-தனுசு

 


கரைவேட்டித் தலைவா!
உன்
புகழ்பாட வரவா!
கல்கண்டு மொழியா!
உனைப் போற்றி
சொல்கொண்டு வரவா!

அருவியெனக் கொட்டும்
தேன்
உரை வீச்சு நீயே!
உச்சி வெய்யிலில்
ஊரைக் கூட்டும் கவர்ச்சியும் நீயே!

உன் சதா சிரிப்பும்
வெள்ளை வனப்பும்
என் உள்ளம் கவர்ந்ததென்றால்…
உன்
மாதர் பக்தியும்
முதியோர் அணைப்பும்
என்னை மெய்சிலிர்க்க வைக்கும்!

ஊருக்கொரு சாலை தருவாய்
பொது நலம் கொண்டு!
அதில் ஊருக்குள் பரந்துகிடக்கும்
உன் நிலத்திற்கு
விலையேற்றும் சுயநலம் உண்டு!

உன் மித மிஞ்சிய பணம்
தேடுமிடம் பங்குச்சந்தை!
நேர் கணக்குக்கு
அஞ்சிய பணம்
நாடுவதோ உலக வங்கிச்சந்தை!

மாலை மணி மரியாதை
தேடிடும் உனக்கு
சமயத்தில்
முதலில் கிடைப்பது
காலணி மரியாதை!

வேட்டியை மடித்துக் கட்டினால்
தமிழனுக்கு வீரன் என அர்த்தம்!
உன் வேட்டி உயர்ந்தால்
அது
கிழியப்போவதாய் அர்த்தம்!

ஏழைப்பங்காளன் நீ…
வெள்ள நிவாரணத்தில் ஒதுக்கியதால்!
புரட்சியாளன் நீ…
வறட்சி நிவாரணத்திலும் ஒதுக்கியதால்!

ஆனால்
எந்த தேர்தல் உன்னை ஒதுக்கினாலும்
எந்த மாறுதலும் இல்லாமல்
இந்த ஜகத்தை அதகலப்படுத்தும் பிரதாபா
உன்
மக்களாட்சி தத்துவம் எனக்குப் பிடித்திருகிறது!

 

படத்துக்கு நன்றி: http://www.padaipali.net/2011/08/blog-post_12.html

 

பதிவாசிரியரைப் பற்றி

11 thoughts on “ஜகதலப்பிரதாபன்!

 1. ஏழைப்பங்காளன் நீ…
  வெள்ள நிவாரணத்தில் ஒதுக்கியதால்!
  புரட்சியாளன் நீ…
  வறட்சி நிவாரணத்திலும் ஒதுக்கியதால்!

  ~ பாயிண்ட் மேட், தனுசு

 2. அட்டகாசம், தனுசு அவர்களே!!!, மக்கள் பிரச்னைகளைப் பேசும் போது தங்களுள் இருக்கும் வேகம் கவிதை வரிகளின் வழியே வீரியத்துடன் வெளிப்படுவது வழக்கம். இம்முறையும் அஃதே. இரண்டு வித ‘மரியாதைக்கும்’ கவலைப்படாமல், ‘மானம்’ காக்கும் வீர வரலாறு கொண்ட ‘ஜகதலப்பிரதாபனின்’ மக்களாட்சி தத்துவம் எனக்கும் பிடித்திருக்கிறது. ‘எள்ளல்’ நடையை எள்ளளவும் பிசகாமல் கையாண்டிருப்பது அருமை. மிக மிக நன்றி தனுசு அவர்களே.

 3. இன்னம்பூரான் wrote //// ~ பாயிண்ட் மேட், தனுசு

  மிக்க நன்றிகள் அய்யா. என் கவிதை வெளிவரும்போதெல்லாம் உங்களின் கருத்தை எதிர் பார்ப்பேன். இன்று பெரு மகிழ்சி அடைகிறேன்.

 4. இன்றைய அரசியல்வாதியை அழகாகத் தோலுரித்துக் காட்டியுள்ளது கவிதை.
  //உன் மாதர் பக்தியும் முதியோர் அணைப்பும் என்னை மெய்சிலிர்க்க வைக்கும்!// இந்த வரிகளில் இழையோடும் நகைச்சுவையை மிகவும் ரசித்தேன். கூடவே அதில் ’பெயர்போன’ ஓர் அரசியல்வாதியின் நினைவும் வந்தது.

  சிறப்பான படைப்பு. பாராட்டுக்கள் தனுசு.

  ..மேகலா

 5. நன்றி பார்வதி அவர்களே. தாங்களின் கருத்துரையை படித்தவுடன் இன்னும் வேகம் எடுக்கிறது என்னுள் கவிதை எழுதும் ஆர்வம்.

 6. ஆமாம் மேகலா அவர்களே அன்று ஒருவர் செய்த காரியம் இன்று ஆளாலுக்கு செய்வது தான் கொடுமை. தாங்களின் கருத்துக்கு மிக்க நன்றி.

 7. தனுசு சிதறாமல் தான் அம்பு விட்டிருக்கின்றீர்கள்.
  குண்டு துளைக்காத ஆடைக்குள் அம்பு துளைக்குமா?
  துண்டு போட்டு துளிசிரிப்பு உதிர்த்தால் உடனே
  மண்டி போட்டு கும்பிடும் கூட்டம் இருக்கும்வரை 
  மக்களின் மறதியும் மன்னிப்பும் கைகொடுக்கும்வரை
  மக்களாட்சி தத்துவம் சொல்லும் இவர்களின் மகத்துவம்

  கட்சிதாவலில்       ஒலிபிக்ஸ் ரெக்கார்டுகள்
  கறுப்புபணத்தால்  கின்னஸ்    ரெக்கார்டுகள்
  வம்சவாரிசுகளால்  நோபெல்      ரெக்கார்டுகள்
  வரலாற்றில்  பதித்தனரே கிராமி  ரெக்கார்டுகள்
  வாழிய ஜகதலப்பிரதாபனரும் அவர்தம் சுற்றமும்

 8. அரசியல்வாதிகளின் இரட்டை வேடத்தை நையாண்டியின் மூலம் நையப் புடைத்திருக்கிறீர்கள். கவிதை முழுவதும் கரை வேட்டிகளை கிழித்திருக்கிறீர்கள். மிக மிக அருமை. வாழ்த்துக்கள் திரு. தனுசு அவர்களே!

 9. கவிதையை ரசித்து கருத்தையும் கவிதையாய் சொன்ன சத்யமனி அவர்களுக்கு நன்றிகள்

  உங்கள் தாக்குதல் சாமன்யனுக்கு புரிந்தும் தெரிந்து விட்டால் கரை வேட்டிக்கு சாவுமனி தான்.

 10. சச்சிதானந்தம் wrote ///

  அரசியல்வாதிகளின் இரட்டை வேடத்தை நையாண்டியின் மூலம் நையப் புடைத்திருக்கிறீர்கள். கவிதை முழுவதும் கரை வேட்டிகளை கிழித்திருக்கிறீர்கள். மிக மிக அருமை. வாழ்த்துக்கள் திரு. தனுசு அவர்களே!

  இது மாதிரி பாராட்டுகள் தான் இன்னும் இன்னும் எழுத உந்துதல் தருகிறது. நன்றிகள் சச்சிதானந்தம்.

 11. பொதுநலப் போர்வையில்
  குளிர்காய்ந்து கொண்டிருக்கும்
  சுயநலப் பித்தர்களுக்கு
  சுள்ளென்ற ஓர் அக்கினிக்கணை எடுத்து
  சுருக்கென்று தைத்தபின்னும் தைக்காதது போல
  உன் நடப்பு பிடித்திருக்கிறது என்று சொல்வது
  வித்தியாச சிந்தனைதான்….

  அன்பன்
  மகேந்திரன் பன்னீர்செல்வம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *