-தனுசு
கரைவேட்டித் தலைவா!
உன்
புகழ்பாட வரவா!
கல்கண்டு மொழியா!
உனைப் போற்றி
சொல்கொண்டு வரவா!
அருவியெனக் கொட்டும்
தேன்
உரை வீச்சு நீயே!
உச்சி வெய்யிலில்
ஊரைக் கூட்டும் கவர்ச்சியும் நீயே!
உன் சதா சிரிப்பும்
வெள்ளை வனப்பும்
என் உள்ளம் கவர்ந்ததென்றால்…
உன்
மாதர் பக்தியும்
முதியோர் அணைப்பும்
என்னை மெய்சிலிர்க்க வைக்கும்!
ஊருக்கொரு சாலை தருவாய்
பொது நலம் கொண்டு!
அதில் ஊருக்குள் பரந்துகிடக்கும்
உன் நிலத்திற்கு
விலையேற்றும் சுயநலம் உண்டு!
உன் மித மிஞ்சிய பணம்
தேடுமிடம் பங்குச்சந்தை!
நேர் கணக்குக்கு
அஞ்சிய பணம்
நாடுவதோ உலக வங்கிச்சந்தை!
மாலை மணி மரியாதை
தேடிடும் உனக்கு
சமயத்தில்
முதலில் கிடைப்பது
காலணி மரியாதை!
வேட்டியை மடித்துக் கட்டினால்
தமிழனுக்கு வீரன் என அர்த்தம்!
உன் வேட்டி உயர்ந்தால்
அது
கிழியப்போவதாய் அர்த்தம்!
ஏழைப்பங்காளன் நீ…
வெள்ள நிவாரணத்தில் ஒதுக்கியதால்!
புரட்சியாளன் நீ…
வறட்சி நிவாரணத்திலும் ஒதுக்கியதால்!
ஆனால்
எந்த தேர்தல் உன்னை ஒதுக்கினாலும்
எந்த மாறுதலும் இல்லாமல்
இந்த ஜகத்தை அதகலப்படுத்தும் பிரதாபா
உன்
மக்களாட்சி தத்துவம் எனக்குப் பிடித்திருகிறது!


Leave a Reply