-மேகலா இராமமூர்த்தி

பலவண்ணங்களைச் சிதறடித்துச் சாலம் காட்டும் இந்தப் புகைப்படத்திலிருப்பது மலரா? இலையா? என்று மலைக்கவைக்கிறது இதனைப் புகைப்படம் எடுத்திருக்கும் கலைத்திறன்! இப்படத்தை இவ்வாரப் போட்டிக்குத் தேர்வுசெய்து தந்திருக்கும் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியரான திருமதி. சாந்தி மாரியப்பனே இப்புகைப்படத்தை எடுத்தவருங்கூட. அவருக்கு என் நன்றியும் பாராட்டும்!

நீலமும் பச்சையும் கலந்தொளிரும் இந்தக் கோலமிகு படத்திற்குக் கருத்தொடு கவிவடிக்கக் கவிவலவர்கள் காத்திருக்கிறார்கள். அவர்களைக் கனிவோடு வரவேற்போம்!

*****

”அக இருளாம் அறியாமையைப் போக்கி ஒளியேற்றிடும் கல்வி; கதிரவனைக் கண்டு காணாமற் போகும் பனித்துளிபோல் எதிரில் நிற்கும் இன்னலை இல்லாமல் ஆக்கிடும் கல்விதரும் நல்லறிவு” என்று படத்தில் காணும் புறஒளியோடு அறிவொளியேற்றும் கல்வியை ஒப்பிட்டுக்காட்டியுள்ளார் திரு. ஆ. செந்தில் குமார்.

வாழ்வில் ஒளியேற்றும் கல்வி…!

உதய வானில் சிறகடிக்கும் வண்ணப் பறவை போல…
இதயம் கூட அமைதி அடையும் நல்ல நூல்களை நாட…!
இதிகாசங்களும் ஆன்றோர் பலரும் காட்டும் வழி போல…
எதிர்காலம் கூட வண்ணமயம் கற்ற வழி நிற்க…!

புற இருளைப் போக்கிவிடும் ஆதவனைப் போல…
அறியாமை அகஇருளை அகற்றிவிடும் கல்வி…!
பிறவாமை வேண்டிநிற்கும் ஞானியரைப் போல…
சிறப்புபல தந்திடுமே கற்கும் நல்ல கல்வி…!

கதிரவனைக் கண்டுவிட்ட பனித்துளியைப் போல…
எதிர்த்துநிற்கும் இன்னல்களைப் போக்கிடும் நல்லறிவு…!
விதி வழியே சென்றிடுவோம் என்று சொல்லும் மனதும்…
மதிநுட்பம் இருந்துவிட்டால் மாற்று வழியைத் தெரியும்…!

மதயானை போன்றிருக்கும் மாந்தர்தம் மனதை…
இதமாக்கி நெறிப்படுத்தி ஒளியேற்றும் கல்வி…!
எதிரேறு பொறுத்தக்கல் ஆகின்றதோர் தெய்வம்…
எதன்பொருட்டும் வருந்தாதோர் இலக்கடைவது திண்ணம்…!

*****

”வாழ்வில் தலைநிமிர நல்ல நூல்களை நோக்கிக் குனி” என்கிறார் திரு. செண்பக ஜெகதீசன் கனிவாய்.

ஒளி பிறக்க…

தலை குனி,
நல்ல நூல்களை நோக்கி..

ஒளி வட்டம்
உன் தலையைச் சுற்றி
வராவிட்டாலும்,
உறுதியாய் நீ
தலை நிமிர்வாய்,
தானாய் ஒளி பிறக்கும்-
வாழ்க்கையிலே…!

*****

”சூடிக்கொள்ளவும் முடியாது; பாடிப்பரவி இறைவனுக்குச் சேர்ப்பிக்கவும் இயலாது! நெகிழி மலரே! மணமில்லா உன்னால் யாருக்கென்ன பலன்?” என்று மலரை நோக்கி வினாத் தொடுக்கிறார் பெருவை திரு. பார்த்தசாரதி.

நெகிழிப்பூவே உனக்குப் புகழில்லை புவியுலகில்!

அன்றாடம் தன்னிதழ்கள் பிரித்து மலராது
……….அழுக்காகும் அழுகாத நெகிழிப் பூக்கள்..!
குன்று போலக் கடைகளிலே குவிந்திடும்
……….கண்கள் கூசுமளவிற்கு நிறமிகள் உண்டு..!
இன்புறும் அளவுக்கு மணமென்ப தில்லை
……….இல்லாளுமிதை ஒரு நாளும் விரும்பாள்.!
என்று மிதற்கெனவே தனி மதிப்பில்லை
……….எதற்கு மிதன் உபயோகம் பெரிதுதான்..!

வாடிவிடும் தன்மையோ இதற்கு இல்லை
……….வாழ்த்தக் கொடுப்பதற்கும் வழி யில்லை..!
கோடீஸ்வரன் இறந்து விட்டால் அவன்
……….கழுத்தில் நீண்ட நாள் தொங்கிடுமன்றோ..!
சூடிக்கொள்ளவும் முடியாது வாயினால்
……….பாடிபகவானுக்கு பூஜை செய்ய இயலாது..!
ஓடிவரும் வண்டினங் களிதை அண்டாது
……….ஒளியூட்டினால் சற்றே அழகு மிகக்கூடும்..!

செங்கதிரோன் ஆசியுடன் சோலையிலே
……….செழித்து சிந்தனை குளிரச்செயும் மலரே..!
தங்கத்தைப் போலப் பெருமை உனக்கு
……….மங்காத புகழும் பெருமதிப்பும் உண்டாம்..!
மங்கையர் சூடும் மலருக்கெது ஈடாகும்
……….மலரின் வாசனைக் கெதுவும் ஒப்பாகா..!
அங்கத்தில் அணிய முடியா நிலையில்
……….அலர் மாலையில் சேருமா?..நெகிழிப்பூ..!

*****

மூச்சுப்பயிற்சியாம் வாசி யோகத்தில் தேர்ச்சி பெற்றோர், நீலமும் பச்சையுமாய் ஒளிக்குமிழிகளைத் தம் புருவ மத்தியில் காண்பதை, படத்தில் அணிவகுத்திருக்கும் அவ்விரு நிறங்களோடு அழகாய் இணைத்துப் பார்க்கிறார் திருமிகு. அவ்வைமகள்.

ஒருபுனல் தம்பமிடை சிலம்பமும் எழுந்ததே!
இருபுனல் கபாடமுள் உருபுனல் லலாடமும்

வருபுனல் தடாகமுடி இருபுயக் கதம்பமும்
தருபுனல் தெறிக்குமிழி இருநிறக் கபம்பமும்
ஒருபுனல் தம்பமிடை சிலம்பமும் எழுந்ததே!

*****

புகைப்படத்தில் ஒளிரும் புறவண்ணங்களை அறிவொளியோடும் கல்வியோடும் யோகத்தோடும் பொருத்திப் பார்த்துத் திருத்தமாய்ப் பாப்புனைந்திருக்கும் பாவலர்களுக்குப் பாராட்டுக்கள்!

இவ்வாரத்தின் சிறந்த கவிதையாய்த் தேர்வாகியிருப்பது இனி…

மன எழுச்சியே மகிழ்ச்சி

செயற்கையான மலர்இதழ்கள்
செய்துவைத்து அதன் மேலே
சிறுமின்விளக்குகள்ஒளிபாய்ச்சிச்
சிதறவைக்குது இருளைத்தானே!!
மேல்நோக்கிஎழுகிற எண்ண அலை
மேம்பட்டால் வராது வாழ்வில் பிழை!!
ஒருநிலைப்படுத்தும்ஆற்றல் நிலை
ஓங்கிடப்பெய்யும்பேரானந்த மழை!!
இயற்கையான உடலுக்குள்ளும்
இருட்டைவிரட்டிட மார்க்கமுண்டு!!
உள்ளமென்னும் வீட்டுக்குள்ளே
உதிரத்தில் உருவாகும் மின்சாரம்!
நரம்புகள்வழியே அது பாய்ந்து
இருதய பல்பை எரியவைக்கும்!!
நாசம் செய்யும்கெட்டசிந்தனைகள்
நன்மையை என்றும் கொடுக்காது!!
நினைப்புக் கலப்பையில் ஏர் உழுது
நிலமாம் மனசைச் சமன்படுத்தி
நடுகிற நாற்று செயலாய் ஆகி
நன்கு வளர்ந்து மகசூல் பெருகும்!
வாழ்வுத் தோட்டத்தின் விளைச்சல்
வருங்காலவசந்தத்தை வழங்கும்!!
பொம்மைப் பூக்கள் போலன்றி
உண்மைவாசம் வாழ்வில் வீசும்!!

வெளிச்சத்தை புறத்தே மட்டுமன்று அகத்தேயும் கருவாக்கி உருவாக்கலாம். ஆம்! உளமெனும் வீட்டுக்குள் உதிரத்தில் உருவாகும் மின்சாரம் நரம்புகள் வழிப்பாய்ந்து இதய விளக்கை எரியவைக்கும்.

மனத்தைச் சமன்படுத்தி, நற்சிந்தனைகளை நட்டுவைத்தால், வாழ்வெனும் தோட்டம் வாசமில்லாப் பொய்ப்பூக்களின் தொகுப்பாய் ஆகாமல், நேசத்துக்குரிய மெய்ம்மலர்களாய் மணம் பரப்பும்” என்று வாழ்வியல் பாடம் சொல்லும் இக்கவிதையின் ஆசிரியர் திரு. ஏ. ஆர். முருகன் மயிலம்பாடி இவ்வாரத்தின் சிறந்த கவிஞராய்த் தேர்வாகின்றார். அவருக்கு என் பாராட்டு!

 

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published.