வேதாந்த அந்தாதி

கிரேசி மோகன்

 

ஆக்கப் பொறுத்தாலும் ஆறப் பொறுத்தாலும்
காக்கும் கடவுள் கவலைப்படான் -நோக்கு
விதித்ததை ஏற்றி வினையால் அணைத்து
புதைப்ப(து) அவன்பொழுது போக்கு….(1)

போக்கத்(து) உலகில் பொழுதைக் கழித்திரு
காக்கும் கடவுளுடன் கைகோர்த்து -தாக்கும்
செடியாய வல்வினைகள் செங்கரும்பாம், ஊன்றத்
தடியாகும் பட்டினத் தார்….(2)

தாரில் மலரவன் நாராம் மணக்கும்நாம்
சோறில் சுவையவன், சக்கைநாம் -நேரில்
வரத்தயங்கும் கீதமவன் வந்துவிட்ட நாமக்
கரத்தியங்கும் புல்லாங் குழல்….(3)

குழலுற்ற கீதத்தைக் காதுற்றுக் கேளீர்
விழலுக்(கு) இறைக்காதீர் வீணாய் -தழலுக்குள்
வேகாது, தண்ணீரில் வீழ்ந்தும் நனையாது
சாகாத அவ்வுணர்வே சத்து….(4)

சத்துக்கு ஆனந்தம் சித்தின் விளையாட்டு
அத்தனையும் வேடிக்கை ஆகப்பார் -புத்தி
மனமுள்ளம் நெஞ்சென்ற மாயங்கள் நால்வர்
உனையுண்ணத் தூக்கும் உறவு….(5)

உறவும் பகையும் துறவும் தெளிவும்
வரவு செலவாகும் வாழ்க்கை -பறவை
ஒருகூடு விட்டு மறுகூடு போகும்
பெறுவீடு காணப் பயன்….(6)

பயனற்ற பாண்டம் பழுதாக மீண்டும்
வியனுலகை விட்டேக வேண்டும் -அயனோ
அரனோ, அரியோ அவதாரம் வந்தும்
மரணத்தில் தானே முடிவு….(7)

முடிவற்ற ஆசை முதலுக்கே மோசம்
வெடிவைத்து வந்திடுமா வானம் -படியற்ற
சொர்கத்தைக் காண செடியேறு கின்றாயே
தர்கமற்ற தேடல் தவம்….(OR)
தர்கத்தைத் தாண்டல் தவம்….(8)

தவமாய்த் தவமிருந்து தத்துவங்கள் தேர்ந்து
சவமாய் சுடுகாடு செல்வீர் -சிவஞானம்
சிந்திக்க வாராது சித்தம் ஒருமிக்க
சந்திக்க முந்துவான் சம்பு….(9)

சம்பு மஹேசனை நம்பியவன் நானென்று
கும்பிடப் போக வரும்குறுக்கே -ஒன்பது
வாசலுடற் கோசத்தில் நேசமுறக் காண்போமே
ஈசனிடம் சாத்தான் இயல்பு….(10)

இயல்பாய் இருத்தல் இயலாமல் பாடும்
குயில்கரையும் காகத்தின் கூட்டில் -பயில்வீர்
பெருக்கெடுக்கும் கங்கையும், பாழான நீரும்
சிரம்தெளித்துக் கொள்ளும் சமம்….(11)

சமர்த்தஅவ் ஆன்மனை சிந்தா சனத்தில்
அமர்த்தி இகபரம் ஆளு -நிமிர்த்த
முடியாத நாய்வால், மரம்தாவும் மந்தி
விடியாத நெஞ்சை விலக்கு….(12)

விலக்க விருப்பம் , விரைந்து நெருங்கும்
விளக்கம் தெளிவு விடியல் -கலக்கம்
இனிநமக்(கு) இல்லைநாம் கண்ணனைப் போல
தனிமரத் தோப்பில் திளைப்பு….(13)

திளைப்பாய், இளைப்பாய், களைப்பாய் புலனார்
அலைக்கழிப்பால் ஆயுள் அடைப்பாய் -முலைப்பால்
அருந்திட மீண்டும் அவனிக்கு வருவாய்
திருந்திட ஏற்பாய் துறவு….(14)

துறவில் மரமாய், உறவில் கிளையாய்
பிரிவில் கனியாய்ப் பழுத்து -நிறைவில்
நிலைத்திருப்பாய் நெஞ்சமே ஞானக் கடலின்
அலைக்கரத்தால் மண்தொட்(டு) அகன்று….(15)

அகன்று விரியும், அணுவாய்க் குறையும்
உகந்த உறவில் உலவும் -புகன்ற
மறைகளும் காணா மகத்துவம் நெஞ்ச
அறைதனில் வாழும் அவன்….(16)

அவனால் அவனி, அவன்தான் புவனி
அவனை அவனால் கவனி -அவனே
வருவான் குருவாய் அறிவைத் தருவான்
பெருவாய் பரம பதம்….(17)

பதப்பருக்கை பானை புசிக்கின்ற பூதம்
முதற்கொண்டிங்(கு) எல்லாமே மாயை -எதற்காக
அம்மா பசியென்றிங்(கு) ஆலாய்ப் பறக்கின்றாய்
சும்மா இருக்க சுகம்….(18)

சுகம்கிடைத்தும் ஓரிடத்தில் சும்மா இராமல்
நகம்கடித்து நாற்புறமும் நோக்கி -முகம்சுளிப்பாய்
மேலான பேரின்பம் தோலால் கிடைக்காது
வேளாண்மை செய்யான்மா வில்….(19)

வில்லிருந்தும் தோளிருந்தும் வீரம் பிறக்காது
கள்ளிருந்தும் போதை கிடைக்காது -உள்ளிருக்கும்
ஆன்மனே ஆண்மை அவனெழுச்சி சம்போகம்
ஊன்மனங்கள் சோரும் உறுப்பு….(20)

உறுப்பதற்கு ஞானம், உரைப்பது மோனம்
பிறப்பிறப்(பு) இல்லா புருஷன் -கருப்பொருளாய்
சக்தியவள் , அன்பில் சிவனவன், பாலில்
யுக்தியிலாண் பெண்ணாம் அது….(21)

அதுவாக ஓர்நாள் ருதுவாகும் ஆன்மா
அதுவரை ஐம்புலனை ஆள்வாய் -கதையல்ல
கற்பனை மாயையைக் கட்டக் களித்துடுவான்
அற்பனும் அக்குடையை ஆண்டு….(22)

ஆண்டோனும் ஆண்டியும் மாண்டபின் மீண்டுமிங்கு
ஆண்டியாய் ஆண்டோனாய் ஆகிடுவர் -வேண்டாமே
வேஷமிது அஞ்ஞானம் வேதாந்த கும்பலின்
பாஷையில் கோவிந்தா போடு….(23)

போடுவதை உண்ணாது போயின்ப வேட்டையில்
ஆடியிரை ஆகி அனல்சுடு -காடுவர
அய்யோ எனக்கூவ அய்யோ மணவாளன்
கொய்யா(து) இருப்பானா கூறு….(24)

கூறிடும் கீதை குரான்பைபிள் எல்லாமே
போரிட ஐம்புலன் போகுமென்று -சாறான்மா
விட்டிந்த சக்கையாம் கட்டையைப் பேணுகிற
மட்டிங்கு ஜீவனுக்கு மண்….(25)

மண்ணோடு மண்ணாகும் மேனியை மெய்யென்று
உன்னோடு சேர்த்து உழலாதே -பெண்ணோடு
ஆணாகும் பேரின்ப ஆன்மா அசலாம்
நானாகும் தோற்றம் நகல்….(26)

நகிலைப் புகழ்ந்து முகில்குழலைப் பாடி
துகிலணி மாதர் துணையே -புகலென்று
வீழ்ந்து வணங்காதே தாழ்ந்து துதிக்காதே
ஆழ்ந்திரு ஆன்மாவில் வாழ்ந்து….(27)

வாழ்க்கையில் வென்றென்ன வாரிக் குவித்தென்ன
சீழ்க்கை அடித்து சிலிர்த்தென்ன -ஊழ்பையன்
எள்ளி நகையாடி ஏய்ப்பது கேட்கிலையோ
பள்ளி எழுந்திருப் பாய்….(28)

பாயில் படுத்து பணியாய் புணர்ந்திட
நோயாய் வயோதிகம் நேர்ந்ததே -காயை
தனியாய்த் தவத்தில் பிணிமூப்(பு) இராது
கனியாக்கும் வித்தையைக் கல்….(29)

கல்வியா செல்வமா கேட்போர்க்கு வீரமாய்
சொல்லுவாய் ஆன்ம சுதந்திரத்தை -அல்லலாய்
பாரமாகி மூப்பில் பிணியுற்ற வேளையில்

வீரமா கோழைக்கு வாய்ப்பு…(30)

வாய்க்கரிசி போட்டவாய் மாய்ந்தவுயிர் போகும்முன்
வாய்க்கு ருசியாய் விருந்துண்ணும் -வாய்க்குவாய்
பேராண்மை போற்றுவர் பத்தாம்நாள் தூற்றுவர்
ஓரான்மா தானுன் உறவு….(31)

உறவுக்குத் தேவை உருவும் திருவும்
கறவைக்குப் பின்லாடம் காலில் -பறவைக்கு
உள்ள சுதந்திரமும் இல்லை, சிறகுவிரி
கள்ளத் தனத்திலென்ன கற்பு….(32)

கற்பூர வாசம் கழுதை அறியுமா
விற்பனைக்கு வந்தாலும் வீடுபெறும் -நற்கதியை
நெஞ்சமது ஏற்காது வஞ்சக மாயைகை
அஞ்சுவிரல் கோர்க்கும் அசடு….(33)

அசடுக்கு உண்டு அடைக்கும்தாள் வாழ்க்கை
கசடற கற்றுக் கொடுத்தும் -முசுடாய்
கதவைத் திறக்காது, காற்றாக ஞானப்
பதவி வரப்போடும் பூட்டு….(34)
பூட்டாத நெஞ்சக வீட்டாசை வாயிலில்
கூட்டைம் புலன்களே காவலாம் -கோட்டான்கள்
ஆண்டவன் வேடத்தில் ஆளை மயக்கிடும்
வேண்டாமை வேண்டல் விதி….(35)

விதியை ஜெயிக்க மதியின் முயற்சி
நதியை குடத்தில் நிரப்பல் -எதையும்
புதிதாய்ப் பழகேல் பழயன போற்று
உதவிக்கு உபநிடதம் உண்டு….(36)

உண்டாகி உண்டுமிழும் குண்டாகி, வேதக்கற்
கண்டாகி, வேதாந்த சிண்டாகி -தண்டாகி
செண்டாகி, முண்டகத்து வண்டாகி ஜீவான்மா
ரெண்டாகி வந்துபோகும் பண்டு….(37)

பண்டமாய் பாத்திரமாய் உண்டவனாய் ஜீரணிப்பாய்
பிண்டமாய் மோட்சமாய் பித்ருவாய் -எண்டிசையாய்
பூதமாய் புல்பூண்டாய் யாதுமாய் உள்ளதாய்
ஆதலே ஆன்மீக ஆய்வு….(38)

ஆய்ந்தரிய ஆன்மா அவரைக்காய் அல்லவே
மேய்ந்தழியும் ஐம்புல மாடுகளை -சாய்ந்திருந்து
வேடிக்கைப் பார்த்திடும் வேதாந்த பட்சியாம்
பாடிக்கை கோர்த்துப் பற….(39)

பறந்திடும் ஆவி ,பிறந்திறக்கும் மேனி
மறந்திடும் மாயமனக் கூனி -நிரந்தரம்
ஒன்றந்த ஆன்மனுடன் ஒன்றி இருத்தலே
கன்றிந்த ஜீவனுக்கு காப்பு….(40)

 

 

Share

Comments

9 responses to “வேதாந்த அந்தாதி”

  1. -செண்பக ஜெகதீசன்…

    நகைச்சுவை நாயகருக்கு வாழ்த்துக்கள்…

    சிரிப்புச் சுரங்கத்தில் சூல்கொண்ட தத்துவச்
    சுரப்பை அனுபவித்தே ஆர்த்தேன்- விருப்புடன்
    வாழ்த்திடத்தான் வார்த்தை வராதபோதும் நெஞ்சாலே
    வாழ்த்துகிறேன், வாழ்க நிலைத்து…!

  2. Su.Ravi

    Dear Mohan, this compilation is brilliant.
    Keep it up.

    Want to see more of your POEMS TOGETHER WITH YOUR. PAINTINGS N ARTWORK IN VALLAMAI,

    SU.RAVI

  3. சச்சிதானந்தம்

    பித்தன் மோகன் பாடிக் களித்திடும்,

    வித்தாக வேதாந்த அந்தாதி படிப்போர்,

    தத்தம் மனதில் உண்டான மாயத்,

    தித்தம் நீங்கிட, நீங்கிடும் பித்தம்!

    தித்தம்=கசப்பு (மலைவேம்புக் கசப்பு)

  4. சச்சிதானந்தம்

    பித்தன் மோகன் பாடிக் களித்திடும்,

    வித்தக வேதாந்த அந்தாதி படிப்போர்,

    தத்தம் மனதில் உண்டான மாயத்,

    தித்தம் நீங்கிட, நீங்கிடும் பித்தம்!

    தித்தம்=கசப்பு (மலைவேம்புக் கசப்பு)

  5. அந்தாதிக்கவிதை அருமை.
    முப்பதாம் பத்தியில் இறுதி வரி விடுபட்டதாகத் தோன்றுகிறது.
    மீண்டும் ஒருமுறை சரிபார்த்துச் சொல்லவும்.
    வாய் என்று முடித்திருக்க வேண்டிய வரி அது.  நல்லதொருபாடலைப்   பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி.
    வல்லமையாளர் சிறப்பு பத்தி தகுதி பெற்றமைக்கு மனமார்ந்த வாழ்த்துகள். 

  6. ////கற்பூர வாசனை கழுதை அறியுமா
    விற்பனைக்கு வந்தாலும் வீடுபெறும் -நற்கதியை
    நெஞ்சமது ஏற்காது வஞ்சக மாயைகை
    அஞ்சுவிரல் கோர்க்கும் அசடு////

    ரொம்பவே ஆழ்ந்து சிந்திக்க வைக்கும் அருமையான வரிகள்!!.. வாழ்த்துக்கள்.

  7. crazy mohan

    சகோதரி தேமொழி, வரி விலக்கை சுட்டிக் காட்டியமைக்கு நன்றி….அந்த 30தாவது பாடலில் வரும் கடைசி வரி இதோ….

    ‘’வீரமா கோழைக்கு வாய்ப்பு’’…கிரேசி மோகன்….

  8. crazy mohan

    அன்புள்ள பார்வதி இராமச்சந்திரன் அவர்களே, ஊக்குவித்தமைக்கு நன்றி….உங்களுக்கு பிடித்தப் பாடல் களை கட்டினாலும், முதல் வரியில் தளை தட்டியிருப்பதை இப்போதுதான் பார்த்தேன்….செய்த தவறுக்கு மன்னிக்கவும்….
    தளை தட்டாமல் இருக்க இப்படி வாசிக்கவும்….
    ‘’கற்பூர வாசம் கழுதை அறியுமோ’’

  9. வேதாந்தம் விளையாடி விட்ட பகிர்வுக்கு நன்றி.
    வரி வழக்கு  வாழும் அரசாங்க காலத்தில் 
    வரி விலக்கு  வ(த)ருவதிலும் ஒரு த்ரில்
    எத்தனை பேர் ஒழுங்காக படித்தார்கள் என்பதும் அறியலாமே

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *