Category: போட்டிகளின் வெற்றியாளர்கள்

போட்டிகளின் வெற்றியாளர்கள்

  • படக்கவிதைப் போட்டி 108-இன் முடிவுகள்

    -மேகலா இராமமூர்த்தி

    திரு. ராம்குமார் ராதாகிருஷ்ணன் எடுத்திருக்கும் பச்சைப்பசேல் காட்சியை இவ்வாரத்தின் படக்கவிதைப் போட்டிக்கான கருவாய்த் தேர்ந்தெடுத்துத் தந்திருப்பவர் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி. சாந்தி மாரியப்பன். புகைப்படக் கலைஞர், தேர்வாளர் இருவருக்கும் என் நன்றி.

    greefield

    ‘பச்சை நிறமே பச்சை நிறமே
    இச்சை ஊட்டும் பச்சை நிறமே’ என்று இந்தப் படத்தைப் பார்த்ததும் நமக்கும் பாடத்தோன்றுகிறது!

    வளமையின் வண்ணம் பச்சை!
    குளுமையின் வண்ணம் பச்சை!
    எழிலான இந்தப் படத்துக்கு ஏற்றமிகு கவியெழுதக் காத்திருக்கிறார்கள் கவிஞர்கள். அவர்களுக்கு வழிவிட்டு நான் விலகுகிறேன்.

    ******

    ”குவளையில் நீரெடுத்துக் குளித்தது போதும்! கேணியிலும் அருவியிலும் கழனியிலும் குளியல் செய்வோம் ஆனந்தமாய்! நகரங்களில் நரகவாழ்க்கை வாழும் பிள்ளைகளே…! நீங்கள் உண்ணும் அரிசிச்சோற்றைத் தரும் நெல் மரத்தில் காய்க்கவில்லை; வயலில்தான் விளைகிறதென்று அறிந்துகொள்ளுங்கள்; உண்மை வாழ்வை இனியேனும் புரிந்துகொள்ளுங்கள்!” என்கிறார் திரு. பழ. செல்வமாணிக்கம்.

    நாம் நிலைக்க நீர்: உயிரின் ஆதாரம் உணவாகும்
    உணவின் ஆதாரம் பயிராகும் !
    பயிரின் ஆதாரம் நீராகும் !
    நீரின் ஆதாரம் மழையாகும்!
    மழையின் ஆதாரம் மரமாகும்!
    மரம் நிழல் தரும்!
    பசிக்கு கனி தரும்!
    நச்சுக் காற்றைத் தான் ஏற்று!
    நல்ல காற்றை நமக்குத் தரும்!
    தாயும், மரமும் ஒன்றாகும்!
    கொடுப்பதில் கடவுளுக்கு நிகராகும் !
    நீர் நிலைக்க மரம் வளர்ப்போம் !
    நாம் நிலைக்க நீர் காப்போம் !
    கேணியில் நீர் இறைத்துக் குளித்ததுண்டா!
    அருவியில் தலை வைத்துக் குளித்ததுண்டா !
    பயிருக்கு நீர் இறைக்கும் இறைப்பானில்
    குளித்துக் களித்ததுண்டா !
    குவளையில் நீர் எடுத்துக்
    குளித்தது முடியட்டும் !
    அலை பேசியில் அனுதினமும் தான் பேசி
    வாழ்க்கையை தொலைத்தது இன்றோடு போகட்டும் !
    இன்பம் தரும் இல்லத்தில் தனித் தீவுகளாய்
    இருந்ததெல்லாம் இன்றோடு தீரட்டும் !
    கிராமத்து வாழ்க்கையை நகரப் பிள்ளைகள்
    உணரட்டும் !
    நெல்லில் இருந்து தான் அரிசி வரும் என்று
    கட்டாயம் தெரியட்டும் !
    நெல் விளைவது மரத்தில் அல்ல என்ற
    உண்மை விளங்கட்டும் !
    உணவு தரும் உழவர்களின் உழைப்பு
    புரியட்டும்!
    இயந்திர வாழ்க்கையை இன்றோடு
    மறக்கட்டும் !
    விளை நிலங்கள், மனை நிலமாய்
    மாறாமல் இருக்கட்டும்!

    *****

    ”அருவியில் குளிப்பதிலும் அலைகடலில் குளிப்பதிலும் இன்னபிற நீர்நிலைகளில் குளிப்பதிலும் சாலச் சிறந்தது வயலில் பாயும் நீரில் குளித்துக் களிப்பதே” என்பது திரு. செண்பக ஜெகதீசனின் தீர்மானமான கருத்து.

    உயிர் நீர்…

    அருவியில் உருகிடும் நீரினிலே
    ஆடிப் பாடிக் குளிப்பதிலும்,
    உருவினில் பெரிய அலைகடலின்
    உப்பு நீரில் குளிப்பதிலும்,
    அருகினில் ஆறு குளங்களெனும்
    ஆயிரம் தீர்த்தம் அமிழ்வதிலும்,
    பெருமை மிக்கது நம்வயலில்
    பாயும் நீரில் குளிப்பதுவே…!

    *****

    காலமாற்றம் இயற்கைக்குக் காலனாய் வாய்த்திருக்கிறது. நீரோடை எல்லாம் வறண்ட பாலையாய்க் காட்சிதருகின்றது. பார் செழிக்க நீர்வேண்டும்; நீர் கிடைக்க மழைவேண்டும். அப்போதுதான் கழனிகள் செழிக்கும்; கனவாய்ப் போன பசுமைப் புரட்சி நனவாகும். மக்கள் வாழ்வும் வளமாகும் என்கிறது பெருவை திரு. பார்த்தசாரதியின் கவிதை.

    பசுமைப் புரட்சி ஓர் கனவு?

    பச்சை வயல் பசுமைக் கதிர்..!
    பாய்ந்தோடும் குழாய்த் தண்ணீர்..!

    பயிர்கள் குவிந்த யிடம்…பசுமைக்கு..
    பச்சைத்தண்ணீர் ஒருகொடை..!

    பசிபோக்கும் நிறமும் இதுவே…நிலைக்கும்..
    பாரினிலோர் தொழிலிதுவே ..!

    மின்னும் நிறத்தில் பச்சை வண்ணம்..!
    கிள்ளைமொழி பேசும்கிளியின்நிறம்..!

    பச்சை சூழ்வயல் பார்க்கையில் நெஞ்சில்..
    பரவசம் தோன்றிடும்..!

    கொஞ்சும் செழுமை பசுமை எழுச்சியாய்..
    நெஞ்சம் நிறைந்திடுமின்பம்..!

    கால மாற்றத்தால் இயற்கை அழகையினி..
    காண்ப தரிது..!

    கனிந்த நீர் ஓடையெலாம் இப்போது..
    கழிவுநீர் ஓடையானது..!

    வானுயர்ந்த கட்டிட மதன்கீழ் மரம்போலே..
    வரிசையாய் வாகனங்கள்..!

    அளவற்ற அறிவியலின் மதி வளத்தால்
    பிளாஸ்டிக் கழிவுகள்..!

    சேறுகளில் நீரீரம் வற்றி விளைநிலத்துக்கு..
    ஊறுவிளை விக்குமவலம்..!

    கயல் கழனி கட்டிட மயமாக..
    வயலெங்கே போனது..!?

    ஓசோன் படலத்தில் ஓட்டை விழுந்து..
    ஒழுகுகிற அமிலமழை..!

    தடுப்பணை கட்டி நேசத்தையும் பாசத்தையும்..
    தடுக்கின்றனர் அண்டைமாநிலத்தார்..!

    பெருங்கடன் சுமையெனும் தாகத்தைப் போக்க..
    சிறுநீர்குடிக்கும் போராட்டம்..!

    செயற்கை இரசாயன தீங்கின்றி மக்கள்வாழ
    இயற்கையை நேசிநீ..!

    வானத்தின் கனிந்த கண்ணீர் ஒன்றேநம்..
    ஆனந்தமெனக் கொள்வோம்..!

    வான் பொய்க்கா நிலை வேண்டும்..நலம்
    வாழும் வரம்வேண்டும்

    பசுமைப் புரட்சி தழைத் தோங்க..
    பாரினில் மழைபொழியவேண்டும்..!

    எங்கும் பசுமை எதிலும் பசுமையென..
    பொங்கும் புரட்சியாய்..

    தொலைந்து போன எண்ணங்கள் மறுபடி..
    உலர்ந்திடாது மலர்ந்திடுமா?..

    *****

    சேற்றுவயலில் காற்றாடக் குளித்துக் களிப்பதிலுள்ள இன்பத்தை, நீரின்றிப் போனால் ஊர்கள் சீரின்றிப்போகும் அவலத்தைத் தம் கவிதைகளில் அழகாய்ப் பதிவுசெய்திருக்கிறார்கள் கவிஞர்கள். அவர்களுக்கு என் பாராட்டுக்கள்!

    அடுத்து வருவது இவ்வாரத்தின் சிறந்த கவிதையாய்த் தெரிவாகியிருப்பது…

    நீரின்றி அமையாது உலகு

    தலையசைக்கும் நாற்று
    தாலாட்டும் காற்று
    வயல்வெளியின் குளுமை
    வாலிபனின் கும்மாளம்
    சுட்டெரிக்கும் அனலில்
    பசுமைக் குடைபிடித்துக் குதூகலக் குளியல்
    காட்சிப் படிமங்கள் காலச் சுழற்சியில்
    கனவுகளாய்…
    விவசாயி செய்யும் வேளாண்மையை
    விவரமறியாய் தலைமுறைக்குக் கற்பிப்பது யாரோ?
    கைவிடப்பட்ட இயற்கை
    தரிசு நிலமாக,
    தாரை வார்க்கப்பட்ட விலைநிலங்களாக,
    கிணறு தோண்டிச் சேகரித்த நீரெங்கே?
    நதிகள் ஓடிய பாதைகளெல்லாம் களவாடிய
    நரியின் தடங்கள்
    மணல் கூட மிச்சமில்லை
    ஊற்றுநீர் ஊற்றெடுக்க மரமில்லை
    மரம் வளா்க்கவோ மனமில்லை
    பாராள நினைக்கும் மனிதனே!
    பணம் பாதாளம் வரை பாயும்
    பள்ளம் பாய நீருண்டா?
    பாதாளம் தோண்டினாலும் நீரில்லை 
    பகுத்தறிய வேண்டுமையா நீயும்
    நாகரிக மனிதா!
    மாளும் இயற்கையை மீட்டெடுத்தால்
    பூமியின் மார்பகங்களில் நீரமிர்தம் நீளும்
    பூபாளம் பாடலாம் நாளும்!

    நீரின்றி அமையா யாக்கை இது. வானமழை யில்லையென்றால் வாழ்வுண்டோ? என்றான் மகாகவி.

    ஆனால் இந்தத் தலைமுறைக்கு நீரின் அருமை தெரியவில்லை; ஆற்றை, அதன் நீரோட்டத்தை அழியாது காப்பதன் அவசியம் புரியவில்லை. அதனால் அல்லவோ நதிகள் ஓடிய பாதைகளெல்லாம் மணலைக் களவாடிய நரிகளின் தடங்கள் தென்படுகின்றன. பாருக்கே சோறூட்டிய புலிக்கொடி பறந்த சோணாட்டு விவசாயிகள் இன்று வறட்சி நிவாரணம் கேட்டுத் தலைநகரில் நிர்வாணப் போராட்டம் நடத்தும் அவலத்தை கலியின் கொடுமை என்பதா? இல்லை…விதி செய்த சதி என்பதா?

    மாளும் இயற்கையை மீட்டெடுத்தால் மட்டுமே பூமித்தாயின் மார்பகங்களில் நீரமிர்தம் ஊறும் எனும் உண்மையை உரக்கச் சொல்லியிருக்கும் திருமிகு. மா. பத்ம பிரியா இவ்வாரத்தின் சிறந்த கவிஞராகத் தேர்வாகிறார். அவருக்கு என் பாராட்டு!

     

    Share
  • படக்கவிதைப் போட்டி 107-இன் முடிவுகள்

    -மேகலா இராமமூர்த்தி

    வானவீதியில் கானம்பாடித் திரியும் அழகுப் புறாவைத் தன் ஒளிப்படப்பெட்டியில்  களிப்போடு அடைத்துவந்திருக்கிறார் திரு. சரவணன் ரவி. அப்படத்தைப் போட்டிக்குத் தேர்ந்தெடுத்துத் தந்திருக்கின்றார் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி. சாந்தி மாரியப்பன். இவர்கள் இருவருக்கும் என் நன்றி!

    pegion

    பறவைகளில் புறாக்கள் தனித்தன்மையானவை. அவற்றின் இயல்பை விளக்கவந்த பாவேந்தர் பாரதிதாசன்,

    ஒருபெட்டைத் தன் ஆண் அன்றி
    வேறொன்றுக்கு உடன் படாதாம்;
    ஒருபெட்டை மத்தாப்பைப்போல் 
    ஒளிபுரிந்திட நின்றாலும்
    திரும்பியும் பார்ப்பதில்லை
    வேறொரு சேவல்! தம்மில்
    ஒருபுறா இறந்திட்டால் தான்
    ஒன்றுமற்றொன்றை நாடும்!  என்று அவற்றின் தன்னேரிலா ஒழுக்கத்தை, ஓர் ஆணுக்கு ஒரு பெட்டை என்று வாழும் அவற்றின் உயர்குணத்தைப் போற்றுகின்றார்.

    இனி, புறாவுக்குப் போட்டியாகத் தம் கற்பனைச் சிறகைக் காற்றில் விரிக்க வருகின்றார்கள் கவிஞர்கள்!

    ***

    ”கடவுள் படைப்பில் கண்ணைக் கவர்பவை பறவைகள்! வானில் பறக்கும் ஆசையை மனிதனிடம்  விதைத்தவை பறவைகள். வீடுகட்டி வாழ்வதெப்படி என்பதைக் கூடுகட்டி விளக்கியவை பறவைகள். அம்மட்டோ? இல்லறத்தை நல்லறமாய் நடாத்தவும் மாந்தர்க்குப் பயிற்சிதந்தவை பறவைகள்” எனப் பறவைகளின் இறவாப் புகழை மறவாது பாடுகின்றார் திரு. சி. ஜெயபாரதன்.

     

    பறவையைக் கண்டேன்

    கடவுள் படைப்பிலே நமது
    கண்ணைக் கவர்வது,
    நெஞ்சில் நிலைப்பது
    பறவையினம்.
    நீர்க்கோள் தோன்றி
    பலயுகம் கடந்து
    நாலறிவு பெற்ற புள்ளினம்
    நீல வானில் பறந்தன !
    பறவைகள்
    பலவிதம், பல்லினம், பலநிறம் !
    ஆறறிவு மானிடர்க்கு
    வெறும் நாரில்
    வீடு கட்டச் சொல்லிக் கொடுக்கும்
    கூடு கட்டும்
    தூக்கணாம் குருவி !
    பறந்து செல்லும் பருந்து
    வானூர்தி ஆக்க விதி வகுக்கும் !
    பஞ்சவர்ணக் கிளி
    சொன்னதைச் சொல்லும் !
    ஆண், பெண் புள்ளினம்
    ஒன்றாய்
    இல்லறம் நடத்திக் காட்டும் !
    மானிடர் போல்
    ஆணும், ஆணும் கூடா !
    பூத்தேன் சேர்க்கும்
    தேனீக்களும் பறவை இனமே !
    உயரப் பறக்கும் கழுகு
    உள்ளவ தெல்லாம் உயர்வாய்
    எண்ணிடச் சொல்லும் !
    வண்ண வண்ணப் பறவைகள்
    வானில் பறப்பதே
    காணக் கிடைக்கா காட்சி !

    ***

    ”விண்ணில் பறக்கும் வண்ணப் புறாவே! காதலுக்குத் தூதுசெல்வதும் நீ; மோதலைத் தடுக்க அமைதிப் பாதை அமைப்பதும் நீ; கவிவேந்தர் பாரதியிடம் செல்வாய்த் தூது! புவிமாதர் வாழவும், தாய்மொழி பழிப்போர் வீழவும் கருத்தாய்க் கவி வாங்கிவா!” என்று புறாவிடு தூது நடத்துகின்றார் திரு. பழ. செல்வமாணிக்கம்.

    பறவை விடு தூது

    விண்ணில் பறக்கும் வண்ணப் புறாவே !
    சிறகடித்துப் பறக்க உள்ளம் ஏங்குதம்மா!
    சிகரம் தொட சிந்தை விரும்புதம்மா !
    நிலவில் உறங்க ஆசை வந்ததம்மா !
    நீ சிறகடிக்கும் ஓசை, லயம் சேர்ந்த இசையம்மா!
    உயரப் பறப்பதினால் உன் எண்ணமும் உயர்ந்ததம்மா !
    புத்தருக்கு ஞானம் வந்தது போதி மரத்தடியில்!
    எங்களுக்கு ஞானம் வரும், நீ காட்டும் வழியில்!
    நீ செல்லாத தூரம் இல்லை!
    சொல்லாத சேதி இல்லை!
    அமைதித் தூது செல்ல உனக்கு நிகர் யாருமில்லை!
    நீ சென்ற தூது ஒரு போதும் தோற்றதில்லை !
    அமைதிக்கு பரிசு, வெற்றியன்றி வேறில்லை!
    காதல் தேவதை, உண்மையில் நீ தான்!
    நீ சென்ற காதல் தூது எத்தனை எத்தனை!
    உன்னால் இனைந்த காதலர் தான்
    எத்தனை எத்தனை!
    நீ எனக்காக தூது சென்றிருந்தால்!
    எனக்கொரு காதலி கிடைத்திருப்பாள்!
    இருந்தாலும் என்ன ! அழகுப் புறாவே!
    எனக்கு இப்போது தூது செல்வாயா?
    மனைவியின் மனதறிந்து வேண்டியதைச்
    சொல்வாயா!
    பாரதியிடம் தூது சென்று கவிதை ஒன்று
    கேட்பாயா ?
    தமிழை இழிவு செய்யும் மனிதரெல்லாம்
    ஊமையாய் போவதற்கு கவிதை கேட்பாயா!
    பெண்ணை இழிவு செய்யும் கயவரெல்லாம்
    செத்தொழிந்து போவதற்கு கவிதை ஒன்று
    கேட்பாயா?
    கண்ணால் துகில் உரியும் , துச்சாதன ஆண்களெல்லாம் !
    குருடாய் போவதற்கு வழி கேட்டுச் சொல்வாயா?
    பிள்ளைகள் மனதினிலே பாசத்தை விதைப்பாயா!
    ஈன்றவரைப் பேணாத பிள்ளையெல்லாம்
    முதியவராய் உடன் மாற வரம் பெற்று வருவாயா?
    மாமியார், மருமகள் இணக்கமாய் இருப்பதற்கு
    வழி ஒன்று சொல்வாயா!
    உழவுத் தொழில் தான் உலகில் உயர்ந்ததென்று
    ஊரெங்கும் சொல்வாயா?
    ஆறறிவு பெற்றதினால் அகந்தை மிகக்
    கொண்டு அழிந்து வரும் மனித இனம்
    மீண்டு வருவதற்கு நல்ல வழி சொல்வாயா!
    நான் விரும்பும் கோகிலமே !

    ***

    ”கொண்டவனுக்கு உண்மையாய் வாழும்; உண்ட இரையுமிழ்ந்து குஞ்சுகட்கு ஊட்டும்; தேடியதைப் பதுக்காது கூடியுண்ணும்; பல்வண்ணம் காட்டி நம்எண்ணம் கவரும்; அன்புக்குத் தூது செல்லும்; அமைதிக்கும் பாதை சொல்லும்” என்று புறாவின் உயர்பண்புகளைப் பட்டியலிட்டுள்ளார் பெருவை திரு. பார்த்தசாரதி.   

    மனிதனும் புறாவும்

    ஒருவனுக்கு ஒருத்தியென்ற உறுதி கொண்ட
    உயிரினமாம் அரியபுறா..!

    கோவிலுயர் கோபுரமதில் வாழும் புள்ளின..மது
    கூடிவாழும் கூட்டினம்..!

    பறவையில் தனிப் பிறவியது தண்ணீரை
    உறிஞ்சிக்குடிப்பதோர் அற்புதம்..!

    கூட்டமாய் கூரை தரையிலும் உலவும்
    வட்டமாய்ப்பறந்து வானிலேகோலமிடும்..!

    படபடக்கும் ஓசையுடன் ஜோடியாக ஜன்னலோரம்
    கடகடவெனக் காதல்மொழிபேசும்..!

    உண்டதை உமிழ்ந்துதன் உயிர்க் குஞ்சின்
    குடல்நிரப்பும் தாய்ப்புறா..!

    பெட்டை யிட்ட முட்டையை அன்புடனே
    அடைகாக்கும் தந்தைப்புறா..!

    பகுத்துண்ணும் எண்ணத்துடன் பலதும் கூடி
    தொகுத்துண்ணும் பரந்தகுணம்..!

    ஆடல் கலையில் வல்லவன் நானே..யென
    பாடல்போன்ற முனகலோடு..

    ஒருகாலைத் தூக்கி நடராசன் போலே
    மறுகாலைமறைக்கும் தன்சிறகாலே..!

    பறக்க ரெண்டு இறக்கை உண்டுனக்கு
    பலமைல்பறக்க சக்தியுண்டு..!

    வழித்தடமில்லா வானத்திலே போகும்வழி..வந்த
    வழியறியும் நுண்ணறிவுமுண்டு..!

    உண்ணாமல் பறந்து ஓராயிரம் மைல்கடக்கும்
    உன்னததிறன்பெற்ற அற்புதபறவை..!

    அறுகாதஆதி தகவல் தொடர்புநான் தானென
    அரசனுக்கு ரகசியதூதுசெல்லும்..!

    விரோதத்தின் விளைவான வன்முறைக்குச் சமாதானமென
    வீரமாகப்பறக்கும் வெள்ளைப்புறா..!

    தன்மானம் காத்திடும் பண்பிற்கு..தலைதாழ்த்தி
    தன்னையே வளையவரும்..!

    வெண்சாம்பல் வெள்ளை கரு நிறமென
    பன்னிறவண்ண முன்பகட்டு..!

    வேற்றுமைக்கு பலநிற முன்னில் இருக்கு..மது
    ஒற்றுமையை எடுத்துக்காட்டும்..!

    பகுத்தறிவு முனக்குண்டு..மனிதரோடு நெருங்கிப்
    பழகிடுமடிமைப் பண்பு..!

    ***
    ”கலக்கமின்றித் தடை தகர்த்து இலக்கைத் தொடக் கற்றுக்கொள் சிறகடிக்கும் இந்தச் சின்னப் பறவையிடம்” என்கிறார் திருமிகு. சத்தியப்ரியா சூரியநாராயணன்.

    கற்றுக்கொள்!

    சிறகடித்து சிகரம் தொடும்
    சிறு பறவை., இளைப்பாராமல்..
    கற்றுக்கொள் அதே போல உழைத்துச் சிகரம் தொட..

    வெட்ட வெளியில் சலிப்பின்றி
    வெயில் பாராமல் சுற்றித் திரியும்..
    கற்றுக்கொள் அதே போல உழைத்து முன்னேற..

    தடைகளைத் தட்டி எறிந்து
    இலக்கை எட்ட அயராது உழைத்தால்
    தொடலாம் வானை.. வண்ணப் பறவையைப் போலே..

    ***

    வானில் வட்டமிடும் வண்ணப் பறவை விண்ணைத்தொடும் எண்ணச் சிறகை நம் கவிஞர்களுக்கு வழங்கியிருப்பதை அவர்தம் கவிதைகள்வழி அறியமுடிகின்றது. பாராட்டுக்கள் கவிஞர்களே!

    இவ்வாரத்தின் சிறந்த கவிதை அடுத்து வருகின்றது…

    தெரிந்துகொள்…

    சிறகை விரித்தது பறவை,
    சின்னதாகிப்போனது வானம்..

    உழைப்பு எழுதிய கவிதை,
    உயரம் தாண்டுது வனப்பு..

    துணிச்சல் போட்ட பாதை,
    துச்சமானது தூரம்..

    இயற்கை எழுதிய கவிதை,
    இன்னும் வனப்பானது வையம்..

    தெரிந்துகொள் மனிதா,
    தேவைப்படுகிறது உனக்கு-
    பறவையின் திறமை…!

    ”முயற்சி எனும் சிறகை விரித்தால் அகன்ற வானமும் உள்ளங்கைக்குள் அடங்கும்! துணிச்சல் எனும் பாதை போட்டால் தூரமும் துச்சமாகும்!” எனும் பெரிய உண்மைகளையெல்லாம் சிறிய பறவையொன்று தன் செயலால் விளக்கிடுதே!” என்று பறவையின் திறமையை வியந்திடும் திரு. செண்பக ஜெகதீசன் இவ்வாரத்தின் சிறந்த கவிஞர் எனும் தகுதியைப் பெறுகின்றார். அவருக்கு என் பாராட்டு!

    Share
  • படக்கவிதைப் போட்டி – (107)

    பவள சங்கரி

    அன்பிற்கினிய நண்பர்களே!

    வணக்கம். கண்ணையும், கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் திறமை கொண்டவரா நீங்கள்?

    17857476_1286974304690099_879041747_n

    132443801@N02_rசரவணன் ரவி எடுத்த இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள். இதனை நம் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி. சாந்தி மாரியப்பன் தேர்ந்தெடுத்து அளித்துள்ளார்.

    இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை நல்ல தலைப்புடன் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் சனிக்கிழமை (15.04.2017) வரை உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர்குழு உறுப்பினரும், தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான திருமதி மேகலா இராமமூர்த்தி தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பலமுறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப்படும் கவிஞர்களுக்கும் உண்டு. 12 மாதமும் தேர்வுபெறும் ஒளிப்படக் கலைஞர் / கவிஞர்களிலிருந்து ஆண்டின் சிறந்த கலைஞரும், கவிஞரும் தேர்வு பெறுவார்கள். ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி இது; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்குபெற அழைக்கிறோம்.

    போட்டியின் நடுவரான திருமதி. மேகலா இராமமூர்த்தி புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்தவர். கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்ற இவர், அமெரிக்க தமிழ்ச்சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009, 2014, 2016ஆம் ஆண்டுகளின் (ஆர்லாண்டோ, அட்லாண்டா & மிசௌரி) கவியரங்கம், இலக்கிய வினாடிவினா நிகழ்ச்சிகளில் பங்கேற்றுப் பாராட்டுகளும், பரிசுகளும் பெற்றுள்ளவர். சங்கப் பாடல்களில் அதிக ஆர்வமும், இலக்கியக் கூட்டங்களிலும், பட்டிமன்றங்களிலும் சுவைபடப் பேசுவதில் வல்லமையும் பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடைபவளம்.

    Share
  • படக்கவிதைப் போட்டி 106-இன் முடிவுகள்

     

    -மேகலா இராமமூர்த்தி

     

    a family

    ஓவியம்போல் காட்சியளிக்கும் இப் புகைப்படத்தை எடுத்திருக்கும் திரு. ஷேக் முகமது பாராட்டுக்குரியவர். இவ்வழகிய படத்தைப் படக்கவிதைப்போட்டிக்குப் பாங்காய்த் தேர்ந்தெடுத்துத் தந்திருக்கும் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி. சாந்தி மாரியப்பனும் நம் போற்றுதலுக்குரியவரே!  

    மங்கலமான மனைமாட்சியின் நன்கலமாம் நன்மக்கட்பேற்றைப் பெற்றிருக்கும் இப்பெற்றோர் பேறுபெற்றோரே.

    கண்ணைக்கவரும் இவ்வண்ணப்புகைப்படம் கவிஞர்களின் கற்பனைத்திறனைப் பொற்புடன் திறந்துகாட்டக் கிடைத்ததோர் நல்வாய்ப்பு!

    இனி, கவிதைகளுக்குச் செல்வோம்!

    *****

    ”ஆற்றின் கரைகளை இணைப்பது கற்பாலம்; ஆண் பெண் இதயங்களை இணைப்பதோ
    காதலெனும் நற்பாலம். இந்தக் காதல் பாலம் தந்த பரிசே இவ்விணையர் கரங்களில் வரமெனத் தவழும் கனிமழலை; பிரிக்கும் மதிலினும் இணைக்கும் பாலமே மேல்” என இல்லறத்தின் இனிமையை நல்ல சொல்லெடுத்துப் போற்றுகின்றது திரு. செண்பக ஜெகதீசனின் கவிதை!

    பாலங்கள்…

    ஆற்றின் கரைகளை
    இணைப்பது பாலம்..

    ஆசையில்
    ஆண்பெண் இதயங்களை
    இணைக்கும் பாலம்-
    காதல்..

    காதல் மணவாழ்வில்
    ஆணும் பெண்ணும்
    அகலாமல்
    இணைக்கும் பாலம்-
    பிள்ளை..

    பிரிக்கும் மதிலைவிட,
    இணைக்கும் பாலம்
    மேலல்லவா…!

    *****

    ’ஆறில்லா ஊரின் அழகு பாழ்’ என்றனர் ஆன்றோர். இன்று ஆறிருக்கின்றது ஆனால் அதில் நீரில்லை. நீரற்ற ஆற்றின்மேல் பாலம் எதற்கு?  வறட்சியால் வையமே பரிதவிக்கின்றது; வருணனின் கருணைப்பார்வை புவியின்மீது படாதோ? என்று நெஞ்சுநொந்து பேசுகின்றார் திரு. சி. ஜெயபாரதன்.

    நீரில்லா ஊர்

    தாகமாய் உள்ளது ஒருகாலத்தில்
    வேகமாய் நீரோடிய இந்தக்
    கால்வாய் !
    காவேரி ஆறும் இப்படி ஒருநாள்
    சாவை அடையும் !
    மழை பெய்து நீரோட்ட மின்றேல்
    வேளாண்மை கருகி
    பஞ்சம் பெருகி
    பசுமை எங்கும் மங்கி
    நகரம் ஒருநாள் நரக மாகும் !
    பாலம் கட்டியும் இங்கே
    பயனில்லை !
    நீரில்லாக் கால்வாய் மேல்
    பாலமா ?
    ஞாலத்தில் இன்று மாந்தர்க்கு
    நீர்ப்பஞ்சம் ! நீர்ப்பஞ்சம் !
    நீர்ப்பஞ்சம் !
    வேர் உறிஞ்ச நீரின்றி
    பச்சை இலைகள் பல மஞ்சளாய்
    வெளுத்துப் போயின !
    இளந்தம்பதிகள்
    என்ன செய்வதென் றறியாமல்
    கலங்கி நிற்கிறார் !
    நீரில்லா ஊர் பாழாகும் !
    கருணையுள்ள
    வருண பகவானே ! எமக்கோர்
    வழிகாட்டு !

    *****

    காணிநிலம் வேண்டினார் மகாகவி பாரதி; ஆசையாய்க் கட்டிய வீட்டில் குடிபோகத் தடையாயிருக்கும் குடிநீர்ப் பஞ்சம் நீங்கவேண்டும் என்று வேண்டுகின்றார் கவிஞர் திரு. பார்த்தசாரதி.  அவர் வேண்டுதல் பலித்து, அக்கனவு இல்லத்தில் அவர் குடியேறும் நாள் நனவாக வேண்டும் என நாமும் வாழ்த்துவோம்!

    ஆசைக்கோர் இல்லம்

    எந்திரமய வாழ்க்கை மறந்து – நான்
    ****இயல்பாக வாழ எனக்கொரு
    தனி வீடு கட்டவேண்டும் -அதில்
    ****தனிமைச் சுகம் காணவேண்டும்..!

    அழகின் எல்லையாக இருக்கவேணும் – அதன்
    ****அருகே ஆறுகுளம் அமையவேணும்
    கடனில்லா வீடு கட்டவேணும் – அதில்
    ****கலையழகு  கொஞ்சவேண்டும்..!

    சொந்த உழைப்பில் விளையவேணும் – அதில்
    ****பந்தங்களுக்குப்  பங்கில்லா நிலைவேணும்
    இயற்கைச் சூழலோடு ஒன்றி – அதில்
    ****இன்பவுலா வரவேண்டும்..!

    கண்குளிர ரசிப்பதற்கும் வாழ்ந்து – அதைக்
     ****கண்டுகளிப்பதற்கும் வேண்டுமொருவீடென்று
    காலிமனையில் இல்லம் எழுப்ப – நெடுநாள்
    ****கனவோடுநான் காத்திருந்தேன்..!

    காலமொரு நாள்கனிந்து வர – என்
    ****கனவுமதுநன வாகியதொருநாள்
    நிலைக்கும் சொத்தாக இருந்தாலும் – அங்கே
    ****நிலையாகக் குடியேற வசதியில்லை..!

    மண்ணுரிமை பெற்றுவிட்டென் – ஆனால்
    ****மழைக்கடவுள் அருளில்லை
    நீரின்றி அமையாது உலகென – அய்யன்
    ****வள்ளுவன் மொழிந்ததுபோல்..!

    கழனிகாடுகள் வீடுகள் குளிர்ந்திருக்க – ஆங்கே
    ****கனிந்தமழையின் கொடைவேண்டும்!
    ஆசையாய்க் கட்டிய இல்லமதில்
    ****அங்கேயில்லை குடிதண்ணீர்..!

    வெறிச்சோடிக் கிடக்குது எம்வீடு – மனம்
    ****வெதும்பிப் பார்ப்பேனவ்வப்போது
    காலமாற்றத்தால் உருவாகும் கதைபோல் – அது
    ****கனவுவீடாக மாறித்தான்போனது..!

    வருஷமொரு முறைபார்த்து வந்தேன் – இப்ப
    ****வயசு அறுபத்தியாறாச்சு
    கட்டிய வீட்டில் குடியேற – காலமின்னும்
    ****எட்டியதூரத்தில் இல்லையம்மா..!

    இரவானால் பறவைகள்தன் கூட்டிற்கு – அது
    ****இயற்கையாய்ச் செல்வதுபோல்
    இருக்கும் வரையில் எண்ணங்கள் நம்மினிய
    ****இல்லம் நோக்கியே நகரும்..!

    அன்புக்கோர் மனைவி பாசத்துக்கோர் பெண்
    ****பண்புக்கோர் பிள்ளையெனும்
    வரிசையிலே வாழ்க்கையில் இன்னு – மொரு
    ****ஆசைக்கோரில்லம்  எனவொன்று
    இறையருளால் அனைவரும் பெறவேண்டும்..!

    *****

    நல்ல கவிதைகளை நம் உள்ளம் இரசிக்கத் தந்திருக்கும் கவிஞர்களுக்குப்  பாராட்டுக்கள்!

    அடுத்து வருவது இவ்வாரத்தின் சிறந்த கவிதையாய்த் தேர்வாகியிருப்பது…

    வீடு பேறு அழகான குடும்பம் இது!
    இல்லறமே நல்லறமாம்!
    அன்பான மங்கை நல்லாள்!
    பண்பு மிகு ஆண் மகனாம்!
    மனதால் இணைந்தார்கள்!
    பெற்றவர்கள் இசைவோடு
    திருமணமும் முடித்தார்கள்!
    அழகான வீட்டினிலே
    அமைதியுடன் வசித்தார்கள்!
    வீடென்ற பெயர் ஏன் வந்தது?
    கவலையை விட்டதினால் வீடானதோ?
    ஆணவத்தை விடும் இடம்
    என்பதால் வீடானதோ?
    கோபத்தை விடும் இடம்
    என்பதால் வீடானதோ?
    நான் என்பதை விட்டு
    நாம் என்று வாழ்ந்தார்கள்!
    ஆண்டவன் அருளாலே !
    நல் மழலை பெற்றார்கள்!
    அன்பை விதைத்தார்கள்!
    ஆனந்தமாய் இருந்தார்கள்!
    இசைபட வாழ்ந்தார்கள்!
    ஈகை புரிந்ததினால்!
    உயர்வை அடைந்தார்கள்!
    ஊக்கத்துடன் உழைத்தார்கள் !
    எண்ணியதை பெற்றார்கள்!
    ஏழேழு பிறவியிலும் தொடரும் சொந்தமிது !
    ஐயமில்லை! ஐயமில்லை!
    ஒன்று பட்ட உள்ளத்தால்!
    ஓங்கியது உங்கள் வாழ்க்கை!
    ஔவை மொழி போல இனிக்கட்டும்!
    அஃதே எங்கள் ஆசை!

    ஆணவத்தைவிட்டு அன்பால் இணைந்த இணையர், இல்லறமாம் நல்லறத்தின் பயனாய்ப் பெறுகின்ற இன்மழலைக்கு ஈடேது இவ்வுலகில்?

    பெருமவற்றுள் யாமறிவ தில்லை அறிவறிந்த
    மக்கட்பே றல்ல பிற என்று மக்கட்பேற்றின் மாண்பைப் போற்றுகின்றார் வாழ்வியல் வலவர் வள்ளுவர்.

    நன்மக்கட்பேற்றோடு முற்றுப் பெறுவதில்லை இல்வாழ்க்கை. ஈகை எனும் இனிய குணத்தால் அது மேலும் சிறக்கிறது எனும் அரிய வாழ்வியல் உண்மையை எளிமையாய்ச் சொல்லியிருக்கும் திரு. பழ. செல்வமாணிக்கத்தின் கவிதை இவ்வாரத்தின் சிறந்த கவிதையெனும் பெருமையைப் பெறுகின்றது. கவிஞருக்கு என் பாராட்டுக்கள்!

    Share
  • படக்கவிதைப் போட்டி 105-இன் முடிவுகள்

    -மேகலா இராமமூர்த்தி

    momandchild

    திருமிகு. ஷாமினியின் புகைப்படத்தை இவ்வாரப் படக்கவிதைப் போட்டிக்குத் தேர்வுசெய்து தந்திருக்கிறார் வல்லமை ஃபிளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி. சாந்தி மாரியப்பன். மங்கையர் இருவருக்கும் என் மனங்கனிந்த நன்றி!

    இயற்கையின் படைப்பில் கடலும் மலையும் என்றுமே காணச் சலியாதவை. பாதங்களை வருடிச்செல்லும் கடலலையில் நின்றிருக்கையில் பெரியோரும் காலம்மறந்து குதூகலிக்கும் குழந்தைகளாவர்.

    தாயும் சேயும் கடலோரம் களித்திருக்கும் இக்காட்சியைக் கவிஞர்கள் எப்படியெல்லாம் நோக்கியிருக்கிறார்கள் என்பதை அவர்தம் பாக்கள்வழித் தெரிந்துகொள்வோம்.

    ***

    ”அலையில் ஆடவேண்டும் எனும் சேயின் விருப்பை மறுக்காது நிறைவேற்றும் பாசத்துணை தாயன்றி வேறில்லை” என்று நெகிழ்ந்துரைக்கின்றார் திரு. செண்பக ஜெகதீசன்.

    பாசத் துணை…

    அழுது பிள்ளை அடம்பிடிக்கும்,
    அலைகள் மோதும் கடலினிலும்
    விழுந்து குளிக்க விருப்புடனே
    வில்லாய் வளைந்து சத்தமிடும்,
    மெழுகாய் உருகித் தாயவளும்
    மெல்ல நனைப்பாள் கால்களையே,
    பழுது யேதும் இல்லாத
    பாசத் துணையது தாய்தானே…!

    ***

    ”பெயர்த்தியை உயர்த்திப் பிடிக்கும் பாட்டியின் பாசத்தோடு யாரும் போட்டியிட முடியாது” என்கிறார் திரு. பழ. செல்வமாணிக்கம்.

    கடலினும் பெரிது இவர்களின் அன்பு;
    மலையினும் பெரிது பாட்டியின் பாசம்;
    உலகில் உயர்ந்தது பேத்தியின் நேசம்;
    அன்பு அணைப்பில் ஆண்டவனைப் பார்க்கிறேன் ;
    ஆனந்தத்தின் எல்லையை இங்கு தான் பார்க்கிறேன்;
    கடல் மகள் அலை வந்து , தாயின் காலை
    தொட்டு வணங்கிப் போவதைப் பார்க்கிறேன்;
    மகனையும், தாயையும், இணைக்கும்
    அன்புப் பாலம் இந்தப் பேத்தி!
    பேத்தி காலில் நீர் பட்டால் கூட வலிக்கும் என
    தூக்கிப் பிடிக்கும் அருமைப் பாட்டி!
    மழலையும் , தாய்மையும், அன்பாய் சேர்ந்து!
    இறைவனின் வடிவாய் கண்டேன் இன்று!
    கடலருகே நிற்பது ஆபத்தன்றோ!
    நிற்பது இரண்டும் குழந்தையன்றோ !
    வயதானால் பெரியவரும் குழந்தையன்றோ!
    இருந்தாலும் அஞ்ச வேண்டாம்!
    கடலும் நமக்கெல்லாம் அன்னையன்றோ !
    அன்னை, பிள்ளைகளை வெறுப்பதுண்டோ !
    அலையாய் வந்து தான் அடிப்பதுண்டோ!

    *** 

    ”பெண்ணென்று பிறந்துவிட்டால் மண்ணில் இல்லையே பாதுகாப்பு! நச்சரவுகள் உனைத் தீண்டி நாசம் செய்யாதிருக்க முத்தே உனைநான் காப்பேன் சிப்பியாய் இருந்து!” என்று பகரும் தாயைக் காண்கிறோம் திருமிகு. சத்தியப்ரியா சூரியநாராயணனின் கவிதையில்.

    சிப்பிக்குௗ் இருக்கட்டும் முத்து.

    அழகாய் மகௗ் பெற்று
    ஆசை தீர வௗர்க்கிறேன்
    இன்பம் பொங்குதடி உன் முகம் பார்க்கையிலே-இன்று
    ஈர மணலில் தனியே துள்ளி குதித்தாட
    உன் மனம் ஏங்குவதை அறிவேனடி!
    ஊரெல்லாம் நச்சுப் பாம்புகௗடி
    என் செல்வமே, மொட்டென்றும் பாராமல் கொத்திப் பார்க்குதடி
    ஏன் இந்த அவலம் தெரியவில்லை
    ஐயம் மட்டும் நெஞ்சினின்று அகலவில்லை
    ஒப்பவில்லை மனம் உனை தனியே விட
    ஓடி விளையாட ஏற்ற இடமில்லை உனக்குத் தர.. அட
    ஔவை தோற்றத்தின் அர்த்தம் இன்றுதான் புரிகிறதடி!

    சிப்பிக்குௗ் முத்தைப் போல
    சிறு மலரே, கைக்குள்ளேயே இருந்துவிடடி
    பகைவனை அறியும் பக்குவம் வரும் வரை…

    ***

    தாயிவள் குழந்தையைக் கையிலேந்திக் கடலை நோக்கிப் போவது அதனைக் கடலில் வீசவோ என்று ஐயுற்று, “பெற்ற தாயே முந்தித் தவமிருந்து முந்நூறு நாள் சுமந்துபெற்ற அழகுச் செல்வத்தை ஆழியில் வீசலாமா?” என்று வெகுண்டு வினவுகின்றார் திரு. சி. ஜெயபாரதன்.

    ஆங்காரி

    பெற்ற தாயின் வாயைப் பார்!
    எட்டியுள்ள கடலைப் பார்!
    சிட்டு போன்ற
    எளிய சிறுமியைப் பார்!
    தாயின் வாய் சினம் காட்டுது!
    கடலின் வாய்
    விழுங்கப் பார்க்குது!
    சேயின் மெய் துடிக்குது!
    கை துடிக்குது!
    உயிரென்ன வெள்ளரிக்காயா?
    பிள்ளை என்ன
    கிள்ளுக் கீரையா?
    தவமிருந்து பெற்ற பிள்ளை
    தவிக்குதடா!
    அழுவாத பிள்ளை,
    அடம் பிடிக்கா பிள்ளை
    எழு பிறப்பிலும் உண்டோ?
    கடலில் போடப் போகும்
    மடந்தை இவள்
    தாயா?
    அல்லது பேயா?

    ***

    சிந்திக்கவைக்கும் கவிதைகளைத் தந்திருக்கும் கவிஞர் குழாத்துக்கு என் பாராட்டுக்கள்!

    இனி இவ்வாரத்தின் சிறந்த கவிதையாய்த் தேர்வாகியிருப்பது…

    தாயின் மகிழ்ச்சி

    பத்தியங்கள் பலயிருந்து பத்துமாதம்
    பக்குவமாய் வயிற்றில்சுமந்த அன்னைநான்!

    ஈன்றேடுத்த தாயெனக்கு இதைவிட
    வேறென்ன மகிழ்ச்சி இருக்குதம்மா!

    காலைப் பொழுதில் வேலைபலயிருந்தும்
    பிள்ளை மகிழ்ச்சியில் கொள்ளைசுகம்காண்பேன்!

    குடும்ப பாரம் சுமந்தாலும் அன்னையெனக்குக்
    குழந்தைப் பாசம்தனில் சுமைபலகுறையும்!

    ஆழ்ந்த வறுமையினால் உனை ஆள்
    ஆக்க நாளெல்லாம் எதிர்நீச்சலிடுவேன்!

    கள்ளச் சிரிப்பை மறைந்துரசிக்கக்
    கரைவராமல் கடலலை கண்டுமகிழும்!

    பெண்ணாகப் பிறந்தயென் பாக்கியமே!
    எண்ணத்தில் நிறைந்திருக்கும் பெட்டகமே!

    ஆண்மை ஆதிக்கத்தில் அகப்படாமல்
    பெண்ணினம் தழைக்கப் பாடுபடு!

    வன்முறைபல தாண்டியுன் வாழ்வினிலே
    வழித்தடம்பதித்து வெற்றிபெற வேண்டுமம்மா!

    புண்ணியமே பலசெய்து பெற்றிடினும்
    பெண்ணியமே பெரிதென்று கொண்டுவிடு!

    பெண்சிசுவதைக் கொல்வதைத் தடுத்திடு!
    பெண்மையே மேன்மையெனப் போற்றிடு!

    நானிலத்தில் பெண்ணைக் கேலிசெய்வோரை
    நாவறுக்கும் வாளாய்நீ யெழுகவே!

    பலநாளும்தாலாட்டிப் பண்புடன் வளர்த்ததாலே
    உலகாளும் பெண்ணாக நீயொருநாள் வரவேணும்!

    நவிலுகின்ற நற்பொருளை நன்கறிந்து
    நவின்றுநாளும் பணிதுவக்கப் பணிகின்றேன்!

    வளர்த்தவுனை வாய்பிளந்து பார்க்கையில்
    களைப்பும் சோர்வும் களையிழக்கும்!

    கடல்நீரில் ஒருசேரநாம் கால்நனைக்க யென்
    கவலையெலாம் கரையுமம்மா உனைநினைக்க!

    வாய்மைக்கு எடுத்துக் காட்டும் நீதான்!
    வாழ்க்கையின் வழிகாட்டியும் நீதான்!

    அன்னையெதை ஊட்டி வளர்த்தாளென
    ஆருமுனைக்கேட்டால் அன்பூட்டினாள்
    எனச்சொல்லு!

    ”மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையைக் கொளுத்துவோம்” என்றார் மகாகவி. நானிலத்தில் பெண்ணை இழிவு செய்வோரின் நாவை அறுத்தெறியும் வாளாய் எழு!” என்று தன் பெண்மகவுக்கு மகத்தானதோர் அறிவுரை கூறும் மறத் தாயைப் பார்க்கிறோம் இக்கவிதையில்!

    நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகளோடு, நிமிர்ந்த நன்னடை பழகும் செம்மை மாதரை உருவாக்கவேண்டிய பெரும் பொறுப்பும் கடமையும் இற்றைப் பெற்றோர்க்கு, குறிப்பாக, அன்னையர்க்கு இருக்கின்றது. அதன் அவசியத்தைப் பேசியிருக்கும் பெருவை திரு. பார்த்தசாரதியின் பாடலைப் பாராட்டி, அவரை இவ்வாரத்தின் சிறந்த கவிஞரென அறிவிக்கின்றேன்.

     

     

     

     

    Share
  • படக்கவிதைப் போட்டி 104-இன் முடிவுகள்

    -மேகலா இராமமூர்த்தி

    man lying on seashore

    இவ்வாரப்போட்டிக்கு வல்லமை ஃபிளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி. சாந்தி மாரியப்பன் தெரிவு செய்திருக்கும் இந்தப் படம் திருமிகு. காயத்ரி எடுத்தது. இவ்விருவருக்கும் என் நன்றி!

    தணல்போலத் தகிக்கும் மணலிலே துணிக்குடையின் அடியிலே சாய்ந்திருக்கும் இந்த மனிதரைக் காண்கையில், மாடமாளிகையில் நெஞ்சினிக்கும் பஞ்சணையில் துயிலும் பேறு எல்லார்க்கும் வாய்ப்பதில்லை; வெட்டவெளியில் பாயுமின்றிப் படுத்துறங்கும் பேர்களுக்கும் பாரினிலே பஞ்சமில்லை எனும் உண்மை உறைக்கிறது; நெஞ்சம் வேதனையில் உறைகிறது!

    இந்தப்படம், நம் கவிஞர்களின் நெஞ்சில் எண்ணற்ற எண்ண அலைகளைத் தோற்றுவித்திருக்கும் என்றே எண்ணுகிறேன். அவ் அலைகளில் நாமும் நீந்தி வருவோம்! கவிச்சுவை மாந்திவருவோம்!

    ***

    ”சிந்தையில் நிறைவிருந்தால் பஞ்சணை தேவையில்லை; மண்தரையும் மனங்கவரும் மஞ்சமே” என்று எளிமையின் இனிமை பேசியிருக்கிறார் திரு. பிரசாத் வேணுகோபால். 

    நிம்மதி

    உள்ளநிறை இல்லாமல் இல்லையில்லை என்றெண்ணப்
    பஞ்சணையில் சாய்ந்தாலும் தூக்கமது வாராது
    உள்ளதுவே போதுமென்ற எண்ணமது கொண்டுவிட்டால்
    மண்தரையும் நல்மஞ்சம் ஆம்.

    *** 

    கொடத்த அணைச்சுகிட்டுக் கூடாரம் போட்டுக்கிட்டுப் படுத்துக்கிடக்கும் தம்பியிடம், அவருடைய இந்த நிலைக்குக் காரணமென்ன என்று கனிவோடு விசாரிக்கிறார் திரு. கருணானந்தராஜா. 

    1. கொடத்த அணைச்சுக்கிட்டு கூடாரம் போட்டூக்கிட்டு
      படுத்தூக் கெடக்கிறியே தம்பி நீ
      பரதேசி ஆனாயோ வெம்பி!
    2. பாலவனத்தினிலே பரதேசியானவனே
      வேல கெடைக்கலையோ தம்பி – இந்த
      வெயிலும் சுடுகலையோ தம்பி
    3. கூடுகட்டித் தூக்காணாங் குருவியெல்லாம் வாழுகையில்
      கேடுகெட்டுப் போனாயே தம்பி இங்க
      கெடந்து வதங்குறியே தம்பி
    4. பாடு… பட்டுப்பிட்டு பழஞ்சோத்தைக் கொட்டிப்பிட்டு
      வாடிப் போய்த் தூங்கிறியோ தம்பி – உன்
      வரலாறு தோணலையே தம்பி!
    5. ஆத்துக்காரி கட்டித்தந்த சோத்த முழுங்கிப்பிட்டு
      வேர்த்துக்கொட்டத் தூங்கிறியோ தம்பி – நீ
      வேலையத் தொடங்கலையோ தம்பி!
    6. கொடத்துல தண்ணி மொண்டு கொண்டுவந்து வச்சிப்பிட்டு
      படங்கு கட்டித் தூங்கிறியோ! தம்பி – எதிர்
      பார்க்குதுன்ன ஒங்குடும்பம் நம்பி
    7. குப்பையில கண்டெடுத்த கொடம், வாளி, போத்தல்களை
      எப்ப நீ விற்கப் போறே தம்பி – கொஞ்சம்
      எணச் சாய இருக்கிறியோ! தம்பி.
    8. எணச்சாய இருப்பதற்கு ஏழைக்கு நேரமில்ல
      பணங்காசு வேணுமுன்னாத் தம்பி – உன்
      படங்கச் சுருட்டிக்கோடா எம்பி
    9. சேர்த்ததெல்லாம் சீக்கிரமா, சில்லறைக்கு வித்தூப்பிட்டு,
      ஆத்துக்குப் போயிருடா தம்பி – நீ
      அங்க போயி தூங்கிக்கலாம் தம்பி
    10. தன்னான தானே நன்னே தானான தானே நன்னா
      தன்னானத் தானே தன்னே தானே நன்னானே – தன்னே
      தானானத் தானேதன்னே தன்னாந் தன்னானே!
       

     ***

    ”செல்வந்தன் யார்? கோடிப்பணம் இருந்தும் போதாதென்று மேன்மேலும் தேடுபவனா? இல்லை! இருக்கும் பொருளில் நிறைவுகண்டு வருத்தமின்றி வாழும் ஏழையே உண்மைச் செல்வந்தன்!” என்று செல்வத்துக்குச் சிறந்ததோர் விளக்கம் தருகிறார் திரு. செண்பக ஜெகதீசன். ”செல்வம் என்பது சிந்தையின் நிறைவே” என்றுதான் குமரகுருபரரும் கூறியிருக்கின்றார்.

    செல்வந்தன்…

    இருப்பதை வைத்து நிறைவுறாமல்
    இன்னும் வேண்டும் எனுமவாவில்
    அருகி லுள்ளதை நுகராதே
    அல்ல லுறுவோர் செல்வரல்லர்,
    இருக்கும் பொருளே போதுமென்ற
    இதய நிறைவுடன் உண்டுறங்கும்
    வருத்தம் மறந்த ஏழையேதான்
    வாழும் உண்மை செல்வந்தனே…!

    ***

    ”இறைவன் தந்த அருட்கொடையாம் உறக்கத்தை, உலகியல் தேவைகளைத்  தேடித்தேடித் தொலைத்துவிட்டான் மனிதன். ஆகவே நிம்மதியாய்த் தூங்கும் உனைக்கண்டால் என்னுள் எழுகிறதே ஏக்கம்!” என்று துணிக்குடைக்கீழ் தூங்கும் மனிதனைக் கண்டு ஏங்கிப் பாடுகிறார் திரு. பழ. செல்வமாணிக்கம். 

    தூக்கம், ஆண்டவன் தந்த அருட் கொடை தோழா!
    துக்கம் மறந்த நிலை, தூக்கம் என் தோழா!
    பாலுக்கு அழுது தூக்கத்தை தொலைத்தது
    சில காலம்!
    படித்துப் படித்து தூக்கத்தை தொலைத்தது
    சில காலம்!
    வேலை தேடி தூக்கத்தை தொலைத்தது
    சில காலம்!
    பருவ வயதில் துணையைத் தேடி
    தூக்கத்தைத் தொலைத்தது சில காலம்
    குடும்பச் சுமையில் தூக்கத்தை தொலைத்தது
    சில காலம்!
    பணத்தைத் தேடி தூக்கத்தை தொலைத்தது
    சில காலம்!
    தொலைத்த தூக்கத்தை தேடிப்
    பிடித்தாயோ என் தோழா!
    அன்னை வயிற்றில் தூங்கிய தூக்கம்!
    இன்று வரையில் மறந்த தூக்கம்!
    உன்னைப் பார்த்ததும் வந்தது ஏக்கம்!

    *** 

    ”என் அழிபசி போக்கியெனை ஆதரிக்க ஆருமில்லை என்றாலும் துணிக்குடையின் கொடையாலே நானயர்ந்து தூங்குகின்றேன்” என்று உறங்கும் மனிதரிவர் தன்னிலையைச் சொல்வதாய்க் கவி வடித்திருக்கின்றார் பெருவை திரு. பார்த்தசாரதி. பசிப்பிணி போக்கும் மருத்துவர்களுக்குப் பாரில் எப்போதும் பஞ்சமே…என்ன செய்வது?

    சிந்தனை உறக்கம்!

    இறைந்துண்டு வாழும் வாழ்க்கையானாலும்..
    இறவாப் பசியென்பதனைவர்க்கும் இயற்கைதானே..!

    சதைரத்தம் எலும்புடன் உடலென்றாலங்கே
    பசிமயக்கம் உறக்கமென்பதும் உடன்பிறப்பன்றோ?..

    உறக்கத்துக்கு உரிமைக்குரல் தேவையில்லை..
    ஊணுறக்க மில்லையேல் உயிர்களுமில்லையப்பா..!

    மாலைச் சூரியனின் கருணையினால்..
    மணற் படுக்கையிலென் கவலைமறந்துவிட..

    வெட்டாந்தரை இடம்தான் நானுறங்கும்
    கட்டாந்தரை..நீர்வற்றிருகிய நிலமேயென்சொர்க்கம்!

    துணிக்குடையின் கொடையால் தந்நிழல்தர..
    துயிலெழ மனமில்லா மதிமயக்கம்தனில்..

    உறவொன்றுமில்லையடா உறக்கம்தான் சொந்தமடா
    ஊர்திரிந்துஉடல் களைத்துறங்கிக் கிடக்கிறேன்..!

    அவனியில் படுமின்னலிலே யானும்..
    அகதியாகி அயர்ந்துறங்கிக் கிடக்கின்றேன்..!

    வண்டினம்வாழ பண்புடை மலர்போல..இங்கு
    வறியவர்க்குதவும் குணமுடை யோரில்லையப்பா,,!

    ஈகைமிகு தென்றலும் மேகமுடன்சேர்ந்ததால்..
    இதமாகவென் பசியும் அடங்கிப்போனதே..!

    இல்லாதவனைக் கண்டுகொளா தேசத்தின்..
    இனம்காணா நினைவலையில் உறங்குகிறேன்..!

    பசியுறக்கம் நிரந்தர வரமேயானாலும்..
    பாரிலில்லை ஆருக்கும்பசிபோக்கும் மனப்போக்கு..!

    பாவம்வயிறு செய்த தவறுதானென்ன..
    தினம்வறுமை தானெனை வாட்டிடுதே..!

    வயிற்றுக்குச் சோறிட வேண்டும்..
    இங்கும் வாழும் மனிதர்க்கெல்லாம்…என

    மஹாகவியின் கவிப்பசியறிந் தாங்கே..
    மகத்தான சிந்தனைக்கே அடிபணியவேண்டுமப்பா..!

    மண்குடிசை வாழ்வு நிலையென்றால்..
    மண்ணிலென் வறுமைதீரும் நாளெப்போது?..

    உறக்கத்தினாலென்னுடல் மண்ணைத் தொட்டாலும்..
    விழித்தெழும்போதென் சிந்தனைகள் விண்ணைத்தொடுமப்பா..!

    இல்லையெனும் சொல்லேயிலாமல் இருந்திருந்தால்..
    இயல்புவாழ்க்கை யாவர்க்கும் எளிதாகுமப்பா..

    நிறைவுடனே நானிலத்தில்நாம் வாழநித்தம்..
    இறைவனிட மதையேமண்டியிட்டு வேண்டிடுவோம்..!

