சித்தத்தில் சில சித்திரக் குமிழிகள் – 1

இசைக்கவி ரமணன்

எங்கோ மழை வீசும்
இதயத்தில் மண்வாசம்…

 

7504

எப்போதும் போல் இல்லை காற்று. எல்லாவற்றையும் தடவிவிட்டு நழுவிச் செல்வது காற்றுக்கு வாடிக்கை. அப்படித்தான் இன்றும். ஆனால் நழுவ முடியாமல், ஒரு பனிக்கட்டிச் சிலையின் ஸ்தம்பிதத்தில் நிற்கிறது காற்று.

ஒரு மோகினியின் முத்தத் தறுவாயில் குவிந்த இதழ்கள் போல, ஊரைப் போர்த்திக் கவிழ்ந்திருக்கும் கார்முகிலை அது கவனிக்கவில்லை. மலர்களின் நிர்வாணத்தை, அந்தரங்கத் தேன்வரையில் வருடிய எக்களிப்பில், அது எதனைத் தொட்டோம் என்பது புரியாமல் இதனைத் தொட்டுவிட்டது.

மனிதன் தெய்வமாவதுபோல், மண்ணின் தண்ணீரே மழைமுகிலாய் மாறிவருகிறது. தெய்வமாய் உயர்வதே மனிதனின் சாதனை. மனிதனாய்த் தீர்வதே தெய்வத்திற்கு கெளரவம்.

மண்ணின் தண்ணீர், முகிலாக மாறிவிட்ட போது, அதனுடைய மண்ணைத் தொட்ட தன்மை ரத்தாகிவிடுகிறது. ஞானம் விடியும்போது, அறியாமையின் நினைப்பும் அகன்று, எப்போதுமே இப்படி இருந்ததைப் போலத் தோன்றுவதைப் போல.

அமிழ்தம் ததும்பி நிற்கிறது. அது விண்ணின் பிரசாதமாக அல்ல. தெய்வத்தின் உத்தேசமாக.

அதைப்போய், இன்னதென்று தெரியாமல் தொட்ட காற்று ஸ்தம்பித்துவிட்டது. காற்றை ரொம்ப நேரம் கட்டிப்போட முடியாது. கடவுளின் ராஜாங்கத்தில் காற்றின் தயவு தேவை. எனவேதான், ’காற்றே! நேரடி அனுபவமாக உணரப்படும் கடவுள் நீயே!’ என்று வேதம் கோஷிக்கிறது. தொட்டவுடன் கட்டு கழன்றுவிடுகிறது; நாம் தொட்டது நம்மையும் தொட்டதே என்ற உணர்வில் காற்று, தாளம் விட்டுப் பாடுவதுபோல் ஒரு கள்ளுக் காவடி ஆடத் தொடங்குகிறது.

அதீதமான ஒரு குளுமை, முதலில் உயிரை வருடி, பிறகே உடலைத் தொடுவதால், உலகே சிலிர்க்கிறது. சிட்டுக் குருவியிலிருந்து, சீட்டாடும் சூதாடிவரை, எல்லோரும் ஒருகணம் தெய்வப் பிரசன்னம் கொள்கிறார்கள். சாலையோரம் கிடக்கும் சரளைக் கற்களெல்லாமும், ஒரு கணம், சந்நிதியற்ற கடவுள்களாகப் பளபளக்கின்றன.

ஒருதுளி கூடக் கீழே விழாமல், ஊரெல்லாம், உள்ளமெல்லாம் ஈரமாகிவிட்டது. மனமாற்றம் போல; அது கணப்பொழுதில் நிகழ்ந்துவிடும் ரசவாதம்.

முகில், இன்னும் மழையாகவில்லை.

எதற்கோ காத்திருக்கிறது மேகப்பொதி.

ஒரு சின்னஞ் சிறுமி. அவள் துள்ளலைப் பார்த்தால், அது பரவசத்தின் விள்ளல் போல இருக்கிறது. மேலே பார்க்கிறாள், மேகம் சிலிர்க்கிறது. ஒரு வெள்ளைக் கொக்கு குறுக்கே பறக்கிறது. இவள், ஒரு குவளையில் நீரெடுத்துச் செடிக்கு ஊற்றுகிறாள். சிறகு சீண்டுகிறது. ஒரு துளி அவளுடைய கன்னக் கதுப்பின் மின்னல் முனையில் கைநழுவி விழுந்துவிடுகிறது.

குடையை வீசி எறிந்துவிட்டுக் கூத்தாடுகிறாள் குழந்தை. அவளைப் பார்த்துப் பார்த்துப் பாதம் நனைக்கப் பரபரவென்று வருகிறது மழை.

தொடருவோம்

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “சித்தத்தில் சில சித்திரக் குமிழிகள் – 1

  1. Super. An outburst of emotive exuberance with a touch of poetic excellence. Great ramana.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *