படக்கவிதைப் போட்டி 147-இன் முடிவுகள்
-மேகலா இராமமூர்த்தி
மலர்களை விற்பனைக்குக் கொட்டிவைத்துவிட்டுக் கடைக்காரர் வேறேதோ கற்பனையில் இருப்பதை அவர் முகக்குறிப்பு அறிவிக்கின்றது. திருமிகு ஷாமினியின் கைவண்ணத்தில் எடுக்கப்பட்ட இப்படத்தைப் படக்கவிதைப் போட்டிக்குத் தேர்வுசெய்து தந்திருப்பவர் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி. சாந்தி மாரியப்பன். இவர்கள் இருவருக்கும் என் நன்றி மலர்களைக் காணிக்கையாக்குகின்றேன்.
மனங்கவரும்வண்ணம் மணம் பரப்புபவை மலர்கள். எனினும் அவற்றை விற்பனை செய்யும் தொழிலாளரின் வாழ்வு மணத்தோடும், அவரை நம்பியிருக்கும் குடும்பம் வாழ்க்கை நடத்தத் தேவையான பணத்தோடும் இருக்கின்றதா என்பது கேள்விக்குறியே!
மலரும் மனிதரும் இணைந்திருக்கும் இக்காட்சிக்கு மலர்ச்சியாய்க் கவிதையெழுத கவிஞர்களை அழைக்கின்றேன். (நண்பர்களே… இனிவரும் வாரங்களில் நீங்கள் எழுதும் கவிதைகள் 24 அடிகளுக்கு மிகாமல் இருக்குமாறு பார்த்துக்கொள்ளுங்கள்.)
*****
”புதிதாய் மணம்புரிந்த இந்த இளைஞர், மணம்வீசும் மலர்களை விரைந்து விற்றுவிட்டுக் காதல் மனையாளோடு மகிழ்ந்திருக்க எண்ணுகின்றார் என்பதே இவரின் முகம் உணர்த்தும் அகக்குறிப்பு” என்கிறார் திரு. ஏ.ஆர்.முருகன்.
பூவாக வாழ..பூவையைத்தாங்கு!!
#விற்பனைக்குக்காத்திருக்கும்
விடுமலர்கள்!! _ தொடுக்காமல்
விற்றுவிட்டால் சரமாக்க இரவு
விழித்திருக்கத்தேவையில்லை!
#நூலெடுத்து வேலைக்கு எத்தனித்தால்
நூலிடையாள் ஞாபகம்! _ கட்டி வந்து
நூறுநாள் தாண்டவில்லை.. உள்ளத்தில்
நூலிலையாய்ப்பின்னிபுதுமணப்பெண்!!
#இரண்டொருநாள் தாண்டிவிட்டால்
இதழ் அழுகும்!! _ தாம்பத்தியம்
இல்லறத்தின் அழகு..நல்லறமாய் ஆக
இல்லாளை எந்நாளும் நேசிக்கணும்!!
#முன்வருவதைவிட மிகச்சிறப்பு
பின்வருவதே _ காதல்
பண்ணுவது மனைவியெனில்
மின்னும் இல்வாழ்வு!!!
#உதிரம்நனைந்த வெள்ளைரோஜா
உருவாகும்சிவப்பு _ கிளிக்காதல்
உவமானமல்ல ஈருயிர்பந்தத்தின்
உண்மையான பாசப் பரிணமிப்பு!!
#வியாபாரம் செழிக்கத்துணையாக
வீட்டுக்காரி வரவேணும் _ மாலைகட்டி
விரைவிலே முடித்து,இல்லம்திரும்பி
விரும்பும்தம்பதியாய்வாழவேண்டும்!!!
