படக்கவிதைப் போட்டி 156-இன் முடிவுகள்
-மேகலா இராமமூர்த்தி
திரு. பார்கவ் கேஷவ் எடுத்த இந்த ஒளிப்படத்தை இவ்வாரப் படக்கவிதைப் போட்டிக்கான படமாகத் தெரிவுசெய்து தந்தவர் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி. சாந்தி மாரியப்பன். இவர்கள் இருவருக்கும் என் நன்றி!
இருளும் ஒளியும் இணைந்த இந்த வண்ணக் கலவை, பல்வேறு எண்ண அலைகளை நம் மனக்கடலில் எறிகின்றன. காரிருளும் பேரொளியும் இணைந்து ஒரு நாளை அமைப்பதுபோல், மகிழ்வெனும் ஒளியும் இடுக்கண் எனும் இருளும் இணைந்தே நம் வாழ்வைச் சமைக்கின்றன. ஆதலால் ஒளியைப் போலவே இருளையும் இரசிக்கக் கற்றுக்கொள்வது மனித வாழ்வை மாண்புறச் செய்யும்.
இனி, இந்த அழகோவியத்துக்குத் தம் கவிதையால் அணிசெய்யக் கவிஞர் குழாத்தை அழைக்கிறேன்.
*****
”வெட்டவெளிக்கருமையை விரட்டத் திட்டமிட்டு வந்திருக்கும் வெண்ணிலவின் வெளிச்சம் மண்ணுலகின் மகுடம்! சந்திரனில் மாந்தன் கால்பதித்தபின்புங்கூட அண்டத்தின் ஆதி அந்தத்தை அவனால் அறியக் கூடவில்லை” என வியக்கிறார் திரு. ஏ.ஆர்.முருகன் மயிலம்பாடி.
சந்திரபிம்பம்!!
வெய்யில் மங்கி இரவுவர
வெட்டவெளிக்கருமையை
விரட்ட வந்து ஒளிபாய்ச்சும்
வெண்ணிலவின்வெளிச்சம்
மண்ணுலகின் மகுடம்!!!
கண்ணுறங்கும் நேரத்திலே
விண்ணிருந்து காட்சிதரும்
வதனத்துச் சந்திரனின்
வரவினுக்கேங்கி நின்ற
நிலமகளுக்குள்ளாறே
நிழல்படிமம் நிஜம் போல!!
அதனியக்கம்கடவுள்ரூபம்!
ஆகாயச் சேதி சொல்ல
ஆனந்தமாய் ஓடி வந்து
அறிவிக்கும் நிலவுக்குள்ளும்
அடியெடுத்து வைத்தாச்சு!!
ஆனாலும்அண்டசராசரத்தின்
ஆதியென்ன? அந்தமென்ன??
அறுதியிட இயலவில்லை…
நூலிலை மாறாது இயங்குகிற
நுட்பத்தினால் வையகத்தை
வழிநடத்தும் இயற்கையன்னை
எழில் வாழி!! எப்போதும்தப்பாது
இயக்கும்இறை நீடு வாழி!!!
*****
வானத்து இளவரசன் விட்டெறிந்து விளையாடும் வண்ணத் தட்டு இந்தச் சூரியன்! உயிர்கட்கு ஆதாரமான நீயே எங்கள் சாமி; உன் சேயே இந்த பூமி என ஞாயிற்றைப் போற்றுகின்றார் திருமிகு. சக்திப்ரபா.
சூரியகாந்தி
வானத்து இளவரசன்
இங்குமங்கும் வீசி விளையாடும்
வட்டத்தட்டு
மஞ்சளாய்ச் சிதறிப் பூவலம் முடித்து
செம்மஞ்சளாகிச் சாயம் போகும்
சாகசக்காரன்!
நீர் நிலைகளில் பிம்பமாகி மிதக்கும்
குளிர்-நிலா
வெண்மேகத் திரைச்சீலையின்
பின்னால் கண்ணாம்பூச்சியாடும்
மாயத்திரள்!
மேகங்களுக்கு அப்பால் ஒளிரும் நம்பிக்கை
வானெங்கும் தங்கமெனப் பரவியிருக்கும்
பிரபஞ்ச ஜோதி!
கருமேகங்கள் கடத்திப் போயிருக்கும்
மெய்ப்பொருள்
உதிப்பதும் பின் மறைவதுமாய்
கேளிக்கும் காதலன்
பரிமாணங்கள் பல அணிந்தாலும்
உயிர்கட்கு ஆதாரமாகிச்
சோறூட்டிச் சீராட்டும்
நீயே எங்கள் சாமி – உன்
சேயே இந்த பூமி!
*****
சூரியன் எனும் வானக்கூரையின் வண்ணவிளக்கு, நம் கண்களுக்குப் படைக்குதே ஒப்பற்ற விருந்து. இருளும் ஒளியும் ஒருங்கே தெரிவது இறைவன் உறையும் மனத்தின் காட்சியோ? என்று இயற்கையை இறையோடு பொருத்திப் பார்க்கிறார் திரு. ஆ. செந்தில்குமார்.
அவ்விடத்தில் தெரிந்த அந்தி வானம்….!
வானக் கூரையின் வண்ண விளக்கு…
காணக் கண்களுக்கு படைத்தவோர் விருந்து…!
கொண்டல்கள் நுரையாய்ச் செங்கடல் வானில்..
தென்படும் காட்சி தெவிட்டாத அமுது…!
அலைபேசிக் கோபுரமொன்று ஒய்யாரமாய் நின்று…
தொலைவானும் தொட்டுவிடும் தூரமேயென்குது போலும்…!
நிலையாய் நிற்கின்ற காற்றாலை விசிறிகள்…
அலையலையாய் வீசும் காற்றுக்கேங்குது போலும்…!
கடல்போல் தெரிந்த ஏரிகள் குளங்கள்…
சடம்போல் மனதினைக் கொண்ட மனிதரால்…
பரப்பில் சுருங்கிக் குட்டையாய்க் குறுகி இருக்கின்றபோதும்…
நிறைவாய்த் தெரிந்தது ஆதவனின் பிம்பம்…!
செம்மையும் கருமையும் ஒருங்கே தெரிவது…
இம்மையும் மறுமையும் இங்குதான் என்குது…!
இருளும் ஒளியும் ஒருங்கே தெரிவது…
இறைவன் உறையும் மனமே என்குது…!
*****
”தண்ணொளி வீசும் வெண்ணிலவே! கார்முகில் உனை மறைத்தாலும் அதிலும் காட்டுகிறாய் ஓர் எழில்! காதலர்களுக்கு நீயே ஓவியம்; உனைக்கண்டு அவர்கள் படைப்பர் காதல் காவியம்” என்கிறார் திரு. ரா. பார்த்தசாரதி.
வெண்ணிலவே!
மயக்கும் மஞ்சள் வெய்யில் பரவி நின்றதே
தன் ஒளியை நீரிலும் மேகத்திலும் பாய்ச்சுதே
கருமேகங்கள் இடையே மறைந்து காணுதே
தண்ணொளி வீசி வெண்ணிலவாய்க் காட்சியளிக்குதே!
இனிய மாலைப்பொழுதில் தென்றலாய் வீசுகின்றாய்
காதலர்களுக்கு இன்ப உணர்ச்சியை ஊட்டுகின்றாய்
எங்களுக்காகக் காற்றாலை இயக்கி மின்சாரம் அளிக்கின்றாய்
நாட்டிற்கும், வீட்டிற்கும் ஒளிதந்து உதவுகின்றாய்!
கைம்மாறு கருதாது இனிய இரவைக் குளிர்விக்கின்றாய்
கருமுகில்கள் உன்னை மறைத்தாலும் ஒளி தருகின்றாய்
மேகங்கள் இடையே எழில் ஓவியமாய்க் காட்சியளிக்கின்றாய்
நீரில் உன்முகம் ஒளி பிம்பமாய்த் தெரிகின்றாய்!
அந்தி வானமே இரவின் எழிலோவியம்
உன்னைக் கண்டு காதலர்கள் பாடுவதோ காதலோவியம்
தாரகையோடு இருந்து தனித்தே அழகாய்க் காண்கிறாய்
காதலியை வர்ணிக்க நீயே எடுத்துக்காட்டாய் இருக்கின்றாய்!
*****
”மனத்தில் ஏற்றுவோம் மனிதமெனும் தீபம்; அதில் பொசுங்கிப் போகட்டும் சுயநலமெனும் பேதம்” என்று நல்லுரை நவில்கின்றார் திரு(மிகு?). ஜீவா நாராயணன்.
மனிதமென்னும் தீபம்
எங்கும் உதிக்கின்ற சூரியன்
ஒன்றே தானாகும்
எங்கும் விரிகின்ற பூமி
ஒன்றே தானாகும்
உறக்கங்கள் வேறு
கனவுகள் ஒன்றே தானாகும்
இலக்குகள் வேறு
இலக்கங்கள் ஒன்றே தானாகும்
மொழிகள் வேறு
மனங்கள் ஒன்றே தானாகும்
இங்கு எல்லா
உயிர்களும் ஒன்றே
இந்த ஒற்றுமை
காணவதே நன்று
மனசிலே ஏற்றுவோம்
மனிதமென்னும் தீபம்
இதில் பொசுங்கிப்போகும்
சுயநலமென்னும் பேதம்
உதிக்கட்டும் நாளை
புதிதான விடியல்!
பிறக்கட்டும் நாளை
முறையான மாற்றம்!
*****
மின்சாரம் இல்லா நிலவுலகம் பெரும் விசாரம் தருகின்றது மாந்தர்கட்கு! அவ்வேளையில் ஏற்படும் அல்லல்களை நகைச்சுவையாகப் பட்டியலிட்டு நம்மை இரசிக்கவைக்கிறார் திரு. சி. ஜெயபாரதன்.
கனல் சக்தி, எரிசக்தி, மின்சக்தி
வீட்டில் மின்விளக்கு யாவும்
கண்மூடி விட்டன!
தேர்வுக்குப் படிக்க முடியாது!
மின் விசிறியும்
விழித்துக் கொண்டு நிற்கிறது!
எழுந்து கொண்ட பேபி
அலறல்
செவிப்பறை கிழிக்குது!
மிக்ஸிக்கு
மூச்சுப் போய் விட்டது!
மாவரைக்க
முடியாமல் போச்சு!
மின்சக்தி இன்றேல், வீட்டில்
நாட்டில் எல்லாம்
வேலை நிறுத்தம் தான்!
சூரியன்
ஊழியம் செய்து
விடை பெற்றுப் போகுது!
காற்றாடி களுக்கும்
கை ஓய்ந்து
கரன்ட்டில்லையே
பராபரமே!
ஓலை விசிறி எடப்பா !
அரிக்கேன்
விளக்கைத் துடைப்பா!
*****
”பணிமுடித்துத் தன் ஒளிமுகத்தை நீர்நிலைக் கண்ணாடியில் பார்த்துப் பரவசமடையும் கதிரவனே! வேலையில்லாச் சோம்பேறி மனிதர்கள் வாழ்ந்திட வழிசொல்லுவாய்” என்று வினவுகின்றார் திரு. செண்பக ஜெகதீசன்.
நீயே சொல்…
காலையில் கிழக்கே பணிதொடங்கி
காசினி முழுதும் ஒளிகொடுத்து,
மாலை வானை அழகாக்கி
மண்ணில் நீர்நிலை முகம்பார்த்தே
மேலைக் கடலில் பணிமுடிக்கும்
மேன்மை மிக்கக் கதிரவனே,
வேலை செய்யா மனிதரவர்
வாழ்ந்திட வழியைச் சொல்வாயே…!
*****
அந்தி அத்தமிக்கும் நேரம், சந்திரனும் சூரியனும் காதல் புரியும் நேரம்! அக்காதலர்களை வரவேற்க விண்மீனும் நீரிலிடும் கோலம் என்று வானிடை நிகழும் வண்ணக் காட்சிக்கு அழகாய் எண்ணத் தூரிகை தீட்டுகின்றார் பெருவை திரு. பார்த்தசாரதி.
அந்திப்போது..!
அந்திசாயும் நேரத்தில் மட்டுமே வருவாள்
……….ஆதவனைத் தேடும் பணிமேற் கொள்வாள்..!
மந்திரம் செய்வித்தது போலவன் மறைவான்
……….மாற்றமிலாமல் நிகழும் நித்தமிது இயற்கை..!
சந்தி ரோதய மென்றவளை அழைப்போம்
……….சூரிய அஸ்தமன மென்றவனைக் கூறுவோம்..!
சந்திரனும் சூரியனும் காதல்செய்யும் நேரம்
……….செவ்விதழ் போலக் கடலேழும் காட்சிதரும்..!
காலையில் ஆதவனும் இரவினில் சந்திரனும்
……….காலமாற்றம் செய்கின்ற காதலர்கள் ஆவரோ..!
மாலைத் தென்றலும் மலர்ச்சோலை புகுந்து
……….மணம் வீசும்! அக்காதலர்களை வாழ்த்துதற்கு..!
கோலமிட்டு அவர்களை வரவேற்பது போல்
……….கடலில் விண்மீனும் தண்ணீரில் புள்ளியிடும்..!
பாலமாக அமையும் அங்கே அந்திப்போது
……….பாங்காக அவர் களிருவரும் சந்திப்பதற்கு..!
*****
”காற்றாலைகள் கவரி வீச, கார்முகில்கள் தாரெடுத்து வாழ்த்திவர, மக்களும் மாக்களும் தொழுதெழ, நித்தமும் நடக்கும் காய்கதிர்செல்வனின் நித்திரை ஒத்திகை இது!” என்று புளகிக்கிறார் திருமிகு. அவ்வைமகள்.
ஒருகாலமன்றிது நித்திய நாளீட்டு நித்திரைக்கலை ஒத்திகை!!
கருத்திரையுமொளித்திரையும் ஒருமியே விழித்து உறைந்திடுமப்போதிலே
பருத்திரையுள் புகுந்த கதிர் நீரிலுறை விளம்பிட நித்திலத்துகிலாகுதோ?
மேருவெனவசையாமல் நிற்கிற விசிறிகாள் சாமரமங்கு வருதோ?
மருமலரெடுத்துவோ நெடியமுகிலேழும் தாரேந்தி வாழ்த்தும் வலமோ?
பெருமண்ணே விணாதியாய் மெய்மொழிக்கூறுதோ திருவிக்ரமக்கோபுரம்?
பருதிமதி பருதியும் பாரும் கடல்விசாலமும் பூராயன் இல்விலாசமோ?
திருமருகத் தாவரப்பட்சியும் மாக்களும் மக்களும் தொழுதெழுந்து விரைக!
ஒருகாலமன்றிது நித்திய நாளீட்டு நித்திரைக்கலை ஒத்திகை!!
*****
இருளும் ஒளியும் கலந்த இக்காட்சிக்குக் கவிஞர்கள் தம் கற்பனையால் ஒளியூட்டி அற்புதமாய்க் கவி படைத்துவிட்டார்கள். அவர்களுக்கு என் பாராட்டுக்கள்!
அடுத்து வருவது இவ்வாரத்தின் சிறந்த கவிதையென நான் தேர்ந்தெடுத்தது…
இரவா…? பகலா….?
என வியக்கும்
மயங்கொலிப்
பிழை….
கார்மேகத்தின்
மடியில்
கதிரவனின்
கிரணங்கள்
கண்ணுறங்கும்
தாய்மைக் கோலம்…!
இரவுக்கும் பகலுக்கும்
இடையிலான
எழிலோவியம்…!
வான்மேகம்
புகையுண்ட
ஓவியமாய்
எழில்கொண்ட காட்சி…!
விண்மீனை
வரவேற்கும்
அந்தி வானத்தின்
சிவப்புக் கம்பள
வரவேற்பு!
இருளும் ஒளியும் இணைந்து இரவா? பகலா? என மருளவைக்கும் இக்காட்சியில், வான்மேகம் கைபுனைந்து இயற்றாக் கவின்பெரு வனப்பாய்க் காட்சிதர, விண்ணிலே தோன்றவிருக்கும் உடுக்களுக்கு அந்தி வானம் செந்நிறக் கம்பளம் விரித்து வரவேற்புக் கொடுக்கின்றது என்று சுவையாகப் பாடல் புனைந்திருக்கும் திருமிகு. டி. திலகவதியை இவ்வாரத்தின் சிறந்த கவிஞரென அறிவித்துப் பாராட்டுகின்றேன்.