பவள சங்கரி

அன்பிற்கினிய நண்பர்களே!

வணக்கம். கண்ணையும் கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்?

27498021_1549685795085614_956605116_n

நித்தி ஆனந்த் எடுத்த இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள். இதனை நம் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி சாந்தி மாரியப்பன் தேர்ந்தெடுத்து அளித்துள்ளார்.

இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை நல்ல தலைப்புடன் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் சனிக்கிழமை (03.02.2018) வரை உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர்குழு உறுப்பினரும் தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான திருமதி மேகலா இராமமூர்த்தி தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பலமுறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு, ஏற்கனவே சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப் பெற்றவர்களுக்கும் உண்டு.

ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி இது; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்குபெற அழைக்கிறோம்.

போட்டியின் நடுவரான திருமதி மேகலா இராமமூர்த்தி புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்தவர். கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்ற இவர், அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009, 2014, 2016ஆம் ஆண்டுகளின் (ஆர்லாண்டோ, அட்லாண்டா & மிசௌரி) கவியரங்கம், இலக்கிய வினாடிவினா நிகழ்ச்சிகளில் பங்கேற்றுப் பாராட்டுகளும் பரிசுகளும் பெற்றுள்ளவர். சங்கப் பாடல்களில் அதிக ஆர்வமும், இலக்கியக் கூட்டங்களிலும், பட்டிமன்றங்களிலும் சுவைபடப் பேசுவதில் வல்லமையும் பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடைபவளம்

பதிவாசிரியரைப் பற்றி

7 thoughts on “படக்கவிதைப் போட்டி (146)

 1. மாடுகளின் மாண்பு!!
  ======================
  செவலை மயிலையுன்னு
  எவ்வளவோ மாட்டினங்கள்
  அவ்வளவும் இன்னிக்கு
  அதிசயமாய் ஆயிடுச்சு
  நாட்டுப்பசும்பால் காயவச்சு
  புரை போட்ட தயிரு கடஞ்ச
  வெண்ணெயில நெய் எடுத்து
  வச்ச கையின் வாசம்
  வீதியிலும் மணமணக்கும்!!
  சீமையில இருந்து
  ஜெர்சி…சிந்துனு
  வந்ததுக்குப்பின்னால
  நாட்டுக்கன்னுக மேல
  நாட்டங்கொறஞ்சுபோச்சு!!
  இருக்கும் ஒண்ணு ரெண்டும்
  இப்பொவோ அப்பொவோனு
  அழிவ நோக்கிப்போயிட்டிருக்கு!
  கெடாரி நாலு பாதையில போறத
  பாக்கிறதில் மகிழ்ச்சி!!
  கட்டுத்தறி தவறாம
  நாட்டு மாடு வளர்க்க
  விவசாயிகள் அனைவருக்கும்
  விழிப்புணர்ச்சி வரவேணும்!!
  எருவுக்கு சாணம்
  மருந்துக்கு கோமியம்
  விருந்துக்குபால்மோர்தயிர்
  இத்தனையும் கொடுக்கிற
  உத்தமமான ஆவினத்தின்
  உருப்படிகள் பெருக வேணும்!!
  கால்நடைச் செல்வங்களை
  காப்பாற்றி வச்சாத்தான்
  அடுத்த தலைமுறைக்கும்
  அவைகளால் பயன்கிடைக்கும்!!
  மாடுகள் தானேனு
  மட்டமா நினைக்காம
  சாமியோட ரூபமுன்னு
  காமிப்போம் அகிலத்திற்கு!!
  ?????????????
  ஏ.ஆர்.முருகன்மயிலம்பாடி….
  பவானி..ஈரோடு…
  9442637264
  ?????????????

 2. எது இனிய வாழ்க்கை?
  ************************

  தென்னங்கீற்றில் கூரை வேய்த
  சின்னதாய் ஒரு ஓலைக் குடிசை!
  குடும்பத்தின் பசி போக்க
  குறைவிலா பயிர் வளர்நிலம்!

  நீருடைய என்றும் வற்றாத 
  நிலத்திடையே ஒரு கிணறு!
  அதைச் சுற்றி வளர்ந்த
  அழகான பத்து தென்னைமரங்கள்!

  பால்தரும் பசுமாடு இரண்டு – நிலத்தைப்
  பண்படுத்த எருதுகள் இரண்டு!
  பட்டியில் சில ஆடுகள்!
  பண்ணையில் சில கோழிகள்!

  வேலிபடர்ந்த பிரண்டை பசலை!
  சோளம் கம்பு திணைவகைகள்!
  செழித்துப் பெருத்த பயிர்வகைகள்!
  காலியாகாத தானியக் குதிர்!

  கொய்யா மாதுளை சப்போட்டா!
  குறையாது கிடைக்கும் முக்கனிகள்!
  பழுத்த பப்பாளி தக்காளி!
  பயன்தரும் நல்ல காய்கறிகள்!

  நிழலுக்கு ஒரு வேப்பமரம் – அதனடியில்
  அழகாய் ஒரு கயிற்றுக்கட்டில்!
  உழைத்த களைப்புக்கு பழங்கஞ்சி!
  பிழைப்புக்கு சிறிது பணம்!

  கையால் குத்திய அரிசி – சமைக்க
  களிமண்ணால் செய்த பாண்டங்கள்!
  அன்பைப் பரிமாறும் மனைவி!
  பண்பில் சிறந்த குழந்தைகள்!

  பக்கத் துணையாய் உறவுகள்!
  படுத்த உடனே உறக்கம்!
  இதைவிட இனிமை இனியுண்டோ?
  இப்பிறவியில் கிடைக்க வாய்ப்புண்டோ?

    – ஆ. செந்தில் குமார்.

 3. தொலைந்துப் போன கிராமம்
  °°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
  -ஆ. செந்தில் குமார்.

  இயற்கை வேளாண்மை போனஇடம் தெரியவில்லை!
  செயற்கை உரங்கலந்து நிலம்நஞ்சாவது ஓயவில்லை!
  சாதிக்கொரு வீதியென்ற சரித்திரந்தான் தொடர்கிறது!
  வீதிக்குத் தனிக்கோயிலென்ற வில்லங்கமும் இருக்கிறது!

  மலடாய்ப் போய்விட்ட செழிப்பான விளைநிலங்கள்!
  களையாய் ஆக்கிரமித்த சீமைக் கருவேலமரங்கள்!
  நெல்விளைந்த பூமியெல்லாம் கல்முளைத்த மனையாச்சு!
  கல்நட்ட கழனியெல்லாம் கண்கவரும் வீடாச்சு!

  வழிப்போக்கர் ஓய்வெடுக்கத் திண்ணைவைத்த வீடில்லை!
  எழிற்தோற்றம் கொண்டிருந்த ஏரியிலும் நீரில்லை!
  ஆட்டுக்கல்லும் அம்மியும் காண்பதெல்லாம் அரிதாச்சு!
  வீடுகளில் திருக்கை உரலுலக்கையனைத்தும் போயாச்சு!

  பனைமரங்களெல்லாமே அழிவின் விளிம்புக்கு வந்தாச்சு!
  சினையாக மாட்டுக்கு ஊசியே என்றாச்சு!
  நாதியற்றுப் போய்விட்ட நாட்டு மாட்டினங்கள்!
  சேதிசொல்லும் குட்டிச்சுவர் பழங்கால சரித்திரங்கள்!

  பெட்டிக் கடைகளிலும் மேநாட்டுத் தின்பண்டம்!
  பட்டி தொட்டியெல்லாம் விளம்பரக் கலாச்சாரம்!
  கிராமத்து இயற்கையெல்லாம் சிதைஞ்சு பலநாளாச்சு!
  சிரமமான சிக்கலான வாழ்க்கைமுறை என்றாச்சு!

 4. தேடியே…

  செல்வ மென்றே மாடதையும்
  சேர்த்துக் கொண்ட நம்முன்னோர்,
  இல்ல மதிலே ஓருறுப்பாய்
  இணைத்தார் நமது வாழ்வினிலே,
  புல்லும் மேய இடமின்றிப்
  போனதா லின்று கிராமத்தில்,
  செல்கிறார் மாந்தர் மாட்டுடனே
  சேர்ந்தே தேடிட பிழைப்பினையே…!

  -செண்பக ஜெகதீசன்…

 5. அனைத்துயிர்க்கும் அவனே நண்பன்..!
  ===================================

  அதிகாலையில் ஆதவன் தோன்றுமுன் அவனெழுவான்..
  ……….ஆடுமாட்டைத் தன்பிள்ளையெனப் பேணிக் காப்பான்.!
  கதிரவனைத் தொழுதபடி ஏருழுவான் ஏற்றமிறைப்பான்..
  ……….கதிர்நெல்லைக் காணவயல் களத்திலே கடுமுழைப்பான்.!
  நதிதீரம் நாடியேயிவர்கள் வாழ்க்கையாம் தன்னலமின்றி..
  ……….நானிலத்துக்காக உழைத்து உலகுக்கே நண்பனாவான்.!
  விதியேயெனக் காலமுழுதும் கடமையாற்றும் நற்பண்பு..
  ……….விதிமாற்றத்தால் கண்ணீர் விட்டுக் கலங்குகிறானின்று.!

  உதிரத்தை வியர்வையாக்கி உழைக்கின்ற வர்க்கம்தான்..
  ……….ஊராரும் உணவுக்காக நம்பிவாழும் உயருழவன்தான்.!
  எதிரிகளென்றால் இயற்க்கையின் சீற்றம்தான் அதிகம்..
  ……….என்றைக்கு மோருயர் நிலையில்லாத வாழ்க்கைதான்.!
  நிதிப்பற்றாக்குறை என்பதெப்போது மிருக்கும்! அவன்..
  ……….நிலத்தைச் சீர்படுத்தி விளைபயிர் செழிக்கவே!..இவன்..
  குதிகால் குவலயத்தில் பதியாவிட்டால்?..ஒருவேளைக்..
  ……….கூழுக்கும் கஞ்சிக்கும் சோற்றுக்கும் கடும்பஞ்சம்தான்.!

