பொருளாதார விண்மீன்களும் சமுதாய மின்மினிகளும்………

5

 

சச்சிதானந்தம்

        

சில வாரங்களுக்கு முன்பு விஜய் டிவி யில் ஒளிபரப்பான நீயா? நானா? நிகழ்ச்சியில் சமுதாயம் மற்றும் நிச்சயமற்ற பொருளாதார சூழலில் இந்தியர்களுக்கு உண்டாகும் மன அழுத்தம் பற்றி விரிவாக விவாதிக்கப் பட்டது.

                                 ஒரு சிலரைத் தவிர பெரும்பாலானவர்களுக்கு இன்றைய சூழலில் மன அழுத்தத்திற்கான காரணம், தனி மனிதப் பொருளாதாரத்தை மேலும் மேலும் விரிவுபடுத்திக் கொள்ள வேண்டும் என்ற விருப்பம் தான் என்பது தெளிவாகத் தெரிந்தது. அதிலும் பெரும்பாலானவர்கள், தங்கள் பொருளாதாரத்தை உயர்த்தி வசதி படைத்தவர்களாகத் தங்களைக் காட்டிக் கொள்வதற்குக் காரணம், இந்த சமுதாயமும், உறவினர்களும் தங்களுக்குத் தரும் நெருக்கடிதான் என்பது போலக் கூறியது வேடிக்கையாகவும் அதே சமயத்தில் அதிர்ச்சியாகவும் இருந்தது.

                                   ஒருவர் தன்னிடம் 1௦௦ ரூபாய் இருக்கும் பட்சத்தில் 8௦ ரூபாய்க்குள் செலவுகளைத் திட்டமிட்டு 2௦ ரூபாயை சேமிக்கலாம். அந்த சேமிப்பைச் சிறுகச் சிறுகப் பல்வேறு பாதுகாப்பான முதலீட்டுத் திட்டங்களில் முதலீடு செய்து, அவரவர் தேவைகளைப் பொறுத்து 10, 15, அல்லது 20 ஆண்டுகளில் அந்த சேமிப்பின் பலனை அனுபவிக்கலாம். வாழ்க்கைத் தரத்தைச் சமுதாயத்திற்காக இல்லாமல் உண்மையாக உயர்த்திக் கொள்ளலாம்.

                                  ஆனால் பெரும்பாலானவர்கள் இவ்வாறு செய்வதில்லை. தங்களுடைய வருமானத்தைப் போல 10 முதல் 25  மடங்கு வரை அதிகமாகக் கடன் வாங்கியாவது தங்களது பொருளாதார இலக்கின் உச்சத்தை அடைய முழு மூச்சாக முயற்சி செய்து பார்க்கிறார்கள். இவ்வாறு முயல்பவர்களில் சிலர் தங்களின் இலக்கை அடைந்தும் இருக்கிறார்கள், வாழ்க்கையை வெற்றிகரமாகவும் அமைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் பெரும்பாலானவர்கள் திட்டமிட்டபடி செயல்படுத்த முடியாமல் உச்சகட்ட மன அழுத்தத்திற்கு ஆளாகிறார்கள்.

                              சரி, அதற்காகப் பொருள் சேர்க்க வேண்டும் என்று ஆசைப்படுவது குற்றமா? இன்று நாம் துணிந்து செயல்பட்டால்தானே அடுத்த தலைமுறை இன்னும் கொஞ்சம் வாழ்க்கைத் தரத்தை உயர்த்திக் கொள்ள முடியும். உணவு, உடை, உறைவிடம் இந்த மூன்றைத் தவிர “தொடர்ச்சியான முன்னேற்றம்” என்பதும் மனித வாழ்வின் அடிப்படைத் தேவைகளில் ஒன்று என்று ஆகி விட்ட நிலையில், பொருள் சேர்க்கும் முயற்சியைத் தவறு என்று கூறவே முடியாது.

                                   விண்மீன்களைப் பிடிக்கும் ஆசையில் மின்மினிகளின் அழகைக் கண்டு இரசிக்கத் தவறுவது போல, பொருளாதார இலக்கு என்னும் விண்மீன்களை நோக்கிய நமது பயணத்தில், நண்பர்கள், உறவினர்கள் என்னும் மின்மினிகளைக் கண்டு இரசிக்கத் தவறினால் விண்மீன்களை நாம் அடைந்தும் பயனில்லை. ஒருவேளை விண்மீன்களை அடைய முடியாமல் போனால், நமக்காக எந்த மின்மினிகளும் அப்போது காத்திருக்கப் போவதும் இல்லை.

                                      உலகின் மாபெரும் பொருளாதார வல்லுனர்கள் எல்லாம் ஒரு மனிதனின் வருமானம் எவ்வளவு என்பதிலிருந்தோ, கடன் வாங்கியாவது அவன் சேர்க்கும் சொத்தின் (போலியான) மதிப்பு எவ்வளவு என்பதிலிருந்தோ அவனது பொருளாதார நிலைத்தன்மை அமையும் என்று கூறவில்லை. மாறாக ஒரு மனிதன் தனது வருமானத்தில் எவ்வளவு விழுக்காடு தொடர்ந்து சேமிக்கிறான் என்பதிலிருந்தும், கடன் வாங்கும் அவசியம் ஏற்படும் போது தனது பொருளாதார வலிமையை முழுமையாக உணர்ந்து கடன் வாங்குகிறான் என்பதிலிருந்தும்தான் அவனது வாழ்நாளின் பொருளாதார நிலைத்தன்மையும், மன அழுத்தமற்ற சுதந்திர உணர்வுடன் கூடிய மகிழ்ச்சியான மனநிலையும் அமையும் என்று கூறுகிறார்கள்.

                                தாய்மார்களின் மொழியில் கூற வேண்டும் எனில், தங்களது பொருளாதார வலிமையைப் பொறுத்து வாழ்க்கையைத் திட்டமிட்டு, தொடர்ந்து சேமிக்கும் பழக்கத்தைப் பின்பற்றி வாழ்வது என்பது சுகப்பிரசவம் போன்றது. அந்த வலி உண்மையானது, ஆனால் சுகமானது. அந்த வலியைப் பொறுத்துக் கொண்டால் வாழ்நாள் முழுவதும் ஆரோக்கியமாக இருக்கலாம். ஆனால் முறையாகத் திட்டமிடப் படாமல் (சமயங்களில் முறையாகத் திட்டமிட்ட போதும் கூட) கடன் வாங்கி மேம்படுத்தப்படும் வாழ்க்கைத் தரம் என்பது அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பெற்றுக் கொள்வதைப் போன்றது. அப்போதைக்கு உங்களை மயக்கத்தில் ஆழ்த்தி, வலியைத் தற்காலிகமாக உணராமல் செய்து, மகிழ்ச்சியாக வைத்திருப்பதைப் போன்று ஒரு மாயத்தை ஏற்படுத்தும். ஆனால் மயக்கம் தெளிந்தவுடன் உணரப்படும் வலியானது வாழ்நாள் முழுவதும் உங்களை இரணப்படுத்தி ஆரோக்கியத்தைக் கெடுத்துவிடும்.

                            எனவே, தற்காலிக வலிகளைப் பொறுத்துக் கொண்டு, நீண்ட காலப் பொருளாதாரப் பலன்களை அடையத் திட்டமிட்டு சேமிக்கும் பழக்கத்தைத் தொடர்ந்து பின்பற்றி மன அழுத்தமின்றி வாழ்வோம்.

 

பதிவாசிரியரைப் பற்றி

5 thoughts on “பொருளாதார விண்மீன்களும் சமுதாய மின்மினிகளும்………

 1. விண்மீன்களைப் பிடிக்கும் ஆசையில் மின்மினிகளின் அழகைக் கண்டு இரசிக்கத் தவறுவது போல, பொருளாதார இலக்கு என்னும் விண்மீன்களை நோக்கிய நமது பயணத்தில், நண்பர்கள், உறவினர்கள் என்னும் மின்மினிகளைக் கண்டு இரசிக்கத் தவறினால் விண்மீன்களை நாம் அடைந்தும் பயனில்லை. Arumayaana Oppeedu

 2. ‘திரைகடலோடியும் திரவியம் தேடு’ வாழ்வியலுக்குத் தேவையான அறிவுரை. என்ன தான் செய்தாலும் விண்மீன்களைத் தொடமுடியாது. மின்மினிகளை ரசிப்பது எளிது. ஆகவே, திரு.சச்சிதானந்தம் அவர்களின் உவமைகளை நான் ஏற்கவில்லை. 

  சில நிதர்சனங்கள்:

  1. வயிறு காயும்போது உண்டி வேண்டும்; உண்டியல் அல்ல.
  2. தொலைக்காட்சிகளின் அணுகுமுறை சமுதாய நலனுக்கு பெரும்பாலும் ஒத்துப்போவதில்லை.
  3. சேமிப்பை சூறையாட காத்திருப்போர் பல.

  இன்னம்பூரான்

 3. மதிப்பிற்குரிய திரு.இன்னம்பூரான் ஐயா அவர்களுக்கு,

  தங்களது கருத்துகளுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.

  “திரை கடல் ஓடியும் திரவியம் தேடு” – என்பதை ஏற்றுக் கொள்கிறேன். தேடிய திரவியத்தை திறம்பட நிர்வகிக்கவும் சேமிக்கவும் வேண்டும் என்பதையே நான் வலியுறுத்துகிறேன்.

  “என்ன தான் செய்தாலும் விண்மீன்களைத் தொடமுடியாது.” – ஏற்றுக் கொள்கிறேன். நம் சிந்தனைக்கும் செயல்களுக்கும் இடையேயான இடைவெளி அதிகரிக்கும் பொழுது, மனதில் வகுத்த இலக்குகளை அடைய முடியாமல் போவதற்கு வாய்ப்புகள் உள்ளன. மேலும் யதார்த்தத்தை விட்டு விலகிய இலக்குகளை அடைவதற்கான சாத்தியங்களும் குறைவே. எடுத்துக்காட்டாக குறுகிய காலத்தில் அதிக பொருள் சேர்க்க முயல்வது போன்ற இலக்குகள் தோல்வியிலேயே முடியக் கூடும். இவ்வாறு அடைய முடியாத இலக்குகளை விண்மீன்களோடும் வாழ்க்கை முழுவதும் நம்மோடு பயணிக்கும் நண்பர்களையும் உறவினர்களையும் இரசிப்பதற்கு எளிதான மின்மினிகளுடனும் ஒப்பிட்டேன்.

  “வயிறு காயும்போது உண்டி வேண்டும்; உண்டியல் அல்ல.” – முறையாக சேமிக்கும் பழக்கத்தை மேற்கொண்டால் வயிறு காய்வதற்கான வாய்ப்புகள் இல்லை அல்லது மிகமிகக் குறைவு என்பது என் தாழ்மையான கருத்து.

  “தொலைக்காட்சிகளின் அணுகுமுறை சமுதாய நலனுக்கு பெரும்பாலும் ஒத்துப்போவதில்லை.” – முழுமையாக ஏற்றுக் கொள்கிறேன்.

  “சேமிப்பை சூறையாட காத்திருப்போர் பலர்.” – விழிப்புணர்வோடு இருக்க வேண்டியது காலத்தின் கட்டாயம் என்று எண்ணுகிறேன்.

 4. நன்றி பாப்பு சுந்தரம் அவர்களே!

 5. திரு. சச்சிதானந்தத்தின் அருமையான பதிலை வரவேற்கிறேன். என் பணி சிந்தனையை தூண்டுவதே.
  அன்புடன்
  இன்னம்பூரான்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *