தண்ணிகேட்டு முதல்வர்பாவம் ஓடுறார் – தண்ணி

தரமறுத்து கதவைஅங்கு மூடுறார்! – என்ன

பண்ணித்தான் அவர்தொலைப்பார்

பெருசுசெய்த பாவமின்னும்

தொடருது – இருள் – படருது!
செத்துப்போன உயிர்மீண்டும் வருமா? – தலை

சாகடித்த காவிரிகை தருமா? – வாழ்க்கை

வெத்தாகும் எனத்தெரிந்து

வழக்குதனை திரும்பஅன்று

பெற்றார் – வாழக் – கற்றார்!
கறந்தபால் மீண்டும்மடி புகாது – நம்மைக்

கதறவைத்த தலைசெயல் தகாது – நாட்டு

நலனைமிக அவர்மறந்து

நன்குதன்னைக் காக்கவுமே

செய்தார் – வாகை – கொய்தார்!
ஊழல்வழக்கில் சிக்கமனம் பதைத்தார் – மிக

ஊசலாடும் மனசாட்சி புதைத்தார் – தன்னை

வாழத்தான் செய்வதற்கு

வழக்கதனை வாபஸ்வாங்கிப்

பிழைத்தார் – பாவம் – இழைத்தார்!
நடுவர்மன்றத் தீர்ப்பையுமே மதியார் – உச்ச

நீதிமன்ற வாசல்தனை மிதியார் – கன்னடர்

நடுவனரசு சொல்லுவதை

நன்றெனவே கேட்கும்மனம்

இல்லார் – பெரும் – பொல்லார்!
நம்நாட்டு மக்களுமே சரியிலே – இவர்

நடந்துகொள்ளும் விதமெதுவும் புரியலே – என்றும்

தும்பைவிட்டு வால்பிடிக்கும

தேவையற்ற செயல்செய்யப்

பறப்பார் – கடமை – மறப்பார்!
மஞ்சுவிரட்ட ஒற்றுமையாய் நிற்பார் – அதில்

மலையளவு வெற்றிபெறக் கற்பார் –

அணையில் கொஞ்சமுமே நீரின்றி

காளைஎட்டிப் பார்த்திடினும்

வருந்தார் – என்றும் – திருந்தார்!
முந்துரிமை விதிச்சிறப்பை அறியார் – அதை

முறையாகப் பயன்படுத்தத் தெரியார் – நமைச்

சந்திதனில் நிற்கவைக்கும்

சதிகாரர் அரசியலை

நம்புவார் – நாளை – வெம்புவார்!
06.02.2018
கவிஞர் இடக்கரத்தான்

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *