சிந்தையில் நிறைந்த சிவமே
க.பாலசுப்பிரமணியன்
கைகளில் உடுக்கை கழுத்தினில் அரவம்
கண்களில் நெருப்பு கருணையின் சிரிப்பு
சிகையினில் கங்கை சிறிதொரு பிறையே
சிந்தையில் நிறைந்த சிவமே !
சுட்டிடும் நெருப்போ சூட்சும அறிவோ
சுடர்விடும் ஒளியோ சோதியின் வடிவோ
சாம்பலைப் பூசிய சமத்துவத் தத்துவம்
சிந்தையில் நிறைந்த சிவமே !
அருவம் உருவம் ஆனந்தப் பெட்டகம்
சத்துவ பூரணம் நித்திய நாட்டியம்
சத்தினில் சித்தினில் வித்தென வந்தே
சிந்தையில் நிறைந்த சிவமே !