  அனைத்துத் தொழிலுக்கும் முதலானது உழுதொழில்..
  ……….அனைத்துலக ஜீவிகளுக்கும் உழவனே நல்நண்பன்.!
  நினைவில் கொள்ளுவீர் நீர்! அறிவியல் வளர்ந்தாலும்..
  ……….ஆருமுணவின்றி வாழ்தலியலா தென்பது இயற்கை.!
  பனைமரத்தை வளர்க்காமலே பலருக்கும் பயன்தரும்..
  ……….பாருலகுக்கு அதுபோல நீரும்நிலவளமும் பலன்தரும்.!
  வினைசெய்யும் வஞ்சகத்தார் இன்று விளைபயிரழித்து..
  ……….விளை நிலைத்தையும் வீட்டுமனையாக்கி விட்டனரே.!

 6. அழகிய கிராமம்
  ******************
   -ஆ. செந்தில் குமார்.

  கருக்கல்லில் கண்விழிப்பர்! கழனிக்குச் சென்றுழைப்பர்!
  மாடுகன்று ஓட்டிக்கொண்டு மேய்ச்சலுக்குச் சென்றிடுவர்!
  தொழுவத்தைத் தூய்மைசெய்து வாயிலில் சாணந்தெளிப்பர்!
  அழகான மாக்கோலம் வீட்டிற்கழகுசேர்க்க இட்டிடுவர்!
  எருக்குழியை ஏற்படுத்தி தொழுவுரத்தைச் சேகரிப்பர்!

  வயற்காட்டில் உழைப்போர்க்கு பசியாறக் கூழிருக்கும்!
  மற்பாண்டச் சமையல்தனை நினைத்ததுமே நாவூறும்!
  நுங்கும் இளநீரும் வெய்யிலுக்கு இதமளிக்கும்!
  பனையோலை விசிரியுந்தான் சாமரமாய்க் காற்றளிக்கும்!
  பனைநார்க் கட்டில்களும் பஞ்சுமெத்தைப் போன்றிருக்கும்!

  பச்சைப் பட்டாடை போன்றிருக்கும் வயல்வெளி!
  வயல்களைப் பிரித்திருக்கும் வரப்பென்ற இடைவெளி!
  அதிகாலைப் பொழுதினிலே நனைத்திருக்கும் பனித்துளி!
  செங்கதிரோன் உதயத்திலே சிவந்திருக்கும் வான்வெளி!
  இத்தகு கிராமமே சிங்காரச் சமவெளி!

  பனையோலைக் குடிசையெல்லாம் எளிமையினைப் பறைசாற்றும்!
  ஐய்யனார் கோயிலெல்லாம் பக்தியின் திடங்காட்டும்!
  முதியோரின் பேச்செல்லாம் வெள்ளந்தி மனங்காட்டும்!
  மக்களின் மனதெல்லாம் மாட்டிடமும் பாசங்காட்டும்!
  இத்தகு கிராமத்திலே இருப்பதுவேநம் மனதின்நாட்டம்!

 7. பொட்டு வச்ச நெத்தியில பூமாலை ஒண்ணு சுத்தி
  தொட்டுக்கிட்டுப் போறதுக்கும், தோழியரைச் சேத்து வச்சி
  எங்க கொண்டு போறீங்க எஜமான் மாருகளே – எங்கள
  எடை போட்டு விற்பதற்கா எஜமான் மாருகளே!

  கொம்புக்கு எடை கழிச்சி குழம்புக்கும் எடை கழிச்சி
  இம்புட்டுத்தான் மிச்சமென்பார் யாவாரி மாரே –அத
  ஏத்துக்கிட்டுப் போவிகளோ எஜமான் மாருகளே

  தோலைக் கழிச்சிப்பிட்டுத் தோராய நிறைபோட்டு
  மேலே ஒண்ணும் தேறாதெம்பார் யாவாரி மாரே –காச
  வேண்டிக்கிட்டுப் போவிகளோ எஜமான் மாருகளே

  காலம் முழுதுமுங்க காலடியிலே கிடந்து
  பாலூத்திக் கொடுத்ததுக்கு எஜமான் மாருகளே–உங்க
  பரிசு இதுதானோ எஜமான் மாருகளே

  ஓரத்திலே எங்காச்சும் உயிர் பிரிஞ்சு போம் வரைக்கும்
  பாரங் கொடுக்காம எஜமான் மாருகளே – நாங்க
  படுத்தாலும் பயன் தருவோம் எஜமான் மாருகளே.

  கொல்லக் கழுத்தறுத்து குருதி கொட்டி நாங்க விழ
  அல்லாஹு அக்பரென்று தக்பீர் செய்கையிலே –அத
  அருகிருந்து பார்ப்பீகளோ எஜமான் மாருகளே!

  நாங்க தந்த பால் குடிச்ச நம்மூட்டுப் புள்ளைங்கள
  ஓங்க வச்சு உயர்த்திடுங்கோ எஜமான் மாருகளே –எங்க
  உயிரதுக்குப் பயன்படட்டும் எஜமான் மாருகளே.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.