படக்கவிதைப் போட்டி 144-இன் முடிவுகள்
-மேகலா இராமமூர்த்தி
இதழ்களில் குமிண் சிரிப்போடு மாலையை உயர்த்திப் பிடித்திருக்கும் இந்தக் காளை அதனைச் சூட்டப்போவது யாருக்கு? ஆண்டாளைப் போல் ஆண்டவனுக்கா? இல்லை தன் மனம் ஆண்டவளுக்கா?
இந்தப் புகைப்படத்தை எடுத்த திரு. லோகேஷ்வரன் ராஜேந்திரன், இதனைப் படக்கவிதைப் போட்டிக்குத் தெரிவுசெய்து தந்த திருமதி. சாந்தி மாரியப்பன் இருவருக்கும் என் நன்றிகள் உரித்தாகின்றது!
இனி, காளையின் கையிலிருக்கும் மாலை யாருக்கு? என்பது குறித்த தம் சிந்தனையின் விளைச்சலைச் சமர்ப்பிக்க வருகின்றார்கள் கவிஞர்கள்; அவர்களை வரவேற்போம்!
*****
பட்டணத்து மாப்பிள்ளைக்கு மாலையிட வரிசைகட்டும் மக்கள், பட்டிக்காட்டு மாப்பிள்ளை என்றால் எட்டிப்போகும் வேதனையைச் சுட்டிக்காட்டுகின்றார் திரு. ஏ.ஆர். முருகன்.
மாலை சூட நான் ரெடி!
மணமகளே நீ எங்கடி??
சலிச்சுப்போனேன் தேடி
களச்சுப் போனேன் போடி!!
கேக்குறாங்க வேல வெட்டி
விரட்டுறாங்க விவசாயிங்காட்டி!!
பட்டம் படிச்சுப்புட்டு
பட்டணத்திலுக்காந்துட்டு
பத்தாத சம்பளம்னாலும்
பரிசம் போடுறாங்க!!
பட்டிக்காட்டுப் பூமியில
பக்குவமா உழுது
பணம்நிறையச் சம்பாதிச்சாலும்
மணம் முடிக்க மார்க்கமில்லே!!!
பொண்ணு ஒண்ணு கொடுத்தா
பூமாதிரிப் பாத்துக்குவேன்!!
பொறுப்பான பையனுக்குப்
பொண்ணுக்கொடுக்க யாரிருக்கா???
*****
வேலை தேடும் வயதினில் மணமாலை சூட எண்ணினால் இன்பச் சோலையன்று வாழ்க்கை; வறண்ட பாலையே! என எச்சரிக்கிறார் திரு. செண்பக ஜெகதீசன்.
முதலில் வேலை…
வேலை தேடிடும் வயதினிலே
வெற்றி காண எண்ணாமல்,
மாலை தன்னைக் கையிலேந்தி
மணமகள் தேடி யலைந்தாலே,
சோலை யாகும் வாழ்வதுவும்
சொல்ல வியலா வகையினிலே
பாலை யாகிப் பயன்தராதே
போயிடும் படித்த வாலிபனே…!
*****
”ஆசிரியர்க்கோ, தலைவர்க்கோ, அன்னைக்கோ, தந்தைக்கு தேவையில்லை இந்தப் பூமாலை! உன் மனங்கவர்ந்த பாவைக்கே இது தேவை! ஆதலால் அன்பும் காதலும் பரிவு புரிதலும் கலந்து சூட்டிடு பூமாலையை மகிழ்ந்து!” என்று வாழ்த்துகின்றார் திரு. பழ. செல்வமாணிக்கம்.
யாருக்கு இந்த மாலை!
புன்னகையுடன் ஓர் இளங் காளை!
கையில் கட்டி வைத்த மலர் மாலை!
யாருக்குச் சூட்டப் போகிறாய் இந்த மாலை!
உனக்குப் படிப்பு சொல்லிக் கொடுத்த
ஆசிரியருக்கா இந்த மாலை!
அவர் சொல்லித் தந்தபடி வாழுகின்ற வேளை
தேவையில்லைஅவருக்கு இந்த மலர்மாலை!
நாம் வாழ, தன் வாழ்வை தியாகம் செய்த
தலைவருக்கா இம் மாலை!
அவரைப் போல பிறருக்கு நன்மை செய்யும் வேளை
தேவையில்லை அவருக்கு இந்த மலர் மாலை!
நமக்கெல்லாம் உணவு தரும்
உழவருக்கா இம் மாலை!
விளை நிலத்தை,மனை நிலமாய் மாற்றாத வேளை
தேவையில்லை அவருக்கு இந்த மலர் மாலை!
உனை கருவில் சுமந்து உடலும்,உயிரும் தந்த
உன் அன்னைக்கா இம் மாலை!
