-மேகலா இராமமூர்த்தி

காளையைத் தொழுதுநிற்கும் காளையைத் தன் படப்பெட்டிக்குள் அள்ளிவந்திருப்பவர் திரு. ராஜ்குமார். இந்த அழகிய படத்தைப் போட்டிக்குத் தேர்ந்தெடுத்து அளித்திருக்கின்றார் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி. சாந்தி மாரியப்பன். இவ்விருவருக்கும் நம் நன்றி!

bull

காளையொடு தமிழருக்குள்ள நெருங்கிய தொடர்பு பன்னூறாண்டுகள் கடந்த பழமையானது. மாடுகளே தமிழரின் தலையாயச் செல்வமாய்த் திகழ்ந்தகாலம் அது!

இன்றோ (தமிழ்)நாட்டுமாடுகளை முற்றாய் அழித்துவிடுவது என்று கங்கணம் கட்டிக்கொண்டு அலையும் அந்நியநாட்டைச் சேர்ந்த அமைப்புகள் சில, தம்மை மிருகவதைத் தடுப்பாளர்கள்(!) என்று அழைத்துக்கொள்ளும் நகைமுரணைக் காணவேண்டிய சூழல் நமக்கு.

அது கிடக்க.

இரண்டு காளைகளை ஒருங்கே கொண்ட இந்தப் படத்தைக் கண்ட நம் கவிஞர்கள் தம் கற்பனைகளை எவ்வாறு கட்டவிழ்த்துவிட்டிருக்கிறார்கள் என்று அறிந்துவருவோம்!

***

உழவர் பெருமையை உயரத்தில் ஏற்றிய உன்னதக் காளையைப் போற்றிப் பாடியிருக்கிறார் திரு. செண்பக ஜெகதீசன்.

காளையே…!

மானம் காக்கும் காளையிது
மாணவர் சக்தியைக் காட்டியது,
சேனையாய்க் காளையர் கூடிவந்தே
செயித்துக் காட்டும் காளையிது,
வானம் பொழியும் பூமியிலே
வளத்தைப் பெருக்கும் காளையிது,
கோனெ உழவர் தரத்தினையே
கோபுரம் ஏற்றிடும் காளையிதே…!

***

”வீரமறவன் ஆரத்தழுவிட அன்பில் நெகிழ்ந்த காளையும் பசுவான மாயமென்ன! குடும்பம் தழைக்க உழைக்கும் காளையரும், உழவன் பிழைக்க உழைக்கும் காளைகளும் உலகில் தோன்றிய ஒப்பிலா உயிரினங்கள்!” என்று நெகிழ்ந்துரைக்கின்றார் திரு. பழ. செல்வமாணிக்கம்.

நேயம் மனிதன் நட்பைச் சொல்லும் நிழற்படம்!
அன்பின் பெருமையை நமக்கு
உணர்த்தும் அற்புதப் பாடம்! ஈசன் ஏறிய வாகனம்!
இருந்தும் இல்லை தலைக்கனம்!
காளை உழைப்பின் இலக்கணம் !
உயிரினம் எல்லாம் ஒன்றெனச்
சொல்லும் இனிய தருணம்!
மனித நேயத்தின் அழகான காட்சி இது!
தமிழரின் அன்பை உணர்த்தும்
சாட்சி இது!
காளையை தெய்வமாய்
தொழுபவன் தமிழன்!
தமிழனை, தோழனாய்
நினைப்பது காளை!
இவர்களை பிரிக்க நினைத்தது
சில வீணர்களின் வேலை!
அற வழி இணைந்தனர் இளைய தலை முறை!
அரும்பாடு பட்டு மீட்டனர்!
சல்லிக்கட்டெனும் ஏறு தழுவலை !

ஏறு தழுவுதலை இப்படியும்
கொள்ளலாமோ?
வீர மறவனின் அரவணைப்பில்
காளை மயங்கி நிற்கிறதே!
முரட்டுக் காளை கூட பசுவாய்
மாறியது எப்படி?
அன்பிற்கு எத்தனை வலிமை!
ஆண் மகனும் அப்படித்தான்!
அன்பிற்கு ஆட்படுவான்!
அடக்க நினைத்தால்!
வீறு கொண்டெழுவான் !
காளையின் மனமறிந்த
காளை இவன்!
குடும்பத்தை காத்திருக்க
இறைவன் அனுப்பிய தூதன்!
உடல், பொருள், ஆவி
அத்தனையும் தந்திடுவான் !
மனைவி, மக்கள் மகிழ்ந்திருக்க
மாடாய் உழைத்திடுவான் !
ஒளியை தருவதற்கு
மெழுகாய் கரைந்திடுவான் !
தனக்கென வாழா உயிரினம்
இரண்டுக்கும் உண்டு புகழிடம்!

***

”உன் கொம்பைப் பிடிக்கவரும் இளைஞரிடம் உன் தெம்பைக் காட்டு! உன் வாலைப் பற்றினால் வால்பிடிக்கும் வாழ்க்கை வேண்டாமென்று உன் காலால் எட்டியுதைத்து உணர்த்து!” எனச் சல்லிக்கட்டில் கட்டிளங் காளையரோடு மல்லுக்கட்டவிருக்கும் காளைக்கு வீரவுரை பகர்கின்றார் பெருவை திரு. பார்த்தசாரதி.

ஜல்லிக்கட்டுக் காளைக்கு வீரஉரை:

அடங்காத காளையேநீ!
***அடங்காதே யாருக்கும்!
நெற்றிப் பொட்டில் திலகமிட்டு வீரத்துடன்…களத்தில்
***வெற்றி முத்தமிட்டபின் உனைவீழ்த்த யாருமில்லை!

வீரமூட்டி வளர்த்துன்னை மைதானத்தில் விடுகிறேன்..
***வீரர்களை முட்டி நிதானமாயப் பரிசுவென்று வா!
கட்டவிழ்த்து விட்டவுடன்..கட்டோடெதிர்..
***கண்டவரைக் காயமின்றிச் சாய்த்துவிடு!

அகிம்சையால் நாம்பெற்ற சுதந்திரம்போல்..உனையடக்க..
***ஆயுதமின்றி எதிர்கொண்டுவரும் வீரர்களைவென்றுவா!
உன்திமில்பிடித்து திமிர் அடக்கநினைத்தால்..
***தன்தமிழ் வீரம்பெரிதன்று தக்கபடி எடுத்துச்சொல்லு!

மல்லுக் கட்டும் வீரர்கள் மத்தியில்..
***ஜல்லிக்கட்டொன்றுதான் வீரமெனப் புரியவை!
ஈராண்டாய்க் கட்டுண்டிருந்த காளையே..
***இன்றுன் வீரத்தை இருநொடியில் காட்டு!

களைப்பறியா உன் கொம்பைப் பிடித்தால்..
***அளப்பரிய யுன்தெம்பை எடுத்துக்காட்டு!
வால் பிடிக்கும் வாழ்க்கை வேண்டாவென..
***உன் வாலைப் பிடிப்பவனை எட்டிஉதை!

பார்வைபடாமல் பக்கத்தில்வரும் வீரர்களையுன்..
***வஞ்சகம்வேண்டா வென வயிற்றில் முட்டு!
சீராட்டிப் பாராட்டி வளர்த்தயுன் உடம்பை தொட்டால்..
***சீறியவனை துவம்ஸம் செய்து சிலிர்த்துநில்!

விளையாடிக் களைக்கும்போதுநீ..எனைப்பார்!
***காளையுனை வீரத்தோடு வளர்த்த நானிருக்கிறேன்!
நூறுமீட்டர் ஓடவேண்டாம் உலகசாதனைசெய்ய..
***ஒருமீட்டர் ஓடிப்பாருங்கள் காளையோடு அதுவேசாதனை!

ஈதொரு வீர விளையாட்டென்று சொல்லிங்கே!
***ஓர்கோழைக்கு துளிஇடமில்லை என்றுசொல்!
அயலார் வியந்துகளிக்கு மிவ்விளையாட்டில்..
***அயலினம் நுழைய அனுமதியோம் மென்றுரை!

பாட்டில் குற்றமிருக்கலாமானால்..உன்
***விளையாட்டில் குற்றமென்று..
கூறும் கயவர்களை யினியுன்
***கூரான கொம்பால் குத்திக் கிழித்துவிடு!

சொப்பனமே கண்டிடுவார் உனைவெல்ல..
***தப்பனவே உணர்ந்திடுவார் தோல்விகண்டபின்னே!
வீழ்ச்சியுறா வெற்றிபெற…காளையடக்கும் வீர்ர்களே..
***சூழ்ச்சியின்றி விளையாட சூதறியாது வரவேண்டும்!

தோற்றபிறகு எங்களைக் கொல்வதென்பது…
***அயலார் வகுத்த கோழைத்தனமெனில்…
தோற்றாலுமினி உங்களைக் கொல்லாமலிருப்பது..
***காளையெங்கள் வீரத்தனமென்று பறைசாற்று!

***

சமீபத்தில் தமிழகத்தில் நடைபெற்ற சல்லிக்கட்டுத் தடைக்கெதிரான  மக்கள் எழுச்சி, இவ்வாரப் படக்கவிதைப் போட்டிக் கவிதைகளிலும் எதிரொலிக்கக் காண்கின்றேன்.

அடுத்து வருவது, இவ்வாரப் படக்கவிதைப் போட்டியில் சிறந்ததெனத் தேர்வாகியிருக்கும் கவிதை…

ஊறு விளைவிக்கும் கயவர் செய்கையால்,
ஆறு கைநழுவி உழவு பொய்த்தாலும்,
ஏறு தழுவும் நம் இதய உரிமையை,
வேறு பணிமறந்து வீதியில் திரண்டு,
நூறு தடைதகர்த்த வீரரில் ஒருவன்,
நீறு தவழும் திருமுகத்துடன் வரவே,
சீறும் குணம் மறந்து காளையும் நன்றி
கூறும் காட்சியை உலகுக்குக் காட்டும்,
பேறு பெற்றதே இந்தப் புகைப்படம்!

தமிழகத்துக்கு ஊறுசெய்வதையே தம் தொழிலாகக் கொண்ட கயவரின் செய்கையால் காவிரியால் புரக்கப்பட்ட தமிழ்நாடு இன்று கையற்று நிற்கின்ற சூழலிலும், ஏறுதழுவும் நம் மரபுரிமையை  அறப்போரிட்டு மீட்டிருக்கிறார்கள் வேறுபணி மறந்து வெள்ளமெனத் திரண்ட எழுச்சி வீரர்கள். அத்தகு வீரர்களில் ஒருவன் நீறுதவழும் முகத்தோடு எதிர்வரவே, சீறும் குணங்கொண்ட காளையும் அவனைத் தழுவி நன்றி நவில்கின்றது” எனும் அழகிய கற்பனையைக் கச்சிதமாய்க் கவிதையில் ஏற்றியிருக்கும் திரு. சச்சிதானந்தத்தை இவ்வாரத்தின் சிறந்த கவிஞரென அறிவிப்பதில் ஆனந்தம் கொள்கின்றேன்.

 

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “படக்கவிதைப் போட்டி 99-இன் முடிவுகள்

  1. இந்த வாரத்தின் சிறந்த கவிஞரென என்னைத் தேர்வு செய்த நடுவர், திருமதி.மேகலா இராமமூர்த்தி அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

    போட்டியில் கலந்து கொண்டு அழகிய கவிதைகளை வழங்கியுள்ள திரு.செண்பக ஜெகதீசன், திரு.பழ.செல்வ மாணிக்கம், மற்றும் பெருவை.திரு.பார்த்தசாரதி ஆகியோருக்கும் என் உளம் கனிந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    கவிதை எழுதுவதற்குத் தூண்டுகோலாக உயிரோட்டமுள்ள புகைப்படத்தை எடுத்துள்ள திரு.ராஜ்குமார் அவர்களுக்கும், இந்தப் புகைப்படத்தை சரியானதொரு தருணத்தில் போட்டிக்காக தேர்ந்தெடுத்துள்ள வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி.சாந்தி மாரியப்பன் அவர்களுக்கும், எனது நன்றிகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

    இந்தப் போட்டியைத் தொய்வில்லாது தொடர்ந்து நடத்தி 100வது வாரம் கண்டிருக்கும் ஆசிரியர் திருமதி.பவளசங்கரி அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

    அன்புடன்,

    தெ.சச்சிதானந்தம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *