படக்கவிதைப் போட்டி 96-இன் முடிவுகள்
-மேகலா இராமமூர்த்தி
நீரில் நின்றாடும் இந்தக் கனிமழலையைக் காமிராவில் அள்ளிவந்திருக்கிறார் திரு. பிரேம்நாத் திருமலைசாமி. இந்த எழிலார் படத்தைப் போட்டிக்குத் தேர்ந்தெடுத்துத் தந்திருக்கிறார் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி. சாந்தி மாரியப்பன். ஒளி ஓவியருக்கும் தேர்வாளருக்கும் நம் நன்றி!
நீரலையில் தன் எழிலுடம்பை நிறுத்தி, கைகளை அகலவிரித்து இந்தப் பிஞ்சுக் குழந்தை நெஞ்சு கனிந்து இரசிப்பது காகித ஓடத்தையா? அல்லது நீர்த்துளிகளின் துள்ளலையா? விடைபகரத் தளர்நடை பயின்று வா தளிரே!
”நம் வாழ்க்கை எனும் ஓடமும் நீர்வழிப்படூஉம் புணை போன்றதே!” என்கிறார் வாழ்க்கைப் பாடத்தை முற்றாய்க் கற்றுணர்ந்த கணியன் பூங்குன்றனார்!
கவிஞர்களின் கற்பனை அலைகள் அடுத்து நம்மைத் தாலாட்டக் காத்திருக்கின்றன. அவற்றில் நீந்திவருவோம்! கவி மாந்திவருவோம்!
***
”சிறுபிள்ளையை நீரில் நிறுத்தி விளையாடச்சொல்லாதீர்! விளையாட்டு வினையாகிவிடக்கூடும்…கவனம்!” என்று அன்புள்ளத்தோடு பெரியோரை எச்சரிக்கின்றார் திரு. செண்பக ஜெகதீசன்.
பெரியோரே…
வெள்ளை யுள்ளப் பிள்ளைக்கு
வேண்டா மிந்த விளையாட்டு,
பள்ளம் மேடு தெரியாத
பருவ மிதிலே பிள்ளைக்குக்
கள்ளம் கபடம் தெரியாமல்
கவன மாக வளர்த்தேதான்
உள்ளம் உயர வைப்பீரே
உறவா யுள்ள பெரியோரே…!
***
”குழாய் நீரிலேயே குளித்துப் பழகிய இன்றைய குழந்தைகட்குப் பாய்ந்துவரும் வெள்ளத்தில் குளிப்பதில்தான் எத்தனை மகிழ்ச்சி! அந்தச் சுகத்தினை அனைவரும் அனுபவிக்கத் தேவை கள்ளமற்ற பிள்ளை மனம்!” என்று அருமையாய் அனுபவமொழி பகர்கின்றார் பெருவை திரு. பார்த்தசாரதி.
குளிப்பதில் சுகம்
எண்ணெய்குளியல் உடலுக்கு எழுச்சிதரும்..
எண்ணக்குளியல் மனதுக்கு மகிழ்ச்சிதரும்..
உடல்சுத்தம்பெற உடல்குளியல் வேண்டுமெனில்..
உள்ளம்சுகம்பெற மனக்குளியல் தேவையன்றோ!
தமிழதனைக் கடலாறருவி மலைமடுவென கவிரெலாம்வருணிப்பர்..
தமிழ்அமுதமெனும் குளம்தனில் மூழ்கிநானும் கவிபாடவிரும்புகிறேன்!
கலைந்த தண்ணீரில் எண்ணங்கள் அலையாய்த் தோன்ற..
தெரித்த திவலைகள் எழுத்துக்களாய் ஏடுகளில்விழ..
குதித்து மூழ்கி முத்தெடுப்பவர்க்கிடையில்..
குளித்து மகிழ்ந்த அனுபவத்தைப் பாடுகிறேன்!
மழைமுகிலில் பிறந்து, ஆர்ப்பரித்து அடிபட்டு..
மண்மடியில் மெளனமாக தவழும் தண்ணீரோ..
இளைப்பாற வந்ததுஓர் இடத்தினில் நிலையாகயதில்..
குளித்துமகிழ மண்ணுயிர்களுக்கு மட்டான மகிழ்ச்சிதரும்!
மலைமுகட்டில் பொழிந்த மழைத்துளிகள்..
மரணிக்காமல் தரணிக்கு வந்து கழனியில்தேங்க..
தவளைஓசையிட தண்ணீரில்நாம் கூத்தாடுவது..
குவளையில் குளிப்பதைவிட நிலையான ஆனந்தமே!
பள்ளம் பாய்ந்தோடும் பாறைநீரில்..
குடைந்து நீராடும் குட்டிப்பையன்..
குழாய்நீரில் குளித்தே பழகியவனானதால்..
குளத்தைப் பார்த்ததும் துள்ளிக் குதிப்பானோ!..
குளிர்மிகு தண்ணீரில் ஆடும் குழந்தைபெறும்..
களிப்பாலென் னானந்தக்கண்ணீரும் தண்ணீரோடு மறையுது!
தொட்டித் தண்ணீலே குளித்திருக்கோமானால்..
ஒட்டி உடல்நனையக் ஒருநாளும் குளித்ததில்லை!
ஆழிநீர் அருவிநீரில் குளித்தாலும் அலப்பரியாமல்..
