”பிள்ளையார் சதுர்த்தி வாழ்த்துக்கள்”….!

கிரேசி மோகன்
——————————————————————

பிள்ளையார் பதினாறு
—————————-

1480579_1404753519764694_469834414_n
ஷோடஸ நாயகர்
———————-

பிள்ளையார் பிறப்பு
———————–

நீராடும் வேளை நிலைவாசல் காவலுக்கு
ஓராளைத் தேடினாள் ஓங்காரி -சேறாக
மேனியில் பூசிய மஞ்சளால் செய்தனள்
ஞானி வினாயக னை….

ஆதியே ஆனாலும் அன்னை குளிக்கையில்
பாதியில் வந்த பரம்பொருளை -வீதியில்
தள்ளிய பிள்ளை தலையைத் தகப்பனரன்
கிள்ளியங்கு வைத்தான் கஜம்….

 

ஆச்சார்ய ஸ்வாமிகள் அருள் வாக்கை வாசித்து விட்டு எழுதியது….!
————————————————————————
ஸுமுகர்
———–

சிரித்த வதன ஸுமுகரைப் போற்ற
விரித்த வலைவெவ் வினையை -அறுத்து
இழைத்திடுவான் அத்தச்சன் எண்ணென் கலையாய்
அழைத்திடுவாய் அவ்வை அளவு….(1)

ஏகதந்தர்
———–
சோகம் களைந்து ஸுமுகம் குவித்திடும்
யோகம் விரும்பிட ஏற்றிவிடும் -ஏகதந்தன்
காப்பிருக்க கற்பூரம் கூடவேண்டாம், காரியக்கை
பூப்பறிக்கும் உன்வீட்டில் பார்….(2)

 

கபிலர்
——–
சிந்தூர வண்ணனை சித்தி அருளேக
தந்தன் கபிலனைத் தோத்தரிக்க -வந்த
கருத்ததெல்லாம் பாலாக, கண்முன் விலகும்
வருத்தமெலாம் சாயம் வெளுத்து….(3)
கஜகர்ணகர்
—————
கஜகர்ணம் மற்ற கடவுளர்க்கு போட
நிஜவர்ணம் காட்டும் நெகிழ்ந்து -கஜகர்
ணகர்கபிலர் காதினில் நாத்திக பூசை
பகர்அப லைக்கும் பலன்….(4)

 

லம்போதரர்
————–
சம்போ மகாதேவர் செய்த தலைப்பிள்ளை
லம்போ தரனால் லகுவாக -வம்போடு
தும்பும் விலகும் துதிக்கை விரட்டிடும்;
நம்பாள் கஜகர் ணகர்….(5)

 

விகடர்
———–
மகுடம் தரித்தரன் முப்புரம் ஏக
சகடத்தின் அச்சை சிதைத்த -விகடன்
லலிதாங்கி மைந்தனை லம்போ தரனை
எலிதாங்கும் ஆனையை ஏத்து….(6)

 

விக்கினராஜர்
—————-
சுக்கிரன் பார்க்க சுரர்கள் பணிந்திட
இக்கிரக பூமியில் இந்திரனாய், -விக்கின
ராஜன் விகடனை ராப்பகலாய் வேண்டிட
பூஜா பலனாய் பவிஷு….(7)
வினாயகர்
————
வினாஅகம் கேட்க விசாரணை செய்யும்
மனோமுக மார்கம் முனிக்கே -வினாயகன்
விக்கின ராஜனை வேண்டித் துயில்வோர்க்கு
சொக்கிடும் போதேமோட் ஷம்….(8)

தூமகேது
———–

சாமகாதன் சீமந்தன் மாமன்மால் அம்சமாய்
தூமதீது துஷ்டனைத் தீர்த்திட -தூமகேது
வாக அவதரித்து வெற்றியை சூடிய
வாகை வினாயகனை வாழ்த்து….(9)

கணாத்யஷர்
—————
அனாதியாதி அச்சன் அரசவை பூத
கணாதி களின்சேனைக் காவல் -ஜனாதிபதி
தூமகேது முன்புநின்று தோப்புக் கரணமிட
சாமகீதம் சம்சார சிந்து….(10)

பாலசந்த்ரர்
————–
நாலுமுகன் செய்த நடிகர் களையியக்கும்
பாலமுக பாலசந்த்ர பிள்ளையார் -ஞால
கணாத்யஷன் காலில் கிடப்போர்க்கு நாளும்
தனாக்ஷர தீரம் தரும்….(11)

கஜானனர்
————-
அஜாதசத்ரு ஆனை அரக்கனுக்(கு) அன்று
கஜேந்திர மோட்ஷம் கொடுத்த -கஜானனன்
கோலசந்த்ரன் கொண்டமகா கர்வம் அடக்கிய
பாலசந்த்ரன் பாதம் புகு….(12)

வக்ரதுண்டர்
—————
வக்ரதுண்ட சேயின் விடைபெறாமல், முப்புர
நிக்ரகம் செய்ய நினைத்தூர்ந்த -உக்ரகண்டர்
சக்ரதுண்டம் செய்த சதுர்த்தி கஜானனர்
விக்னகண்டம் தீர்ப்பார் விரைந்து….(13)

சூர்ப்பகர்ணர்
—————-
வரம்தரும் போதே முறம்போல தீதை
புரம்தள்ளி நையப் புடைத்து -அறம்பொருள்
ஆர்ப்புகங்கை போலின்பம், அவ்வீடு சேர்த்திடும்
சூர்ப்பகர்ண வக்ரதுண்ட சேய்….(14)
ஹேரம்பர்
————-
பேரம்பார் பண்ணிப்பார் பூவெருக்கம் புல்லருகம்
பேரன்பாய் பாதத்தில் போட்டுவிட்டு -ஆரம்பம்
ஹேரம்பா என்றழைக்க எப்படியும் வெற்றிதான்
நேரும்பார் சூர்ப்பகர்ண னால்….(15)

ஸ்கந்தபூர்வஜர்
—————–
சீரும்பர் கோன்மகள் சேனை கரம்பிடித்த
சூரன்பால் வேலெறிந்த ஸ்கந்தனுக்கு -ஹேரம்பர்
முன்வந்த பூர்வஜர் ,பெண்ணாக வெற்றியாய்நம்
பின்வந்து நிற்கும் பிடி….(16)….
பலஸ்ருதி
————-

பதினாறும் பெற்று பெருவாழ்வு காண
பதினாறு பேர்களைப் பெற்ற -அதிகாரி
அக்கணேச ஆனைமுன் விக்கினங்கள் வைத்திட
மக்கிடுமே மண்புழுவாய் மாய்ந்து….கிரேசி மோகன்….!

Share

Comments

One response to “”பிள்ளையார் சதுர்த்தி வாழ்த்துக்கள்”….!”

  1. sathiyamani srinivasan

    பதினாறு கோலமும் அற்புத வேழமும்
    துதியாற்ற துன்பம் துடைக்கும்
    உபாசிப் போர்க்கு உண்மை புரியும் மூலக்கனல்
    சுவாசிப் பார்கள் உம்மைப் போல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *