் சாட்சி சொல்லும்!

    கணவனுக்காகவும் பிள்ளைகளுக்காகவும் பேரப்பிள்ளைகளுக்காகவும் காத்திருந்து காத்திருந்தே பெண்ணின் காலங்கள் கொன்னே கழிகின்றன. அவர்கள் வரும் வழிபார்த்து வழிபார்த்தே அவளின் விழிகள் பூத்துப்போகின்றன.

    காலம் மாறிக்கொண்டே இருந்தாலும் இந்தக் காத்திருப்பில் மட்டும் மாற்றமில்லையே?! துருவேறிய சன்னல் கம்பிகளில் படிந்திருக்கும் பெண்மையின் கைத்தடமே இதற்குச் சாட்சி! என்று மாறுமோ இந்தக் காட்சி? எனும் உளந்தொடும் கவிதையை வளமான வார்த்தைகளில் கோத்துத் தந்திருக்கும் திருமிகு. சக்திப்ரபாவை இவ்வாரத்தின் சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுத்துப் பாராட்டுகின்றேன்.

     

     

    Share
  • படக்கவிதைப் போட்டி 152-இன் முடிவுகள்

    -மேகலா இராமமூர்த்தி

    நெகிழியின் உள்ளிருக்கும் குடத்தைத் தொட்டு நெகிழும் மக்களைத் தன் ஒளிப்படப்பெட்டிக்குள் அழகாய் ஒளித்து வந்திருக்கிறார் திரு. ஜேக்சன் ஹெர்பி. இப்படத்தைப் போட்டிக்குத் தெரிவுசெய்து தந்திருக்கிறார் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி. சாந்தி மாரியப்பன்.  இவர்கள் இருவருக்கும் என் நன்றி.

    இலவசங்கள்மூலம் மக்களைத் தம் வசப்படுத்தி அவற்றிற்கு அடிமையாய் அவர்களை மாற்றும் அவலத்தை ஆரம்பித்துவைத்த பெருமை அரசியல்கட்சிகளையே சாரும். சுயஉழைப்பின்றிக் கிடைக்கும் பொருட்களுக்கும் களவாடிக் கைக்கொள்ளும் பொருட்களுக்கும் பெரிய வேறுபாடில்லை. ஆதலால், இலவசப் பொருட்களைப் பொருட்படுத்தாது அவற்றை உதறித்தள்ளும் தன்மானத்தோடு மக்கள் வாழும் நாளே நன்னாள்…போற்றத்தக்க பொன்னாள்!

    இனி,  கவிபாட கவிஞர்களை அழைப்போம்!

    ’கையூட்டு இல்லாச் சமூகம் மலர, மக்கள் கையேந்தாமல் உழைத்து வாழ உறுதி ஏற்பதே ஒரே வழி’ என்பது திரு. ஏ.ஆர்.முருகன், மயிலம்பாடியின் கருத்து.

    உழைப்பே உயர்வு!!

    முண்டியடித்து முன்னேறிச்சென்று
    கைகளை நீட்டி யாசகம் கேட்பது
    அடிக்கடி நிகழ்கின்ற அவலம்!!
    ஆன்மீக விழாவோ அரசியலோ
    எதுவாயினும் இலவசங்கள்
    இல்லாமல் நடப்பதே யில்லை!!
    வாங்கும் வசதி வாய்க்கவேண்டி
    வாழ்ந்திடப் பழகிக்கணும்!!
    வாக்குகளையும் விலை தந்து
    வாங்கும் நிலை வந்ததினால்
    அதிகம் தருபவன் வெற்றிபெற்று
    அதைவிடத் திருடுபனாகிறான்!!
    தவறுகளுக்குக் காரணகர்த்தா
    தருபவரைவிட பெறுபவர்தானே!!
    மீன்களைபெற்றால் உணவாகும்
    அதைப்பிடிக்ககற்க உயர்வுவரும்!!
    கையூட்டு இல்லா நல்லசமுதாயம்
    கண்டிட வேணுமென்றால் யாரும்
    கண்டிப்பாய் ஏந்திட மாட்டோம்
    கரங்களை எனஉறுதியேற்கணும்!!
    உழைத்துச்சேர்த்து பொண்டுபுள்ள
    உறவு நட்புக்கு கடமை செய்வதே
    உண்மையான அன்பளிப்பாகும்!!
    ஊரான்காசு எதுக்கு வேணும்???..

    *****

    ’ஏற்பது இகழ்ச்சி’ எனும் ஔவை சொல்லை அமுதமாய்க் கொண்டு உழைத்துப் பிழைப்போம் என்கிறார் திரு. பழ.செல்வமாணிக்கம்.

    உழைத்து வாழ்வோம்

    “ஏற்பது இகழ்ச்சி”!
    இது ஔவையின் அமுத மொழி!
    இதை உணர்ந்தோர் வாழ்க்கை!
    என்றும் மகிழ்ச்சி வழி!
    இலவசம் என்ற ஒன்று உலகில் இல்லை!
    இலவசத்தின் முடிவு என்றும் தொல்லை!
    தூண்டில் புழு,மீனுக்கு எமனாகும்!
    இலவசம், நம் வளர்ச்சிக்கு எமனாகும்!
    இதை உணர்ந்தவர் வாழ்வு என்றும் இனிதாகும்!
    வாங்கும் கைகள் தாழ்ந்திருக்கும்!
    உழைப்பை நாளும் மறந்திருக்கும்!
    சோம்பல் தானே துணையிருக்கும்!
    உழைப்பை இன்றே விதைத்திடுவோம்!
    பலனை உரிமையுடன் அனுபவிப்போம்!
    உழைப்பின்றி கிடைக்கும் பயனெல்லாம்!
    களவில் வந்ததாய் புறக்கணிப்போம்!

    ***** 

    ’குடமும் குத்துவிளக்கும் கொடுத்து ஆட்சியைப் பிடிக்கும் மடமைக்குத் துணை போகாதீர் மானிடரே!’ என்று மக்களை எச்சரிக்கிறார் திரு. செண்பக ஜெகதீசன்.

    பரிசாய்…

    பரிசுகள் வேண்டும் வெற்றிக்கு
    பார்க்கும் இலவசம் பரிசில்லை,
    பெரிதாய்க் குடமும் குத்துவிளக்கும்
    கொடுப்ப தில்லை வெற்றியையே,
    அரசியல் அவலமாய் வந்ததிதுவே
    ஆசை அதன்மேல் வேண்டாமே,
    உரிய பரிசினைப் பெற்றிடவே
    உழைத்திடு உண்மையாய் வாழ்வினிலே…!

    ***** 

    ’உழைப்பின் உயர்வறியா மூடர்களே…! ஈயென இரத்தல் இழிவென்பதை உணர்ந்து உழைக்க வாரீர்!’ என்று இலவசங்களில் சுகம் கண்டவரைச் சாடுகின்றார் திருமிகு. மா. பத்மபிரியா, உதவிப்பேராசிரியர், எஸ்.எஃப். ஆர். மகளிர் கல்லூரி, சிவகாசி.

    இலவசங்களில் தடம்புரளும் உள்ளங்கள்
    இரண்டு கரங்கள் இருந்தென்ன
    இரத்தல் இழிவென புரியாதா
    உழைப்பின் உயர்வறியா மூடர்களே !
    உயர்த்தும் கரங்களில் கறை காணீர் !
    இலவசம் வழங்கியே பிழைப்போரும்
    இலவசம் வாங்கியே பிழைப்போரும்
    மனிதர்களில் பிழைகளாக……
    உடல் களைக்க உழைப்பவரும்
    உடல் ஊனம் மறந்து உழைப்பவரும்
    உணர்த்தும் நியதி புரியாது
    உண்டுறங்கும் மானிடமே
    இருக்கிறவர் இல்லாதவர் பேதமின்றி ……..
    இலவசத்தின் வசமானவரே !
    இளமையின் வேகம் இது தானா
    இலட்சியம் தொலைப்பது சரி தானா
    ஈயென இரத்தல் இழிவாகும்
    ஈயாய் மொய்ப்பது அவமானம்
    இல்லாமை ஒழிக்க இலவசமா
    பிழைப்பற்ற மானுடரே !
    பிழைத்தெழுவீர் இப்போது

     ***** 

    ஓட்டுக்குப் பேரம் பேசும் அரசியல்வாதிகளையும் அதை நம்பி ஓட்டை விற்கும் மக்களையும் பகடிசெய்து கவிதை படைத்திருக்கின்றார் பெருவை திரு. பார்த்தசாரதி.

    வருகின்ற தேர்தலில்..!

    வருகின்ற தேர்தலில் மறக்காமல் வாக்களிக்க.
    ……….வாரிக் கொடுக்கிறோம் பெற்றுச் செல்லுங்கள்..!.
    தருகின்ற இனாமெல்லாம் போதா தென்றால்.
    ……….தராசுக் கிணையாய் மேலும்பலவும் தருவோம்..!.
    பொறுத்திருந்து பாரும்!நாங்கள் ஆட்சியைப்.
    ……….பிடித்தால் நீங்களினி பொதி சுமக்கவேணாம்..!.
    தருமிந்த இனாமுக்கு வெகுமதியாக உங்கள்.
    ……….தங்கமான ஓட்டை எங்களுக்குத் தந்திடுவீரே..! 

    இப்போது பெற்றிடுவீர் ஈதொரு அடையாளம்.
    ……….இந்தச்சிறிய எவர்சில்வர் குடத்தை மட்டுமே..!.
    அப்போது கொடுத் திடுவோம் ஆளுக்கொரு.
    ……….அண்டா குண்டாவும் அரிதான வெள்ளியிலே..!.
    ஒப்பாகா உங்களுயர்ந்த வாக்குரிமையை வேறு.
    ……….ஒருவருக்கும் விற்று விடாதீர் வேண்டுகிறோம்..!.
    தப்பாது வாக்களியுங்கள் தாங்கள் மனசாட்சி.
    ……….தவறா தெங்களை வெற்றியுறச் செய்யுங்கள் ..!

    ***** 

    இலவசக் குடத்துக்கு ஆசைப்பட்டு தம் குடிப்பெருமையை அடகுவைக்கும் மக்களின் மடமையை சுருக்கென்று அருமையாய்ச்  சொல்லியுள்ளார் திருமிகு. அவ்வைமகள்.

    குடிமுழுக்கு

    குடமொழுக்கிக் குடமுயக்கில் குடமுழுக்கிக் குடிப்பூட்டிக்
    குடி வழுத்தும் குடிமுழுக்கு

    *****

    இலவசக் குடத்தை வைத்து மனித உளவியலை இனிய சொல்லோவியங்களாய்த் தீட்டிக் காட்டியுள்ள புலவர்களுக்கு என் பாராட்டு!

    இவ்வாரத்தின் சிறந்த கவிதையாய்த் தேர்வாகியிருப்பது அடுத்து… 

    மனிதா உணர்ந்திடு உன் ஆற்றலை…!

    சுடரொளிச் கண்கள், செப்பும் நல்வாய்,
    வயிரம் பாய்ந்த மரநிகர் உடம்பில்
    வயதின் மூப்பு தோன்றிட வில்லை..
    நாற்றம் உணர்ந்திட அமைந்தவோர் நாசியில்
    நலமே யன்றி குறைவேது மில்லை…
    கேட்டு இன்புறும் செவிக ளிரண்டில்
    கூரிய செவித்திறன் குறையவு மில்லை…
    இத்தனைச் சிறப்புகள் மெத்தவும் இருந்தும்…
    இலவசம் என்பதற் கலைவதும் ஏனோ…?

    ஐம்பொறி யனைத்தையும் ஒருங்கே பெற்று…
    ஐயத்திற் கிடமில்லா ஆற்றலும் பெற்று…
    கைகளும் கால்களும் உறுதியைப் பெற்று…
    கையாளும் வினைகளில் வல்லமை பெற்று…
    சுட்டும் அறிவாம் பகுத்தறி வுடனே…
    சிந்திக்கும் திறமை எல்லாம் பெற்று…
    இலங்கும் இனிய மானிடப் பிறப்பே…
    இத்தனை இத்தனை ஆற்றல் இருந்தும்…
    இரந்து வாழ்தல் என்பது நலமா…?

    ஓரறிவு முதலாய் ஐந்தறிவு வரையுள்ள…
    ஓர்மம் கொண்ட உயிர்கள் யாவும்…
    தனக்கென் றேதும் கேட்ப தில்லை…
    தனக்கென் றேதும் கொள்வ தில்லை…
    இருப்பதைக் கொண்டு மகிழா விட்டால்..
    இதயம் அமைதி பெற இயன்றிடுமா…? 

    ஓரறிவு முதலாய் ஐயறிவுயிர்கள் ஈறாய்த் தமக்கென்று எதுவும் கேட்காமல் உழைத்துப் பிழைக்கையில், ஐம்புலன்களிலும் அளப்பரிய ஆற்றலை வரமாய்ப் பெற்றிருக்கும் மானுடர் மட்டும் ஏன் பகுத்தறிவிழந்து இலவசங்களின் வசம் சிக்கிச் சீரழிகின்றனர்? ’செல்வம் என்பது சிந்தையின் நிறைவே’ என்பதை என்றுணரும் இந்த மானுடச் சாதி? என்று தன் அறச்சீற்றத்தை அழகாய்க் கவிதையில் பதிவுசெய்திருக்கும் திரு. ஆ. செந்தில் குமார் இவ்வாரத்தின் சிறந்த கவிஞராய்த் தேர்வுசெய்யப்படுகின்றார். அவருக்கு என் பாராட்டு!

     

     

    Share
  • படக்கவிதைப் போட்டி 151-இன் முடிவுகள்

    -மேகலா இராமமூர்த்தி

    பலவண்ணங்களைச் சிதறடித்துச் சாலம் காட்டும் இந்தப் புகைப்படத்திலிருப்பது மலரா? இலையா? என்று மலைக்கவைக்கிறது இதனைப் புகைப்படம் எடுத்திருக்கும் கலைத்திறன்! இப்படத்தை இவ்வாரப் போட்டிக்குத் தேர்வுசெய்து தந்திருக்கும் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியரான திருமதி. சாந்தி மாரியப்பனே இப்புகைப்படத்தை எடுத்தவருங்கூட. அவருக்கு என் நன்றியும் பாராட்டும்!

    நீலமும் பச்சையும் கலந்தொளிரும் இந்தக் கோலமிகு படத்திற்குக் கருத்தொடு கவிவடிக்கக் கவிவலவர்கள் காத்திருக்கிறார்கள். அவர்களைக் கனிவோடு வரவேற்போம்!

    *****

    ”அக இருளாம் அறியாமையைப் போக்கி ஒளியேற்றிடும் கல்வி; கதிரவனைக் கண்டு காணாமற் போகும் பனித்துளிபோல் எதிரில் நிற்கும் இன்னலை இல்லாமல் ஆக்கிடும் கல்விதரும் நல்லறிவு” என்று படத்தில் காணும் புறஒளியோடு அறிவொளியேற்றும் கல்வியை ஒப்பிட்டுக்காட்டியுள்ளார் திரு. ஆ. செந்தில் குமார்.

    வாழ்வில் ஒளியேற்றும் கல்வி…!

    உதய வானில் சிறகடிக்கும் வண்ணப் பறவை போல…
    இதயம் கூட அமைதி அடையும் நல்ல நூல்களை நாட…!
    இதிகாசங்களும் ஆன்றோர் பலரும் காட்டும் வழி போல…
    எதிர்காலம் கூட வண்ணமயம் கற்ற வழி நிற்க…!

    புற இருளைப் போக்கிவிடும் ஆதவனைப் போல…
    அறியாமை அகஇருளை அகற்றிவிடும் கல்வி…!
    பிறவாமை வேண்டிநிற்கும் ஞானியரைப் போல…
    சிறப்புபல தந்திடுமே கற்கும் நல்ல கல்வி…!

    கதிரவனைக் கண்டுவிட்ட பனித்துளியைப் போல…
    எதிர்த்துநிற்கும் இன்னல்களைப் போக்கிடும் நல்லறிவு…!
    விதி வழியே சென்றிடுவோம் என்று சொல்லும் மனதும்…
    மதிநுட்பம் இருந்துவிட்டால் மாற்று வழியைத் தெரியும்…!

    மதயானை போன்றிருக்கும் மாந்தர்தம் மனதை…
    இதமாக்கி நெறிப்படுத்தி ஒளியேற்றும் கல்வி…!
    எதிரேறு பொறுத்தக்கல் ஆகின்றதோர் தெய்வம்…
    எதன்பொருட்டும் வருந்தாதோர் இலக்கடைவது திண்ணம்…!

    *****

    ”வாழ்வில் தலைநிமிர நல்ல நூல்களை நோக்கிக் குனி” என்கிறார் திரு. செண்பக ஜெகதீசன் கனிவாய்.

    ஒளி பிறக்க…

    தலை குனி,
    நல்ல நூல்களை நோக்கி..

    ஒளி வட்டம்
    உன் தலையைச் சுற்றி
    வராவிட்டாலும்,
    உறுதியாய் நீ
    தலை நிமிர்வாய்,
    தானாய் ஒளி பிறக்கும்-
    வாழ்க்கையிலே…!

    *****

    ”சூடிக்கொள்ளவும் முடியாது; பாடிப்பரவி இறைவனுக்குச் சேர்ப்பிக்கவும் இயலாது! நெகிழி மலரே! மணமில்லா உன்னால் யாருக்கென்ன பலன்?” என்று மலரை நோக்கி வினாத் தொடுக்கிறார் பெருவை திரு. பார்த்தசாரதி.

    நெகிழிப்பூவே உனக்குப் புகழில்லை புவியுலகில்!

    அன்றாடம் தன்னிதழ்கள் பிரித்து மலராது
    ……….அழுக்காகும் அழுகாத நெகிழிப் பூக்கள்..!
    குன்று போலக் கடைகளிலே குவிந்திடும்
    ……….கண்கள் கூசுமளவிற்கு நிறமிகள் உண்டு..!
    இன்புறும் அளவுக்கு மணமென்ப தில்லை
    ……….இல்லாளுமிதை ஒரு நாளும் விரும்பாள்.!
    என்று மிதற்கெனவே தனி மதிப்பில்லை
    ……….எதற்கு மிதன் உபயோகம் பெரிதுதான்..!

    வாடிவிடும் தன்மையோ இதற்கு இல்லை
    ……….வாழ்த்தக் கொடுப்பதற்கும் வழி யில்லை..!
    கோடீஸ்வரன் இறந்து விட்டால் அவன்
    ……….கழுத்தில் நீண்ட நாள் தொங்கிடுமன்றோ..!
    சூடிக்கொள்ளவும் முடியாது வாயினால்
    ……….பாடிபகவானுக்கு பூஜை செய்ய இயலாது..!
    ஓடிவரும் வண்டினங் களிதை அண்டாது
    ……….ஒளியூட்டினால் சற்றே அழகு மிகக்கூடும்..!

    செங்கதிரோன் ஆசியுடன் சோலையிலே
    ……….செழித்து சிந்தனை குளிரச்செயும் மலரே..!
    தங்கத்தைப் போலப் பெருமை உனக்கு
    ……….மங்காத புகழும் பெருமதிப்பும் உண்டாம்..!
    மங்கையர் சூடும் மலருக்கெது ஈடாகும்
    ……….மலரின் வாசனைக் கெதுவும் ஒப்பாகா..!
    அங்கத்தில் அணிய முடியா நிலையில்
    ……….அலர் மாலையில் சேருமா?..நெகிழிப்பூ..!

    *****

    மூச்சுப்பயிற்சியாம் வாசி யோகத்தில் தேர்ச்சி பெற்றோர், நீலமும் பச்சையுமாய் ஒளிக்குமிழிகளைத் தம் புருவ மத்தியில் காண்பதை, படத்தில் அணிவகுத்திருக்கும் அவ்விரு நிறங்களோடு அழகாய் இணைத்துப் பார்க்கிறார் திருமிகு. அவ்வைமகள்.

    ஒருபுனல் தம்பமிடை சிலம்பமும் எழுந்ததே!
    இருபுனல் கபாடமுள் உருபுனல் லலாடமும்

    வருபுனல் தடாகமுடி இருபுயக் கதம்பமும்
    தருபுனல் தெறிக்குமிழி இருநிறக் கபம்பமும்
    ஒருபுனல் தம்பமிடை சிலம்பமும் எழுந்ததே!

    *****

    புகைப்படத்தில் ஒளிரும் புறவண்ணங்களை அறிவொளியோடும் கல்வியோடும் யோகத்தோடும் பொருத்திப் பார்த்துத் திருத்தமாய்ப் பாப்புனைந்திருக்கும் பாவலர்களுக்குப் பாராட்டுக்கள்!

    இவ்வாரத்தின் சிறந்த கவிதையாய்த் தேர்வாகியிருப்பது இனி…

    மன எழுச்சியே மகிழ்ச்சி

    செயற்கையான மலர்இதழ்கள்
    செய்துவைத்து அதன் மேலே
    சிறுமின்விளக்குகள்ஒளிபாய்ச்சிச்
    சிதறவைக்குது இருளைத்தானே!!
    மேல்நோக்கிஎழுகிற எண்ண அலை
    மேம்பட்டால் வராது வாழ்வில் பிழை!!
    ஒருநிலைப்படுத்தும்ஆற்றல் நிலை
    ஓங்கிடப்பெய்யும்பேரானந்த மழை!!
    இயற்கையான உடலுக்குள்ளும்
    இருட்டைவிரட்டிட மார்க்கமுண்டு!!
    உள்ளமென்னும் வீட்டுக்குள்ளே
    உதிரத்தில் உருவாகும் மின்சாரம்!
    நரம்புகள்வழியே அது பாய்ந்து
    இருதய பல்பை எரியவைக்கும்!!
    நாசம் செய்யும்கெட்டசிந்தனைகள்
    நன்மையை என்றும் கொடுக்காது!!
    நினைப்புக் கலப்பையில் ஏர் உழுது
    நிலமாம் மனசைச் சமன்படுத்தி
    நடுகிற நாற்று செயலாய் ஆகி
    நன்கு வளர்ந்து மகசூல் பெருகும்!
    வாழ்வுத் தோட்டத்தின் விளைச்சல்
    வருங்காலவசந்தத்தை வழங்கும்!!
    பொம்மைப் பூக்கள் போலன்றி
    உண்மைவாசம் வாழ்வில் வீசும்!!

    வெளிச்சத்தை புறத்தே மட்டுமன்று அகத்தேயும் கருவாக்கி உருவாக்கலாம். ஆம்! உளமெனும் வீட்டுக்குள் உதிரத்தில் உருவாகும் மின்சாரம் நரம்புகள் வழிப்பாய்ந்து இதய விளக்கை எரியவைக்கும்.

    மனத்தைச் சமன்படுத்தி, நற்சிந்தனைகளை நட்டுவைத்தால், வாழ்வெனும் தோட்டம் வாசமில்லாப் பொய்ப்பூக்களின் தொகுப்பாய் ஆகாமல், நேசத்துக்குரிய மெய்ம்மலர்களாய் மணம் பரப்பும்” என்று வாழ்வியல் பாடம் சொல்லும் இக்கவிதையின் ஆசிரியர் திரு. ஏ. ஆர். முருகன் மயிலம்பாடி இவ்வாரத்தின் சிறந்த கவிஞராய்த் தேர்வாகின்றார். அவருக்கு என் பாராட்டு!

     

     

    Share
  • படக்கவிதைப் போட்டி 150-இன் முடிவுகள்

    -மேகலா இராமமூர்த்தி 

    படக்கவிதைப் போட்டி 150ஆவது வாரத்தைத் தொட்டு வெற்றிநடை போட்டுவருகின்றது. இதனைச் சாத்தியமாக்கிய நண்பர்கள் அனைவருக்கும் வல்லமையின் நெஞ்சார்ந்த நன்றி.

    உணவூட்டி மகிழும் காகங்களை அழகாய்ப் படம்பிடித்து வந்திருக்கின்றார் திருமிகு. ராமலக்ஷ்மி. படக்கவிதை போட்டிக்கு இதனைத் தெரிவுசெய்து தந்திருப்பவர் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி. சாந்தி மாரியப்பன். ஆற்றல்மிகு இவ்விரு மகளிரும் என் நன்றிக்கும் பாராட்டுக்கும் உரியோர்.

    காகத்தின் சிறப்பியல்புகளாகச் சுட்டப்பெறுபவை இரண்டு. ஒன்று இனத்தைக் கூவியழைத்துப் பகுத்துண்ணும் அவற்றின் உயர்பண்பு.

    இதனை,

    ”காக்கை கரவா கரைந்துண்ணும் ஆக்கமும்
    அன்னநீ ரார்க்கே உள” என்பார் வள்ளுவப் பேரறிஞர்.

    மற்றொன்று, வீட்டுக்கு விருந்தினர் வரப்போவதை முன்கூட்டியே அறிந்து அறிவிக்கும் ஆற்றல் அவற்றிற்குண்டு எனும் நம்மவரின் நம்பிக்கை.

    ”…….பல்லா பயந்த நெய்யில் தொண்டி
    முழுதுடன்
    விளைந்த வெண்ணெல் வெஞ்சோறு
    எழுகலத்
    தேந்தினுஞ் சிறிதென் தோழி
    பெருந்தோள் நெகிழ்த்த
    செல்லற்கு
    விருந்துவரக் கரைந்த காக்கையது பலியே.” (குறுந்: 210

    என்ற குறுந்தொகைப்பாடல் காகம் கரைந்தவாறே பொருள்தேடச் சென்றிருந்த தலைவன் மீண்டமையால் அதற்கு ஏழு கிண்ணங்களில் நெய்பெய்த வெண்ணெல்லரிசிச் சோற்றைப் பலியாக இடுவதும் சிறிதே என்று தோழி கூறுவதைப் பதிவுசெய்திருக்கின்றது. இப்பாடலில் காக்கையைப் புகழ்ந்துபாடிய நச்செள்ளையார் எனும் பெண்பாற்புலவர்க்குக் ’காக்கைபாடினியார்’ எனும் சிறப்புப்பெயரே கிடைத்துவிட்டமை அறிந்து மகிழத்தக்கது.

    இனி, நம் புலவர்கள் காக்கையின் புகழ்பாடும் நேரம்…

    ”அள்ளிக்கொடுக்கும் மனமிருந்தால் துள்ளிவந்திடும் மனமகிழ்ச்சி; வள்ளல் குணத்தையும் தாய்ப்பாசத்தையும் கற்றுத்தரும் பள்ளிக்கூடமாய்த் திகழ்கின்றன இந்தக் காக்கைகள்” என்கிறார் திரு. ஏ.ஆர். முருகன், மயிலம்பாடி.

    பகிர்வதே அமிர்தம்!!

    காக்கா காட்டுது தாய்பாசம்_அவை
    கத்துக்கொடுக்கிறபள்ளிக்கூடம்!!
    சோக்காவாழ்கிற பாலபாடம்_அதை
    சொல்லிக்கொடுக்கிறகுருபீடம்!!
    இயற்கைஇடர் வந்த நேரம்
    இன்னல் நீக்க இணைந்தோம்!
    அதனால் அதிலே மீண்டோம்
    ஆறுதல் நாமே ஆனோம்!!!
    இன்னும் இருக்குது ஏழ்மை
    இருப்போர்இதயம் கூர்மை
    அன்பில் விலகும் வறுமை
    அப்படி வாழ்ந்தால் பெருமை!!
    கோடிகோடியாச்சம்பாதிச்சுட்டு
    கொட்டிவச்சுட்டு செத்துட்டாலும்
    கொண்டுபோறது ஒன்னுமில்ல!!
    கொடுத்துச்சிவப்பவர்மரிப்பதில்ல!!
    பாவம்செய்கிற மனிதருக்கும்
    பலனைத்ததருவது செய்தருமம்!
    பண்ணிடும்புண்ணியம்கூடவரும்
    முன்னையவினைகளும்ஓடிவிடும்!
    அள்ளிக்கொடுக்கும் மனமிருந்தால்
    துள்ளிவந்திடும் மனமகிழ்ச்சி!!
    சல்லிக்காசில் ஆனந்தமில்லை
    வள்ளல்களுக்கு வானமேஎல்லை!!

    *****

    ”கடமைகளைக் கேள்விகளால் சிதைக்காத, தலைமுறை காக்கும் அன்பெனும் அருங்குணத்தைச் சிறிய பறவைகள் சிறப்பாய் நம் சிந்தையில் புகுத்துகின்றனவே” என்று வியக்கிறார் திரு. சக்தி சக்திதாசன்.

    ஊட்டி விடும் அழகு
    அன்றிலிருந்து இன்றுவரை
    நாகரீகம் எனும் சொல்லுக்கு
    விலை போகாத அன்பு
    காலம் காலமாய் தமக்குள்ள
    கடமையை கேள்விகள் எனும்
    பெயரில் சிதைத்திடாமல்
    தலைமுறையைக் காத்திடும் பண்பு
    இயற்கை எனும் இறை உலகில்
    ஈந்தது அனைவர்க்கும் ஒன்றே
    மனிதர் எனும் இனம் மட்டும்
    அறிவால் உணர்ந்து விட்டோம் எனும்
    ஆணவத்தால் தம் அடிப்படைப்
    பண்புகளை ஆழமாய்ப் புதைத்து விட்டு
    கொக்கரித்து நிற்கும் வேளையில்
    சிறிய இந்தப் பறவைகள் எமக்கு
    சிந்தையில் புகுத்துவது ஏனோ
    முள் போல் தைக்கிறது

    *****

    ”காக்கை தன் குஞ்சுக்கு ஊட்டும் அற்புதக் காட்சி; பாசத்தின் மேன்மைக்குச் சிறந்ததோர் சாட்சி! குயிலின் முட்டையையும் அடைகாக்கும் காகம்; உயிர்தந்த பெற்றோரையும் புறக்கணிக்கும் மாந்த இனம். கண்ணியமாய் வாழ்வதெப்படி எனக் காக்கையிடம் கற்றுக்கொள்ளுங்கள் மானிடரே!” என்று ஆலோசனை சொல்கிறார் திரு. பழ. செல்வமாணிக்கம்.

    பொது நலப் பறவை

    காக்கை தன் குஞ்சுக்கு ஊட்டும் அற்புதக் காட்சி!
    பாசத்தின் மேன்மைக்கு இதுவே சாட்சி!
    உணவைப் பார்த்ததும்! அனைத்தும் மறந்து போகும் மனிதனுக்கு!
    உணவைப் பார்த்ததும்! சுற்றம் நினைவு வரும் காகத்துக்கு!
    தனித்துண்ணும் மனிதனைப் பார்ப்பது வழக்கமான காட்சி !
    பகிர்ந்துண்ணும் காக்கை கூட்டத்தைப் பார்ப்பது!
    கண் கொள்ளாக் காட்சி!
    குயிலின் முட்டையை அடை காப்பது காகத்தின் வழக்கம்!
    பெற்றோரைக் கைவிடுவது பிள்ளைகள் பழக்கம்!
    காகம் ஒன்று மரணித்தால், காக்கைகள் ஒன்று கூடி
    ஓலமிடும்!
    மனிதன் ஒருவன் மரணித்தால் மனித இனம்
    வேடிக்கை பார்த்து நிற்கும்!
    இயற்கை இடரை இனம் கண்டு, மனிதருக்கு,
    எச்சரிக்கை ஒலி எழுப்பும் காக்கை இனம்!
    காக்கையை கொன்றழித்து!
    கறி விருந்து, தின்றிருக்கும் மனித இனம்!
    காரியம் முடிப்பதற்கு, பொய்யாய் புகழுரைக்கும் செய்கை தனை!
    காக்காய் பிடிப்பதாய் உரைப்பது முறையாமோ!
    சுயநலச் செயலுக்கு! பொது நல காக்கை தனை!
    ஈடாய் சொல்வது சரியாமோ!
    காக்கை வாழ்க்கையை அடி ஒற்றி மனிதன் நடந்திட்டால்!
    பொது நல சமுதாயம் நிச்சயம் உருவாகும்!

    *****

    ”மைவண்ணக் காக்கை, தன் கைவண்ணத்தால் உருவாக்கிய கூட்டில் முட்டையிட்டு, அடைகாத்து, குஞ்சு பொறித்து, இரையூட்டும் காட்சி கண்ணுக்கும் கருத்துக்கும் அளிக்குதே மாட்சி” என்று காகத்தின் தாய்மைப் பண்பைத் தீந்தமிழில் விதந்தோதியிருக்கின்றார் திரு. ஆ. செந்தில்குமார்.

    பகுத்தறிவுக்கும் அப்பாற்பட்ட தாய்மைப் பண்பு

    மைவண்ணம் கொண்ட அக்காக்கை தன்
    கைவண்ணம் கொண்டொரு கூட்டைக் கட்டி யாரும்
    இலாவண்ணம் பார்த்து தன்னிணையோடு சேர்ந்து
    நிலாவண்ணம் கொண்டநல் முட்டைகளை இட்டு
    நிலைவண்ணம் கொண்டதை அடைகாத்துப் பேணி
    கலைவண்ணம் கொண்டதன் குஞ்சொன்றை பொறித்தது!

    கண்ணைக் காக்கின்ற இமைகளைப் போன்று
    விண்முட்டும் அளவுக்கு பேரன்பைக் கொண்டு
    எண்ணத்தில் தன்குஞ்சின் பசிப்போக்க உன்னி
    மண்முழுதும் பறந்தோடி உழன்று தான்
    உண்ணாது கொணர்ந்த இரையை தன்குஞ்சின்
    தொண்டைக்குள் திணித்து அன்பைச் சொரிந்தது!

    கண்ணுக்கு இனிதாகி விளங்கும் இக்காட்சி
    விண்போற்றும் தாய்மைக்கு சிறந்ததோர் அடையாளம்
    எண்ணத்திற்கும் அப்பாற்பட்டது தாயின் அன்பு
    மண்ணுலகில் இருக்கின்ற அனைத்துயிர்க்கும் தாய்மை
    உணர்வென்பது இயல்பான ஒன்று பகுத்தறிவும்
    உணரஇயலாது தாய்மை யெனும் பண்பு!

    *****

    ”பள்ளியில் பாடம் பயிலாத காகத்திடம் ஒற்றுமை எனும் உயர்பண்பு ஒளிர்கிறது; தாய்மை எனும் தனிப்பண்பு மிளிர்கிறது” என்று உளம் பூரிக்கின்றார் திரு. செண்பக ஜெகதீசன்.

    உதாரணமாய்…

    குயிலதன் முட்டையும் சேர்த்தேதான்
    கூட்டில் வைத்தே அடைகாக்கும்,
    பயில வில்லைப் பண்பிதனைப்
    பள்ளி யெதிலும் சேர்ந்தேதான்,
    செயலில் ஒற்றுமை காட்டுமினம்
    சேயைப் பேணிடும் சிறப்பைப்பார்,
    உயர்ந்த தாய்மைச் சிறப்பினுக்கே
    உதாரணம் என்றும் காக்கையாமே…!

    *****

    ”அன்பெனும் ஊற்று பெருக்கெடுக்க, தன் குஞ்சுகளுக்குக் கவளம் ஊட்டிக் காத்துநிற்கின்றது காக பட்சி. நம் மக்களோ வீடுகளில் பிள்ளைகளுக்கு ஊட்டலை நிறுத்தி, ஓட்டல்களுக்குப் படையெடுக்கத் தொடங்கிவிட்டதால் தாய்மைப் பண்பு நலிந்து உடலில் நோய்மை மலிந்துவிட்டது. ஆதலால், பட்சியைப்போல் நற்பெற்றோராய் வாழ்ந்து பிள்ளை போற்றுங்கள்” என்று வேண்டுகின்றார் திருமிகு. அவ்வைமகள்.

    பட்சி போற்றுதும்! பிள்ளை போற்றுதும் ! நற்பெற்றோரெனவே நீடு வாழுதும்!

    பட்சி பறக்கா பசி பறக்க, புசிக்க பரக்காய் அலகெடுக்க
    தட்சி நெருங்கி புயம் நெருக்கி நல்லுடல் நெளிய நின்றிருக்க
    புட்சி ரசொக்க, கவளம் தர, ரசமும் ருசியும் செரிசொரிக்க
    தீட்சி கொடுக்கும் காட்சிமையில் அன்பெனுமூற்று பெருக்கெடுக்க
    கட்சி கரத்தொரு கருத்துயர பசிப்பிணியென்னும் பாவமற
    குட்சி நிறைக்க அமுது கொடை நற்கருமங்கள் நாளுமெழ
    முட்சி குறைக்க ஊட்டமிடும் சத்துச் சோற்றில் கவனமுற
    நீட்சி விளைக்கும் மாட்சியொடு, ஈலாக்குழவி முகங்கண்டிரங்கும்
    தேட்சி பெருக்கும் பிதாமகரும் ஈங்காயிரமாய் அறச்சாலையொடு
    ஆட்சி மேவினர், காகம் போற்றினர், காக்கை சூத்திரம் கற்று தேறினர்
    வீட்சி காணா பெருவரலாறும் அவனியில் ஆங்கே அவரெழுப்பினர்!
    தாட்சி வந்தது, தளர்ச்சி மிகுந்தது, அன்னைதந்தையர் பலரும் இல்லமொழிந்தனர்
    பிட்சி மலிந்தது அவலமிகுந்தது ஊட்டும் கதைக்கும் முறையும் ஒழிந்தது
    உட்சி கோதி உள்ளம் கலக்க பெற்றோர் இல்லா முறைமை வளர்ந்தது
    காட்சிப் பொருளாய் கடைப் பொருளாய்ப் பிள்ளைகள் பேணும் இழிவுமிகுந்தது
    திட்சி கழித்து நல்லடிசிலிட்டு பார்த்துப் பரிமாறாக் கேடும் வந்தது
    மாட்சிமை மறத்தல் வாடிக்கையென்றே மானுடப்பாதை மாறலானது!
    வெட்சி மலராம் எம்மக்கள் ஊட்டல் துறந்தனர் ஓட்டல் புகுந்தனர்!
    காட்சி காட்டும் அனைத்துணவும் திணிந்தன அவர்தம் இரைப்பைதனில்
    நெட்சி நிகழுது, மானுடம் வீழுது! உண்டியும் திண்டியும் நாசம் செய்யுது!
    இரட்சி போற்றுதல் ஈங்கிலையென்றால் முழுதாய் அழிவு நேருதல் உறுதி!

    வேட்சி வேண்டும் அவா மீதுறவேண்டும் மக்கட்ச்செல்வம் நாம் பேணுதல் வேண்டும்!
    மீட்சி நிறுத்தும் வேகமெழ ஞானக் கமண்டலமிங்கே உருண்டுருள காகப்
    பட்சி போற்றுதும்! பிள்ளை போற்றுதும் ! நற்பெற்றோரெனவே நீடு வாழுதும்!

    *****

    ”நிறம் கறுப்பாக இருந்தாலும் காக்கைக்குத் தன் குஞ்சு பொன்குஞ்சே!” அண்டவெளி கறுப்பு; காலைப்பொழுது உருவாவதோ காரிருளின் கருப்பத்தில்” என்று கறுப்பின் சிறப்பைப் பேசுகின்றார் அறிவியல் கவிஞர் திரு. ஜெயபாரதன்.

    கறுத்த நிறமாயினும், காண
    வெறுப்பளிப்பினும்,
    வாயில் முத்தமிட மனம்
    மறுப்பினும்,
    பஞ்ச வர்ணக் கிளிபோல்
    பிஞ்சு பிறக்காத போதினும்,
    காக்கைக்கும்
    தன்குஞ்சு பொன்குஞ்சே !
    அண்டவெளி நோக்கின்
    அதுவும் கறுப்பு !
    கருந்துளை ஒன்றில்
    பிரபஞ்சம் உருவானது !
    காரிருள்
    கர்ப்பத்தில் உதயம் ஆவது
    காலைப் பொழுது !
    கதிரோன் கண்மூடினால்
    காரிருள் திறக்கும் !
    காரிருள் இல்லாத தாரணியில்
    பேரொளிக்குப்
    பிழைப்பில்லை ! சிறப்பில்லை !
    என் புதல்வியின் நிறம்
    அடுப்புக் கரி!
    பிறந்த என் பேத்தியோ
    பொன்னிலா!

    *****

    காகத்தின் சிறப்பைத் திறம்படத் தம் கவிதைகளில் பதிவுசெய்திருக்கின்றார்கள்  கவிஞர் பெருமக்கள். அவர்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள்!

    இவ்வாரத்தின் சிறந்த கவிதை அடுத்து…

    காக்கைக்குத் தன்குஞ்சு பொன்குஞ்சு..!
    ^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^

    கடைச் சங்ககாலப் பெண்புலவரும் “விருந்துவரக்
    ……….கரைந்த காக்கையது பலி’யெனப் புகழ்ந்துரைத்தார்.!
    உடனொத்த பொய்யாமொழிப் புலவன் மிகையாக
    ……….இதனைக் ‘கரவா கரைந்துண்ணும்’ குணமென்றான்.!
    ‘நடப்பதுவே நிற்பதுவே’ எனப்பாடிய மகாகவியோ
    ……….நந்த லாலாவைக் கண்டான் ‘காக்கைச் சிறகினிலே’.!
    படத்தினிலேநான் காணுகிறேன்!பகுத்தறிவுளக் கரிய
    ……….பகிர்ந்துண்ணும் ஜீவியாக! பகவானின் வாகனமாக.!

    பாட்டி வடைசுட்ட காக்காக் கதையும் காலத்துக்கும்
    ……….பகன்றுரைத்த பாடம்தானந்த “காகத்தின் தந்திரம்”.!
    கொட்டிக் கிடக்கும் பணமிருந்தும் ‘எச்சிற்கையால்
    ……….காக்கா ஓட்டாதார்’ எனச்சிலருக்குப் பெயருண்டு.!
    வேட்டியை மடித்துக்கட்டி அரசியல் சூழ்ச்சிசெயும்
    ……….வித்தகரை ‘காக்கா பிடித்து’ முன்னேரியவரென்பார்.!
    வேட்டையாடி உண்ணும் ‘கருத்த மனமுடையோர்’
    ……….விட்டு வைக்கவில்லை குணமுடைய காக்கையும்.!

    அண்டத்தில் பறைவையினம் ஆயிரமாம்! அதிலே
    ……….அருங் குணமுளது காக்கையினம்!அதனால்தானோ.!
    அண்டங்காக்கை பரிமளம் மணிக்காக்கை எனப்பல
    ……….உருவமதில் வடிவம் கொண்டாராம் காகபுஜண்டர்.!
    அண்டமுழுதும் பரந்துதிரிந்து கொண்ட ஞானத்தால்
    ……….அழியாத்தமிழில் உபநிடத மொன்றைப் படைத்தார்.!
    அண்டத்தின் தேவையறிந்த மகேஸ்வரனும் அதை
    ……….ஆதாரத் தத்துவமாக்க அவருக்கருள் செய்தானே.!

    காகத்துக்கு விருந்துவைக்க எண்ணிய சங்ககாலத் தோழி தொடங்கி, காகத்தில் நந்தலாலாவைக் கண்டுகளித்த பாரதிவரை காகம் குறித்த அரிய தகவல்கள் பலவற்றையும் தன் கவிதையில் பாங்குற அறியத் தந்திருக்கும் பெருவை திரு. பார்த்தசாரதி இவ்வாரத்தின் சிறந்த கவிஞர் எனும் சிறப்புக்குரியவராகின்றார். அவருக்கு என் பாராட்டும் வாழ்த்தும்!

     

     

    Share
  • படக்கவிதைப் போட்டி 149-இன் முடிவுகள்

    -மேகலா இராமமூர்த்தி

    அண்ணாந்து எதையோ ஆர்வத்தோடு பார்த்துக்கொண்டிருக்கும் வண்ணக்கிளியைத் தன் சின்ன படப்பெட்டிக்குள் அடைத்துவந்திருக்கிறார் திரு. சாய். இப்படத்தைப் படக்கவிதைப் போட்டிக்குத் தேர்ந்தெடுத்துத் தந்திருப்பவர் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி. சாந்தி மாரியப்பன். இருவருக்கும் என் நன்றி!

    ”மண்ணில் வந்த நிலவோ
    மணம் பரப்பும் மலரோ
    கண்ணில் வழியும் அழகோ
    எண்ண இனிக்கும் தமிழோ”
    என்று இந்த மழலையைப் புகழ்ந்து பிள்ளைத்தமிழ் பாடத் தோன்றுகின்றது.

    கொள்ளையோடு அழகோடு நெஞ்சையள்ளும் இந்தக் குழவியைப் பாடக் கவிஞர்கள் குழாம் அடுத்து வருகின்றது.

    *****

    ”ஆகாயம் நோக்கும் அழகுச் செல்லமே! சந்திர மண்டலமும், செவ்வாய் மண்டலமும் தொட்டுவிடும் தூரமாகிவிட்ட இக்காலத்தில், நீ துணிவைத் துணையாக்கினால் உலகுக்குத் தூணாவாய்” என்று குழந்தைக்கு வீரமூட்டுகின்றார் திரு. ஏ.ஆர். முருகன், மயிலம்பாடி.

    ஆனந்த வாசல்

    ஆகாயத்த அண்ணாந்து பாத்து
    அதிசயிக்கும் செல்லமே!!!
    அது தொட்டுவிடுந்தூரந்தான்!
    ஆழ்ந்த சிந்தனையில்
    அமிழ்ந்திருக்கும் ஆரணங்கே!!
    கள்ளிப்பாலு..வரதட்சணை
    கட்டையில போயாச்சு!!!
    பொண்ணோ..ஆணோ…
    போதும் ஒண்ணுன்னு..
    புரிஞ்சுக்கிறகாலம்வந்தாச்சு!
    சந்திராயன் ஏறி நிலவுக்கு
    சுற்றுலா போகலாமா??
    மங்கள்யானில் பயணித்து
    செவ்வாய்தோசம் கழிக்கலாமா?
    மங்கையரின் பேராண்மை
    கங்கையைப்போல் பிரவாகித்து
    எங்கும் பிரகாசிக்கும்
    இந்த நூற்றாண்டில் உதித்து
    மந்தகாசப் புன்னகையில்
    எதிர்கால யோசனையோ??
    துணிவையே துணையாக்கி
    துயரங்களை உரமாக்கி
    துவளாமல் நீ வளர்ந்து
    தூணாவாய் உலகத்துக்கு!!

    *****

    ”மின்னிடும் விண்மீனும், தண்ணிலவும், தணற் சூரியனும் அந்தரக் கோள்களும் காட்டும் சுந்தர வித்தைகளின் காரணத்தைக் கற்றுத்தெளிவாய் கண்மணியே” என்று குழந்தையிடம் வேண்டுகின்றார் திரு. ஆ.  செந்தில் குமார். 

    சிந்தித்துத் தெளிவாய் பாப்பா…!

    அண்ணார்ந்துப் பார்த்து அதிசயிக்க
    ஆயிரம் உண்டிங்கு பாப்பா…

    ஒளியை உமிழும் கதிரவன்
    உலகுக்கே ஆதாரம் பாப்பா…

    முகிலில் உறைந்து மறைந்த
    மழைத்துளி அதிசயம் பாப்பா…

    வெள்ளொளிச் சிதறல் வானவில்
    வானின் அதிசயம் பாப்பா…

    எல்லையேயின்றி நீளும் பெருவெளி
    எத்தனை அதிசயம் பாப்பா…

    அங்கு அந்தரத்திலிருக்கும் கோள்கள்
    அனைத்தும் அதிசயம் பாப்பா…

    மனதின் சிறகுகள் விரிந்தால்
    மலையும் மடுவாகும் பாப்பா…

    மின்னிடும் விண்மீன் கூட்டம்!
    தண்ணொளி வழங்கிடும் நிலவு!
    தனலாய்க் கொதிக்கும் ஆதவன்!
    பளிச்சென வெட்டும் மின்னல்!
    பொழிந்திடும் தூய மழைத்துளி! இன்னும் 
    எத்தனை! எத்தனை! எத்தனை!
    எத்தனை அதிசயம் இயற்கையில்!
    இவையனைத்துக்கும் காரணம் யாதென 
    சிந்தித்து தெளிவாய் பாப்பா…!

    *****

    ”குழந்தையிவள் நடைகண்டு கோலமயில் வெட்கும்; கூனல்பிறை நெற்றிகண்டு நிலவுகூடச் சொக்கும்” என்று வண்ணமகளின் வடிவழகை எண்ணத் தூரிகையால் எழிலாய் வரைந்துகாட்டியிருக்கின்றார் திரு. கொ. வை. அரங்கநாதன்.

    வண்ணமகள் வடிவுகண்டு வானவில்லும் நிமிரும்
    வானம்கூட கீழிறங்கி வணக்கம்சொல்லி சிரிக்கும்
    கூனல்பிறை நெற்றிகண்டு நிலவுகூட சிலிர்க்கும்
    குழந்தையிவள் நடைகண்டு கோலமயில் வெட்கும்!

    கன்னங்குழி சிரிப்பினிலே கவிதைகளும் விளையும்
    காலையிளங் கதிர்போல கண்கள்கூட ஒளிரும்
    பிஞ்சுமகள் ஸ்பரிசத்தில் பிரளயங்கள் அடங்கும்
    பஞ்சுநிகர் மெல்லடியில் பாவங்கள் கரையும்!

    குழலோடு யாழொலியும் கூடி நின்று ஒலிக்கும்
    குழந்தையிவள் மழலையிலே இசையரங்கு நடக்கும்
    குட்டிமகள் அணைப்பினிலே கோடைகூட குளிரும்
    குற்றால சாரலென கொஞ்சும் மொழி பேசும்!

    எழுந்திவள் நடக்கையிலே என்நாடு உயரும்
    எட்டெட்டுத் திசையெங்கும் என்தமிழும் மிளிரும்
    அழகியிவள் கைகளாலேஅற்புதங்கள் நிகழும்
    அனைவரையும் ஒன்றாக்கி அகிலத்தை வெல்லும்!

    *****

    ”சின்ன நிலாவின் எண்ணத்தில் உலா வருவதென்ன? காசுக்கு விலைபோகும் கல்வியா? தாய்வழிக் கல்வியின் புறக்கணிப்பா? முதியோரின் அவல வாழ்வா?” என வினாத் தொடுக்கின்றார் திரு. பழ.செல்வமாணிக்கம். 

    பெண் தெய்வம்

    வானத்து நிலவை ரசிக்கின்றதோ!
    இந்த அழகுச் சின்ன நிலா!
    அழகுக் கண்ணம்மா உன்னை நிலா என நினைத்து!
    நட்சத்திரக் கூட்டம் பூமிக்கு வந்து விடப் போகிறது!
    ஆசைக் கண்ணம்மா! வானத்து நிலா, உன் அழகில் நாணி!
    ஓடி ஒளிந்து கொள்ளப் போகிறது!
    சின்னக் கண்ணம்மா! உன் முகத்தை மலரென நினைத்து!
    வண்டுகள் தேனெடுக்க வந்து விடப் போகிறது!
    அது சரி! நீ என்ன யோசித்துக் கொண்டிருக்கிறாய்!
    காசுக்கு கல்வியை விற்கும் நிலையை நினைத்தாயோ!
    தமிழ் வழிக் கல்வியை புறக்கணிப்பதை நினைத்தாயோ!
    ஓடி விளையாட மறந்த பிள்ளைகளை நினைத்தாயோ!
    ஆண், பெண் அனைவரும் அலை பேசிக்கு அடிமையானதை
    நினைத்தாயோ!
    தாத்தா, பாட்டிக்கு, முதியோர் இல்லம், நிரந்தரமானதை
    நினைத்தாயோ!
    அனைத்தும் மாறும் மயங்காதே!
    நல்லதே நடக்கும் கலங்காதே!
    நாளைய உலகம் உங்கள் கையில்!
    ஆண் உயர்வு பெறுவது பெண்ணாலே!
    நல்லது நடப்பது பெண்ணாலே!
    கருவில் சுமப்பது பெண் தானே!
    பெற்றுக் கொடுப்பது பெண் தானே!
    தாயாய்,தமக்கையாய், தங்கையாய்!
    மனைவியாய், தோழியாய், மகளாய்!
    பல உருவெடுத்து, உலகைக் காக்கும்!
    தெய்வமும் பெண் தானே!

    *****

    கள்ளிப்பாலுக்குத் தப்பிய பெண் குழந்தைகள், வளர்ந்தபின் காமுகரின் கைகளிலிருந்து தப்ப வேண்டும்; மணவாழ்வில் மாமியார்க் கொடுமையிலிருந்து தப்ப வேண்டும் என்று எதிர்காலத்தை எண்ணிக் கலங்கும் பெண் மகவைக் காண்கிறோம் திரு. செண்பக ஜெகதீசனின் கவிதையில்.

    குழந்தையின் கேள்வி…

    கள்ளிப் பாலுக்கும்
    கழனி நெல்லுக்கும்,
    கடை மாத்திரைக்கும்
    தப்பிப் பிறந்துவிட்டோம்..

    பிஞ்சென்றும் பாராத
    வஞ்சகரின்
    காமக் கண்களில் படாமல்
    கவனமாய் வளரவேண்டும்..

    பாகுபாட்டுடனே
    கிடைக்கும் கல்வியிலும்,
    பணியினிலும்
    கிடைப்பதில்லை பாதுகாப்பு..

    தடைகள் மிக்கக்
    காதல் வாழ்வைக் கடந்து,
    காலடி வைக்கும்
    மணவாழ்விலும்
    மலைபோல் தடைகள்-
    மாமியார்,
    மண்ணெண்ணெயென்று பல..

    பெரும்பாடுபட்டு
    பிள்ளைகளை வளர்த்துவிட்டு,
    பின்னாளில்
    போவோமோ முதியோர் இல்லம்..

    இப்படி இருக்குது
    பல கேள்வி எம்போலப்
    பெண்கள் வாழ்வினிலே..

    இதற்கென்ன பதில்,
    இறைவா நீசொல்
    இப்போதே…!

    *****

    மங்குலை யொத்த குழலோடும், முகையவிழ் மலர் சிரிப்போடும், செங்கனிவாய் சிந்தும் முறுவலோடும் சிந்தைகவரும் பெண்மகவுக்கு சுந்தரத் தமிழில் தாலாட்டுப் பாடியுள்ளார் பெருவை திரு. பார்த்தசாரதி.

    தாலாட்டு!

    மங்கல வேளையில்நீ வந்து பிறந்தாய்
    ………..மாங்கல் யத்துக்குக் கிடைத்த பரிசாக
    மங்காத செல்வத்தையும் கொடுப் பாய்
    ………..மண்ணை யாள வந்தாயோ தாலேலோ.!

    மங்குலை யொத்த கருங் குழலொடும்
    ……….. முகையவிழ் மலர் போல் சிரிப்பொடும்
    செங்கனி வாய்ச் சிவந்த இதழொடும்
    ………..சிரிக்கு மென் செல்லமே கண்ணுறங்கு.!

    ஐயமில் வளர்ந்து நாளைநீ வீட்டையும்
    ………..ஆளப் போகும் முத்தே முத்தாரமே
    வையகமே மாதரால் சுகம் பெறுமாம்
    ………..பொய்யிலா நிலை யுறுவாய் தாலேலே.!

    பாராய் எனை…உனைநான் புகழ்வேன்
    ………..பாங்குடன் உனைத் தாலாட் டுவேன்.!
    ஆராயென் மனதை வளைய வருவாய்
    ……….ஆர் கண்ணும்படு முன்நீ கண்ணுறங்கு.!

    விரும் பியே நானுனைப் பாடுவேன்
    ……….விரலால் தூளி யசைத்து அயர்ந்தேன்
    துரும்பாவேன் நீயும் தூங்கவிலை யெனின்
    ……….சோதியே சுகமாய் நீ கண்ணுறங்கு.!

    அம்மா வெனும் மழலைச் சொல்லால்
    ……….அனைத் தையும் நானுடன் மறப்பேன்
    சும்மா நானினி இருப்பேனோ என்
    ……….சுகமானது சூரியன் போலுதய மாகும்.!

    *****

    ”பிணையேர் மடநோக்கை விட்டு, நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வையொடு பாரதியின் புதுமைப்பெண்ணாய்ப் பாரில் வாழ்ந்து, வரலாற்றில் தடம் பதிப்பாய்!” என்று அண்ணாந்துபார்க்கும் எழில்நிலவுக்கு நன்மொழி புகட்டுகின்றார் திரு. எஸ். கருணானந்தராஜா.

    அண்ணாந்து பார்க்கும் அழகுப் பெண்ணே!

    நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வையும்
    திமிர்ந்த ஞானச் செருக்கும் கொண்டு
    பாரதி காட்டிய புதுமைப் பெண்ணாய்
    பாரினில் வாழ பழகு இப்போதே.

    பிணைநேர் மடநோக்கும் நாணும் உனக்கு
    அணியல்ல அவை பிணிகள்
    ‘நாணும் அச்சமும் நாய்கட்கு வேண்டுமாம்‘
    என்றுரைத்த பாரதியின் இலட்சியப் பெண் நீயன்றோ!

    புலி விரட்ட முறமெடுத்தாள் அக்காலத் தமிழச்சி
    பகை விரட்டப் புலியானாள் தற்காலத் தமிழச்சி.
    அந்த வரலாற்றின் அடிச்சுவட்டில் பூத்தவள் நீ –உன்
    சொந்த வரலாற்றைப் பொன்னெழுத்திற் பொறி.

    காற்றிலேறு விண்ணைச்சாடு ககனமெங்கும் தாவித்திரிந்து
    ஆற்றல் மிக்குற அண்டமளந்து
    அறிவின் திருவாய் அவனியில் மிளிர்

    ஆழக்கடலின் அடிவரை சென்று வா
    அகிலத்திருக்கும் மலைமுடிகளிலே
    ஏறிச் சென்று இயற்கையை அளந்திடு
    இருக்கும் அனைத்திலும் உன்தடம் பதித்திடு

    புதிய கலைகள் பூத நுட்ப
    விதிகள் கூறும் வேதியல், இயற்பியல்
    எதிலும் சளையாதுன்றன் திறனை
    எடுத்துக்காட்டி எங்கும் வியாபி.

    *****

    குழந்தையின் எழிற்தோற்றத்தில் ஈடுபட்டு, அற்புதக் கவிதைகளைப் படைத்துத் தந்திருக்கின்றார்கள் கவிஞர்கள். அவர்கட்கு என் பாராட்டு!

    இவ்வாரத்தின் சிறந்த கவிதையாய்த் தேர்வானது இனி…

    ஆற்றலென்றனை பால சக்தி!

    காந்தப் பார்வையில் ஆகாச கோசமோ
    காந்தள் பிடியில் பிரிந்த வஞ்சுருளோ
    மோந்தா மூச்சில் எதிர்விசைச் சாடலோ
    ஏந்தாப் புதிர் விடுக்கும் செந்தாள் ஊசலோ

    அந்தாரத்திலெழும் மந்தார மாயத்தால்
    சாந்தாச் சிமிழியில் புலவாத பேச்சோ
    சேந்தாவடுக்கில் வெளிநிலை விளக்கமோ
    சிந்தாச்சிந்தையே ஆற்றலென்றனை பால சக்தி!

    சின்னஞ்சிறு மழலையின் காந்தப் பார்வையையும் அதன் காந்தள் பிடியினின்று பிரிந்துநிற்கும் காகிதச் சுருளையும் கவினோடு காட்சிப்படுத்தியிருக்கின்றது இக்கவிதை.

    கவிதைக்கு அழகு சொற்சிக்கனமும்; கருத்துச் செறிவும். அவ்வகையில் சிறிய சொற்களில் விரிந்த பொருளை நுட்பமாய் அடக்கித் தந்திருக்கும் இக்கவிதையின் ஆசிரியர் திருமிகு. அவ்வைமகளை இவ்வாரத்தின் சிறந்த கவிஞர் என அறிவித்துப் பாராட்டுகின்றேன்.

     

     

     

    Share
  • படக்கவிதைப் போட்டி 148-இன் முடிவுகள்

    -மேகலா இராமமூர்த்தி

    piegons

    சோடிப் புறாக்களைத் தேடிப்பிடித்துக் கலைநயத்தோடு படமெடுத்து வந்திருக்கின்றார் திரு. ஆய்மன் பின் முபாரக். இணையற்ற இவ்விணையர் குறித்துக் கவினோடு கவியெழுதுங்கள் என்று இக்காட்சியைப் போட்டிக்குத் தெரிவுசெய்து தந்திருக்கின்றார் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி. சாந்தி மாரியப்பன். இவ்விருவரும் என் நன்றிக்குரியோர்.

    ”இருநிலா  இணைந்து  பாடி
    இரையுண்ணும் செவ்வி தழ்கள்
    விரியாத தாமரை போல்
    ஓர்இணை  மெல்லி யர்கள்
    கருங்கொண்டை கட்டி  ஈயம்
    காயாம்பூக்  கொத்து மேலும்
    ஒருபக்கம் இருவா ழைப்பூ
    உயிருள்ள அழகின் மேய்சல்!” என்று புறாக்களின் எழிலைத் தன் ’அழகின் சிரிப்பில்’ அருமையாய் வடித்துத் தந்திருக்கின்றார் பாவேந்தர்.

    ஒழுக்கம் விழுப்பந் தரலான் அதனைத் தம் வாழ்வில் உயிரினும் மேலாய்க் கடைப்பிடிக்கும் புறாக்களின் நனிநாகரிகத்தை மானுடரும் பின்பற்றுதல் நன்று.

    இனி கவிஞர்களின் முறை…

    ”சாதி மதம் பாராது, சாதகத்தைச் சாராது வேசமில்லாப் பாசத்தோடு இணைந்திருக்கும் இவ்இனிய புறாக்கள் உண்மைக் காதலுக்குத் தக்கதோர் சான்றாய்த் திகழ்கின்றன” எனப் புகழ்கின்றார் திரு ஏ.ஆர். முருகன், மயிலம்பாடி. 

    இணைந்த உயிர்கள்!!

    #மாசிமாதம் ஓரிரவு…
    மகிழ்ச்சி ததும்பும் தேனிலவு!
    ஜோடி போட்ட மாடப்புறா
    சொக்கவைக்கும் காதல்நிலா!!
    #வண்ணப்பறவைகள் ரெண்டு
    வற்றாத பேரன்பு கொண்டு
    காதலின் உச்சத்தைக் கண்டு
    காட்டிடும்தோரணை கற்கண்டு!!
    #விரும்பும் துணையின் அருகிலே
    விசனம் மறந்த நிலையிலே
    விழிகள் பேசும் மொழியிலே
    விழுந்தன மனங்கள் மையலிலே!!
    #சாதி மதம் பார்க்கவில்லை
    சாதகத்தைத் தேடவில்லை
    சம்மதிக்கும் உள்ளங்களைச்
    சாய்க்கத்தடைகள் உலகிலில்லை!!
    #உண்மை அன்பு மலர்ந்துவிட்டால்
    உடைப்பதென்ன சுலபமா??
    உயிர்கள்இங்கு இணைந்துவிட்டால்
    உளிகள் கூட உறவுதான்!!
    #வேசமில்லாப் பாசத்துக்கு
    மோசமென்றும் கிடையாதே!!
    மோட்சம் பூமியில் உள்ளதெனும்
    சூட்சுமம் அறிவோர் மெய்க்காதலரே!!!

    *****

    ”கடவுள் பேதம் எமக்கில்லை; எங்கும் குடியிருப்போம்! சாதி பேதமும் எமக்கில்லை; எவரையும் காதலிப்போம்!” என்று பேதமற்ற உயர்ந்த வாழ்வின் மாட்சியைப் பேசும் உன்னதப் புறாக்களைக் காட்சிப்படுத்தியுள்ளார் திரு. செண்பக ஜெகதீசன்.

    தெரிந்திடுவீர் எம் காதல்…

    கடவுள்களில் பேதமில்லை எங்கும் இருப்போம்
    கோபுரத்தில் வாழுகிறோம் குடும்பத் தோடே,
    அடுத்துள்ள தேவாலயம் மசூதியும் வீடே
    அங்கிருந்தே இரைதேடிச் செல்வோம் காடே,
    இடையில்வரும் காதலிலே இணைந்தே செல்வோம்
    இடைஞ்சலாக எவருமெங்கள் இனத்தில் இல்லை,
    நடைமுறையில் மனிதர்போல் நாங்க ளில்லை
    நாட்டுப்புறா எம்காதல் தெரியும் தானே…!

    *****

    ”ஆண் பெண் புறாக்கள் ஒன்றிணைந்து காதலர் தினம் கொண்டாடுகின்றனவோ?” என்று வேடிக்கையாய் வினவும் கவிஞர் திரு. பழ. செல்வமாணிக்கம், ”பணம் பார்த்து வருவதன்று காதல்! நல்ல குணம் பார்த்து வருவதே உண்மைக்காதல்! உயிரைத் தருவதன்று காதல்! உயிராய் வாழ்வதே காதல்” என்று காதலின் மகத்துவத்தைச் சகத்துக்கு உணர்த்துகின்றார்.

    உண்மைக் காதல்

    நெருங்கி நிற்கும் இரண்டு வண்ணப் புறாக்கள்!
    காதல் வானில் சிறகடித்துப் பறக்கும்!
    அருமைப் புறாக்கள்!
    ஆண் புறாவின் அருகில் மயங்கி நிற்கும்!
    பெண் புறா!
    இந்த பெண் புறாவின் இணையென்ற மகிழ்வில்
    ஆண் புறா!
    காதலர் தினத்தை கொண்டாடுகின்றனவோ!
    இந்தப் புறாக்கள்!
    இல்லை! இல்லை!
    உண்மை காதலருக்கு ஒவ்வொரு நாளும் காதலர் தினம் தானே!
    அழகைப் பார்த்து வருவது மனிதக் காதல்!
    மனதைப் பார்த்து வருவது உண்மைக் காதல்!
    வசதியைப் பார்த்து வருவது மனிதக் காதல்!
    குணத்தைப் பார்த்து வருவது உண்மைக் காதல்!
    அன்பின் வடிவம் காதல்!
    புரிதலின் பொருளே காதல்!
    தோழமை என்பது காதல்!
    ஒற்றுமை என்பது காதல்!
    விட்டுக் கொடுப்பது காதல்!
    “நான் “ மறைவது காதல்!
    “நாம்” என்று தெளிவது காதல்!
    சுயநலம் மறப்பது காதல்!
    உன் துயர், எனதென நினைப்பது காதல்!
    யாசித்துப் பெறுவதா காதல்!
    தானாய் மலர்வது காதல்!
    மாலையால் இணைவதா காதல்!
    மனதால் இணைவதே காதல்!
    உயிரைத் தருவதா காதல்!
    உயிராய் வாழ்வது காதல்!

    *****

    ”உண்மைக் காதலுக்கோர் உதாரணமாய், பகுத்துண்ணும் தன்னலமற்ற குணத்துக்கோர் சான்றாய் வாழும் புறாக்களை மனிதன் பந்தயத்துக்குப் பயன்படுத்துகின்றான் நேயமின்றி.  அந்தோ! மாந்தன் விளைவிக்கும் குந்தகமறியாது அந்தகனிடம் அகப்பட்டுக்கொள்கின்றதே அருமைப் புறா!” என்று வருந்துகின்றார் பெருவை திரு. பார்த்தசாரதி.

    மனிதனும் புறாவும்..!

    மாடத்தில் மட்டுமே கூடுகட்டி வாழும்
    ……….மனிதனோடு பழகும் பண்பு கொண்டது..!
    ஆடலுடன் பாடலும் செய்யும் அதையே
    ……….அதிசயித்து நமைப் பார்க்கத் தோன்றும்.!
    கூடயிருக்கும் குஞ்சுப் புறாவுக்குத் தன்
    ……….குரல்வளைச் சேர்த்த உணவு ஊட்டும்..!
    ஊடல் கொள்ள இணையாய் ஒன்று
    ……….உரு வானால் வேறொன்றை நாடாது..!

    துணையாய்த் தேடி வந்த சோடியுடன்
    ……….தன் தலைசாய்த்து வட்டமிட்டு ஆடும்..!
    இணையிடும் முட்டையை தன்னல மின்றி
    ……….இரவுபகல் அடை காக்கும் குணமாம்..!
    பிணைக் கைதி போலதனை அடைத்து
    ……….பின்னர்ச் சோடி பிரித்து பறக்கவிடுவார்.!
    கிணற்றுத் தவளைபோல வாழு மதற்குக்
    ……….கிட்டுமா இனியும் சுதந்திர வாழ்க்கை..!

    பந்தயத்தில் பறக்கவிட புறா வளர்ப்போர்
    ……….பாங்கா யதனைக் காப்பார் பணமாக்க..!
    பந்தமென வரும்போது ஒன்றாகக் கூடியே
    ……….பாங்காகப் பிரித் துண்ணும் தானியத்தை.!
    குந்தகமும் ஆபத்தும் நிறைந்த வாழ்வில்
    ……….குணமுள்ள பறவை யெனப் புகழுண்டு..!
    அந்தகனை அடையாளம் காணத் தெரியா
    ……….அகப்பட்டுக் கொள்வ ததன் விதியோ..!

    *****

    மாமிசம் உண்டு வந்ததோ பெண்புறா என்று அதன்மீது காதல்கொண்ட ஆண்புறா அதனை ஐயுற்றுக் கடிந்துகொள்வதை அழகிய கவிதையாக்கியிருக்கின்றார் திரு. எஸ். கருணானந்தராஜா.

    சேவல்-
    என்னடி ஹப் அடிக்குது? எதைத் திண்டு தொலைச்சே
    கீழ் மாடி மேசையிலே கெடக்குதே பழங்களெல்லாம்
    கூடத்துக் கோணியெல்லாம் குவிஞ்சிருக்கே தானியங்க
    அதையெடுத்துத் தின்னாம ஆட்டுக்கறி தின்னியா?
    குவிச்சிருந்த விதவிதமாப் பழத்தையெல்லாம் விட்டுப்பிட்டு
    கவுச்சியில ஆசப்பட்ட போக்கத்த புழுப் பொறுக்கி

    அடச்சே! உன்னால பெரிய பேஜாராப் போச்சு
    இந்த நாத்தத்தோட எப்படியுன்னை
    நான் பக்கத்தில வச்சுக்கிறது.
    ஓடு போ சீக்கிரம் சொண்டைக் கழுவிட்டு வா!

    பேடு-
    எதுக்காம்?

    சேவல்-
    ஏன் உனக்குத் தெரியாதா
    புதுசாக் கேக்கிறியே! அதுக்குத்தான்.
    பழம் மணக்கும் சொண்டோட
    பக்கத்த வந்து நில்லு.
    இழவுக் கவுச்சி மணம் எனக்குச் சகிக்காது
    ஓடு போய் வாய ஒடனே கழுவிட்டுவா
    ஒட்டி உரசிக்கலாம் உயிரைக் கலந்துக்கலாம்.

    *****

    புறவின் சிறப்புக்களைப் படிப்போர் இரசிக்கும்வண்ணம் துடிப்போடு கவி வடித்துத் தந்திருக்கும் கவிஞர்கள் அனைவருக்கும் என் பாராட்டும் நன்றியும்!

    இவ்வாரத்தின் சிறந்த கவிதையாய்த் தெரிவு பெற்றிருக்கும் கவிதை அடுத்து..

    புறாக்கள் சொல்லும் பாடம்

    பிறன்மனை நோக்காமை பேராண்மை!
    பகன்றது வள்ளுவன் சொல்லாண்மை!
    தன்னிணை மண்ணில் வாழும்வரை
    தரங்கெட் டடுத்ததை நாடாமல்
    உயரிய வாழ்க்கை வாழ்ந்திடுதே
    உலகில் உள்ள புறாக்கூட்டம்!
    மனிதா உனக்கு உரைக்கிறதா?
    மனதில் ஏதேனும் பதிகிறதா?

    கூட்டங்கூட்டமாய் வாழ்ந்திடுமே! புறாக்கள்…
    கூடி உண்டு களித்திடுமே!
    காக்கை குருவி எங்கள் சாதி!
    கவி பாடினான் பாரதி!
    மனிதா… மனிதா… நீ…
    சகமனிதனுடன் மோதி…
    சுடுகாட்டிலும் சாதி!
    சுட்டிக்காட்டுவதென்ன நீதி???

    கீழ்மேல் என்றெல்லாம் பாராது
    காழ்ப்புணர்ச்சி தம்முள் இருக்காது
    சமாதானத் தூதுவன் நம்
    சமுதாயத்திற்குச் சொல்லிடும் பாடமிது!
    தன்னலம் கொண்ட மனிதரெல்லாம்…
    தரணியில் படைத்த சாதிமதங்கள்…
    கூட்ட உணர்வைக் கொண்டுளது!
    கூட்டு உணர்வைக் கொண்டுளதா???

    கூட்டங்கூட்டமாய் ஒற்றுமைபேணி வாழ்கின்றன புறாக்கள். மனிதனோ ஒற்றுமையில் நாட்டமின்றிச் சக மனிதனோடு எப்போதும் மோதி, சுடுகாட்டிலும் பார்க்கின்றான் சாதி! இஃதென்ன நீதி?

    வள்ளுவன் மாந்தருக்குரைத்த ஒழுக்கத்தையும், பிறன்மனை நோக்காப் பேராண்மையையும் பின்பற்றி நடப்பதென்னவோ பறவையினத்தைச் சேர்ந்த புறாக்களே! என்று புறவினத்தின் பெருமையினைப் பரக்கப்பேசும் – உரக்கப்பேசும் இக்கவிதையினை யாத்த திரு. ஆ. செந்தில்குமார் இவ்வாரத்தின் சிறந்த கவிஞராகத் தேர்வுசெய்யப்படுகின்றார். அவருக்கு என் பாராட்டு!

    Share
  • படக்கவிதைப் போட்டி 147-இன் முடிவுகள்

    -மேகலா இராமமூர்த்தி

    flower merchant

    மலர்களை விற்பனைக்குக் கொட்டிவைத்துவிட்டுக் கடைக்காரர் வேறேதோ கற்பனையில் இருப்பதை அவர் முகக்குறிப்பு அறிவிக்கின்றது. திருமிகு ஷாமினியின் கைவண்ணத்தில் எடுக்கப்பட்ட இப்படத்தைப் படக்கவிதைப் போட்டிக்குத் தேர்வுசெய்து தந்திருப்பவர் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி. சாந்தி மாரியப்பன். இவர்கள் இருவருக்கும் என் நன்றி மலர்களைக் காணிக்கையாக்குகின்றேன்.

    மனங்கவரும்வண்ணம் மணம் பரப்புபவை மலர்கள். எனினும் அவற்றை விற்பனை செய்யும் தொழிலாளரின் வாழ்வு மணத்தோடும், அவரை நம்பியிருக்கும் குடும்பம் வாழ்க்கை நடத்தத் தேவையான பணத்தோடும் இருக்கின்றதா என்பது கேள்விக்குறியே!

    மலரும் மனிதரும் இணைந்திருக்கும் இக்காட்சிக்கு மலர்ச்சியாய்க் கவிதையெழுத கவிஞர்களை அழைக்கின்றேன். (நண்பர்களே… இனிவரும் வாரங்களில் நீங்கள் எழுதும் கவிதைகள் 24 அடிகளுக்கு மிகாமல் இருக்குமாறு பார்த்துக்கொள்ளுங்கள்.)

    *****

    ”புதிதாய் மணம்புரிந்த இந்த இளைஞர், மணம்வீசும் மலர்களை விரைந்து விற்றுவிட்டுக் காதல் மனையாளோடு மகிழ்ந்திருக்க எண்ணுகின்றார் என்பதே இவரின் முகம் உணர்த்தும் அகக்குறிப்பு” என்கிறார் திரு. ஏ.ஆர்.முருகன்.

     பூவாக வாழ..பூவையைத்தாங்கு!! 
    #விற்பனைக்குக்காத்திருக்கும்
    விடுமலர்கள்!! _ தொடுக்காமல்
    விற்றுவிட்டால் சரமாக்க இரவு
    விழித்திருக்கத்தேவையில்லை!
    #நூலெடுத்து வேலைக்கு எத்தனித்தால்
    நூலிடையாள் ஞாபகம்! _ கட்டி வந்து
    நூறுநாள் தாண்டவில்லை.. உள்ளத்தில்
    நூலிலையாய்ப்பின்னிபுதுமணப்பெண்!!
    #இரண்டொருநாள் தாண்டிவிட்டால்
    இதழ் அழுகும்!! _ தாம்பத்தியம்
    இல்லறத்தின் அழகு..நல்லறமாய் ஆக
    இல்லாளை எந்நாளும் நேசிக்கணும்!!
    #முன்வருவதைவிட மிகச்சிறப்பு
    பின்வருவதே _ காதல்
    பண்ணுவது மனைவியெனில்
    மின்னும் இல்வாழ்வு!!!
    #உதிரம்நனைந்த வெள்ளைரோஜா
    உருவாகும்சிவப்பு _ கிளிக்காதல்
    உவமானமல்ல ஈருயிர்பந்தத்தின்
    உண்மையான பாசப் பரிணமிப்பு!!
    #வியாபாரம் செழிக்கத்துணையாக
    வீட்டுக்காரி வரவேணும் _ மாலைகட்டி
    விரைவிலே முடித்து,இல்லம்திரும்பி
    விரும்பும்தம்பதியாய்வாழவேண்டும்!!!

    *****

    ”அரும்பு நனை முகை மொக்கு என்று ஒவ்வொரு பருவத்தையும் கடந்துவரும் மலர், வீயாகி விழுமுன் வாடிக்கையாளர் வாங்கிவிட்டால் மனையாள் மகிழ்வாள்” என்று பூக்களின் பருவங்களையும், வணிகரின் மனவோட்டத்தையும் தன் பாவில் சுவைபடப் பட்டியலிட்டுள்ளார் திரு. ஆ. செந்தில்குமார்.

    மலர் வணிகனின்  மனவோட்டம்
    அரும்பாகி…
    அதுமுற்றி நனையாகி…
    முகையாகி… மொக்காகி…
    முகிழாகி… மொட்டாகி…
    மலராகி… பூவாகி…
    விற்பனைக்கு கடையடைந்து…
    வீயாகி… உதிர்ந்து வீழுமுன்னே…
    விற்றுத் தீர்ந்துவிட்டால்…
    வீட்டில் காத்திருக்கும்
    பொறுப்பான மனையாளும்
    பொதும்பராகி மகிழ்வாளே…
    பொம்மலாகி… செம்மலாகி…
    வீணில் போகுமுன்னே…
    வாடிக்கையாளர் எவரேனும்
    வந்து வாங்கிவிட்டால் – என்
    வாடும் மனம் மலர்ந்திடுமே…!

    *****

    ”இறைவனிடம் சேர்ந்தால் திருமாலை, அரசியல்வாதியிடம் சேர்ந்தால் மலர்மாலை. ஆனால்… என்று கூடும் எனக்கு மணமாலை?” என்று மலர் வணிகர் தம் மனத்துள் மருகுவதைப் பாமாலை ஆக்கியிருக்கின்றார் திரு. செண்பக ஜெகதீசன்.

    அவன் கவலை…
    மலர்கள் விற்கிறான் உதிரியாக
    மாலை யாகிடும் உறுதியாக,
    பலவகைப் பயன்கள் அதற்குண்டு
    பள்ளியில் சேர்த்திடும் மணமாலை,
    சிலையில் இறைவன் திருமாலை
    சீரிலா அரசியல் பூமாலை,
    நிலவிடும் அவனிடம் ஒருகவலை
    நம்மிடம் வருமா மணமாலையே…!

    *****

    மனித வாழ்வின் ஒவ்வொரு நிகழ்வோடும் மலர்கள் பின்னிப் பிணைந்திருக்கும் மாண்பை அழகாய் வகைப்படுத்தி, கண்ணுக்கு மட்டுமன்று கவிதைக்கும் கருவாய்த் திகழ்பவை இவை என்று பூக்களைப் புகழ்ந்திருக்கின்றார் பெருவை திரு. பார்த்தசாரதி.

    பூவே உன்னைப் புகழ-வா..!

    பூவென்றாலே அதனுடன் மணமும் சேர்ந்ததுதானே..
    ……….பூவோடு சேர்ந்தநாரும் கூடமணக்கும் என்பார்கள்.!
    பூவெல்லாம் ஒன்றுசேர்ந்து மணக்கின்ற இடத்தில்..
    ……….புதிதாயங்கே மலருமாமொரு விழாவோ நிகழ்ச்சியோ.!
    ஆவென்றே அதிசயிக்கும் ஆளுயரப் பூமாலையென..
    ……….அன்பிற்கே அடையாளமாய் திகழுமிந்தப் பூக்களாம்.!
    வாவென் அன்பேயென அழைக்கவும் ஓவென்றழவும்..
    ……….வாங்குகின்ற ஒருபொருளாகத் தானுனைப் பார்ப்பார்.!
    பெண்ணவள் மலரும் தன்மைக்கு வந்துவிட்டாளென..

    ……….பூக்கள்பலச் சூடித்தான் சூசகமாகத் தெரிவிப்பாரன்று.!
    பெண்ணுக்கும் மலருக்கும் அதிகத் தொடர்புண்டாம்..
    ……….பூச்சூட்டலெனும் நிகழ்ச்சியே அதற்குத் தகும்சான்று.!
    எண்ணெய் வைத்துக் குளிப்பாட்டிய பாவைக்கு..
    ……….எண்ணற்ற வளையலும் பூக்களும் பரிசளிப்பாரன்று.!
    கண்ணான மருமகளின் தலையில் மொட்டுப்பூச்சூடும்..
    ……….காட்சியாக மாமியாரே மருமகளுக்குச் சூட்டுவாராம்.!
    பெண்களை மலரென்பார் கவிஞரும் பாவலரும்..
    ……….போற்றும் குண மிருவருக்கும் உண்டென்பதாலோ.!
    பெண்ணைத் தெய்வமாக மதிக்க வேண்டுமெனவே..
    ……….பெண்தெய்வம் விழாக் கொண்டது பூச்சொரிதலாலே.!
    ஆண்டகையொருவன் போரில் வெற்றி பெற்றால்..
    ……….அந்நாளில் அவன்தலையில் பூவால் வாகைசூடுவார்.!
    கண்ணுக்கு விருந்தாகும்!..கவிதைக்குக் கருவாகும்!..
    ……….காதலர்களுக்குப் பரிசாகும்!.வண்ணமிகு பூக்களாம்.!

    *****

    மலர்களின் அரசியாய்த் திகழும் ரோஜாவின் சிறப்பையும், வாழும்வரைப் பிறர்க்குப் பயன்தரும் அதன் உயர்பண்பையும் சிறப்பாய்ச் சொல்லியிருக்கிறார் திரு. பழ.செல்வமாணிக்கம். 

    புண்ணியப் பூக்கள்:
    ரோஜாப் பூவே நீ தானே பூக்களுக்கெல்லாம் அரசி!
    ஒற்றை ரோஜாவாய் நீ வந்தாலே மனதிலே மகிழ்ச்சி!

    கூட்டமாய் கூடையில் கொலுவிருப்பது!
    கண் கொள்ளாக் காட்சி!
    மென்மை எனும் வார்த்தைக்கு நீ தானே அத்தாட்சி!
    நீ முள்ளோடு வளர்ந்தாலும் மென்மையாய் இருப்பது
    உன் தனிச் சிறப்பு!
    பிறருக்கென வாழ்வதால், நீ இறைவனின்!
    அற்புதப் படைப்பு!
    முருகு என்றால் அழகு என்பதாம் தமிழ் மொழியில்!
    ரோஜா என்றாலும் அழகு என்பதாம் புது மொழியில்!
    அரும்பிலும் நீ அழகு!
    மொட்டிலும் நீ அழகு!
    மலரிலும் நீ அழகு!
    ஆண்டவன் படைப்பிலே நீ தான் பேரழகு!
    இப்புவியில் நீ வாழ்வது சில காலம்!
    உன்னால் விளையும் பயன்கள் பலவாகும்!
    வண்டிற்குத் தேனை நீ தருவாய்!
    மங்கையின் கூந்தலில் வீற்றிருப்பாய்!
    தெய்வத்தோடு கொலுவிருப்பாய்!
    மணமக்கள் கழுத்தை அலங்கரிப்பாய்!
    காதல் தூதாய் நீ இருப்பாய்!
    இறுதி யாத்திரையிலும் துணை வருவாய்!
    ரோஜா மலராய் நாம் இருப்போம்!
    இயன்ற வரையில் பயன் தருவோம்!

    *****

    கடையில் குவிந்திருக்கும் இவ்வண்ண மலர்கள் கோரிக்கையற்றுக் கிடப்பதுபோல், மணம்புரிந்து மணம்பரப்ப வழியின்றி வரதட்சணை எனும் தீயில் கருகும் பெண்மலர்கள், மலர்சூடி மங்கலவாழ்வு காண்பது எந்நாளோ?” எனும் ஏக்கத்தை வெளிப்படுத்துகின்றது திரு. சி. ஜெயபாரதனின் கவிதை.

    சூடா மலர்கள்!
    கொட்டிக் கிடக்குது தரையில்
    கோடிப் பூக்கள் !
    வாடிக் கிடக்கும் வாசனைப் பூக்களைச்
    சூடிக் கொள்ள
    மங்கையர் இல்லை!
    சூடிக் கொடுத்த பூமகள்
    சுடர்க் கொடியின்
    துகிலை உரித்து அவைதனில்
    மகிழ்ந்தோரை மறித்து
    புடவை அளிக்க,
    கண்ணபிரான் வந்திலன் !

    வாடாமல், வதங்காமல் இன்னும்
    வனப்பு மங்காது
    சூடாமலர்கள் வீடுகளில்
    தொடுப்பா ரற்று,
    திருப்பாவை
    பாடிக் கொண்டுள்ளன !
    வாடி உதிரும் முன் மாலையாய்ச்
    சூட வந்த ஆடவன்
    வாரான் மீண்டும்,
    காரணம்
    கறுப்பி மங்கை அப்பன்
    தர முடிய வில்லை
    வரதட்சணை !

    *****

    பூக்களையும், பூவிற்பவரையும் பின்னணியாகக் கொண்டு பொருள்செறிந்த பாக்களை அள்ளித் தந்திருக்கின்ற கவிஞர் குழாத்துக்குப் பாராட்டு!

    இவ்வாரத்தின் சிறந்த கவிதையாய்த் தேர்வு பெற்றிருப்பது அடுத்து… 

    பூ வித்த காசு பூத்துக் குலுங்கிடுமோ!

    பறித்தெடுத்த செம் பூக்க பரவிக் கிடக்கையிலே
    வெறித்தவொரு பார்வையுடன் வீற்றிருக்கும் தம்பி
    போணி நல்லா ஆகலியோ பொறுமை காத்து இருக்கீங்க
    காணி நிலமெடுக்கக் கடைய விட்டு வாரிகளா
    பொழைக்கலாமெண்ணு பூ விக்க வந்தீகளே
    உழைப்பெதுவும் சேராம உட்காந்திருக்கிகளோ!
    பொம்பளைய்ங்க எல்லோரும் போலிப் பூ சூடிக்கிட்டு
    எம்புட்டுக் காலத்துக்கும் இதழுதிர்ந்து வாடாம
    கலியாணம் கச்சேரி கடவுளுங்க கோயிலென்று
    மலிவான பூச் சூடி வருவதனைக் காணலியோ
    நாய்வித்த காசு கொலைக்காது எம்பாங்க
    பூ வித்த காசு பூத்துக் குலுங்கிடுமோ!
    காஞ்ச பூப் போக, கட்டவிழ்ந்த மொட்டுதிர
    பாஞ்சு பொறுக்கி பழையபடி கோத்தெடுத்தா
    வாறவுக எல்லாரும் வகைபிரிச்சுப் பார்ப்பாக.
    ஆஞ்செடுத்ததா மரத்(து) அடியில் பொறுக்கியதா,
    பூமியில விழுந்திருந்தா பூச்சூடக் கூடாது
    சாமி குத்தமெம்பாக தரங்குறைச்சிப் பார்ப்பாக
    என்ன விலையெம்பாக ஏற்ற விலை குடுக்காக
    சொன்ன விலைக்கு வித்துச் சொகம் பெறவே முடியாது
    ஏற்ற விலை கொடுக்க எவர் வருவார் இக்காலம்.
    காற்றுதிர்த்த பூவுக்குக் கனக்க விலை தேறாது
    கல்லா நெறையாமக் கடைய இழுத்து மூடிப்பிட்டு
    பொல்லாத யாவாரம் போதுமிண்ணு போறதிண்ணா
    நல்ல தொழிலிருக்கு நாட்டில் வளமிருக்கு
    பொல்லாத இத்தொழில பொமபளய்ங்க கைகுடுத்து
    காணி நிலமெடுங்க களனி விளைஞ்சிடட்டும்!

    போலிப் பூக்களைப் பூவையர் சுமந்துதிரிவது பரவலாகிவிட்ட இந்நாளில், உண்மைப் பூக்கள் தம் மதிப்பை இழந்துவிட்டன. அப்படியும் தப்பித்தவறிக் கடைக்குப் பூவாங்க வருவோரோ, பூக்களை வகைப்பிரிப்பது, கசக்குவது என்று ஆயிரம் விஷமத்தனங்களில் ஈடுபடுகின்றனர். எனவே பூ வித்த காசு வியாபாரியின் வாழ்வைப் பூத்துக் குலுங்க வைக்குமா? குலுங்கி அழ வைக்குமா? என்று யோசிக்கவேண்டி இருக்கின்றது.

    ”விலைபோகாப் பூக்களுடன் மலைத்துப்போய் அமர்ந்திருப்பதினும், காணிநிலம் வாங்கி விவரமாய் விவசாயம் செய்தால் இல்லாமை நில்லாது ஓடும்; வாழ்விலே இனிமை கூடும்” என்று பூ வணிகருக்கு யோசனை சொல்லும் இந்தப் பாடலின் ஆசிரியர் திரு. எஸ். கருணானந்தராஜாவை இவ்வாரத்தின் சிறந்த கவிஞராய் அறிவித்துப் பாராட்டுகின்றேன்.  

     

    Share
  • படக்கவிதைப் போட்டி 146-இன் முடிவுகள்

    -மேகலா இராமமூர்த்தி

    bulls

    கம்பீர நடைபயிலும் காளைகளைப் படமெடுத்து வந்திருக்கின்றார்  திரு. நித்தி ஆனந்த். படக்கவிதைப் போட்டிக்கு இதனைத் தேர்வு செய்து தந்திருப்பவர் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி. சாந்தி மாரியப்பன். படமெடுத்தவர், அதனைத் தேர்ந்தெடுத்தவர் இருவருக்கும் என் நன்றி உரித்தாகுக!

    மாடே செல்வமென்று மக்கள் வாழ்ந்த காலம் இன்று மலையேறிவிட்டது. அதனால் மாடுகளோடு கூடிவாழ்வோரும் குறைந்துவிட்டனர். இத்தகு சூழலில் சாலையில் மாடுகளை ஓட்டிச் செல்வோரைக் காண்கையில் இவை எங்கே செல்கின்றன…உழுதற்கா… இல்லை…அடிமாடாய் அழிதற்கா எனும் கவலையும் எழவே செய்கின்றது.

    விடைகள் (காளைகள்) நகரும் பாதைகுறித்து விடைபகரும் பொறுப்பை நம் கவிஞர்களிடம் விட்டுவிடுவோம்!

    ***** 

    சீமை மாடுகள் வந்தபிறகு நாட்டுமாடுகள் மீது நம் மக்களுக்கு நாட்டங்குறைந்துவிட்டது; அழிவைநோக்கிச் செல்லும் நாட்டு மாட்டினத்தை உடன் காப்பது நம் கடன் என்கிறார் திரு. ஏ.ஆர். முருகன். 

    மாடுகளின் மாண்பு!!

    செவலை மயிலையுன்னு
    எவ்வளவோ மாட்டினங்கள்
    அவ்வளவும் இன்னிக்கு
    அதிசயமாய் ஆயிடுச்சு
    நாட்டுப்பசும்பால் காயவச்சு
    புரை போட்ட தயிரு கடஞ்ச
    வெண்ணெயில நெய் எடுத்து
    வச்ச கையின் வாசம்
    வீதியிலும் மணமணக்கும்!!
    சீமையில இருந்து
    ஜெர்சி…சிந்துனு
    வந்ததுக்குப்பின்னால
    நாட்டுக்கன்னுக மேல
    நாட்டங்கொறஞ்சுபோச்சு!!
    இருக்கும் ஒண்ணு ரெண்டும்
    இப்பொவோ அப்பொவோனு
    அழிவ நோக்கிப்போயிட்டிருக்கு!
    கெடாரி நாலு பாதையில போறத
    பாக்கிறதில் மகிழ்ச்சி!!
    கட்டுத்தறி தவறாம
    நாட்டு மாடு வளர்க்க
    விவசாயிகள் அனைவருக்கும்
    விழிப்புணர்ச்சி வரவேணும்!!
    எருவுக்கு சாணம்
    மருந்துக்கு கோமியம்
    விருந்துக்குபால்மோர்தயிர்
    இத்தனையும் கொடுக்கிற
    உத்தமமான ஆவினத்தின்
    உருப்படிகள் பெருக வேணும்!!
    கால்நடைச் செல்வங்களை
    காப்பாற்றி வச்சாத்தான்
    அடுத்த தலைமுறைக்கும்
    அவைகளால் பயன்கிடைக்கும்!!
    மாடுகள் தானேனு
    மட்டமா நினைக்காம
    சாமியோட ரூபமுன்னு
    காமிப்போம் அகிலத்திற்கு!!

    *****

    ”எது இனிய வாழ்க்கை? தொலைந்துபோன கிராமம், அழகிய கிராமம்” எனும்  மூன்று முத்தான தலைப்புக்களில் மண்ணின் மணங்கமழும் கிராமத்து எழில் வாழ்க்கையையும், கிராம மக்களின் வெள்ளந்தி உள்ளத்தின் மகிமையையும், கிராமங்களை விட்டகன்றதால் நம் இன்பமும் நமைவிட்டு அகன்றுவிட்டதையும் நெஞ்சைத் தொடும் கொஞ்சுதமிழ் வரிகளில் கவிதைகளாய் வடித்துள்ளார் திரு. ஆ.செந்தில் குமார். 

    எது இனிய வாழ்க்கை?

    தென்னங்கீற்றில் கூரை வேய்த
    சின்னதாய் ஒரு ஓலைக் குடிசை!
    குடும்பத்தின் பசி போக்க
    குறைவிலா பயிர் வளர்நிலம்!

    நீருடைய என்றும் வற்றாத 
    நிலத்திடையே ஒரு கிணறு!
    அதைச் சுற்றி வளர்ந்த
    அழகான பத்து தென்னைமரங்கள்!

    பால்தரும் பசுமாடு இரண்டு – நிலத்தைப்
    பண்படுத்த எருதுகள் இரண்டு!
    பட்டியில் சில ஆடுகள்!
    பண்ணையில் சில கோழிகள்!

    […]

    நிழலுக்கு ஒரு வேப்பமரம் – அதனடியில்
    அழகாய் ஒரு கயிற்றுக்கட்டில்!
    உழைத்த களைப்புக்கு பழங்கஞ்சி!
    பிழைப்புக்கு சிறிது பணம்!

    கையால் குத்திய அரிசி – சமைக்க
    களிமண்ணால் செய்த பாண்டங்கள்!
    அன்பைப் பரிமாறும் மனைவி!
    பண்பில் சிறந்த குழந்தைகள்!

    பக்கத் துணையாய் உறவுகள்!
    படுத்த உடனே உறக்கம்!
    இதைவிட இனிமை இனியுண்டோ?
    இப்பிறவியில் கிடைக்க வாய்ப்புண்டோ?

    *****

    தொலைந்துப் போன கிராமம்

    […]
    நெல்விளைந்த பூமியெல்லாம் கல்முளைத்த மனையாச்சு!
    கல்நட்ட கழனியெல்லாம் கண்கவரும் வீடாச்சு!

    வழிப்போக்கர் ஓய்வெடுக்கத் திண்ணைவைத்த வீடில்லை!
    எழிற்தோற்றம் கொண்டிருந்த ஏரியிலும் நீரில்லை!
    ஆட்டுக்கல்லும் அம்மியும் காண்பதெல்லாம் அரிதாச்சு!
    வீடுகளில் திருக்கை உரலுலக்கையனைத்தும் போயாச்சு!

    பனைமரங்களெல்லாமே அழிவின் விளிம்புக்கு வந்தாச்சு!
    சினையாக மாட்டுக்கு ஊசியே என்றாச்சு!
    நாதியற்றுப் போய்விட்ட நாட்டு மாட்டினங்கள்!
    சேதிசொல்லும் குட்டிச்சுவர் பழங்கால சரித்திரங்கள்!

    […]

    *****

    அழகிய கிராமம்

    கருக்கல்லில் கண்விழிப்பர்! கழனிக்குச் சென்றுழைப்பர்!
    மாடுகன்று ஓட்டிக்கொண்டு மேய்ச்சலுக்குச் சென்றிடுவர்!
    தொழுவத்தைத் தூய்மைசெய்து வாயிலில் சாணந்தெளிப்பர்!
    அழகான மாக்கோலம் வீட்டிற்கழகுசேர்க்க இட்டிடுவர்!
    எருக்குழியை ஏற்படுத்தி தொழுவுரத்தைச் சேகரிப்பர்!

    […]

    பச்சைப் பட்டாடை போன்றிருக்கும் வயல்வெளி!
    வயல்களைப் பிரித்திருக்கும் வரப்பென்ற இடைவெளி!
    அதிகாலைப் பொழுதினிலே நனைத்திருக்கும் பனித்துளி!
    செங்கதிரோன் உதயத்திலே சிவந்திருக்கும் வான்வெளி!
    இத்தகு கிராமமே சிங்காரச் சமவெளி!

    பனையோலைக் குடிசையெல்லாம் எளிமையினைப் பறைசாற்றும்!
    ஐய்யனார் கோயிலெல்லாம் பக்தியின் திடங்காட்டும்!
    முதியோரின் பேச்செல்லாம் வெள்ளந்தி மனங்காட்டும்!
    மக்களின் மனதெல்லாம் மாட்டிடமும் பாசங்காட்டும்!
    இத்தகு கிராமத்திலே இருப்பதுவேநம் மனதின்நாட்டம்!

    *****

    ”ஆடு மாடுகளைச் சொந்தப் பிள்ளைகள்போல் பாடுபட்டு வளர்ப்பவன் உழவன். அவன் சேற்றில் கால்வைத்தால்தான் நம் மக்கள் சோற்றில் கைவைக்க முடியும். ஆனால் இன்றோ… வான்பொய்த்து வளங்குன்றிப் போனதனால் கழனிகளெல்லாம் கட்டுமனைகள் ஆனதே” என்று வெதும்புகின்றார் பெருவை திரு. பார்த்தசாரதி.

    அனைத்துயிர்க்கும் அவனே நண்பன்..!

    அதிகாலையில் ஆதவன் தோன்றுமுன் அவனெழுவான்..
    ……….ஆடுமாட்டைத் தன்பிள்ளையெனப் பேணிக் காப்பான்.!
    கதிரவனைத் தொழுதபடி ஏருழுவான் ஏற்றமிறைப்பான்..
    ……….கதிர்நெல்லைக் காணவயல் களத்திலே கடுமுழைப்பான்.!
    நதிதீரம் நாடியேயிவர்கள் வாழ்க்கையாம் தன்னலமின்றி..
    ……….நானிலத்துக்காக உழைத்து உலகுக்கே நண்பனாவான்.!
    விதியேயெனக் காலமுழுதும் கடமையாற்றும் நற்பண்பு..
    ……….விதிமாற்றத்தால் கண்ணீர் விட்டுக் கலங்குகிறானின்று.!

    உதிரத்தை வியர்வையாக்கி உழைக்கின்ற வர்க்கம்தான்..
    ……….ஊராரும் உணவுக்காக நம்பிவாழும் உயருழவன்தான்.!
    எதிரிகளென்றால் இயற்கையின் சீற்றம்தான் அதிகம்..
    ……….என்றைக்கு மோருயர் நிலையில்லாத வாழ்க்கைதான்.!
    நிதிப்பற்றாக்குறை என்பதெப்போது மிருக்கும்! அவன்..
    ……….நிலத்தைச் சீர்படுத்தி விளைபயிர் செழிக்கவே!..இவன்..
    குதிகால் குவலயத்தில் பதியாவிட்டால்?..ஒருவேளைக்..
    ……….கூழுக்கும் கஞ்சிக்கும் சோற்றுக்கும் கடும்பஞ்சம்தான்.!

    அனைத்துத் தொழிலுக்கும் முதலானது உழுதொழில்..
    ……….அனைத்துலக ஜீவிகளுக்கும் உழவனே நல்நண்பன்.!
    நினைவில் கொள்ளுவீர் நீர்! அறிவியல் வளர்ந்தாலும்..
    ……….ஆருமுணவின்றி வாழ்தலியலா தென்பது இயற்கை.!
    பனைமரத்தை வளர்க்காமலே பலருக்கும் பயன்தரும்..
    ……….பாருலகுக்கு அதுபோல நீரும்நிலவளமும் பலன்தரும்.!
    வினைசெய்யும் வஞ்சகத்தார் இன்று விளைபயிரழித்து..
    ……….விளை நிலைத்தையும் வீட்டுமனையாக்கி விட்டனரே.!

    *****

    ”எம்மை எங்குக் கொண்டு போறீக எஜமான் மாருகளே! எடைபோட்டு விற்பதற்கா!? பால்கொடுத்துக் காத்த எமக்கு நீர்காட்டும் பரிவிதுவோ?” என்று காளைகள் கண்ணீரோடு கேள்வி எழுப்பக் காண்கிறோம் திரு. எஸ். கருணானந்தராஜாவின் கவிதையில்!

    பொட்டு வச்ச நெத்தியில பூமாலை ஒண்ணு சுத்தி
    தொட்டுக்கிட்டுப் போறதுக்கும், தோழியரைச் சேத்து வச்சி
    எங்க கொண்டு போறீங்க எஜமான் மாருகளே – எங்கள
    எடை போட்டு விற்பதற்கா எஜமான் மாருகளே!

    கொம்புக்கு எடை கழிச்சி குழம்புக்கும் எடை கழிச்சி
    இம்புட்டுத்தான் மிச்சமென்பார் யாவாரி மாரே –அத
    ஏத்துக்கிட்டுப் போவிகளோ எஜமான் மாருகளே

    தோலைக் கழிச்சிப்பிட்டுத் தோராய நிறைபோட்டு
    மேலே ஒண்ணும் தேறாதெம்பார் யாவாரி மாரே –காச
    வேண்டிக்கிட்டுப் போவிகளோ எஜமான் மாருகளே

    காலம் முழுதுமுங்க காலடியிலே கிடந்து
    பாலூத்திக் கொடுத்ததுக்கு எஜமான் மாருகளே–உங்க
    பரிசு இதுதானோ எஜமான் மாருகளே

    ஓரத்திலே எங்காச்சும் உயிர் பிரிஞ்சு போம் வரைக்கும்
    பாரங் கொடுக்காம எஜமான் மாருகளே – நாங்க
    படுத்தாலும் பயன் தருவோம் எஜமான் மாருகளே.

    கொல்லக் கழுத்தறுத்து குருதி கொட்டி நாங்க விழ
    அல்லாஹு அக்பரென்று தக்பீர் செய்கையிலே –அத
    அருகிருந்து பார்ப்பீகளோ எஜமான் மாருகளே!

    நாங்க தந்த பால் குடிச்ச நம்மூட்டுப் புள்ளைங்கள
    ஓங்க வச்சு உயர்த்திடுங்கோ எஜமான் மாருகளே –எங்க
    உயிரதுக்குப் பயன்படட்டும் எஜமான் மாருகளே.

    *****

    மடுத்த வாயெல்லாம் மெய்வருத்தம் பாராது பாரமிழுக்கும் பகடுகளின் அவல நிலையைத் துல்லியமாய்க் காட்சிப்படுத்தியிருக்கும் கவிஞர்களுக்கு என் பாராட்டும் நன்றியும்!

    இனி வருவது இவ்வாரத்தின் சிறந்த கவிதை…

    தேடியே…

    செல்வ மென்றே மாடதையும்
    சேர்த்துக் கொண்ட நம்முன்னோர்,
    இல்ல மதிலே ஓருறுப்பாய்
    இணைத்தார் நமது வாழ்வினிலே,
    புல்லும் மேய இடமின்றிப்
    போனதா லின்று கிராமத்தில்,
    செல்கிறார் மாந்தர் மாட்டுடனே
    சேர்ந்தே தேடிட பிழைப்பினையே…!

    செல்வமென்று மாட்டைக் கருதிய திருநாட்டில் இன்று அவை பசித்தால் புசிக்கக்கூடப் புல்லில்லை; இந்த அவலத்தை எடுத்தியம்பச் சொல்லில்லை!

    கழனிகள் காய்ந்துவிட்டதால் காளைகளும் உழவின்றி ஓய்ந்துவிட்டன. எனவே உழைக்கும் வர்க்கத்தவரான உழவரும் அவரின் உறுதுணையான மாடுகளும் பிழைப்புத்தேடி ஊரைவிட்டுச் செல்வதை எளிமையாய்ச் சொல்லியிருக்கும் இக்கவிதையின் ஆசிரியர் திரு. செண்பக ஜெகதீசனை இவ்வாரத்தின் சிறந்த கவிஞர் என அறிவித்துப் பாராட்டுகின்றேன்.

    Share
  • படக்கவிதைப் போட்டி 145-இன் முடிவுகள்

    -மேகலா இராமமூர்த்தி

    sea and clock

    ஓலமிடும் கடலலை யோரமாய்க் குடிகொண்டிருக்கும் காலங்காட்டும் கடிகாரத்தைக் கலைநயத்தோடு படம்பிடித்து வந்திருக்கின்றார் திரு. பிரேம்நாத் திருமலைசாமி. வித்தியாசமான இந்தப் படத்தைப் படக்கவிதைப் போட்டிக்குத் தகுந்தது என்று தேர்ந்தெடுத்துத் தந்திருக்கின்றார் திருமதி. சாந்தி மாரியப்பன். இவர்கள் இருவருக்கும் என் நன்றி!

    காலமறிந்து செயற்படு என்பதைக் காட்டும் கடிகாரமும், ஓய்தல் இன்றி உழைத்திடு என்பதை உரக்கச் சொல்லும் கடலலையும் மானுடர்க்குத் தருவது பயன்மிகு படிப்பினை.

    இனி, கடற்கரையோரம் நின்று கவிமழை சிந்தக் காத்திருக்கும் கவிஞர்களைக் கனிவோடு வரவேற்கின்றேன்.

    *****

    ”வாழ்வில் எல்லாம் செயற்கைமயமாய்ப் போனதால் செம்மை வாழ்வு மாயமாய் ஆனதே” என்று கவலும் கவிஞர் ஆ. செந்தில்குமார், மரபுசாரா எரிபொருள்களைப் பயன்படுத்திப் புவிவெப்பம் குறைப்போம் என்கிறார் தன் கவியில்.

    காலம் கொடுக்கவிருக்கும் தண்டனை
    நுகர்வுக் கலாசாரம் மிகுந்தது!
    நாடெங்கும் குப்பைக்கூளம் குவிந்தது!
    நச்சுக்கழிவுகள் கலக்கும் நதிகள்!
    நகரமயத்தால் அழியும் காடுகள்!

    ஆலைகள் வெளியேற்றும் நச்சுவாயுக்கள்!
    பாலைகளாகும் வளமிகு நிலங்கள்!
    நெகிழிப் பொருட்களின் பயன்பாடு!
    நிலத்தடி நீரின் குறைபாடு!

    பெட்ரோல் டீசல் நிலக்கரியென்ற
    புதைப் படிமங்களின் வெளிப்பாடு!
    பசுமையில்லா வாயுக்க ளெங்கும்
    பரவிச் செறிந்த நிலைப்பாடு!

    புவியின் வெப்பம் உயர்ந்துயர்ந்து
    பனிப்பாறைக ளெல்லாம் உருகியுருகி
    பரந்த கடலின்மட்டம் உயர்வதனால்
    புல்லும்கூட முளைக்கவுதவா பூமியென்றாகிடுமே!

    புவியின் இயற்கையைச் சிதைக்கின்றோம்!
    பருவநிலையின் மாற்றத்தை உணர்கின்றோம்!
    செயற்கை மயத்தை நிறைக்கின்றோம்!
    செம்மை வாழ்வைத் தொலைக்கின்றோம்!

    தவறுகள் செய்யும் நம்மனைவருக்கும்
    தக்கதண்டனை கிடைக்கும் காலம்
    தூரத்திலில்லை என்பதை உணர்ந்து
    தூக்கத்தில் இருந்து விழித்தெழுவோம்!

    மரபுசாரா எரி பொருட்கள்
    மண்ணின் வெப்பத்தைக் குறைத்திடுமே!
    புவியின் வெப்பத்தைக் குறைத்திடுவோம்!
    பூமிப் பந்தைக் காத்திடுவோம்!

    *****

    ”கடமையைச் செய்வதில் கடலலையாய் இருப்போம்; ஓயாது உழைப்பதில் கடிகாரமாய் இருப்போம்” எனும் நன்மொழியைத் தன் பாவில் பொன்போல் பொதிந்து தந்திருக்கின்றார் திரு. பழ. செல்வமாணிக்கம்.

    கடலலை சொன்ன கீதை:
    அலையில்லாக் கடலுக்கு அழகில்லை !

    ஓடாத கடிகாரத்தால் ஒரு பயனுமில்லை!
    வீசாத தென்றலுக்கு பெருமையில்லை!
    துடிக்காத இதயத்திற்கு உயிருமில்லை!
    பாசமில்லாப் பிள்ளைகளால் பயனுமில்லை!
    உழைப்பில்லா மனிதருக்கு உயர்வில்லை!
    தமிழில் பேசாத தமிழருக்கு வாக்கில் இனிமையில்லை!
    ஈயாத செல்வத்திற்கு மதிப்பில்லை!
    உதவி செய்யா வாழ்க்கைக்கு அர்த்தமில்லை!
    இயற்கை என்றும் தன் பணி செய்ய மறப்பதில்லை!
    சுயநலமாய் என்றுமே இருந்ததில்லை!
    மனிதன் தன் கடமை செய்ய விரும்பவில்லை!
    பொது நலத்தை என்றுமே நினைக்கவில்லை!
    கீதை சொன்ன பாதையில் நாம் நடப்போம்!
    கடமை செய்வதிலே கடலலையாய் நாம் இருப்போம்!
    ஓடுகின்ற கடிகாரமாய் ஓயாமல் நாம் உழைப்போம்!

    *****

    கடமைசெய்யக் காலம் பாராக் கடலலைகள், உறங்கியே பொழுதைக் கழிக்கும் மானிடனின் மடமையைக் கேலிசெய்வதைச் சுவைபடப் பதிவுசெய்திருக்கின்றார் திரு. செண்பக ஜெகதீசன்.

    உறங்கா அலைகள்…
    கடலில் அலைகள் அடிப்பதற்கே
    காலம் எதுவும் பார்ப்பதில்லை,
    உடலில் நல்ல தெம்பிருந்தும்
    உறங்கிக் கிடக்கும் மானிடனே,
    அடிக்கும் ஓசைக் கடிகாரமும்
    ஆளை வைத்தே எழுப்பிடினும்,
    உடையா துந்தன் சோம்பலென
    உரைத்துச் செல்லும் அலைகடலே…!

    *****

    ”வையகத்தை வாழ்விக்கும் இயற்கையைத் தன் கையகப்படுத்தி அழித்தொழிக்கும் மனிதனுக்கு இயற்கை இரங்கற்பா வாசிக்கும் நாள் வெகுதொலைவில் இல்லை என்று எச்சரிக்கவந்த கடிகாரமிது” என்கிறார் திருமிகு. சத்தியப்ரியா சூரியநாராயணன்.

    எச்சரிக்கை ஒலி
    கடிகார முள் பார்த்து
    காலையில் உதிப்பதில்லை கதிரவன்

    அலாரம் அடிக்கும் சத்தம் கேட்டு
    அலறி எழுவதில்லை அலைகள்

    நேரகாலம் பார்க்காமல் இந்த இயற்கை
    நேர்த்தியாய் தன் பணி செய்கிறது

    வாரிசுகளுக்கு வாரிக் குவிக்கத்தான் உழைப்பென்றெண்ணினேன்
    வையகத்தை வாழ்விக்கவே ஓடாய் தேய்கிறேனென்று காதில் உரைத்துச் சென்றன அலைகள்

    உழைத்து உழைத்து ஓடாய்த் தேய்கிறது இயற்கை – உனக்காக
    உணராமல் நாளும் அதை அழித்துக் கொண்டிருக்கிறாய் நீ

    இந்நிலை நீடித்தால் இப்பூவுலகில் – மனிதா
    இரங்கற்பா பாடக் காலம் கூடும் வெகு விரைவில்
    இயற்கைக்கு அல்ல.. அதை அழிக்கும் உனக்கு.. எனவே
    இனியும் தாமதிக்காமல் இயற்கை அன்னையை காப்பாற்றி உனைக் காத்துக்கொள் – எனும்
    எச்சரிக்கை ஒலி எழுப்பவே நான் வந்தேன்.

    *****

    ”கடற்கரையில் தனித்துக் கிடக்கும் காலங்காட்டும் கருவி கண்டு, அண்டப் பெருவெளியோ அகன்று விரிகின்றது; அப்பேரண்டத்துள்ளே நேரமும் தன்னை நீட்டிச் செல்கின்றது; கடிகாரம் வழியொரு மாயலோகம் மண்ணில் தெரின்றது” என்று கவியருவி பொழிந்திருக்கின்றார் திரு. எஸ். கருணானந்தராஜா. 

    கார்கால மேகக் கருக்கூட்டும் வானத்தில்
    கதிரோன் ஒளிதெரியா கடல் விளிம்பில் தூரத்தில்
    கால நிலை மாற்றம் கடிதாய் நிகழ்கிறது.
    நிலை மாறும் காலத்தில் நேரந்தனைக் காட்ட
    அலை மோதும் கரை தன்னில் அழகாயோர் கடிகாரம்.

    அதையங்கே வைத்தது யார் அதற் கென்ன வேலையங்கு?
    கடலோரக் கடிகாரம் காட்டுவதோ ஆறுமணி
    கயிறொன்றை அதனோடு கட்டி வைத்து முள்ளார்கள்
    இடமின்றிக் கடிகாரம் இக்கரையில் கிடக்கிறது
    எதற்காக எதற்காக ஏன் இங்கே இருக்கிறது?

    அலையோடு அலையாக அடிபட்டு வந்ததுவா?
    அல்லாது வேண்டுமென்றே அதையங்கு வைத்தாரா?
    சரியாக ஆறுமணி காலையிலா மாலையிலா
    தெரியாது, கடல் விளிம்பில் செங்கதிரோன் எங்குற்றான்?
    ஒன்றன் பின் ஒன்றாக ஓராயிரம் கேள்வி
    பின்வந்து நிற்கிறது பிறிதொன்றும் தோன்றாது
    காலமளந்திடுமக் கருவிதனைப் பார்க்கின்றேன்.

    அண்டப் பெருவெளியோ அகன்று விரிகிறது
    அதனுள்ளே காலமும் சேர்ந்தே விரிகிறது
    அண்ட விரிவு நின்றிடும் போதில்
    அகன்றிடும் காலமும் விரிவை நிறுத்தும்
    நில்லாது விரியும் பேரண்டத்துள்ளே
    நேரமும் தன்னை நீட்டிச் செல்லும்
    எல்லா இடத்திலும் காலம் விரிவதால்
    இடமும் காலமும் ஒன்றுடன் ஒன்றாய்
    பின்னிப் பிணைந்து பேரண்டமாகிப்
    பிரிக்க முடியா இருபெரும் கூறாய்
    பிரபஞ்சமென்னும் மாயையுள் புதைந்தன.

    காலமும் இடமும் கற்பனைக் கெட்டா
    மூலப்பிர கிருதி யென்பார்கள்.

    சிவமெனும் சிங்கியூலாறிற்றியென்ற
    சிறியதோர் ஒருமைப் புள்ளியிலிருந்து
    தோன்றி விரிந்து தொடர்ந்து பரந்து
    தொடக்கம் நோக்கி மீண்டுமொடுங்கும்
    மாயைக்குள்ளே மனம், உடல் கொண்டு
    வாழும் மனிதர் சிந்தனைக் கெட்டாக்
    காலந்தன்னை அளந்திடும் கருவி
    கடற்கரை தனிலே தனித்துக் கிடக்கும்
    காட்சியினாலிக் கவிதை மலர்ந்தது
    கனவாம் மாயா லோகம் தெரிந்தது.

    *****

    காலங்காட்டும் கடிகாரமும் அழகுக் கோலங்காட்டும் கடலலைகளும் கவிஞர்களின் நெஞ்சில் கற்பனை அலைகளைத் தட்டியெழுப்பிக் கவிதை முத்துக்களைக் கொட்டச் செய்திருக்கின்றன. பாராட்டுக்கள் கவிஞர்களே!

    இவ்வாரத்தின் சிறந்த கவிதை இனி…  

    கடலுக்குள் போன மச்சான்
    காணாம போயிமாசம் ஒண்ணாச்சு!
    கடிகார முள்ளாட்ட உழச்சுக்
    களச்சுப்போயி…எக்கச்சக்க மீனோடு
    கரை திரும்பி வருவார்னு
    காத்திருந்து காத்திருந்து
    காலந்தான் கரைகிறது…
    எங்க மச்சான் இருக்கீங்க?
    எப்படி இருக்கீங்க??
    பொண்டு புள்ள இங்கிருக்க
    போன இடம் எங்கே மச்சான்..?
    மனையாளெனைப்பாக்காம
    மனுசனால இருக்க முடியாதே!!
    புயல் போயி நாளாச்சு _
    அயல் தேசமும் தேடியாச்சு _
    ஆனாலும் உங்களக்
    காணாமல் அழுவறமே!!
    வருவீங்க வருவீங்கனு
    வழி மேல விளிவச்சு
    வெகுநாளாக் கிடக்கிறமே..!!..
    நீங்க வரும் வரைக்கும்
    நாங்க போகமாட்டோம்!!
    மணல் பரப்ப விட்டுப்புட்டு
    மனை போக மனசில்லே _
    மணிக்கணக்கப் பாத்துகிட்டே
    மதி மயங்கிக்காத்திருக்கோம்..
    எதிர்பார்க்கும் எங்கள
    ஏமாத்திப் போடாம
    எங்கே இருந்தாலும்
    இங்க வந்து சேரு மச்சான்!!
    அரசாங்க சேனைகளும்
    ஆளம்புச் சொந்தங்களும்
    ஆம்படயானுன்ன சல்லட போட்டு
    ஆழ்கடலில்..அதன் ஓரங்களில்
    அணுவணுவாத் தேடுறாங்க!!
    அதோ..இதோ..வரும்நல்ல செய்தியினு
    ஆண்டவனக் கும்புட்டுட்டு
    அப்பிடியே உக்காந்திருக்கோம்…
    நம்மபொழப்பு நாறப்பொழப்புத்தான்!!
    நல்லமீனெடுக்க படும்பாடு நரகந்தான்!!
    நடுக்கடலுக்குள்ளே
    நாராயணன் இருக்காராம்..
    நான் அவரையுந்தான் கும்புடுறேன்.
    ஏதாச்சும் ஒரு சாமி
    எம்புருசனக் கொண்டுவந்துசேக்காதா?
    இருக்காரா? இல்லையானே
    இதுவரைக்கும் தெரியாம
    இடியா நெஞ்சொடஞ்சு
    இருப்பத விட வேறு என்ன
    இன்னலுண்டு உலகத்தில்!!
    அனுபவிச்சுப் பாத்தாத்தான்
    அதன் வழி தெரியும் அடுத்தவர்க்கு!!
    இனி மேலேனும் இதுபோல ஆகாம
    இயன்றவரை எச்சரிக்கை
    இயற்கை இடர்க் காலங்களில்
    இருப்போமே எல்லோரும்!!
    இனிமேலேனும் எங்களைப்போல்
    இன்னல் எவருக்கும் வேண்டாமே???

    தரைமேல் பிறந்து தண்ணீரில் பிழைக்கச் சென்ற கணவன், புயலில் சிக்கிக் காணாமற்போனதால் கண்ணீர்விட்டுக் கதறும் அபலைப் பெண்ணொருத்தியின் மனக் குமுறலை,

    ”புயல் போயி நாளாச்சு _
    அயல் தேசமும் தேடியாச்சு _
    ஆனாலும் உங்களக்
    காணாமல் அழுவறமே!!

    ஏதாச்சும் ஒரு சாமி
    எம்புருசனக் கொண்டுவந்து சேக்காதா?
    இருக்காரா? இல்லையானே
    இதுவரைக்கும் தெரியாம
    இடியா நெஞ்சொடஞ்சு
    இருப்பதவிட வேறு என்ன
    இன்னலுண்டு உலகத்தில்!!”  
    என்று கல்நெஞ்சும் கசிந்துருகும் வகையில் தன் கவிதையில் பதிவுசெய்திருக்கும் திரு. ஏ.ஆர்.முருகனை இவ்வாரத்தின் சிறந்த கவிஞரென அறிவித்துப் பாராட்டுகின்றேன்.  

    Share
  • படக்கவிதைப் போட்டி (146)

    பவள சங்கரி

    அன்பிற்கினிய நண்பர்களே!

    வணக்கம். கண்ணையும் கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்?

    27498021_1549685795085614_956605116_n

    நித்தி ஆனந்த் எடுத்த இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள். இதனை நம் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி சாந்தி மாரியப்பன் தேர்ந்தெடுத்து அளித்துள்ளார்.

    இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை நல்ல தலைப்புடன் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் சனிக்கிழமை (03.02.2018) வரை உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர்குழு உறுப்பினரும் தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான திருமதி மேகலா இராமமூர்த்தி தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பலமுறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு, ஏற்கனவே சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப் பெற்றவர்களுக்கும் உண்டு.

    ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி இது; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்குபெற அழைக்கிறோம்.

    போட்டியின் நடுவரான திருமதி மேகலா இராமமூர்த்தி புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்தவர். கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்ற இவர், அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009, 2014, 2016ஆம் ஆண்டுகளின் (ஆர்லாண்டோ, அட்லாண்டா & மிசௌரி) கவியரங்கம், இலக்கிய வினாடிவினா நிகழ்ச்சிகளில் பங்கேற்றுப் பாராட்டுகளும் பரிசுகளும் பெற்றுள்ளவர். சங்கப் பாடல்களில் அதிக ஆர்வமும், இலக்கியக் கூட்டங்களிலும், பட்டிமன்றங்களிலும் சுவைபடப் பேசுவதில் வல்லமையும் பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடைபவளம்

    Share
  • படக்கவிதைப் போட்டி 144-இன் முடிவுகள்

    -மேகலா இராமமூர்த்தி

    garland

    இதழ்களில் குமிண் சிரிப்போடு மாலையை உயர்த்திப் பிடித்திருக்கும் இந்தக் காளை அதனைச் சூட்டப்போவது யாருக்கு? ஆண்டாளைப் போல் ஆண்டவனுக்கா? இல்லை தன் மனம் ஆண்டவளுக்கா?

    இந்தப் புகைப்படத்தை எடுத்த திரு. லோகேஷ்வரன் ராஜேந்திரன், இதனைப் படக்கவிதைப் போட்டிக்குத் தெரிவுசெய்து தந்த திருமதி. சாந்தி மாரியப்பன் இருவருக்கும் என் நன்றிகள் உரித்தாகின்றது!

    இனி, காளையின் கையிலிருக்கும் மாலை யாருக்கு? என்பது குறித்த தம் சிந்தனையின் விளைச்சலைச் சமர்ப்பிக்க வருகின்றார்கள் கவிஞர்கள்; அவர்களை வரவேற்போம்!

    *****

    பட்டணத்து மாப்பிள்ளைக்கு மாலையிட வரிசைகட்டும் மக்கள், பட்டிக்காட்டு மாப்பிள்ளை என்றால் எட்டிப்போகும் வேதனையைச் சுட்டிக்காட்டுகின்றார் திரு. ஏ.ஆர். முருகன்.

    மாலை சூட நான் ரெடி!
    மணமகளே நீ எங்கடி??
    சலிச்சுப்போனேன் தேடி
    களச்சுப் போனேன் போடி!!
    கேக்குறாங்க வேல வெட்டி
    விரட்டுறாங்க விவசாயிங்காட்டி!!
    பட்டம் படிச்சுப்புட்டு
    பட்டணத்திலுக்காந்துட்டு
    பத்தாத சம்பளம்னாலும்
    பரிசம் போடுறாங்க!!
    பட்டிக்காட்டுப் பூமியில
    பக்குவமா உழுது
    பணம்நிறையச் சம்பாதிச்சாலும்
    மணம் முடிக்க மார்க்கமில்லே!!!
    பொண்ணு ஒண்ணு கொடுத்தா
    பூமாதிரிப் பாத்துக்குவேன்!!
    பொறுப்பான பையனுக்குப்
    பொண்ணுக்கொடுக்க யாரிருக்கா???

    *****

    வேலை தேடும் வயதினில் மணமாலை சூட எண்ணினால் இன்பச் சோலையன்று வாழ்க்கை; வறண்ட பாலையே! என எச்சரிக்கிறார் திரு. செண்பக ஜெகதீசன்.

    முதலில் வேலை…

    வேலை தேடிடும் வயதினிலே
    வெற்றி காண எண்ணாமல்,
    மாலை தன்னைக் கையிலேந்தி
    மணமகள் தேடி யலைந்தாலே,
    சோலை யாகும் வாழ்வதுவும்
    சொல்ல வியலா வகையினிலே
    பாலை யாகிப் பயன்தராதே
    போயிடும் படித்த வாலிபனே…!

     *****

    ”ஆசிரியர்க்கோ, தலைவர்க்கோ, அன்னைக்கோ, தந்தைக்கு தேவையில்லை இந்தப் பூமாலை! உன் மனங்கவர்ந்த பாவைக்கே இது தேவை! ஆதலால் அன்பும் காதலும் பரிவு புரிதலும் கலந்து சூட்டிடு பூமாலையை மகிழ்ந்து!” என்று வாழ்த்துகின்றார் திரு.  பழ. செல்வமாணிக்கம்.

    யாருக்கு இந்த மாலை!

    புன்னகையுடன் ஓர் இளங் காளை!
    கையில் கட்டி வைத்த மலர் மாலை!
    யாருக்குச் சூட்டப் போகிறாய் இந்த மாலை!
    உனக்குப் படிப்பு சொல்லிக் கொடுத்த
    ஆசிரியருக்கா இந்த மாலை!
    அவர் சொல்லித் தந்தபடி வாழுகின்ற வேளை
    தேவையில்லைஅவருக்கு இந்த மலர்மாலை!
    நாம் வாழ, தன் வாழ்வை தியாகம் செய்த
    தலைவருக்கா இம் மாலை!
    அவரைப் போல பிறருக்கு நன்மை செய்யும் வேளை
    தேவையில்லை அவருக்கு இந்த மலர் மாலை!
    நமக்கெல்லாம் உணவு தரும்
    உழவருக்கா இம் மாலை!
    விளை நிலத்தை,மனை நிலமாய் மாற்றாத வேளை
    தேவையில்லை அவருக்கு இந்த மலர் மாலை!
    உனை கருவில் சுமந்து உடலும்,உயிரும் தந்த
    உன் அன்னைக்கா இம் மாலை!
    உன்னோடு அம்மாவை வைத்திருந்து சீராட்டும் வேளை
    தேவையில்லை அவருக்கு இந்த மலர் மாலை!
    உடலாலும், மனதாலும் உனைச் சுமந்த
    உன் தந்தைக்கா இம் மாலை!
    அவர் சுமையை நீ சுமக்கும் வேளை
    தேவையில்லை அவருக்கு இந்த மலர் மாலை!
    அன்னை, தந்தை, தன் சுற்றம், தன் வீடு
    அத்தனையும் உனக்காக விட்டு வரும்
    மணப் பெண்ணுக்கா இம் மாலை!
    மலர்களால் சரம் தொடுத்த இந்த மாலை!
    நீ தரப் போகும் அன்பு, பரிவு, காதல், புரிதல்,
    நட்பு என்ற மலர்களை சுட்டிக் காட்டும் அழகு மாலை!

    *****

    ”சோலையில் பலவண்ணத்தில் பூக்கின்ற நாங்கள் யாவரும் மாலையில் சேர்ந்தாலே மதிப்பு! நிலவுலகில் நிகழ்கின்ற விழாக்கள் அனைத்திலும் எமக்கே தலைமை என்பதே எம் சிறப்பு!” என்று பூமாலையைப் பாமாலை பாடவைத்திருக்கின்றார்  பெருவை திரு. பார்த்தசாரதி.

    மலர்மாலையின் பாமாலை..!

    மாலையிலே வானில்மறையும் கதிரவனின் மதிமயக்கும்…
    ……….மனதைக்கவரும் சிவப்பழகைக் கண்குளிரக் காண்பீர்.!.
    காலையிலே மறைகின்ற வெண்ணிலவின் வெளிச்சமும்…
    ……….கருநீலத்தில் விடை பெறுமழகையும் கண்டுகளிப்பீர்.!.
    ஓலைக்கீற்றுகள் ஒன்றோடொன்று உரசியெழுப்பும் கீத…
    ……….ஒலியில் புள்ளினங்கள் சேர்ந்து பாடுவதை ரசிப்பீர்.!.
    மாலையிலே சேர்கின்றபல வண்ணமிகும் மலர்களின்…
    ……….மனமீர்க்கும் வாசனையைக் கண்டுணர்ந்து நுகர்வீர்.!.
    .
    ஒருசோலையிலே பலவண்ண நிறத்தில் மலர்ந்தாலும்…
    ……….ஒன்றான மாலையாகச் சேர்ந்தால்தான் மதிப்பாகும்.!.
    பெருமானின் தலையிலோ காலடியிலோ கிடந்தாலும்…
    ……….பெருமை தானெங்களுக்கு சிறுமையில்லை அவனின்…
    கிருபையால் எமக்கெங்கு சென்றாலும் பெருமைதான்…
    ……….கருணைக்கும் அன்புக்கும் அடையாளச் சின்னம்!யாம்.
    தரும் சுகத்திற்கோர் எல்லையுமுண்டோ இவ்வுலகில்…
    ……….தாரணியில் நிகழும் எவ்விழாவிற்கும் யாம்தலைமை.!

    *****

    ”தம்பி! அன்பில் வசப்படும் மங்கைக்கு மாலையிடு; அந்த ஆண்டவனுக்கு மாலையிடு; விளையாடிப் பெருமை சேர்க்கும் வீரருக்கு மாலையிடு! அது பொருத்தம்! அதைவிடுத்துக் கூத்தாடிகளின் கட்டவுட்டுக்கெல்லாம் மாலையிட்டுக் கோமாளியாகாதே! அது தந்திடும் வருத்தம்!” என்கிறார் திரு. எஸ். கருணானந்தராஜா.

    யாருக்கு மாலை?

    மாலையிடு தம்பி மாலையிடு
    மணவாட்டி கழுத்தினிலே மகிழ்வோடு மாலையிடு
    ஆலயத்தில் இறைவனை நீ அர்ச்சித்து மாலையிடு
    கோலமிடு விளக்கேற்று குப்பை களைப் பொறுக்கு.

    வீரனாய் வெற்றி பெற்று விளையாட்டுப் போட்டிகளில்
    வீதி வலம் வருகின்ற விண்ணர் களைப் போற்றி
    மாலையிடு தம்பி மாலையிடு – அவரை
    மகிழ்வித்து ஊக்குவிக்க மாலையிடு.

    ஆத்தா இடுப்பிருந்த அரைக்காசை முடிச்சவிழ்த்து
    கூத்தாடி படம் ஓட, குடத்திலே பால் வாங்கி
    ஊத்தாதே கட்டவுட்டில் ஒரு முழமும் பூ வாங்கிச்
    சாத்தாதே கண்ணா! வீண் தறுதலையாயாகாதே.
    கூத்தாடிக் குந்தி நெளிப்பவரைச் சேவித்தல்
    ஆத்தாதவர் தொழிலாம் அவரையெலாம் போற்றி
    ஏத்தாதே ஐயா! எமக் கெதற்கு வீண் வேலை.

    படம்நூறு நாளோட பக்திப் பரவசத்தில்
    மண்ணிலே சோறிட்டு மடையனைப் போல் உண்ணாதே
    கண்ணா உனக்காகக் காத்திருக்கு உன் குடும்பம்
    எண்ணு அதை! மூட இரசிகனெனும் பேர் வேண்டாம்.

    கோயில் சிலைகளுக்குக் குடம் குடமாய்ப் பாலூற்றும்
    கொடுமைதனை ஆண்டவனே சகிக்க மாட்டான்
    கூத்தாடிக் கட்டவுட்டைக் கும்பிட்டு மாலையிடும்
    கோமாளித் தனந்தன்னை மன்னிப்பானா?

    மாலையிடு தம்பி மாலையிடு
    மணமகளாம், வரப்போகும்
    மனைவிக்கு, மாலையிடு
    ஆலயத்தில் இறைவனுக்கு,
    அழகு செய்ய மாலையிடு
    அசகாய சூரர்களாம்
    விளையாட்டு வீரருக்கு
    அழகான மாலைகட்டி
    அகமகிழ மாலையிடு.

    *****

    யாருக்கு மாலையிட வேண்டும்? எப்போது மாலையிட வேண்டும்? என்று இளைஞனுக்குப் பக்குவமாய் வழிகாட்டிய கவிஞர்களுக்குப் பாராட்டும் நன்றியும் சேரட்டும்!

    இவ்வாரத்தின் சிறந்த கவிதை இனி…

    மாலை சூடும் மணாளன்
    *****************************
    இல்லறம் நடத்த உரிய பருவமெய்தி
    இல்லாள் ஆகக் காத்திருக்கும் நங்கை!
    இதயத்தைக் கவர்ந்த நாயகனைக் கண்டு
    இனிய முகம் நாணுகின்ற மங்கை!
    நல்லெதிர் காலமதை மனதிற் கொண்டு
    நல்லாளை மாலையிடும் நாயகனின் செங்கை!

    நல்லோர் காட்டிய அறவழியில் பொருளீட்டி
    நல்வழியில் காத்து நின்றால்தான் உவகை!
    தான்தேடிக் கண்டவுணவுப் பண்டம் சிறிதெனினும்
    தன்னினத்தை மறவாது அழைக்கின்ற காக்கை!
    போற்றப்படும் நற்பண்பாம் என்றும் அது
    போன்றிருக்க வேண்டும் உங்கள் வாழ்க்கை!

    பெற்றோரை மறந்து பிறந்தகத்தைத் துறந்து
    பெற்ற பேறாக உனைக்கருதும் பதுமை!
    உறுதியுள மனமோடு இறுதிவரை உன்னோடு
    உற்றத் துணையென இருப்பது அருமை!
    பிறழாத நெறியோடு மாறாத அன்போடு
    பிரியாமல் வாழ்வதே என்றும் இனிமை!

    இல்லாத நிலையென்று ஒன்று வந்தாலும்
    இயன்றவரை வைத்துத் தாங்கட்டுமுனது அங்கை!
    தள்ளாத நிலையென்று ஒன்று வந்தாலும்
    தோள் கொடுத் துதவுவதே இயற்கை!
    கள்ளமற்ற முகத்தாளை மறவாமல் ஒருபோதும்
    காப்பதுவே உன் தலையாயக் கடமை!

    இல்லறம் எனும் நல்லறத்தை மாலையிட்டுத் தொடங்கும் மணாளனும் மங்கையும், அன்பும் அறனும் உடையோராய் வாழ்ந்தால் அதுவே இல்வாழ்வின் பண்பும் பயனுமாக இருக்கும் என்பது வாழ்வியல் அறிஞர் வள்ளுவரின் கருத்து.

    அதே வகையில்,

    ”பிறழாத நெறியோடு மாறாத அன்போடு
    பிரியாமல் வாழ்வதே என்றும் இனிமை”
    இல்லாத நிலையென்று ஒன்று வந்தாலும்
    இயன்றவரை வைத்துத் தாங்கட்டுமுனது அங்கை!” என்று மணாளனுக்குப் புத்திசொல்லும் இக்கவிதை, நற்சிந்தனைகளுக்கான விதை! அதைப் பாராட்டி இக்கவிதையின் படைப்பாளி திரு. ஆ. செந்தில்குமாரை இவ்வாரத்தின் சிறந்த கவிஞர் என அறிவிக்கின்றேன்.

     

     

    Share