ஆழமாய் கால்பதித்துக் குளிப்பதில்தான் சுகம்!
வெட்டவெளிநீரி லொன்றில் தேகமமமிந்தவுடன்..நம்
வேதனைதான் பறந்திடுமே பனிபோல!
மெல்லமெல்ல கண்களைமூடி மூழ்கும்போது..
இருள்விழியினுள்ளேயொரு புரியாத ஒளிதெரிகிறது!
குழந்தையுள்ளம் வேண்டுமப்பா எதையுமன் போடுரசிக்க..
குதூகலமாய் குளிப்பதற்க்கே யந்தகுணமிக அவசியம்!………..
***
நீரில் குளிப்பது குறித்து இருவேறு கருத்துக்களைப் பகிர்ந்திருக்கின்றார்கள் கவிஞர்கள் இருவரும்!
இவ்வாரத்தின் சிறந்த கவிதையாகத் தேர்வாகியிருப்பது அடுத்து…
நீரின்றி அமையாது அகிலம்!
நீயின்றிச் சுவைக்காது குடும்பம்!
கண்ணில் நீர்வந்து அன்பைப்
புரிய வைக்கும்!
மகனாய் நீ வந்து வாழ்க்கையைப்
புரிய வைத்தாய்!
மழையாய் மண்ணில் வந்து
நீர் பயிரை வாழ வைக்கும்!
பெண்ணில் கருவாய் உருவாகி
அன்னைக்குப் பெருமை தந்தாய்!
சாதி மத பேதம் தெரியாது
நீருக்கும், தேனாய்த் தித்திக்கும் பிள்ளைக்கும்!
நீரிடம் நீ கற்றுக் கொள்ள வேண்டியது
எத்தனை! எத்தனை!
கவனமாய் கேளடா நான்
சொல்லும் கருத்தினை!
நதியாய் வந்து சொல்லும்
பாடம் அமைதி!
அருவியாய் விழுந்து சொல்லும்
பாடம் ஆற்றல்!
வெள்ளமாய் ஓடிச் சொல்லும்
பாடம் வேகம்!
கடலில் சங்கமித்துச் சொல்லும்
பாடம் நட்பு!
அலையாய் எழுந்து சொல்லும்
பாடம் முயற்சி!
மழையாய் பொழிந்து சொல்லும்
பாடம் கொடை!
நீரைத் தெரிந்து கொண்டால்
நீதி புரிந்து விடும்!
தெளிந்த நீரோடை உன்
மனது தம்பி!
அழுக்கைத் தான் ஏற்று
தூய்மை நமக்குத் தரும்
தண்ணீரைப் போற்றடா தம்பி!
நீரின்றி உலக வாழ்வு அமைவதில்லை. மழலையின்றி மனித வாழ்வில் மகிழ்ச்சியில்லை என்பது மாந்தகுலம் அறிந்ததே.
”அருவி நீரிடம் ஆற்றலை அறி; நதி நீரிடம் அமைதியை அறி; வெள்ள நீரிடம் வேகத்தை அறி! மழை நீரிடம் கொடையை அறி!” என்று நீரில் நின்றிருக்கும் சின்னஞ்சிறு மழலையிடம் அரிய பெரிய வாழ்வியல் உண்மைகளை எளிமையாய் உரைத்திருக்கும் திரு. பழ. செல்வமாணிக்கத்தின் கவிதை இவ்வாரத்தின் சிறந்த கவிதையாய்த் தேர்வாகியிருக்கின்றது. கவிஞருக்கு என் கனிவான பாராட்டு!
இவ்வாரக்கவி பழ. செல்வமாணிக்கத்துக்கு வாழ்த்துக்கள்.
தேர்வாளர் கவிதையை ஆராயும்போதும், வெட்டி ஒட்டும்போதும் விட்டுப்போன வரிகள்…….
மழலையின் விளையாட்டு எதுவானாலுமதில்..
பெறுமின்பம் பெற்றவர்களுக்கொரு பேரின்பம்!
மூழ்கிமுத்தெடுக்கும் முத்தான என்ரத்தினமே..
பெருகிவந்தநீரினிலே நீ..நீந்திவரும்போது பித்தாகிப்போனேனே!
ஓடிநீராட உடன்வாருங்களென் னருமைச்செல்வங்களே!
ஆடியளைந்தாட ஆடையில்லாமேனியெல்லாம் குளிர்பரவ!
நன்றி….
பெருவை திரு. பார்த்தசாரதி அவர்களுக்கு,
தங்கள் கவிதையின் இறுதி வரிகளைக் கவிதையின் நீளம் கருதியே நான் வெட்டி, கவிதையின் தொடர்ச்சி இன்னும் இருக்கிறது என்று விளக்கச் சில புள்ளிகள் வைத்திருக்கிறேன் (Please see the dotted lines after the exclamation mark). மிக நீளமாக எழுதப்படும் கவிதைகளின் நீளத்தைக் குறைப்பதற்காக அவ்வப்போது நாங்கள் இவ்வாறு வெட்டுவதுண்டு.
படக்கவிதைப்போட்டியில் தொடர்ந்து தாங்கள் ஆர்வத்தோடு பங்கேற்றுவருவதற்கு என் மகிழ்ச்சியும் பாராட்டும்!
அன்புடன்,
மேகலா