*****
”அரும்பு நனை முகை மொக்கு என்று ஒவ்வொரு பருவத்தையும் கடந்துவரும் மலர், வீயாகி விழுமுன் வாடிக்கையாளர் வாங்கிவிட்டால் மனையாள் மகிழ்வாள்” என்று பூக்களின் பருவங்களையும், வணிகரின் மனவோட்டத்தையும் தன் பாவில் சுவைபடப் பட்டியலிட்டுள்ளார் திரு. ஆ. செந்தில்குமார்.
மலர் வணிகனின் மனவோட்டம்
அரும்பாகி…
அதுமுற்றி நனையாகி…
முகையாகி… மொக்காகி…
முகிழாகி… மொட்டாகி…
மலராகி… பூவாகி…
விற்பனைக்கு கடையடைந்து…
வீயாகி… உதிர்ந்து வீழுமுன்னே…
விற்றுத் தீர்ந்துவிட்டால்…
வீட்டில் காத்திருக்கும்
பொறுப்பான மனையாளும்
பொதும்பராகி மகிழ்வாளே…
பொம்மலாகி… செம்மலாகி…
வீணில் போகுமுன்னே…
வாடிக்கையாளர் எவரேனும்
வந்து வாங்கிவிட்டால் – என்
வாடும் மனம் மலர்ந்திடுமே…!
*****
”இறைவனிடம் சேர்ந்தால் திருமாலை, அரசியல்வாதியிடம் சேர்ந்தால் மலர்மாலை. ஆனால்… என்று கூடும் எனக்கு மணமாலை?” என்று மலர் வணிகர் தம் மனத்துள் மருகுவதைப் பாமாலை ஆக்கியிருக்கின்றார் திரு. செண்பக ஜெகதீசன்.
அவன் கவலை…
மலர்கள் விற்கிறான் உதிரியாக
மாலை யாகிடும் உறுதியாக,
பலவகைப் பயன்கள் அதற்குண்டு
பள்ளியில் சேர்த்திடும் மணமாலை,
சிலையில் இறைவன் திருமாலை
சீரிலா அரசியல் பூமாலை,
நிலவிடும் அவனிடம் ஒருகவலை
நம்மிடம் வருமா மணமாலையே…!
*****
மனித வாழ்வின் ஒவ்வொரு நிகழ்வோடும் மலர்கள் பின்னிப் பிணைந்திருக்கும் மாண்பை அழகாய் வகைப்படுத்தி, கண்ணுக்கு மட்டுமன்று கவிதைக்கும் கருவாய்த் திகழ்பவை இவை என்று பூக்களைப் புகழ்ந்திருக்கின்றார் பெருவை திரு. பார்த்தசாரதி.
பூவே உன்னைப் புகழ-வா..!
பூவென்றாலே அதனுடன் மணமும் சேர்ந்ததுதானே..
……….பூவோடு சேர்ந்தநாரும் கூடமணக்கும் என்பார்கள்.!
பூவெல்லாம் ஒன்றுசேர்ந்து மணக்கின்ற இடத்தில்..
……….புதிதாயங்கே மலருமாமொரு விழாவோ நிகழ்ச்சியோ.!
ஆவென்றே அதிசயிக்கும் ஆளுயரப் பூமாலையென..
……….அன்பிற்கே அடையாளமாய் திகழுமிந்தப் பூக்களாம்.!
வாவென் அன்பேயென அழைக்கவும் ஓவென்றழவும்..
……….வாங்குகின்ற ஒருபொருளாகத் தானுனைப் பார்ப்பார்.!
பெண்ணவள் மலரும் தன்மைக்கு வந்துவிட்டாளென..
……….பூக்கள்பலச் சூடித்தான் சூசகமாகத் தெரிவிப்பாரன்று.!
பெண்ணுக்கும் மலருக்கும் அதிகத் தொடர்புண்டாம்..
……….பூச்சூட்டலெனும் நிகழ்ச்சியே அதற்குத் தகும்சான்று.!
எண்ணெய் வைத்துக் குளிப்பாட்டிய பாவைக்கு..
……….எண்ணற்ற வளையலும் பூக்களும் பரிசளிப்பாரன்று.!
கண்ணான மருமகளின் தலையில் மொட்டுப்பூச்சூடும்..
……….காட்சியாக மாமியாரே மருமகளுக்குச் சூட்டுவாராம்.!
பெண்களை மலரென்பார் கவிஞரும் பாவலரும்..
……….போற்றும் குண மிருவருக்கும் உண்டென்பதாலோ.!
பெண்ணைத் தெய்வமாக மதிக்க வேண்டுமெனவே..
……….பெண்தெய்வம் விழாக் கொண்டது பூச்சொரிதலாலே.!
ஆண்டகையொருவன் போரில் வெற்றி பெற்றால்..
……….அந்நாளில் அவன்தலையில் பூவால் வாகைசூடுவார்.!
கண்ணுக்கு விருந்தாகும்!..கவிதைக்குக் கருவாகும்!..
……….காதலர்களுக்குப் பரிசாகும்!.வண்ணமிகு பூக்களாம்.!
*****
மலர்களின் அரசியாய்த் திகழும் ரோஜாவின் சிறப்பையும், வாழும்வரைப் பிறர்க்குப் பயன்தரும் அதன் உயர்பண்பையும் சிறப்பாய்ச் சொல்லியிருக்கிறார் திரு. பழ.செல்வமாணிக்கம்.
புண்ணியப் பூக்கள்:
ரோஜாப் பூவே நீ தானே பூக்களுக்கெல்லாம் அரசி!
ஒற்றை ரோஜாவாய் நீ வந்தாலே மனதிலே மகிழ்ச்சி!
கூட்டமாய் கூடையில் கொலுவிருப்பது!
கண் கொள்ளாக் காட்சி!
மென்மை எனும் வார்த்தைக்கு நீ தானே அத்தாட்சி!
நீ முள்ளோடு வளர்ந்தாலும் மென்மையாய் இருப்பது
உன் தனிச் சிறப்பு!
பிறருக்கென வாழ்வதால், நீ இறைவனின்!
அற்புதப் படைப்பு!
முருகு என்றால் அழகு என்பதாம் தமிழ் மொழியில்!
ரோஜா என்றாலும் அழகு என்பதாம் புது மொழியில்!
அரும்பிலும் நீ அழகு!
மொட்டிலும் நீ அழகு!
மலரிலும் நீ அழகு!
ஆண்டவன் படைப்பிலே நீ தான் பேரழகு!
இப்புவியில் நீ வாழ்வது சில காலம்!
உன்னால் விளையும் பயன்கள் பலவாகும்!
வண்டிற்குத் தேனை நீ தருவாய்!
மங்கையின் கூந்தலில் வீற்றிருப்பாய்!
தெய்வத்தோடு கொலுவிருப்பாய்!
மணமக்கள் கழுத்தை அலங்கரிப்பாய்!
காதல் தூதாய் நீ இருப்பாய்!
இறுதி யாத்திரையிலும் துணை வருவாய்!
ரோஜா மலராய் நாம் இருப்போம்!
இயன்ற வரையில் பயன் தருவோம்!
*****
கடையில் குவிந்திருக்கும் இவ்வண்ண மலர்கள் கோரிக்கையற்றுக் கிடப்பதுபோல், மணம்புரிந்து மணம்பரப்ப வழியின்றி வரதட்சணை எனும் தீயில் கருகும் பெண்மலர்கள், மலர்சூடி மங்கலவாழ்வு காண்பது எந்நாளோ?” எனும் ஏக்கத்தை வெளிப்படுத்துகின்றது திரு. சி. ஜெயபாரதனின் கவிதை.
சூடா மலர்கள்!
கொட்டிக் கிடக்குது தரையில்
கோடிப் பூக்கள் !
வாடிக் கிடக்கும் வாசனைப் பூக்களைச்
சூடிக் கொள்ள
மங்கையர் இல்லை!
சூடிக் கொடுத்த பூமகள்
சுடர்க் கொடியின்
துகிலை உரித்து அவைதனில்
மகிழ்ந்தோரை மறித்து
புடவை அளிக்க,
கண்ணபிரான் வந்திலன் !
வாடாமல், வதங்காமல் இன்னும்
வனப்பு மங்காது
சூடாமலர்கள் வீடுகளில்
தொடுப்பா ரற்று,
திருப்பாவை
பாடிக் கொண்டுள்ளன !
வாடி உதிரும் முன் மாலையாய்ச்
சூட வந்த ஆடவன்
வாரான் மீண்டும்,
காரணம்
கறுப்பி மங்கை அப்பன்
தர முடிய வில்லை
வரதட்சணை !
*****
பூக்களையும், பூவிற்பவரையும் பின்னணியாகக் கொண்டு பொருள்செறிந்த பாக்களை அள்ளித் தந்திருக்கின்ற கவிஞர் குழாத்துக்குப் பாராட்டு!
இவ்வாரத்தின் சிறந்த கவிதையாய்த் தேர்வு பெற்றிருப்பது அடுத்து…
பூ வித்த காசு பூத்துக் குலுங்கிடுமோ!
பறித்தெடுத்த செம் பூக்க பரவிக் கிடக்கையிலே
வெறித்தவொரு பார்வையுடன் வீற்றிருக்கும் தம்பி
போணி நல்லா ஆகலியோ பொறுமை காத்து இருக்கீங்க
காணி நிலமெடுக்கக் கடைய விட்டு வாரிகளா
பொழைக்கலாமெண்ணு பூ விக்க வந்தீகளே
உழைப்பெதுவும் சேராம உட்காந்திருக்கிகளோ!
பொம்பளைய்ங்க எல்லோரும் போலிப் பூ சூடிக்கிட்டு
எம்புட்டுக் காலத்துக்கும் இதழுதிர்ந்து வாடாம
கலியாணம் கச்சேரி கடவுளுங்க கோயிலென்று
மலிவான பூச் சூடி வருவதனைக் காணலியோ
நாய்வித்த காசு கொலைக்காது எம்பாங்க
பூ வித்த காசு பூத்துக் குலுங்கிடுமோ!
காஞ்ச பூப் போக, கட்டவிழ்ந்த மொட்டுதிர
பாஞ்சு பொறுக்கி பழையபடி கோத்தெடுத்தா
வாறவுக எல்லாரும் வகைபிரிச்சுப் பார்ப்பாக.
ஆஞ்செடுத்ததா மரத்(து) அடியில் பொறுக்கியதா,
பூமியில விழுந்திருந்தா பூச்சூடக் கூடாது
சாமி குத்தமெம்பாக தரங்குறைச்சிப் பார்ப்பாக
என்ன விலையெம்பாக ஏற்ற விலை குடுக்காக
சொன்ன விலைக்கு வித்துச் சொகம் பெறவே முடியாது
ஏற்ற விலை கொடுக்க எவர் வருவார் இக்காலம்.
காற்றுதிர்த்த பூவுக்குக் கனக்க விலை தேறாது
கல்லா நெறையாமக் கடைய இழுத்து மூடிப்பிட்டு
பொல்லாத யாவாரம் போதுமிண்ணு போறதிண்ணா
நல்ல தொழிலிருக்கு நாட்டில் வளமிருக்கு
பொல்லாத இத்தொழில பொமபளய்ங்க கைகுடுத்து
காணி நிலமெடுங்க களனி விளைஞ்சிடட்டும்!
போலிப் பூக்களைப் பூவையர் சுமந்துதிரிவது பரவலாகிவிட்ட இந்நாளில், உண்மைப் பூக்கள் தம் மதிப்பை இழந்துவிட்டன. அப்படியும் தப்பித்தவறிக் கடைக்குப் பூவாங்க வருவோரோ, பூக்களை வகைப்பிரிப்பது, கசக்குவது என்று ஆயிரம் விஷமத்தனங்களில் ஈடுபடுகின்றனர். எனவே பூ வித்த காசு வியாபாரியின் வாழ்வைப் பூத்துக் குலுங்க வைக்குமா? குலுங்கி அழ வைக்குமா? என்று யோசிக்கவேண்டி இருக்கின்றது.
”விலைபோகாப் பூக்களுடன் மலைத்துப்போய் அமர்ந்திருப்பதினும், காணிநிலம் வாங்கி விவரமாய் விவசாயம் செய்தால் இல்லாமை நில்லாது ஓடும்; வாழ்விலே இனிமை கூடும்” என்று பூ வணிகருக்கு யோசனை சொல்லும் இந்தப் பாடலின் ஆசிரியர் திரு. எஸ். கருணானந்தராஜாவை இவ்வாரத்தின் சிறந்த கவிஞராய் அறிவித்துப் பாராட்டுகின்றேன்.
படக்கவிதைத் தேர்வு நடுவருக்கு,
////இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை, 24 வரிகளுக்குள், நல்ல தலைப்புடன் பின்னூட்டமாக இடலாம். ///
தேர்வு பெற்ற கவிதை 24 வரிக்கட்டுப்பாடு நிபந்தனைக்குள் எழுதப்படாததால், அதன் முதன்மை மதிப்பீடு ஏற்றுக் கொள்ளப் படமாட்டாது.
சி. ஜெயபாரதன்
ஐயா,
சென்ற வாரந்தான் ’24 அடி’ என்ற எல்லையை நாம் படக்கவிதைப் போட்டிக்கான கவிதைகளுக்கு ’விதியாக’ அறிமுகப்படுத்தியிருக்கின்றோம். எனவே கவிஞர்களில் சிலர் அதனைக் கவனிக்கத் தவறியிருப்பார்கள் என்பது என் அனுமானம். அதனால்தான் அடியெல்லையைச் சற்றே தாண்டியிருக்கும் ஒரு கவிதையை அதன் பாடுபொருள் அடிப்படையில் சிறந்தது என்று தெரிவுசெய்தேன். வரும் வாரங்களில் இது தொடரக்கூடாது என்பதை உணர்த்தவே ”24 அடிகளுக்குள் எழுதுங்கள்” என்பதை என் வேண்டுகோளாக இவ்வாரக் கவிதை முடிவில் அறிவித்திருக்கிறேன்.
வரும் வாரம் முதல் கவிதைகளின் அடியெல்லை கவனத்துடன் பார்க்கப்பட்டே முடிவுகள் அறிவிக்கப்படும் என்பதைத் தங்களுக்குத் தெரிவித்துக்கொள்கிறேன்.
நன்றி!
அன்புடன்,
மேகலா இராமமூர்த்தி
எனது கவிதையை வாரத்தின் சிறந்த கவிதையாகத் தேர்வுசெய்திருப்பதையிட்டு நடுவர் மேகலா இராமமூர்த்திக்கும், வல்லமை குழுமத்திற்கும் நன்றி கூறுகிறேன். கவிதைகள் 24 அடிகளுக்கு மேற்படக் கூடாது என்ற நிபந்தனையை அன்பர் ஜெயபாரதன் அவர்கள் குறிப்பிட்ட பின்னர்தான் தெரிந்து கொண்டேன். ஒரு மூன்று அடிகள் அதிகரித்து விட்டது. வழமைபோல பங்கு பற்றியதால் போட்டி விதிகளிலேற்படுத்தப்பட்டுள்ள சடுதியான மாற்றம் பற்றி வாசிக்காமல் விட்டு விட்டேன். அதைப்பொருட்படுத்தாமல் கவிதையைத் தேர்வு செய்த நடுவர் குழுமத்திற்கு நன்றி.