    *** 

    ”என்னைத் தாங்கிவளர்த்த தாயெனும் தெய்வத்தின் அருமைஅறியாது துரத்தினேன் அன்று. நாதியற்று நடுத்தெருவில் நிற்கின்றேன் இன்று! நீங்களேனும் உங்கள் தாயைப் பேணுங்கள் நன்கு!” என்று தன் அனுபவங்களை வேதனையோடு விளம்பும் மனிதரைக் காண்கிறோம் திருமிகு. சத்தியப்ரியா சூரியநாராயணனின் கவிதையில்.

    தவறவிட்ட தங்கம்

    கண்மூடி நானிருப்பது நல்ல கனவினிலல்லவே.
    கண்ணுக்குத் தெரியும் கானல் காட்சியன்றி நீருமல்லவே..

    “யாசித்தாலும் நிம்மதியான வாழ்க்கை! ”
    யாரோ சொல்லக் கேட்டிருக்கிறேன்
    யானும் வாழ்ந்தேன் அவ்வித வாழ்வை
    யாரும் மறுப்பதற்கல்லவே..

    உழைத்து நிதமும் உணவளிக்காவிடினும்
    உண்மையான பாசம் பொழிந்தாள்
    உண்டி உறையுௗ் எதுவுமின்றியும்
    உன்னத வாழ்வளித்தது அவௗல்லவே..

    அறியவில்லை அவள் பாசம் அன்று
    அதிகாரம் கொண்டேன் ஆண்மகனென்று
    அதட்டி அவளை விரட்டினாலும்
    அௗவில்லா மதிப்பளித்தாலல்லவே..
    கடற்கரை மணலில் காண்கிறேன் பலரைக்
    கண்டதுமெனை விலகியே செல்கின்றனர்
    கடவுளே..! நாய்க்களிக்கும் உணவு கூட
    நான் புசிக்கத் தருவதில்லை!
    கண்னென எனைக்காத்தவௗ் விட்டுச்சென்றதுமே..

    ஊதாரியாய்த் திரிந்தாலும் எனக்கு
    ஊட்டி விட்டு மகிழ்ந்தாளே
    ஊரில் ஒருவர் கூட மதிப்பதில்லை
    உலகத்தை விட்டு அவௗ் சென்றதுமே..

    உதறிவிட்டேன் ஐயகோ
    உயிர்கொடுத்த அவளை
    ‘தொலைந்து போ நீ’ என விரட்டித்
    தொலைத்து விட்டேன் என் தங்கத்தை.

    காரணமில்லாமல் காதலிப்பவௗ் பெற்றெடுத்தவௗ் மட்டுமே
    காலம் சென்ற பின்னரே உணர்கிறேன் என்றுமே
    மனிதனாய் மதிக்க கூட நாதியில்லை
    மண்ணை விட்டு மங்கையவள் பிரிந்ததுமே..

    பிரிந்தது உனதுயிர் – தாயே இங்கு
    பிணமானது நீ பெற்ற உயிர்
    பிரிவில் தான் உணர்கிறேன்
    பித்துப்பிடித்து நான் செய்த தவறுகளையே..

    “ஆண்டாண்டு காலம் அழுது புலம்பினார் மாண்டார் திரும்புவதில்லை”
    ஆண்டாண்டு காலம் நான் இனி வாழ்ந்தாலும்
    ஆதரவளிக்க எவருமில்லை..

    தவறவிட்ட தங்கத்தை எண்ணி ஏங்குகிறேன்
    தக்க வைத்துக் கொ‌ள்ளு‌ங்க‌ள் நீங்களாவது
    தங்கள் கையிலிருக்கும் தங்கத்தை
    தாயெனும் தெய்வத்தை..!

    *** 

    ”அந்தோ! தேசமில்லை அவர்கள் வசிக்க; நேசமில்லை அவர்கள் சுகிக்க” என்று கதியற்று அகதியாய் அலையும் மனிதரின் அவதியை உணர்வுபூர்வமாய்த் தன் கவிதையில் பொதிந்து தந்திருக்கின்றார் திருமிகு. மா. பத்ம பிரியா.

    துரத்தப்பட்ட உறவு

    தேசமில்லை
    உன் தேசமில்லை
    ஓயாத ஓலம்….
    அவர்களுக்கோ
    நேசமில்லை
    நெஞ்சில் நேசமில்லை
    மீளாத சோகம்…
    அகதி எனும் கேலியாய்
    தூற்றும் தூவேசக் குரல்
    காற்றில் தெறிக்க
    தொலை தூர பயணத்தில்
    மண்ணில் விதைக்கப்பட்டவர்கள் ஏராளம்
    பாலியல் அத்துமீறல்கள் தாராளம்
    ஆண் என்றால் கணநேரம் துயிலலாம் தெருவோரம்
    பெண்ணென்றால் என் செய்ய?
    மணல்மேடுகள் சவக்குழிகளாக
    உறவுகளும் உடைமைகளும் சிதறவிட்டு
    அகதியாய் அலையவிடும்
    பாவிகளே
    என்று தீரும்
    எங்கள் சுதந்திர தாகம்.

    ***

    படத்தின் வழியே வாழ்க்கைப் பாடத்தினைப் போதித்திருக்கிறார்கள் நம் கவிஞர்கள். கருத்துச் செறிவுமிக்க அவர்களின் கவிதைகளுக்கு என் நன்றியும் பாராட்டும்!

    இவ்வாரத்தின் சிறந்த கவிதையாக நான் தேர்வுசெய்திருக்கும் கவிதை இனி!

    என் குடியிருப்பு

    கடற்கரையே என் குடியிருப்பு!
    கஞ்சி ஊத்த எனக்கு,
    காவல் காக்க எனக்கு
    கடற்தாயே துணையிருப்பு!
    காத்தாடி வேணாம்,
    கதவும் தேவை யில்லை!
    வாடகை தர வேணாம்!
    வரி கட்ட வேணாம்!
    போன சுனாமியிலே
    பொண்டாட்டி
    போய் விட்டாள்!
    படகும் போச்சு!
    அடுத்தடுத்த அலை அடிப்பில்
    குடிசையும் போச்சு!
    பிடிச்ச மீனெல்லாம் போச்சு!
    காசும் போச்சு!
    கட்டிய வேட்டியும் போச்சு!
    கரையிலே கிடந்த
    போர்வையே கூரை யாச்சு!
    கோரமாய்த் தாக்கிய
    சுனாமி அழிவைக்
    காண வந்த
    முதல் அமைச்சர்
    குடிசை கட்டித் தருவதாய்
    உறுதி கூறினார்!
    இனிதாய்ப் பேசினார்!
    குடிசை கட்ட வந்த போது
    நிலம் விற்க மறுத்து விட்டார்
    நிலச் சொந்தக் காரர்!
    இந்தக் குடியிருப்பில்
    இனிப் பயமில்லை எனக்கு!
    சுனாமி அடித்தாலும்
    புயல் அடித்தாலும்
    புதுசாய்க் கட்ட
    ஓலைப் பாய் கிடைக்காதா?
    ஒடிந்த கம்பு ஒன்று
    மிதக்காதா?
    கடற்கரையிலே வாழ்ந்து
    கடலிலே புதையும்
    ஜடங்களுக்கு
    இறுதிச்
    சடங்கும் இல்லை!
    இரங்குவாரும்
    இல்லை!

    கடற்கரையே என் குடியிருப்பு; கடலன்னையே என் துணையிருப்பு; வானமே என் மேற்கூரை; பூமியே என் பஞ்சணை! என எதை இழந்தாலும் நம்பிக்கை இழக்காது வறுமையிலும் செம்மையாய் வாழும் மனிதனைக் காணமுடிகின்றது இக்கவிதையில்.

    ”எதைக்கொண்டு வந்தோம் நாம் இழக்க?” எனும் விட்டேற்றியான மனப்பாங்கோடு, துள்ளிவரும் கடலோரம் பள்ளிகொண்டிருக்கும் இந்த மனிதரைப் போல் கவலையின்றி வாழும் கலையை அனைவரும் கற்றுவிட்டால் வாழ்வில் துன்பமில்லை; ஒரு துயரமில்லை!

    ஏழையின் எதிர்பார்ப்பில்லா மனநிலையை எளிமையாய் எடுத்தியம்பியிருக்கும் திரு. சி. ஜெயபாரதன் இவ்வாரத்தின் சிறந்த கவிஞராய்த் தேர்வாகின்றார். அவருக்கு என் பாராட்டுக்கள்!

    Share
  • படக்கவிதைப் போட்டி 103-இன் முடிவுகள்

    -மேகலா இராமமுர்த்தி

    தளும்பும் தண்ணீரைத் தத்ரூபமாகக் காட்சிப்படுத்தியிருக்கும் திரு. அவினாஷ் சேகரனின் புகைப்படத்தை இவ்வாரப் படக்கவிதைப் போட்டிக்குத் தேர்வு செய்திருப்பவர் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி. சாந்தி மாரியப்பன். புகைப்படக் கலைஞருக்கும், தேர்வாளருக்கும் என் நன்றி.

    waterdrops

    விசும்பின் துளி தரையில் வீழாமற் போனால் பசும்புல்லின் தலையையும் காண்பது கடினம் என்றார் தெய்வப்புலவர்.

    நீலவண்ணத்தில் சாலம் காட்டும் இந்நீர், நம் கவிஞர்களின் கற்பனை ஊற்றைத் தளும்பச் செய்திருக்கும் என்று எண்ணுகிறேன். அதில் நாமும் நீந்திக்களித்து வருவோம்!

    ***

    ’வான்பொய்ப்பினும் தான்பொய்யா மலைத்தலைய கடற்காவிரியைக் கன்னடத்துப் பைங்கிளியென்று கருநாடகம் கருணையின்றி சிறைப்பிடித்ததால், வளமிழந்த தமிழ்நாடு வறட்சியில் தவிக்கின்றது. பாய்ந்துவந்த காவிரியைப் படத்தில் மட்டுமே காணும் அவலம் என்று மாறும்? என வேதனை மேலிட வினவுகின்றார் திரு. எஸ். கருணானந்தராஜா.

    நீரிற் குமிழி நீயே சாட்சி!

    பாய்ந்து வரும் காவிரியில் நீந்திவரும் நீர்க்குமிழி
    ஓய்ந்துவிட்டாய், உன்படத்தின் காட்சி – இன்று
    உலகுக்கு அதுதானே சாட்சி

    காப்பியங்கள் சொன்னதெல்லாம் கனவாய்ப் பழங்கதையாய்
    மூப்படைந்து செத்தொழிந்து போச்சு – இன்று
    முகமிழந்த காவிரியாயாச்சு

    வாழ்த்துரைக்கச் செம்புலவர் வளநாடன் தாரமென்று
    கீர்த்தியுடன் வாழ்ந்தனை காவேரி – இன்று
    கிடக்கிறதே வெள்ளை மணல் வாரி (கடல்)

    வண்டலள்ளித் தமிழர் மண்ணில் வளங்கொழிக்க நன்செயெங்கும்
    கொண்டு தந்தாய் எங்களின் காவேரி – இன்று
    மண்டிய மண் அள்ளுதற்கு வயல் வரப்புப் படுக்கையெனக்
    கண்ட இடமெங்கும் மணல் லாரி.

    கன்னடத்துப் பைங்கிளியென்றுன்னையவர் சிறை பிடிக்க
    அன்னவரின் சொத்தானாய் தேவி – நாம்
    உன்னையினிக் காண்பதற்கு உள்ளதெல்லாம் உன்படம் தான்
    என்ன செய்வோம் இத்துயரை மேவி!

    ***

    வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன் என்றார் வள்ளலார் அன்று. தமிழ்மக்களின் பசிப்பிணி போக்கிய விவசாயிகளோ வாடிய பயிரைக் கண்ட அதிர்ச்சியில் தம் ஆருயிரையே துறந்துவருகின்றனர் இன்று! ஆறுகளில் வெள்ளம் ஆடிவந்த காலமெல்லாம் பழங்கதையாய்ப் போன வேதனையைக் கவிதையில் பதிவுசெய்திருக்கின்றார் திருமிகு. ஹரிதா.

    வாடிய பயிரைக்கண்டே
    வாடிமடிந்த மனிதனை அறிவாயோ,
    உனைக்காணாது உயிர்துறந்தோர்
    எத்துனையென்பதை அறியாயோ,
    பெருகிவழிந்தோடும் குழாயடிநீரோடு

    அலட்சியத்தினின்று மடிவற்றிப்போன
    ஆற்றுப்படுகைகளும் தூளிகட்டியாடிய
    ஆற்றங்கரை ஆலமரமும்
    நினைவுபடுத்துகிற பழைய நினைவுகளும்
    கடந்து வந்த பாதையினில் உணா்த்திவிட்டுபோகிறதுன் இழப்புகளைத்
    தாரைவார்க்க காத்திருக்கும் கார்ப்பரேட் எசமானா்கள் ஒருகோடி

    உனைத்தோடி நோன்பிருக்கும் ஜனங்கள்கோடி
    இனியேனும் இருப்பதைக் காப்போனோ
    இழந்ததை மீட்பேனோயெனும் ஏக்கத்தினிலே …

    ***

    நீரில்போடும் கோலங்கள் நிலைப்பதில்லை; ஆதலால், இல்லாததை நம்பி இருக்கும் காலத்தை வீணடிக்காதே; முயன்று செய் இயன்றதை!” என்று முயற்சியின் உயர்வைப் பேசுகின்றார் திரு. செண்பக ஜெகதீசன்.

    இன்றே செய்…

    நிலைப்பதில்லை
    நீர்க்கோலங்கள்-
    வாழ்க்கையாய்..

    குளத்தில் கல்லெறிந்து
    வளையங்களைத் தூதனுப்பினால்
    வராது நல்லகாலம்..

    இருக்கும் காலத்தில்
    இயன்றதைச் செய் முயன்று..

    இல்லாததை நம்பி
    ஏமாந்து
    இழந்துவிடாதே
    இருக்கும் காலத்தை…!

    ***

    ”கருவில் உயிர்கள் வளர்வது நீரில்; வயலில் பயிர்கள் வளர்வது நீரில். நீரின்றி அமையாது நிலவுலகு. எனவே உபரி நீரைப் பரிவோடு பகிர்ந்தளியுங்கள் உலகோருக்கு!” என்று நீர் சொல்லும் நீதியை திரு. பழ. செல்வமாணிக்கத்தின் கவிதையில் காண்கிறோம்.

    நீரும் நாமும் பஞ்ச பூதங்களில் நீர் இருப்பது முதலினிலே!
    ஈசனும் தந்தார் இடம் தன் தலையினிலே!
    கருவில் குழந்தை வளர்வது நீரினிலே!
    பயிர்கள் விளைவது நீரினிலே!
    பாவங்கள் கரைவது நீரினிலே!
    ஆனந்தம் தெரிவது நீரினிலே!
    அழுகையும் புரிவது நீரினிலே!
    நீரில்லா உலகம்!
    உயிரில்லா உடலாகும்!
    உயிர் வாழ உணவு வேண்டும்!
    உணவிற்கு நீர் வேண்டும்!
    இயற்கை தந்த செல்வம்
    அனைவருக்கும் பொதுவாகும்!
    அளவுக்கு மீறினால் அமுதமும்
    நஞ்சாகும் !
    உபரி நீரை பகிர்ந்தளித்தால்!
    உலகம் உயர்வாகும்!
    நீர்க் குமிழி வாழ்க்கையில்!
    உனது புகழ் நிலையாகும்!
    இது வண்ணக் குமிழ் சொன்ன
    எண்ணக் கதையாகும்!
    இதை நெஞ்சில் நிறுத்திடுங்கள்!
    நீடூழி வாழ்ந்திடுங்கள்!

    ***

    ”ஐந்தாம் பிள்ளையும் பெண்ணாய்ப் போனதால் மாமியார்க் கோபமும் மாமனார் சூழ்ச்சியும் பெண்குழந்தையை மிதக்கவிட்டது தண்ணீரில்; அதுகண்டு தாயோ மிதக்கிறாள் கண்ணீரில். பெண்ணாய்ப் பிறப்பதினும் நாயாய்ப் பிறப்பதே நல்லது போலும் இந்த நானிலத்தில்!” என்று நெஞ்சுநெகிழ்ந்து பேசுகின்றார் திரு. சி. ஜெயபாரதன்.

    தாயின் கண்ணீர்

    கண்ணீர் விடுகிறாள் அன்னை
    பத்து மாதம் சுமந்த சிசு
    தண்ணீரில் போகும் போது !
    ஐந்தாம் பிள்ளையும்
    பெண்ணாய்ப் போனதாம் !
    பெற்ற
    தந்தையின் சீற்றம் !
    மாமியார் கோபம் !
    மாமனார் சூழ்ச்சி !
    பெற்ற தாயிக்குத் துடிப்பு !
    இதய வெடிப்பு !
    வேதனை !
    ஐந்து பெண் குட்டி ஈன்ற
    எலும்பு நாயும்
    குட்டிகளைப் பேணுது;
    தாய்ப் பாலை
    ஊட்டுது !
    பெண்ணென்றால்
    பேயும் இரங்குமாம் !
    அழுது, அழுது
    அன்னையின் கண்ணீர்
    ஆறாய் ஓடுது !
    மானிட மாய்ப் பிறப்பதிலும்
    நாயாய்ப் பிறப்பது
    நல்லது !

    ***

    சேகரிக்க மறந்தோம் மழைத்துளி. அதனால் உழவரின்  கண்களில் நீர்த்துளி. மரங்கள் நிறைந்த கானை அழித்தோம்; வானை முட்டும் கட்டடங்கள் அமைத்தோம். விளைவு? வான் பொய்த்தது; நிலம் வறண்டது. இது மானிடப் பிழையேயன்றி வானின் பிழையன்று!” என்று சுட்டிக்காட்டுகின்றார் திருமிகு. மா. பத்ம பிரியா.

    துளிக்கு வலிமையுண்டு
    சிறுதுளி பெருவெள்ளமாவதை அறியாது
    உழலும் மானுடமே!
    துளிக்கும் வலிமையுண்டு
    உணர்வாய் நீ
    வானம் பார்த்த பூமிக்கு மறுக்கப்பட்ட மழைத்துளி
    மரம் நடாமையால் நமக்கான பதிலடி
    சேகரிக்க மறந்த மழைத்துளி
    வறண்ட பூமியென்னும் பேரிடி
    கான்கிரிட் கட்டடத்தின் சிரிப்பொலி
    விவசாயி கண்ணில் பெருக்கெடுக்குதே கண்ணீர்த் துளி

    தாரை வார்க்கும் நீர் வளமெல்லாம்
    நமக்கே விலையானது சேகரித்த நீர்த்துளியாக
    ஊழல் வளர்த்தெடுக்கும் ஓரிடத்துச் செழுமை
    தட்டிக் கேளாதவரின் இயலாமை
    உழைப்பாளி உடலில் பெருகும் வியர்வைத்துளி
    வன்கொடுமையால் வதைக்கப்படும் பிஞ்சுகளின் உதிரத் துளி
    சிறுதுளிதானே எக்காளமிடும் மனிதா
    எத்தனை எத்தனை சிறுதுளிகள்
    அத்தனை அத்தனை ஒன்றிணைந்து
    அசுரக்காட்சியாய் அச்சுறுத்தும்
    நிறமாறிய துளிகள்
    வஞ்சனையைச் சொல்லும்
    துளிக்குள் துளிர்க்கும் வலிமையே வெல்லும்

    ***

    வண்ணங்கள் காட்டும் மழைத்துளி, மானுட எண்ணங்களையெல்லாம் ஒன்றுகூட்டிப் பல்வேறு சிந்தனைத்துளிகளைச் சிதறவைக்கும் அதிசயத்தைப் பெருவை திரு. பார்த்தசாரதியின் கவிதையில் காணமுடிகின்றது.

    சிந்தனைத் துளி

    விண்ணுடன் முகிலாடும்
    விழிநீரில் தவழ்ந்தாடும்
    குளிர்நிலவின் முகத்துக்குள்
    பனித்துளிக்கு ஒப்பாகி
    கவிபாடும் சிந்தனைக்கோர் துளியானாய்!

    காதலர்கள் சேர்கையாலே
    களிப்பின் உச்சத்திலே
    விழிநான்கின் வழிவந்த
    வழிந்த கண்ணீராய்
    கவிபாடும் சிந்தனைக்கோர் துளியானாய்!

    பெண்மையின் கருப்பைக்குள்
    பனிக்குடத்தில் பக்குவமாக்
    படுத்துறங்கும் பிஞ்சு
    கருத்துளியின் உருவமாய்
    கவிபாடும் சிந்தனைக்கோர் துளியானாய்!

    கடல்நாயீன்ற குட்டிபோல்
    கண்ணுக்குள் மாயத்தோற்றமாய்
    பழுப்புநீல வண்ணத்தில்
    புதுஜனனம் எடுத்ததுபோல்
    கவிபாடும் சிந்தனைக்கோர் துளியானாய்!

    தாமரையிலை மீதிலென்றும்
    தங்காத தண்ணீர்முத்தென
    வெண்துளியாய் வீழ்ந்துபல
    மணித்துளி வண்ணமாய்த்தவழ்ந்து
    கவிபாடும் சிந்தனைக்கோர் துளியானாய்!

    நீருக்குமேல் மிதந்த
    நீலவண்ண நீர்த்துளியாய்
    மாயமாய்மதி மயக்கும்வண்ணமாய்
    மானுடச்சிந்தைக்கோர் விருந்தாகி
    கவிபாடும் சிந்தனைக்கோர் துளியானாய்!

    வண்ணம் பலகாட்டும்
    வண்ணத் துளியாய்
    எண்ணத்தைச் சிதறடித்த
    எண்ணத் துகளாய்
    கவிபாடும் சிந்தனைக்கோர் கவித்துளியானாய்!

    அப்பப்பா! துள்ளிக்குதிக்கும் நீர்த்துளியைக் கண்டதுதான் தாமதம், கவிதைப் பிரளயத்தையே உருவாக்கி அதன் சுழலில் என்னைத் திக்குமுக்காட வைத்துவிட்டனர் கவிஞர்கள். அவர்களின் சிந்தனைச் செறிவுக்கும், புலமையறிவுக்கும் என் பாராட்டுக்கள்!

    ***

    இனி இவ்வாரத்தின் சிறந்த கவிதையாய் நான் தேர்வுசெய்திருப்பது…

    பொங்கி வரும் பொக்கிஷம்!

    சிறுதுளி பெருவெள்ளம் என்றாய்
    பல துளிகள் உனக்களித்துவிட்டேன், இருப்பினும்
    பற்றாக்குறை பட்ஜெட்தான் வாசிக்கிறாய்!!

    சிக்கனமாய் வைத்திருந்தால் தான்
    சித்திரை வரை செலவழிக்க முடியுமென
    சில்லறை மட்டும் சேர்க்கிறாய்.

    வற்றாத ஜீவனாக இருந்த எனை
    வாரி இறைத்து வீணாக்கி
    வற்ற வைத்துத் தவிக்கிறாய்

    பொன்னும் பொருளும் மட்டுமல்ல
    பொத்திப் பொத்திப் பாதுகாக்க வேண்டியது
    பொங்கி வரும் நதியையும் தான்!

    ஊதாரியாய் இருந்துவிட்டு ஊரூராய்த் தேடாதே
    ஊற்றெடுக்கும் எனை நீ
    ஊமையாக்காதே!

    விழித்துக்கொள் இன்றாவது…!
    வீணடிக்காமல் சேமிக்கத் தொடங்கு
    விடியும் பொழுது வெளிச்சம் தரட்டும்!

    ’பொன்னையும் பொருளையும் கண்ணைப்போல் காக்கும் மனிதர், அதனினும் அரிய நீரை ஊதாரித்தனமாய்ச் செலவழிப்பது மடமையேயன்றி அறிவுடைமை ஆகாது. ‘பொங்கிவரும் பொக்கிஷம்’ நீர். அதனைத் தேக்கிவைத்தால் மட்டுமே உழவு செழிக்கும்; உயிர்கள் பிழைக்கும்’ எனும் அருங்கருத்தைத் தன் கவிதையில் பொதிந்து தந்திருக்கும் திருமிகு. சத்தியப்ரியா சூரியநாராயணனை இவ்வாரத்தின் சிறந்த கவிஞராய் அறிவித்துப் பாராட்டுகின்றேன்.

    ஒன்றல்ல இரண்டல்ல…பல கவிதைகளைப் படக்கவிதைப் போட்டிக்குச் சளைக்காமல் படைத்திருக்கும் அவரின் அளவில்லா ஆர்வத்துக்கும் என் பாராட்டுக்கள்!

    Share
  • படக்கவிதைப் போட்டி – (103)

    பவள சங்கரி

    அன்பிற்கினிய நண்பர்களே!

    வணக்கம். கண்ணையும், கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் திறமை கொண்டவரா நீங்கள்?

    17274154_1260072657380264_67374682_n

    152398535@N04_rஅவினாஷ் சேகரன் எடுத்த இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள். இதனை நம் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி. சாந்தி மாரியப்பன் தேர்ந்தெடுத்து அளித்துள்ளார்.

    இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை நல்ல தலைப்புடன் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் சனிக்கிழமை (18.03.2017) வரை உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர்குழு உறுப்பினரும், தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான திருமதி மேகலா இராமமூர்த்தி தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பலமுறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப்படும் கவிஞர்களுக்கும் உண்டு. 12 மாதமும் தேர்வுபெறும் ஒளிப்படக் கலைஞர் / கவிஞர்களிலிருந்து ஆண்டின் சிறந்த கலைஞரும், கவிஞரும் தேர்வு பெறுவார்கள். ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி இது; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்குபெற அழைக்கிறோம்.

    போட்டியின் நடுவரான திருமதி. மேகலா இராமமூர்த்தி புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்தவர். கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்ற இவர், அமெரிக்க தமிழ்ச்சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009, 2014, 2016ஆம் ஆண்டுகளின் (ஆர்லாண்டோ, அட்லாண்டா & மிசௌரி) கவியரங்கம், இலக்கிய வினாடிவினா நிகழ்ச்சிகளில் பங்கேற்றுப் பாராட்டுகளும், பரிசுகளும் பெற்றுள்ளவர். சங்கப் பாடல்களில் அதிக ஆர்வமும், இலக்கியக் கூட்டங்களிலும், பட்டிமன்றங்களிலும் சுவைபடப் பேசுவதில் வல்லமையும் பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடைபவளம்.

    Share
  • படக்கவிதைப் போட்டி 102-இன் முடிவுகள்

    -மேகலா இராமமூர்த்தி

    இந்தவாரப் படக்கவிதைப் போட்டிக்கான படம் இது. இதனை ஒளிப்பதிவு செய்தவர் திரு. முத்துக்குமார். போட்டிக்குத் தேர்வுசெய்து தந்தவர் திருமதி சாந்தி மாரியப்பன். இவர்கள் இருவருக்கும் என் நன்றி.

    palmtree

    ”பனைமரத்தின் பாதியில் அமர்ந்து அலைபேசியை ஆர்வத்துடன் படிக்கும் அன்புத் தம்பி! சற்றே உன் பிடி நழுவினால் என்னாகும் நீ யோசி! மரத்தைவிட்டு இறங்கியபின் அலைபேசிச் செய்திகளை நீ வாசி!” என்று இந்தத் தம்பிக்கு அறிவுரை சொல்லவேண்டியது அவசியமாய்ப்படுகின்றது.

    மனிதர்களைத் தாங்கி நிற்கும் பனையே! புல்வகையைச் சேர்ந்த நீ மரமாய் உயர்ந்து மலைக்க வைக்கிறாய். அத்தோடு பல்வகைப் பயன்களையும் மனிதர்க்குக் குறைவின்றி நல்குகிறாய். பெண்ணையாகிய உன்னையே சிறந்த நட்பிற்கு இலக்கணமாய் நாலடியும் நவில்கின்றது.

    கடையாயார் நட்பிற் கமுகனையர் ஏனை
    இடையாயார் தெங்கி னனையர் தலையாயார்
    எண்ணரும் பெண்ணைபோன் றிட்டஞான் றிட்டதே,
    தொன்மை யுடையார் தொடர்பு.  (நாலடியார்)

    இனி, கவிஞர்களின் முறை! பனையினும் உயர்ந்த சிந்தனைகளை அள்ளிவழங்கக் காத்திருக்கும் அவர்களை வரவேற்றுக் கவிபாட வைப்போம்!

    *****

    தம்பி! பனையில் ஏறிப் பாதுகாப்பின்றித் தன்படம் (selfie) எடுப்பது உனக்கே வினையாய் முடியும்; வேண்டாம் இந்த விபரீத விளையாட்டு!” என்று எச்சரிக்கின்றார் திரு. செண்பக ஜெகதீசன்.

    நன்றியா…

    வாலிபம் என்பது
    விளையாட்டுக் களம்தான்,
    விளையாட்டு வினையாகாதவரை..

    சரித்திரம் படைப்பது
    சாதனைதான்,
    சறுக்கல் வராதவரை..

    பாதுகாப்பு ஏதுமின்றி
    பனைமரத்தில் ஏறி,
    பலரும் பார்க்கத்
    தன்படம் எடுக்கையில்
    தவறி வீழ்ந்தால்,
    உன்படம் வருமே
    கறுப்புக் கட்டத்தில்..

    கதறும் பெற்றோரைக்
    காணநீ இல்லாமல்போவதா
    காட்டும் நன்றி…!

    *****

    சா’தீ’யம் கருக்கிய உன் காதலுக்கு நீதி கேட்டா? மனிதரின் குடியைக் கெடுக்கும் குடியை ஒழிக்கவா? ஏறுதழுவுதலுக்குக் குரல்கொடுத்த வீரர்களுக்கு ஆதரவாகவா? எதற்காகப் பனைமீது பாய்ந்தேறினாய் தம்பி? காரணம் எதுவாயினும் ’கரணம் தப்பினால் மரணம்’ எனும் நிலையிலா போராடுவது? புவியில் நின்று முழங்கு; மாந்தருக்கு நீதி வழங்கு!” என்கிறார் திரு. இளவல் ஹரிஹரன்.

    அருகிவரும் பனைமரத்தை
       அணைத்தபடி ஏறிநிற்கும்
    திருமகனே இளைஞனே..நீ
        சேதிசொல்ல உள்ளதென்ன…
    உருகியுனைக் காதலித்த
        உத்தமியைக் கௌரவமாய்க்
    கருவமிகு சாதீயம்
        கொலைசெய்த காரணத்தால்…

    நீதிகேட்டு மரமேறி
         நிற்கின்றாயோ..அல்லால்
    [……..]

    மாறாக டாஸ்மாக்கில்
          மதுமயக்கம் கொண்டுமக்கள்
    சீரழியும் செயலதனால்
          மதுக்கடைகள் மூடுதற்கே
    போராட ஓங்கிநின்ற
          பனைமரத்தில் ஏறினாயோ…
    வீறுகொண்டு வெறும்வார்த்தை
          வீணரினை நம்பாமல்

    ஏறுதழுவல் என்றதமிழ்ப்
          பண்பாட்டு விளையாட்டு
    மாறுபாடு ஏதுமின்றி
          மாநிலத்தில் நிகழ்வதற்குப்
    போரிட்ட மெரீனாவின்
         புரட்சியாளர்க் கென்றுதவ
    வேர்கொண்ட பனையேறி
         விரைவாக நின்றாயோ…

    உனக்குமுன்னே ஒருவனேறி
         உதவுதற்கு நிற்கின்றான்
    உனக்குவந்த குறுஞ்செய்தி
         உரைப்பதற்கு முயல்கிறாயோ…
    […….]

    எதுகார ணமென்றாலும்
          இளைஞருயிர் பணயமாக்கும்
    புதுமையினைத் தவிர்த்துவிடு..
           பூமிநின்று போராடு…..
    பதுமையென மக்களினைப்
           பார்க்கின்ற ஆட்சியரின்
    பொதுமையினைப் புறந்தள்ளிப்
           புதுப்பிப்பாய் விழிப்புணர்வை!

    *****

    தனை நனைக்க எப்போது வருவாள் தன் மழைக்காதலி என்று ஏங்கிநிற்கும் பனைமரக்காதலனின் காதல் உணர்வுகளை அழகாய்க் கவிவடித்திருக்கின்றார் திருமிகு. சுபிக்ஷா.

    ஒற்றை முத்தத்தில் தொடங்கிய பந்தம்
    ஆயிரம் முத்தங்களில் அௗவளாவி
    என் அங்கமெல்லாம் ஆரத் தழுவி
    என்னை ஆர்ப்பரித்தவள்

    வாரம் ஒரு முறையாவது வந்து விடுவாள், நான்
    வாடி விடக்கூடாது என்பதற்காக

    அவளில்லாமல் நானில்லை
    அறிவாள் அவள்

    சொல்லித்தான் தெரிய வேண்டுமோ.., எனச்
    சொல்லாமல் விட்டு விட்டேன்
    சொத்தாய் மதிக்கும் அவளிடம்
    சொர்க்கமென நினைக்கும் என் காதலை..

    என்ன நினைத்தாளோச் தெரியவில்லை
    என்னைப் பார்க்க வந்து பல நாட்களாகிவிட்டது
    எட்டி பார்த்துக்கிட்டு தான் இருக்கேன்
    எதுவும் தெரியவில்லை

    உற்றானாக நினைத்துக் கேட்கிறேன்
    உதவி வேண்டும் தம்பி
    உன் கையில் இருக்கும் பெட்டியில் எல்லாம் தெரியுமாமே!
    உற்றுப் பார்த்து சொல்

    எப்பொழுது வருவாள்
    என்னவௗ் என்று…

    மழைக்காக…,
    மரம்

    *****

    ”உன்னைப் போல் பிறர்க்குதவும் மரமொன்று பாரிலில்லை பனையே! ஈகைக்கு இலக்கணம் நீ! நட்புக்குச் சான்று நீ! உன் ஓலையன்றோ எம் அமிழ்தனைய தமிழ் காத்தது. புல்லினத்தில் தோன்றி விண்ணுயர நிற்கும் உன் சாதனை வியக்கவைப்பது. உன் சேவைகள் எம்மை நயக்கவைப்பது! வாழ்க எம் பனை நண்பனே!” என்று உளந்தோய்ந்து பனையின் பெற்றியைப் பாடுகின்றார் பெருவை திரு. பார்த்தசாரதி.

    பனை நண்பன்

    பாதி மரமேறிப் பக்குவமாய்ப் படமெடுத்து
    பனைமரத்தின் பயனையெலாம் பார்புகழச் செய்தாயோ!

    பலவித மரங்களிலே பனைமரம் போலாகுமா!
    பிறர்வாழநீ வாழுமுன் குணத்துக்கது ஈடாமோ!

    பெற்றோர் வளர்த்த பிள்ளைகூட உதவாதானால்..
    வளர்க்காமலே நீவளர்ந்து பிறருக்கு உதவுகின்றாய்!

    நண்பரைத் தேர்ந்தெடுக்க முக்குணத்தில் ஒன்றாக..
    தென்னை வாழையோடு உன்குணமு மொன்றாகும்!

    நண்பனுக்குகந்த குணமென உத்தமநண்பணுக்கு..உன்
    பனைக்குணமே பெரிதென்றான் அர்த்தமுள்ளகவியரசன்!

    முக்குணத்தில் சிறந்த சாத்விக குணம்பெற்று..
    பூவுலகக் கற்பகத் தருவெனத் தாரணியில் புகழடைந்தாய்!

    கயவர்களை இனம்கண்டு பனைமரத்தி லொருமுறை..
    கட்டிவைத்து உதைத்தால் திருந்திவாழ வழியுண்டாம்!

    நெட்டைப் பனையென்றும் நெடியமரமென்றும்..
    நேர்மைக் கோர் உதாரணமாய் திகழுகின்றாய்!

    பனைமரமேறிப் பரிசுப்பெற்ற வாலிப இளைஞனுக்கு..
    பெண்கொடுத் தாருண்டென்ப தோர்க் காலமுண்டாம்!

    பழுத்துக் கனிந்தால் பனம் பழமாகவும்..
    பழுக்கா விட்டால் நுங்கெனவும்..பல்வகையில்

    பித்தர்களுக்கு மருத்துவம் வேண்டா மவன்..
    பித்தம்தெளிய யுன்பழம் கொடுத்தால் போதுமாம்!

    உயிரின முண்ணக் கிழங்குவெல்லம் கருப்பட்டியென..
    புல்லினத்தில்பிறந்து பேரினமாய் நின்று உதவுவாய்!

    வெட்டி வீழ்ந்தாலும் வீணாகாமல்..உத்திரமாக..
    கட்டிவாழும்எம் குடிலுக்கு வலிமை சேர்த்தாய்!

    சித்தர்களின் சிந்தனைகள் சித்திரஎழுத்துவடிவமாக..
    சிறந்த இலக்கியங்களுக்கு ஏடாகிப் படிவம்கொடுத்தாய்!

    தமிழ் வளர்ச்சிக்கு உதவிய ஒரேமரமென்றும்..
    மொழிக்குதவிய முதல் மரமெனவும்நீ உலகறிவாய்!

    வெப்பக்கதிர் வீச்சைத் தணிக்க..விரிந்துபரந்த..
    விசிறியாகி வெங்கதிர் தவிர்த்தாயோர் காலத்தில்..

    மரம்தானனென இகழ்சொன்னா லதைமறுத்து..வீரமுடன்..
    தனிமரமாய்த்தோன்றி மரமினத்துக்கு மங்காப்புகழ்சேர்த்தாய்!

    காய்ந்து கயிறாகிநீ கால்நடையைக் கட்டினாலுமுன்..
    கட்டுக்கடங்காப் பயன்புகழ் வாழிய வாழியவே!

    மாநிலமரமென தமிழ்மரபை தமிழ்குடியைப் பறைசாற்றும்
    பனைநண்பனுனை மானுடர்கள் நினையாத நாளில்லையே!

    *****

    படத்திலிருக்கும் ’பனை’ நம் கவிஞர்களின் கற்’பனை’க்கு நல்லதோர் விருந்து படைத்திருப்பதை அவர்தம் கவிதைகள்வழி உணரமுடிகின்றது. பனம்பழமென இனிமையாய்க் கவிவடித்திருக்கும் கவிஞர்களுக்குப் பாராட்டுக்கள்!

    என் சிந்தை கவர்ந்து இவ்வாரத்தின் சிறந்த கவிதையாய்த் தெரிவுசெய்யப்பட்டிருக்கும் கவிதை இதோ…

    தடம் மாறும் போராட்டம்

    தையல் நாடி மையல் கொண்ட திராவிடப் பண்பாட்டில்
    பனைமடலேற்றம் கண்டான் பண்பாட்டுத் தமிழன்
    அடல் கொண்டதே மடலேற்றம்
    மடல் வென்றதே மனமாற்றம்
    மடல்மா ஏறிய ஆண்மை
    மனம் மாறியதே பெண்மை
    மனம் மாறாப் பெண்மைக்குக் காட்டிய போராட்டம்
    காலமாற்றத்தில்
    காதலில் புகுந்ததே கள்ளத்தனத்தின் ஊடாட்டம்
    கைபேசியின் காட்சிப் பதிவுகளில்
    காதல் களியாட்டம்
    கைகூடாக் காதலருக்கோ
    காட்சிகளின் சாட்சிகளே வெறியாட்டம்
    போராட்ட முறை மாறலாம்
    போராட்ட அறம் மாறலாமா?

    அன்று, தன்காதல் கைகூடாக் காதலன், உடல்கிழிக்கும் பனங்கருக்கில் ஏறித் தன்னை வருத்திக் காதலியின் அன்பையும், ஊராரின் அருளையும் பெற்று அவளை மணமுடித்தான். இன்றோ… காதலி தன்னை விரும்பாவிட்டால், ஆபாசப் படமெடுத்து அவளைப் பழிவாங்கவும், அவள் வாழ்வோடு அவளையும் சேர்த்துக் கருக்கவும் துணிந்துவிட்டனர் காதலென்று சொல்லித் திரியும் கயவர்கள். காலம் மாறலாம்; காதல் அறம் மாறலாமா? என்று வேதனையோடு வினவும் திருமிகு. மா. பத்ம பிரியாவை இவ்வாரத்தின் சிறந்த கவிஞராய்த் தேர்வுசெய்கிறேன்.

     

    Share
  • படக்கவிதைப் போட்டி 101-இன் முடிவுகள்

    -மேகலா இராமமூர்த்தி

    இவ்வாரப் படக்கவிதைப் போட்டிக்குரிய படத்தை எடுத்திருப்பவர் திரு. லோகேஷ்வரன் ராஜேந்திரன். இப்படத்தைத் தேர்வுசெய்தவர் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி. சாந்தி மாரியப்பன். இவ்விருவருக்கும் என் நன்றி உரியது.

    hen and rooster

    பெட்டைக்கோழியும் கொண்டைச்சேவலும் ஒன்றோடொன்று மோதிக்கொள்ள நேரம்பார்த்து நிற்பதுபோல் தோன்றுகின்றது. தள்ளி நின்றிருக்கும் மற்றொரு சேவல்தான் இச்சண்டையில் வெற்றியாளர் யார் என்பதை முடிவுசெய்யும் நடுவரோ?

    நம் ஊகம் இருக்கட்டும். கவிஞர்கள் காத்திருக்கிறார்கள் படத்திற்குத் தோதாகப் பாப்புனைய! அவர்களின் கருத்தையும் அறிந்துவருவோம்!

    *****

    ”அடுத்தவர் சண்டையைத் தள்ளிநின்று வேடிக்கை பார்க்கும் மடமையை மனிதரிடம் கற்றனவோ இந்தக் கோழிகள்?” என்று வேதனையோடு வினவுகின்றார் திரு. செண்பக ஜெகதீசன்.

    மனிதனிடம் கற்றது…

    அடுத்தவர் மோதிட வேடிக்கையாய்
    அதனைப் பார்த்தே ரசித்திடுவான்,
    தடுத்திட வராமல் தள்ளிநின்று
    தூண்டி விடுவான் அரசியலில்,
    அடுத்தே அவனிடம் வளர்ந்ததாலே
    அந்த குணமே கோழிகட்கும்,
    தடுக்கும் எண்ணம் இல்லாமல்
    தொடர விட்டிடும் சண்டையையே…!

    *****

    ”என்னைத் தூற்றுவார் தூற்றட்டும்; புதுமைப்பெண்ணென்று போற்றுவார் போற்றட்டும்! சமத்துவம் பிறக்கச் சண்டைதான் வழியென்றால் சமர் செய்வேன்; சமரசம் செய்யேன்!” என்று சிலிர்த்துநிற்கும் வீரக்கோழி இது!” என்கிறார் திரு. பழ. செல்வமாணிக்கம்.

    அச்சம் என்பது மடமையடா
    கொண்டை சிலிர்த்து கோபமாய்
    பார்ப்பதினால்!
    அஞ்சிடும் பெட்டைக் கோழி நான்
    என்று நினைத்தாயோ!
    பெண் விடுதலை சொன்ன
    கவிபாரதி ஊர் பிறந்த
    பறவையடா நான்!
    வீர மங்கை வேலு நாச்சியார்
    புகழ் சொல்லும்
    தமிழகக் கோழியடா நான்!
    அரவணைக்கும் மாந்தருக்கு
    அன்புத் தோழியடா நான்!
    அநியாயம் செய்பவர்க்கு
    செந்தணலடா நான்!
    சமத்துவம் பிறப்பதற்கு
    சண்டை தான் வழியென்றால்
    சண்டைக் கோழியென!
    சமர் செய்து வென்றிடுவேன் !
    தூற்றுவார் தூற்றட்டும்!
    புதுமைப் பெண்ணென்று
    போற்றுவார் போற்றட்டும் !

    *****

    ”கத்தியின்றி இரத்தமின்றி வெற்றுக்காலுடன் நாங்கள் நடாத்தும் இப்போரே உண்மையான அகிம்சைப் போர். காட்டுக்கோழியாயிருந்தால் காலனிடமிருந்து தப்பியிருப்போம்; நாட்டுக்கோழியானதால் நித்தமும் கண்டம் எமக்கு!” என்று தன் சுயசரிதையைச் சோகம் தோய்ந்த நயமுடன் செப்பும் கோழிச்சேவலைக் காண்கிறோம் பெருவை திரு. பார்த்தசாரதியின் கவிதையில். 

    சேவலின் கூவல்

    வைகரையில் கூவியுனைஎழ வைத்துன்
    துயில்கலைந்ததும் கேளுமடா என்சரிதம்!

    செந்நிறக் கொண்டை சிவந்தயென் கண்கள்..
    நிமிர்ந்தயென்பார்வை மிடுக்கானநடை கொண்ட..
    “கோழி” யெனும்பெயரே சேவலெனைமட்டும் குறிக்குமாம்!
    “சேவல்” “மயில்” “நாடு” யெனப் பன்பெயரென் புகழ்சொல்லும்!

    பெட்டைக்கோழியிடம் மட்டற்ற ஆதிக்கம்பெற…ஆணவ ஆண்கோழிகள் சண்டையிடுவது இயற்கையானால்…
    கோழியெனைச் சூதாக வைத்தாடுவது தகுமா?.மீண்டும்!
    பாவிமனிதனெனும் பழிவேண்டச் சேவல்சூதாட்டம் வேணுமா?

    சிவன்குமரப் பெருமானின் கொடியிலேறியதால்..எனைவைத்து..
    சூதாட்டம்கூட “தென்திருவிளையாட்டானது”?..சூதில்நான்..
    வெற்றிபெற்றால் “வெற்றி” யெனப் பெயர்படுவேன்!
    தோல்வியெனில் “கோச்சை” யென நானறிவேன்!

    செந்நீரைச் சிந்தியெந்தன் சேவலுயிர் போனாலும்..
    செந்தமிழன் வீரமென்று சீராட்டுமென் தென்திருநாடு!காலில் கத்திகட்டிக் கட்டாலிகள் விளையாடும்..
    கள்ளாட்டம் புத்திகெட்டமானுடனின் செயலாகும்!வெற்றுக்காலுடன் கத்தியின்றி ரத்தமின்றி யான்பெறும்..
    வெற்றியென்பது உண்மையகிம்சை வெற்றியாகும்!

    காட்டமான சண்டையில் வெற்றிபெற என்னினத்தை..
    காளிமுன்பு காவுகொடுத்தான் கயவனொருவன்!காட்டுக்கோழியானால் காலனெனைத் துரத்தமாட்டான்!
    நாட்டுக்கோழியானதால் நித்தம்நித்தம் ஆயுள்கண்டம்!

    கோதாவில் கழுத்தறுந்து உயிரிழந்த பரிதாபத்தால்..
    கடாயில்பல மசாலாவுடன் கோழிநான் குருமாவானேன்!
    நெட்டைக்கழுத்தை நீட்டியென் பகைவன்மேல் பறந்து..
    பட்டைதீட்டிய கத்தியால் எதிரிக்கழுத்தை அறுத்ததால்..
    குலத்தைக் கெடுக்க வந்த கோடரிபோல்..என்..
    இனத்தை நானேகெடுத்து வாழ்வில் இழுக்குற்றேன்!

    பதார்த்த குணசிந்தாமணி படித்தவர் என்னிடமரும்..
    மருத்துவகுணமுண்டென்று மருந்தாகயெனைச் சமைத்துண்டார்!

    சாமக்கோழியென் அலறும் அறைகூவலுனக்கு..
    சமையல்கட்டினுளென் வேதனையறிய வைக்குமடா!

    சேவற்கொடியோன் அருளீன்ற என்னுயிரை…இனியும்..
    காவல்காக்கமுடியா தென்பது இயற்கைவிதியாமோ?..

    *****

    ”தன்னினத்தைத் தான் மாய்க்கும் பொல்லாக் கயமையினைக் கோழியினமான எம்மிடமும் திணித்து, எம்மைச் சண்டையிட வைத்து இரசிக்கின்றானே பாவி மனிதன்! எவ்வுயிரும் வாழவேண்டும் எனும் நல்லுளங் கொண்டு பொன்னுலகு சமைப்போம்; போரிடலை மாய்ப்போம்!” என்று நல்லுரை நவில்கிறது திரு. இளவல் ஹரிஹரனின் கவிதையில் வரும் சேவல்.

    தமிழ்க்கடவுள் முருகனவன்
      தனிக்கொடியில் விளங்கியதும்
    அமைதியினைக் கிழித்தபடி
      அதிகாலைக் கூவியதும்

    உறங்குகின்ற உயிர்களெலாம்
        உன்குரலால் விழித்ததுவும்
    நிறங்கொண்ட செங்கொண்டை
        நிமிர்ந்திடவே நடந்ததுவும்

    கிராமத்து வீடுகளில்
        கிளரழகைக் கொடுத்ததுவும்
    வராமலேயே போனதென்ன
        வண்ணமிழந்த சித்திரமாய்!

    கலாசாரப் பெயர்சூடி
        காலினிலே கத்திகொண்டு
    விழாமேடை சந்தைத்திடலில்
        வீறுகொண்ட வேங்கையெனச்

    சண்டையிடும் சேவலென
         சாதிமாறிப் போனதென்ன…
    வன்கொடுமை தனைக்காட்ட
         வன்மமுடன் வளர்ந்ததென்ன…

    தன்னினத்தைச் சண்டையிட்டுத்
         தான்மாய்க்கும் காட்சியினை
    கண்ணிறைய ரசிக்கின்ற
         கயமைதான் மனிதனிடம்…

    தன்குணத்தைப் பிறவுயிர்கள்
         தலைமீதே ஏற்றிவிட்டுப்
    பந்தயத்துச் சேவலெனப்
         பாயவிடும் மாயமென்ன…

    எவ்வுயிரும் தம்முயிராய்
        எண்ணவைக்கும் உயர்ந்ததொரு
    தெய்வமனங் கொண்டுவாழத்
        தேடல்புரி மனிதனவன்

    சேவற்கட்டு புரிவதென்ன
          சேர்ந்தவுயிர் அழிவதென்ன…
    ஆவலுடன் பந்தயத்தில்
          அநியாயஞ் செய்வதென்ன…

    இந்நிலைமை மாறிடவே
         எவ்வுயிரும் வாழ்ந்திடவே
    பொன்னுலகைச் செய்திடுவோம்
         போரிடலை மாய்த்திடுவோம்.

    பறவைகளின் வாயிலாய் நல்ல வாழ்வியல் சிந்தனைகளைச் சிறக்கச் சொல்லியிருக்கின்றனர் நம் கவிஞர்கள். அவர்களுக்கு என் மனங்கனிந்த பாராட்டுக்கள்!

    இனி இவ்வாரத்தின் சிறந்த கவிதையாய் நான் தேர்வு செய்திருப்பது…

    வீம்புச் சண்டைவேணாண்டா மச்சானே! – சித்தே
    விழுந்தமுன்னா எழும்ப மாட்டம் மச்சானே!

    நாம் விழுந்தா அவனுக்கென்ன மச்சானே – வந்து
    நம்ம மண்ணைப் புடிச்சுக்குவான் மச்சானே!

    இப்பதானே வந்திருக்கோம் மச்சானே! – அட
    இதுக்குள்ளயேன் வம்புச் சண்டை மச்சானே!
    தப்புன்னாலும் தவறுன்னாலும் மச்சானே! –நாம
    தக்க வைப்போம் நம்ம மண்ணை மச்சானே!

    எட்டி நின்னு புதினம் பார்த்து மச்சானே! – நாம
    எப்ப வீழ்வமெண்டிருக்கான் மச்சானே!
    விட்டமுன்னா நம்ம மண்ணை மச்சானே! – அத
    மீட்கிறது சுலபமில்ல மச்சானே!

    மத்தியிலே நின்னுக்குவான் மச்சானே! – தான்
    மன்னனென்று பீத்திக்குவான் மச்சானே!
    புத்திகெட்டு விழுந்தமுன்னா மச்சானே! – நம்ம
    பூமி பறி போயிடும்டா மச்சானே.

    போனவங்க போகட்டும்டா மச்சானே! – நம்ம
    பூமி இப்போ முக்கியம்டா மச்சானே!
    ஆனதெல்லாம் ஆகட்டும்டா மச்சானே! – ஆனா
    அந்நியன் வந்தாளலாமோ மச்சானே?!

    ஒற்றுமையா இருந்திடலாம் மச்சானே! – நமக்கு
    உள்ளதின்னும் சிலகாலம் மச்சானே!
    வெற்றி காண வேணுமுன்னா மச்சானே! – அதுக்கு
    வேளை வரும் பொறுத்திருடா மச்சானே!             

    நம்மிடம் குறைவாயிருப்பது ஒற்றுமை. அதனாலன்றோ வெள்ளையன் நம் மண்ணை எளிதில் கொள்ளையிட முடிந்தது.

    அதுகண்டு உளம்நொந்து, ஒற்றுமையின் பெற்றியைப் பாடவந்த பாரதி,

    ”ஒன்றுபட் டால்உண்டு வாழ்வு நம்மில்
    ஒற்றுமை நீங்கில் அனைவர்க்கும் தாழ்வே
    நன்றிது தேர்ந்திடல் வேண்டும்
    இந்த ஞானம்வந் தாற்பின்
    நமக்கெது வேண்டும்?” என்றான். 

    பாரதி நமக்கு போதித்த அந்த ஞானத்தையே இந்தக் கோழியும் தன்னருகில் சண்டைக்குச் சிலிர்த்துநிற்கும் தன் (சேவல்) மச்சானிடம் பக்குவமாய்ச் சொல்கிறது.

    கோழியின் வழியே மானுட சமூகத்திற்கு(ம்) நல்லறிவு கொளுத்தியிருக்கும் திரு. எஸ். கருணானந்தராஜாவை இவ்வாரத்தின் சிறந்த கவிஞரென அறிவித்துப் பாராட்டுகின்றேன்.

     

     

     

    Share
  • படக்கவிதைப் போட்டி .. (101)

    பவள சங்கரி

    அன்பிற்கினிய நண்பர்களே!

    வணக்கம். கண்ணையும், கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் திறமை கொண்டவரா நீங்கள்?

    17035141_1246977972023066_1740125676_n
    லோகேஷ்வரன் ராஜேந்திரன் எடுத்த இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள். இதனை நம் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி. சாந்தி மாரியப்பன் தேர்ந்தெடுத்து அளித்துள்ளார்.

    இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை நல்ல தலைப்புடன் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் சனிக்கிழமை (04.03.2017) வரை உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர்குழு உறுப்பினரும், தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான திருமதி மேகலா இராமமூர்த்தி தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பலமுறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப்படும் கவிஞர்களுக்கும் உண்டு. 12 மாதமும் தேர்வுபெறும் ஒளிப்படக் கலைஞர் / கவிஞர்களிலிருந்து ஆண்டின் சிறந்த கலைஞரும், கவிஞரும் தேர்வு பெறுவார்கள். ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி இது; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்குபெற அழைக்கிறோம்.

    போட்டியின் நடுவரான திருமதி. மேகலா இராமமூர்த்தி புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்தவர். கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்ற இவர், அமெரிக்க தமிழ்ச்சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009, 2014, 2016ஆம் ஆண்டுகளின் (ஆர்லாண்டோ, அட்லாண்டா & மிசௌரி) கவியரங்கம், இலக்கிய வினாடிவினா நிகழ்ச்சிகளில் பங்கேற்றுப் பாராட்டுகளும், பரிசுகளும் பெற்றுள்ளவர். சங்கப் பாடல்களில் அதிக ஆர்வமும், இலக்கியக் கூட்டங்களிலும், பட்டிமன்றங்களிலும் சுவைபடப் பேசுவதில் வல்லமையும் பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடைபவளம்.

    Share
  • படக்கவிதைப் போட்டி 100-இன் முடிவுகள்

    -மேகலா இராமமூர்த்தி

    வெற்றிகரமான நூறாவது வாரத்தை எட்டியிருக்கிறது படக்கவிதைப் போட்டி. இந்தச் சாதனையைச் சாத்தியமாக்கியவர்கள் ஒவ்வொரு வாரமும் சளைக்காது கவிமழை பொழிந்துவரும் வல்லமையின் வல்லமைமிகு கவிஞர்களே. உங்கள் அனைவருக்கும் வல்லமை மின்னிதழ் தன் நெஞ்சார்ந்த நன்றியையும் பாராட்டையும் தெரிவித்து மகிழ்கின்றது.

    உங்கள் நல்லாதரவு தொடரட்டும்! தமிழின் தொல்கலையான கவிதைக் கலை செழிக்கட்டும்!

    dancing lady

    அழகு முத்திரை காட்டும் அபிநயத் தாரகை ஒருவரை இவ்வாரப் படக்கவிதைப் போட்டிக்கு அளித்திருக்கிறார் புகைப்படக் கலைஞர் திருமிகு. ஷாமினி. இதனைப் போட்டிக்குத் தேர்வுசெய்து தந்திருக்கிறார் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி. சாந்தி மாரியப்பன். இவ்விரு நங்கையரும் நம் நன்றியறிதலுக்கு உரியவர்கள்.

    வண்ணவுடையில் காண்போர் எண்ணங்கவரும் ஆரணங்கின் ஆட்டத்தைக் கண்டு ஆடாத மனமும் உண்டோ?

    எழிலுடை புனைந்து இனிமையாய்க் காட்சிதரும் இந்தக் காரிகை குறித்து நம் கவிஞர்கள் தம் தூரிகையில் தீட்டியிருக்கும் கவிஓவியத்தை இரசித்து வருவோம்!

    ******

    ’பாவையிவள் பாதங்களின் பாதையில் இலக்கியம் நடைபயில்கின்றது; கைவிரல்களின் எழிலில் பாக்கள் பரதம் ஆடுகின்றது’ என்று இரசனையோடு கவிதை புனைந்திருக்கிறார் திருமிகு. திலகவதி.

    சித்திரப்பாவையின் விழிகள் இரண்டும்
    செப்புமொழிகளைப் பேசுதடி….
    இதழ்கள் இரண்டில் மொழிவார்த்தையின்
    இனிமை கூடுதடி…
    தோள்களின் வனப்பில் இலக்கணம்
    நழுவிப்போகுதடி…
    கைவிரல் எழிலில் பாக்கள்
    பரதம் ஆடுதடி…
    மெல்லிய இடைதனில்
    நளினங்கள் ஆயிரம் கூடுதடி…
    பாதங்களின் பாதையில்
    இலக்கியம் நடை பயிலுதடி…..
    கூந்தலின் இழையில் காப்பியம்
    உயிர்த்துவம் பெற்றதடி…..!

    ******

    ”தமிழரின் அவலம் துடைக்கப் பாரெங்கும் மேடையமைத்து உரிமைக்குரல் முழக்கிக் கரகமும் பரதமும் நிழ்த்திய மகிழ்வில் வெற்றியொடு திருக்கரம் உயர்த்தும் தமிழ்த்தாய் இவளல்லவோ!” என்று வியக்கிறார் திரு. சச்சிதானந்தம்.

    திருக்கரம் உயர்த்திடும் தமிழ்த்தாய் வாழ்க!

    கரகம் மயிலொயி லாட்டக் கலையென,
    பரதமும் பாமர மனங்களைத் தொடும்படி,
    மரபு மடைகளை உடைத்துத் தகர்த்து,
    தெருவில் துணிவுடன் மேடை அமைத்து,
    இரவும் பகலும் நடனம் தொடுத்து,
    பரவும் தமிழரின் அவலம் துடைக்க,
    உரிமைக் குரலை எழுப்பிய நிறைவில்,
    விரிசெங் கனகப் புன்னகை சிந்தித்,
    திருக்கரம் உயர்த்திடும் தமிழ்த்தாய் வாழ்க!

    ******

    ஆண்டவன் தொடங்கிய ஆட்டத்தை காண்போர் வியக்கும் இக்கலையரசி தொடர்வது அழகன்றோ? என்கிறார் திரு. செண்பக ஜெகதீசன்.

    ஆடு மயிலே…

    ஆண்டவன் தொடங்கிய ஆட்டமிது
    அணங்கிவள் தொடர்வது அழகன்றோ,
    காண்பவர் வியந்திடும் கண்ணழகும்
    காட்சிக் கினிய முகமதுவும்,
    வேண்டிய உணர்ச்சி காட்டிடுமே
    வேதனை மனத்தில் தீர்த்திடுமே,
    தூண்டிடும் இன்பம் நிலைத்திடுமே
    தெய்வக் கலையிது வாழியவே…!

    ******

    ”உலகத்தின் ஆதி இவள்; சிவனின் பாதி இவள்; அந்தமே இல்லாத சோதி இவள். மயிலென ஒயிலாய் ஆடும் இந்த நங்கையின் நடனம் அகிலத்தைக் காக்கும் அன்பின் நர்த்தனம்!” என்று பதம் பிடிக்கும் பாவையைப் புகழ்கின்றார் திரு. பழ. செல்வமாணிக்கம்.

    ”ஆடல் காணீரோ ” நர்த்தனம் ஆடும் நங்கை இவள்!
    உலக இயக்கத்தின் ஆதி இவள்!
    அந்தமே இல்லாத
    சோதி இவள்!
    சிவனுக்கே சீவன் தந்த
    சக்தி இவள்!
    இதயம் நடமிடும் பெண்ணாலே !
    மயிலின் நடனம் பெண்ணாலே!
    காற்றின் நடனம் பெண்ணாலே!
    அன்பின் நர்த்தனம் பெண்ணாலே!
    பெண்ணின் ஆட்டம் என்றும்
    அகிலத்தை காப்பதற்கே!
    தாளம் தப்பாத ஆட்டம்!
    தன்னலமில்லா ஆட்டம்!
    கண்ணசைவில் கடவுளின்
    கருணை தெரியுதம்மா!
    காலசைவில் கடவுளின்
    பாதம் தெரியுதம்மா!
    அனைத்தும் அன்னையின் கையில்
    என அழகாய் புரியுதம்மா!

    ******

    ”பெண்ணே! பாடலின் வரிகளுக்கேற்ப வில்லெனும் புருவத்தை வளைத்து நளினமாய் நட(ன)மாடும் நீ, நடராசனின் ஆடற்கலைக்கோர் அற்புத எடுத்துக்காட்டு; உன் அரங்கேற்றம் கண்டு கிறங்கியிருக்கும் இந்த மன்றம் ஆசிவழங்கி உன்னைப் பாராட்டும்!” என்று நன்மொழி நவில்கின்றார் பெருவை திரு. பார்த்தசாரதி.

    நாட்டிய அரங்கேற்றம்

    ஆசானிடம் ஆசிபெற்று பரதமெனும்..
    **ஆடற்கலை அறவேபயின்ற அற்புதமேயுன்..
    அரங்கேற்றம்கண்ட கலைஞர்கள் பலரால்..
    **அரங்கம் நிரைந்து வழிந்ததம்மா!

    ஆடும்கலைபயின்று அபிநயம்காட்டு முன்னழகால்
    **ஆடற்கலைக்கு நீயோர் எடுத்துக்காட்டானாய்
    நடனத்தின் தலைவன் நடராசனின்
    **நல்லாசிகள் என்றுமுனக்கு உண்டு!

    உன்விழிகள் பேசுமதன் பொருளை..
    **உணர பன்புலமை வேண்டுமம்மா!
    உன்நடனத்தைக் கண்டுவிட்டால் ஒருகணம்..
    **தன்னிலை மறந்து தடுமாற்றம் கொள்ளுதம்மா!

    கணுக்காலை கண்தரிசிக்க உடல்வளையும்..உன்
    **கைக்குறிகள் நடனசூட்சுமத்தை விளக்கும்!
    நடனத்தால் பேசுகின்றயுன் நளினத்தால்..
    **நடனரங்கம் இமயம்போல் மெளனமாகும்!

    பாடலின் வரிகளுக்கேற்ப வளைந்தயுன்புருவம்..
    **பாவம்ராகம்தாளம் ஸ்ருதியனைத்தும் சேர்க்குதம்மா!
    தத்தித்தத்தி நீயாடும் நடனத்தால்..விழி..
    **பொத்திப்பொத்திமூடாமல் காண்பவரைக் காக்குதம்மா!

    அரங்கம் வியக்க ஆனந்தக்கூத்தாடி..உன்
    **அங்கமாறின் அபிநயத்தால் பரதக்கலையெழும்!
    பாதங்கள் பலமாய் தரையையுதைக்கும்..
    **பாவம்தனைக்கண்டு கைதட்டும் ரசிகர்கூட்டம்!

    உன் சதங்கைகளின் சத்தத்தால்..
    **உள் அரங்கத்தின் அமைதி அதிகமாகும்!
    உன் கைவிரல்பல முத்திரைகாட்ட..அந்த
    **ஆடலறங்கமிப்போது ஆசிவழங்கும் அரங்கமானதோ?

    ******

    பரதக்கலை மயிலே! நீ நாட்டியப் பேரொளி பத்மினியா? நளின நர்த்தகி வைஜெயந்தியா? கோவலனின் மனங்கவர்ந்த மாதவியா? இல்லை… மாதவத்தோனின் மா தவங்கலைத்த மேனகையா? என்று கேள்விகளால் கவி வேள்வி செய்கிறார் திரு. சி. ஜெயபாரதன்.

    நாட்டியப் பேரொளி
    நடிகை பத்மினியோ ?
    நளின நர்த்தகி
    வைஜயந்தி மாலாவோ ?
    நாட்டியக்
    கலையரசி கமலாவோ ?
    காலைத் தூக்கி
    கரத்தில் கனல் ஏந்தி
    ஞாலத்தில்
    அசுரன் மேல்
    ஒற்றைக் காலில் ஆடும்
    நெற்றிக்கண்
    தில்லைப் பெருமானா ?
    அண்ட சராசரங்கள் அத்தனையும்
    ஆடும் அகிலத்தில்
    உன்னாட்டம் அரங்கேறுதா ?
    கலைக் கண்ணால்
    சுட்டுக் கோவலனை
    மயக்க வந்த
    மாதவியா ? இல்லை
    மகரிஷியின்
    தவங் கலைக்க வந்த
    மேனகையா ?
    மீன்விழி ஊர்வசியா ?
    நிறுத்தாமல் ஆடு !
    நெஞ்செல்லாம் கொதிக்க !
    உன்னாட்டம் நின்றால்
    என்னிதயம்
    நின்று விடும்
    பரதக் கலை மயிலே !

    அபிநயிக்கும் அழகரசியின் எழிலுருவம் நம் கவிஞர்களைக் கலாரசிகர்களாக மாற்றிச் சந்தக் கவிமழையைச் சிந்த வைத்திருக்கின்றது. பாராட்டுக்கள் கவிமணிகளே!

    இவ்வாரத்தின் சிறந்த கவிதையென நான் தேர்வு செய்திருப்பதை இனிக் காண்போம்!

    பெண்மை

    நறுமுகை ஏகிய குழலும் – அணி
    கலன்கள் பூட்டிய உடலும் – குறு
    மென்னகை நெளியும் இதழும் – நூல்
    இடையில் பட்டுடைக் கட்டும் தவழ
    மருளும் விழிக ளுடனே வந்திடும்
    பெண்ணின் இனமே யென
    நினைத் தாயோ தமிழ்மகனே!
    தேவை யொன்று வந்தால் – மென்
    தோள்களும் மலையென நிமிரும்! மலர்
    வளைகளும் போர்க் கலனாகும்! யெம்
    சிரிப்பினில் தீச்சுடர் தெறிக்கும்!
    குளிரச் சுரக்கும் நீர் தான்
    ஆழிப் பேரலை யாகும் – யாம்
    விளக்காய் வெளிச்சம் தரவோ – எரி
    தழலாய் சுழன்று வரவோ – அது
    உந்தன் கைவிரல் முனையில்!

    ”தமிழ்மகனே! மென்னகை நெளியும் இதழும், பட்டுடை மிளிரும் இடையும் கொண்ட வெறும் அழகுப் பதுமை என்றா என்னை நினைத்தாய்? ஒருக்காலும் இல்லை! அவசியம் நேர்ந்தால் மயிலெனும் மென்சாயல்கொண்ட நான், வன்புயலென மாறிக் கயவரைச் சிதைக்கும் புதுமையும் நிகழ்த்துவேன்!” என்று போர்ப்பறை முழக்கும் பெண்ணரசியைத் தன் கவிதையில் கம்பீரமாய்ப் படைத்துக்காட்டியிருக்கும் திருமிகு. ஹேமாவை இவ்வாரத்தின் சிறந்த கவிஞரென அறிவித்துப் பாராட்டுகின்றேன்.

     

    Share
  • படக்கவிதைப் போட்டி 99-இன் முடிவுகள்

    -மேகலா இராமமூர்த்தி

    காளையைத் தொழுதுநிற்கும் காளையைத் தன் படப்பெட்டிக்குள் அள்ளிவந்திருப்பவர் திரு. ராஜ்குமார். இந்த அழகிய படத்தைப் போட்டிக்குத் தேர்ந்தெடுத்து அளித்திருக்கின்றார் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி. சாந்தி மாரியப்பன். இவ்விருவருக்கும் நம் நன்றி!

    bull

    காளையொடு தமிழருக்குள்ள நெருங்கிய தொடர்பு பன்னூறாண்டுகள் கடந்த பழமையானது. மாடுகளே தமிழரின் தலையாயச் செல்வமாய்த் திகழ்ந்தகாலம் அது!

    இன்றோ (தமிழ்)நாட்டுமாடுகளை முற்றாய் அழித்துவிடுவது என்று கங்கணம் கட்டிக்கொண்டு அலையும் அந்நியநாட்டைச் சேர்ந்த அமைப்புகள் சில, தம்மை மிருகவதைத் தடுப்பாளர்கள்(!) என்று அழைத்துக்கொள்ளும் நகைமுரணைக் காணவேண்டிய சூழல் நமக்கு.

    அது கிடக்க.

    இரண்டு காளைகளை ஒருங்கே கொண்ட இந்தப் படத்தைக் கண்ட நம் கவிஞர்கள் தம் கற்பனைகளை எவ்வாறு கட்டவிழ்த்துவிட்டிருக்கிறார்கள் என்று அறிந்துவருவோம்!

    ***

    உழவர் பெருமையை உயரத்தில் ஏற்றிய உன்னதக் காளையைப் போற்றிப் பாடியிருக்கிறார் திரு. செண்பக ஜெகதீசன்.

    காளையே…!

    மானம் காக்கும் காளையிது
    மாணவர் சக்தியைக் காட்டியது,
    சேனையாய்க் காளையர் கூடிவந்தே
    செயித்துக் காட்டும் காளையிது,
    வானம் பொழியும் பூமியிலே
    வளத்தைப் பெருக்கும் காளையிது,
    கோனெ உழவர் தரத்தினையே
    கோபுரம் ஏற்றிடும் காளையிதே…!

    ***

    ”வீரமறவன் ஆரத்தழுவிட அன்பில் நெகிழ்ந்த காளையும் பசுவான மாயமென்ன! குடும்பம் தழைக்க உழைக்கும் காளையரும், உழவன் பிழைக்க உழைக்கும் காளைகளும் உலகில் தோன்றிய ஒப்பிலா உயிரினங்கள்!” என்று நெகிழ்ந்துரைக்கின்றார் திரு. பழ. செல்வமாணிக்கம்.

    நேயம் மனிதன் நட்பைச் சொல்லும் நிழற்படம்!
    அன்பின் பெருமையை நமக்கு
    உணர்த்தும் அற்புதப் பாடம்! ஈசன் ஏறிய வாகனம்!
    இருந்தும் இல்லை தலைக்கனம்!
    காளை உழைப்பின் இலக்கணம் !
    உயிரினம் எல்லாம் ஒன்றெனச்
    சொல்லும் இனிய தருணம்!
    மனித நேயத்தின் அழகான காட்சி இது!
    தமிழரின் அன்பை உணர்த்தும்
    சாட்சி இது!
    காளையை தெய்வமாய்
    தொழுபவன் தமிழன்!
    தமிழனை, தோழனாய்
    நினைப்பது காளை!
    இவர்களை பிரிக்க நினைத்தது
    சில வீணர்களின் வேலை!
    அற வழி இணைந்தனர் இளைய தலை முறை!
    அரும்பாடு பட்டு மீட்டனர்!
    சல்லிக்கட்டெனும் ஏறு தழுவலை !

    ஏறு தழுவுதலை இப்படியும்
    கொள்ளலாமோ?
    வீர மறவனின் அரவணைப்பில்
    காளை மயங்கி நிற்கிறதே!
    முரட்டுக் காளை கூட பசுவாய்
    மாறியது எப்படி?
    அன்பிற்கு எத்தனை வலிமை!
    ஆண் மகனும் அப்படித்தான்!
    அன்பிற்கு ஆட்படுவான்!
    அடக்க நினைத்தால்!
    வீறு கொண்டெழுவான் !
    காளையின் மனமறிந்த
    காளை இவன்!
    குடும்பத்தை காத்திருக்க
    இறைவன் அனுப்பிய தூதன்!
    உடல், பொருள், ஆவி
    அத்தனையும் தந்திடுவான் !
    மனைவி, மக்கள் மகிழ்ந்திருக்க
    மாடாய் உழைத்திடுவான் !
    ஒளியை தருவதற்கு
    மெழுகாய் கரைந்திடுவான் !
    தனக்கென வாழா உயிரினம்
    இரண்டுக்கும் உண்டு புகழிடம்!

    ***

    ”உன் கொம்பைப் பிடிக்கவரும் இளைஞரிடம் உன் தெம்பைக் காட்டு! உன் வாலைப் பற்றினால் வால்பிடிக்கும் வாழ்க்கை வேண்டாமென்று உன் காலால் எட்டியுதைத்து உணர்த்து!” எனச் சல்லிக்கட்டில் கட்டிளங் காளையரோடு மல்லுக்கட்டவிருக்கும் காளைக்கு வீரவுரை பகர்கின்றார் பெருவை திரு. பார்த்தசாரதி.

    ஜல்லிக்கட்டுக் காளைக்கு வீரஉரை:

    அடங்காத காளையேநீ!
    ***அடங்காதே யாருக்கும்!
    நெற்றிப் பொட்டில் திலகமிட்டு வீரத்துடன்…களத்தில்
    ***வெற்றி முத்தமிட்டபின் உனைவீழ்த்த யாருமில்லை!

    வீரமூட்டி வளர்த்துன்னை மைதானத்தில் விடுகிறேன்..
    ***வீரர்களை முட்டி நிதானமாயப் பரிசுவென்று வா!
    கட்டவிழ்த்து விட்டவுடன்..கட்டோடெதிர்..
    ***கண்டவரைக் காயமின்றிச் சாய்த்துவிடு!

    அகிம்சையால் நாம்பெற்ற சுதந்திரம்போல்..உனையடக்க..
    ***ஆயுதமின்றி எதிர்கொண்டுவரும் வீரர்களைவென்றுவா!
    உன்திமில்பிடித்து திமிர் அடக்கநினைத்தால்..
    ***தன்தமிழ் வீரம்பெரிதன்று தக்கபடி எடுத்துச்சொல்லு!

    மல்லுக் கட்டும் வீரர்கள் மத்தியில்..
    ***ஜல்லிக்கட்டொன்றுதான் வீரமெனப் புரியவை!
    ஈராண்டாய்க் கட்டுண்டிருந்த காளையே..
    ***இன்றுன் வீரத்தை இருநொடியில் காட்டு!

    களைப்பறியா உன் கொம்பைப் பிடித்தால்..
    ***அளப்பரிய யுன்தெம்பை எடுத்துக்காட்டு!
    வால் பிடிக்கும் வாழ்க்கை வேண்டாவென..
    ***உன் வாலைப் பிடிப்பவனை எட்டிஉதை!

    பார்வைபடாமல் பக்கத்தில்வரும் வீரர்களையுன்..
    ***வஞ்சகம்வேண்டா வென வயிற்றில் முட்டு!
    சீராட்டிப் பாராட்டி வளர்த்தயுன் உடம்பை தொட்டால்..
    ***சீறியவனை துவம்ஸம் செய்து சிலிர்த்துநில்!

    விளையாடிக் களைக்கும்போதுநீ..எனைப்பார்!
    ***காளையுனை வீரத்தோடு வளர்த்த நானிருக்கிறேன்!
    நூறுமீட்டர் ஓடவேண்டாம் உலகசாதனைசெய்ய..
    ***ஒருமீட்டர் ஓடிப்பாருங்கள் காளையோடு அதுவேசாதனை!

    ஈதொரு வீர விளையாட்டென்று சொல்லிங்கே!
    ***ஓர்கோழைக்கு துளிஇடமில்லை என்றுசொல்!
    அயலார் வியந்துகளிக்கு மிவ்விளையாட்டில்..
    ***அயலினம் நுழைய அனுமதியோம் மென்றுரை!

    பாட்டில் குற்றமிருக்கலாமானால்..உன்
    ***விளையாட்டில் குற்றமென்று..
    கூறும் கயவர்களை யினியுன்
    ***கூரான கொம்பால் குத்திக் கிழித்துவிடு!

    சொப்பனமே கண்டிடுவார் உனைவெல்ல..
    ***தப்பனவே உணர்ந்திடுவார் தோல்விகண்டபின்னே!
    வீழ்ச்சியுறா வெற்றிபெற…காளையடக்கும் வீர்ர்களே..
    ***சூழ்ச்சியின்றி விளையாட சூதறியாது வரவேண்டும்!

    தோற்றபிறகு எங்களைக் கொல்வதென்பது…
    ***அயலார் வகுத்த கோழைத்தனமெனில்…
    தோற்றாலுமினி உங்களைக் கொல்லாமலிருப்பது..
    ***காளையெங்கள் வீரத்தனமென்று பறைசாற்று!

    ***

    சமீபத்தில் தமிழகத்தில் நடைபெற்ற சல்லிக்கட்டுத் தடைக்கெதிரான  மக்கள் எழுச்சி, இவ்வாரப் படக்கவிதைப் போட்டிக் கவிதைகளிலும் எதிரொலிக்கக் காண்கின்றேன்.

    அடுத்து வருவது, இவ்வாரப் படக்கவிதைப் போட்டியில் சிறந்ததெனத் தேர்வாகியிருக்கும் கவிதை…

    ஊறு விளைவிக்கும் கயவர் செய்கையால்,
    ஆறு கைநழுவி உழவு பொய்த்தாலும்,
    ஏறு தழுவும் நம் இதய உரிமையை,
    வேறு பணிமறந்து வீதியில் திரண்டு,
    நூறு தடைதகர்த்த வீரரில் ஒருவன்,
    நீறு தவழும் திருமுகத்துடன் வரவே,
    சீறும் குணம் மறந்து காளையும் நன்றி
    கூறும் காட்சியை உலகுக்குக் காட்டும்,
    பேறு பெற்றதே இந்தப் புகைப்படம்!

    தமிழகத்துக்கு ஊறுசெய்வதையே தம் தொழிலாகக் கொண்ட கயவரின் செய்கையால் காவிரியால் புரக்கப்பட்ட தமிழ்நாடு இன்று கையற்று நிற்கின்ற சூழலிலும், ஏறுதழுவும் நம் மரபுரிமையை  அறப்போரிட்டு மீட்டிருக்கிறார்கள் வேறுபணி மறந்து வெள்ளமெனத் திரண்ட எழுச்சி வீரர்கள். அத்தகு வீரர்களில் ஒருவன் நீறுதவழும் முகத்தோடு எதிர்வரவே, சீறும் குணங்கொண்ட காளையும் அவனைத் தழுவி நன்றி நவில்கின்றது” எனும் அழகிய கற்பனையைக் கச்சிதமாய்க் கவிதையில் ஏற்றியிருக்கும் திரு. சச்சிதானந்தத்தை இவ்வாரத்தின் சிறந்த கவிஞரென அறிவிப்பதில் ஆனந்தம் கொள்கின்றேன்.

     

    Share
  • படக்கவிதைப் போட்டி 98-இன் முடிவுகள்

    -மேகலா இராமமூர்த்தி

    திருமிகு. வெண்ணிலா பாலாஜி எடுத்திருக்கும் இந்தப் புகைப்படத்தை இவ்வாரப் படக்கவிதைப்போட்டிக்குத் தெரிவுசெய்து தந்திருக்கின்றார் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி. சாந்தி மாரியப்பன். இவர்களுக்கு நம் நன்றி உரித்தாகிறது!

    elderlyness

    செய்தித்தாளைக் கைகளிலும் முதுமையை உடலிலும் சுமந்திருக்கும் இந்தப் பெரியவரின் பார்வையின் கூர்மையில் ஏதோ ஒரு செய்தி ஒளிந்திருக்கக் காண்கிறேன்!

    அந்த அரிய தகவலைத் துப்பறியும் வேலையைப் போட்டியாளர்களிடம் விட்டுவிடுவோம்!

    நமக்குத் தொழில் கவிதைகளை இரசித்தல் மட்டுமே!

    ***

    பாடுபட்டுப் படிக்கவைத்த பிள்ளைகள் தன்னை முதுமையில் பேணாது, நாடுவிட்டு நாடு சென்றாலும் அவர்பால் கொண்ட அன்பில் மாற்றங்கொள்ளாது, மனத்தில் ஏமாற்றங்கொள்ளாது, தன்னையே நம்பிவாழும் உத்தமரைக் காண்கிறோம் திரு. செண்பக ஜெகதீசனின் கவிதையில்.

    ஒரு தந்தையின் குரல்…

    பாடுபட்டுச் சம்பாதித்து
    படிக்கவைத்த பிள்ளைகள்
    நாடுவிட்டுச் சென்றனர்,
    நல்ல வாழ்வு தேடியே..

    உறுதுணையாயிருந்த
    உத்தமியும்
    உலகைவிட்டுச் சென்றுவிட்டாள்..

    வேறுதுணை ஏதுமில்லை,
    உறவினரும்
    எறெடுத்துப் பார்க்க
    என்னிடம்
    எதுவுமில்லை சொத்தாக..

    சோறு கேட்கும் வயிற்றுக்குச்
    சொற்பமேனும் கொடுக்கத்தான்
    வேறு எவரையோ நாடி
    வேலைசெய்து பிழைக்கின்றேன்..

    சாகும்வரை யாரையும்
    சார்ந்திடாமல் நடமாட
    சக்திகொடு இறைவா..

    என்னைப்போல பலருண்டு
    இங்கேதான்,
    அதனால்
    எங்கிருந்தாலும் வாழ்க
    என்பிள்ளைகள் சுகமாய்…!

    ***

    ”இளமையில் தாய்தந்தையரிடம் தாம்பெற்ற அன்பினை அவர்தம் முதுமைக்காலத்தில் அவர்களுக்குத் திருப்பித் தருதல் பிள்ளைகளின் கடனாகும். குறைந்துகொண்டே வரும் அம்முதியோரின் வாழ்வுக்கு இனிமைகூட்டுவது, இன்பமூட்டுவது அன்புவொன்றே!” என்பது திரு. பழ. செல்வமாணிக்கத்தின் கருத்து.

    தனிமைக்கொரு தனிமை

    குழி விழுந்த கண்கள்!
    ஒளி மறந்த விளக்குகள்!
    கண்ணீரை மறைக்க ஒரு
    கண்ணாடி!
    மேல் சட்டை முழுதும் அழுக்குக் கறை!
    உள்ளத்தில் தூய்மையின்
    வளர்பிறை!
    நரை நிறைந்த சிகை!
    வேதனை கலந்த ஒரு
    புன்னகை!
    கூடிக் கொண்டே போகும் அகவை!
    குறைந்து கொண்டே வரும் வாழ்க்கை!
    வறுமை இவர்களின் வாடிக்கை!
    வசதியும், இறைவனும் இவர்களுக்கு
    ஒன்று தான்!
    இரண்டையும் இதுவரை இவர்கள்
    பார்த்ததில்லை !
    செய்தித் தாளில் இவர்
    தேடுவது எதனை?
    தொலைத்த தன் வாழ்க்கையையோ!
    வாடிய பயிரைக் கண்டு வாடித்
    தவித்தது ஒரு காலம்!
    வாடிய உயிரையும், வேடிக்கை
    பார்ப்பது இக்காலம்!
    இவர்கள் வாழ்வில் என்று
    வரும் வசந்தகாலம்!
    இளமையில் வறுமை, கொடுமை
    என்றாள் ஔவைப் பாட்டி!
    உண்மையில் கொடுமை
    முதுமையில் தனிமை!
    பிறந்தவுடன் நீ தந்தைக்கு குழந்தை!
    இன்றைக்கு அவர் தான் உன்
    மூத்த குழந்தை!
    திருப்பித் தருவாய் உன்
    அன்பின் பகிர்வை!

    ***

    ”முதுமை வேண்டுவது பொன்னையோ பொருளையோ அல்ல; பெற்ற பிள்ளைகளின் அன்பையும் அருளையுமே!” என்பதை எளிமையாய்த் தம் கவிதைகளில் காட்டியிருக்கும் கவிஞர்களுக்குப் பாராட்டுக்கள்!

    இனி, இவ்வாரத்தின் சிறந்த கவிதையாய்த் தெரிவாகியிருக்கும் கவிதையைக் காண்போம்!

    உழைப்பும் தன்னம்பிக்கையும்!

    எனக்ககவை எண்பதேயானாலும்
    எனக்குற்ற துணையென்று “உழைப்பு” ஒன்றுதான்!

    என்கையே எனக்குதவியெனும் கருத்தில்
    என்மன உறுதி! இன்றைக்கும் எனைவாழவைக்கும்!

    தள்ளாத வயதினில் சமுதாய மெனைத்
    தள்ளிவைப்பதாக யான்நினைத்தாலும்…

    வெறுப்புற்று வாழவியலா நிலைகண்டுநான்
    விரக்தியுற்றுத் துவளும்மனம் கொண்டதில்லை!

    முதியோரில்லம் சேர்ந்தங்கொரு கோடியில்
    முடங்கி உறங்கி சுருங்கிக் கிடக்கவும் விரும்பவில்லை!

    மனிதரிலே மனிதராக நானும் பிறந்தேன்
    இளமைமுதல் மானத்தோடு வாழ்வதிலே முயன்று முதியவனானேன்!

    “சோம்பித் திரிவர் தேம்பித் திரிவர்”!
    “சோம்ப லிளமையில்” – “வறுமைமுதுமையில்”- யென்கிற..பழமொழியின் உட்பொருள்தனை யறிந்துநம் மனதை வழக்கப்படுத்தி நலம்வாழ முயற்சி செய்தால்

    பந்தங்களும் சொந்தங்களும் உதவாத போதும்நம்
    பரிதாப நிலைகண்டொரு நாளும்பதற வேண்டியதில்லை!

    சிற்பம்தனில் ஒளிந்திருக்கும் சிறு உளியின்சக்திபோல
    உடம்பினுள் ஒளிந்திருக்கும் உன்னதசக்தி நீயறிந்தால்!

    காலிழந்த நங்கையொருத்தி சிகரம்ஏறிய சாதனைபோல
    நீயிழந்த நம்பிக்கை மீண்டுமெழ – நீயுமுண்டு வரலாற்றில்!

    பிறக்கும் போது தொட்டிலில் தொடங்கிய வாழ்க்கையை
    இறக்கும்வரைக் கட்டிலில் வீழ்ந்துவாழ மனமில்லை!

    இளமையில் சேர்த்ததெல்லாம் எனைவிட்டு விலகினாலும்
    உழைக்குமெண்ணம் முதுமையிலும் விலகவில்லை!

    உழைப்பவர் போலசிலர் வேடந்தான் போடுகின்றார்!
    உண்மைஅறிந்து கொண்டபின்னே வெறுப்புதான் மிஞ்சும்!

    எண்பது வயதானாலும் உழைப்பயறாத..
    என்முதுகில் கூன்விழ மறுப்பது இயற்கையன்றோ!

    நாளிதழ் தினமும் படிக்கின்றேன் கண்ணொளி இன்னும் மங்கவில்லை!
    நலமுடன்வாழ நானிலத்தில் நானின்றும் உழைக்கின்றேன்!

    “நாடிவரும் அதிர்ஷ்ட மெனநினைத்து” உழைக்கமுயற்சி யிலையெனில்…
    ஓடிவிடும் உடல்நலம் வீணாய் நமைவிட்டு
    ஒப்பி நானும்…தளராது தன்னம்பிக்கையில்…தெரிந்தகைத் தொழில்செய்து
    அயராது உழைத்தினிதே வாழ்வேன்அகவை நூறானாலும்!

    உட்கார்ந்த இடத்தினிலே, வயதான காலத்திலும்
    உயர்வான எண்ணத்திலே, ஒருவருக்கும் தீங்கின்றி

    வேளையொரு சோற்றுக்குப் பிறரைவேண்டி வாழாமல்
    சைக்கிளுக்குக் காற்றடித்துப் பஞ்சர் ஒட்டிஉழைத்துப் பிழைப்பேன்!

    முதியோர் இல்லம் சேர்ந்து முடங்கிவிட விரும்பாது,

    ”ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றித்
    தாழாது உஞற்று பவர்”
    எனும் வள்ளுவத்துக்கு வாழும் சான்றாய், ”வண்டிக்குப் பஞ்சர் ஒட்டியேனும் என் வாழ்க்கை வண்டியைக் கண்ணியத்தோடு ஓட்டுவேன்!” எனும் நெஞ்சுரத்தோடு வாழும் நேர்மைமிகு பெரியவரைத் தன் கவிதையில் கம்பீரமாய்க் காட்சிப்படுத்தியிருக்கும் பெருவை திரு. பார்த்தசாரதியை இவ்வாரத்தின் சிறந்த கவிஞராய் அறிவித்து மகிழ்கிறேன்.  

     

     

     

    Share
  • படக்கவிதைப் போட்டி 96-இன் முடிவுகள்

    -மேகலா இராமமூர்த்தி

    நீரில் நின்றாடும் இந்தக் கனிமழலையைக் காமிராவில் அள்ளிவந்திருக்கிறார் திரு. பிரேம்நாத் திருமலைசாமி. இந்த எழிலார் படத்தைப் போட்டிக்குத் தேர்ந்தெடுத்துத் தந்திருக்கிறார் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி. சாந்தி மாரியப்பன். ஒளி ஓவியருக்கும் தேர்வாளருக்கும் நம் நன்றி!

    babyplaying

    நீரலையில் தன் எழிலுடம்பை நிறுத்தி, கைகளை அகலவிரித்து இந்தப் பிஞ்சுக் குழந்தை நெஞ்சு கனிந்து இரசிப்பது காகித ஓடத்தையா? அல்லது நீர்த்துளிகளின் துள்ளலையா? விடைபகரத் தளர்நடை பயின்று வா தளிரே!

    ”நம் வாழ்க்கை எனும் ஓடமும் நீர்வழிப்படூஉம் புணை போன்றதே!” என்கிறார் வாழ்க்கைப் பாடத்தை முற்றாய்க் கற்றுணர்ந்த கணியன் பூங்குன்றனார்!

    கவிஞர்களின் கற்பனை அலைகள் அடுத்து நம்மைத் தாலாட்டக் காத்திருக்கின்றன. அவற்றில் நீந்திவருவோம்! கவி மாந்திவருவோம்!

    ***

    ”சிறுபிள்ளையை நீரில் நிறுத்தி விளையாடச்சொல்லாதீர்! விளையாட்டு வினையாகிவிடக்கூடும்…கவனம்!” என்று அன்புள்ளத்தோடு பெரியோரை எச்சரிக்கின்றார் திரு. செண்பக ஜெகதீசன்.

    பெரியோரே…

    வெள்ளை யுள்ளப் பிள்ளைக்கு
    வேண்டா மிந்த விளையாட்டு,
    பள்ளம் மேடு தெரியாத
    பருவ மிதிலே பிள்ளைக்குக்
    கள்ளம் கபடம் தெரியாமல்
    கவன மாக வளர்த்தேதான்
    உள்ளம் உயர வைப்பீரே
    உறவா யுள்ள பெரியோரே…!

    ***

    ”குழாய் நீரிலேயே குளித்துப் பழகிய இன்றைய குழந்தைகட்குப் பாய்ந்துவரும் வெள்ளத்தில் குளிப்பதில்தான் எத்தனை மகிழ்ச்சி! அந்தச் சுகத்தினை அனைவரும் அனுபவிக்கத் தேவை கள்ளமற்ற பிள்ளை மனம்!”  என்று அருமையாய் அனுபவமொழி பகர்கின்றார் பெருவை திரு. பார்த்தசாரதி.

    குளிப்பதில் சுகம்

    எண்ணெய்குளியல் உடலுக்கு எழுச்சிதரும்..
    எண்ணக்குளியல் மனதுக்கு மகிழ்ச்சிதரும்..

    உடல்சுத்தம்பெற உடல்குளியல் வேண்டுமெனில்..
    உள்ளம்சுகம்பெற மனக்குளியல் தேவையன்றோ!

    தமிழதனைக் கடலாறருவி மலைமடுவென கவிரெலாம்வருணிப்பர்..
    தமிழ்அமுதமெனும் குளம்தனில் மூழ்கிநானும் கவிபாடவிரும்புகிறேன்!

    கலைந்த தண்ணீரில் எண்ணங்கள் அலையாய்த் தோன்ற..
    தெரித்த திவலைகள் எழுத்துக்களாய் ஏடுகளில்விழ..

    குதித்து மூழ்கி முத்தெடுப்பவர்க்கிடையில்..
    குளித்து மகிழ்ந்த அனுபவத்தைப் பாடுகிறேன்!

    மழைமுகிலில் பிறந்து, ஆர்ப்பரித்து அடிபட்டு..
    மண்மடியில் மெளனமாக தவழும் தண்ணீரோ..

    இளைப்பாற வந்ததுஓர் இடத்தினில் நிலையாகயதில்..
    குளித்துமகிழ மண்ணுயிர்களுக்கு மட்டான மகிழ்ச்சிதரும்!

    மலைமுகட்டில் பொழிந்த மழைத்துளிகள்..
    மரணிக்காமல் தரணிக்கு வந்து கழனியில்தேங்க..

    தவளைஓசையிட தண்ணீரில்நாம் கூத்தாடுவது..
    குவளையில் குளிப்பதைவிட நிலையான ஆனந்தமே!

    பள்ளம் பாய்ந்தோடும் பாறைநீரில்..
    குடைந்து நீராடும் குட்டிப்பையன்..

    குழாய்நீரில் குளித்தே பழகியவனானதால்..
    குளத்தைப் பார்த்ததும் துள்ளிக் குதிப்பானோ!..

    குளிர்மிகு தண்ணீரில் ஆடும் குழந்தைபெறும்..
    களிப்பாலென் னானந்தக்கண்ணீரும் தண்ணீரோடு மறையுது!

    தொட்டித் தண்ணீலே குளித்திருக்கோமானால்..
    ஒட்டி உடல்நனையக் ஒருநாளும் குளித்ததில்லை!

    ஆழிநீர் அருவிநீரில் குளித்தாலும் அலப்பரியாமல்..
    ஆழமாய் கால்பதித்துக் குளிப்பதில்தான் சுகம்!

    வெட்டவெளிநீரி லொன்றில் தேகமமமிந்தவுடன்..நம்
    வேதனைதான் பறந்திடுமே பனிபோல!

    மெல்லமெல்ல கண்களைமூடி மூழ்கும்போது..
    இருள்விழியினுள்ளேயொரு புரியாத ஒளிதெரிகிறது!

    குழந்தையுள்ளம் வேண்டுமப்பா எதையுமன் போடுரசிக்க..
    குதூகலமாய் குளிப்பதற்க்கே யந்தகுணமிக அவசியம்!………..

    ***

    நீரில் குளிப்பது குறித்து இருவேறு கருத்துக்களைப் பகிர்ந்திருக்கின்றார்கள் கவிஞர்கள் இருவரும்!

    இவ்வாரத்தின் சிறந்த கவிதையாகத் தேர்வாகியிருப்பது அடுத்து…

    நீரின்றி அமையாது அகிலம்!
    நீயின்றிச் சுவைக்காது குடும்பம்!
    கண்ணில் நீர்வந்து அன்பைப்
    புரிய வைக்கும்!
    மகனாய் நீ வந்து வாழ்க்கையைப்
    புரிய வைத்தாய்!
    மழையாய் மண்ணில் வந்து
    நீர் பயிரை வாழ வைக்கும்!
    பெண்ணில் கருவாய் உருவாகி
    அன்னைக்குப் பெருமை தந்தாய்!
    சாதி மத பேதம் தெரியாது
    நீருக்கும், தேனாய்த் தித்திக்கும் பிள்ளைக்கும்!
    நீரிடம் நீ கற்றுக் கொள்ள வேண்டியது
    எத்தனை! எத்தனை!
    கவனமாய் கேளடா நான்
    சொல்லும் கருத்தினை!
    நதியாய் வந்து சொல்லும்
    பாடம் அமைதி!
    அருவியாய் விழுந்து சொல்லும்
    பாடம் ஆற்றல்!
    வெள்ளமாய் ஓடிச் சொல்லும்
    பாடம் வேகம்!
    கடலில் சங்கமித்துச் சொல்லும்
    பாடம் நட்பு!
    அலையாய் எழுந்து சொல்லும்
    பாடம் முயற்சி!
    மழையாய் பொழிந்து சொல்லும்
    பாடம் கொடை!
    நீரைத் தெரிந்து கொண்டால்
    நீதி புரிந்து விடும்!
    தெளிந்த நீரோடை உன்
    மனது தம்பி!
    அழுக்கைத் தான் ஏற்று
    தூய்மை நமக்குத் தரும்
    தண்ணீரைப் போற்றடா தம்பி!

    நீரின்றி உலக வாழ்வு அமைவதில்லை. மழலையின்றி மனித வாழ்வில் மகிழ்ச்சியில்லை என்பது மாந்தகுலம் அறிந்ததே.

    ”அருவி நீரிடம் ஆற்றலை அறி; நதி நீரிடம் அமைதியை அறி; வெள்ள நீரிடம் வேகத்தை அறி! மழை நீரிடம் கொடையை அறி!” என்று நீரில் நின்றிருக்கும் சின்னஞ்சிறு மழலையிடம் அரிய பெரிய வாழ்வியல் உண்மைகளை எளிமையாய் உரைத்திருக்கும் திரு. பழ. செல்வமாணிக்கத்தின் கவிதை இவ்வாரத்தின் சிறந்த கவிதையாய்த் தேர்வாகியிருக்கின்றது. கவிஞருக்கு என் கனிவான பாராட்டு!

     

    Share