நியாயமான மாயையோ

மீ.விசுவநாதன்

17hji3yuh1fvrjpg

சிற்றெறும்பு ஒன்றன்பின் ஒன்றாகச்
செல்லுவதும், வானத்தில் வெண்புறாக்கள்
சுற்றமுடன் ஒழுங்காகப் பறப்பதுவும்,
சோதியொளி நேர்கோட்டில் வருவதுவும்,
முற்றத்தில் மழைத்துளிகள் தாளத்தை
முழுமூச்சாய் மதிப்பதுவும், பார்க்கின்ற
கற்றறிந்த மானுடந்தான் சுயநலத்தால்
காப்பதில்லை ஒழுக்கத்தை உலகினிலே !

தேனெடுக்கும் வண்டினங்கள் பூக்களினை
தேவதையாய்ப் போற்றுவதும், காட்டினிலே
மானெடுக்கும் பூற்களெலாம் பகைமறந்து
மனமொத்துப் பழகுவதும், ஆற்றினிலே
மீனெடுக்கும் கொக்குகளும் தேவைக்கு
மேலாகக் கொள்ளாம லிருப்பதுவும்
நானெடுக்க விரும்பாத மானுடர்க்கு
நற்பாடம் நடத்துவது வீண்தானோ?

பலவண்ணக் கோலங்கள் வானத்தில்
பளபளெனத் தோன்றுவதும், மழைநீரால்
நிலமண்ணின் நிறம்மாறிச் செல்லுவதும்,
நெருப்புக்கு நெய்மோக மிருப்பதுவும்,
நிலவொளியில் நீர்வெள்ளி யாவதுவும்
நியாயமான மாயையென, நம்முள்ளே
சிலகுணங்கள் சேர்ந்தேதா னிருக்குமென
சிலர்கூறும் வார்த்தைக்குப் பொருளுண்டோ?

(அறுசீர் விருத்தம் வாய்பாடு:
காய்,காய்,காய்,காய்,காய்,காய்,)
(26.08.2015)

Share

Comments

One response to “நியாயமான மாயையோ”

  1. ஒழுங்கென்றும் நெறியென்றும் குணமென்றும்
    எத்தனையோ நல்லபல செய்திகளை
    வான்நமக்கு உணர்த்திடினும் அதுவன்றி
    மேலோர்பலர் வந்திங்கு உரைத்திடினும்
    நானின்னும் திருந்தாமல் நானிலத்தில்
    உழலுகிறேன் எனநினைத்து எனக்கிந்தக்
    கவிமழையைத் தந்தவர்க்கென் வணக்கம்.

    [ஏடறியேன், எழுத்தறியேன், எழுத்தவகை யானறியேன்!]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *