தரணியே காத்திருக்கும் !

     -எம். ஜெயராம சர்மா – மெல்பேண்

      தைபிறந்தால் வழிபிறக்கும்
      தடைகளெலாம் அகன்றுவிடும்
      மெய்வருந்தி உழைப்போரை
      மேதினியே பாராட்டும்!

      கைநிறையக் காசுவர
      கெளரவமாய் நாமிருக்க
      கடவுளது நினைப்புடனே
      கடினமாய் உழைத்துநிற்போம்!

      பொய்யுரைக்கும் எண்ணமதைப்
      பொசுக்கிவிட முயன்றிடுவோம்
      ஐயனது குறள்வழியே
      அனைவருமே நடந்திடுவோம்!

      செய்கின்ற அத்தனையும்
      சீராகச் செய்துநிற்போம்
      வையகத்தில் வன்முறைகள்
      வரவிடாமல் தடுத்திடுவோம்!

      உறவுநிலை பேணிடுவோம்
      ஊர்போற்ற உயர்ந்திடுவோம்
      அறவழியைத் தேர்ந்தெடுத்து
      அனைவருமே வாழ்ந்திடுவோம்!

      தைமகளை வரவேற்போம்
      தைரியத்தைக் கையெடுப்போம்
      உய்யும்வழி தோன்றிவிடும்
      உவப்புடனே நாமிருப்போம்!

       மார்கழி மறையும்போது
       மலர்ந்துவரும் தைதன்னை
       வாவென்று அழைத்துவிடின்
       வாழ்வெல்லாம் மங்கலமே!

       இழுபட்ட திருமணங்கள்
       இன்பமாய் நிறைவுபெற
       எப்போதும் எங்களுக்குத்
       தைபிறந்தால் வழிபிறக்கும்!

      தைபிறந்தால் வழிபிறக்கும்
      தாலிவரும் வேலைவரும்
      தைபிறக்கும் வேளைதனைத்
      தரணியே காத்திருக்கும்!

Share

Comments

One response to “தரணியே காத்திருக்கும் !”

  1. அன்பின்வழிதோன்றி அகிலத்தை ரட்சிக்கும்
    ஆண்டவன்எண்ணம்போல அனைவரும் வாழவேண்டும்!
    அமைதியின்பூங்காவாய் பூமியே விளங்கிட
    அருள்புரி என்றுநாம் நாளுமே வேண்டுவோம்!!
     
    தமிழதுபொழிந்திடும் தடாகம் உங்கள் மனது
    அமுதெனவழிந்திடும் கவிதைகள் வரும்புனலோ?
    தைமகள்தன்னை வரவேற்கக் காத்திருக்கும்
    காதலன்நீரெனக் காட்டி நிற்கின்றீரோ?
     
    எவரவெவர் தேவைகள் என்னவென்றறிந்து
    அவரவர் ஆசைகள் நிறைவேற்றிட
    வழிபடும் பூசைகள் நித்தம்தொடர்ந்திட
    வையத்தார் வாழ்க்கை வழி காண்கின்றாரே!!
     
    உள்ளத்தே உள்ளதே கவிதையெனும்வழியில்
    உடனடிப் பிரசவங்கள் காண்கிறேன் உம்மிடம்!
    மார்கழித் திங்களதும் மறைந்திடவில்லை அதற்குள்
    மறுதிங்கள் தை தையென்று குதிக்கின்றீரே!!
     
    இருந்தாலும் இதயத்தில் இடம்பெறும்வரிகளாய்
    இவ்வுலகம் சேமமுற எண்ணிடும் பெருமனதால்
    உறவுகள் முதலாக உயிர்கள் அனைத்துமே
    நல்வாழ்வு பெறுகவென்று வாழ்த்துகின்றீரே!!
     
    சிந்தனையில் புறப்பட்டு சிலிர்க்கின்ற சிலிர்ப்பெல்லாம்
    சிறப்பாக சீருடனே பதமாக்கி பதிவுசெய்து
    ஒன்றன்பின் ஒன்றாக கவியெழுதியனுப்பி
    எந்தனையும் கவிவடிவில் பதிலெழுத வைக்கின்றீரே!
     
    நன்றிகளுடன்..
    காவிரிமைந்தன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *