படக்கவிதைப் போட்டி 146-இன் முடிவுகள்
-மேகலா இராமமூர்த்தி
கம்பீர நடைபயிலும் காளைகளைப் படமெடுத்து வந்திருக்கின்றார் திரு. நித்தி ஆனந்த். படக்கவிதைப் போட்டிக்கு இதனைத் தேர்வு செய்து தந்திருப்பவர் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி. சாந்தி மாரியப்பன். படமெடுத்தவர், அதனைத் தேர்ந்தெடுத்தவர் இருவருக்கும் என் நன்றி உரித்தாகுக!
மாடே செல்வமென்று மக்கள் வாழ்ந்த காலம் இன்று மலையேறிவிட்டது. அதனால் மாடுகளோடு கூடிவாழ்வோரும் குறைந்துவிட்டனர். இத்தகு சூழலில் சாலையில் மாடுகளை ஓட்டிச் செல்வோரைக் காண்கையில் இவை எங்கே செல்கின்றன…உழுதற்கா… இல்லை…அடிமாடாய் அழிதற்கா எனும் கவலையும் எழவே செய்கின்றது.
விடைகள் (காளைகள்) நகரும் பாதைகுறித்து விடைபகரும் பொறுப்பை நம் கவிஞர்களிடம் விட்டுவிடுவோம்!
*****
சீமை மாடுகள் வந்தபிறகு நாட்டுமாடுகள் மீது நம் மக்களுக்கு நாட்டங்குறைந்துவிட்டது; அழிவைநோக்கிச் செல்லும் நாட்டு மாட்டினத்தை உடன் காப்பது நம் கடன் என்கிறார் திரு. ஏ.ஆர். முருகன்.
மாடுகளின் மாண்பு!!
செவலை மயிலையுன்னு
எவ்வளவோ மாட்டினங்கள்
அவ்வளவும் இன்னிக்கு
அதிசயமாய் ஆயிடுச்சு
நாட்டுப்பசும்பால் காயவச்சு
புரை போட்ட தயிரு கடஞ்ச
வெண்ணெயில நெய் எடுத்து
வச்ச கையின் வாசம்
வீதியிலும் மணமணக்கும்!!
சீமையில இருந்து
ஜெர்சி…சிந்துனு
வந்ததுக்குப்பின்னால
நாட்டுக்கன்னுக மேல
நாட்டங்கொறஞ்சுபோச்சு!!
இருக்கும் ஒண்ணு ரெண்டும்
இப்பொவோ அப்பொவோனு
அழிவ நோக்கிப்போயிட்டிருக்கு!
கெடாரி நாலு பாதையில போறத
பாக்கிறதில் மகிழ்ச்சி!!
கட்டுத்தறி தவறாம
நாட்டு மாடு வளர்க்க
விவசாயிகள் அனைவருக்கும்
விழிப்புணர்ச்சி வரவேணும்!!
எருவுக்கு சாணம்
மருந்துக்கு கோமியம்
விருந்துக்குபால்மோர்தயிர்
இத்தனையும் கொடுக்கிற
உத்தமமான ஆவினத்தின்
உருப்படிகள் பெருக வேணும்!!
கால்நடைச் செல்வங்களை
காப்பாற்றி வச்சாத்தான்
அடுத்த தலைமுறைக்கும்
அவைகளால் பயன்கிடைக்கும்!!
மாடுகள் தானேனு
மட்டமா நினைக்காம
சாமியோட ரூபமுன்னு
காமிப்போம் அகிலத்திற்கு!!
*****
”எது இனிய வாழ்க்கை? தொலைந்துபோன கிராமம், அழகிய கிராமம்” எனும் மூன்று முத்தான தலைப்புக்களில் மண்ணின் மணங்கமழும் கிராமத்து எழில் வாழ்க்கையையும், கிராம மக்களின் வெள்ளந்தி உள்ளத்தின் மகிமையையும், கிராமங்களை விட்டகன்றதால் நம் இன்பமும் நமைவிட்டு அகன்றுவிட்டதையும் நெஞ்சைத் தொடும் கொஞ்சுதமிழ் வரிகளில் கவிதைகளாய் வடித்துள்ளார் திரு. ஆ.செந்தில் குமார்.
எது இனிய வாழ்க்கை?
தென்னங்கீற்றில் கூரை வேய்த
சின்னதாய் ஒரு ஓலைக் குடிசை!
குடும்பத்தின் பசி போக்க
குறைவிலா பயிர் வளர்நிலம்!
நீருடைய என்றும் வற்றாத
நிலத்திடையே ஒரு கிணறு!
அதைச் சுற்றி வளர்ந்த
அழகான பத்து தென்னைமரங்கள்!
பால்தரும் பசுமாடு இரண்டு – நிலத்தைப்
பண்படுத்த எருதுகள் இரண்டு!
பட்டியில் சில ஆடுகள்!
பண்ணையில் சில கோழிகள்!
[…]
நிழலுக்கு ஒரு வேப்பமரம் – அதனடியில்
அழகாய் ஒரு கயிற்றுக்கட்டில்!
உழைத்த களைப்புக்கு பழங்கஞ்சி!
பிழைப்புக்கு சிறிது பணம்!
கையால் குத்திய அரிசி – சமைக்க
களிமண்ணால் செய்த பாண்டங்கள்!
அன்பைப் பரிமாறும் மனைவி!
பண்பில் சிறந்த குழந்தைகள்!
பக்கத் துணையாய் உறவுகள்!
படுத்த உடனே உறக்கம்!
இதைவிட இனிமை இனியுண்டோ?
இப்பிறவியில் கிடைக்க வாய்ப்புண்டோ?
*****
தொலைந்துப் போன கிராமம்
[…]
நெல்விளைந்த பூமியெல்லாம் கல்முளைத்த மனையாச்சு!
கல்நட்ட கழனியெல்லாம் கண்கவரும் வீடாச்சு!
வழிப்போக்கர் ஓய்வெடுக்கத் திண்ணைவைத்த வீடில்லை!
எழிற்தோற்றம் கொண்டிருந்த ஏரியிலும் நீரில்லை!
ஆட்டுக்கல்லும் அம்மியும் காண்பதெல்லாம் அரிதாச்சு!
வீடுகளில் திருக்கை உரலுலக்கையனைத்தும் போயாச்சு!
பனைமரங்களெல்லாமே அழிவின் விளிம்புக்கு வந்தாச்சு!
சினையாக மாட்டுக்கு ஊசியே என்றாச்சு!
நாதியற்றுப் போய்விட்ட நாட்டு மாட்டினங்கள்!
சேதிசொல்லும் குட்டிச்சுவர் பழங்கால சரித்திரங்கள்!
[…]
*****
அழகிய கிராமம்
கருக்கல்லில் கண்விழிப்பர்! கழனிக்குச் சென்றுழைப்பர்!
மாடுகன்று ஓட்டிக்கொண்டு மேய்ச்சலுக்குச் சென்றிடுவர்!
தொழுவத்தைத் தூய்மைசெய்து வாயிலில் சாணந்தெளிப்பர்!
அழகான மாக்கோலம் வீட்டிற்கழகுசேர்க்க இட்டிடுவர்!
எருக்குழியை ஏற்படுத்தி தொழுவுரத்தைச் சேகரிப்பர்!
[…]
பச்சைப் பட்டாடை போன்றிருக்கும் வயல்வெளி!
வயல்களைப் பிரித்திருக்கும் வரப்பென்ற இடைவெளி!
அதிகாலைப் பொழுதினிலே நனைத்திருக்கும் பனித்துளி!
செங்கதிரோன் உதயத்திலே சிவந்திருக்கும் வான்வெளி!
இத்தகு கிராமமே சிங்காரச் சமவெளி!
பனையோலைக் குடிசையெல்லாம் எளிமையினைப் பறைசாற்றும்!
ஐய்யனார் கோயிலெல்லாம் பக்தியின் திடங்காட்டும்!
முதியோரின் பேச்செல்லாம் வெள்ளந்தி மனங்காட்டும்!
மக்களின் மனதெல்லாம் மாட்டிடமும் பாசங்காட்டும்!
இத்தகு கிராமத்திலே இருப்பதுவேநம் மனதின்நாட்டம்!
*****
”ஆடு மாடுகளைச் சொந்தப் பிள்ளைகள்போல் பாடுபட்டு வளர்ப்பவன் உழவன். அவன் சேற்றில் கால்வைத்தால்தான் நம் மக்கள் சோற்றில் கைவைக்க முடியும். ஆனால் இன்றோ… வான்பொய்த்து வளங்குன்றிப் போனதனால் கழனிகளெல்லாம் கட்டுமனைகள் ஆனதே” என்று வெதும்புகின்றார் பெருவை திரு. பார்த்தசாரதி.
அனைத்துயிர்க்கும் அவனே நண்பன்..!
அதிகாலையில் ஆதவன் தோன்றுமுன் அவனெழுவான்..
……….ஆடுமாட்டைத் தன்பிள்ளையெனப் பேணிக் காப்பான்.!
கதிரவனைத் தொழுதபடி ஏருழுவான் ஏற்றமிறைப்பான்..
……….கதிர்நெல்லைக் காணவயல் களத்திலே கடுமுழைப்பான்.!
நதிதீரம் நாடியேயிவர்கள் வாழ்க்கையாம் தன்னலமின்றி..
……….நானிலத்துக்காக உழைத்து உலகுக்கே நண்பனாவான்.!
விதியேயெனக் காலமுழுதும் கடமையாற்றும் நற்பண்பு..
……….விதிமாற்றத்தால் கண்ணீர் விட்டுக் கலங்குகிறானின்று.!
உதிரத்தை வியர்வையாக்கி உழைக்கின்ற வர்க்கம்தான்..
……….ஊராரும் உணவுக்காக நம்பிவாழும் உயருழவன்தான்.!
எதிரிகளென்றால் இயற்கையின் சீற்றம்தான் அதிகம்..
……….என்றைக்கு மோருயர் நிலையில்லாத வாழ்க்கைதான்.!
நிதிப்பற்றாக்குறை என்பதெப்போது மிருக்கும்! அவன்..
……….நிலத்தைச் சீர்படுத்தி விளைபயிர் செழிக்கவே!..இவன்..
குதிகால் குவலயத்தில் பதியாவிட்டால்?..ஒருவேளைக்..
……….கூழுக்கும் கஞ்சிக்கும் சோற்றுக்கும் கடும்பஞ்சம்தான்.!
அனைத்துத் தொழிலுக்கும் முதலானது உழுதொழில்..
……….அனைத்துலக ஜீவிகளுக்கும் உழவனே நல்நண்பன்.!
நினைவில் கொள்ளுவீர் நீர்! அறிவியல் வளர்ந்தாலும்..
……….ஆருமுணவின்றி வாழ்தலியலா தென்பது இயற்கை.!
பனைமரத்தை வளர்க்காமலே பலருக்கும் பயன்தரும்..
……….பாருலகுக்கு அதுபோல நீரும்நிலவளமும் பலன்தரும்.!
வினைசெய்யும் வஞ்சகத்தார் இன்று விளைபயிரழித்து..
……….விளை நிலைத்தையும் வீட்டுமனையாக்கி விட்டனரே.!
*****
”எம்மை எங்குக் கொண்டு போறீக எஜமான் மாருகளே! எடைபோட்டு விற்பதற்கா!? பால்கொடுத்துக் காத்த எமக்கு நீர்காட்டும் பரிவிதுவோ?” என்று காளைகள் கண்ணீரோடு கேள்வி எழுப்பக் காண்கிறோம் திரு. எஸ். கருணானந்தராஜாவின் கவிதையில்!
பொட்டு வச்ச நெத்தியில பூமாலை ஒண்ணு சுத்தி
தொட்டுக்கிட்டுப் போறதுக்கும், தோழியரைச் சேத்து வச்சி
எங்க கொண்டு போறீங்க எஜமான் மாருகளே – எங்கள
எடை போட்டு விற்பதற்கா எஜமான் மாருகளே!
கொம்புக்கு எடை கழிச்சி குழம்புக்கும் எடை கழிச்சி
இம்புட்டுத்தான் மிச்சமென்பார் யாவாரி மாரே –அத
ஏத்துக்கிட்டுப் போவிகளோ எஜமான் மாருகளே
தோலைக் கழிச்சிப்பிட்டுத் தோராய நிறைபோட்டு
மேலே ஒண்ணும் தேறாதெம்பார் யாவாரி மாரே –காச
வேண்டிக்கிட்டுப் போவிகளோ எஜமான் மாருகளே
காலம் முழுதுமுங்க காலடியிலே கிடந்து
பாலூத்திக் கொடுத்ததுக்கு எஜமான் மாருகளே–உங்க
பரிசு இதுதானோ எஜமான் மாருகளே
ஓரத்திலே எங்காச்சும் உயிர் பிரிஞ்சு போம் வரைக்கும்
பாரங் கொடுக்காம எஜமான் மாருகளே – நாங்க
படுத்தாலும் பயன் தருவோம் எஜமான் மாருகளே.
கொல்லக் கழுத்தறுத்து குருதி கொட்டி நாங்க விழ
அல்லாஹு அக்பரென்று தக்பீர் செய்கையிலே –அத
அருகிருந்து பார்ப்பீகளோ எஜமான் மாருகளே!
நாங்க தந்த பால் குடிச்ச நம்மூட்டுப் புள்ளைங்கள
ஓங்க வச்சு உயர்த்திடுங்கோ எஜமான் மாருகளே –எங்க
உயிரதுக்குப் பயன்படட்டும் எஜமான் மாருகளே.
*****
மடுத்த வாயெல்லாம் மெய்வருத்தம் பாராது பாரமிழுக்கும் பகடுகளின் அவல நிலையைத் துல்லியமாய்க் காட்சிப்படுத்தியிருக்கும் கவிஞர்களுக்கு என் பாராட்டும் நன்றியும்!
இனி வருவது இவ்வாரத்தின் சிறந்த கவிதை…
தேடியே…
செல்வ மென்றே மாடதையும்
சேர்த்துக் கொண்ட நம்முன்னோர்,
இல்ல மதிலே ஓருறுப்பாய்
இணைத்தார் நமது வாழ்வினிலே,
புல்லும் மேய இடமின்றிப்
போனதா லின்று கிராமத்தில்,
செல்கிறார் மாந்தர் மாட்டுடனே
சேர்ந்தே தேடிட பிழைப்பினையே…!
செல்வமென்று மாட்டைக் கருதிய திருநாட்டில் இன்று அவை பசித்தால் புசிக்கக்கூடப் புல்லில்லை; இந்த அவலத்தை எடுத்தியம்பச் சொல்லில்லை!
கழனிகள் காய்ந்துவிட்டதால் காளைகளும் உழவின்றி ஓய்ந்துவிட்டன. எனவே உழைக்கும் வர்க்கத்தவரான உழவரும் அவரின் உறுதுணையான மாடுகளும் பிழைப்புத்தேடி ஊரைவிட்டுச் செல்வதை எளிமையாய்ச் சொல்லியிருக்கும் இக்கவிதையின் ஆசிரியர் திரு. செண்பக ஜெகதீசனை இவ்வாரத்தின் சிறந்த கவிஞர் என அறிவித்துப் பாராட்டுகின்றேன்.
திரு. செண்பக ஜெகதீசன் ஐயா அவர்கட்கு மனமார்ந்த வாழ்த்துகள்.