உன்னோடு அம்மாவை வைத்திருந்து சீராட்டும் வேளை
தேவையில்லை அவருக்கு இந்த மலர் மாலை!
உடலாலும், மனதாலும் உனைச் சுமந்த
உன் தந்தைக்கா இம் மாலை!
அவர் சுமையை நீ சுமக்கும் வேளை
தேவையில்லை அவருக்கு இந்த மலர் மாலை!
அன்னை, தந்தை, தன் சுற்றம், தன் வீடு
அத்தனையும் உனக்காக விட்டு வரும்
மணப் பெண்ணுக்கா இம் மாலை!
மலர்களால் சரம் தொடுத்த இந்த மாலை!
நீ தரப் போகும் அன்பு, பரிவு, காதல், புரிதல்,
நட்பு என்ற மலர்களை சுட்டிக் காட்டும் அழகு மாலை!
*****
”சோலையில் பலவண்ணத்தில் பூக்கின்ற நாங்கள் யாவரும் மாலையில் சேர்ந்தாலே மதிப்பு! நிலவுலகில் நிகழ்கின்ற விழாக்கள் அனைத்திலும் எமக்கே தலைமை என்பதே எம் சிறப்பு!” என்று பூமாலையைப் பாமாலை பாடவைத்திருக்கின்றார் பெருவை திரு. பார்த்தசாரதி.
மலர்மாலையின் பாமாலை..!
மாலையிலே வானில்மறையும் கதிரவனின் மதிமயக்கும்…
……….மனதைக்கவரும் சிவப்பழகைக் கண்குளிரக் காண்பீர்.!.
காலையிலே மறைகின்ற வெண்ணிலவின் வெளிச்சமும்…
……….கருநீலத்தில் விடை பெறுமழகையும் கண்டுகளிப்பீர்.!.
ஓலைக்கீற்றுகள் ஒன்றோடொன்று உரசியெழுப்பும் கீத…
……….ஒலியில் புள்ளினங்கள் சேர்ந்து பாடுவதை ரசிப்பீர்.!.
மாலையிலே சேர்கின்றபல வண்ணமிகும் மலர்களின்…
……….மனமீர்க்கும் வாசனையைக் கண்டுணர்ந்து நுகர்வீர்.!.
.
ஒருசோலையிலே பலவண்ண நிறத்தில் மலர்ந்தாலும்…
……….ஒன்றான மாலையாகச் சேர்ந்தால்தான் மதிப்பாகும்.!.
பெருமானின் தலையிலோ காலடியிலோ கிடந்தாலும்…
……….பெருமை தானெங்களுக்கு சிறுமையில்லை அவனின்…
கிருபையால் எமக்கெங்கு சென்றாலும் பெருமைதான்…
……….கருணைக்கும் அன்புக்கும் அடையாளச் சின்னம்!யாம்.
தரும் சுகத்திற்கோர் எல்லையுமுண்டோ இவ்வுலகில்…
……….தாரணியில் நிகழும் எவ்விழாவிற்கும் யாம்தலைமை.!
*****
”தம்பி! அன்பில் வசப்படும் மங்கைக்கு மாலையிடு; அந்த ஆண்டவனுக்கு மாலையிடு; விளையாடிப் பெருமை சேர்க்கும் வீரருக்கு மாலையிடு! அது பொருத்தம்! அதைவிடுத்துக் கூத்தாடிகளின் கட்டவுட்டுக்கெல்லாம் மாலையிட்டுக் கோமாளியாகாதே! அது தந்திடும் வருத்தம்!” என்கிறார் திரு. எஸ். கருணானந்தராஜா.
யாருக்கு மாலை?
மாலையிடு தம்பி மாலையிடு
மணவாட்டி கழுத்தினிலே மகிழ்வோடு மாலையிடு
ஆலயத்தில் இறைவனை நீ அர்ச்சித்து மாலையிடு
கோலமிடு விளக்கேற்று குப்பை களைப் பொறுக்கு.
வீரனாய் வெற்றி பெற்று விளையாட்டுப் போட்டிகளில்
வீதி வலம் வருகின்ற விண்ணர் களைப் போற்றி
மாலையிடு தம்பி மாலையிடு – அவரை
மகிழ்வித்து ஊக்குவிக்க மாலையிடு.
ஆத்தா இடுப்பிருந்த அரைக்காசை முடிச்சவிழ்த்து
கூத்தாடி படம் ஓட, குடத்திலே பால் வாங்கி
ஊத்தாதே கட்டவுட்டில் ஒரு முழமும் பூ வாங்கிச்
சாத்தாதே கண்ணா! வீண் தறுதலையாயாகாதே.
கூத்தாடிக் குந்தி நெளிப்பவரைச் சேவித்தல்
ஆத்தாதவர் தொழிலாம் அவரையெலாம் போற்றி
ஏத்தாதே ஐயா! எமக் கெதற்கு வீண் வேலை.
படம்நூறு நாளோட பக்திப் பரவசத்தில்
மண்ணிலே சோறிட்டு மடையனைப் போல் உண்ணாதே
கண்ணா உனக்காகக் காத்திருக்கு உன் குடும்பம்
எண்ணு அதை! மூட இரசிகனெனும் பேர் வேண்டாம்.
கோயில் சிலைகளுக்குக் குடம் குடமாய்ப் பாலூற்றும்
கொடுமைதனை ஆண்டவனே சகிக்க மாட்டான்
கூத்தாடிக் கட்டவுட்டைக் கும்பிட்டு மாலையிடும்
கோமாளித் தனந்தன்னை மன்னிப்பானா?
மாலையிடு தம்பி மாலையிடு
மணமகளாம், வரப்போகும்
மனைவிக்கு, மாலையிடு
ஆலயத்தில் இறைவனுக்கு,
அழகு செய்ய மாலையிடு
அசகாய சூரர்களாம்
விளையாட்டு வீரருக்கு
அழகான மாலைகட்டி
அகமகிழ மாலையிடு.
*****
யாருக்கு மாலையிட வேண்டும்? எப்போது மாலையிட வேண்டும்? என்று இளைஞனுக்குப் பக்குவமாய் வழிகாட்டிய கவிஞர்களுக்குப் பாராட்டும் நன்றியும் சேரட்டும்!
இவ்வாரத்தின் சிறந்த கவிதை இனி…
மாலை சூடும் மணாளன்
*****************************
இல்லறம் நடத்த உரிய பருவமெய்தி
இல்லாள் ஆகக் காத்திருக்கும் நங்கை!
இதயத்தைக் கவர்ந்த நாயகனைக் கண்டு
இனிய முகம் நாணுகின்ற மங்கை!
நல்லெதிர் காலமதை மனதிற் கொண்டு
நல்லாளை மாலையிடும் நாயகனின் செங்கை!
நல்லோர் காட்டிய அறவழியில் பொருளீட்டி
நல்வழியில் காத்து நின்றால்தான் உவகை!
தான்தேடிக் கண்டவுணவுப் பண்டம் சிறிதெனினும்
தன்னினத்தை மறவாது அழைக்கின்ற காக்கை!
போற்றப்படும் நற்பண்பாம் என்றும் அது
போன்றிருக்க வேண்டும் உங்கள் வாழ்க்கை!
பெற்றோரை மறந்து பிறந்தகத்தைத் துறந்து
பெற்ற பேறாக உனைக்கருதும் பதுமை!
உறுதியுள மனமோடு இறுதிவரை உன்னோடு
உற்றத் துணையென இருப்பது அருமை!
பிறழாத நெறியோடு மாறாத அன்போடு
பிரியாமல் வாழ்வதே என்றும் இனிமை!
இல்லாத நிலையென்று ஒன்று வந்தாலும்
இயன்றவரை வைத்துத் தாங்கட்டுமுனது அங்கை!
தள்ளாத நிலையென்று ஒன்று வந்தாலும்
தோள் கொடுத் துதவுவதே இயற்கை!
கள்ளமற்ற முகத்தாளை மறவாமல் ஒருபோதும்
காப்பதுவே உன் தலையாயக் கடமை!
இல்லறம் எனும் நல்லறத்தை மாலையிட்டுத் தொடங்கும் மணாளனும் மங்கையும், அன்பும் அறனும் உடையோராய் வாழ்ந்தால் அதுவே இல்வாழ்வின் பண்பும் பயனுமாக இருக்கும் என்பது வாழ்வியல் அறிஞர் வள்ளுவரின் கருத்து.
அதே வகையில்,
”பிறழாத நெறியோடு மாறாத அன்போடு
பிரியாமல் வாழ்வதே என்றும் இனிமை”
இல்லாத நிலையென்று ஒன்று வந்தாலும்
இயன்றவரை வைத்துத் தாங்கட்டுமுனது அங்கை!” என்று மணாளனுக்குப் புத்திசொல்லும் இக்கவிதை, நற்சிந்தனைகளுக்கான விதை! அதைப் பாராட்டி இக்கவிதையின் படைப்பாளி திரு. ஆ. செந்தில்குமாரை இவ்வாரத்தின் சிறந்த கவிஞர் என அறிவிக்கின்றேன்.
இந்த வாரத்தின் சிறந்த கவிதையாகத் தேர்ந்தெடுத்த நடுவர் அவர்கட்கு நன்றி.
கவிஞர்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்.