பவள சங்கரி

அன்பிற்கினிய நண்பர்களே!

வணக்கம். கண்ணையும், கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் திறமை கொண்டவரா நீங்கள்?

17274154_1260072657380264_67374682_n

152398535@N04_rஅவினாஷ் சேகரன் எடுத்த இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள். இதனை நம் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி. சாந்தி மாரியப்பன் தேர்ந்தெடுத்து அளித்துள்ளார்.

இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை நல்ல தலைப்புடன் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் சனிக்கிழமை (18.03.2017) வரை உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர்குழு உறுப்பினரும், தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான திருமதி மேகலா இராமமூர்த்தி தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பலமுறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப்படும் கவிஞர்களுக்கும் உண்டு. 12 மாதமும் தேர்வுபெறும் ஒளிப்படக் கலைஞர் / கவிஞர்களிலிருந்து ஆண்டின் சிறந்த கலைஞரும், கவிஞரும் தேர்வு பெறுவார்கள். ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி இது; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்குபெற அழைக்கிறோம்.

போட்டியின் நடுவரான திருமதி. மேகலா இராமமூர்த்தி புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்தவர். கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்ற இவர், அமெரிக்க தமிழ்ச்சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009, 2014, 2016ஆம் ஆண்டுகளின் (ஆர்லாண்டோ, அட்லாண்டா & மிசௌரி) கவியரங்கம், இலக்கிய வினாடிவினா நிகழ்ச்சிகளில் பங்கேற்றுப் பாராட்டுகளும், பரிசுகளும் பெற்றுள்ளவர். சங்கப் பாடல்களில் அதிக ஆர்வமும், இலக்கியக் கூட்டங்களிலும், பட்டிமன்றங்களிலும் சுவைபடப் பேசுவதில் வல்லமையும் பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடைபவளம்.

13 thoughts on “படக்கவிதைப் போட்டி – (103)

 1. சிதறினாலும் பிரிவதற்கில்லை..

  கல்லொன்று கண்டவுடன் பதறியோடும் தேனீக்கௗல்ல
  தந்திரத்தால் பிரிக்கவியலும் பசுக்கௗுமல்ல

  பரிதி கண்ட பனியாய்..,
  ஒளி கண்ட இருௗாய்..,
  தென்றல் பட்ட மேகமாய்..,
  மதி கெட்ட மனிதனாய்..,
  சிறு கற்பட்டதும் அகன்றிடமாட்டேன்..

  தாய் கண்ட சேய் போல்
  திரும்புவேன் இனத்திடமே.
  தந்திரம் பலிக்காது மானிடா
  தண்ணீரில் கல்லெறிந்து
  தனநேரந் தொலைக்காதே.

 2. ஐயஹோ! நீயுமா என் கண்ணே?!
  ஐம்பூதங்கௗ் நிம்மதியாக, நிதானமாக
  ஐயமின்றி வாழ்ந்ததெல்லாம் ஓர் காலமடி கண்ணே..

  நிலம், நீர், காற்று, நெருப்பு, ஆகாயம்
  நித்தமும் பூமிக்கு தொண்டாற்றியது ஓர் காலம்
  நிதர்சனம் உரைக்கிரேன் கேௗடி என் கண்ணே.

  நாம் நாமாகத் தான் இருந்தோம்
  நாட்டை கெடுக்கும் பிசாசுகள் வரும்வரை
  நாௗ்தொறும் வணங்க வேண்டிய நம்மை நாசமாக்கி விட்டனரடி என் கண்ணே.

  நம் சுயத்தை அழித்து சூளுரைக்கின்றனர்
  நன்றி கெட்ட சுயநலக்காரர்கௗ்
  நமை வௌ்ௗமென பெயரிடுகிறானடி என் கண்ணே.

  இனி இவ்விடமே வரக்கூடாது
  இறுதி வரை என எண்ணிக்கொண்டிருக்க
  இப்பொழுது நீயும் ஏனடி என் கண்ணே?!

  மகளே வருக என இருகரம் நீட்டி
  மணமாற உனை அழைத்தது ஓர் காலம்..
  மறித்து நினை திருப்பி அனுப்ப மனம் துடிக்குதடி என் கண்ணே.

  திருந்த மாட்டார்கள் நமை அழிக்கும் நீசர்கௗ்
  திரும்பிச் செல்ல வழி பாரடி என் கண்ணே!

  துௗியான நீ துள்ளி விளையாட
  தூய்மையான வேறு கிரகம் பாரடி என் கண்ணே.

 3. நீரிற் குமிழி நீயே சாட்சி!

  பாய்ந்து வரும் காவிரியில் நீந்திவரும் நீர்க்குமிழி
  ஓய்ந்துவிட்டாய், உன்படத்தின் காட்சி – இன்று
  உலகுக்கு அதுதானே சாட்சி

  காப்பியங்கள் சொன்னதெல்லாம் கனவாய்ப் பழங்கதையாய்
  மூப்படைந்து செத்தொழிந்து போச்சு – இன்று
  முகமிழந்த காவிரியாயாச்சு

  வாழ்த்துரைக்கச் செம்புலவர் வளநாடன் தாரமென்று
  கீர்த்தியுடன் வாழ்ந்தனை காவேரி – இன்று
  கிடக்கிறதே வெள்ளை மணல் வாரி (கடல்)

  வண்டலள்ளித் தமிழர் மண்ணில் வளங்கொழிக்க நன்செயெங்கும்
  கொண்டு தந்தாய் எங்களின் காவேரி – இன்று
  மண்டிய மண் அள்ளுதற்கு வயல் வரப்புப் படுக்கையெனக்
  கண்ட இடமெங்கும் மணல் லாரி.

  கன்னடத்துப் பைங்கிளியென்றுன்னையவர் சிறை பிடிக்க
  அன்னவரின் சொத்தானாய் தேவி – நாம்
  உன்னையினிக் காண்பதற்கு உள்ளதெல்லாம் உன்படம் தான்
  என்ன செய்வோம் இத்துயரை மேவி!

 4. சிதறினாலும் பிரிவதற்கில்லை..
  கல்லொன்று கண்டவுடன் பதறியோடும் தேனீக்கௗல்ல
  தந்திரத்தால் பிரிக்கவியலும் பசுக்கௗுமல்ல
  பரிதி கண்ட பனியாய்..,
  ஒளி கண்ட இருௗாய்..,
  தென்றல் பட்ட மேகமாய்..,
  மதி கெட்ட மனிதனாய்..,
  சிறு கற்பட்டதும் அகன்றிடமாட்டேன்..
  தாய் கண்ட சேய் போல்
  திரும்புவேன் இனத்திடமே.
  தந்திரம் பலிக்காது மானிடா
  தண்ணீரில் கல்லெறிந்து
  தன்நேரந் தொலைக்காதே.

 5. வாடிய பயிரைக்கண்டே
  வாடிமடிந்த மனிதனை அறிவாயோ,
  உனைக்காணாது உயிர்துறந்தோர்
  எத்துனையென்பதை அறியாயோ,

  பெருகிவழிந்தோடும் குழாயடிநீரோடு
  அலட்சியத்தினின்று மடிவற்றிப்போன ஆற்றுப்படுகைகளும் துளிகட்டியாடிய ஆற்றங்கறை ஆலமரமும்
  நினைவுபடுத்துகிற பழைய நினைவுகளும்
  கடந்து வந்த பாதையினில் உணா்த்திவிட்டுபோகிறதுன் இழப்புகளை

  தாரைவார்க்க காத்திருக்கும் கார்ப்பரேட் எசமானா்கள் ஒருகோடி
  உனைத்தோடி நோன்பிருக்கும் ஜனங்கள்கோடி
  இனியேனும் இருப்பதை காப்போனோ
  இழந்ததை மீட்போனோயெனும் ஏக்கத்தினிலே …

 6. இன்றே செய்…

  நிலைப்பதில்லை
  நீர்க்கோலங்கள்-
  வாழ்க்கையாய்..

  குளத்தில் கல்லெறிந்து
  வளையங்களைத் தூதனுப்பினால்
  வராது நல்லகாலம்..

  இருக்கும் காலத்தில்
  இயன்றதைச் செய் முயன்று..

  இல்லாததை நம்பி
  ஏமாந்து
  இழந்துவிடாதே
  இருக்கும் காலத்தை…!

  -செண்பக ஜெகதீசன்…

 7. பொங்கி வரும் பொக்கிஷம்

  சிறுதுௗி பெருவௌ்ௗம் என்றாய்
  பல துளிகள் உனக்கௗித்துவிட்டேன், இருப்பினும்
  பற்றாக்குறை பட்ஜெட் தான் வாசிக்கிறாய்.

  சிக்கனமாய் வைத்திருந்தால் தான்
  சித்திரை வரை செலவழிக்க முடியுமென
  சில்லரை மட்டும் சேர்க்கிறாய்.

  வற்றாத ஜீவனாக இருந்த எனை
  வாரி இறைத்து வீணாக்கி
  வற்ற வைத்து தவிக்கிறாய்

  பொன்னும் பொருௗும் மட்டுமல்ல
  பொத்திப் பொத்திப் பாதுகாக்க வேண்டியது
  பொங்கி வரும் நதியையும் தான்

  ஊதாரியாய் இருந்துவிட்டு ஊரூராய் தேடாதே
  ஊற்றெடுக்கும் எனை நீ
  ஊமையாக்காதே.

  விழித்துக்கொௗ் இன்றாவது.
  வீணடிக்காமல் சேமிக்கத் தொடங்கு
  விடியும் பொழுது வெளிச்சம் தரட்டும்.!

 8. படிக்கற்கௗ்

  என்னில் விழும் ஒவ்வொரு கற்களும்
  எனை உயர்த்தி விடுகிறது

  உன்னில் விழும் கற்களுக்கும் நீ
  உௗியாய் இருக்க கற்றுக்கொௗ்
  உயர்த்திவிடும் ஓர் நாௗ்.

  படிந்தே கிடந்தால் பாசிபிடித்து விடுவேன்
  படுத்தே கிடந்தால் பாவியாகிவிடுவாய்
  படிக்கற்கௗாக்கு உன்னில் விழும்
  பற்பல கற்களையும்

  உதயமாகும் வெற்றிப்படிகௗ்
  உனக்கே தெரியாமல்..

 9. நீரும் நாமும் பஞ்ச பூதங்களில் நீர் இருப்பது முதலினிலே!
  ஈசனும் தந்தார் இடம் தன் தலையினிலே!
  கருவில் குழந்தை வளர்வது நீரினிலே!
  பயிர்கள் விளைவது நீரினிலே!
  பாவங்கள் கரைவது நீரினிலே!
  ஆனந்தம் தெரிவது நீரினிலே!
  அழுகையும் புரிவது நீரினிலே!
  நீரில்லா உலகம்!
  உயிரில்லா உடலாகும்!
  உயிர் வாழ உணவு வேண்டும்!
  உணவிற்கு நீர் வேண்டும்!
  இயற்கை தந்த செல்வம்
  அனைவருக்கும் பொதுவாகும்!
  அளவுக்கு மீறினால் அமுதமும்
  நஞ்சாகும் !
  உபரி நீரை பகிர்ந்தளித்தால்!
  உலகம் உயர்வாகும்!
  நீர் குமிழி வாழ்க்கையில்!
  உனது புகழ் நிலையாகும்!
  இது வண்ணக் குமிழ் சொன்ன
  எண்ணக் கதையாகும்!
  இதை நெஞ்சில் நிறுத்திடுங்கள்!
  நீடூழி வாழ்ந்திடுங்கள்!

 10. சாதுவான என்னில் கல்லெறிந்தால்
  சகித்துக் கொள்ள காந்தியல்ல..
  கொதித்தெழுவேன்.

  ஆனால் உன் குணத்தால்
  என் இயற்குணம் மாற்றிடவியலாது
  மானிடா

  தொந்தரவுகௗ் பல கொடுப்பினும்
  தொடர்ந்து கடமையாற்றுவேன்
  உனக்காக

  உனைப்போல் மனமல்ல எனக்கு
  தவறிச்செய்த ஒரு செயலுக்கு
  செய்நன்றி கொல்ல

  உதவிய மனங்களையும் கணப்பொழுதில்
  உதாசீனப்படுத்தும் உௗ்ௗமுனக்கு..

  எந்நிலையிலும் தன்னிலை மாறாத
  என்னைப் பற்றி தெரிந்திருக்க வாய்ப்பில்லை உனக்கு

  பாரினில் பலரும் பகுத்தறிவின்றி
  பாழ்படுத்தி சீர்குலைத்தாலும்
  பாச”மழை” பொழிவேன்

 11. தாயின் கண்ணீர்
  சி. ஜெயபாரதன், கனடா.

  கண்ணீர் விடுகிறாள் அன்னை
  பத்து மாதம் சுமந்த சிசு
  தண்ணீரில் போகும் போது !
  ஐந்தாம் பிள்ளையும்
  பெண்ணாய்ப் போனதாம் !
  பெற்ற
  தந்தையின் சீற்றம் !
  மாமியார் கோபம் !
  மாமனார் சூழ்ச்சி !
  பெற்ற தாயிக்குத் துடிப்பு !
  இதய வெடிப்பு !
  வேதனை !
  ஐந்து பெண் குட்டி ஈன்ற
  எலும்பு நாயும்
  குட்டிகளைப் பேணுது;
  தாய்ப் பாலை
  ஊட்டுது !
  பெண்ணென்றால்
  பேயும் இரங்குமாம் !
  அழுது, அழுது
  அன்னையின் கண்ணீர்
  ஆறாய் ஓடுது !
  மானிட மாய்ப் பிறப்பதிலும்
  நாயாய்ப் பிறப்பது
  நல்லது !

  ++++++++++

 12. துளிக்கு வலிமையுண்டு
  சிறுதுளி பெருவெள்ளமாவதை அறியாது
  உழலும் மானுடமே!
  துளிக்கும் வலிமையுண்டு
  உணர்வாய் நீ
  வானம் பார்த்த பூமிக்கு மறுக்கப்பட்ட மழைத்துளி
  மரம் நடாமையால் நமக்கான பதிலடி
  சேகரிக்க மறந்த மழைத்துளி
  வறண்ட பூமியென்னும் பேரிடி
  கான்கிரிட் கட்டடத்தின் சிரிப்பொலி
  விவசாயி கண்ணில் பெருக்கெடுக்குதே கண்ணீர் துளி

  தாரை வார்க்கும் நீர் வளமெல்லாம்
  நமக்கே விலையானது சேகரித்த நீர்த்துளியாக
  ஊழல் வளர்த்தெடுக்கும் ஓரிடத்துச் செழுமை
  தட்டிக் கேளாதவரின் இயலாமை
  உழைப்பாளி உடலில் பெருகும் வியர்வைத்துளி
  வன்கொடுமையால் வதைக்கப்படும் பிஞ்சுகளின் உதிரத் துளி
  சிறுதுளிதானே எக்காளமிடும் மனிதா
  எத்தனை எத்தனை சிறுதுளிகள்
  அத்தனை அத்தனை ஒன்றிணைந்து
  அசுரக்காட்சியாய் அச்சுறுத்தும்
  நிறமாறிய துளிகள்
  வஞ்சனையைச் சொல்லும்
  துளிக்குள் துளிர்க்கும் வலிமையே வெல்லும்

 13. நேற்று சரியாக பதிவானதாகத் தெரியவில்லை, மறுபடியும் இன்று பதிவுசெய்கிறேன்.

  சிந்தனைத் துளி
  ===============

  விண்ணுடன் முகிலாடும்
  விழிநீரில் தவழ்ந்தாடும்
  குளிர்நிலவின் முகத்துக்குள்
  பனித்துளிக்கு ஒப்பாகி
  கவிபாடும் சிந்தனைக்கோர் துளியானாய்!

  காதலர்கள் சேர்கையாலே
  களிப்பின் உச்சத்திலே
  விழிநான்கின் வழிவந்த
  வழிந்த கண்ணீராய்
  கவிபாடும் சிந்தனைக்கோர் துளியானாய்!

  பெண்மையின் கருப்பைக்குள்
  பனிக்குடத்தில் பக்குவமாக்
  படுத்துறங்கும் பிஞ்சு
  கருத்துளியின் உருவமாய்
  கவிபாடும் சிந்தனைக்கோர் துளியானாய்!

  கடல்நாயீன்ற குட்டிபோல்
  கண்ணுக்குள் மாயத்தோற்றமாய்
  பழுப்புநீல வண்ணத்தில்
  புதுஜனனம் எடுத்ததுபோல்
  கவிபாடும் சிந்தனைக்கோர் துளியானாய்!

  தாமரையிலை மீதிலென்றும்
  தங்காத தண்ணீர்முத்தென
  வெண்துளியாய் வீழ்ந்துபல
  மணித்துளி வண்ணமாய்த்தவழ்ந்து
  கவிபாடும் சிந்தனைக்கோர் துளியானாய்!

  நீருக்குமேல் மிதந்த
  நீலவண்ண நீர்த்துளியாய்
  மாயமாய்மதி மயக்கும்வண்ணமாய்
  மானுடச்சிந்தைக்கோர் விருந்தாகி
  கவிபாடும் சிந்தனைக்கோர் துளியானாய்!

  வண்ணம் பலகாட்டும்
  வண்ணத் துளியாய்
  எண்ணத்தைச் சிதறடித்த
  எண்ணத் துகளாய்
  கவிபாடும் சிந்தனைக்கோர் கவித்துளியானாய்!

  அன்புடன்
  பெருவை

Leave a Reply

Your email address will not be published.