-மேகலா இராமமூர்த்தி

sea and clock

ஓலமிடும் கடலலை யோரமாய்க் குடிகொண்டிருக்கும் காலங்காட்டும் கடிகாரத்தைக் கலைநயத்தோடு படம்பிடித்து வந்திருக்கின்றார் திரு. பிரேம்நாத் திருமலைசாமி. வித்தியாசமான இந்தப் படத்தைப் படக்கவிதைப் போட்டிக்குத் தகுந்தது என்று தேர்ந்தெடுத்துத் தந்திருக்கின்றார் திருமதி. சாந்தி மாரியப்பன். இவர்கள் இருவருக்கும் என் நன்றி!

காலமறிந்து செயற்படு என்பதைக் காட்டும் கடிகாரமும், ஓய்தல் இன்றி உழைத்திடு என்பதை உரக்கச் சொல்லும் கடலலையும் மானுடர்க்குத் தருவது பயன்மிகு படிப்பினை.

இனி, கடற்கரையோரம் நின்று கவிமழை சிந்தக் காத்திருக்கும் கவிஞர்களைக் கனிவோடு வரவேற்கின்றேன்.

*****

”வாழ்வில் எல்லாம் செயற்கைமயமாய்ப் போனதால் செம்மை வாழ்வு மாயமாய் ஆனதே” என்று கவலும் கவிஞர் ஆ. செந்தில்குமார், மரபுசாரா எரிபொருள்களைப் பயன்படுத்திப் புவிவெப்பம் குறைப்போம் என்கிறார் தன் கவியில்.

காலம் கொடுக்கவிருக்கும் தண்டனை
நுகர்வுக் கலாசாரம் மிகுந்தது!
நாடெங்கும் குப்பைக்கூளம் குவிந்தது!
நச்சுக்கழிவுகள் கலக்கும் நதிகள்!
நகரமயத்தால் அழியும் காடுகள்!

ஆலைகள் வெளியேற்றும் நச்சுவாயுக்கள்!
பாலைகளாகும் வளமிகு நிலங்கள்!
நெகிழிப் பொருட்களின் பயன்பாடு!
நிலத்தடி நீரின் குறைபாடு!

பெட்ரோல் டீசல் நிலக்கரியென்ற
புதைப் படிமங்களின் வெளிப்பாடு!
பசுமையில்லா வாயுக்க ளெங்கும்
பரவிச் செறிந்த நிலைப்பாடு!

புவியின் வெப்பம் உயர்ந்துயர்ந்து
பனிப்பாறைக ளெல்லாம் உருகியுருகி
பரந்த கடலின்மட்டம் உயர்வதனால்
புல்லும்கூட முளைக்கவுதவா பூமியென்றாகிடுமே!

புவியின் இயற்கையைச் சிதைக்கின்றோம்!
பருவநிலையின் மாற்றத்தை உணர்கின்றோம்!
செயற்கை மயத்தை நிறைக்கின்றோம்!
செம்மை வாழ்வைத் தொலைக்கின்றோம்!

தவறுகள் செய்யும் நம்மனைவருக்கும்
தக்கதண்டனை கிடைக்கும் காலம்
தூரத்திலில்லை என்பதை உணர்ந்து
தூக்கத்தில் இருந்து விழித்தெழுவோம்!

மரபுசாரா எரி பொருட்கள்
மண்ணின் வெப்பத்தைக் குறைத்திடுமே!
புவியின் வெப்பத்தைக் குறைத்திடுவோம்!
பூமிப் பந்தைக் காத்திடுவோம்!

*****

”கடமையைச் செய்வதில் கடலலையாய் இருப்போம்; ஓயாது உழைப்பதில் கடிகாரமாய் இருப்போம்” எனும் நன்மொழியைத் தன் பாவில் பொன்போல் பொதிந்து தந்திருக்கின்றார் திரு. பழ. செல்வமாணிக்கம்.

கடலலை சொன்ன கீதை:
அலையில்லாக் கடலுக்கு அழகில்லை !

ஓடாத கடிகாரத்தால் ஒரு பயனுமில்லை!
வீசாத தென்றலுக்கு பெருமையில்லை!
துடிக்காத இதயத்திற்கு உயிருமில்லை!
பாசமில்லாப் பிள்ளைகளால் பயனுமில்லை!
உழைப்பில்லா மனிதருக்கு உயர்வில்லை!
தமிழில் பேசாத தமிழருக்கு வாக்கில் இனிமையில்லை!
ஈயாத செல்வத்திற்கு மதிப்பில்லை!
உதவி செய்யா வாழ்க்கைக்கு அர்த்தமில்லை!
இயற்கை என்றும் தன் பணி செய்ய மறப்பதில்லை!
சுயநலமாய் என்றுமே இருந்ததில்லை!
மனிதன் தன் கடமை செய்ய விரும்பவில்லை!
பொது நலத்தை என்றுமே நினைக்கவில்லை!
கீதை சொன்ன பாதையில் நாம் நடப்போம்!
கடமை செய்வதிலே கடலலையாய் நாம் இருப்போம்!
ஓடுகின்ற கடிகாரமாய் ஓயாமல் நாம் உழைப்போம்!

*****

கடமைசெய்யக் காலம் பாராக் கடலலைகள், உறங்கியே பொழுதைக் கழிக்கும் மானிடனின் மடமையைக் கேலிசெய்வதைச் சுவைபடப் பதிவுசெய்திருக்கின்றார் திரு. செண்பக ஜெகதீசன்.

உறங்கா அலைகள்
கடலில் அலைகள் அடிப்பதற்கே
காலம் எதுவும் பார்ப்பதில்லை,
உடலில் நல்ல தெம்பிருந்தும்
உறங்கிக் கிடக்கும் மானிடனே,
அடிக்கும் ஓசைக் கடிகாரமும்
ஆளை வைத்தே எழுப்பிடினும்,
உடையா துந்தன் சோம்பலென
உரைத்துச் செல்லும் அலைகடலே…!

*****

”வையகத்தை வாழ்விக்கும் இயற்கையைத் தன் கையகப்படுத்தி அழித்தொழிக்கும் மனிதனுக்கு இயற்கை இரங்கற்பா வாசிக்கும் நாள் வெகுதொலைவில் இல்லை என்று எச்சரிக்கவந்த கடிகாரமிது” என்கிறார் திருமிகு. சத்தியப்ரியா சூரியநாராயணன்.

எச்சரிக்கை ஒலி
கடிகார முள் பார்த்து
காலையில் உதிப்பதில்லை கதிரவன்

அலாரம் அடிக்கும் சத்தம் கேட்டு
அலறி எழுவதில்லை அலைகள்

நேரகாலம் பார்க்காமல் இந்த இயற்கை
நேர்த்தியாய் தன் பணி செய்கிறது

வாரிசுகளுக்கு வாரிக் குவிக்கத்தான் உழைப்பென்றெண்ணினேன்
வையகத்தை வாழ்விக்கவே ஓடாய் தேய்கிறேனென்று காதில் உரைத்துச் சென்றன அலைகள்

உழைத்து உழைத்து ஓடாய்த் தேய்கிறது இயற்கை – உனக்காக
உணராமல் நாளும் அதை அழித்துக் கொண்டிருக்கிறாய் நீ

இந்நிலை நீடித்தால் இப்பூவுலகில் – மனிதா
இரங்கற்பா பாடக் காலம் கூடும் வெகு விரைவில்
இயற்கைக்கு அல்ல.. அதை அழிக்கும் உனக்கு.. எனவே
இனியும் தாமதிக்காமல் இயற்கை அன்னையை காப்பாற்றி உனைக் காத்துக்கொள் – எனும்
எச்சரிக்கை ஒலி எழுப்பவே நான் வந்தேன்.

*****

”கடற்கரையில் தனித்துக் கிடக்கும் காலங்காட்டும் கருவி கண்டு, அண்டப் பெருவெளியோ அகன்று விரிகின்றது; அப்பேரண்டத்துள்ளே நேரமும் தன்னை நீட்டிச் செல்கின்றது; கடிகாரம் வழியொரு மாயலோகம் மண்ணில் தெரின்றது” என்று கவியருவி பொழிந்திருக்கின்றார் திரு. எஸ். கருணானந்தராஜா. 

கார்கால மேகக் கருக்கூட்டும் வானத்தில்
கதிரோன் ஒளிதெரியா கடல் விளிம்பில் தூரத்தில்
கால நிலை மாற்றம் கடிதாய் நிகழ்கிறது.
நிலை மாறும் காலத்தில் நேரந்தனைக் காட்ட
அலை மோதும் கரை தன்னில் அழகாயோர் கடிகாரம்.

அதையங்கே வைத்தது யார் அதற் கென்ன வேலையங்கு?
கடலோரக் கடிகாரம் காட்டுவதோ ஆறுமணி
கயிறொன்றை அதனோடு கட்டி வைத்து முள்ளார்கள்
இடமின்றிக் கடிகாரம் இக்கரையில் கிடக்கிறது
எதற்காக எதற்காக ஏன் இங்கே இருக்கிறது?

அலையோடு அலையாக அடிபட்டு வந்ததுவா?
அல்லாது வேண்டுமென்றே அதையங்கு வைத்தாரா?
சரியாக ஆறுமணி காலையிலா மாலையிலா
தெரியாது, கடல் விளிம்பில் செங்கதிரோன் எங்குற்றான்?
ஒன்றன் பின் ஒன்றாக ஓராயிரம் கேள்வி
பின்வந்து நிற்கிறது பிறிதொன்றும் தோன்றாது
காலமளந்திடுமக் கருவிதனைப் பார்க்கின்றேன்.

அண்டப் பெருவெளியோ அகன்று விரிகிறது
அதனுள்ளே காலமும் சேர்ந்தே விரிகிறது
அண்ட விரிவு நின்றிடும் போதில்
அகன்றிடும் காலமும் விரிவை நிறுத்தும்
நில்லாது விரியும் பேரண்டத்துள்ளே
நேரமும் தன்னை நீட்டிச் செல்லும்
எல்லா இடத்திலும் காலம் விரிவதால்
இடமும் காலமும் ஒன்றுடன் ஒன்றாய்
பின்னிப் பிணைந்து பேரண்டமாகிப்
பிரிக்க முடியா இருபெரும் கூறாய்
பிரபஞ்சமென்னும் மாயையுள் புதைந்தன.

காலமும் இடமும் கற்பனைக் கெட்டா
மூலப்பிர கிருதி யென்பார்கள்.

சிவமெனும் சிங்கியூலாறிற்றியென்ற
சிறியதோர் ஒருமைப் புள்ளியிலிருந்து
தோன்றி விரிந்து தொடர்ந்து பரந்து
தொடக்கம் நோக்கி மீண்டுமொடுங்கும்
மாயைக்குள்ளே மனம், உடல் கொண்டு
வாழும் மனிதர் சிந்தனைக் கெட்டாக்
காலந்தன்னை அளந்திடும் கருவி
கடற்கரை தனிலே தனித்துக் கிடக்கும்
காட்சியினாலிக் கவிதை மலர்ந்தது
கனவாம் மாயா லோகம் தெரிந்தது.

*****

காலங்காட்டும் கடிகாரமும் அழகுக் கோலங்காட்டும் கடலலைகளும் கவிஞர்களின் நெஞ்சில் கற்பனை அலைகளைத் தட்டியெழுப்பிக் கவிதை முத்துக்களைக் கொட்டச் செய்திருக்கின்றன. பாராட்டுக்கள் கவிஞர்களே!

இவ்வாரத்தின் சிறந்த கவிதை இனி…  

கடலுக்குள் போன மச்சான்
காணாம போயிமாசம் ஒண்ணாச்சு!
கடிகார முள்ளாட்ட உழச்சுக்
களச்சுப்போயி…எக்கச்சக்க மீனோடு
கரை திரும்பி வருவார்னு
காத்திருந்து காத்திருந்து
காலந்தான் கரைகிறது…
எங்க மச்சான் இருக்கீங்க?
எப்படி இருக்கீங்க??
பொண்டு புள்ள இங்கிருக்க
போன இடம் எங்கே மச்சான்..?
மனையாளெனைப்பாக்காம
மனுசனால இருக்க முடியாதே!!
புயல் போயி நாளாச்சு _
அயல் தேசமும் தேடியாச்சு _
ஆனாலும் உங்களக்
காணாமல் அழுவறமே!!
வருவீங்க வருவீங்கனு
வழி மேல விளிவச்சு
வெகுநாளாக் கிடக்கிறமே..!!..
நீங்க வரும் வரைக்கும்
நாங்க போகமாட்டோம்!!
மணல் பரப்ப விட்டுப்புட்டு
மனை போக மனசில்லே _
மணிக்கணக்கப் பாத்துகிட்டே
மதி மயங்கிக்காத்திருக்கோம்..
எதிர்பார்க்கும் எங்கள
ஏமாத்திப் போடாம
எங்கே இருந்தாலும்
இங்க வந்து சேரு மச்சான்!!
அரசாங்க சேனைகளும்
ஆளம்புச் சொந்தங்களும்
ஆம்படயானுன்ன சல்லட போட்டு
ஆழ்கடலில்..அதன் ஓரங்களில்
அணுவணுவாத் தேடுறாங்க!!
அதோ..இதோ..வரும்நல்ல செய்தியினு
ஆண்டவனக் கும்புட்டுட்டு
அப்பிடியே உக்காந்திருக்கோம்…
நம்மபொழப்பு நாறப்பொழப்புத்தான்!!
நல்லமீனெடுக்க படும்பாடு நரகந்தான்!!
நடுக்கடலுக்குள்ளே
நாராயணன் இருக்காராம்..
நான் அவரையுந்தான் கும்புடுறேன்.
ஏதாச்சும் ஒரு சாமி
எம்புருசனக் கொண்டுவந்துசேக்காதா?
இருக்காரா? இல்லையானே
இதுவரைக்கும் தெரியாம
இடியா நெஞ்சொடஞ்சு
இருப்பத விட வேறு என்ன
இன்னலுண்டு உலகத்தில்!!
அனுபவிச்சுப் பாத்தாத்தான்
அதன் வழி தெரியும் அடுத்தவர்க்கு!!
இனி மேலேனும் இதுபோல ஆகாம
இயன்றவரை எச்சரிக்கை
இயற்கை இடர்க் காலங்களில்
இருப்போமே எல்லோரும்!!
இனிமேலேனும் எங்களைப்போல்
இன்னல் எவருக்கும் வேண்டாமே???

தரைமேல் பிறந்து தண்ணீரில் பிழைக்கச் சென்ற கணவன், புயலில் சிக்கிக் காணாமற்போனதால் கண்ணீர்விட்டுக் கதறும் அபலைப் பெண்ணொருத்தியின் மனக் குமுறலை,

”புயல் போயி நாளாச்சு _
அயல் தேசமும் தேடியாச்சு _
ஆனாலும் உங்களக்
காணாமல் அழுவறமே!!

ஏதாச்சும் ஒரு சாமி
எம்புருசனக் கொண்டுவந்து சேக்காதா?
இருக்காரா? இல்லையானே
இதுவரைக்கும் தெரியாம
இடியா நெஞ்சொடஞ்சு
இருப்பதவிட வேறு என்ன
இன்னலுண்டு உலகத்தில்!!”  
என்று கல்நெஞ்சும் கசிந்துருகும் வகையில் தன் கவிதையில் பதிவுசெய்திருக்கும் திரு. ஏ.ஆர்.முருகனை இவ்வாரத்தின் சிறந்த கவிஞரென அறிவித்துப் பாராட்டுகின்றேன்.  

பதிவாசிரியரைப் பற்றி

7 thoughts on “படக்கவிதைப் போட்டி 145-இன் முடிவுகள்

  1. படக்கவிதைப் போட்டி நடத்தும் வல்லமை ஆசிரியர், துணை ஆசிரியர் அவர்களுக்கு,

    கவிதையின் அழகு சுருங்கச் சொல்லி விளங்க வைத்தல்.

    15 வரிச் சுருக்கக் கவிதையை 50 வரிப் பெருங்கவிதையோடு ஒப்பிடுவது நியாயமில்லை. ஏற்புடைமை அல்ல.

    கவிதைப் போட்டியில் வரிக்கட்டுப்பாடு அவசியம். 20 அல்லது 25 வரிகள் என்று வரையறை விதிக்க வேண்டும்.

    சி. ஜெயபாரதன்

  2. மீனவப்பெண் அபலைஒலி
    மீது மிகப் பரிவு கொண்ட
    மின்னிதழாம் வல்லமைக்கு
    மிக்க நன்றி பலகோடி!!!
    (அன்புடன்….
    ஏ.ஆர்.முருகன்மயிலம்பாடி)

  3. கவிஞர் திரு ஏ.ஆர்.முருகன்  அவர்கட்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.

    குறிப்பு :-
    பசுமையில்ல வாயுக்களின் விளைவு :
    **************************************
    பைங்குடில் விளைவுஅல்லது பசுமை இல்ல விளைவு அல்லது பசுமைக்குடில் விளைவு (இலங்கை வழக்கு: பச்சை வீட்டு விளைவு’ Greenhouse Effect) என்பது பூமியின் (அல்லது வேறு கோள்களின்) மேற்பரப்பில் உள்ள வெப்பக் கதிர்வீச்சானது, வளிமண்டலத்தில்இருக்கும் பைங்குடில் வளிமங்களினால்உறிஞ்சப்பட்டு, மீண்டும் வளிமண்டலத்தில் எல்லாத் திசைகளிலும் கதிர்வீச்சாக வெளிப்படும் தோற்றப்பாடு ஆகும்.இயற்கையில் சூரியனிலிருந்துவெளிப்படும் ஒளிக் கதிர்வீச்சானது, பூமியை அடையும்போது, வளிமண்டலத்தில் உள்ள வளிமமும், முகிலும், நிலத்தில் உள்ள மண்ணும், நீரும் ஒரு பகுதி ஒளிக்கதிர்களைத் தெறிப்பதனால், அவை மீண்டும் வளிமண்டலத்தை விட்டு மீண்டும் விண்வெளிக்குள் சென்று விடும். இன்னொருபகுதிக் கதிர்வீச்சை நிலப்பகுதி உறிஞ்சி, அதன் குறிப்பிட்ட பகுதியை மீண்டும் கண்ணுக்குப் புலப்படும் ஒளியைவிடக் கூடிய அலைநீளம்கொண்ட அகச்சிவப்புக் கதிரான வெப்பக் கதிர்வீச்சாக வெளியேற்றும். அந்த அகச்சிவப்புக் கதிர்களில் ஒரு பகுதி வளிமண்டலத்தினுள் வெளிவிடப்படுவதுடன், இன்னொரு பகுதி, வளிமண்டலத்தினூடாக விண்வெளியினுள் சென்று விடும். இதன்மூலம் வளிமண்டலத்தின் வெப்பநிலை சீராக வைத்துக்கொள்ளப்படும். ஆனால் வளிமண்டலத்தில் இருக்கும் பசுமைக்குடில் வளிமங்கள் அதிகரிக்கும்போது, வளிமண்டலத்தினூடாக வெளியேற எத்தனிக்கும் அகச்சிவப்புக் கதிர்கள் வெளியேற முடியாமல் இவற்றினால் பிடிக்கப்பட்டு, வளிமண்டலத்தினுள்ளாகவே பல திசைகளிலும் வெளியேறும். இதனால் வளிமண்டலத்தின் வெப்பநிலை இருக்க வேண்டிய அளவைவிட அதிகரிக்கும். இது பசுமைக்குடில் விளைவினால் பூமியின் வளிமண்டலத்திற்கு ஏற்படும் பாதிப்பாகும்.[1][2]இயற்கையாக ஒரு சமநிலையில் இந்த வெப்பக்கதிர்வீச்சு நிகழும்போது, வளிமண்டலத்தின் வெப்பநிலை சீராக வைத்துக் கொள்ளப்படுவதுடன், உயிரினங்கள் உயிர்வாழ்வதற்கு ஏற்றச் சூழலும் கிடைப்பதனால் இது இயற்கை பசுமை இல்ல விளைவு எனப்படும். ஆனால் மனிதர்களின்செயற்பாடுகளினால், வளிமண்டலத்தில் பசுமைக்குடில் வளிமங்கள் அதிகரிக்கும்போது, அவற்றின் விளைவாகப் பூமியின் வெப்பநிலை பாதகமான நிலையை நோக்கிச் செல்கின்றது[3]. இதனாலேயே பூமியில் உள்ள உயிரினங்களுக்குப் பாதகமான புவி சூடாதல் நிகழ்கின்றது.பசுமை இல்ல வாயுக்கள் காபனீரொக்சைட்டு, மீத்தேன், நைதரசு ஆக்சைட்டு, ஓசோன், குளோரோ புளோரோ கார்பன் மற்றும் அதிக அளவிலான நீராவிபோன்றவையாகும்.

    நன்றி : விக்கிபீடியா.

  4. கவிஞர்..செந்தில்குமார்வாழ்க…
    திரு..ஜெயபாரதன்ஐயாவின்
    கருத்துக்களை யோசிப்போம்!!
    அண்மையில் இதேபோல ஒரு
    படம்பார்த்துக்ககவி நிகழ்வு……
    நாட்டுப்புறப்பெண் ஒருத்தி
    அம்மிஅரைக்கும் அழகியபோட்டோ!
    பிரபலக்கவிஞர்கள்
    பிச்சுவாங்கினார்கள்!!
    என் கவிதை இதுதான்…
    ????????????
    #$அம்மிணியோட
    அம்மிக்குழம்பு
    அடுத்த தெருவுக்கும்
    கமகமக்குது!!!..
    #$மம்மியோட
    மிக்சிக்குழம்புல
    வாய வச்ச
    நாயுங்கக்குது!!!!
    ?????????????
    @@@#கவிதைகள்..படைப்பதை
    விட ரசிப்பதே சிறப்பு……
    ??????????????
    அன்புடன்…
    ஏ.ஆர்.முருகன்மயிலம்பாடி…
    9442637264..
    ?????????????????

  5. நான் சொன்ன கவிதைக்கு
    அந்த அரங்கம் தந்தது
    முதல் பரிசு..ரூ.பத்தாயிரம்!@
    (அன்புடன்..
    ஏ.ஆர்.முருகன்மயிலம்பாடி)

  6. திரு.ஜெயபாரதன்ஐயா அவர்கள்
    இதே தொரடரில் எழுதியுள்ளார்…
    எதுகை மோனை தெரியாமல்
    எழுதிய..எத்தனையோர்பேர்
    இறைவன் அருளால்…..
    பெயரும்புகழும் பெற்றதை
    அறியாதவரல்ல!!!!!….
    இந்தக்காலத்துக்கு
    இப்படித்தான் இருக்குதானா..
    அதுக்கு ஏத்துக்குறமாதிரி
    எழுகிறவர்களே….
    எல்லைதொடமுடியும்!!!!!!!@….
    (தங்கை மேகலாராமமூர்த்தி
    அந்த எல்லையில்
    இருக்கார்னு தோணுது)
    ###அன்புடன்….
    ஏ.ஆர்.முருகன்மயிலம்பாடி..

  7. கவிஞர் வைரமுத்துவின்
    “”அம்மா கவிதை”””
    நீளமானது தான்!!!!
    சிலதைப் பெரிதாய்
    சித்தரிப்பபதும்
    பலதை சிறிதாய்
    சிலாகிப்பதுமே
    பலம்தரும்..கவிதைக்கு…
    (அன்புடன்..
    ஏ.ஆர்.முருகன்மயிலம்பாடி..)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *