நிதிநிலை அறிக்கை!

பவள சங்கரி

தலையங்கம்

பாரதப் பிரதமர் மோடி அவர்களின் இந்த ஆட்சிக்காலத்தின் இறுதி நிதிநிலை அறிக்கையில் அறிவித்துள்ள அறிவிப்புகள் வெறும் அலங்கார வார்த்தைகளின் தொகுப்பாகவே உள்ளன. 10 கோடி மக்களுக்கு ஆண்டு ஒன்றிற்கு 5 இலட்சம் உரூபாய் இலவச மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் ஒரு ஆண்டின் மொத்த மதிப்பு 50 இலட்சம் கோடி உரூபாய் ஆகிறது. இதற்கு நிதிநிலை அறிக்கையில் எந்த விதமான உரூபாய் பங்கீடு (Budgetery support) இல்லை. இருப்பினும் இதை செயல்படுத்துவதாக எடுத்துக்கொண்டால் இதற்கான கட்டமைப்புகள் உள்ளனவா என்றால் அதுவும் மிகப்பெரிய கேள்விக்குறியாகும். இதற்கான மருத்துவமனைகள், மருத்துவர்கள், மருத்துவ உயர்நிலைக் கல்லூரிகள் என அனைத்தையும் உருவாக்கினால் மட்டுமே இது சாத்தியமாகக்கூடும். இல்லாவிட்டால் இந்தத் திட்டம் மற்றுமொரு அவலம் நிறைந்த அரசு மருத்துவமனைகளுக்கானதாக மட்டுமே இருக்கக்கூடும். குறைந்த அளவு தொகையையாவது மக்களிடம் பெற்று அதனுடன் இந்தத் திட்டத்தை செயல்படுத்தும்பட்சத்தில் சிறு சாத்தியமாவது உருவாகலாம் என்ற நம்பிக்கை வரும்.

வங்கிகளுக்கு மக்களின் வரிப்பணத்திலிருந்து 2.40 இலட்சம் கோடி மூலதன நிதியாக அளிப்பதாக நிதியமைச்சர் கூறியுள்ளார். இதற்குரிய வட்டி விகிதாச்சாரப்படி அல்லது ஈவுத் தொகையாக அரசிற்கு வங்கிகள் செலுத்துகிறதா என்றால் இதுவும் மிகப்பெரியக் கேள்விக்குறியாகும். செப்டம்பர் மாதத்தில் மட்டும் வாராக்கடனாக 13,000 கோடி உரூபாய் அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு மாதாமாதம் பெருந்தொகைகள் வாராக்கடனாக இருக்கும்பட்சத்தில் வங்கிகள் மற்றும் அரசின் நிதி நிலைமைகளும் மிகப்பெரிய எதிர்விளைவுகளை சந்திக்கலாம் என்ற எண்ணமே மேலோங்குகிறது. வங்கிகளுக்குப் பிணையாகக் கொடுக்கப்பட்டுள்ள சொத்துகளை நிர்வகிக்க ஒரு தனி ஆணையம் உருவாக்கி அதன் மூலமாக வருவாய் ஈட்டினால் இந்தப் பிரச்சனைகளில் பாதியையாவது குறைக்க முடிவதோடு வங்கிகளுக்கும் வருமானம் வரும்.

இரயில்வேத்துறையும் நிதி ஒதுக்கீடும் குறித்த முழுமையான அறிவிப்புகளும் இல்லை. பிரதமர் மோதி அவர்களின் கனவுத் திட்டமாகிய புல்லட் ரயில் திட்டம், அதற்கான நிதி ஒதுக்கீடும், நூற்றுக்கும் அதிகமான இரயில்களின் வேகத்தை அதிகரிப்பதற்கான கட்டமைப்பை உருவாக்குவதற்கான நிதி ஆதாரங்களுக்கான அறிவிப்பும் இல்லை. ‘மேக் இன் இந்தியா’ திட்டத்தின் மூலமாக புல்லட் ரயில் திட்டம் செயல்படுத்துவதாக அறிவித்ததை ஜப்பானிய நிர்வாகம் நிராகரித்துள்ளதாகச் செய்திகள் வருகின்றன. இப்படி இந்த நிதிநிலை அறிக்கையில், ஆக்கப்பூர்வமான செயல்பாடுகள் ஏதுமின்றி, தெளிவற்ற சூழலே காணப்படுவது வருத்தம் அளிக்கக்கூடியதாகவே உள்ளது.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published.